“… என்றும் தீமையே விரும்பி, எப்பொழுதும் நன்மையே அருள்வான்….”
(கதே- ப்வௌஸ்ட்)

“நான் எதற்கும் தயார்” -ஏகே-74 துப்பாக்கியை சற்றே தூரமாக தள்ளி விட்டு, குண்டு துளைக்காத கவசத்தின் உள்ளே கையை விட்டு கக்கத்தை சொறிந்து விட்ட பின் தொடர்ந்தான். “அப்பாடா, ஒரு வழியா, என்னால் இப்போது அனைத்தையும் சொல்ல முடியும்” – இதுவரை, அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, தொடர்ந்து குண்டுகள் விழுந்துக் கொண்டே இருந்ததால், அவர்கள் தூங்கவில்லை, என்றாலும் அவர்கள் மூச்சு விட்டுக்கொள்ள கிடைத்த இடைவெளியில், அங்கே இங்கே என்று ஒன்றிரெண்டு செய்திகளை மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் மொத்தமாக சொல்ல இப்போது அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில், தான் ஒரு தீர்க்கதரிசியோ, எதிர்காலத்தை ஆய்வு செய்பவனோ கிடையாது என்றும், சாதாரண வாழ்க்கையில் அவன் ஒரு பொது மனவோட்டத்தை ஆராய்பவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். எனினும் தன்னை ஒரு விதமான பார்வையாளன் என்று சொல்லவே விரும்பினான். இந்த தீர்க்கதரிசிகள், எதிர்காலத்தை ஆராய்பவர்கள் ஒரு அறையில் கூடி அமர்ந்து கணினி திரைகளை பார்த்தப்படி, தங்களுக்கே உரிய வழிகள், கணக்குகள், தர்க்கங்கள் கொண்டவர்களாக இருப்பவர்கள். ஆனால் அனைத்தும் உள்ளடக்கிய முழுமையான பார்வை குறைப்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். மாறாக, தன்னுடைய பார்வை – அவர்களை பொதுவாக ஊக்கமிழக்க வைக்கும் – சமூகம், மனித இனம், இயந்திர மனிதர்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதால் அவர்களை போல தான் எதிர்காலத்தை ஆராய்பவன் அல்ல. பொதுவான மனநிலை, உண்மைகள், தரவுகள் நோக்கி தன் பார்வையை வைப்பவன் என்று அந்த மூன்று சொற்களில் தேவையான அழுத்தம் பதித்து சொன்னான். அவனுடைய ஒரு கண் மட்டுமே சற்றே சரியாக இருந்தது, அதுவும் மங்கலான பார்வையோடு இருந்தது. பாதுகாப்பிற்காக, தான் படுத்திருந்த மரப்பலகையின் விளிம்பைத் கைகளால் இறுகப்பிடித்து இருந்தான். பூச்சா நகரில் நடந்த போரின் முதல் மாதத்திலேயே அவனுடைய இடது காலை இழந்தான். மேலும், பதுங்குக் குழியின் சுவரில் சாய்த்து வைத்திருந்த, எப்போதும் வழுக்கி கொண்டே இருக்கும் ஊன்றுகோல்களை, இப்பொழுதும் அவனால் எட்டி எடுக்க முடியவில்லை.
அதனால், அவன் தவழ்ந்து சென்று, சக குழிவாசியின் நெஞ்சு, தோள், கழுத்து எனத் தடவி, சேற்றில் புதையத் தொடங்கியிருந்த நண்பனின் தலையை மெதுவாகத் தூக்கி, சுருட்டி வைக்கப்பட்டிருந்த கவச உடைக்கு மேல் வைத்தான். பிறகு தன் மங்கலான வலது கண்ணை, நண்பனுடைய அடிவயிற்றில் கட்டப்பட்டிருந்த அந்தத் துணிக்கட்டிற்கு அருகே கொண்டு சென்று உற்றுப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினான்:
“இங்கே பார் நண்பா, இது மிக எளிமையான சமன்பாடு. பூமி என்பது ஒரு மூடிய அமைப்பு. மக்கள்தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. இப்போது ஏழரை பில்லியன், விரைவில் எட்டு பில்லியன் ஆகும். இது ஏதோ மிகப்பெரிய ஆச்சரியம் போல நாம் நடிக்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. இந்த மாபெரும் மனிதக் கூட்டத்திற்கு ஒரு வகையான தன்னியல்பான ஒத்துழைப்பு தேவைப்படும் என்பதை நாம் அரை நூற்றாண்டாகவே அறிந்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம்.”
இந்த இடத்தில், அவன் கைகளை அசைத்து, தேவைக்கு அதிகமான ஏதோ ஒன்றை சொல்ல வருவதாக சமிக்ஞை செய்தான்.
“அதனால்தான், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வந்த ‘2001: ஏ ஸ்பேஸ் ஆடிஸி’ (2001: A Space Odyssey) படத்தில் வரும் ஒரு காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒரு கதாபாத்திரம், தட்டையான ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு, அதை அழுத்தி எதை வேண்டுமானாலும் இயக்கவோ, நகர்த்தவோ அல்லது நிறுத்தவோ செய்வார். இன்று இது நமக்கு இயல்பாகத் தோன்றுகிறது இல்லையா? ஆனால் அன்று அது அபத்தமாகவும், வெறும் கற்பனையாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் பார்க்கப்பட்டது. அதைப் பார்த்து நாம் சிரித்தோம். ஆனால் இன்று நம் கையில் ஸ்மார்ட்போன் இருக்கிறது, யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். முன்பு தூரத்தில் இருப்பவர்களுடன் பேச முடியாது, தொலைபேசி வசதிகள் இல்லாதபோது எப்படிப் பேச முடியும்?”
இதைச் சொல்லும்போது அவன் முகத்தைச் சுளித்தான், அநேகமாக வயிற்றுக் காயத்தின் இரத்தம் தோய்ந்த கட்டு அவனுக்குப் பிடிக்கவில்லை போலும். மீண்டும் நகர்ந்து தனது பலகைக்கே சென்றான்.
ஒற்றைக் காலாலும், ஒற்றைக் கையாலும் சேற்றில் தள்ளாடி, எப்படியோ தன் நண்பனுக்காக இரண்டு பலகைகளையும், தனக்காக இரண்டையும் சேர்த்துப் போட்டிருந்தான். நன்கு மறைக்கப்பட்ட, குடையப்பட்ட குகை அது. ஒரு கடுமையான தாக்குதலின் போது, அவர்களது படைப்பிரிவே சிதறி ஓட வேண்டியதாயிற்று. தலைதெறிக்க ஓடிய அந்தத் தருணத்தில் இவர்கள் இந்தக் குகையில் மறைந்திருந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தனித்து விடப்பட்டார்கள். எதிரிகள் இவர்களுக்கு மேலே ஓடினார்கள், அந்தப் பதர்கள் வெற்றுப் பதுங்குக் குழியை மட்டும் பார்த்துவிட்டு, குகைக்குள் இவர்கள் படுத்திருப்பதை கவனிக்காமல் சென்றுவிட்டார்கள்.
யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று காத்திருக்கிறார்கள், ஆனால், குண்டுவீச்சு குறையாததால் இதுவரை அது சாத்தியப்படவில்லை. பல மணிநேரமாக அந்தப் பலகைகளின் மீது படுத்துக் கிடக்கிறார்கள். அவன் கடிகாரத்தைப் பார்க்கவில்லை, மங்கிய கண்களால் முட்களைப் பார்க்கவும் முடியாது, நேரத்தைத் தெரிந்துகொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை. மருத்துவக் குழுவை அனுப்புவதாக சார்ஜென்ட் கத்தியது அவனுக்கும் முக்கியமில்லை, தாக்குதல் ஒரு விநாடி கூட நிற்கவில்லை. குண்டுமழை விடாமல் பொழிந்துகொண்டே இருந்தது. இப்போது இந்தக் குகையில் கிடக்கிறார்கள். “வேறென்ன செய்வது?” அவன் தொடர்ந்தான்.
“எனக்கு இந்த அறிவியல் முன்னேற்றங்கள், இந்த மனதின் பாய்ச்சல்கள் மிகவும் பிடிக்கும். உலகின் மறுமுனையில் இருப்பவருடன் பேச முடிகிறதே, இது பைத்தியக்காரத்தனமாக இல்லை? இது வணிகத்தையும், தகவல் தொடர்பையும் ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டதல்லவா? ஒரே நாளில் உனக்குக் கிடைக்கும் தகவல்களை நினைத்துப் பார். இன்ஸ்டாகிராமைத் திறந்து பார்க்கிறாய். தெருவில் நடக்கும்போது விளம்பரப் பலகைகள், அடுத்த பேருந்து எப்போது வரும் என்று சொல்லும் மின் பலகைகள் எனத் தகவல்கள் கொட்டுகின்றன. உனக்கு ஒரு நாளில் கிடைக்கும் தகவல், முன் காலத்தில் வாழ்ந்த ஒரு பண்ணையடிமைக்கு வாழ்நாள் முழுவதும் கிடைத்த தகவலுக்குச் சமம்.”
“இருபது வருடங்களுக்கு முந்தைய பாடப்புத்தகங்களில், ஒரு நாளைக்கு எட்டு முறை கவனம் சிதறினால் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று போட்டிருக்கும். ஆனால் இன்று? காலையில் எழுந்து கழிப்பறைக்குச் செல்வதற்குள் எட்டு முறை கவனம் சிதறிவிடுகிறது. வழியிலேயே மின்னஞ்சல், குறுஞ்செய்தி, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு தலைப்புச் செய்திகளையும் மேய்ந்து விடுகிறோம்.”
“நாம் முற்றிலும் புதிய முறையில், சுவாரசியமான வாழ்க்கையை வாழ்கிறோம். உதாரணமாக, இன்றைய விடலைப்பருவத்தினர் லியோனார்டோ டா வின்சியை விடப் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் கெட்டிக்காரர்கள். அவர் மேதைதான், மறுக்கவில்லை, ஆனால் அவரால் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது. அவர் ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்வார், இரண்டு மூன்று நாட்களுக்கு அதிலேயே மூழ்கிக்கிடப்பார். ஆனால் இப்போது? நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கிறது இல்லையா?”
ஆம்!
அவன் இப்பொழுது ஒரு சாதாரண சிப்பாய், அவன் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தான் என்று அவர்களுக்கு சொல்வதில் எந்த உபயோகமும் இல்லை. அவன் உயர் பணிகளுக்கு சரியான ஆளாக இருப்பான் என்று அவர்கள் எண்ணவில்லை. நாட்டை பாதுகாக்கும் பணிக்கு, களத்தில் இறங்கி வேலை செய்பவர்களே தேவையானவர்கள். தான் அந்த வகையை சேர்ந்தவன் இல்லை என்றாலும், ஒரு கால் மட்டுமே இருந்தும் காலாட்படைக்கு விண்ணப்பித்து இருந்தான். விசையை இயக்க ஒரு விரல் மட்டுமே போதும் என்ற அவர்களின் முடிவு அவனுக்கு சோர்வை தரவில்லை என்றாலும், ஆழத்தில் அவன் சோர்ந்து போகவே செய்தான். கணிணிகளை நாளும் திறமையாக கையாளும் பணியில் இருந்த அவன் பண்பாட்டின் சாளரம் வழியே உலகை காணும் பார்வையை கண்டடைந்து இருந்தான். வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால், இந்த பரந்த பிரபஞ்சத்தின் நட்சத்திரங்களும், கோளும், தனிமனித சார்ந்த நிலைகளோ – எதுவும் அவனுக்கு உரியது அல்ல. ஆனால் பண்பாடும், அதன் உள்மடிப்புகளும் அவனை ஈர்ப்பவை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனிதர்கள் கொள்ளும் மாற்றத்தை, வரலாறு நெடுக விஞ்ஞான வளர்ச்சியோடு தன்னை பிணைத்து மனிதர்கள் தங்களை மாற்றி அமைத்து கொள்வதை குறித்து அவன் எப்பொழுதும் படிக்க செய்தான். இப்பொழுது அப்படியான ஒரு திருப்பத்தில் இருக்கிறோம். உலகை நாம் புரிந்துக் கொள்வதில், தகவல்களை பரிமாறிக் கொள்வதில் என ஒவ்வொன்றும் ஒரு காரணத்தோடு தான் செய்கிறோம். இதெல்லாம் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று உனக்கு இந்நேரம் புரிந்து இருக்கும் – மனிதக்குலம் தன்னை பண்பாட்டின் வழியே நீட்டித்து கொள்கிறது. இந்த உலகத்தில் கணக்கற்ற உயிரினங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் ஒரு வழியில் தன்னை நீட்டித்து கொள்கிறது – சில பெரிய பற்களால், ஒரு சில நீண்ட வால் கொண்டு இரையை பிடிப்பதன் வழியாக, மிக பெரிய வாயால், நஞ்சினால், மின்சாரத்தால் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், மனிதர்கள் பண்பாட்டை தேர்ந்து எடுத்தார்கள். வெளியே குண்டு வெடிப்புகள் தொடர்ந்தபடி இருந்தன.பதுங்குகுழியின் இரண்டு சுவர்களின் வழியே வேரின் தலை வெளியே தெரிவதை உற்று நோக்கியப்படி அவன் மேலும் தொடர்ந்தான். ஆய்வாளனாகிய எனக்கு, இந்த கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்றவை எந்த பிரச்னைகளை தீர்க்கிறது, எதை தீர்க்க முடியாமல் போகிறது என்பதை விட மனிதர்கள், மனித குலத்தின் முன்னேற்றங்கள், ஏன் இங்கிருக்கும் ஒவ்வொன்றை செய்கிறோம் குறித்து ஆராய்வதே சுவாரசியமாக இருக்கிறது. எந்த செல் போன், எந்த மாடல், என்னனென்ன பயன்பாடுகளோடு வந்திருக்கிறது என்பதெல்லாம் எனக்கு முக்கியமில்லை, ஆனால் நாம் ஒவ்வொருவரும் எப்படி ஒத்திசைவோடு இருக்கிறோம் – ஒன்றாக பயப்படுவதும், ஒருங்கே ஒருவரை ஒருவர் நம்புவதும், இதற்கு முன் பலர் இப்படி இருந்தது கிடையாது, வாழக்கையும் இவ்வளவு பரபரப்பாய் இருந்ததில்லை. இவை அனைத்தும் எனக்கு மிகுந்த ஆர்வமூட்டும் ஒன்றாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் – தன்னை சுட்டிக்காட்டி – அனைவரும் மகிழ்ச்சியாக, வசதியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இந்த குறிக்கோளை அடைய, பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு முயற்சிகள், உத்திகளை நாம் செய்து கொண்டே இருக்கிறோம். அதை நோக்கியே நம்முடைய பயணம் எப்பொழுதும் இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது, இயன்றவரை நீண்ட ஆயுள், வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சி என்பதே இலக்காக இருக்கிறது. நாம் அதை எப்பொழுதோ அடைந்துவிட்டோம், அதை நிரூபிக்கும் புள்ளியல் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. தொண்ணூற்றி ஒன்பது சதவிகித மனிதகுல வரலாற்றில், தொண்ணூற்றி ஒன்பது சதவிகித மனிதர்கள் பட்டினியால் வாடினார்கள், 1880ல் எண்பத்தி எட்டு சதவிகித மக்கள் கடுமையான வறுமையில் வாழந்து இருக்கிறார்கள், 1980ல் நாற்பது சதவிகிதம், 2018ல் பத்து சதவிகிதம். நம்முடைய வாழும் நாட்களை இரண்டு, மூன்று மடங்காய் மாற்றிருக்கிறோம். உண்மை, நம்முடைய எண்ணிக்கை இப்பொழுது மிக அதிகம், இயற்கை வளங்களை சுரண்டிக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும்,- இங்கே தனது ஆள்காட்டி விரலை மேலே உயர்த்தி – மனிதகுலம் இதற்கு முன் இப்படி வளத்தோடு இருந்ததில்லை, பல நூற்றாண்டுகள் பொருளாதார திறன்கள் மாறவில்லை. 1800ல் இத்தாலியை சேர்ந்த ஒருவனின் வருமானம், 1300ல் இருந்தவனோடு ஒப்பீட எந்த ஒரு பெரிய வேறுபாடும் இல்லை. இரு காலத்திலும், சுமார் 1600 டாலர்கள் தான் சம்பளம். ஆனால் வெறும் நூறு, நூற்றி ஐம்பது வருடத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளின் வருகை நுகர்வோர் பொருளாதாரத்தை வேகம் எடுக்க செய்தது – தொடர்வண்டி, மின்சார விளக்கு, கார், பாத்திரங்கழுவிகள். இரண்டாம் உலக போருக்கு பின், வசதிகள் விடாது பொழிய தொடங்கின. நாற்பது வருட மனித வாழ்க்கை எண்பது வருடம் ஆனது, உலக பொருளாதாரம் சுமார் இருநூற்றி ஐம்பது மடங்கு பெருகியது. ஆம், நாம் பணக்காரர்கள் ஆகிவிட்டோம் – இந்த இரண்டு காட்சிகளை இணைத்து பார்க்க பொருளாதார கண்ணோட்டத்தில் ஒன்று புலப்படும் – 1800ல் உலகின் முதல் பணக்கார நாட்டில் இருக்கும் முதல் பணக்காரனுக்கு கூட இன்று இருப்பதிலேயே ஏழை நாட்டை சேர்ந்த ஒரு ஏழையின் வாழும் வாழ்க்கை அமைந்தது இல்லை. மீண்டும் சொல்கிறேன் – இது பொருளாதார பார்வையில். அந்த காலத்தில் வாழ்ந்த அரசர்களை குறித்து நீ பொறாமைப்படலாம், ஆனால் சிந்தித்து பார் – வெப்பம்மூட்டும் வாய்ப்பில்லாத கோட்டைகள், கழிவறை பானைகள், செய்தி தொடர்பற்று என நீளும் வசதியின்மைகள். என்னை போன்ற ஆய்வாளர்கள் முட்டாள்கள் அல்ல. ஒத்துக்கொள்கிறோம், இன்றும் வறுமை, அழிவு, துன்பம் போன்றவை இருக்கிறது. ஆனால் இன்றிருக்கும் ஒரு உயர்தர வாழ்க்கையை மனிதகுலம் இதற்கு முன் பெற்றதில்லை. “ஆ, நீ மீண்டும் மயக்கமடைகிறாய்”. நகர்ந்து சென்று அவனை நெருங்கும் சக்தி இல்லாதால், “டேய், எழுந்திரு” என கத்தினான். குரலை கேட்டு, மெதுவாக தன் தலையை உயர்த்தி,. கண்கள் இரண்டும் பாதிக்கவில்லை என்றாலும்,அதை திறக்காமலே,
“தொடர்ந்து சொல்” என மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது .
நேரடி போர் தொடங்கிய பிறகு, ஓய்வில்லாது அவர்கள் மேல் ஏவப்பட்டு கொண்டே இருந்த பி.ம்-21 வை பற்றி அவன் ஏதோ புதிய ஒன்றை சொல்வது போல் தொடங்க, பின் மூச்சை நிறுத்தி, அந்த நாற்பதையும் எண்ணி. சற்று நேரம் கழித்து. நீண்ட மூச்சை உள்ளிழுத்து, பின் தொடர்ந்தான். இன்று நாம் வெகு சாதாரணமாக நினைக்கும் பல அவ்வளவு எளிதாக இதற்கு முன்னால் இருந்ததில்லை – சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், பெண்ணுரிமை, மனித உரிமை என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மில்லினியம் பிறந்த பின், குறிப்பாக 2019க்கு பிறகு, நமக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது, தேர்ந்தெடுக்க பாதைகள் பல இருக்கிறது, வெளிநாடு செல்லலாம், எந்த துறையிலும் படிக்க இயலும், உன்னுடைய ஆர்வத்திற்கு முழுதாய் உன் நேரத்தை செலவிடலாம், சுவாரசியமான, படைப்புத்திறனை கோரும் பல்வேறு புதிய வேலைகள் தேர்வு செய்ய இருக்கிறது. கீவ் நகரத்தில் இருக்கும் ஒரு அலுவலகத்தில், பங்குத்தரகர் செய்யும் வேலை பண்டைய மனிதனுக்கு துளியும் விளங்காது – ஏதோ பொத்தான்களை நாளெல்லாம் அழுத்துகிறான் என நினைப்பான். அதை ஒரு வேலையாக எண்ண அவனால் முடியாது. ஆனால் அவனுக்கு தெரியாது, இவன் தான் உலகளாவிய ஒட்டுமொத்த கூட்டு தொகையை செய்யும் பெரும் பணியை செய்கிறான் என்று. உற்பத்தி செய்வது மட்டும் பொருட்படுத்தக் கூடிய ஒன்று அல்ல, படைப்புத்திறனும் மதிக்க கூடிய, மிக தேவையான ஒன்று என. போய் சேர வேண்டிய இடத்திற்கு, அனுப்புவது மட்டும் வேலை அல்ல, சூழ்நிலைக்கு தேவையான தகவல்களை இணைத்து, மிக சரியான நேரத்தில், தேவைப்படும் பொருளை கிடை.. – முடிக்கும் முன், அவனோடு இருந்தவன்,
“மேலே சொல்” என்றான்.
அப்பாடா, நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய் என்பது எனக்கு நிம்மதியாக இருக்கிறது, ஏனென்றால் வாழக்கை என்பது ஒரு அற்புதமான விஷயம். சிந்தித்து பார், நம்முடைய முன்னோர்களுக்கு கனவாக இருந்த ஏராளாமானவைகள் இன்று நனவாகி விட்டது – உதாரணத்திற்கு, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் பாலினீச குடிகள், தன்னை போன்றவர்களோடு பேச, சிறு படகில் ஏறி, சுமார் நூறு மைல்களை பயணம் செய்தார்கள். ஆனால் அந்த பிரச்சனை இன்று கிடையாது, நம்மிடையே தொலைபேசி இருக்கிறது – அன்று அப்படியான ஒன்றை தொலை உணர்வு , உளமொழி என்பார். அது தொலைபேசி – துரதிருஷ்டம் நம் இருவரின் தொலைபேசியும் இப்போது வேலை செய்வில்லை, ஆனால் மனிதகுலத்தில் தொலைபேசி என ஒன்று உள்ளது. நம்மிருவருக்கும் உடனடியாக அது கிடைக்கும், ஏனெனில், நிச்சயம், எனக்கு தெரியும், மருத்துவர்கள் வெகு விரைவில் நம்மை காப்பாற்ற வருவார்கள். அவர்கள் வரும் வரை, நான் சொல்ல வந்தது என்னவென்றால், மனித இனம் எல்லாவற்றையும் அறிய விழைகிறது, ஆவிகளை அழைக்க, நம் எல்லைக்கு அப்பாற்பட்ட அறிவை பெற, இதோ இப்பொது இணையம் இருக்கிறது, நம்முடைய வேலையை செய்ய இன்னொரு ஆளை நோக்கும் எண்ணத்தை பூர்த்தி செய்யும் இயந்திரங்கள், எல்லா மொழியும் அறிந்துக் கொள்ளும் நம் ஆசைக்கு இருக்கவே இருக்கிறது கூகுள் மொழிபெயர்ப்பு, இன்னும் என்ன என்ன – நாம் உச்சக்கட்ட அறிவுத்தன்மையை அடைந்து விட்டோம் என உறுதியாக சொல்லமுடியும். உதாரணத்திற்கு, முன்னாட்களில், தொலைந்து போகாமல் இருப்பது என்பது அவசியமான ஒன்று, வழி தேடி கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர்கள் சமூகத்தில் பெரிய மதிப்புடையவர்கள். ஆனால் இன்று ஜி.பி.எஸ் எல்லோருக்கும் அந்த திறமையை அளித்திருக்கிறது. அதனால் தான், ‘இது என்ன உலகமோ’ – எல்லோரும் போனும் கையுமாக இருக்கிறார்கள் என்று குறை கூறுபவர்களை அடியோடு நான் வெறுக்கிறேன். பின்னே, உள்ளங்கை அளவு இருக்கும் கருவியில் பேச, படிக்க முடிகிறது, நம் இரத்த பரிசோதனை முடிவுகளை, பங்குச்சந்தை நிலவரத்தை, பிட்காயின் தற்போதைய விலை விவரத்தை என பலவற்றை உடனடியாக தெரிந்துகொள்ள முடிகிறது. அறிவூட்டிய அலைபேசி பல பிரச்சனைகளை – எல்லாவற்றையும் அல்ல – கண்டிப்பாக பல பெரிய பிரச்னைகளை தீர்த்துவைத்திருக்கிறது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிதர்சன உண்மை. இதனால், நாம் சந்திக்கும் கேள்வி அல்லது சவால் – எந்த அளவிற்கு இந்த தொழில்நுட்ப பண்பாடு நமக்கு ஏற்றது. நான் பதிலளிக்கிறேன் – ஆனால், தயவு செய்து நீ விழித்திருக்க வேண்டும்
நான் விழித்து தான் இருக்கிறேன், சொல்லு !
நல்லது, நீ இன்னும் உயிரோடு தான் இருக்கிறாய், இந்த உலகம் மிக வியப்பான ஒன்று, உனக்கு தெரிந்தது தான், இருந்தாலும் சொல்கிறேன், மனித கூட்டம் நாம் எண்ண முடியாத அளவிற்கு பெருகி விட்டது. கற்பனை செய்து பார், சின்னஞ்சிறு அறைக்குள் நாம் பத்து பேர் இருந்தோம், பத்தே நிமிடத்தில், மேலும் முப்பது பேர் வந்தார்கள், கூடைக்குள் அடைக்கப்பட்ட மீன்கள் போல இருந்தோம். நகரங்களுக்கு செல்வது ஒரு வகையில் நன்மையே, அங்கே அனைத்தும் கிடைக்கிறது. ஆரம்பத்தில் பூமி ஒரு கிராமமாக தான் இருந்திருக்கிறது, 1980, 2000த்தில், நகரமயமாக்கல் தொடங்கியது, இப்போது மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நகரத்தில் தான் வாழ்கிறார்கள், விரைவில் இது முக்கால்வாசியை எட்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் நமக்கு அந்நியர்கள், நகரங்கள் நல்லவை தான் – வேலை, பொழுதுபோக்கு, கலாச்சாரம், கலை, கல்வி, மருத்துவம் எல்லாம் கிடைக்கிறது – ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள், அந்நியர்களுக்கு பயப்படுகிறோம். யோசித்துப் பார், டிஜிட்டல் கலாச்சாரத்தை நாம் ஐந்து அல்லது பத்து வருடங்கள் தான் பயன்படுத்துகிறோம் – கைபேசிகள், டேப்லெட்கள் எல்லாம் – இது மிகவும் பிடித்துவிட்டது, பழக்கமாகிவிட்டது, மிக முக்கியமாகிவிட்டது. நான் – இங்கே அவன் தனது குண்டு துளைக்காத உடையைத் தொட்டான் – தெருவில் செல்ல பயப்படுகிறேன், எல்லோரும் அந்நியர்கள். ஆனால் இரவு இரண்டு மணிக்கு குடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து செல்லும்போது, ஒரு பட்டனை அழுத்துகிறாய், அந்நியர் ஒருவர் கார் ஓட்டி வருகிறார் – Uber என்று வைத்துக்கொள் – அதில் ஏறுகிறாய், வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். அல்லது குடும்பத்தோடு ஒடேசாவில் உள்ள அந்நியரின் வீட்டுக்கு விடுமுறைக்கு செல்கிறாய், அது சரி தான். ஆனால் இதுவரை இப்படி நடந்ததில்லை. முன்பு உன் நண்பன் உன்னை ஏற்றிச் செல்வான், அல்லது அண்டை வீட்டுக்காரர் உதவுவார். ஆனால் அந்நியர்கள் இப்படி இணைந்திருந்தில்லை, முன்பு இது போல நடந்ததில்லை. இப்போது மட்டுமே நடக்கிறது. ஏனென்றால், இத்தனை அந்நியர்கள் நகரங்களில் ஒன்றாக வாழ இதை எல்லாம் சாத்தியமாக்க வேண்டியிருந்தது.
இனி மக்கள் தங்கள் கைபேசிகளில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று புலம்புவது வீணான முயற்சி. அப்படித்தான் இருக்கும், இருக்கப்போகிறது. எல்லோருக்கும் தனிப்பட்ட சாதனங்கள் இருக்கும், தலையில் பொருத்தப்பட்டதாகவோ அல்லது மணிக்கட்டோடு தைக்கப்பட்டதாகவோ இருக்கும், என்ன வித்தியாசம். இயந்திரங்களுடன் அதிகமான தொடர்புகளை உருவாக்கிக்கொண்டே இருப்போம். ஏதாவது ஒன்று வந்தால் அது மனிதரிடமிருந்து வருகிறதா அல்லது இயந்திரத்திலிருந்து வருகிறதா என்று கூட தெரியாமல் இருப்போம். விஷயம் என்னவென்றால் – இங்கே அவர் மீண்டும் தன் ஆள்காட்டி விரலை உயர்த்தினார் – அது முக்கியமில்லை என்பதே. முன்பு இதைச் செய்ய முடியவில்லை, இப்போது முடிகிறது, அப்படி நடப்பது நல்லது தான். இப்போது நாம் இணைய சமூகத்தில் வாழ்கிறோம். பணம், அறிவு, கலைஞர்கள், சேகரிப்பாளர்கள் அனைவரையும் இணைக்க முடிகிறது. உதாரணமாக, இனி டிஜிட்டல் கலைஞர் நூறு சதவீதம் உண்மையான தனித்துவமான கலைப் பொருளாக, மாறா தனி அடையாள (NFT – Non Fungible Token) கலைப்படைப்பை விற்க முடியும். முன்பு சாலைகளைக் கட்டினோம், இப்போது கண்ணுக்குத் தெரியாத வலை நம்மைச் சுற்றி இருக்கிறது. இதற்குப் பயன்களைக் கண்டுபிடிக்க நாம் கட்டாயப்படுத்தப்படுவோம். அதன் பயனுள்ள தன்மை என்பது அதுவாக தான் இருக்கும். நான் என்னைப் பொறுத்தவரை, பூமியின் அழிவை இணைய கலாச்சாரத்தின் உதவியுடன் சரிசெய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாம் அதைச் சாதிப்போம், ஏனென்றால் அது அவசியம். நம்மிடம் ஏற்கனவே தொழில்நுட்பங்கள் இருக்கின்றன, இல்லையென்றால், விரைவில் கிடைக்கும். இங்கே தன் குரலைத் தாழ்த்தினான், ஏனென்றால் அவனது வாய் வறண்டிருந்தது. பக்கத்தில் இருந்த பாட்டிலைத் தடவித் தேடி, வேகமாக குடித்து, தொண்டையைச் செருமினான்.
தொடர்ந்து சொல்!
ஆமாம், ஆமாம், அப்படித்தான் நடக்கப்போகிறது என்றான். இதை வேடிக்கையாக கூட நீ எடுத்துக்கொள்ளலாம், தன் நண்பனுக்கு தைரியம் கொடுப்பதற்காக என்று கூட சொல்லலாம், அது ஓரளவு உண்மையும் கூட ஆனால் வேறொரு காரணமும் இருக்கிறது – ஏனென்றால் எதிர்காலம், நாம் ஏற்கனவே அதில் தொங்கிக் கொண்டிருக்கிறோம், உண்மையிலேயே மிகவும் புதிதாக இருக்கப்போகிறது (இது வெறும் கனவு அல்ல என்பது தெளிவான ஒன்று, நிச்சயமாக ஆறுதல் சொல்வதற்காகவும் அல்ல), வெளிப்படையானதை மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை, நாம் எதிர்காலத்தின் தொடக்கத்தில் மட்டுமே இருக்கிறோம். இப்போது இதைக் கவனி, நாம் மிகவும் பணக்காரர்களாகிவிட்டோம், ஆனால் கூட்டம் பெருகிவிட்டது, அதாவது இனி நாம் சிறந்த வாழ்க்கைக்காக முயற்சி செய்யவில்லை, இப்போதுள்ள வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்ள மட்டுமே முயற்சி செய்கிறோம், நம்மிடம் உள்ளதை இழக்காமல் இருக்க, இப்போது எல்லாம் தொடர்புகள் தான், முயற்சிகள் கீழிருந்து வருகின்றன, அதனால் இப்போது நீயும் நானும் யாரும் நம் தேவைகளையும் விருப்பங்களையும் சொல்லலாம், இது பெரிய விஷயம் – வேறு வார்த்தையில் சொன்னால், நாம் அனைவரும் சேர்ந்து கூட்டாகவோ அல்லது எப்படியோ இணைந்து, வரப்போவதை வடிவமைக்கலாம் – இது மிகவும் அவசியமானதாக இருக்கும், ஏனென்றால் குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டன, நான் இதைப் பற்றி சொல்லவில்லை, இங்கே அவன் தலையை மேல்நோக்கி அசைத்தான். மேலே சீறிச் சென்ற மற்றுமொரு ஏவுகணை கூட்டம், அவனை ஒரு கணம் நிறுத்தி வைத்தன, என்ன நடக்கும் என்று பார்க்க, ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, நாற்பது ஏவுகணைகளும் மேலே பறந்து சென்று, வேறு எங்கேயோ விழுந்தபின், அவன் மீண்டும் தொடர்ந்தான், தொடர்பு என்று சொல்ல –
நம்மை மீண்டும் தேடி வருவார்களா?
எதிர்காலத்தில் இருந்தா? இல்லை, அங்கிருந்து அல்ல. ஆனால் கண்டிப்பாக நம்மை தேடி வருவார்கள், அது உறுதி. ஏனென்றால், நாம் எதிர்த்து தாக்குதல் செய்வோம், அதனால், வயிற்றில் நிற்காத இந்த சிறிய ரத்தக்கசிவுக்காக, கால் சட்டையிலே மூத்திரம் போய் விடாதே. அவர்கள் சீக்கிரம் வருவார்கள், அது வரை நான் சொல்வதை கவனத்தோடு கேள். என்ன சொல்லிக்கொண்டிருந்தேன், ஆம், ஒவ்வொரு செயலும் இன்னொரு செயலுக்கான பதிலாக இருக்கிறது, அது மேலும் கூடவே செய்யும். உதாரணத்திற்கு, பொருட்களோடு நமக்கு ஒரு அந்தரங்கமான உறவு இருக்கிறது. இதோ இந்த “தொடுவளை”யை பார், கையோடு, என்னோடு, என்னுடைய ஒரு அங்கமாக இருக்கிறது. ஏனென்றால், இது என் காதலியோடு என்னை இணைக்கிறது. திரும்பி தன் நண்பனை பார்த்து, உன்னுடைய காதலி பெயர் என்ன, அவள் கூட இது போல ஒன்று வைத்திருப்பாள். அது வழியே, உன்னை, உன்னை குறித்த எண்ணங்களை, ஆழமான உணர்வுகளோடு தன்னை இணைத்திருப்பாள். ஏனென்றால், இது தான் அவனை தன் காதலி ஸோரியாவோடு தாங்கள் தூரமாக விலகி இருக்கும் வேளைகளில் இணைத்திருக்கும் என்றான். இதோ, இப்பொழுது கூட, அவள் எங்கோ அவள் வீட்டில் இருக்க, தான் இந்த அழுகிய குகைக்குள் இருக்கும் போதும், உடனிருப்பது போல் இருக்க செய்கிறது. இந்த “தொடுவளை”யோடு இருக்கும் பந்தம் முற்றிலும் வேறானது, ஒரு பூங்கொத்து கொடுப்பது போல அல்ல. விரைவிலே தான் இதை போல் ஒன்றை வாங்க போகிறான், அவளுக்கும் வரும் கிறிஸ்துமஸக்கு பரிசாக கொடுக்கவிருப்பதாகவும், இதுவே தன் காதலியாக மாறப்போவதாக சொன்னான். உன்னுடைய தலை மீண்டும் மண்ணில் சாய்கிறது, நண்பனை திட்டிக்கொண்டே, அவன் இருப்பிடத்திற்கு ஊர்ந்து சென்றான், ஆனால் அப்படி செய்ய விடாது, கட்டு கட்டப்பட்ட இடது கண்ணில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது, ஆனாலும் அது பீறிடவில்லை.பல மணி நேரமாக இப்படி தான் இருக்கிறது. கட்டை கொஞ்சமாக நகர்த்த, அது மேலும் மோசமாக்குவதை அறிந்து, உடனே நிறுத்தி விட்டு, மீண்டும் தன் நண்பனிடம் பேச திரும்பினான்.
மரத்து போனது போல இருக்கிறது
உண்மை, அப்படி தான் இருக்கிறது. அவனால மேலும் புதிய கட்டுக்களை கட்ட முடியவில்லை. நாம் எப்படியாவது இதை சமாளித்து கடக்க வேண்டும் இல்லையென்றால் இங்கேயே சாக வேண்டியிருக்கும். ஆனால் நம் எதிரிகளுக்காகவது நாம் இறக்க கூடாது, அதனால் கேள்.மெல்ல ஊர்ந்து, மற்றவனின் தொங்கிய தலையை எடுத்து, மடித்த வைத்த ஜாக்கெட்டின் மீது நிறுத்தி, நண்பனின் வயிற்றில் இருந்த கட்டை ஒரு முறை சரிபார்த்து விட்டு, மண் மீது ஊர்ந்து தன்னுடைய ப்டுக்கையை நெருங்கி, ஓரத்தை பிடித்து ஏறினான். வலியால் முனகியவன், கையில் இருந்த ரத்தக்கறையை பேண்டில் துடைக்க. கண்ணில் இருக்கும் கட்டை தொட நினைத்த எண்ணத்தை கட்டாயப்படுத்தி தடுக்க, பேச்சை தடுக்காமல் தொடர்ந்தான். இங்கே தான் நாம் அடுத்த நிலைக்கு தாண்டுகிறோம், இந்த இணைய உலகில், ஒன்றை பதிவேற்றம் செய்தாலே அது சாசுவதமாகிறது. நமக்கு இதை குறித்து சரியான புரிதல் இல்லை – பதிவேற்றம் செய்தது எங்கும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது எங்கும் செல்வதில்லை, என்றும் இருந்துக் கொண்டே இருக்கும். அதனால், எது உண்மையில் எல்லோரும் காண வேண்டும் என்று நினைக்கிறோமா அதை மட்டுமே நாம் பதிவேற்றம் செய்ய வேண்டும், பதிவை அழித்து விட்டால் கூட, அது அங்கேயே தான் இருக்கும், மறைவதில்லை. ஆக, நாம் மாற வேண்டும், மாறிவிடுவோம், நம்முடைய நடவடிக்கைகள், உலகளாவிய நம் எதிர் வினைகள் அனைத்தும் மாற வேண்டும். இந்த இணைய அமைப்புகள், வாழ்க்கையின் பிற பகுதிகளில் இருப்பது போல், நம்மை மேலும் பொறுப்போடு, விழிப்போடு, புத்திசாலித்தனத்தோடு இருக்க வைக்கிறது. இப்போது நான் சொல்வது உனக்கு வியப்பாக இருக்கலாம் – இங்கே இலவசம் என்று எதுவுமில்லை. ஏதாவது உனக்கு இலவசமாக கிடைக்கிறது என்றால், அங்கே நீ தான் அந்த விற்பனை பொருள். பொதுவாக சொல்வது போல, எது இலவசமாக கிடைக்கும், எப்படி இலவசமாக கிடைக்கும்? ஒரு விஷயத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க, ஒரு செயலியை உருவாக்க வேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பங்கள் கண்டறிந்து, அதை உருவாக்கி, சீரமைத்து, அதற்காக இன்னும் பல என இவ்வளவு இருக்கும் போது, எப்படி இலவசமாக இருக்க முடியும்? அப்படியான ஒன்றை இலவசமாக கொடுக்கிறவர்கள், நிஜத்தில் உன்னுடைய கவனத்தை தான் விலையாக கொள்கிறார்கள். விளம்பரங்களின் வழியாக உன்னுடைய எண்ணத்தில் விதைக்கிறார்கள். என்னை பொறுத்தவரை, இதெல்லாம் சரிதான் – ஆம், இது நம்மை அவர்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைப்பது தான். முன்பு வியாபாரிகள் செய்தார்களே, தங்களுடைய பொருட்களை புகழ்ந்து பாடி விற்பது போலவே தான், என்ன இப்போது டிஜிட்டல் யுகத்தில், இலவச செயலியின் வழியாக செய்கிறார்கள். இன்று வியாபாரத்தின் அளவு , அதன் லாபமும் பன்மடங்காகி விட்டது. கார்ப்பரேட் அமைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம். தன்னுடைய ஒவ்வொரு பயனர்கள் வழியாக ஆண்டுக்கு 12 டாலர்களை பேஸ்புக் சம்பாதிக்கிறது. தங்களின் சேவையை இலவசமாய் தருகிறார்கள், பதிலுக்கு உன்னுடைய தகவல்களை பிறருக்கு விற்கிறார்கள். தவறு போல தெரிந்தாலும், அது நல்லதுக்கே. அது அல்ல பிரச்னை. ஆனால், இந்த விழிப்புணர்வு உனக்கு இல்லை, அதை தெரிந்துக் கொள்ள ஆர்வமும் இல்லை. ட்விட்டர், இன்ஸ்டா எல்லாம் இலவசம் இல்லை, நீயே உன்னை விளம்பரத்திற்காக உன்னை விற்கிறாய், அதை நீ புரிந்துக்கொள்ள வேண்டும். நீ எதை கொடுத்து, எவ்வளவு கொடுத்து அதை பார்க்கிறாய் என்ற விழிப்புணர்வு வேண்டும். இப்படி இருப்பதால், உனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கோர வேண்டும், நம் அலட்சியத்தையும் வசதி விரும்பும் தன்மையையும் கைவிட வேண்டும், வேறு வார்த்தையில் சொன்னால் முட்டாள்தனம் ஒரு குறைபாடு, தொழில்நுட்பம் வெறும் தொழில்நுட்பம் தான், அது சில விஷயங்களை சாத்தியமாக்குகிறது – பயன்படுத்து அல்லது பயன்படுத்தாதே, அது உன் விருப்பம். தொழில்நுட்பத்திற்கு பயப்படக்கூடாது, உன்னிடம் திறன்பேசி இருந்தால், நீ இனி தொலைந்து போக மாட்டாய், வீட்டிலிருந்து வேலை செய்யலாம், இசை கேட்கலாம், பீட்சா வர வைக்கலாம். இன்னொரு முறை வலியுறுத்த, ஏனென்றால் இது முக்கியம், இவை அனைத்தும் நம்மை மாற்றுகின்றன, ஆமாம், நாம் மாற வேண்டும், மாற முடியும், உதாரணமாக புகைபிடித்தலை எடுத்துக்கொள், பொது இடங்களில் அதை தடை செய்தபோது, சிறிது காலம் இது நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை, எல்லாம் குழப்பமாகிவிடும் என்று நினைத்தார்கள், ஆனால் கிளர்ச்சி எதுவும் இல்லை, இன்று பொது இடங்களில், மற்றவர்கள் இருக்கும்போது ஒருவர் புகைபிடிப்பதை கற்பனை செய்வது கடினம், இது மிக நீண்ட காலம் எடுக்கவில்லை, செயல்முறை ஆச்சரியமாக வேகமானது, நாம் மிக எளிதாகக் கற்றுக்கொள்ளலாம், மிக எளிதாக மாறலாம், ஏன், இரண்டு நாட்களில் வறுமையை ஒழிக்கலாம், என் நண்பா, நம்மிடம் வணிக மாதிரிகள் இருக்கின்றன
அவர்கள் வருவார்கள் என்று தோன்றவில்லை
நிச்சயமாக வருவார்கள், புலம்புவதை நிறுத்து, நான் சொல்வதை கேள், நாம் இங்கே யாவற்றையும் மிகவும் வீணாக்குகிறோம், இதோ, இப்போது மிக வேகமாக, நாம் வீணாக்குவதை நிறுத்த வேண்டும், ஏனென்றால், தனிப்பட்ட முறையிலும், மிக முக்கியமாக, உலகளவிலும், நம்முடைய வாழ்க்கைத் தரம் குறையும். ஆனால் இங்கே வேறு ஒன்று இருக்கிறது, உயர்ந்தவைகளை உருவாக்கும் திறன் என்று நாம் அழைக்கக்கூடிய ஒன்று, நாம் முழுவதுமாக இழந்துவிட்ட ஒரு திறன், இடைக்கால காலத்தை எடுத்துக்கொள், எனக்கு அக்காலத்தின் உதாரணங்கள் மிகவும் பிடிக்கும், இதுவரை நாம் நமக்காக சிறு குடிசைகளை கட்டிக்கொண்டிருந்தோம், சரி, ஆனால் இப்போது நம் கடவுளுக்கு ஏற்றாற் போல் ஒரு அற்புதமான கட்டிடத்தை கட்டுவோம் என நகர மக்கள் முடிவு செய்தார்கள். தங்கள் வாழ்நாளில் அவர்கள் அதை பார்க்க முடியாது, முந்நூறு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுடைய சந்ததிகள் தான் உண்மையில் பார்ப்பார்கள் என்று தெரிந்தும், அவர்கள் கட்ட ஆரம்பித்தார்கள், ஆனால் இன்று நம்முடைய சிந்தனை மிகவும் குறுகிய காலத்துக்கானது, ஏன் நாம் சுருங்கிவிட்டோம், நாம் சுருங்கியிருக்கக்கூடாது—நாம் மீண்டும் அத்தகைய பெரிதினை ஆக்கும் திறனை பெற வேண்டும், ஏன் தெரியுமா? ஏனென்றால் நமக்கு கனவுகள் தேவை, நமக்கு பெரிய அளவிலான, தைரியமான பார்வைகள் தேவை—
கனவாது, மயிராவது, எனக்கு தண்ணீர் வேண்டும்
தண்ணீர் இல்லை, இதோ, கொஞ்சம் வோட்கா இருக்கிறது, தாகத்திற்கு இது வேலை செய்யும். சரி, உனக்கு வேண்டாமா, பரவாயில்லை, புரிகிறது, ஆனால் தயவுசெய்து, அனத்தாமல் இரு, உனக்கு வலி இருக்கிறது என்று எனக்கு தெரியும், எனக்கும் தான், அதை புறக்கணி—நான் சொல்வதை கேள். கலாச்சாரம் என்பது ஒரு குறியீடு, இதை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம், மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் என்ன விரும்புகிறார்கள், எதை நேசிக்கிறார்கள், எதற்கு பயப்படுகிறார்கள், எதை நல்லது அல்லது கெட்டது என்று நம்புகிறார்கள், அவர்களின் இலக்குகள் என்ன, என குறியீடுகளின் வழியாக மக்களை புரிந்துக்கொள்ளலாம். பழைய காலத்தில், உனக்கு மார்பில் அழுத்தம் தெரிந்தால், உன் மீது ஒரு பேய் உட்கார்ந்து விட்டது என்றும், பிறகு உன்னை சுற்றி வட்டமடித்த பின் பறந்து செல்லும் என்றும், இவ்வளவு எளிதாக தப்பித்தோம் என மகிழ்ச்சியாக இருந்தாய். ஆனால் இன்றோ அது நெஞ்சு எரிச்சல் என்று நமக்குத் தெரியும். நமக்கு பல விஷயங்கள் தெரியும், நாம் மிகவும் பகுத்தறிவாதிகளாகி விட்டோம். நம்மால் யதார்த்தத்தை மிக வேகமாக பதிவு செய்ய முடிகிறது. ஆனால் நம்முடைய கவனத்திறன் மிகவும் குறைந்துவிட்டது, மறுபுறம் நம்மால் மிக வேகமாக நம்மை மாற்றிக்கொள்ள முடிகிறது. இடைக்கால காலத்தில் ஒருவர் தெருவில் நடக்கும் முறை நம்மிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது, அவர்களின் காலணிகள் மிகவும் கரடுமுரடானவை, அவர்களின் அடிப்பாதங்கள் மெல்லியவை, மேலும் நடைபாதை இல்லை, அதிகபட்சம் ஒரு சில கரடுமுரடான கற்கள், எல்லா வகையான விஷயங்களும் அவர்களின் பாதத்தை குத்தின, துளைத்தன, பிறகு வந்தவர்கள் செய்தது என்னவென்றால் முதலில் கால்விரலை கீழிறக்கி, பிறகு குதிகால், இப்போது நம் நடை முற்றிலும் வித்தியாசமானது. இங்கே மீண்டும் ஒருமுறை நாம் அடுத்த நிலைக்கு தாண்டுகிறோம்—இங்கே என்ன நடக்கிறது? தொழில்நுட்ப புரட்சியால் உயிரியல் மாற்றங்களா?—ஆம், அது சரியாக அப்படித்தான், நடக்கும்போது கூட நம்மால் தொலைபேசியிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை, அதன் விளைவாக நம்முடைய புறப்பார்வை கணிசமாக மேம்பட்டுள்ளது, அதேசமயம் நம்முடைய ஆபத்து உணர்வு குறைந்துவிட்டது, நான் தரவுகளை தரட்டுமா? வேண்டாமா? சரி, அப்படியானால் தரமாட்டேன், உதாரணமாக, நேரத்தை எடுத்துக்கொள், நாம் அனைவரும் நேரத்தை நம்புகிறோம், சுற்றித் திரிகிறோம், கடிகாரத்தை பார்க்கிறோம், நாளை திட்டமிடுகிறோம், பத்து நிமிடங்களில் அல்லது பத்து, இருபது ஆண்டுகளில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று இப்போது திட்டமிடுகிறோம். ரோபோக்களை எடுத்துக்கொள், நாம் ஏன் அவற்றை கண்டு பயப்பட வேண்டும்? சலிப்பான ஆனால் செய்யப்பட வேண்டிய அனைத்து விஷயங்களையும் ரோபோக்களிடம் ஒப்படைக்கலாம், ரோபோ அதை செய்யும்போது நமக்கு ஒய்வு நேரம் கிடைக்கிறது, விளையாட்டுக்கு, பொழுதுபோக்குக்கு, படிப்புக்கு, மேலும் மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு – நான் அப்படியெல்லாம் எதுவும் செய்வதில்லை என்பதை இந்த நேரத்தில் ஒப்புக்கொள்கிறேன், இந்த ஒய்வு நேரம் தற்போதைக்கு இது இன்னும் ஒரு பிரச்சனையை கொண்டுவருகிறது. இன்று, அதாவது இன்று என அழுத்திய பின், எனக்கு கொஞ்சம் இலவச நேரம் கிடைத்தால், உடனடியாக நான் அதை ஏதாவது ஒன்றால் நிரப்ப விரும்புகிறேன், ஆனால் நான் வாழ்வதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், வெறுமனே உயிருடன் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதில், மர இலைகளில் மின்னும் ஒளியைப் பார்ப்பதில், சிற்றோடையின் பாடும் கற்களின் மீது முணுமுணுக்கும் நீரைக் கேட்பதில், என் கால்களைச் சுற்றி சலசலக்கும் உயரமான புற்களில், அப்படித்தானே? சரி, கண்டிப்பாக அப்படித்தான், இது ஒரு வியக்கத்தக்க சாதனை, நாம் அதை தள்ளிவைக்கக்கூடாது, எதிர்காலத்தின் பின்னால் மறைத்துக்கொள்ள கூடாது, எதிர்காலவாதி என்று சொல்லிக்கொள்ளும் நான், இப்படி சொல்வது வேடிக்கையாக தெரிகிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது அப்படித்தான், நாம் நம்மை மறைத்துக்கொள்ள கூடாது, பிறகு இதை கருத்தில் கொள், நாம் கருவி பயன்படுத்தும் இனம், உயிரினங்களின் உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாக ஒரு கருவி பயன்படுத்தும் இனம் பணியை கருவிக்கே ஒப்படைக்கிறது. ரோபோக்களை பார், அவை சுவாரஸ்யமானவை. ஏனென்றால் அவை டிஜிட்டல் கலாச்சாரத்தை நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருகின்றன, அசாத்தியமான வேகத்தில் பரிணமிக்கின்றன, இன்று ரோபோக்கள் செய்ய முடிவது ஒருபோதும் இழக்கப்படாது, அவை புத்திசாலியாக மட்டுமே ஆகும். நம்மைப் போலவே ரோபோக்கள் பரிணமிக்க விதிக்கப்பட்டுள்ளன. நான், என் பங்குக்கு, அவன் சொன்னான், ரோபோக்களுக்கு பயப்படவில்லை, எனக்கு அவை பிடிக்கும், நிச்சயமாக, ரோபோ ஒரு பயமாக தோன்றலாம், ஆனால் சக்கரமும் அப்படித்தான், தொலைநோக்கியும் அப்படித்தான், நீராவி இயந்திரமும், வேகமான கார்களும், விமானங்களும், பட்டியலை தொடர வேண்டிய அவசியமில்லை; சில விஷயங்கள் முதல் பார்வையில் பயமாக தோன்றலாம், ஆனால் பின்னர் நாம் அவற்றுடன் பழகுகிறோம், அவற்றை பயன்படுத்துகிறோம், அவற்றை பயன்படுத்தும்போது அவற்றை நேசிக்க ஆரம்பிக்கிறோம், அவை அப்படித்தான், அவை நமக்காக இங்கே இருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதனால் நாம் பயப்படக்கூடாது, ஒரு ரோபோவுக்கு விருப்பங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, அது உன்னை வசீகரிக்குமா? பிறகு உன்னை சுடுமா? முதலில் ஏன் அவை அப்படி செய்ய போகிறது ?! பயப்படாதே, நடப்பவை நன்றாகவே இருக்கும், சொல்லப்போனால் சிறப்பாகவே இருக்கும்—
எனக்கு தாகமாக இருக்கிறது
நான் ஏற்கனவே சொன்னேன், வோட்கா மட்டுமே நம்மிடம் இருக்கிறது – வேகமாக பதில் வந்தது. வோட்கா வேண்டாம் என்றால் விடு, பரவாயில்லை, என்ன அதை வைத்து காயத்தை சுத்தப்படுத்தவா? வாய்ப்பில்லை, இது விலைமதிப்பற்ற வோட்கா, தண்ணீர் பின்னர் கிடைக்கும், அமைதியாக இரு. இந்த விமான குண்டு பொழிவு வேறு, அதை பொருட்படுத்தாதே, சீக்கிரம் முடிந்து விடும். வலித்தால் பரவாயில்லை, வலி நல்லது, உடம்பு போரிடுகிறது என்று அர்த்தம், அது போரிடட்டும். இப்போது கேளு நீ நன்றாக தான் இருக்கிறாய், சரி இறுதியாக பணம், அதை எப்படி பயன்படுத்திகிறோம் என்று பேசுவோம். பணத்தை உபயோகிக்கிறோம், சந்தேகம் இல்லை ஆனால் உண்மையில் பணம் என்ன என்று நாம் அறிவதில்லை. அதை கையாளுவதால், அது ஏதோ ஒரு பருப்பொருள் என்று நினைக்கிறோம், நீ ஆயிரம் ரூபாய் தாள்கள் வைத்திருப்பதாக நினைக்கிறாய், ஒரு பார்வையில் அது சரி தான், அது அப்படி தான் இருந்திருக்கிறது. பார்க்க போனால், அவை வெறும் காகிதங்கள், பிறகு அதற்கு அந்த மதிப்பு எப்படி வருகிறது, கண்டிப்பாக தங்கத்தால் கிடையாது. இதை தெளிவாக பார்ப்பதற்கு முன், நீ கூர்ந்து கவனிக்க வேண்டும். பணம் என்பது வெகுகாலம் நிழலான ஒன்று, தற்போது கிரிப்டோ பணம் அதற்கு சரியான உதாரணம். சமுதாயத்தில் கிரிப்டோவிற்கு மிக பெரிய இடத்தை பெற போகிறது என்பதை எளிதாக கணிக்க கூடிய, எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அதனால் அது ஒன்றும் நம்பமுடியாத கூற்று ஒன்றும் இல்லை. உண்மையான கேள்வி என்னவென்றால் இதை எப்படி மேலும் மேம்படுத்துவது என்பதே? இதை செய்வதற்கு, சில முறைகள் இருக்கின்றன அவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பலர் உற்சாகம் போதும் என்று நினைக்கிறார்கள், ஆனால் இல்லை, நிறைய அறிவு தேவை, இந்த அறிவுக்கு பரந்த பார்வை தேவை, ஏனென்றால் கிரிப்டோ என்பது என்ன, அது எதெல்லாம் இல்லை, எதற்கு பயன்படுத்தலாம், எதற்கு முடியாது என்று தெரிந்திருக்க வேண்டும். மஸ்க் போன்றவர்கள் இருக்கிறார்கள், உக்ரைனில் இருக்கும் நாம் அவருக்கு பல விஷயங்களுக்காக நன்றி சொல்ல வேண்டும், அவர் ஆதரிக்கும் சில விஷயங்கள் கனவுகள், பார்வைகள், இதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் கிரிப்டோ உலகத்தை புரிந்துகொள்ள, உனக்கு ஒரு ஆழமான புரிதல் தேவை, சரி, உனக்கு ஒரு தொலைநோக்கு பார்வை தேவை. இந்த பார்வையுடன் தொடங்கினால், பிறகு கிரிப்டோவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு பயன்படுத்த முடியும். இப்போது நீ எதிர்க்கலாம், இந்த கிரிப்டோகரன்சி என்றால் என்ன? முழுக்க முழுக்க ஒரு மோசடி தானே, அதை கையால் தொடவோ, கண்ணால் பார்க்கவோ முடியாது, அதனால் அது இல்லாத ஒன்று, அப்படியானால் அது எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியும்? இதற்கு என்னுடைய பதில், கிரிப்டோ உலகத்திற்கு என்று ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது, பிளாக்செயின் – தொடரேடு – என்று அதன் பெயர், சமீப கால வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, சரி, நமக்கு அது புரியவில்லை, ஆனால் நாம் புரிந்துகொள்ள தேவையில்லை. ஏனென்றால் அதை பயன்படுத்துவதற்கு புரிந்துகொள்வது அவசியமில்லை, உதாரணத்திற்கு தொலைக்காட்சியை பார்க்க அது எப்படி இயங்குகிறது – ஒளி அலைகளை வாங்கி அவை காட்சிகளாக மாற்றுகிறது – என்று நமக்கு தெரிய வேண்டியதில்லை. அதே போல் கிரிப்டோகரன்சியின் அடிப்படை தொழில்நுட்பத்தை அல்லது தொழில்நுட்பங்களின் தொகுப்பை முற்றிலும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. நீ அதை பயன்படுத்தினால் போதும், கிரிப்டோ, என் பார்வையில்—இங்கே அவன் தன்னைத்தானே சுட்டிக்காட்டினான்—புதுமை பற்றியது, தொடரேடு உடன் சேர்ந்த கிரிப்டோ என்பது ஒரு செயல்பாட்டு மாதிரி, இது உண்மைத்தன்மை, ஒற்றுமை, அடையாளம் காணக்கூடியது, மற்றும் மகத்தான நெகிழ்வுத்தன்மை அல்லது, நீ விரும்பினால், எல்லைக்கு அப்பாற்பட்ட தன்மை போன்ற சில குணங்களை சாத்தியமாக்குகிறது. தற்போது நாம் பயன்படுத்தும் பணத்திற்கு பௌதீக வரம்புகள் இருக்கின்றன. வெவ்வேறு வகையான கிரிப்டோகரன்சிகள் உருவாகி, பரவலாகி வரும்போது, அவை சமுதாயத்தின் பயனுள்ளத்தன்மையால் வலுப்பெற்று, கிரிப்டோவை இன்னும் நம்பகமானதாக ஆகி, உலகளாவிய சமூகத்தோடு ஒன்றென கலந்து விடும். அதன் பின், அனைத்தையும் உள்ளடக்கிய இந்த கரன்சியை உருவாக்கியவர், தொடங்கியவர் இதை ஒரு சமூக மதிப்பாக மாற்றியிருப்பார்கள் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளலாம். இங்கே அவன் மீண்டும் நிறுத்த வேண்டி இருந்தது. புதிய ஒலிகள், அவர்கள் படுத்திருந்த அகழிக்கு அப்பால் பெரிய குண்டு வெடிப்புகள், இப்போது மூன்று க்ராட்களிலிருந்து சுடுகிறார்கள், அதாவது 120 ஏவுகணைகள், அதைத் தொடர்ந்து திடீர் அமைதி, ஒரு இடைவெளி அதில் வெளியே எங்கோ வயல்களில் பறவைகளின் கூச்சல். என்ன நடக்கும் என்று பார்க்க அவன் கொஞ்சம் காத்திருந்தான், ஆனால் ஒன்றுமில்லை. அதனால் அவன் மீண்டும் தொடங்கினான்—விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாம் செவ்வாய் கிரகத்திற்கு செல்வோம், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,அதை நம் வசப்படுத்துவோம். ஏனென்றால் பூமியை காப்பாற்ற அல்ல, பூமி நன்றாகவே இருக்கும், மனிதர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இங்கே நாம் ஒரு பொறியில் சிக்கியுள்ளோம், நாம் விடுவிக்க வேண்டும், அதனால் நாம் செவ்வாய் கிரகத்திற்கு செல்கிறோம். என் நண்பா, இங்கே இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும், முதலாவது வணிகமும் நம்பிக்கையும். இவை ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்கின்றன என்பதை நீ பார்க்கலாம். அதனால் பௌதீக மற்றும் மெய்நிகர் உலகங்கள் ஒன்றோடொன்று இணையும்போது முதல் ஆளாக இருந்து, வெற்றியாளராக இரு. இன்றைய காலத்தின் போக்கும் அதுதான். ஏனென்றால் நான் என் கிரிப்டோகரன்சிகளை ஒரு தொலைநோக்கு பாரவைக்காக முதலீடு செய்திருக்கிறேன். அத்தகைய முதலீட்டுக்கு பணம் தேவை, அது கிரிப்டோ பணமாக இருக்கட்டும், நீ அதை என்ன என்று அழைக்கிறாய் என்பது முக்கியம் இல்லை. பணம் என்பது நம்பிக்கை சார்ந்த ஒன்று, ஒருவன் அதை நம்புகிறேனா,அதில் உறுதியோடு இருக்கிறேனா என்பதே முக்கியம். கிரிப்டோ கரன்சி பிறந்து, பயன்பாட்டில் இருக்கும் இந்த சமகாலத்தில் அதை தெளிவாக உணரலாம். பலவிதமான பரிவர்த்தனை முறைகள் இருக்கலாம் – ஒன்று இப்போது இருக்கும் பணம், மற்றொன்று கிரிப்டோ பணம், மூன்றாவது செயல்கள் – இவை யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கலந்திருக்கும் – ஏற்கனவே இன்று அப்படி தான் இருக்கிறது, அதை நம் நாடான உக்ரைனில் துல்லியமாக காணலாம். கிரிப்டோ வரவேற்பில், உலகளவில் உக்ரைன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஏனெனில், உக்ரேனியர்களுக்கு எதிர்காலத்தில், முதலீடும், மதிப்பும் செயலின் அடிப்படையில் தான் அமையும் என்ற தெளிவான பார்வை இருக்கிறது. அத்தகைய முன்மாதிரி கிரிப்டோ உலகத்தில் ஏற்கனவே இருக்கிறது. எல்லைகள் தாண்டிய பரிவர்த்தனை ஒன்று உருவானால், இந்த பௌதீக மற்றும் மெய்நிகர் உலகங்களை இணைத்து நீயே முதன்மையான வங்கியாக மாறலாம். அதில் பிரதான பங்கு வகிக்க உனக்கு விருப்பம் இல்லையா என்ன? நிச்சயம் இருக்கும். எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய பரிவர்த்தனை முறையை கொண்டு வந்தால், அவர்கள் அதை பயன்படுத்துவார்கள். அப்படியான ஒரு பரிவர்த்தனை தளமாக மாறவே நீ விரும்புவாய். பணம் என்பது நம்பிக்கை. உண்மையான கேள்வி, எவ்வளவு பேர் அதை நம்ப தயாராக இருக்கிறார்கள் அல்லது பணம் என்ற ஒன்றின் தேவைக்கான தரிசனத்தை நம்ப தயாராக இருக்கிறார்கள் என்பதே. தொழில்நுட்பத்தின் படைப்பாற்றல் நிறைந்த இக்காலத்தில் எந்த கனவும் நனவாக சாத்தியம் உள்ளது. இது பொருளற்ற பகல் கனவு வாக்கியம் அல்ல மாறாக இதற்கு முன் இப்படி இருந்ததில்லை. ஆனால் இனி இப்படி தான் இருக்கும், தொடரவும் செய்யும்.
நாம் சாகப்போகிறோம்
அப்பாடா, பக்கத்து படுக்கை இன்னும் உயிரோடு இருக்கிறது – கிண்டலாக சொல்லிவிட்டு தொடர்ந்தான். மீண்டும் முதலில் இருந்து பார்ப்போம், பணம் என்றால் என்ன என்று நம்மை கேட்டுக்கொண்டால், அதற்கு பதில் – அது கொடுக்கல், வாங்கலுக்கு ஒரு வழி. மனித இனம் பெரும்பாலும் சிறு கூட்டங்களாக தான் வாழ்ந்து வந்திருக்கிறது. என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு இடத்தில், ஒரு பெரிய வட்ட கல்லை பணம் என்று மக்கள் அழைத்தனர். அந்த கல், இப்போதைய கிரிப்டோ பணத்தை போல், எங்கும் நகராது, இருந்தாலும் அதை ஒவ்வொருவரும் அதை பரிவர்த்தனைக்கு பயன்படுத்த ஒப்புக்கொண்டார்கள். பார்க்க போனால், மக்கள் ஏற்றுக்கொண்டால், பரிவர்த்தனைக்கு ஒரு புதிய முறையை கொண்டு வருவதில் எந்த ஒரு கடினமும் கிடையாது. வரலாற்றை நோக்க, பலவிதமான பண முறைகள் வந்திருக்கிறது. கேள்வி என்னவென்றால்,ஒரு பணத்தின் மதிப்பு என்பது என்ன? ஒரு ஆடா? அல்லது மரக்கால் அளவு கோதுமையா ? இப்போது நாம் கிரிப்டோவிற்கு வருவோம். எந்த வடிவத்தை எடுத்தாலும், கிரிப்டோவின் செல்லுபடியாகும் தனமையை அதுவே வழங்குகிறது அல்லது தீர்மானிக்கிறது. அது ஒரு வாய்ப்பை அளிக்கிறது, என்னை பணம் என்று உபயோகிக்கிலாம். ஆனால் எந்த புள்ளியில் ஒருவர் அதை பயன்படுத்த தொடங்குகிறார்கள்? அதற்கு பதில் இப்படி சொல்லக்கூடும் – அருவமான உலகில் இருக்கும் பணம், பரு உலகில் நுழைகையில், முதன் முதல் பிட்காயின் தானியங்கி செயலுக்கு வருகையில், க்ரிப்டோ பணத்தை ஒரு சில கடைகள் வாங்க தொடங்கும் போது, அவை நிழலில் இருந்து நிஜத்திற்கு வருகின்றன. இங்கிருந்து திரும்பி செல்ல முடியாத பயணத்தை தொடங்கும் அவை, நம்மை இரண்டாம் நிலைக்கு இட்டு செல்கிறது, இங்கே பல்வேறு சந்தர்ப்பங்களில், நம்மையும் அறியாமல், நாம் பிட்காயின், எதர், பாதுகாப்பான மதிப்பு மாறாத நிலைப்பணம் என்று பயன்படுத்த தொடங்குகிறோம். உதாரணத்திற்கு, பயண அலுவலகம் சென்று, தொடரேடு தொழிற்நுட்பத்தின் துணையால், விடுமுறை, வீட்டிற்கு போகும் முன் காபி என பல வரவு செலவுகளை க்ரிப்டோ வழியாக நடக்கிறது. மக்கள் எண்ணுவதைக் காட்டிலும், இந்த நாணயங்கள் வியாபித்து இருக்கிறது. மெல்ல அவர்கள் தாங்கள் இந்த கிரிப்டோ நாணயத்திற்கு பதிலாக பெற்றோம் என அறிந்துக் கொள்வார்கள். வேறு விதமாக சொன்னால், நான் அதை ஏற்றுக்கொண்டேன், பிறரும் ஏற்றுக்கொவ்வார்கள், பின் கிரிப்டோ உலகம் ஆரவாரம் அடங்கி, நிலை சக்தியாக மாறும். தற்போதைய காலத்தில், பங்குச்சந்தை வணிகர்கள், ஏமாற்று பேர்வழிகளால் நாணயத்தின் மதிப்பு ஏறி இறங்கும் விளையாட்டில் இருக்கிறது. சரிந்த விலை மீண்டும் அதன் ஆரம்ப விலையை அடையும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், இது நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும். நம் திறன் பேசியில் இருக்கும் இலவச செயலிகள் எல்லாம் வேலை செய்யும் நிழற்பணம் தான்.அச்செயலிகளை இலவசமாக பயன்படுத்துகிறோம், பதிலுக்கு நம் கவனத்தை அதற்கு அளிக்கிறோம். முன்பு சோவியத் தேசம் இருந்த காலத்தில், கம்யூனிஸ்ட்கள் இதை போன்ற ஒன்றை – அனைவரும் வேலை செய்து, அவரவருக்கு தேவையானவற்றை பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையை செயல்படுத்த விரும்பினார்கள். ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இரு வேறு பொருளுக்கான மதிப்பு சமன்பாடை வழங்கும் உலகத்திற்கு பொதுவான நாணயம்/பணம் என்பது அன்று கிடையாது, ஆனால் இன்று இருக்கிறது.
தொகுத்து சொல்லும் தருணம் இது என்றபடி தன் நண்பன் இன்னும் முழித்து இருப்பான் என்ற நம்பிக்கையில் தன் படுக்கையில் இருந்து அவன் எழுந்தான். கொஞ்ச நேரமாக அவனுடைய மூச்சொலி கேட்காததால், தூங்கி விடாதே, இன்னும் முடிக்கவில்லை, இனிமேல் தான் சிறப்பான பகுதியை சொல்லப்போகிறேன் ஆனால் எந்த பதிலும் வரவில்லை. குகைக்கு உள்ளேயும் வெளியேயும் முழு அமைதியாக இருந்தது. அமைதி மேலும் கூடிக்கொண்டேவருவது போல இருந்தது. வெடிகுண்டு இயக்கிகள் ஒய்வு எடுத்து கொண்டிருந்தன. போபாஸானவில் இருந்து புதிய படைப்பிரிவு வந்துக்கொண்டிருந்தது. சிதறும் வெடியோசை ஒலி மட்டுமே இப்போது கேட்க முடிந்தது. அது அமைதியை போல் இருப்பதால், அவனுடைய நண்பனிடம், தூங்காதே, தயவு செய்து இப்போது தூங்காதே, அவர்கள் எந்த நேரமும் இங்கே வரக்கூடும், அதற்குள் நான் சொல்லி முடித்துவிடுவேன் என பதற்றத்தோடு சொன்னான். தனது ஒழுங்கான கண்ணால் தன் நண்பனை பார்த்தபடி, நான் தொடர்ந்து சொல்லவா? ஏதாவது சொல், தலையை அசை, அல்லது கண்ணை திறந்து மூடாவது செய், சரி விடு, நான் சொல்கிறேன். பாதி குருடான பின்னும் என்னால் மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை, திரும்ப திரும்ப ஒன்றை செய்தல் என்னை பொறுத்தவரை அறிவு என்றே எண்ணுகிறேன். இது ஒரு மூடிய அமைப்பு, இங்கே நாம் ஏராளமானவர்கள் இருக்கிறோம், நிகழ்ந்து கொண்டிருக்கும் ஏராளமான செயல்கள் ஒருவரை ஒருவர் வலுப்பெற செய்கிறது. அவை எல்லாம் ஒரே திசையில் செலுத்துகின்றன. நாம் இன்னும் அதிவேகமாக செயல்பட வேண்டும். அப்படி செய்லபடுகையில், பல்வேறு மக்களை நாம் ஒரே சமயத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காகவே செயற்கை நுண்ணறிவு செம்மையாக்கப்படுகிறது. மின்னல் வேகத்தில்,பல்வேறு மக்களோடு ஒரே நேரத்தில் தொடர்பு கொள்வோம். நம்முடைய வாழக்கை அடிப்படையே மாறிவிட்டது, அறியாத, குழப்பமான ஆனால் அளவிடகூடிய உலகத்தின் நுழைவாயிலில் நிற்கிறோம். இனி நீ எட்டு மணி நேரம் உழைக்க வேண்டியது இல்லை, ஒரு சில நிமிடங்கள் உன்னுடைய அலுவலக மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிவிட்டு, வீட்டிற்கு வந்து, விளையாடி விட்டு, கொஞ்சம் பணம் சம்பாதிப்பது என ஆகி விடும். இங்கே ஒரு கேள்வி எழும் – நீ விளையாடுகிறாயா அல்லது பணம் ஈட்டுகிறாயா? இந்த இரண்டும் ஒன்றிணைந்து நூற்றுக்கணக்கான மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழ, ஒருவருக்கு ஒருவரை பலப்படுத்துகிறது. மூன்று நிமிட வேலை என்றால் கூட வேலைக்கான ஒப்பந்தத்தை உருவாக்க தற்போது நான்கு நாட்கள் ஆகிறது. ஆனால் இப்போது திறன் ஒப்பந்தங்கள் வர தொடங்கி விட்டன. தொடரேடு தொழிநுட்பத்தால் அனைத்தும் தானே இயங்கும்படி செய்து கொள்ளலாம். இனிமேல் நமக்கு வழக்கறிஞர்கள் தேவை இருக்காது. இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் முன்னமே முழுதாக அறிவார்கள். ஒரு நொடியில், உன்னை என்னால் பணிக்கு சேர்த்து கொள்ள முடியும். இதற்கு தேவைப்படும் அனைத்தையும் தொடரேடு மற்றும் செயற்கை நுண்ணறிவு கவனித்துக் கொள்ளும். தற்போது, நமக்கு இடைத் தரகர்கள் அல்லது சரி பார்க்கும் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, நீ உன் வீட்டை எனக்கு விற்க வேண்டுமானால், ஒரு இடைத்தரகன், வழக்கறிஞர் நடுவில் இருந்து அனைத்தையும் சரிபார்க்கும் பணியை செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த நேரத்தை அதிகரிப்பதோடு, அவர்களுக்கு பணமும் செலவழிக்க வேண்டும். கிரிப்டோவே இந்த சரி பார்ப்பினை செய்து விடும் என்பதால், தனியாக இன்னொருவர் அதை செய்ய வேண்டிய தேவை இருக்காது. தொடரேடு மூலமாக நமது தகவல்கள் சரி பார்க்கப்பட்டு, இரண்டு தரப்பும் நூறு சதவீதம் மற்றொருவரை குறித்த முழுமையான நம்பிக்கையோடு ஒரு ஒப்பந்தத்திற்கு வர முடியும். வழக்கறிஞர்கள் தொடரேடு தொழில்நுட்பத்தின் துணையோடு தங்களின் பணிகளை தொடருவார்கள், வங்கிகள் தங்களுக்கு என்று ஒரு கிரிப்டோ பணத்தை அறிமுகம் செய்து கொள்வார்கள். நீ கேட்கலாம், இந்த வங்கி எனக்கு கடனாக கொடுத்த ஓராயிரம் ரூபாய் உண்மையிலேயே மதிப்பு ஓராயிரம் தானா? என்னுடைய திரையில் ஒரு ஆயிரம் ரூபாய் என்று காட்டும், ஆதலால், இந்த வங்கியை விட்டு என்றும் நான் செல்ல மாட்டேன், ஏன் என்றால் அது என்றும் என்னுடைய பணம். சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கும் இதே அளவுக்கோல் என்பதால், பணத்திற்கும் அப்பால் இது ஒரு நடைமுறை என்றாகும். ஆனால், இது அனைத்தும் ஒழுங்காக செயல்பட நம்முடைய கண்காணிப்பு முறைகள் அதி திறன் கொண்டதாக மாற வேண்டும். பெரும்பாலும், சர்வாதிகார நாட்டில், ஏற்கனவே அது நடந்தும் வருகிறது. ஆனால் உலகம் முழுவதும் கண்காணிப்பிற்கு தேவை இருக்கிறது.தனி மனிதனை பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவில் இருந்தால் மட்டுமே, அவனுடைய ஆதரத்தன்மை சரி பார்க்க முடியும் என்பதால் இது அவசியம் ஆகிறது. உண்மையில் சற்றே பயமுறுத்த கூடிய ஒன்றானாலும், இது தான் இனி யதார்த்தமாக போகிறது. இதை தவிர்க்க முடியாது. மனிதர்களின் எந்த அவசியமும் இன்றி, தொடரேடு உடனடி சரி பார்த்தமைக்கான சாத்தியத்தை அளிக்கிறது. இது சமுதாயத்தில் நம்பகமற்றவைகளை அகற்றி விடும். நம்பக்கத்தன்மையை நிறுவ முடியாதவர்கள் இயல்பான வாழக்கையை வாழ முடியாது. ஆதலால், நம்பகத்தன்மையோடு நல்ல மனிதனாக இருக்கவே நாம் நிர்பந்திக்கப்படுவோம். அதை குறித்து நீ என்ன நினைக்கிறாய்?
முழு கண்காணிப்பு இல்லாமல் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று நீ மறுக்கலாம். சரி தான், இத்தகைய நிலை நமக்கென்று எந்த ஒரு அந்தரங்கமும் இல்லாமல், நம்மை நிராயுதபாணியாக்கி விடும். ஆனால் வேறு வழி இல்லை. தண்ணீர் பற்றாற்குறை அடங்காத தீயாக பரவி வருகிறது. ஒருவன் குடிக்க, குளிக்க, தோட்டத்திற்கு, கழிவுக்கு என்று எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறான் என்பதை கண்டறிந்து அவனுக்கு சன்மானமோ அல்லது அபராதமோ அளிக்கப்பட வேண்டும், வேறு வழியில் சொன்னால். ஒவ்வொருவரும் எந்நேரமும் முழு கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு – இந்த இடத்தில் தன்னுடைய குரலை தாழ்த்தி, தன் நண்பன் பக்கம் சென்று அவனுடைய கரங்களை ஏந்தினான். நண்பனின் குளிர்ந்த கரங்களை விடாமல் மேலும் தன் பேச்சை தொடர்ந்தான். இது அனைத்தும் பீதியை கிளப்பும் முன்பாக, நாம் அனைவரும் செய்ய கூடிய ஒன்று இருக்கிறது. தகவல்களை குறித்த விழிப்பு உணர்வு, சுயமாக கட்டுப்படுத்தலும். உலகளாவிய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பங்கு கொண்டே ஆக வேண்டி இருக்கிறது. இதில் ஒருவர் கூட விலக்கல்ல. ஒவ்வொருவரும் தாம் செய்வதைக் குறித்து, அதை எதற்காக, எதைக் கொடுத்து மற்றும் அதனால் என்ன பயன் என்பதைக் குறித்த புரிதல் நிச்சயம் இருந்தே ஆக வேண்டும். நமக்காக, நம் அனுமதி இல்லாமல், நம்மை குறித்த இன்னொருவர் முடிவு எடுக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். வேறு வழி இல்லை, எவர் ஒருவர் தொழில்நுட்பத்தை ஆளுகிறார்களோ, அவர்களே கடவுள் ஆவார்கள்.
ஆனால், தனக்கு ஒன்றும் அதனால் பயம் இல்லை என்று நண்பனின் குளிர்ந்த கரத்தைப் பற்றியபடியே சொன்னான். ஏனென்றால், இந்த கண்காணிப்பு வாழ்க்கையில் தங்களுடைய சௌகரியங்களுக்குச் சிறிதும் குறை வரப்போவது இல்லை என்பதால், கண்காணிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த இடத்திலிருந்து, மெய்நிகர் உலகிற்கு (Virtual World) நாம் செல்ல ஒரே ஒரு அடி தான் எடுத்து வைக்க வேண்டும். ஏனென்றால், நான் சொன்ன அனைத்தும் நம்மை மெய்நிகர் உலகிற்குத்தான் அழைத்துச் செல்கிறது. சுமார் 15 ஆண்டுகளாக நாம் இணையத்தைப் பயன்படுத்துகிறோம்.
15 ஆண்டுகளுக்கு முன், இன்னும் ஒரு 15 ஆண்டுகளில், விளையாட்டில் மின்னல் வீசும் வாளைப் பணம் கட்டி வாங்கும் நிலை வரும் என்று யாராவது சொன்னார்கள் என்றால், ‘கையில் பிடிக்க முடியாத, நிஜத்தில் இல்லாத ஒன்றிற்காக யாராவது பணம் கொடுப்பார்களா?’ என்று நம்ப மறுத்து இருப்பார்கள். அதே போல், நம் காலில் அணிய முடியாத காலணிகளுக்காக பணம் கொடுப்போம் என்று சொன்னாலும் நம்ப மறுத்திருப்பார்கள். ஆனால், இன்று அது உலக அளவில் ஒரு பெரும் வியாபாரம். கடைசியாக, நீ எப்போது ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துப் பார்த்தாய்? கையால் பிடித்துப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கைப்பேசித் திரையோ, தொலைக்காட்சியின் திரையிலோ பார்த்தாலும் உணர்வு நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. நாம் மேலும் மேலும் ஒரு நிழல் உலகிற்கு மாறிக்கொண்டே வருகிறோம்.
‘கண்ணால் ஒரு சைகை காட்டு நண்பா’ என்று குளிர்ந்து விரைத்த நண்பனின் கையை இறுகப்பற்றி நாம் மாறா தனி அடையாள முறையை (NFT) மறந்துவிடக் கூடாது. மாறா தனி அடையாள முறை உலகம் நம்மை முற்றிலும் புதுமையான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லப் போகிறது. சொல்லப் போனால், எதிர்காலம் அல்ல, நாம் ஏற்கனவே மாறா தனி அடையாள முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். குறிப்பாக, ஓவிய உலகில், இந்த மாறா தனி அடையாள முறை தொடரடு தொழில்நுட்பம் வழியாக, டிஜிட்டல் ஓவியங்களுக்கு என்று பிரத்யேகமான ஒரு மதிப்பைத் தருகிறது. இந்தத் தொழில்நுட்பம், இத்தகைய படைப்புகளை டிஜிட்டல் உலகில் மட்டுமே இருக்கக் கூடியதாக, விற்க, வாங்கக் கூடியதாக நூறு சதவீதம் நம்பிக்கைத் தன்மை உடையதாக ஆக்குகிறது
ஒத்துக்கொள்கிறேன், இந்த வளர்ச்சி ஒரு விதத்தில் முட்டாள்தனமான ஒன்றாக தெரியலாம். இது ஒரு வேளை நடக்கலாம், நடக்காது கூட போகலாம். நாம் கணக்கில்லாத புதிய விஷயங்களை பரிசோதித்து கொண்டே இருக்கிறோம். ஒரு சில வெற்றியாகும், மற்றவை ஆகாது. தொழில் புரட்சி வீணாக்கும் வாழக்கை முறைக்கு இட்டு சென்றது. தொழில்நுட்ப புரட்சி, வீணாக்கும் தன்மைக்கு அபராதம் விதிப்பதன் வழியாக தடுக்கிறது. நாம் மேலும் மேலும் இயந்திரங்களால் சூழப்படுவோம், உயிருள்ள மனிதர்களை விட எண்ணற்ற இயந்திரங்களோடு உரையாடும் நிலை வரக்கூடும். இந்த மெய்நிகர் உலகம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மகத்தான பாதிப்பை உண்டாக்க கூடும். இன்னொன்று, நாம் என்றுமிருக்கும் அமரத்தன்மையை அடையும் பேராசை கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆளுமையை கணினிப்படுத்தி பதிவேற்றம் செய்வதன் வழியாக மட்டுமே அது சாத்தியப்படும். கோட்பாட்டளவில், அது ஏற்கனவே சாத்தியமாகி விட்டது. ஒருவருக்கொருவர் உடம்புகளை மாற்றிக்கொள்ள, நம் அறிவு சேகரத்தை பதிவிறக்கி கொள்ள, நம் உடம்பின் எந்த ஒரு பகுதியையும் மாற்றிக்கொள்ள முடியும். இதெல்லாம் வெறும் விவரங்கள், ஆனால் முக்கியமானது – கற்பனையின் வீச்சு தான். இந்த கற்பனை என்பது இயலாது, சாத்தியமற்ற ஒன்றின் திசையை குறிக்கிறது. பல்லாயிரம் கற்பனைகள் சாத்தியமாகாது போகலாம் ஆனால் அந்த பல்லாயிரத்தை கடந்த ஒன்று நிச்சயம் நிஜமாகும் அதுவே விண்ணை முட்டும் கட்டிடம். தன்னுடைய பேச்சு தன் சக நண்பனை தூங்காமல் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என வலுவாக நம்பினான். எழுந்திரு தோழா, T-64 வரும் சத்தம் கேட்கிறது, நமக்காக தான் வருகிறார்கள் என நினைக்கிறேன். என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்றால் உன்னாலும் முடியும், ஆகவே உறுதியோடு இரு. இறுதியாக ஒன்றை மட்டும் கேள், நீ எதற்காகவும் இந்த வாழ்வை விட்டு விடாதே, ஏனென்றால் வாழ்க்கை அற்புதமான ஒன்றாக இருக்க போகிறது, ஒரு சின்ன கண்ணசைவை கொடு நண்பா, ஒரே ஒரு கண்ணசைவு மட்டும்.
(Source : An Angel Passed Above Us – László Krasznahorkai, translated by John Batki https://yalereview.org/article/krasznahorkai-angel-passed-above-us)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
