அறிந்து கொள்ளும் விழைவே, இங்கே நம் இருத்தலை அர்த்தமுள்ளதாக்கிறது

டாம் ஸ்டாப்பர்ட் (நாடக ஆசிரியர்) அஞ்சலி

மனித வாழ்வின் மகத்தான, என்றுமிருக்கும் கேள்விகளை தனது எழுத்துக்களின் வழியே அறிய முயல்பவர்கள் கலைஞர்கள். அந்த பயணத்தின் அனுபவங்கள், வெளிப்பாடுகள் வெவ்வேறு உருவங்களை கொண்டிருக்கும். உயர்ந்த, கடினமான கலைச்சொற்கள் நிறைந்த தலைக்கு மேல் பறந்தலையும் கல்விசார் தத்துவ கோட்டுப்பாடுகளை, நாடகம் வழியே பூமிக்கு கொண்டு வந்து அதை ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாய் மாற்றியவர் டாம் ஸ்டாப்பர்ட். “கல்வித்துறையால் கையாளப்பட்ட தத்துவ கோட்பாடுகள், உண்மையில் பார்த்தால்  குளிக்கும் போது ஒரு புத்திசாலிக்கு தோன்றும் இயல்பான கேள்விகள், அவையே எனக்கு ஆர்வமுள்ளவை” – என்று 1974ல் அமெரிக்க நாடக விமர்சகர் மெல் கஸோவ்க்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்திருப்பார். 

 தோமஷ் ஸ்ட்ரௌஸலர் என்று  பெயரிடப்பட்ட டாம் ஸ்டாப்பர்ட் 1937 ஆம் ஆண்டு செக் குடியரசு, ஸிலின் நகரத்தில் பிறந்தார். 1939ல் நாஜிக்களின் படையெடுப்பால் யூதர்கள் நாடு நீங்க வேண்டிய கட்டாயத்தில், அவரின் குடும்பம் சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தது. 1941 ஜப்பானிய படையெடுப்பில் இருந்து தாய் மற்றும் சகோதரனோடு இந்தியாவிற்கு தப்பி செல்ல, அவரின் தந்தை சிங்கப்பூரில் கொல்லப்பட்டார். 1946ல்,  அவரின் தாய் “கென்னத் ஸ்டாப்பர்ட்” என்ற ஆங்கில அதிகாரியை திருமணம் முடித்து போருக்கு பின், பிரிட்டனுக்கு குடும்பத்தோடு திரும்பினார்கள். ஏனைய ஆங்கிலயேர்களை போல் ஷேஸ்பியர் மற்றும் கிரிக்கெட் மீது ஈடுபாடுள்ளவராக வளர்ந்த அவர், எட்டு வயது பையனாக இருந்த போதே “ஆங்கிலத்தனத்தை ஆடையாக அணிந்திருந்தாக”  சொல்கிறார். தனது 17 வயதில், பத்திரிகையாளராக தொடங்கி, பின் மேடை நாடக விமர்சகராக பணியாற்றினார். 

வானொலிக்கும், தொலைக்காட்சிக்கு நாடகங்கள் எழுதி வந்த வேளையில், ஷேஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தை அதில் வரும் இரு சிறிய துரதிருஷ்டம் நிறைந்த கதாபாத்திரங்களின் பார்வையில் மறுஆக்கம் செய்த ரோசன்கிராண்ட்ஸ் மற்றும் கில்டன்ஸ்டர்ன் இறந்துவிட்டனர் என்ற நாடகம் மிக பெரிய வரவேற்பை பெற்று நாடக உலகில் அவரின் வருகையை அறிவித்தது. அறிவுச்சார் விஷயங்களை மின்னல் தெறிக்கும் (அபத்த)நகைச்சுவையோடு கலந்து அளிக்கும் அவரின் பாணியை “ஸ்டாப்பார்டியன்” என்ற புது வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதிக்கு அளித்தது. 

தொடர்ந்து, நாடகத்தினுள் நாடகம், தத்துவார்த்த விவாதங்களின் ஆய்வுக்கூடம்  என நாடகத்தின் வடிவத்தில், உள்ளடக்கத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். உதாரணத்திற்கு, “ஜம்பர்ஸ்” என்னும் நாடகத்தில், “தொடக்கத்தில் இருந்து தொடங்க, கடவுள் இருக்கிறாரா?” என்ற உதவியாளரின் கேள்விக்கு, “ஒரு இடத்தை விட்டுவைங்கள்” என்ற பதில் இருத்தலியல் அபத்தத்தை நகைச்சுவையோடு வெளிப்படுத்துவதற்கு சொல்லலாம். 

தத்துவத்தின் மீதான ஆர்வம் எப்படி வந்தது என தனக்கு தெரியவில்லை என நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும் ஸ்டாப்பர்ட், “நான் இதில் எப்படி வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ட்ராக்டேடஸ் லாஜிகோ-ஃபிலாசஃபிகஸ் (Tractatus Logico-Philosophicus) மூலம் விட்கின்ஸ்டைனை  நான் பின்தொடர்வதால்…” என்று எழுதியிருந்தார். 

ஆஸ்திரிய-பிரிட்டிஷ் தத்துவஞானியான லுட்விக் விட்கின்ஸ்டைன் (1889–1951), தத்துவத்திற்கென்றே ஒரு தத்துவத்தைக் கொண்டிருந்தார். கல்விசார் தத்துவத்தின் பெரும்பகுதி வெறும் அர்த்தமற்ற உளறல் என்று அவர் வாதிட்டார். நாம் முக்கியமானதாகக் கருதும் சில விஷயங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும் அவர் கருதினார். 

டாம் ஸ்டாப்பர்ட் நாடகத்தையும் இதே கண்ணோட்டத்தில்தான் பார்த்தார். 1988 ஆம் ஆண்டில் கனடா மாணவர்களிடையே ஆற்றிய ஒரு விரிவுரையில் அவர், “நாடகம் என்பது ஒரு விசித்திரமான சமன்பாடு; அதில் மொழி என்பது பல கூறுகளில் ஒன்று மட்டுமே” என்று கூறினார்.

அறிவுக்கான இந்தப் பயனற்ற ஏக்கத்தின் மீது ஸ்டாப்பர்டின் நாடகங்கள் அனுதாபம் கொண்டாலும், அந்தத் தேடல் நாடகக் கதாபாத்திரங்களை மற்றவர்களைப் புறக்கணிக்க வழிவகுக்கும்போது, அந்த அனுதாபம் விலகிவிடுகிறது. ஒரு திருமணத்தைக் காப்பது, மரணத்தின் பிடியில் உள்ள மனைவியைப் பராமரிப்பது, அல்லது தத்தெடுத்த குழந்தையைக் கண்டுபிடிப்பது போன்ற மனிதச் செயல்கள் இருக்கும்போது, உலகில் உள்ள செயல்பாடு என்பது அறிவுத் தேடலை விட மிகவும் முக்கியமானதாகிறது.

விட்கின்ஸ்டைனின் நெறிமுறைகள் பற்றிய விரிவுரை (Lecture on Ethics) சிக்கலானது; ஆனால், ஸ்டாப்பர்டின் நாடகங்கள் அதன் தத்துவார்த்த விளைவை நடைமுறை வாழ்க்கையில் தெளிவாகக் காட்டுகின்றன.

அவரது தொலைக்காட்சி நாடகமான புரொஃபஷனல் ஃபவுல்-இல், அறிவார்ந்த விவாதம் கூட சர்வாதிகாரத் தணிக்கைக்கு உட்பட்டிருந்த அவல நிலையில், ஒரு பேராசிரியரின் கதாபாத்திரத்தின் மொழியாக அவர் விட்கின்ஸ்டைனின் புகழ்பெற்ற தத்துவ வாக்கியத்தை மாற்றி அமைத்தார்: “எதைப் பற்றி நம்மால் பேச முடியாதோ, அதைப் பற்றி நாம் ஒருபோதும் மௌனமாய் இருக்க வேண்டியதில்லை.” இது, அறிவுலகப் பயத்திற்குப் பதிலாக, அறநெறிச் செயலைத் தேர்ந்தெடுப்பதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. 

ஸ்டாப்பர்டின் நாடகங்களுக்கு  “நம்மால் எதை அறிய முடியும், எப்படி அறிய முடியும்” என்ற வினா மிக முக்கியமானது. அது தத்துவம் அல்லாத பிற பேசு பொருட்களை கொண்ட நாடகங்களாக இருந்தாலும் சரி :   

ஹேப்கூட் (1988)-இல் உள்ள குவாண்டம் இயற்பியல்; ஆர்கேடியா (1993)-வில் உள்ள குழப்பக் கோட்பாடு; தி கோஸ்ட் ஆஃப் யுடோபியா (2002)-வில் உள்ள ஐரோப்பிய வரலாறு; ராக் ‘என்’ ரோல்-இல் உள்ள சமகால அரசியல் ; தி ஹார்ட் ப்ராப்ளெம்-இல் உள்ள தனிப்பட்ட உணர்வு, தி ரியல் திங் (1982)-இல் “அன்பு”.

ஸ்டாப்பர்ட் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் விவாதிக்கிறார்கள், விசாரிக்கிறார்கள், ஆனால் ஒருபோதும் உறுதியான பதில்களைக் கண்டுபிடிப்பதில்லை

ஸ்டாப்பர்டின் நாடகங்கள் “உணர்ச்சிபூர்வமான ஈடுபாட்டை விட அதிக புத்திசாலித்தனம் கொண்டவை” என்ற பொதுவான விமர்சனத்தை, ஸ்டாப்பர்டின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய  ஹெர்மாயானி லீ மறுக்கிறார். ஸ்டாப்பர்டின் நாடகங்கள் அடையாளம் காணும் ஆழமான துயர உணர்வை தவறவிடுவதாக சொல்லும் லீ, ஸ்டாப்பர்டின் கதாபாத்திரங்கள் தொடர்ந்து வரலாற்றால் சூழப்பட்டவர்கள்; அவர்கள் பெரும்பாலும் நாடு கடத்தப்பட்டவர்களாகவும், குழப்பமடைந்தவர்களாகவும், தார்மீக தர்மசங்கடங்களில் சிக்கியவர்களாகவும், இழப்பு மற்றும் ஏக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களாகவும் உள்ளனர். இந்த இருளில் இருந்தே அவரது அறிவுசார் நகைச்சுவை ஒளியை பெற்றுக்கொள்ளவதாக லீ சொல்கிறார்.

ஐந்து டோனி விருதுகள் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் திரைப்படத்திற்கான அகாடமி விருது ஆகியவற்றின் மூலம், அவரது படைப்புகள் உலக நாடகத் தொகுப்பில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளன. அவருடைய உச்சபட்ச ஆசை என்பது “எனது நாடகங்கள் புதியதாக இருக்கும்போது மட்டுமல்லாமல், அவ்வப்போது நிகழ்த்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை காலப்போக்கில் ஒரு அறையின் பொருட்கள் போல ஆகிவிட வேண்டும்” என்பதே. அவருடைய வரிகளில் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் “ஒரு இடம் இருக்கிறது” என்பது தான்.

“அறிந்து கொள்ளும் விழைவே, இங்கே நம் இருத்தலை
அர்த்தமுள்ளதாக்கிறது” – ஆர்கேடியா

-டாம் ஸ்டாப்பர்ட் (நாடக ஆசிரியர்)


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.