டி எஸ் எலியட்டின் – The Wasteland – ஓர் கண்ணோட்டம்

மூலம் : டிஎஸ் எலியட்

தமிழாக்கம் : ஆர். சீனிவாசன்

அத்தியாயம் 1: அமரர் அடக்கம்

மாதங்களில் ஏப்ரல் மிகக் கொடியது, செத்த
பூமியில் புது மலர்களைப் புவிக்கும், நினைவையும்
வேட்கையையும் பிணைக்கும், புதைந்த
வேர்களைக் கோடை மழையால் கிளறும்.

இதமாய் காத்த பனிக்காலம், பூமியை
சாந்த பனிக்கம்பளத்தில் போர்த்தியது, பசித்தவர்க்கு
உலர்ந்த கிழங்குகளைக் கொடுத்தது.

உறைந்த ஏரியின்மேல் சட்டென கோடை வந்து அச்சுறுத்த,
திடீர் மழையால் மண்டபத்தில் ஒதுங்கினோம்,
வெயில் வந்ததும், மேல் தோட்டத்திற்குச் சென்று
ஒரு குவளை காபி குடித்து, ஒரு மணிநேரம் பேசினோம்.
‘நான் ருஷ்யன் அல்ல, லிதுவேனியன் ஆனால் அசல் ஜெர்மானியன்’.
நாங்கள் குழந்தைகளாக பிரபுக்குடியில் இருந்தபோது
என் அத்தான், பனிச்சவாரி கற்பித்தான்,
நான் பயந்தபோது , ‘கவலைப்படாதே மேரி,
கெட்டியாக பிடித்துக்கொள்’ என்றான், சறுக்கினோம் கீழே,
பனிச்சறுக்கில் சுதந்திரமாய்,
இரவுகளில் படித்தேன், பனிக்காலத்தில் தெற்கே செல்ல

இந்த கல் மேட்டிலிருந்து வளரும் கிளைகள் எவை?
பற்றும் வேர்கள் எவை? குழந்தாய்,
உன்னால் சொல்லவோ, யூகிக்கவோ முடியாது, ஏனெனில்
உடைந்த படிமங்களை மட்டுமே பார்த்தவன் நீ; நிழல்தரா
உளுத்த மரம், சுட்டெரிக்கும் வெயில், வெட்டுக்கிளியின் சோகம்,
ஓடையில், உலர்ந்த கற்கள். சிவந்த பாறையின்
அடியில் நிழல் மட்டும் (நிழலில் நிற்கலாம் வா!).
உனக்கு அற்புதம் ஒன்றை காண்பிக்கிறேன்,
உதயத்தில் உன் பின்னால் தொடரும் நிழலை விட,
அஸ்தமனத்தில் உன்னோடு இணையும் நிழலை விட,
கைப்பிடி மண்ணில் பயத்தை காண்பிக்கிறேன்,

வீட்டை நோக்கி வீசுகிறது
மெய்சிலிர்க்கும் காற்று,
ஏன் தாமதிக்கிறாய் என்
இன மடந்தாய்?

‘ஒரு வருடம் முன், நீல பூக்களை கொடுத்தாய்,
‘என்னை பூ பெண் என்றார்கள்’
பூந்தோட்டத்தில் நாம் நடக்கையில், நீ-
கைநிறைய பூக்களுடன், ஈர கேசத்துடன்; என்னால்
பேசமுடியவில்லை, குருடானேன், உயிர்த்தும் இல்லை
மரித்தும் போகவில்லை, எல்லாம் மறந்து,
உன்னை பார்க்கையில், மௌனிக்கையில்,
இருண்ட வறண்ட கடல் பார்த்தேன்.

ஜெஸ்ஸம்மா மூக்கடைத்து குறிசொன்னாலும்,
ஜோதிட விஷயங்களில்,
சாதுர்யமானவள் என்றே சொல்வார்கள்.
‘இது உன் கார்டு’ என்றாள், மூழ்கிய மாலுமியை காட்டி,
‘அவன் கண்களை பார், பவளம்’
‘இவள் எங்கள் தாய், மாலுமிகளின் வழிகாட்டி’.
இன்னும் சொன்னாள் பித்தலாட்டக்காரி.
முக்கோல் மனிதன், சக்கிரம்.
இவன் ஒற்றைக்கண்ணன், அரூபியை சுமப்பவன்
தூக்கில் தொங்கியவனை காணோம், ஜலசமாதி பயம்.
ஒரு வட்டத்தில் சுழல்கின்றனர் சிலர்.
நன்றி. அவளை பார்த்தால்,
ஜாதக சூட்சமத்தை சொல்ல நானே வருகிறேன் என சொல்,
கவனம் வேண்டும் பாழ்நாட்களில்.

மாய நகர்,
சளிக்கால பழுப்பு மூடுபனி புலரியில்,
எண்ணுக்கடங்கா கூட்டமொன்று ஊர் பாலத்தின்மேல் ஓடியது,
மரணம் இத்தனை ஆத்மாக்களை ஆட்கொண்டுள்ளதா?
பெருமூச்சு, சமனற்ற பெருமூச்சு,
எல்லோருடைய பார்வை, பாதத்தை நோக்கி.
குன்றில் ஏறினர், ராயர் தெருவழி இறங்கினர்,
மாதாகோவில் மணிக்கூண்டு பக்கம்,
அந்த மணியின் ஒன்பதாம் மணியோசை எப்போதும் தப்பும்.
அங்கு, தெரிந்த ஒருவனை பார்த்தேன், ‘நண்பா!’
‘என்னுடன் படகில் பயணித்தாய் நினைவிருக்கிறதா?’
‘போன வருடம் தோட்டத்தில் (நீ) புதைத்த சவப்பூ என்னானது?’
‘துளிர்விட்டதா? இந்த வருடம் பூக்குமா?’
‘ஒருவேளை மூடுபனி அதனை அழித்துவிட்டதா?’
‘செல்ல நாயை கொஞ்சம் தூர கட்டு, அது மனிதருக்கு மட்டும் சிநேகிதன்’
‘தோண்டி எடுத்துவிடும் இல்லையேல்’
‘பாசாங்குக்கார வாசகனே, என் தம்பி, என் நிழல்’

~o0o~

டீ எஸ் எலியட்டின் புகழ்பெற்ற ‘The wasteland’ கவிதை, அவருடைய நெருங்கிய நண்பரும், சமகால கவிஞருமான எஸ்ரா பவுண்ட்டிற்கு (Ezra Pound) முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது. ஆரம்ப இரண்டு பத்திகள் பொது அறிவிற்கு எதிர்மறையாக, வலுக்கட்டாய எண்ணப் பெயர்ச்சியாக அமைவது வேண்டுமென்றே இயற்றப்பட்டது. பொதுவாக மேற்கு மண்டலங்களில் கடும் பனிக்காலங்களைத் தொடர்ந்து வரும் கோடை வரவேற்பிற்கு உரியது. எலியட், சோகங்களைப் புதைக்கும் உருவகமாகப் பனியைப் பார்த்தார். பழைய நினைவுகளைக் கிளறத் தயக்கப்பட்டு இவ்விதம் எழுதினார். முதல் உலகப்போரிலிருந்து மெதுவாக விழித்தெழும் (1922) இங்கிலாந்தின் கூட்டு நினைவு இக்கவிதை வெளிவந்தபோது இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ‘உடைந்த படிமங்களை மட்டுமே பார்த்தவன் நீ’, ‘கைப்பிடி மண்ணில் பயத்தைக் காண்பிக்கிறேன்’ போன்ற வரிகள் நிராசையும், விரக்தியையும் எதிர்கொண்டிருக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பு. அதேசமயம் ஒருதலைக் காதலின் விரகத்தில் சில வரிகள் அமைகின்றன. கடைசிப் பத்தி மர்மமானது, ‘போன வருடம் விதைத்த சவ’த்தைப் பற்றிய குறிப்பு இரு கோணங்களிலிருந்து பார்க்க முடியும். முதலாவது, பழைய நினைவுகளைப் புதைத்து, நிம்மதியைத் தேடுவதைக் குறிக்கும் உருவகம். இரண்டாவது, Corpse என்ற செடியை நேரடியாகக் குறிக்கலாம். இந்த வகைச் செடி, பிண வாசனை வீசும் பெரிய மலர்களைப் பூப்பது. இந்நிலையில் தோட்டத்தில் எதற்காகப் பிண வாசனை வீசும் பூச்செடியைப் புதைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. எலியட் மறைமுகமாக மனிதர்களின் அழிவு எண்ணத்தைக் குறிப்பிடுகிறார். அத்தோடு நிற்காமல் பாவங்களைப் புதைப்பதில் பயனில்லை எனவும் சொல்ல முயல்கிறார். அடுத்து வரும் சில வரிகள் முதல் விளக்கத்தை வலியுறுத்தும் விதமாக, ‘நடந்தவைகளை மீண்டும் கிளற விடாதே’ என்ற முதல் விளக்கத்தை நினைவுகூருகிறது.

‘The wasteland’ ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட படைப்பு. 1922-இல் பிரசுரிக்கப்பட்ட இக்கவிதை ஆங்கில நவீன கவிதை இயக்கத்தின் மிக முக்கியப் படைப்பாகும். எலியட் பல்மொழிகளை அறிந்தவர். இக்கவிதை ஜெர்மன், பிரெஞ்சு, லத்தின், கிரேக்க வாசகங்களை உள்ளடக்குகிறது.

அத்தியாயம் 2. சதுரங்க ஆட்டம்

அவள் அமர்ந்த இருக்கை, மெருகேற்றிய சிம்மாசனத்தைப்போல்
மின்னியது பளிங்கில், நெளியும் கொடி சூழ் கண்ணாடி
விளிம்பிலிருந்து இரண்டு குபிட் சிசுக்கள் எட்டி பார்க்க
ஏழு இதழ் மெழுகு விளக்கின் ஒளியை ரெட்டித்து
அவள் அணிந்த ஆபரணங்களுக்கு ஒத்த,
மேஜையில் வீசியது விளக்கின் ஒளியை.
சாடின் கோப்பைக்குள், தந்த, வண்ணக் கண்ணாடி குவளைக்குள்
பதுங்கியிருந்து அவளது மர்ம செயற்கை நறுமணங்கள்,
பொடியாய், அமிலமாய், திரவியமாய் – புலன்களை கவிழ்த்தது,
ஜன்னலிலிருந்து வீசும் காற்றுடன் கலந்து, மேலெழுந்து
வளர்க்கிறது மெழுகின் ஒளியை, அரக்கின்மேல்
புகையை வீசி, மரக்கூரையில் கோலங்கள் வரைந்தது.
செம்பு கலந்த கடல் மரம், பச்சை ஆரஞ்சு சுடருடன்,
வண்ணக்கல் நெருப்பகத்தில் எரிகையில்,
சோக உருவமாய் டால்பின் விளிம்பில் பார்க்கிறது.
புராதன மேடையின்மேல், வேற்றுலகிற்கு ஜன்னல்போல,
கற்பிழந்து உருமாறிய பிலோமேலா
வேற்றாய் நிற்கிறாள். இருந்தும் அவள் குயில் பாட்டு
பாலைகளில் கேட்கிறது இடைவிடாமல்,
அவள் கரைகிறாள், குதூகலத்துடன் விரட்டுகிறது உலகம்.
சுவரின்மேல் சில காலச்சுவடுகள்; விழித்த கண்,
மெலிந்த தேகம், முடம், அறை முழுக்க இக்கோலம்.
படியில் திடீரென காலடி சப்தம்
நெருப்பொளியில் அவள் கேசம் ஒருமுறை ஜொலித்து
வார்த்தைகளாய் மலர்ந்து, மறைந்து போனது

‘இன்று நான் நானாக இல்லை, என்னுடன் இரு
என்னுடன் பேசு, ஏன் மறுக்கிறாய், பேசு
என்ன யோசிக்கிறாய்? என்ன நினைக்கிறாய் ? என்ன?
எனக்கு தெரியாது, யோசி’

நாம் அழிவின் பாதையில் இருக்கிறோம்
இங்கு இறந்தவரின் எலும்புகூட மிஞ்சாது

    அது என்ன சப்தம்?
        காற்று
    இப்போது என்ன? என்ன செய்கிறது காற்று?
        ஒன்றும்மில்லை,
    உனக்கு புரியவில்லையா? நினைவில்லையா?
        இல்லை,

எனக்கு நினைவிருக்கிறது,
பவளம் அவன் கண்கள்.
உயிர்த்திருக்கிறாயா இல்லையா? மனதில் பாரமா?

ஆ ஆ ஆ , அந்த ஷேகஸ்பியர் பாடல்
பொலிவாய்
அற்புதமாய்

‘குழப்பமாய் இருக்கிறது, என்ன செய்ய?’
‘இந்த கோலத்திலேயே வெளியில் செல்கிறேன்’
‘தலை முடி கோதாமல், ஆனால் நாளை?’
‘என்ன செய்யலாம்’
பத்துமணிக்கு குளிக்கலாம்
மழையென்றால், நான்கிற்கு பயணிக்கலாம்
சதுரங்கம் ஆடலாம், அர்த்தமற்ற எதிர்பார்ப்போடு.

எலிசபெத்தின் கணவன் பட்டாளத்திலிருந்து விடுபட்டபோது
அவளிடம் தயக்கமின்றி நேரடியாக சொன்னேன்
‘நேரத்தை வீணடிக்காதே!’
ஆல்பர்ட் வருகிறான், ஒப்பனை செய்துகொள்.
அனுப்பிய பணம் என்ன ஆனது என கேட்பான்
பல்செட் செய்துகொள், அவன் செய்துகொண்டான்
உன்னை பார்க்க சகிக்கவில்லை என்றான், சத்தியமாக
என்னாலும் முடியவில்லை என்றேன், பாவம்
நான்காண்டுகள் பட்டாளத்தில் இருந்த பின், கொஞ்சம்
சந்தோஷப்படட்டும், நீ கொடுக்கவில்லையெனில்
இன்னொருவள் கொடுப்பாள். ‘அப்படியா?’ என்றாள்
‘ஆமாம்’ என்றேன். என்னை முறைத்து பார்த்து,
‘நீ தானே சேர்த்துவிட்டது’ என்றாள்.
‘நேரத்தை வீணடிக்காதே!’
உனக்கு பிடிக்கவில்லை என்றால் சரி,
வேறொருவரிடம் அந்த வேலையை கொடு,
ஆனால் ஆல்பர்ட் ஓடிவிட்டால் என்னை கேட்காதே
முப்பத்தியொன்றில் கிழக்கோலம் காண்கிறது
என்ன செய்ய என்றாள், முகத்தை வைத்துக்கொண்டு.
மகப்பேறு மருந்துகளின் விளைவு, என் குலைந்த பொலிவு,
(ஐந்தாகிவிட்டது, கடைக்குட்டி பிறக்கையில் பிழைப்பாளா என்றாகிவிட்டது)
மருத்துவன் சரியாகிவிடும் என்றார், ஏமாந்தேன்.
உனக்கு அறிவில்லை, என்றேன்.
ஆல்பர்ட் ஆண்மகன், என்றேன்
பிள்ளைகள் வேண்டாம் என்றால் மணம் எதற்கு?
‘நேரத்தை வீணடிக்காதே!’
ஞாயிறு ஆல்பர்ட் வீடு திரும்பினான், விருந்து படைத்தார்கள்
‘நேரத்தை வீணடிக்காதே!’
‘நேரத்தை வீணடிக்காதே!’
நன்றி, வருகிறேன், நன்றி வருகிறேன்
மெதுவாக மதியிழந்தாள்.

~o0o~
முதல் அத்தியாயத்தில் காணப்பட்ட சோகம் மற்றும் விரக்தி, இரண்டாம் அத்தியாயத்தில் ஒருவித பதட்டம் கலந்த நிராசைக்கு இடம்கொடுக்கிறது. சதுரங்க ஆட்டக்காரர்களைப்போல எலியட்டும், பெண் பாத்திரமும் வாதப் பிரதிவாதங்கள் மூலம் எதிர்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் விவரிக்கப்படும் ரம்யமான அறையில், வன்புணர்ச்சிக்கு ஆளான ஒரு கிரேக்கப் பெண் (Philomela), மற்றும் ஐந்து மக்களைப் பெற்ற பின்னும், கணவனின் கண்களுக்குக் கவர்ச்சியாகக் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இன்னொருத்தியையும் ஒப்பிடுகிறார் எலியட். இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது, பெண்ணியம் தழுவிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. பிலோமேலா (கிரேக்க அரைப் பெண் கடவுள்) சொந்த மைத்துனனால் கற்பழிக்கப்பட்டு பறவையாக மாறி தன் சோகத்தை காலாதீதம் வரை பாடுவதாக ஐதீகம். கவிதை நடை நடுவில் ஒரே பாய்ச்சலாக மரபிலிருந்து எச்சரிக்கை இன்றி மாறுகிறது. ஆங்கிலத்தில் ‘O O O O that Shakespeherian Rag’ (ஆ ஆ ஆ , அந்த ஷேகஸ்பியர் பாடல்) என்ற வாக்கியம் இந்தத் தாவுதலின் ஆரம்பம். ஒரு வித நையாண்டித்தனம். மரபு அழகியல் குலைவை குறிக்கிறது. இந்த வாக்கியத்தை தமிழாக்கம் செய்வது கடினம்.

அத்தியாயம் 3 : நெருப்பு சொற்பொழிவு

நதியின் கரை உடைந்துவிட்டது, சருகுகள் உதிர்ந்து
சகதியில் மறைகின்றன, மௌனமாய் காற்று
பழுப்பு நிலத்தின்மேல் வீசுகிறது,
தேவக்கன்னிகளை காணவில்லை.
மெதுவாய் நடைபோடு நதியே, என் பாட்டு முடியும்வரை.
கோடை ராவுகளின் அடையாளங்கள்; கம்பளங்கள், உணவு மீதம்,
சிகரெட் முனை, கைகுட்டைகள் எதுவுமில்லை நதிக்கரையில்,
தேவக்கன்னிகள் காணவில்லை
பெருமார்களின் குப்பை வாரிசுகள்,
முகவரியின்றி கரைந்துவிட்டனர்.
கரையோரம் உட்கார்ந்து கரைகிறேன்
மெதுவாய் நடைபோடு நதியே, என் பாட்டு முடியும்வரை.
மெதுவாக நடைபோடு நதியே, மனதிற்குள் பேசுகிறேன்
ஆனால் என் பின்னால், உறையும் காற்றில்,
கிசுகிசுக்களோடு எலும்பின் சலசலப்பு.

ஈர உடம்பை இழுத்துக்கொண்டு
எலியொன்று கடக்கிறது நதிக்கரையை,
மூடுபனி ஜாமமொன்றில், மின்நிலையத்திற்கு பின்
கால்வாயில் மீன்பிடிக்கையில், யோசிக்கிறேன்
என் அண்ணனை விழுங்கிய கொடுங்கோலனை பற்றி,
அதற்கு முன் என் அப்பனை கொன்ற ராஜனை பற்றி,
வெகு நேரம் யோசித்தேன்.
வெளுத்த நிர்வாண சடலங்கள் ஈர தரையில்,
தாழ்வான பரணையில் எலும்புகள்
என்றாவது எலி நடந்தால் மட்டும் சலசக்கும்,
ஆனால் என் பின்னாலிருந்து அவ்வப்போது
படையின் சப்தங்கள், எது அவனை அவளிடம்
சேர்க்கும் வசந்த மாதங்களில்.
வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும்
தாயும் மகளும் தங்கள் பாதம் கழுவினர்,
புனித நீரில்.

அலகுகளை விரித்து
அலறுகிறாள் பிலோமா

மாய நகரம்
ஓர் பழுப்பு பனி இரவில்
ஒருவன், வேற்று நகர வர்த்தகன்,
கைநிறைய ஈச்சம்பழமும், ஆவணங்களும் சுமந்து
கனத்த வட்டார வழக்கில்
விருந்துண்ணவும் கூட வசிக்கவும் அழைத்தான்

ஊதா நிற வேளை, சிந்தை விழிக்கும் நேரம்
படபடக்கும் இருதயம் எதிர்பார்ப்பில்
நான் டையர்சியஸ், இரு பால் கொண்டவன்
சுருங்கிய முலைகள் உடைய ஆடவன்,
மங்கிய ஊதா மாலையில், திரும்புதலின் அழைப்பு,
கரைசேருகிறான் மாலுமி. பணிப்பெண்,
சிற்றுண்டி செய்து, தகர டின்னிலிருந்து உணவு படைக்கிறாள்.
ஜன்னலுக்கு வெளியே, தவறி விழும் நிலையில் துணிகள்
திவானுக்கு மேல் (இரவில் படுக்கையும்),
உள்ளாடைகள், செருப்பு, இத்யாதி.
நான் டையர்சியஸ் , உறைந்த முலைகளைக்கொண்ட கிழவன்
இங்கிருந்து பார்த்தே சொல்லமுடிகிறது, என்ன நடந்ததென்று
நானும் அந்த விருந்தாளிக்கு காத்திருந்தேன்
சிவந்தமுக இளங்காளை அவன்
ஆனாலும் ஊடுருவும் பார்வை
அவனிடத்தே ஒரு தன்னம்பிக்கை
செல்வந்தனின் பாவனை
அவனுக்கு தெரியும், நேரம் இப்போதென்று
அவள் உண்ட மசக்கையில் இருக்கிறாள்
மெதுவாக வருடுகிறான்
அவள் எதிர்க்கவில்லை, தேவையும் இல்லை
நேரம் பார்த்து பாய்கிறான்
கைகள் தடையின்றி படர்கின்றன
அவனுக்கு அவளுடைய ஒப்புதல் பொருட்டல்ல
உண்மையில் அவள் உதாசீனத்தால் ஊக்குவிக்கப்பட்டு
(நான் டையர்சியஸ் இங்கு நடப்பதையெல்லாம்
அனுபவித்துள்ளேன்)
ஒரு வெத்து முத்தத்தை கொடுத்து
மங்கிய படிகளில் ஏறினான்

ஒரு முறை குவளையை பார்க்கிறாள்
அவன் போனதை இப்போதுதான் உணர்கிறாள்
ஒரு அரை எண்ணம் சிந்தையில்
‘சரி முடிந்தது, விடு’
அழகிய அவள், முட்டாள்தனமாக, தனியாக
அறையில் தானாக தலையை கொத்திக்கொண்டு
கிராமபோனில் ஓர் பாட்டு போடுகிறாள்.

‘இந்த பாடல் அலைகள் மேல் பயணித்து என்னிடம் வந்தது’
கரையோரம், ராணித் தெருவில் நடக்கையில்
பப்புகளில் சில சமயம் கேட்டிருக்கிறேன்
இனிய மண்டோலின் இசையோடு,
ஆனந்த களிப்போடு, எங்கு
மீனவர்கள் மதியம் கழிப்பார்களோ,
வேளாங்கண்ணி மாதா படம் சுவர்களில்
வண்ண அலங்காரங்கள் எங்கும்

நதி தீப்பொருள்
கக்குகிறது
பெரும்தோணிகள்
மிதக்கின்றன
அலைகளின் திருபுக்கேற்ப
சிகப்பு பாய்மரம்
அகலமாய்
எதிர்முகச்சரிவில்
கனத்த கொடிமரம் அசைய
மிதக்கும் மரங்களை
கரையோரம் வருடி
சிறு தீவை கடந்து

ஏலேலோ ஏலேலோ

இருவரும் துடுப்பு
போட்டனர்
படகின் பின்புறம்
தங்க செவப்பு
இருபுறமும்
அலைகளை வீசி
தெற்குமுக காற்றோடு
மிதந்தது கப்பல்
வெள்ளை கோபுரத்தில்
கனத்த மணியோசை

ஏலேலோ கப்பலேலோ

பேரூந்தும் தூசிபடிந்த மரங்களும் இருக்கும்
இந்த இடம் சோர்வளிக்கிறது, நதிக்கரையில் ஓர் இடம்
உற்சாகப்படுத்தியது, முட்டியை மடக்கி சிறுதோணிக்குள்
நெளிந்து உட்கார்ந்தேன் போட்டிக்கு.

பாதங்கள் ஓர் இடத்தில், இதயம் காலடியில்
போட்டிமுடிந்ததும் அவன் அழுதான்,
‘புதிய திருப்பம்’ வேண்டுமென
நான் யார் அவனை தடுக்க?

அந்த கடற்கரையில், என்னால்
வெறுமையுடன் வெறுமையை இணைக்க முடிந்தது
அழுக்கு விரல்களில், உடைந்த நகங்கள்
என் இனம், எளிமையான இனம்
எதிர்பார்ப்புகள் அற்றவர்கள்

அழிந்த நகருக்கு வந்தேன்
சாம்பல், சாம்பல், சாம்பல் சாம்பல்
கடவுளே என்னை மாய்த்துவிடு
மாய்த்துவிடு

சாம்பல்

~o0o~
மனநிலை பாதிக்கப்பட்டு சில காலம் ஓய்வெடுக்கையில் எழுதப்பட்ட எழுத்துச் சுவடுகளென முதல் வாசிப்பிலேயே புலனாகிறது. ‘வெறுமையை வெறுமையோடு இணைத்து’ (I can connect / Nothing to Nothing) என்ற வாக்கியம், இந்த முழு அத்தியாயத்தைக் குறிக்கும் எண்ணம். அசல் ஆங்கிலத்தில் மேற்கண்ட வரி வேறொரு படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது. எலியட் இப்படைப்பில் தன்னை பாதித்த பல சொற்றொடர்களை உபயோகித்துள்ளார். நிலப்பரப்பு அடிக்கடி மாறுகிறது. எளிமை காரணமாகவும், அந்நிய பிரதேசங்கள் என்பதாலும் பெயர்களை நேரடியாக குறிப்பிட முடியவில்லை. எலியட் மன உளச்சலிலிருந்து விடுபட பல இயற்கைக்குப் பேர்போன இடங்களில் தஞ்சம் புகுந்தார். அந்த நிலப்பரப்புகளின் பொலிவு நேரடியாக இந்த அத்தியாயத்தில் தெரிகிறது. குறிப்பாக லண்டனின் நெரிசலை, ரம்யமான நதி கரையோரங்களுக்கு ஒப்பிடும் அதே சமயம், மரண எண்ணங்கள் பல வடிவமாய் (எலி , எலும்பு ) எலியட்டின் சிந்தைக்குள் எப்போதுமே தொடர்கிறது. படிமங்கள் நிறைந்த இக்கவிதை, முன்சென்ற இரண்டு அத்தியாயங்களைக் காட்டிலும் சிந்தனை கருவாக ஒரே ஒளிப்படத்தைத்தான் எழுப்புகிறது. கவிதை வாசிப்பின் இப்புள்ளியில், எலியட்டின் முழு உளவியலுக்கு ஜன்னல் போலத் தோன்றும். கவிதை நடையில் உள்நோக்கு மற்றும் பிராயச்சித்த உணர்வின் இழைகள், மரண சிந்தனை மற்றும் இருப்பியல் சித்தாந்தங்களைத் தழுவுகிறது. இரண்டாம் அத்தியாயத்தில் காணப்படாத இயைபு முயற்சிகள், திடீரென மாறும் நடை இப்பகுதியின் அடையாளங்கள். படைப்பின் இந்த நிலையில் முதல் முறையாக கவிதையின் பெயர் காரணம் மற்றும் பொது கருத்து, மெல்லிய திரைக்கு பின்னாலிருந்து வரிகளால் ஒளிரவைத்து வாசகர்களின் சிந்தைக்கு, கவிதைக் கரு விளிம்பு படமாகத் தெரிகிறது. முழுமையடையா சிந்தனை என்றாலும் சிந்தனையின் பல கூறுகள் நிழலாய் வெளிவருகிறது மெல்லிய தூரிகையால் தீட்டப்பட்ட நிறங்களைப் போல.

அத்தியாயம் 4 : ஜலசமாதி

இறந்து பல நாட்களான மாலுமி
பறவை குரல்களை மறந்து,
அலைகளின் தூக்கல் இறக்கலை மறந்து
வரவு செலவு கணக்கை மறந்து
கடலடியில் கிடக்கிறான்

உள் அலைகள் அவனைத் தாலாட்ட
இளைமைக்கும் முதுமைக்கும் ஊஞ்சலாடி
ஆழிக்குள் புதைகிறான்

கப்பல் செலுத்துபவனே, குலபேதமின்றி,
அவனை, உன்னைப்போல அழகானவன் என்பதை அறி.

அத்தியாயம் 5 : வானத்து பேரொளி சொன்னது

சிகப்பு ஒளிவிளக்கு சுமந்த வியர்வை முகங்கள்
உறைந்த மௌனம் சுமந்த பாட்டாளிகள்
கட்டாந்தரையின் துயரம் சுமந்த முகங்கள்
கூச்சல் குழப்பம் நிறைந்த சிறைச்சாலை
அரண்மனை, கரகோஷம் எழுப்பும் மலைகளில்
மறையும் இடி மின்னல், எவன் இருந்தானோ
மறைந்தான், மீதம் இருப்பவர்கள் நாம்
பொறுமையாக மறைகிறோம்.

இங்கு நீரில்லை வெறும் கல்
நீரில்லை வெறும் கல் அதோடு மண் பாதை
மலைமேல் வளைந்து செல்லும் பாதை
நீரின்றி வெறும் கல் மட்டும் மலை
நீரிருந்தால் அங்கு நின்று யோசிப்போம்
கட்டாந்தரையில் நின்று யோசிக்க வேண்டாம்
நாவு வறண்டு, பாதம் மண்ணில் புதைந்து
எங்காவது நீரிருந்தால் தேவலாம்
பாழ்மலை, உமிழக்கூட முடியாத சொத்தை பல்போல்
நிற்கவோ , நடக்கவோ , உட்காரவோ முடியாது
மௌனம்கூட இல்லை மலையில்
வெறும் கொடிய இடி மின்னல் மட்டும்
ஏகாந்தம் கிட்டாது மலையில்.
வெறுப்பு நிறைந்த சிவந்த முகங்கள்
உலர்ந்த செம்மண் குடிசைகளில்

நீரிருந்தால்
கல் இல்லாமல்
கல் இருந்தால்
நீரும் இருந்தால்
நீர்
மற்றும் ஊற்று
கல்லுக்குள் ஊற்று
நீரின் ஒலி மட்டும் இருந்திருந்தால்
முட்செடிகள், வறண்டு புல் இல்லாமல்
ஆனால் பாறைமேல் நீரின் ஓசை
பறவையின் சப்தம் கேட்டிருக்கும்
சல சல வென்று
ஆனால் நீரில்லை

அந்த மூன்றாம் பிம்பம் யார்
நாம் இருவர் மட்டுமென நினைத்தேன்
ஆனால் பாதையின் மேல் உன்னோடு
அந்த நபர் யார்
பழுப்பு முகமூடி அணிந்து
ஆணா பெண்ணா தெரியவில்லை
ஆனால் அந்த நபர் யார்?
காற்றில் கீச்சு குரல் அது என்ன?
தாயின் ஓலமா?
முகமூடி அணிந்த அந்த கூட்டம் எவர்
வறண்ட பூமியின் செதில்களில் அலைபவர்
அடிவானை நோக்கி
மலையின் மேல் அந்த நகரம் எது?
ஊதா காற்றில் உடைந்து சேருவது
சாயும் சிகரங்கள்
ஜெருசலேம் ஏதென்ஸ் அலெக்சாண்ட்ரியா
வியன்னா லண்டன்

மாயம்

பெண்ணொருத்தி நீண்ட கரும் கூந்தலை கெட்டியாக கட்டி
லேசாக தலை கோதியபடியே ஓர் பாடலை கிசுகிசுத்தாள்,
குழந்தை முக வௌவ்வால்கள், ஊதா ஒளியில்
சிறகடித்து உளைச்சலிட்டன
தலைகீழாக வௌவால்கள் கீழ்நோக்கி நகர்ந்து
அந்தரங்கத்தில் குப்புற தொங்கும் கோபுரங்களின்
நேரம் சொல் மணியை அடித்தன,
வறண்ட குலத்திலிருந்தும், கேணியிலிருந்தும்
துயருற்ற ஒலிகள்

இந்த பாழ்போன மலைப் பகுதியில்
மெல்லிய அம்புலி ஒளியில், வறண்ட புல் அசைகிறது
தேவாலய மயானத்தில் உடைந்த சமாதிகள்
காலி தேவாலயம், காற்றின் உறைவிடம்
ஜன்னலில்லா ஆலயத்தின் கதவு தாழிடப்படவில்லை
அதிலுள்ள வறண்ட எலும்பு ஆபத்தற்றது
ஒரு சேவல் மட்டும்
கொக்கரகோ என்றது கூரையின்மேலிருந்து கரைகிறது
மின்னல், அதோடு திடீர் மழை

கங்கை மூழ்கியது, உலர்ந்த இலைகள்
மழைக்காக காத்தது, தூர ஹிமாலயத்தில்
கார்மேகம் சூழ்ந்து
காடு உறைந்தது, மௌனித்து காற்று
வான் பேரொளி சொன்னது

‘த’

தத்தம் : ஈதல் எது?
நண்பா, மனம் உடைகிறது,
ஓர் தார்மீக வாழ்வு கொடா தெளிவு
ஒரு நொடிப்பொழுதின் உன்மத்தம் கொடுத்துவிடும்
அந்த ஒரு நொடி, நம் இருப்பின் அடையாளம்
நினைவாஞ்சலிகளில் அது எழுதப்படாது
நினைவெனும் வலையில் சிக்காது
அன்றாடத்தில், இந்த அர்த்தமற்ற
வாழ்வில்

‘த’

தயாத்வம்: ஒரு முறை சாவி திருப்பத்தை கேட்டேன்
ஒரே முறை. சிறைக்குள் சாவியை நினைக்கிறோம்
அந்த நினைவில் சிறைப்படுகிறோம்
இரவில் மட்டும், மனமுடைந்த கொரிலியானஸ்
வதந்திகளால் நினைவுகொள்கிறோம்

‘த’

தம்யதம் : படகு உற்சாகத்துடன் செயல்பட்டது
படகோட்டியின் தேர்ச்சியான அசைவுக்கு
அமைதியான கடல், கட்டுப்படுத்தும் கைகளுக்கு
பூரண சம்மதம் கொடுத்திருக்கும் இருதயம்

கரையில் , மீன்பிடித்தவரே ,
பாலை நிலப்பரப்பு என் பின்னல்
குறைந்தது என் நாட்டையாவது சரி செய்யலாமா?
லண்டன் பாலம் விழுகிறது, விழுகிறது ,
லண்டன் பாலம் விழுகிறது
தூயப்படுத்தும் நெருப்பில் ஒளிந்துகொண்டான்
குயிலைப்போல எப்போது பாடுவாய் பிலோமா
அக்வாடைனின் இளவரசன் உடைந்த கோபுரத்தில்
இந்த சில்களை, இடிமானங்களிருந்து காப்பாற்றினேன்
தத்தா, தயாத்வம் , தம்யதம்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

~o0o~

நான்காம் அத்தியாயம் (ஜல சமாதி) மிகச் சிறியது, முதல் இரண்டுக்கும் மற்றும் கடைசி பகுதிக்கும் ஒருவித பாலம். ஜலசமாதி, முதல் அத்தியாயத்தில் சொல்லப்படும் ‘மூழ்கிய மாலுமி’ யின் தொடர்ச்சி.

கவிதையின் மிக முக்கிய பகுதி ஐந்தாம் அத்தியாயம். ஆங்கிலத்தில் ‘ What the thunder said’, படிமங்களாலும், தத்துவங்களாலும், கவிதையின் உணர்வோட்டத்தை வார்த்தைகளால் வர்ணிக்கிறது. ‘The wasteland’ என்ற தலைப்புக்கு ஒத்த பிரளயம் வந்து பாழடைந்த பூமியை கண் முன்னே காட்டுகிறது. இந்த அத்தியாயத்தின் மிக முக்கிய பகுதி, உபநிஷத்துகளிலிருந்து எடுக்கப்பட்டது. மூன்று ஜீவிகள் ப்ரஜாபதியிடம் வாழ்வின் , இருப்பின் மைய கருத்தை பற்றி கேட்டபோது, பிரஜாபதி ‘த ‘ என்ற ஒரே பதிலை சொன்னாராம். அந்த உச்சரிப்பு தேவ , மனித , அசுர குலங்கள் தத்தம் (மனிதர்கள்), தயாத்வம் (அசுரர்கள் ) , தம்யதம் (தேவர்கள்) என புரிந்துகொண்டார்கள். ஆழமான கருத்துகொண்ட இந்திய தத்துவத்தை நேரடியாக ஆங்கில கவிதையில் மேற்கோள் காட்டியது இந்த படைப்பின் சிறப்பு. ‘The wasteland’ , ஆங்கில கவிதைவுலகில் ஓர் மைல்கல்லாக கருதப்படுகிறது. ஓர் மேற்கத்திய சிந்தனை போராட்டத்திற்கு , இந்திய தத்துவத்தில் விடை கண்டதுபோல முடிகிறது. The Wasteland ஆங்கில கவிதை உலகில் கொண்டுவந்த எதிர்விளைவுகள் ஏராளம். எஸ்ரா பவுண்ட் எழுதிய கான்டோஸ் (Cantos) அளவிற்கு நீண்ட படிப்பில்லை என்றாலும் தாக்கத்தில் அதே தீவிரம் கொண்டது. The wasteland டை முழுவதும் புரிந்துகொள்ள, எலியட் சிந்தனை தூரிகையால் வரையும் படிமங்களின் உள் அர்த்தங்களை, எதிர்கால குரல்களின் எதிரொலிகளை , எச்சரிக்கைகளை முழுமையாக உணர்வது முக்கியம்.

அசல் ஆங்கில படைப்பில் பல அர்த்தச் சிக்கல்களும் , இலக்கிய மேற்கோள்களும் , இதிகாச பாத்திரங்களும் உள்ளடக்கியிருக்கிறது. The Wasteland , பல சிந்தைகளின் கலவை. அக்கலவை தரும் உள் விளக்கங்கள், உணர்வுகள் ஒன்றே. இக்கவிதை வந்த சில வருடங்களில் W B Yeats எழுதிய The Second coming வெளிவந்தது. இயலபில் வேறுபட்டாலும் ஏறத்தாழ ஒரே கருத்து கரு இரண்டிற்கும்.

The Wasteland மற்றும் The Cantos இரண்டும் இலக்கிய உலகில் பல கருத்து மாற்றங்களைக் கொண்டுவந்தது. இயைபு மற்றும் உருவத்தில் அடிப்படை கொண்டிருந்த கவிதை உலகில், சிதைவுபட்ட வரிகள், ஐதீகங்கள் , மாறுபட்ட குரல்களை அறிமுகப்படுத்தி நவீன கவிதை முறைக்கு வழிவகுத்தது. குருட்டு வரிகள் (Blank Verse) பாணியின் முன்னோடி. அழகியலின் ஊறிய கவிதை உலகில் முதல் முறையாக, மாறுபட்ட தலைப்புகளையும், சிந்தையாகத்தையும் கொண்டுவந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.