தெலுங்கு மூலம் : ஹைமா பார்கவ்
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
இரவெல்லாம் ‘நிசி’ கன்னிகையோடு சேர்ந்து கண் விழித்த சந்திரன், விடியும் நேரத்தில் ஒளி மங்கி, பொழுது புலர்ந்ததும் சூரியனின் ஒளியோடு கலந்து போனான். யமுனை நதி சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. பறவைகள் கீச்சு கீச்சென்று ஒலித்துக் கொண்டிருந்தன.
அந்த ஒசைகளைச் செவி மடுத்தபடி, உதயம் செய்த தினங்களின் அதிபதியான சூரியனோடு பேசிக்கொண்டே, அங்கு வந்த ராதா தேவி, கையோடு எடுத்து வந்த குடத்தை யமுனைக் கரையில் வைத்து, அங்கேயே அமர்ந்தாள். பாதங்களை நீரில் அளைய விட்டாள்.
ஆகாயத்தில் கனமாக அசைந்த கருத்த மேகத்தைப் போலவே, அவள் மனதும் திகிலோடு பாரமாக இருந்தது. ராதாவின் பாதங்களைக் கழுவிய யமுனை நதி வேணு கானத்தை ஒலித்தாற்போலிருந்தது. குளிர்ச்சியாகக் காலைத் தொட்ட நீரலைகள் இனிய கனவுகளைக் கொண்டு வந்தன. கண்களில் கனவு மிதக்க. அவற்றில் கண்ணனை தரிசித்தாள் ராதை.
“எத்தனை யுகங்கள் ஆனதோ கண்ணனைப் பார்த்து” என்று பெருமூச்செறிந்தாள். நினைவுகளின் நீரோட்டத்தில் கடந்து போன நாட்கள் அடித்துக் கொண்டு வந்தன. கண்ணன் வெண்ணெய் தின்ற நாட்களும், வேணு கானம் இசைத்த நாட்களும், வெண்ணிலவில் நடந்த நாட்களும், வேடிக்கை விளையாட்டு நடத்திய நாட்களும் திரும்ப வருமா? வராது. சிறுவனும் கோபாலனும் ஆன கிருஷ்ணன் மக்களின் தலையெழுத்தையே மாற்றக் கூடிய தலைவனாகி விட்டான். தோட்டத்தில் சுற்றித் திரிந்தவன் கோட்டையில் வாழ்கிறான். ராச லீலையில் ஈடுபட்டவன் ராஜ காரியங்களில் மூழ்கிவிட்டான். அப்படிபட்டவன் யமுனை நதிக்கரையில் விளையாடுவது என்பது நடக்கக் கூடிய செயலா? அந்த நாட்களின் அழகு காலச் சக்கரத்தின் கீழ் உதவியற்று நசுங்கிப் போனது. துயரத்தின் மறு உருவமாக ராதை மீதி இருந்தாள். அதை நினைத்ததும் அவள் மனம் கனத்தது. சுற்றிலும் ஒரு முறை ஆராய்வது போலப் பார்த்தாள்.

இலையுதிர்காலத்தின் தாக்கத்தால் கலகலவென்று மரங்கள் இலைகளை உதிர்த்தன. காய்ந்துபோல இலைகள், மீந்து போன கனவுகளைப் போலவும், கலைந்து போன ஆசைகளைப் போலவும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மொட்டையாக நின்ற மரங்கள், தூசிபடிந்த இளமைக்குக் காவல் காக்கும் முதுமையைப் போல நின்றிருந்தன.
“என் மூளியான வாழ்க்கையை விட இந்த மரங்களே மேல். வாழும் காலம் வரை ஒவ்வொரு ஆண்டும் அவற்றுக்கு வசந்த காலம் வந்து கொண்டே இருக்கும். எனக்கு இந்தப் பிறவியில் மீண்டும் இனி வராது” துயரத்தோடு நினைத்துப் பார்த்தாள் ராதை.
“ஒருமுறை துவாரகைக்கு என்னையும் அழைத்துச் செல் கிருஷ்ணா. அங்கிருக்கும் வைபவத்தையும், கொண்டாட்டங்களையும் பார்க்க வேண்டும் போலுள்ளது” என்று ஸ்ரீகிருஷ்ணனிடம் பேசுவதாக எண்ணி, கற்பனையிலேயே துவாரகையின் வடிவத்தையும் பிராகாரத்தையும் நினைத்துப் பார்த்தாள். அங்கு நிரந்தரமாக அழகும் ஆனந்தமும் குடிகொண்டிருக்குமா? அமைதியும் சௌக்கியமும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்குமா? சிரிப்பும் கும்மாளமும் இன்பமாகப் பேசிப் பழகிக் கொண்டிருக்குமா?
கிருஷ்ணனின் அந்தப்புரத்தைக் கற்பனை செய்து பார்த்தாள் ராதா. அஷ்டமி நாளில் பிறந்தவனுக்கு எட்டு மனைவியர்கள். அஷ்ட ஐஸ்வர்யங்கள். இப்போது என்ன செய்கிறானோ அந்த ‘இந்தீவராக்ஷன்’? ஏகாந்தமாக எந்தப் பெண்ணின் சேவையில் இருக்கிறானோ? அந்த என் தங்கக் கட்டியை காதல் மிகுந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சுகம் கொள்ளும் மனைவியர் உடன் இருப்பார்களா? ஹூம். ராதை பெருமூச்செறிந்தாள்.
திடீரென்று ராதையின் மனம் துணுக்குற்றது. துவாரகையோடு ஒப்பிட்டால் இந்த இடம் எத்தனை களையிழந்து காணப்படுகிறது? ஒரு முறை தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள். கிருஷ்ணனைக் கவர்வதற்கு அவளிடம் எந்த ஆடம்பரமும் இல்லை. நகையோ, அலங்காரமோ இல்லை. அவனுடைய மனைவியரின் அழகின் முன்னாலும் நளினத்தின் முன்னாலும் ராதை வெறும் மட்டரகமாகப் பார்க்கப்படுவளோ? இப்படிப்பட்ட தன்னை கிருஷ்ணன் நினைவு வைத்துக் கொள்வானா? இந்த ஏழையை துவாரகைக்கு வரச் சொல்வானா? ஒரு வேளை சென்றாலும் அவளைப் பார்த்து எல்லோரும் ஏளனம் செய்ய மாட்டார்களா? “அதோ திருஷ்டி பொம்மை போன்று ஒரு கிராமத்துப் பெண் நம் பிரபுவோடு பேச வந்துள்ளாள். சற்றும் முன்பின் யோசிக்காமல் பைத்தியம் போல் வந்துள்ளாள். ஸ்ரீ கிருஷ்ணர் இவள் முகத்தை ஏறிட்டும் பார்க்க மாட்டார்” என்று பெண்கள் எல்லாம் பரிகாசம் செய்து சிரிப்பார்கள்.
அந்தக் கற்பனையே ராதையை நடுங்கச் செய்தது. அவள் கண் முன்னால் கிருஷ்ணனின் வைபவம் பெருகிப் பெருகி ஆகாயத்தைத் தாண்டிச் சென்றது. ஜகம் முழுவதும் நிரம்பிய ஜகன்னாதனின் பாதங்களின் முன்னால் நின்ற காட்டு மலரைப் பார்த்து மக்கள் சிரித்தார்கள். அத்தனை உயரத்தில் கிருஷ்ணனை நிற்கவைத்த வைபவம் அவனைக் குனிய இடம்தருமா? குனிந்து கையால் அந்த மலரை எடுத்து ஆறுதல் அளிப்பானா? ஊஹூம். அது என்றுமே நடக்காது. எந்தக் காலத்து ராதை அவள்? எங்கிருந்து வந்தாள்? சிறுவயது தோழமையை, இனிமையான கற்பனையோடு ஆலம் விழுது போல் வளர்த்துக் கொண்டுள்ளாள். அந்த விழுதுகளே இன்று தூக்குக் கயிறாக மாறியதா?
“பிரபு, இப்படி அழவைப்பதற்கு பதில் தங்கள் பாதத்தால் அந்தப் பூவை மிதித்து நசுக்கி விடக் கூடாதா? நிரந்தரமாக மோட்சத்தை அருளக் கூடாதா?” கண்ணீர் விட்டழுத ராதை வருத்தத்தில் கண்களை மூடினாள்.
கண்ணிமைகளுக்குப் பின்னால் மறைந்த ஆசைகள் புன்னகை புரிந்தன. கண்ணீரைத் துடைக்கப் போன ராதையின் கைகளை யாருடைய கையோ வந்து தடுத்தது. அந்தக் கருத்த கை அவளுடைய கண் மையைக் கரைத்த கண்ணீரைத் துடைத்தது. யாரது? திடுக்கிட்டுப் பார்க்கப் போன ராதையின் கண்களை இரு கரங்கள் மூடின. அந்த ஸ்பரிசம் உயிர்ப் பிணம் போலிருந்த ராதைக்குள் உயிரைப் பொழிந்தது. தன்னைத் தான் அறிந்த ராதை வந்தது யாரென்று அறிந்து கொண்டாள். சட்டென்றுத் தன் கண்களை மூடிய கரங்களை விடுவித்துப் பின்னால் திரும்பிப் பார்த்தாள். சிரித்துக் கொண்டிருந்த கண்ணனைக் கண்டதும் கருங்குவளை மலர் போலிருந்த ராதையின் கண்கள் ஒளிர்ந்தன.
“நீயா? இங்கே எப்படி வந்தாய்? எப்போது வந்தாய்?” என்று கேட்ட ராதைக்கு கிருஷ்ணனின் புன்னகையே விடையானது. ராதை ஆச்சர்யத்தோடு சுற்றிலும் பார்த்தாள். தேர் இல்லை. பரிவாரம் இல்லை. யாரும் உடன் வராமல் பிரபு தனியாக எப்படி வர முடிந்தது?
ராதையின் மனதிலிருந்த ஐயத்தை உணர்ந்த கிருஷ்ணன் சிரித்தான். “தேரேறி வரவில்லை ராதே. என்னை இங்கே அழைத்து வந்தது என் மனம் என்னும் ரதம். மனோரதம். என் நண்பர்களும் பரிவாரமும் இங்கிருக்கும்போது வேறே பரிவாரத்தோடு வரவேண்டிய தேவை என்ன இருக்கிறது” என்று கூறிய கிருஷ்ணனை வாயடைத்துப் பார்த்திருந்தாள் ராதை.
வறண்ட நிலத்தை மழை நீர் நனைத்தது போல கிருஷ்ணனின் சொற்கள் ராதையின் மனத்தை பக்தியால் நிறைத்தன. முன்பு பாடிய இனிய கீதத்தை மீண்டும் கேட்டாள். வம்சிமோகன் வேணுகானத்தை மனத்துக்கினிமையாக இசைத்தான். இன்னிசை மழையில் நனைந்து அடித்துச் செல்லப்பட்ட ராதைக்கு நேரம் போனதே தெரியவில்லை.
சூரியன் மேற்கில் மறையும் நேரத்தில், “போய் வரட்டுமா?” என்ற கிருஷ்ணனின் கேள்வி நினைவுலகத்திற்கு அழைத்து வந்தது. “அதற்குள்ளாகவா?” என்று ராதை ஏமாற்றத்தோடு கேட்ட போது, சூரியன் மறையும் மேற்கு திசையைக் காட்டினான் கண்ணன்.
“துவாரகைக்குப் போனால் என் நினைவு வருமா?” சோகமாகக் கேட்ட ராதையைப் பார்த்து புன்னகை புரிந்தான் மாயக் கண்ணன்.
“உன்னை மறக்க வைக்கும் சக்தி துவாரகைக்கு உள்ளதா?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
“அந்த வைபவம், உன்னவர்கள், உன் மனைவியர், மந்திரிகள் இவர்கள் எல்லோரோடும் சுகமாக இருக்கும் உனக்கு ராதையையோ இந்த யமுனை நதிக் கரையையோ நினைக்க வேண்டிய தேவை என்ன இருக்கப் போகிறது?” என்று கேட்ட ராதையின் மனதில் இருந்த விரக்தியைக் கண்ணன் அறிய மாட்டானா என்ன?
“ராதே, இந்த இயற்கையின் அழகு, இங்கிருக்கும் ஆனந்தம், உன்னுடைய நிர்மலமான பிரேமை எல்லாம் அந்தக் குறுகிய சுவர்கள் நிறைந்த துவாரகையில் கிடைக்கும் என்கிறாயா? தாகத்தைத் தீர்க்கும் யமுனை இங்குதானே உள்ளது? தொண்டையில் ஊற்றிக் கொள்ள முடியாத நகரத்தின் தண்ணீர் அல்லவா அங்குள்ளது? இந்த ராதை எனக்குப் பரிசளித்த நட்பு, அன்பு, வாத்சல்யம், அனுபவம் எல்லாம், ஆடம்பரத்தில் மூழ்கியுள்ள பெண்களிடம் எனக்குக் கிடைக்கும் என்கிறாயா? எல்லாவற்றையும் தன்னுள் இணைத்துக் கொள்ளும் எல்லையற்ற கடலையே என் பக்கம் திருப்பி விட்டு, எப்போதும் என்னோடு கலந்திருக்கும் யமுனா நதி நீயே அல்லவா? துவாரகையில் நதிகளே இல்லை. சுற்றிலும் இருப்பது உப்பு நீரே. நகரங்களில் நடிப்பு அதிகம். குறுகிய மனப்பான்மை கொண்ட மனிதர்கள் அதிகம். பிறந்த போதே சிறைச்சாலையில் இருந்து தப்பித்தவன். இத்தனை பெரியவனானபின் குறுகிய மனப்பான்மை கொண்ட சுயநல வாதிகளின் மனம் என்னும் சிறையில் கைதியாக இருப்பேன் என்று எண்ணினாயா? விஸ்வத்தில் நிறைந்திருப்பவனான நான் ஓரிடத்தில் எவ்வாறு அடைந்து கிடப்பேன்? அரச காரியங்களில் மூழ்கினாலும் என் மனம் மிதப்பது யமுனையின் நீரிலேயே”.
கிருஷ்ணனின் சொற்களை வியந்து போய் கேட்டுக் கொண்டிருந்த ராதையின் கன்னங்கள் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தன. கிளம்புவதற்குத் தயாரான கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு, “ஒரு விஷயம்” என்றாள் ராதை.
“என்ன சொல்லு” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் கள்ளன்.
“என் உயிர் பிரியும் இறுதிக் கணத்தில் நீ என்னருகில் வருவாயா?” நடுங்கும் குரலில் கேட்டாள் ராதை.
“இறுதிக் கணமா? யாருக்கு? எனக்கா?” என்று கேட்டு புன்னகைத்தான் கண்ணன். “பூமியின் மேல் மனிதர்கள் இருக்கும் வரை நானும் இருப்பேன். மனம் இருக்கும் வரை நீயும் இருப்பாய். இறுதிக் கணம் என்று ஒன்று வராது ராதே. வரப்போகும் காலத்தில் அரச காரியங்களை நான் நடத்தலாம். ஆனால் என் உள்ளத்தின் சாரதி நீயே ராதை” என்று அப்பாவியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு ராதையின் கண்ணீரைத் துடைத்தான் அந்த மாயாவி.
தன்னை மறந்த நிலையில் இருந்து தெளிந்த ராதை கண் திறந்து பார்த்த போது அந்த எல்லையற்றவனின் அடையாளத்தைக் காணவில்லை. என்றுமில்லாத சோர்வு அவளை வந்துச் சூழ்ந்தது.
“காலையில் இருந்து சந்திரோதயம் வரை நான் கண்ணனைப் பற்றியே கனவு கண்டேனா? எத்தனை பைத்தியக்காரி நான்” என்று எண்ணி பெருமூச்செறிந்தாள்.
“அவன் இங்கு நிஜமாகவே வந்தானா? அவன் ஏன் இங்கு வரப் போகிறான்? யமுனை நதியின் நீருக்காக வந்தானா என்ன?” என்று எண்ணிக் கொண்டே எழுந்தாள். குடத்தை எடுத்து நீரில் அமிழ்த்தி நீர் நிரப்ப முயற்சித்து குடத்தைக் கை நழுவ விட்டாள்.
“ஹூம்” என்று கரையை நோக்கி நடந்த அவளுடைய பாதங்களை மிருதுவாக ஏதோ தொட்டது. திடுக்கிட்டுக் கீழே பார்த்து வியப்படைந்தாள். அங்கே பூ மாலையும், மயில் தோகையும் கிடந்தன. உண்மையாகவே கண்ணன் வந்தானா? அவன் இப்போது வரை என்னோடு இருந்தானா? மகிழ்ச்சியோடு குனிந்து அந்த பூமாலையைக் கையிலெடுத்தாள். கண்ணனின் உடல் மேலிருந்த சந்தனத்தின் பரிமளம் அந்த மலர் மாலையோடு கலந்து அவளைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. நிர்மலமான உள்ளத்தோடு அந்த மாலையைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டாள். மயில் தொகையால் கன்னத்தை வருடியபடி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள் ராதை.
பரவசத்தில் மிதந்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிய ராதையின் மனம் போலவே, நதியில் நழுவி விழுந்த குடம் படகு போல் நீரில் சற்று தூரம் மிதந்து, மெதுவாக மூழ்க ஆரம்பித்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
