மரணப் புன்னகை 

கிரைண்டிங் இயந்திரத்தின் “உர்” என்ற அலறல் ஓசை அரசு மருத்துவக் கல்லூரி பிணவறையிலிருந்து கேட்கத் தொடங்கியது. ஆங்காங்கே கூடி நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் உள்ளிலிருந்து எழுந்த அந்த ஓசையைக் கேட்டதும் தங்களது பேச்சுக்களைத் தற்காலிமாக நிறுத்திக் கொண்டுப் பிணவறையின் மதில்சுவர் முன்பாகக் கூடத் தொடங்கினர். அவனைத் தானே எடுத்திருக்கிறார்கள் என்று அதுவரை உண்டானக் காலதாமதத்தை நினைத்து வெறுப்புடன் கேட்டு வந்த சிலரிடம் நான் இல்லை என்று கூறியதும் வேறொன்றும் என்னிடம் கேட்காமல் அங்கிருந்து நகர்ந்து தூரத்தில் இருந்த ஓர் கட்டிடத்தின் படிக்கட்டிற்குச் சென்று அதே வெறுப்புடன் அமர்ந்து கொண்டனர். என்னிடம் வேறு ஏதாவது கேட்டுக் கொண்டால் நான் கோபப்பட்டுக் கொள்வேன் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களிடம் நான் கோபப்பட்டுக் கொள்வது என்வரையிலும் சரியென்றே எனக்குத் தோன்றியது. என் உறவினர்களான அவர்களிடம் தான் என்னால் உரிமையாகக் கோபப்பட்டுக் கொள்ள முடியும். அல்லாமல் எங்கள் காத்திருப்பிற்கு காரணமான காவலரிடமில்ல. அவரை இங்கு அழைத்து வரத் தான் எங்கள் ஆட்கள் காலையிலிருந்தே காவல் நிலையத்தில் காத்துக்கிடக்கிறார்கள். இதுவரை அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக எந்த அழைப்பும் எனக்கு வந்தபாடில்லை. அந்த ஒரு அழைப்பைத் தான் நான் வெகுநேரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இனியும் ஒன்றரை மணி நேரம் கழிந்தால் இன்றைக்குண்டான உடற்கூறாய்வு நேரமும் முடிந்துவிடும். அதற்குள் அந்த காவலர் வந்துவிட்டால் தான் எங்கள் மகனின்  அடக்கம் இன்றைக்கு சாத்தியப்படும். இல்லை என்றால் அவன் முகத்தைக் கடைசியாக ஒருமுறை  காண்பதற்கு அழுது காத்துக் கிடக்கும் எங்கள் குடும்பத்தினருக்கு அதற்கான காத்திருப்பை எண்ணியே வேதனைக் கூடும். அந்த நேரத்தில் அது எங்களுக்கு மட்டுமேயான கவலையாக இருந்தது. 

மதில் சுவர் அருகே ஏராளமானோர் கூடி நிற்பதைக் கண்டதும் வெளிப்புறமாக திறந்து கிடந்த ஜன்னல் கதவை படாரென்று இழுத்து அடைத்தார் பிணவறை ஊழியர் ஒருவர். அதுவரை அந்த ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஜன்னல் கதவை அடைத்தததையடுத்து மெதுவாக அங்கிருந்து கலையத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் பிணவறைக்குள்ளே நிர்வாணமாக கிடந்த  ஆணுடலை ஊழியர் ஒருவர்  கிரைண்டிங் இயந்திரத்தால் கீறியதைப் பற்றியே மாறிமாறி பேசிக் கொண்டனர். அந்த வேலை செய்பவர்களுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வருகிறது என்பது தான் அவர்கள் அனைவர் முன்பிலும் முக்கியமான கேள்வியாகவும் இருந்தது. அவர்களைப் பற்றிய பலவித கதைகள் ஆளாளுக்குச் சொல்ல தொடங்கினர். அது ஒருவிதத்தில் அவர்களுக்கு நேரம் கழிப்பதற்கான  பேச்சாகவும் இருந்தது. அந்த நேரத்தில் ஓர் ஆம்புலன்ஸ் வண்டி அங்கு வந்து நின்றது. இலவச அமரர்  ஊர்தி என்ற கறுப்பு நிற ஸ்டிக்கர் அந்த வண்டியின் இருப்பக்கத்திலும் ஒட்டப்பட்டிருந்தது. அனைத்து வித நடவடிக்கைகளும் முடிந்த பிற்பாடு அங்கு நின்ற ஒருவரிடம் தன் கையில் இருந்த ஓர் காகித்தில்  கையெழுத்து வாங்கி கொண்டு தன்னுடைய பைக்கை ஓட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் ஏதோ ஓர் காவலர். அடுத்து நம்ம ஆளு தான் என்ற பேச்சு அங்கு கூடி நின்றவர்களிடம் எழுந்த போது இனியும் காவல் நிலையத்தில் இருந்து காவலர் வரவில்லை என்பதைச் சொன்னான் கூட்டத்தில் நின்ற ஒருவன். ஊழியரை விட்டு விட்டு தாமதமான காவலர் அவர்களுக்கு  அடுத்தக் கருபொருளாக மாறிபோனார். 

காவலரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டச் செய்தியை வினோத் அண்ணன் என்னை அழைத்து சொல்லிக் கொண்டிருந்தப்போது கைகளில் கையுறைகளுமாக அந்த ஊழியர் என்னருகில் வந்து நின்றார்.நான்  அழைப்பைத் துண்டித்து விட்டுச் செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்ததும் அந்த ஊழியர் “அட்டப்பெட்டி வாங்கியாச்சா” ? என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இல்லை என்று தலையாட்டிக் கொண்டு  எங்கு கிடைக்குமென்றுக் கேட்டேன். என்னைப் போன்று பல நூறு பேரிடம் அந்த கடையின் வழியையும், அதன் அமைவிடத்தையும்  சொல்லிக்கொடுத்த அனுபவம்  அவருடைய பேச்சில் தொனித்தது. ஆனால் முதல்முறையாக கேட்டதால் எனக்கு அந்தக் கடை எங்கிருக்கிறது என்று எளிதில் விளங்கவில்லை. ஆனாலும் ஒருவாறு புரிந்துக் கொண்டது போல் தலையாட்டினேன். சிரித்துக் கொண்டே “நாங்க நாலு பேரு” என்று சொல்லிச் சென்றார். அவர் ஏன் அவ்வாறு சொல்லிச் சென்றார் என்று அந்த நேரத்தில் எனக்குப் புரியவில்லை. 

நானும்,  என் அண்ணன்கள் மூவருமாக மருத்துவக் கல்லூரியின் பிரதான வாசலைக் கடந்து  வெளியே நடக்கத் தொடங்கினோம். அதுவரைப் பயங்கரமாக சைரன் சத்தம் போட்டு வந்த ஓர் ஆம்புலன்ஸ் வாசலை அடைந்ததும்  அமைதியாகிக் கொண்டு எங்களைக் கடந்து வேகமாக அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தைப் பார்த்துச் சென்றது. அந்த ஆம்புலன்ஸைப் பார்த்து ஒதுங்கி நின்றக்  குமார் அண்ணன்  “நேத்து இப்படி தான் நம்ம விஜூவ இங்க கொண்டு வந்திருப்பாங்கில்ல” என்று ஆதங்கப்பட்டுக்கொண்டான். அவனின் தோளைத் தட்டி அங்கிருந்து அழைத்து வந்தான் விமல் அண்ணன். வெளியில் வரிசையாகச் சில கடைகள் இருந்ததைக் கண்டதும் ஊழியர் சொன்னப் பொருள்கள் கிடைக்கும் கடை ஏதாக இருக்குமென்று ஒருகணம் அங்கு நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவாறு ஊகித்துக் கொண்டு இதுதான் அந்த கடையாக இருக்குமென்று நினைத்து நான்காவதாக இருந்த  ஓர் கடையைப் பார்த்து நேராக  நடக்கத் தொடங்கினேன்.  அங்கு எனக்கு முன்பாகவே விஜய் அண்ணன் வந்து சேர்ந்திருந்தான். காரியத்தைச் சொன்னதும் கடைக்காரர்களே தேவையானதெல்லாம் எடுத்து தந்தார்கள் நீ காசு மட்டும் கொடுத்துவிடு என்று என்னிடம் சொல்லிவிட்டுக் கடைக்காரர் நீட்டிய பையை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து அவன் வெளியேறினான். நான் கடைக்காரர் சொன்னத்  தொகையைப் பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தப்பின் அவர் தந்த மீதம் காசையும் வாங்கிக் கொண்டு அந்த  கடையை விட்டு  வெளியேறிய போது “இப்போ பைக் வாங்கிக் குடுக்காதென்னு எத்தன தடவச் சொன்னேன் தெரியுமா மச்சான் கேக்கவே இல்ல” என்று கூட வந்தவரிடம் பேசிக் கொண்டே கடைக்குள் நுழைந்தவரைப் பார்த்து என் குடும்பத்தின் நிலை தான் உங்களுக்குமா என்று மனதிற்குள் பரிதாபப்பட்டே சாலையில் வந்து நின்றேன். 

எதிர்ப்பக்கத்தில்  இருந்த டீக்கடையில்  டீ குடித்துக் கொண்டிருந்த விமல் அண்ணன் கடையை விட்டு வெளியேறிய என்னைக் கண்டதும்  பெயர்ச் சொல்லிக் கூவி அழைத்தான். அந்த சமயம் ஓர் தனியார் பேருந்து பெருத்த ஹார்ன் ஒலியில்   அங்கு வந்துக் கொண்டிருந்தது. அதனை முந்திச் செல்லும் முனைப்புடன் பின்னிலிருந்து ஓர் இளைஞன் தன்னுடைய விலையுயர்ந்த பைக்கில் வேகமாக வந்துக்கொண்டிருந்தான். கண் இமைக்கும் நேரத்தில் பேருந்தை முந்திக்கொண்டு  ஆக்ஸிலேட்டரை ஓரே முறுக்காய் முறுக்கிக்கொண்டு பறந்துவிட்டான். அவனைக் கண்டப்போது எனக்கு விஜுவின் ஞாபகம் தான் வந்தது. பேருந்து அங்கிருந்து சென்றதும் சாலையைக் கடந்து வேகமாக  அந்த டீக்கடைக்கு வந்து சேர்ந்தேன். எனக்காக கையில் டீயுடன் காத்திருந்தான் விஜய் அண்ணன். அவர்கள் மூவரும் டீ அருந்தி முடித்ததன் அறிகுறியாக மூன்று காலிக் கண்ணாடி டம்ளர்கள் அங்கு போடப்பட்டிருந்த மேசையின் மீது வரிசையாக இருந்தது. 

கடையின் முன்பாகத் தொங்கிக் கிடந்த மாலைநேர பத்திரிக்கைகளின் விளம்பர தாள்களில் விஜுவின் புகைப்படம் இருந்ததை அவர்கள் யாரும் கவனித்திருக்கவில்லை.  அதைப் பற்றி அவர்களிடம் சொல்லிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை. மேற்கொண்டு அந்த செய்திதாள்களைப் பார்த்துக் கொள்ளாமல் விஜய் அண்ணன் நீட்டிய டீயை வாங்கி மெதுவாகப் பருகத் தொடங்கினேன். முதல் துளியை பருகிக் கொண்டதும் என்னையறியாமலே என் பார்வை மீண்டும் அந்தச் செய்திதாள்களின் பக்கம்  தான்  சென்றது. அங்கிருந்து பார்வையை அகற்றவோ, அடுத்தத் துளியை  அருந்திக் கொள்ளவோ என்னால் ஏனோ முடியவில்லை. நானும் இதுபோல் பலச் செய்திகளை வாசித்தவுடன் எளிதில் கடந்துச் சென்றிருக்கிறேன். ஆனால் இன்று அவ்வாறு எளிதில் கடந்துச் செல்ல என்னால் இயலவில்லை. எங்களைப் பொறுத்தவரை அது வெறும் ஒரு செய்தியன்று. ஓர் யுகத்திற்கான வேதனை. டீ  டம்ளரை அப்படியே மேசையின் மீது வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். 

சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே

விஜுவிற்கு துணி வாங்க வேண்டாமா என்று என்னிடம் கேட்டான் விஜய் அண்ணன்.  வாங்க வேண்டும்  அருகில் கடை ஏதாவது இருக்கிறதாயென்று நான் கேட்டதும், அந்த வளைவில் ஒரு கடை இருப்பதைக் தான் கண்டதாகச் சொன்னான் குமார்  அண்ணன். “அந்த ஆஸ்பத்திரிகாரங்க ரெண்டு லட்சத்தப் புடுங்கிற்றாங்க இல்ல ” என்று புகைத்துக்கொண்டே கேட்டுக்கொண்ட விஜய் அண்ணனிற்கு  நான் பதில் எதுவும்  சொல்லிக்கொள்ளாமல் மௌனமாக அந்தக் கடையை நோக்கி நடந்தேன்.  “பணமும் போச்சு புள்ளையும் போச்சு” என்று மீண்டும்  வெறுப்பாக பேசினான் விஜய் அண்ணன். அப்போது “மொதலையே அங்க கொண்டு போய்ருந்த நம்ம புள்ள இன்னேரம் எப்படியாச்சும் பொழச்சிருப்பான். தேவ இல்லாம இங்க கூடிட்டு வந்தது தான் தப்பு” என்றான் அண்ணன்  விமல்.  “நாம என்ன அறியவா செஞ்சோம். ஆக்ஸிடன்ட் நடந்து இங்க கொண்டு வந்த பொறவு தானே நாமளே விவரம் அறிஞ்சோம்” என்று  குமார் அண்ணன் சொன்னதும் நேற்று  நடந்த அந்தத் துயர நிகழ்வுகள் ஒவ்வொன்றாக என் கண்முன்னே வந்து போயின.

அந்திக்கருக்கல்லில் யாரும் எதிர்ப்பார்க்காத அந்த செய்தி எங்களைத் தேடி வந்ததும். உயிரைக் கையில் பிடித்தப்படி  நானும் என் அண்ணனாகிய விஜூவின் அப்பாவும் பைக்கில் பதறியடித்து இங்கு ஓடி வந்ததும். நள்ளிரவில் இங்கிருந்து தனியாருக்குக் கொண்டுச் சென்றதும். விடியற்காலையில் எங்கள் மகன் மூளைச்சாவில் இறந்து போனதும், அவன் உடலைக் கொண்டு வந்து பிணவறை ஜஸ் பெட்டிக்குள் வைத்ததுமென  ஒவ்வொரு நிகழ்வும் நினைவிற்குள் மனதை கசக்கியப்படியே சுழன்றுக் கொண்டிருந்தது. அதனால் என் கண்களும் என்னை அறியாமல் ஈரமாகிக் கொண்டன. முன்னால் நடந்துக் கொண்டிருந்த அண்ணன்கள் பார்க்காத வண்ணம் திரும்பி நின்று என் சட்டையால் கண்களைத் துடைத்து விட்டு அதுவரை இருந்த முகபாவனையை மாற்றி மீண்டும் அவர்களோடு நடக்கத் தொடங்கினேன்.  

இனி அணியும் புதுத் துணியை அவனும் பார்க்கப் போவதில்லை, அந்த துணி அவன் உடலிலிருந்து  இனி ஒரு போதும் அகலுவதுமில்லை. சம்பிரதாய நிகழ்வுக்காக மனதில் பெரும் பாரத்துடனே  வயதைச் சொல்லி ஒரு சட்டையையும், பேன்ட்டையும் கடைக்காரரிடம் கேட்டோம்.  அளவு எவ்வளவு என்ற கடைக்காரரின் கேள்வியில் நாங்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டப் போது ” சட்ட எம் சைஸ் தானே வரும்” என்றான் விஜய் அண்ணன். “ஆமா! ஆமா! எம் தான் வரும் ” என்று அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசினான் அண்ணன் விமல். அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்துக்  கொண்டதுப்போல் கடைக்காரரைப் பார்த்து ” எம் சைஸ்” என்றனர். குறைந்த ரேட்டில் எடுக்கவா  அல்லது கூடியது எடுக்கவா என்று கடைக்காரர் கேட்டதும். கோவில் திருவிழாவிற்கு மட்டும் தான் தன் வாழ்நாளில் புது துணி உடுக்கும் பாக்கியம் கொண்டவன் அவன். முதல் முதலாக திருவிழா அல்லாமல் வேறொரு நாளில் உடுக்கிறான். ஆனால் அதைக் காண மட்டும் தான் அவனில்லை. இனி திருவிழாவுக்கு அண்ணனிடம் சென்று காசு கேட்கவும் அவன் வரப் போவதில்லை. கடைசியாக அவன் அணிவது விலை கூடியதாகவே இருக்கட்டும் என்று கூடியது பார்த்து எடுங்க என்றேன் நான். பேன்ட் சைஸ் என்று கடைக்காரர் கேட்டதும் மீண்டும் எங்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அவன் இடுப்புப் பெரியது அதனால் முப்பத்தி நான்கு வரும் என்று விஜய் அண்ணனும், இல்லை முப்பத்தி இரண்டு தான் என்று விமல் அண்ணனும் சொல்லிக் கொள்ளப் பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை சிறியதாக இருக்கக் கூடாது என்றான் குமார் அண்ணன். ஒருவழியாக முப்பத்தி நான்கு அளவுடைய ஜீன்ஸ் பேன்டும், நீலநிறச் சட்டையையும் வாங்கிக்கொண்டு அந்தக் கடையை விட்டு வெளியேறினோம்.

பிரதான வாசலைக் கடந்ததும் இந்த விபத்து எப்படி நடந்ததென்று தெரியுமா என்று என்னிடம் கேட்டான் குமார் அண்ணன். நேற்று அந்தியில்  குடும்பக் கோவிலிற்கு விளக்கு போடுவதற்காக அவனுடைய நண்பன் ஒருவனிடமிருந்து  பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறான். விளக்குப் போட்டு முடித்ததும் பைக்கை அந்த நண்பனிடம்  திருப்பிக் கொண்டு தரச் சென்றப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஊருக்குள் சாலை போடும் பணி நடந்ததால் இவன் வேறு வழியாக சென்றிருக்கிறான். அதான் அந்த இடத்தில் வைத்து விபத்து நடக்கப் பிரதானக் காரணம். சாலை மட்டும் நேற்று போடாமல் இருந்திருந்தால் இவன் அந்த வழியாகச் செல்வதற்கு தேவையே இருந்திருக்காது. இத்தனைக்கும் அந்தச் சாலை நன்றாக தான் இருந்தது. எந்தவித முன்னறிவிப்பின்றி காலையில் வந்து சாலையை அடைத்தனர். எல்லாம் நம் விதி என்று  வேதனையோடுச் சொல்லி முடித்தேன். இவனோடு மோதிக் கொண்ட அந்தப் பைக்கை ஓட்டிக் கொண்டவர் இப்போது எவ்வாறு உள்ளார் என்று குமார் அண்ணன் கேட்டதும் ஒருவித மனக்கஷ்டத்துடனே அவருடைய வலது  கால் நேற்று இரவே எடுக்கப்பட்டது என்றேன்.  

பிணவறைக்கு முன் காவலரும் அவரை அழைத்து வந்த எங்கள் ஆட்களும் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் நடந்து வருவதைக் கண்டதும் சுரேஷ் அண்ணன் எங்களை உரக்க அழைத்தான். வேகமாக நடந்து அவரிடம் சென்றதும் விஜுவை எடுக்க வேண்டும் உள்ளே வாருங்கள் என்றார். கையில் பிடித்திருந்த பையை பிணவறையின் வெளிப்புற வாசல்படிமேல் வைத்துவிட்டு நேராக ஜஸ் பெட்டிகள் இருந்த அறைக்குள் நடந்தேன். விடியற்காலையில் கொண்டு வைத்த பெட்டி கூட்டத்தில் சில பேருக்கு பிடிக் கிடைக்காமலிருந்தாலும் சுரேஷ் அண்ணன் இது தான் பெட்டி என்று சரியாகப் பார்த்துச் சொன்னான். பல பெட்டிகள் ஒன்றொடன்று இணைந்திருந்ததால் அனைவருக்கும் மாறிமாறி சந்தேகம்  ஏற்பட்டது. ஊழியர் ஒருவர் வந்து பெட்டியைத் திறந்தார். கண் அடைத்துப் படுத்திருந்தான் எங்கள் விஜூ. தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையின் போது அவனுக்கு அடித்திருந்த ஸ்டாப்ளர் பின் தலையில் அப்படியே இருந்தது. நாங்கள் அனைவரும் சேர்ந்து அவனை அப்படியே தூக்கி எடுத்தோம். சிறுவயதில் அவனைத் தூக்கி கொஞ்சிய  உணர்வு மீண்டும் என் கண்களை ஈரமாக்கியது. கைகளில் தாங்கிய அவனது உடலை உடற்கூறாய்வு செய்யும் அறைக்குள் இருந்த சிமெண்ட் மேசையின் மீது மெதுவாகக் கொண்டு வந்து கிடந்தினோம். அவனது  உடலின் குளிர் எங்கள் உடல் சூட்டையும் நனைத்தது. கிரைண்டிங் இயந்திரத்தின் ஓசைக் கேட்கத் தொடங்கியதும் கண்களைத் துடைத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறிக் கொண்டோம். 

வண்டிக்குச் சொல்லிவிட்டேன் பாடி வந்ததும் புறப்பட்டு விடலாம் என்று  அந்த காவலர் சொன்னவுடன் அருகில் நின்ற சுரேஷ் அண்ணன் அதைக் கொடு என்று என்னிடம் சொன்னான். பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்து உள்ளங்கைக்குள் மடக்கி வைத்துக் கொண்டு அந்த காவலரிடம் கொடுப்பதற்காக அவரை அழைத்தேன். நான் அழைத்ததை புரிந்துக் கொண்ட அவர், தன் கையில் வைத்திருந்த அறிக்கை காகிதத்தை கையெழுத்து போட்டு தா என்று சொல்லியவாறே என்னிடம் நீட்டி யாரும் பார்க்காதவண்ணம் அந்த ரூபாய் தாளை என் கைகளிலிருந்து அவர் கைகளுக்குள் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓர் புன்சிரிப்பைக் காட்டினார். அந்த சமயம் இலவச அமரர் ஊர்தி வண்டி அங்கு வந்து நின்றது அவரது பணியை மேலும் எளிதாக்கியது. வண்டியிலிருந்து இறங்கிய ஓட்டுநர் எந்த இடம் என்று கேட்டுக் கொண்டே எங்கள் அருகில் வந்து நின்றார். 

அரைமணி நேரத்திற்கு பிறகு விஜூவிற்கு போடுவதற்காக  புது துணியைக் கேட்டு எங்களை அழைத்தார் ஓர் ஊழியர். கையில் பிடித்திருந்த பையைத் தூக்கி கொண்டு நானும், விஜய்  அண்ணனுமாக உடற்கூறாய்வு அறைக்கருகே சென்றோம். மனித உடல்களின் இறந்து போன வாசனை அந்த அறை முழுவதும் பரவியிருந்தது. லஞ்சம் கொடுப்பது  சட்டத்திற்கு புறம்பானது என்ற போஸ்டர்கள் அறைக்கு வெளியே இருந்த சுவர்களின் மீது ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. அதை வாசித்து முடித்தப்போது அறைக்குள்ளே இருந்து ஓர் ஊழியர் வந்து துணியெல்லாம் அவர்களே போட்டுவிடுவதாகச் சொல்லி  என் கைகளில் இருந்த பையினை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். நாங்கள் அறைக்கு வெளியிலே காத்து இருந்தோம். அவனது பிரசவத்திற்காகவும் அப்படி தான் காத்து நின்றோம். 

அடுத்த சில நிமிடங்களில் முளைக்கத் தொடங்கியிருந்த தாடி எல்லாம் வழித்து அரும்பு மீசையுடன்  கால்களை நீட்டி படுத்துக்கிடந்த விஜூவை ஸ்ட்ரெச்சரில்  தூக்கிக் கொண்டு வந்தனர் இரு ஊழியர்கள். நாங்கள் வாங்கி வந்த சட்டையும், பேன்ட்டும் கணகச்சிதமாக அவனுக்குப் பொருந்தியிருந்தது. அந்த ஆடையில் அவன் மிகவும் அழகாக இருந்தான். அவனைக் காண சூழ்ந்துக் கொண்ட நண்பர்கள் அனைவரது முகங்களும் அவனைக் கண்டதும் சோகத்தில் மூழ்கிப் போயின. உற்ற நண்பர்கள் சிலர் அவனைப் பிடித்து அழத் தொடங்கினர். அதில் அந்தப் பைக் நண்பனும் இருந்தான். விபத்து நடந்தது அறிந்தது முதல் தற்சமயம் வரை அந்தப் பைக் நண்பன் வீட்டிற்குக் கூடச் செல்லாமல் எங்கள் கூடவே இருந்தான். எவ்வாறாவது விஜூ  கண்திறக்க  மாட்டானா என்று எந்நேரமும் ஏங்கிக் கொண்டிருந்தான். தன்னை எப்போது கண்டாலும் அலீம் அண்ணா என்று புன்னகையோடு அழைக்கும் விஜூ  இப்போது எந்த புன்னகையுமில்லாமல் எந்த ஓசையும் இல்லாமல் இருக்கிறானே என்று உரக்கக் கத்திக் கொண்டே அதுவரை அடக்கி வைத்திருந்த தன்னுடைய கண்ணீர்த் துளிகளை மடமடவென விஜூவின் மேல் பொழியத் தொடங்கினான். அவனது அழுகை எங்களையும் சேர்த்து அழ வைத்தது. ஆணென்று சொல்லி எவ்வளவு நேரம் தான் எங்களாலும் கண்ணீரை அடக்கி வைக்க இயலும். 

கூட்டத்தை மாற்றி விட்டு தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து சிவப்பு நிற பட்டினை எடுத்து அவன் மீது போர்த்தினான் சுரேஷ் அண்ணன். அதே பையில்  இருந்த ரோஜா பூ ஆரத்தையும் எடுத்து அவன் மேல் போட்டுக் கொண்டு எங்களிடம் ஸ்டெச்சரை தூக்கச் சொன்னான். நானும் விமல் அண்ணனுமாக அந்த ஸ்டெச்சரைத் தூக்கி அமரர் ஊர்திக்குள் ஏற்றினோம். விமல் அண்ணனும், குமார் அண்ணனும் அந்த வண்டியிலையே வருவதாகச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் அந்த வண்டியில் ஏறிக்கொண்டதும் அமரர் ஊர்தி அங்கிருந்து புறப்படத் தொடங்கியது. நான் சென்று சுரேஷ் அண்ணன் வண்டியில் ஏற முற்பட்டப் போது  அந்த ஊழியரில் ஒருவர் என்னை தேடி வந்தார். மனதால் எதுவும் நினைத்துக் கொள்ளாமல் நான்கு ஐந்நூறு ரூபாய் தாள்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை யாரும் பார்க்காத வண்ணம்  வாங்கிக் கொண்டு என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். தினம் காணும் பல பேர்களில்  நானும் ஒருவன் என்பது அவரது சிரிப்பு எனக்கு உணர்த்தியது. 

முன்செல்லும் நண்பர்கள் தங்களுடைய பைக்குகளில் மெதுவாகச் செல்ல அவர்களுக்குப் பின்னால் எறும்பு போல் ஊர்ந்துச் சென்றுக் கொண்டிருந்தது அந்த அமரர் ஊர்தி. அதற்குப் பின்னால் எங்கள் வண்டி வந்துக் கொண்டிருந்தது. எஸ்.பி அலுவலகத்தில் ஏதோ வேலை இருந்ததால் அந்த காவலர் எங்களுடன்  வரவில்லை. சுரேஷ் அண்ணன் வண்டி ஓட்ட நானும் விஜய் அண்ணனும் பின்னால் அமர்ந்திருந்தோம். ஏதோ யோசனை வந்தவன் போல் வெளிப்புறம் நீட்டியிருந்த தலையை அவசரமாக உள்ளுக்குள் எடுத்துக் கொண்டு “அடக்கத்துக்குக் குழி எல்லாம் தோண்டியாச்சா” என்று என்னிடம் கேட்டான் விஜய் அண்ணன். குழி எல்லாம் இப்போது வேண்டாம் விறகு அடுக்கி எரியூட்டுவதற்கு இப்போது தனியாக ஆட்கள் கிடைக்கின்றனர். அவர்களை அழைத்திருக்கிறோம். வேலை கூலியும், விறகு, வண்டி வாடகை எல்லாம் சேர்த்து மூவாயிரத்து ஐந்நூறு கேட்டார்கள் என்று அவனிடம் கூறினேன். அப்போது முன் செல்லும் நண்பர்கள் மெதுவான வேகத்தில் சென்றுக் கொண்டிருப்பதால் கடுப்பான சுரேஷ் அண்ணன்  “இவனுவளுக்கு  கொஞ்சம் ஸீபீடா போனா என்ன ராகு காலத்துக்கு நேரமாயிட்டு இருக்கே”  என்று சொன்னான். இந்த வேகம் அவனுடன் பழகும் போதே அவர்கள் காட்டியிருந்தால் இன்று அவர்களோடு அவன் இருந்திருப்பான் என்று  நான் சொன்னதும் பட்டப் பிறகாவது திருந்துவார்களா என்று பார்ப்போம் என்றான் அண்ணன் விஜய். 

அமரர் ஊர்தி வீட்டை அடைந்ததும் ஓட்டுநர் வந்து வண்டியின் பின்புறக் கதவை திறந்து ஸ்டெச்சரை இழுத்து வெளியில் வைத்தார். நாங்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஸ்டெச்சரை தோளில்  தூக்கிக் கொண்டோம். ரோஜா பூக்கள் தூவத் தூவ விஜூவின் கடைசி ஊர்வலம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. நேற்று இங்கிருந்து செல்லும் போது அவன் அம்மாவும், அப்பாவும் நினைத்திருக்க மாட்டார்கள் நாளை இந்த நிலையில் தான் தங்களுடைய அருமை மகன் திரும்பி வருவான் என்று. அவர்கள் இதை எப்படி தாங்கப் போகிறார்கள் என்ற பதற்றத்துடனே வீட்டைப் பார்த்து நடந்தோம். வழியிலே நின்ற அவனது அப்பா அவனைத் தூக்கி வருவதைக் கண்டதும் அப்படியே நிலைகுலைந்து மண்ணில் விழுந்துக் கொண்டார். அங்கு நின்றுக் கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று என் அண்ணனைத் தாங்கி பிடித்தனர். மக்களே என்று தலையில் அடித்து அடித்து அழுது புலம்பிக்கொண்டிருந்தான் என் அண்ணன்.   அவனைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. பெற்று வளர்த்தப் பிள்ளைக்கு கொள்ளி வைக்கப் போவதை எந்த தந்தையால் தாங்கிக் கொள்ள முடியும். வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த நீல நிற தார்ப்பாய் காற்றில் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. அதன் கீழ் போடப்பட்டிருந்த அவன் படுத்துறங்கிய கட்டிலில் நாங்கள் அவனைக் கொண்டு வந்து மெதுவாகக் கிடத்தினோம். யாரெல்லாமோ  சேர்ந்து வீட்டிற்குள் இருந்து அவனது அம்மாவை கைதாங்கலாக  அழைத்துக் கொண்டு வந்து விஜூவின் முகமருகே கொண்டு இருத்தினர். அவள் அவனது முகத்தை நெஞ்சோடு சேர்த்து  அணைத்துக் கதறிக்கொண்டாள். என்னால் அதையொன்றும் கண்டு நிற்க இயலாததால் அந்த ஸ்டெச்சரை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். வழியில் நின்ற அந்த ஓட்டுநர் என்னிடமிருந்து ஸ்டெச்சரை வாங்கிக் கொண்டு டீசலுக்கு ஐந்நூறு ரூபாய் வேண்டும் என்று இயல்பாகக் கேட்டார். அந்த வண்டியில் ஒட்டப்பட்டிருந்த இலவச ஊர்தி என்ற  ஸ்டிக்கரை நினைத்துக்கொண்டே அவர் சொன்ன தொகையைப் பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். ஒரு சிறு புன்னகையோடு வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் விஜூவின் எலும்பு எரியும் வாசம் காற்றில் அங்கு எழ தொடங்கியது. அதை நுகர்ந்தவாறே  வீட்டின் முன் ஆங்காங்கே நாங்கள் கூடியிருந்தோம். ஓர் ஆயுளுக்கான வேதனையோடு சுவரோடு சாய்ந்திருந்து விஜூ எரிவதையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் என் அண்ணன். அவன் சாய்ந்திருந்த சுவருக்கு மேல் விஜூ பவனம் என்று எழுதப்பட்டிருந்த பிளாஸ்டிக் பலகையின் ஒரு பக்க ஆணி இளகி அந்தப் பலகைத் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் தேநீரோடு வீட்டிற்குள் இருந்து வந்துக் கொண்டிருந்தாள் விமல் அண்ணனின் மனைவி. தேநீரை வாங்கிப் பருகிக் கொண்டே விபத்தில் மரணமடைந்த விதங்கள் குறித்த யூகங்களும், பிரதிவாதங்களும் தலைகள் மாறி மாறி அங்குத் தொடர்கதையாகின. அங்கிருந்து அனைவருக்கும் இனி அது பேசப்படும் கதை விஜூவின் அப்பாவையும், அம்மாவையும் தவிர. அந்த கதைகளை கேட்டுக் கேட்டு வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த தார்பாய்களும் காற்றின் வேகத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. 

கடைசித் துண்டு எலும்பையும் எரித்து விட்டு பிணம் எரிக்கும் ஆட்கள் அங்கு வந்தனர். அவர்களது சம்பளத் தொகையைக் கொடுப்பதற்காக நான் எழுந்து அவர்களிடம் சென்றேன். இரவில் எலும்புகளைச் சற்று குத்தி போடவேண்டும் என்று அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார். சில எலும்புகள் எளிதில் உடைந்து விடாது அதை மேலிருந்து யாராவது உடைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கான விளக்கத்தையும் தந்தார். தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டிய வயதில் எலும்பை குத்திப்போட சொல்கிறார்களே என்று நினைத்துக் கொண்டு நான் அனைத்தையும் கேட்டு தலையாட்டிக் கொண்டேன். சம்பளத்தொகையை எடுத்துக் கொடுப்பதற்காக பேன்ட் பாக்கெட்டிலிருந்து மீதமிருந்த பணத்தை எடுத்து எண்ணினேன் அதில் இருநூறு ரூபாய் குறைவாக இருந்தது. சுவரில் சாய்ந்தவாறே என்னையே பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் பணம் குறைவாக இருக்கிறதா என்று கேட்டான். நான் அமைதியாக இருந்ததைக் கண்டு   வீட்டிற்குள் சென்று அவனது பர்சை எடுத்து என்னிடம் தந்தான். 

நான் அந்த பர்சை வாங்கி  திறந்தேன். அதிலிருந்த விஜூவின் புகைப்படம் என்னைப் பார்த்து சிரித்தது. அவனை முதன் முதலில் என் கைகளில் ஏந்திய போது சிரித்த அதே சிரிப்பு. 


Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மரணப் புன்னகை ”

  1. படிக்கப் படிக்க மனசெல்லாம் கரைந்து கல்லாய் உறைந்து போனது. இந்த மாதிரியொரு சாவு எந்தக் குழந்தைக்கும் வேண்டாம் என்று மனம் ஓலமிடுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.