சமீபத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது எங்கும் அரசியல் சரிநிலை (“பொலிடிகல் கரெக்ட்னஸ்”) என்ற பெயரில் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது. உண்மையைக் கூட எழுதுவதற்கோ, பேசுவதற்கோ அஞ்சும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று மனம் நொந்து கூறினார். வரலாற்றை உள்ளது உள்ளபடி மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க முடியவில்லை. அவர்களும் உண்மையைக் கேட்கும் நிலையில் இல்லை. அப்படியே விளக்கினாலும் பிரச்சினை என்று ஒன்று வந்தால் பல்கலைக்கழகத்தின் ஆதரவு கூட ஆசிரியர்களுக்குக் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான் என்று வருந்தினார். இதோ சென்ற வாரம் வெளிவந்த செய்தி அவருடைய பயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
‘லாரா டி. மர்ஃபி’ – கடந்த வாரத்தில் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வலம் வந்த பெண்மணி. முன்னணி மனித உரிமை ஆராய்ச்சியாளர். ‘Center for Strategic and International Studies’ன் Human Rights Initiative-ல் மூத்த இணை ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். மனித, பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பதிவுசெய்து, தொழிலாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதே அவரது பணியின் நோக்கமாகும். இவர் இங்கிலாந்தில் உள்ள ‘ஷெஃபீல்ட் ஹாலம்’ பல்கலைக்கழகத்தில் ஹெலினா கென்னடி சர்வதேச நீதி மையத்தின் மனித உரிமைகள் மற்றும் சமகால அடிமைத்தனம் தொடர்பான துறையின் பேராசிரியராகவும் உள்ளார்.
பைடன் நிர்வாகத்தின் போது, அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புத் துறையின் (DHS) கொள்கை பிரிவு உள் செயலாளரின் ஆலோசகராக இருந்த அவர், பல்துறை இணைந்த ‘Forced Labor Enforcement Task Force’-ஐ ஆதரித்து, கட்டாயத் தொழிலாளர் பிரச்சினை தொடர்பான அமெரிக்கக் கொள்கைகள், ஆய்வுகள், சர்வதேச பங்குதாரர் தொடர்புகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். சீனாவை மையமாகக் கொண்ட இவருடைய ஆராய்ச்சி, ‘அமெரிக்க உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டம்’ (‘Uyghur Forced Labor Prevention Act’) அமல்படுத்தப்பட்டதில் மிக முக்கிய காரணியாக இருந்தது. அதே ஆராய்ச்சி தான் தற்பொழுது பேசுபொருளாகி உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவருடைய ஆராய்ச்சி ‘Forced Labour Lab’, சீனாவில் உய்குர் சமூக மக்களின் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளை ஆவணப்படுத்தி ஆதாரங்களின் அடிப்படையில் அரசாங்கங்கள், NGO-க்கள், நிறுவனங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நலனிற்காக நடவடிக்கைகள் எடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதற்காகப் பல துறைகளையும் ஆய்வு செய்துள்ளார் மர்ஃபி . புதுப்பிக்கத்தக்க ஆற்றல், முக்கிய கனிமங்கள், வாகன உற்பத்தி, துணிநூல், வேளாண்மை, ரசாயனத் துறைகள் போன்ற முக்கிய உலகளாவிய துறைகளில் இடம்பெறும் கட்டாயத் தொழிலாளர் முறைகேடுகளை வெளிக்கொணருவதே அவரது ஆராய்ச்சியின் மையப் புள்ளியாகக் கூறப்படுகிறது.
அதற்காக, NGO-க்கள், கொள்கை நிறுவனங்கள், செயற்கைக்கோள் படங்கள் (satellite imagery), வர்த்தகம், விநியோகச் சங்கிலி பகுப்பாய்வு மூலமாக, பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், உயிர் தப்பியவர்களின் சான்றுகளைச் சேகரித்துள்ளார். அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கட்டாயத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளுக்குமான தொடர்பையும், மனித உரிமை மீறல்கள், தொழிலாளர் சுரண்டல் நடைமுறைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் அம்பலப்படுத்தினார்.
லாரா மர்ஃபியின் ஆய்வு, உலகளாவிய விநியோகச்சங்கிலி, சர்வதேச சட்டங்கள், மனித உரிமை பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடுவதால் பல நாடுகள் இவருடைய ஆராய்ச்சியில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா. ‘Uyghur Forced Labor Prevention Act (UFLPA)’, சீனாவின் ஷின்ஜியான்ல் கட்டாயத் தொழிலாளர்களை வைத்துச் செய்த பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கும் முக்கிய அமெரிக்கச் சட்டம் ஆகும். மர்ஃபியின் ஆராய்ச்சி அளித்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு அமெரிக்க கொள்கை வடிவமைப்பாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், அமலாக்க அதிகாரிகளால் இயற்றப்பட்ட சட்டம். எனவே, இந்த ஆய்வு அமெரிக்கச் சந்தையில் நுழையும் பொருட்கள் கட்டாயத் தொழிலாளர் தொடர்புடையதா என்பதைக் கண்டறிய முக்கியமானதாகிறது.
ஐரோப்பிய யூனியன், யுனைடெட் கிங்டம் இரண்டிலும் கட்டாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தையில் நுழையக் கூடாது என்ற சட்டங்களும், கண்காணிப்பு விதிகளும் உள்ளன. இதனால் இந்த ஆய்வு ஐரோப்பிய மனித உரிமை அமைப்புகளுக்கும் முக்கியமானது.
மர்ஃபியின் ஆய்வு சுமத்தும் குற்றங்களால் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் இன்று பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் சீன அரசையும், பல்வேறு துறைகளையும், நிறுவனங்களையும் குற்றம் சாட்ட, அரசியல், பொருளாதார ரீதியாக சீனாவிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா சீன அரசு? அதிகாரிகள் உடனே பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுக்க, ஆராய்ச்சியின் இறுதி பதிப்பு வெளிவருவது உடனே கட்டுப்படுத்தப்பட்டது.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய பொழுது சர்வதேச மோதலின் மையத்தில் தான் வசமாக சிக்கியுள்ளதையும் சீனாவை மையமாகக் கொண்ட கட்டாய தொழிலாளர் விசாரணைகளை இனி தொடர முடியாது என்றும் அறிந்து கொண்டார் மர்ஃபி. பல்கலைக்கழக உள் ஆவணங்கள் மூலம் ஆகஸ்ட் 2022லிருந்தே ஷெஃபீல்ட் ஹாலமின் வலைத்தளங்கள், மின்னஞ்சல் தொடர்புகள் சீனாவிற்குள் தடுக்கப்பட்டுள்ளதையும் அறிந்தார். மர்ஃபியின் ஆராய்ச்சி சீன அதிகார அரசின் அதிருப்தியைத் தூண்டியதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் அது பார்க்கப்பட்டது.
ஏப்ரல் 2024ல் அதிருப்தி மேலும் தீவிரமடைய, அதே ஆவணங்களில் சீன “தேசிய பாதுகாப்பு சேவை” அதிகாரிகள் என்று விவரிக்கப்பட்ட மூன்று நபர்கள் பல்கலைக்கழகத்தின் சீன அலுவலகத்திற்குச் சென்று மர்ஃபியின் கட்டாய தொழிலாளர் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சி குறித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஒரு ஊழியரை விசாரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜூலை-செப்டம்பர் வாக்கில், ஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தை வெளியிடுவதாக மர்ஃபி தயாராக, அது சீன அரசின் கோபத்திற்கு ஆளாகி பழிவாங்கலைத் தூண்டக்கூடும் என பல்கலைக்கழகம் தயங்கியது.
சீனாவில் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துவது அங்குள்ள பணியாளர்களுக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடும். கூட்டாளிகளும் பாதிக்கப்படலாம். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மீதும் தாக்கம் ஏற்படுத்தலாம் என பல்கலைக்கழகத் தலைமை அஞ்சி, மீதமுள்ள மானிய நிதிகளை ஆகஸ்ட் 2024ல் ‘Global Rights Compliance’ எனும் அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டது. மேலும், மர்ஃபியின் ‘Forced Labour Lab’ ஆராய்ச்சியின் இறுதிப் பதிப்பை பல்கலைக்கழகத்தின் பெயரில் வெளியிடுவதற்குப் பதிலாக முற்றிலுமாக நிறுத்த தடைவிதித்தது.
லாரா மர்ஃபியின் ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்தும் முடிவு அவருக்கும், அவருக்கு உதவிய பல குழுக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. UK மற்றும் சீனாவில் உள்ள Sheffield Hallam அலுவலகப் பணியாளர்கள் உறுதிப்படுத்தப்படாத சூழலையும் செயல்பாட்டுச் சவால்களையும் சந்தித்தனர். உய்குர் சமூகத்தினரும் மற்ற தொழிலாளர்களும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.
இத்தகைய வெளிநாட்டுத் தலையீட்டால் உணர்திறன் வாய்ந்த மனித உரிமைப் பணிகளில் கல்வி சுதந்திரத்தின் எதிர்காலம் பற்றிய அவசர கேள்விகளையும் எழுப்பி பரபரப்பான விவாதங்களும் நடைபெற, மர்ஃபியும் வழக்குத் தொடுக்க, இறுதியில், பல்கலைக்கழகம் பொது மன்னிப்பை அறிவித்து மர்ஃபியின் ஆராய்ச்சியை மீண்டும் அனுமதித்தது. அவரது அகாடமிக் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒப்புக் கொண்டது. மேலும், UK counter-terror போலீசும் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவி செய்ததாக இருக்கக்கூடும் என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவம், ஜனநாயக நாடுகளிலும் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு அழுத்தத்தால் எப்படி பாதிக்கப்படக்கூடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள், உலகளாவிய மனித உரிமை சமூகத்தின் மீது நேரடியாக எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
அதே நேரத்தில் மர்ஃபி ஏன் சீனாவின் ஷின்ஜியாங்-ஐ ஆராய்ச்சிக்களமாக தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியும் எழுகிறது. வடமேற்கு சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் 1.2 கோடி உய்குர், துர்கிக் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். அங்கே தான் அதிகளவில் கைதிகள், கட்டாயத் தொழிலாளர்கள், “மறு கல்வி” திட்டங்கள் என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் காணப்படுகின்றன என்று ஐ.நா., தன்னார்வல ஆய்வாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெரும் அளவிலான தொழிலாளர் மாற்றுத் திட்டங்கள் வேறு எந்த நாட்டிலும் காணப்படவில்லை. இங்கு பட்டுத் தயாரிப்பு, சோலார்-பாலிசிலிக்கான், அலுமினியம், பிற மூலப்பொருட்களின் முக்கிய உற்பத்தியாளர்களும் அதிகளவில் இருக்கின்றனர். மர்ஃபியின் ஆய்வு இந்தப் பொருட்கள் எவ்வாறு சப்ளை செயின்களில் சேர்கின்றன என்பதைக் கண்காணிக்கிறது.
பேராசிரியர் மர்ஃபியின் ஆய்வில் சீனா கடுமையாக எதிர்க்கும் பகுதிகள் அனைத்தும் ஷின்ஜியாங்கில் நடைபெறும் தொழிலாளர் மாற்றுத் திட்டங்கள் உலகளாவிய சப்ளை-செயின்களுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்ற அவரது கண்டுபிடிப்புகளைச் சுற்றியே அமைகின்றன. உய்குர், துர்கிக் சிறுபான்மையினர் வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள் என மர்ஃபி வழங்கிய விரிவான ஆதாரங்களை சீனா மறுக்கிறது. அவை அனைத்தும் “தன்னார்வச் சேர்க்கை”, “வறுமை ஒழிப்பு” திட்டங்கள் எனக் கூறி, கட்டாயத் தொழிலின் குற்றச்சாட்டுகளை “அபத்தமான பொய்கள்” என விவரிக்கிறது. உலகின் பெரும்பாலான பாலிசிலிக்கான் உற்பத்தி செய்யும் ஷின்ஜியாங்கின் சோலார் தொழில், கார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அலுமினியம், இரும்பு, கனிமங்கள் பற்றிய அவரது ஆய்வும், கண்டுபிடிப்புகளும் சீனாவின் மிகுந்த எதிர்ப்புகளைச் சந்தித்தவை. குறிப்பிட்ட சீன நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படையாகச் சேர்த்திருப்பதும், “வெளி வாழ்வுப் பயிற்சி மையங்கள்” எனப்படும் கட்டிடங்களில் நடைபெறும் அரசியல் அழுத்தத்தையும் கண்காணிப்பையும் அவர் பதிவுசெய்திருப்பதும் சீனாவை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது.
அவரது ஆய்வு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விதிக்கும் இறக்குமதி தடைகளுக்கும் தணிக்கைகளுக்கும் “ஆதாரமாக” பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம் சாட்டுகிறது. ஆராய்ச்சியின் முடிவுகளை ஏற்கும் போது அரசியல், பொருளாதார விளைவுகளும் மிகப் பெரியதாக இருக்கும் என்பது தான் சீன அரசின் கோபத்திற்குக் காரணம்.
மர்ஃபியின் ஆய்வைச் சுற்றியுள்ள சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதன் எதிர்காலம் பன்னாட்டு அரசியல், பல்கலைக்கழக கொள்கைகள், உலகளாவிய சப்ளை-செயின் சீர்திருத்தங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதிலேயே நிர்ணயிக்கப்படும். உய்குர் கட்டாயத் தொழில் தடுப்பு சட்டம் (UFLPA) போன்ற கடுமையான அமெரிக்க இறக்குமதி சட்டங்கள் வலுவடையும் நிலையில், மர்ஃபியின் ஆய்வு மேலும் பல நிறுவன விசாரணைகள், வர்த்தக கட்டுப்பாடுகள், சப்ளை-செயின் ஆய்வுகளுக்கு வழிகாட்டும் வாய்ப்புகள் அதிகம். இதனால் உலகளாவிய நிறுவனங்கள் தங்களின் மூலப்பொருட்களை மிகத் துல்லியமாகத் தடம் பின்தொடர வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதே சமயம், சீனா கட்டாயத் தொழில் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து, ஷின்ஜியாங்கில் நடைபெறும் தொழிலாளர் மாற்றுத் திட்டங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமான தன்னார்வத் தொழிலாகும் என்று வலியுறுத்தும். எனவே அந்தக் குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்கவோ, ஒத்துழைக்கவோ அரசிடமிருந்து கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.
பல்கலைக்கழகங்களுக்கோ, இந்த விவகாரம் கல்விச் சுதந்திரத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பெரிய கேள்வியையும் ஒரு வெளிநாட்டு அரசு, பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும் ஆய்வை கையாள முடியுமா என்பதையும் எழுப்புகிறது. நேரடியாகப் பாதிக்கப்படும் உய்குர் சமூகங்களுக்கு, சர்வதேச கவனிப்பு, உண்மையான பாதுகாப்பிற்கும் கொள்கை மாற்றத்துக்கும் வழிவகுக்குமா என்பதே முக்கியமான கேள்வி. இறுதியாக, திறந்த ஆய்வும், அரசால் கட்டுப்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ விளக்கங்களுக்கு இடையே நடைபெறும் இந்த மோதல் மேலும் தீவிரமாகப் போகிறது. இது ஒரு சாதாரண மனித உரிமை பிரச்சனை அல்ல, உலக அளவில் கல்விச் சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கியமான சோதனை.
அரசுகள், பல்கலைக்கழகங்கள், தொழில் துறை நிறுவனங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைப் பொறுத்தே இனி மனித உரிமை ஆய்வுகள் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளுமா அல்லது அதனால் மாற்றப்படுமா என்பதைத் தீர்மானிக்கும். பயமுறுத்தலுக்கு எதிராக உண்மையைத் தேடும் துணிச்சல் ஒரு ஆய்வாளரின் சாதனை மட்டும் அல்ல, உலகளாவிய மனித உரிமை ஆய்வின் நம்பகத்தன்மையை நிர்ணயிக்கும் அளவுகோலும் ஆகும்.
தொடர்புள்ள பதிவு:
Discover more from சொல்வனம் | இதழ் 358 | 11 ஜன 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “இருட்டின் வெளிச்சம்: உய்குர் கட்டாயத் தொழில் சர்ச்சை”