இசைப் பயணம் – சங்கீத யாத்திரை

மனிதர்கள் அக்காலத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்கள். இக்காலத்தில் பெரும்பாலான பேர் இசை (கேட்கும்) பயணம் அல்லது யாத்திரை மேற்கொள்கிறோம். வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவிலேயே வெவ்வேறு ஊர்களிலிருந்தும் இந்த மார்கழி (டிசம்பர்) மாதத்தில் சென்னையில் வந்து குவிகிறோம். மூன்று மாதங்களுக்கு முன்பே தங்குமிட வசதிகளை முன்னேற்பாடாகப் பதிவு செய்து கொண்டும், மற்ற நிகழ்வுகளை (நண்பர்களை சந்திப்பது, கோவில்களுக்குச் செல்வது என) பட்டியலிட்டுக் கொண்டும் நிகழும் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியானது. வழக்கம்போல நானும் என் கணவரும் எங்கள் நண்பர்களான மற்றொரு கணவன் – மனைவியருடன் சென்னைக்குக் கிளம்பினோம்.

நான்கைந்து தினங்களே சென்னையில் தங்குவதால் முடிந்த மட்டும் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு விடுவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம். அதனால் போய்ச் சேர்ந்த முதல் நாளே நிகழ்ச்சிகளுக்குச் சென்றோம். ஆனால் முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் ஒன்றும் பெரிய்….ய சங்கீத ஆராய்ச்சியாளரோ, விமர்சகியோ அல்ல. செவிகளுக்கும் மனதிற்கும் இனிமையான இசை, நம்மைத் தன்னோடு அரவணைத்து அற்புதமான அனுபவத்தை உணர்த்தும் இசை, அதன் இனிமையில் ஈடுபட்டு நெகிழும்போது கண்களைப் புனலெடுக்க வைக்கும் இசை, இதுவே நான் எதிர்பார்க்கும் இசையாகும். அதன் மற்ற நுணுக்கங்களை ரசிப்பது இரண்டாம் பட்சம்தான்! இனி, பட்டியலிட்டுக் கூறுகிறேன். 

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையிலிருந்த நாரத கான சபாவில் துஷ்யந்த் ஸ்ரீதரின் ‘நாரி சக்தி’ எனும் உபன்யாசம்; விதுஷிகள் அனாஹிதா-அபூர்வா இருவரின் இசையுடன் இணைத்து வழங்கினார். விறுவிறுப்பான ‘மாதே மலயத்வஜ பாண்டிய சம்ஜாதே’ எனும் கமாஸ் ராக தரு வர்ணத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி களைகட்டியது! துஷ்யந்த் ஸ்ரீதரின் வாக்குவன்மைக்குக் கேட்கவா வேண்டும்? எவ்வாறு பெண்ணின் சக்தி, அன்பு, அறிவு ஆகியன மழையாக (ஆனந்தாம்ருதகர்ஷிணி – தீக்ஷிதர்) நீராக (கங்கே மாம்பாஹி – தீக்ஷிதர், யமுனா கினாரே ப்யாரே – ஸ்வாதி திருநாள்) அன்பான பாலாக (தோடுடைய செவியன் – ஞானசம்பந்தர்), ஆடையாக (அம்பரமே – திருப்பாவை; பஜஸின கிம்பத கமலேசம் – ஸ்வாதி திருநாள்), அன்பாக, ஆதரவாக, உறக்கமாக (தேவி பாகவதம் – நித்ரா தேவி) , உறங்க வைக்கும் தாலாட்டாக (ஓமனத் திங்கள் கிடாவோ – இரயிம்மன் தம்பி), பிணிக்கு மருந்தாக, மூலிகைகளாக (மூலிகைகளின் இருப்பிடம் – மகாலக்ஷ்மி), தன்னைச் சார்ந்தவர்களுக்கு (முக்கியமாக கணவருக்கு) அளிக்கும் உளம்சார்ந்த தைரியமாக (சீதை ராமனுடன் காட்டிற்குச் சென்றது அவனுக்குத் துணையாக, தைரியமும் உற்சாகமும் அளிக்கத்தான் – மா ஜானகி – தியாகராஜர்), நம்பிக்கையாக, பொன்னாகப் பொருளாக (கனகதாரா ஸ்தோத்ரம் – சங்கரர்; ஹிரண்மயீம் லக்ஷ்மீம் – தீக்ஷிதர்), எல்லாமாகப் பரிமளிக்கிறது எனக் கதைகளைக் கூறி, அவற்றை அழகான கிருதிகள், ஸ்லோகங்கள் இவற்றைச் சகோதரிகள் பாடிட அற்புதமான இயல் இசை நிகழ்ச்சியாக வழங்கினார். 

ஆதிசங்கர பகவத்பாதரின் மாத்ருகா பஞ்சகத்தை அவர் அழகுற விளக்கியபோது உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று! சகோதரிகள் பாடியதும் மிகமிக அருமை! திரௌபதி – கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நட்பு பற்றிய விளக்கங்களும் வெகு அருமை! ‘பாரோ கிருஷ்ணைய்ய’ எனும் அருமையான கனகதாசரின் பாடல் நட்பின் வெவ்வேறு நிலைகளைச் சுட்டிக்காட்டியது. சகோதரிகள் இதனைப் பாடியவிதமும் கண்களில் ஈரம் கசிய வைத்தது.

இவை அனைத்தையும் திரு துஷ்யந்த் வழங்கியது மாஸ்லோ என்பவரின் கருத்தான “தேவைகளின் மரபானவற்றின் பிரமிட் அமைப்பு’ (Maslow’s hierarchy of needs) எனும் தத்துவத்தின் அடிப்படையில்தான்!! (இதைப்பற்றி வேறெப்போதாவது விவரமாகச் சிந்திப்போம்) மனிதனின் ஒவ்வொரு தேவையும் பூர்த்தியாகும்போது அடுத்த நிலையில் அவன் எதை விழைகிறான் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் தனது உரையை நிகழ்த்திச் சென்றார் துஷ்யந்த் அவர்கள். மிகவும் சிந்திக்க வைத்த உபன்யாசம். காலத்திற்கேற்ற அரிய கருத்துக்கள். இவற்றை இசையுடனும். ஆன்மீகத்துடனும் கலந்து வழங்கும்போது நமது ஸநாதன தர்மத்தின், இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைகளும், மேன்மைகளும் தெள்ளென விளங்கி பிரமிக்க வைக்கின்றன.

வேண்டுவோர் கேட்டுப் பயன்பெற இந்த உபன்னியாசம் ஆங்கிலத்தில் யூடியூபில் உள்ளது எனப் பின்னர் எனது நண்பர் கண்டறிந்து சொன்னார்.


அடுத்த தினம் மியூசிக் அகாதமியில் ஜே. பி. கீர்த்தனா எனும் இளம் பெண்மணியின் 1. 30 மணிக் கச்சேரி.  இவரைப் பற்றி ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் எனும் சங்கீத விமர்சகர் மிக உயர்வாகக் கூறியிருந்தார். இசைஞானமும் பாடாந்தரமும் கூடிய இசை. கம்பீரமான குரல். கேட்பவர்களைக் கட்டிப்போட்டது. ‘ஸ்ரீகாந்தோ மாதுலோ’ எனும் கணேச ஸ்லோகத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி, ‘மானே நீ நென்னலை’ எனும் கமாஸ் ராகத்திலமைந்த அன்றைய தினத்திற்கான 6ம் திருவெம்பாவைப் பாடலுடன் தொடர்ந்தது. அன்னமாச்சார்யாவின் ‘வந்தேஹம் ஜகத் வல்லபம்’ எனும் ஹம்சத்வனி ராகப் பாடலில் அநாயாசமாக சங்கதிகளும் பிருகாக்களும் பிரவகித்தன. கேட்கவே சுகானுபவமாக இருந்தது. அடுத்து அருமையான மலயமாருதம் ராக ஆலாபனை; ‘தன்யுடெவ்வடோ தாசரதே’ எனும் பட்டணம் சுப்ரமணிய ஐயரின் கிருதி- கிருதி பாடிவிட்டு ‘வரமத்தள’ எனும் இடத்தில் நிரவல் பாடினார் – கேட்கும் நமக்கே உற்சாகம் கொப்பளித்ததெனில் பாடுபவரின் மனோநிலையைக் கூறவும் வேண்டுமா?  ஆங்கிலத்தில் telepathy என்பர்களே, அதுபோல, கல்யாணி பாடினால் நன்றாக இருக்குமே என எண்ணினபோதே கல்யாணி ராக ஆலாபனையைத் தொடங்கினார். அதிகம் பாடப்படாத ஒரு கீர்த்தனையைக் கேட்போமா என எண்ணியபோது ‘தல்லி நின்னு நெரநம்மிதி நானு வினவே” என்ற சியாமாசாஸ்திரி கீர்த்தனையை எடுத்துக்கொண்டார். ‘சியாமகிருஷ்ண பரிபாலினி சூலினி’ எனும் சரணத்து வரிகளை ஒரு அற்புதமான தேவானுபவத்தில் கரைத்து நிரவல் செய்து கல்பனா ஸ்வரங்களை வாணவேடிக்கைமாதிரி பாடி அசத்தினார். தொடர்ந்தது தனி ஆவர்த்தனம். பாடகி கீர்த்தனாவிற்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. உள்ளத்திற்கு நிறைவைத் தந்த கச்சேரி.


மாலை பார்த்தசாரதி ஸ்வாமி சபாவில் திரு விஜய் சிவா அவர்களின் கச்சேரி. சம்பிரதாயத்தில் அழுத்தமாக வேரூன்றிய பாடகரின் கச்சேரியைக் கேட்கப் போகிறோம் என்று உள்ளம் துள்ளியது. நம் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருந்தது நிகழ்ச்சி. ‘நின்னுஜூசி தன்யுடைதி’ எனும் பட்டணம் சுப்ரமணிய ஐயரின் கிருதி சௌராஷ்டிரத்தில் கனகம்பீரமாகத் துவங்கி, சியாமா சாஸ்திரியின் ‘பராகேல நன்னு’ எனும் கேதாரகௌள ராக கிருதியுடன் அழகாகத்தொடர்ந்தது. அடுத்து அருமையான தன்யாசி ஆலாபனை; ‘மங்கள தேவதயா’ எனும் கிருதி. இதற்கு முன்பாக வித்வான் வயலின் வாசித்தவரும் இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி விருது பெறுகின்றவருமான திரு ஸ்ரீராம்குமார் அவர்களை “ஸ்ரீ அண்ணா இதனை விளக்குவார்,” எனக்கூற, ரசிகர்களிடையே சிரிப்பலை எழுந்தது. வறுமையிலும் செம்மையாக வாழ அன்னை மகாலக்ஷ்மி வழிகாட்ட வேண்டி ‘ஹிரண்மயீம் லக்ஷ்மீம்’ எனும் பாடலை இயற்றினார் தீக்ஷிதர் அவர்கள். பின்பு அதற்கு நன்றி கூறுமுகமாக இந்தக் கிருதியை இயற்றினார் என ஸ்ரீராம்குமார் விவரித்துக் கூறினார். அருமையான கிருதி, அழகாக விளக்கம்; அற்புதமாகப் பாடினார் வித்வான். தொடர்ந்தது ‘இதி நீகு நியாயமா’ எனும் கமனாஸ்ரம ராகக் கிருதி, மைசூர் வாசுதேவாச்சார் இயற்றியது. கமனாஸ்ரம ஆலாபனை அபூர்வப் பிடிகளில் ஜொலித்தது. அடுத்த கமாஸ் ராகப்பாடலான ‘சுஜன ஜீவனா’ நம்மை டி.கே.பட்டம்மாள் அவர்களின் காலத்திற்கு அழைத்துச் சென்று பரவசப்படுத்தியது. இதில் ‘சாருநேத்ர ஸ்ரீகளத்ர’ எனும் வரிகளை மட்டும் விஸ்தாரமாக நிரவல் செய்தது சூப்பர்! நயமான நாயகி ராகத்தில் ‘முருகா முருகா’ என்ற பாடல். ஸ்பென்சர் வேணுகோபால் என்பவர் இயற்றியதாம் – உடனிருந்த தோழி கூறினார். இங்கும் கல்யாணி ராக ஆலாபனை! இன்று இரண்டாம் முறையாகக் கல்யாணி! திகட்டவேயில்லை! இது வேறே பரிமாணம், சங்கீதத்தில் ஆழ்ந்து திளைத்து, அதனை ஒரு வேள்வியாகக் கொண்டு முங்கிக் குளித்து முத்தெடுக்கும் ஒரு வித்வானால் மட்டுமே விரிவாக்கம் செய்து காட்டி, கேட்போரை ஒரு தேவானுபவத்திற்கு உள்ளாக்கித் தன்னோடு அந்த சங்கீத தேவதையின் திவ்யதரிசனத்திற்கு அழைத்துச் செல்ல இயலும். அதுதான் நிகழ்ந்தது. வெட்கமேயில்லாமல் கண்களில் கரையுடைந்து பெருகிய நீர். ‘ஏதாவுனரா நிலகட நீகு’ எனும் தியாகைய்யர் கிருதி. மனம், மெய், மொழி அனைத்திற்கும் அப்பாற்பட்டதொரு இசை அனுபவம். மிருதங்க வித்வான் திரு பரத்வாஜும் கடம் வித்வான் திரு திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணனும் அருமையான தனி ஆவர்த்தனம் வழங்கினர். திரு பரத்வாஜ் உமையாள்புரம் சிவராமன் அவர்களின் சிஷ்யராம். கேட்கவா வேண்டும்? மேலானதொரு வாசிப்பை நீண்ட நாட்களின்பின் கேட்டோம். இனிமேல்தான் கச்சேரியின் முக்கியப் பகுதி. தேவமனோஹரி ராக ஆலாபனை. ஆஹா என மெய்சிலிர்த்தது. தெரிந்த ஓரிரு கிருதிகளில் ஏதாவது ஒன்றைப் பாடுவார் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் வித்வான் தானம் ஆரம்பித்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. அற்புதமான ராகம்; அருமையான இசை, வேறென்ன வேண்டும்? ஆனால் மேலும் ஆச்சரியங்கள் காத்திருந்தன. பல்லவிதான் அந்த அற்புதமான ஆச்சரியம்: ‘தேவமனோஹரி வந்தருள்வாய், துயரற சுகம்பெற மஹாதேவமனோஹரி வந்தருள்வாய்,’ எனும் பல்லவி. உடலெல்லாம் சிலிர்த்தது. பல்லவிகள் பெரும்பாலும் பாடுபவர்களால் தாளத்திற்கேற்றபடி அமைக்கப்பெறும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது அன்னையிடம் பிரபஞ்சத்துக்கான வேண்டுகோளாக அல்லவா அமைந்துள்ளது? ஆழ்மனத்து வேண்டுதல் இப்போது இந்த உலகிற்குத் தேவைதானே? சங்கீதக் கடலில் நீராடினோம். மூழ்கித் தத்தளிக்கவில்லை.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ……………
………………………………………………
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

(அகன்ற பெரிய பொய்கையில் ‘முகேர்’ என ஒலியெழப் பாய்ந்து பின் கைகளால்  குடைந்தபடி நீந்திச் செல்வது வழக்கம். இவ்வாறு செய்யும்போது எழும் மகிழ்ச்சியில் பலரும் ஆரவாரம் செய்வார்கள். ஆனால் பாவை நோன்பு நோற்கும் பெண்களோ இறைவன் திருவடிப் புகழைத்தான் பாடுவார்கள்; இதற்குக் காரணம் வழிவழியாக வந்த, வளர்ந்துவரும் பரம்பரைச் சிறப்பு) என்ற திருவெம்பாவை கூறுவதுபோல இசையில் (இதுவும் இறைவடிவம் தானே)  ‘முகேர்’ என்று மூழ்கி மென்மையாக கைகளால் நீரைக் குடைவது போல, மெல்ல நீராடி அந்த சுகானுபவத்தை அனுபவிப்பதும் அனுபவிக்கத் தருவதும் தெய்வீக இசை. வேறு விளக்கமும் வேண்டுமோ?

ஓரிரு பாரதியார் பாடல்களுடனும், தேசபக்தி கீதத்துடனும், திருப்புகழுடனும் கச்சேரி நிறைவுற்றது. நீண்ட காலத்திற்கு நெஞ்சில் நிலைத்து நிற்கும் இசையமுதம்.


அடுத்ததினம் நாரதகான சபாவில் திருமதி காயத்ரி வெங்கடராகவனின் இசைவிருந்து. பலத்த எதிர்பார்ப்புகளோடு போன எங்களை பிரமிப்பில் ஆழ்த்திக் கசிய வைத்தார் பாடகி. கணேசர் மீதான பாடலுடன் தொடங்கி, மாயாமாளவகௌளையில் ‘தேவ தேவ கலயாமிதே’ எனும் ஸ்வாதிதிருநாள் கிருதியுடன் தொடர்ந்தார். ‘ஜாதரூப’ எனுமிடத்தில் அற்புதமான ஸ்வரகல்பனை. பின்பு அமைதியான, பக்குவமானதொரு சாமா ராக ஆலாபனை. ‘குருகுஹாய பக்தானுக்ரஹாய குமாராய நமோ’ எனும் தீக்ஷிதர் க்ருதி, மிக இனிமையாகப் பாடப்பட்டது. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெரிதும் போற்றப்படும் கவிதை அமைப்புகளைப் பாடகி பாடிய விதத்தில் இருந்து உணர்ந்து ரசித்து அனுபவிக்க இயன்றது.

தொடர்ந்து சியாமா சாஸ்திரியின்  சாவேரிராகக் கிருதியான ‘சங்கரி சங்குரு’. இரு சரணங்கள் பாடப்பட்டன. ‘ஜம்புபதி விலாஸினி’, ‘சியாமகிருஷ்ண சோதரி’ என்பதும். முதல் சரணத்தில் கல்பனாஸ்வரங்கள் பாடப்பட்டன. அடுத்தது அற்புதமான கரஹரப்ரியா ஆலாபனை. ராகத்தில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் நின்று நிதானித்து விரித்துப்பாடி ராக ஸ்வரூபத்தை அழகுற எடுத்துக்காட்டி இசைவிருந்தே பரிமாறினார் காயத்ரி. கேட்க இரு செவிகள் போதவில்லைதான். “நடசி நடசி’ எனும் தியாகராஜ கிருதி. படுஜோரான இசைவிருந்து. அடுத்து விறுவிறுப்பாக தண்டபாணி தேசிகரின், ‘எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி’ எனும் அம்ருதவர்ஷிணி ராகப்பாடல். கல்பனாஸ்வரங்களும் அம்ருதவர்ஷிணியாகப் பொழிந்து நம்மை நீராட்டின. பின்பு தொடர்ந்தது ஹிந்தோள ராகம், தானம், பல்லவி – ‘நாரதகான விசாரதா’ எனும் பல்லவி. அருமையான கல்பனாஸ்வரங்கள் ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்தன. கமாஸ் ராகத்தில் ‘சாரதாம்பாம் பஜே’ எனும் பாடல் (மஹாஸந்நிதானம் இயற்றியது), சூர்தாஸ் பஜனுடன் கச்சேரி நிறைந்தது, மனதும் நிறைந்து மகிழ்ச்சி தளும்பியது.


அடுத்த தினம் அகாதமியில் வெங்கட நாகராஜன் எனும் இளைஞரது 1.30 மணிக் கச்சேரி. இவர் ஒரு முனைவர் பட்ட ஆய்வாளர். வித்வான் டாக்டர் சுந்தரின் சிஷ்யர் என வலைத்தளத்திலிருந்து அறிந்து கொண்டோம். அருமையான பாடாந்தரம். வனஜாக்ஷா எனும் சாவேரி வர்ணத்துடன் விறுவிறுப்பாக ஆரம்பித்த கச்சேரி, ஸ்வாமிநாத பரிபாலயாசுமாம் என நாட்டையிலும், “ஜனனி நின்னுவினா’ என ரீதிகௌளையிலும் தொடர்ந்தது. ரீதிகௌள ராக ஆலாபனை அழகாகப் பூப்போல இதழ் இதழாக விரிந்து கிருதியும் நிதானமாக அம்பிகையை ஆவாஹனம் செய்வதுபோல பாடப்பட்டது. ‘பாவம் என்பது இதுதான்’ எனக் கூறுவதுபோல ‘வனஜாயத நேத்ரி’ எனும் சொற்களை நிரவல் செய்து பாடும்போது பாடகரின் ஆன்மீகத் தேடலில் நாமும் ஒன்றிவிட்டோம். ரீதிகௌளையும் ஜனனியும் என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டனர். அடுத்து தொடங்கிய ஆலாபனையின் முதல் இசைப்பே சங்கராபரணத்தின் வடிவத்தை நமக்கு உணர்த்தி விட்டது. அருமையான பாடாந்தரம். தனது குரலின் எல்லைகளைப் பரிபூரணமாக உணர்ந்துகொண்டு அதற்கேற்பத் தனது இசையை அமைத்துக் கொள்ளும் திறமை விகசித்தது. ‘எந்துகு பெத்தல’ எனும் தியாகராஜ கிருதி மிகவும் அருமை. மிருதங்கமும் பாடகரின் கமகங்களுடனும் சங்கதிகளுடனும் இசைந்து வாசித்தது தனித்து எடுப்பாக அமைந்தது. மொத்தத்தில் மனதிற்கு நிறைவைத்தந்த கச்சேரி இது.


அந்த தினம் மாலைக்கச்சேரி சிக்கில் குருசரண் அவர்களுடையது. ராமகிருஷ்ணன் வயலின் வாசிக்க பரத்வாஜ் மிருதங்கம் வாசித்தார். ஸ்ரீராக வர்ணத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி, கேதாரத்தில் ‘ராமா நீபை தனகு’ வில் களைகட்டியது. பின்பு அன்றைய திருப்பாவை – கீழ்வானம் வெள்ளென்று; பின் ‘தாமதம் தகாதய்யா’ எனும் விறுவிறுப்பான மோஹனகல்யாணிப்பாடல்; கோபால ஐயர் இயற்றியது, கேட்க மிகவும் இனிமை. நடபைரவி ஆலாபனையைத் தொடர்ந்து ‘ஸ்ரீவல்லி தேவசேனாபதே’. அற்புதமான பாட்டுக்கு, குற்றாலம் அருவிமாதிரி கல்பனா ஸ்வரங்கள்; ஆனந்தமான ஒரு இசைக்குளியல்!! ‘சுவர்க்கத்துக்கு இரண்டு விரல்கடை தூரம் தானோ?’ என் தாயார் கேட்பது எங்கோ காதில் ஒலிப்பதுபோல பிரமை!! தொடர்ந்து அன்னமய்யாவின் ‘முத்துகாரே யசோதா’ உள்ளத்தை நிறைத்து இனிமையை இழைத்தது. இப்போதுதான் கிளைமாக்ஸ் – ‘பொல்லாவினையேன்’ எனும் சிவபுராணத்துச் சில அடிகளை சிந்துபைரவியில் பாடினார் குருசரண் – மனதை உருக்கி கண்களில் நீர் பெருக வைத்த திருவாசகம். யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன் – உயர்வான சங்கீதம் கண்களில் நீரையே வரவழைக்கும் என்று. மொசார்ட்டின் Great Mass in C minor K-427ல் 3.04- 3.50 நிமிடங்களுக்குள்ளான ஸொப்ரானோ (Soprano) எனும் குரலுக்குரிய பெண் பாடகியின் குரல் எவ்வாறு நம்மை மெய்சிலிர்க்கச் செய்யுமோ, அவ்வாறேதான் சிவபுராண வரிகளும், பாடுபவர்கள் பாடினால் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும் தன்மை கொண்டவை. தொடர்ந்து ‘விஸ்வேஷ்வர் தர்சன்’ என்ற ஸ்வாதிதிருநாள் பாடல். உள்ளத்தில் பொங்கிய ஆனந்தத்தை விவரிக்கச் சொற்களில்லை. பிறகு ஒரு தில்லானா; மங்களம். இன்னமும் தொடராதா என ஏங்க வைத்து இரண்டு மணி நேரத்திலேயே முடிந்துவிட்ட கச்சேரி. 

மூத்த குடிமக்களே 75 சதவிகிதம் வருகின்ற கச்சேரிகளில் இவற்றை ஏற்பாடு செய்யும் சபாக்காரர்கள் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள் – வசதியான இருக்கைகள் தேவை; கையில்லாத பிளாஸ்டிக் நாற்காலிகளை சாடின் உறை போட்டு மூடி அலங்கரித்து வைத்தாலும், எக்கச்சக்கமாகப் பணம் கொடுத்து டிக்கட் வாங்கி வருபவர்கள் பாடு திண்டாட்டம்தான். இருக்கைகளில் மாறிமாறி நெளிந்தவண்ணம்தான் கச்சேரியைக் கேட்க இயன்றது. 


அடுத்த தினம் அகாதமியில் காயத்ரி வெங்கடராகவனின் கச்சேரி. ஆனந்தபைரவியில் அவர் பாடிய ‘தியாகராஜ யோக வைபவமும்’, மத்யமாவதியைப் பிரமாதமாக ஆலாபனை செய்து பாடிய ‘தர்மசம்வர்த்தனி‘யும் உள்ளத்தில் போய் தனி இடம் பிடித்து அமர்ந்து கொண்டன. சாவேரியில் ‘ஐயனே நடனம் ஆடிய பொற்பாதா’ என்ற  அழகான ஜதி அமைப்புகளுடன் கூடிய முத்துத்தாண்டவர் பாடல் உள்ளத்தை நடனமாட வைத்தது. கானத்தின் இனிமையில் காலம் நின்றுவிட்டது. பின் சங்கராபரணத்தில் ஒரு அருமையான பல்லவி, முத்துஸ்வாமி தீக்ஷிதரின்

250வது ஆண்டினைக் கொண்டாட எழுதப்பட்ட ஒரு அரிய பல்லவி – ‘அக்ஷயலிங்கா கங்கோத்தமாங்க சதயாந்தரங்கா குரு சங்கராபரண புஜங்க’ என்பது; அஷ்டாவதானி திரு மஹேஷ் பட் அவர்களால் இயற்றப்பட்டது என்றார் பாடகி. கோபாலரத்னம் எனும் ஸ்லோகம், யாதவ நீபா யதுகுல நந்தன, எந்தையும் தாயும் ஆகியவற்றுடன் நிகழ்ச்சி நிறைவேறியது. உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி.


தொடர்ந்தது சந்தீப் நாரயணின் கச்சேரி. விறுவிறுவென ‘ஸந்தான கோபால கிருஷ்ணம்‘ – கமாஸ், ‘எத்தனை கேட்டாலும்’ – பைரவி – ஊத்துக்காடு, ‘வினராத நா மனவி’ – தேவகாந்தாரி இவையெல்லாம் விறுவிறுப்பாக ஆனால் அருமையாக அழகுணர்ச்சியோடு வழங்கப்பட்டன. ரிஷபப்ரியா ராகத்தை அழகாக, நிதானமாக, கட்டம் கட்டமாக விரிவாக்கி ஆலாபனை செய்தார் ஸந்தீப். ‘கனநய தேசிகா கானரசிகா’ எனும் கோடீஸ்வர ஐயர் பாடல். மிக அருமையாகப் பாடப்பட்டது. இதனை ‘சுகம், சௌக்யம், சௌலப்யம்’ எனலாமா? அடடா, என்ன அழகு, இனிமையான இசைப்பொழிவு, அதனை வழங்கும் குரல், ஆனந்தம் பொங்கியதே! 

இப்போது எழுந்து செல்ல வேண்டிய நிலைமை! கான்டீனில் வரிசை மலைப்பாம்புபோல் நீண்டிருந்தது. நாமோ ‘டயபடீஸ்’ ஆசாமிகள்! நேரத்திற்கு உண்ண வேண்டும். ஆகவே மனமேயில்லாமல் உணவைத்தேடிப் பயணப்பட்டோம். அடுத்து பாடகர் ‘பேகட’ பல்லவி பாடினார் என நண்பர்கள் கூறியதாக எண்ணம். நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!


இன்று நமது சென்னை விஜயத்தின் கடைசிநாள். 5.30க்கு ரயிலைப் பிடிக்க வேண்டும். 3.30 வரை அகாதமியில் கேட்கலாமே என மகிழ்ந்தோம். ஆமாம்! அனாஹிதா – அபூர்வா சகோதரிகளின் கச்சேரி. அருமையாகவே இருக்கும். நின்னுஜூசி தன்யுடைதி எனும் சௌராஷ்டிர ராகத்திலமைந்த பட்டணம் சுப்ரமணிய ஐயர் கிருதி. கேட்க பரம சுகமாக இருந்தது. ஸ்ரீ மங்கலாம்பிக எனும் கன்ட ராகக் கிருதியைத் தொடர்ந்து ‘வந்து கேட்பார் இல்லையோ’ எனும் ஊத்துக்காடு கிருதியைப் பாடினர் சகோதரிகள். அடுத்தது பேகட ராக ஆலாபனை! என்னென்ன பிடிகள், ராகத்தின் மொத்த வடிவத்தையும் அழகழகாகப் பிரித்துக் காட்டிய கற்பனை என்ன! என்ன க்ருதி என ஊகித்துக் கொண்டேயிருந்தேன். ‘நாதோபாஸன‘ பாடுங்களேன் என மனம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்தது. அதையே சகோதரிகள் பாட ஆரம்பித்ததும் உலகம் ஒருகணம் ஸ்தம்பித்துப் பின் சுழல ஆரம்பித்தது! கேட்டுக்கொண்டிருந்தபோதே மனம் சிந்தனை வயப்பட்டது: ‘இது ராகத்தின், அதன் வடிவத்தின் மொத்த இலக்கண அழகா, சாஹித்யத்தின் மேன்மையால் பொங்கும் அழகா, இல்லை பாடகிகள் குவிந்த மனத்துடன் இசையில் ஒன்றிப் பூரணமாகத் தங்களையும் மறந்து அந்த ராகத்திற்கும், சாஹித்யத்திற்கும், அதனை இயற்றிய தியாகராஜருக்கும் கொடுக்கும் மரியாதையில் உண்டான மேன்மையான இசைவிருந்தா? யாமறியோம் பராபரமே! நீயே இந்த இசையின் உள்ளிருந்து அனைவரையும் – பாடுபவர்களையும், கேட்பவர்களையும் – ஆட்டுவிக்கிறாய்! பிரம்மானந்தத்தில் ஆழ்த்துகிறாய். ‘தந்த்ரீ லயஸ்வர’ எனுமிடத்து நிரவலும் கல்பனா ஸ்வரங்களும் என்னை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விட்டன. அக்கம்பக்கம் பற்றிய பிரக்ஞையே எழவில்லை, கரகோஷம் எழும்பும்வரை! இதுவல்லவோ தெய்வீக சங்கீதம்?

ம்ஹ்ம்! நாங்கள் கிளம்ப வேண்டியதாயிற்று. சென்னை சங்கீத சீஸனுக்கு இந்த ஆண்டு விடைபெற்றுக் கொண்டோம்.

கூடுமானவரை எனக்குப் பிடித்த, நான் ரசித்த நிகழ்ச்சிகளைப் பற்றியே எழுதியுள்ளேன். அபஸ்வரம் போல எதற்காக, பிடிக்காதவைகளைப் பற்றி எழுதி, மகிழ்ச்சியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்?

லோகா சமஸ்தா சுகினோ பவந்து!


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “இசைப் பயணம் – சங்கீத யாத்திரை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.