இறுதியே இயைவது ஆனால்

அழகான வார்த்தைகள், அப்படியே நீரோட்டம் போலப் பாய்கின்றது, குடாகேசன் சொன்னான். 

அவன் முன் வழுக்கை, பின் வழுக்கை எல்லாவற்றையும் துடைத்துக் கொண்டான். கசகசவென இருந்தது. குடாகேசனுக்கு ஆகஸ்ட் மாத அமெரிக்கக் கிழக்குப் பகுதியின் வெயில், அங்குக் குடியேறி இருபது வருடம் பழகினாலும், இன்னும் கடுமையாகவே தோன்றியது. வீட்டில் முழு அளவில் குளிர்பதன இயந்திரம் ஓடியும் அவனுக்குச் சுகப்படவில்லை.

சிலப்பதிகாரம் வாசிப்பு குழு கூகிள் மீட்டில் கூடியிருந்தது. கிட்டத்தட்ட இருபது நண்பர்கள் அமெரிக்கா முழுதும் இருந்து வந்திருந்தார்கள். மேரிலாந்தின் அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுகந்தி பாடினார்.

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!

சிலப்பதிகாரத்தின் மூலமும், உரையும் புத்தகத்தில் கவனமாக அந்த வரிகளை வாசித்தான். அதன் பொருளை வாசிக்கையில் உடலெல்லாம் குடாகேசனுக்கு சிலிர்த்தது. உடல் சிலிர்ப்பு சுகந்திக்கு எத்தனை இனிய குரல் என்ற எண்ணத்தினைக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து சுகந்தியின் மகனிடம் தன் மகள் புவனாவுக்கு இயற்பியல் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இயற்பியல் கடினமான பாடம். நான் இயற்பியல் படிக்கையில் எத்தனை மதிப்பெண் வாங்கினேன். மதிப்பெண் கொடுப்பவர்கள் ஏன் வாழ்க்கையைக் கெடுக்கின்றார்கள்…குடாகேசனின் எண்ணங்கள் ரயில் வண்டியின் பெட்டி ஆகி ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது. 

குட்…பின் புறம் இருந்து குரல் சப்தமாக வந்தது. எண்ணங்கள் அறுந்தது. குடாகேசனை அலுவலகத்தில் குட் என்று அழைப்பார்கள். கல்யாணம் ஆன புதிதில் குடா என அழைத்து வந்த மனைவி பானுமதி அதை விட்டு விட்டு இப்பொழுது குட் என்னும் பெயருக்கு போய் விட்டார். அலுவலக நண்பர்கள், சமூக வட்டத்தில் பயன்படுத்தப்படும் குட் இப்பொழுது இவன் பெயராகவே ஆகி விட்டது. அலுவலக ஈமெயிலும், கையெழுத்திலும் மட்டுமே குடாகேசன், அழைப்பது குட் என்பதாகவே ஆகிவிட்டது.

இலக்கியக் கூட்டம் குட் சப்தம் கேட்டு ஒரு நொடி நின்றது..மேரிலாந்தில் புறப்பட்ட சப்தம் கூகிள் மீட் செயலி வழியாக ஐம்பது மாகாணங்களையும் தொட்டு விட்டு வந்தது.  குடாகேசன் அவசரம் அவசரமாகக் காணொளியை அணைத்து விட்டு, ஒலியை ம்யூட்டில் போட்டு விட்டு என்னம்மா என்ற பதிலை குட் என்ற அழைப்புக்குப் பதிலாக அனுப்பினான். அது வீடு முழுதும் பறந்தது. எல்லா அறைகளுக்கும் கேட்டாலும் பானுமதிக்குப் போயிருக்காது என குடாகேசனுக்கு தெரியும். எழுந்து அறையை விட்டு எட்டிப் பார்த்து எதிரொலியென மீண்டும் முழங்கினான்.

இன்றைக்கு மழை இல்லை , வெயில் இல்லை. வெளியே பார். நன்றாக இருக்கின்றது, தக்காளிச் செடி வைக்கவேண்டும், வந்து கொஞ்சம் உதவி செய்யேன்.. பானுமதி தன் கோரிக்கையை வைத்தாள்.

உழவர் ஓதை, மதகு ஓதை, உடை நீர் ஓதை, விழவர் ஓதை, மழவர் ஓதை எத்தனை அழகாக இருக்கின்றது பாரேன், இலக்கியக் கூட்டத்தில் ஒரு குரல் ஓசை நயம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது. நீ பார்த்துக்கம்மா… கொஞ்சம் இலக்கியம் போய்க் கொண்டு இருக்கின்றது.. முடியட்டும் என்றான்.

முடித்ததும் வாலிபால் விளையாடப் போய்விடுவாய். பானுமதி மடக்கினாள்.

சரி சரி இன்றைக்கு ஒருநாள் விடு.. நாளைக்குப் பார்க்கலாம் அடுத்த பதிலை குடாகேசன் அனுப்பினான்.

பானுமதிக்கு இது போகும் திசை புரிய, அவள் கையுறையை மாட்டிக் கொண்டு தோட்டத்துக்குச் செடி வைக்கப் போனாள்.

வார்த்தைகளில் மிதந்து காவிரியில் மூழ்கி அதன் கரைகளில் பயிர்களைக் காணும் ஆசையில் குடாகேசன் திரும்பினான். இளங்கோவின் கற்பனையில் உதித்த சிலப்பதிகாரச் சொற்கள் சுகந்தியின் குரலில் காவிரியின் அழகுடன் அவர் கற்பனையில் காட்சியாக ஓடிக் கொண்டிருந்தன. நீரோட்டம் எனச் சொல்லிக் கொண்டான். அந்தக் காட்சியைப் பற்றி இலக்கியச் சுற்ற நண்பர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். அதை சலீல் சௌத்ரி இசையில், கரும்பு என்னும் படத்தில் திரை இசை பாடலாகக் கேட்டதாக சுகந்தி சொன்னாள்.  கரும்பு எனப் பெயர் கேட்டதும் குடாகேசனுக்கு நாவில் நீர் ஊறியது. பொங்கலுக்குச் சாப்பிட்ட கரும்பு இன்றைக்குத் தித்திப்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

அப்பா,  மகளின் குரல் ஒலிக்கத் திரும்பிப் பார்த்தான். மகள் அறிவியல் புத்தகத்துடன் நின்றிருந்தாள். பெர்னோலி சமன்பாடுகள் பற்றி சந்தேகம் அவள் கைகளில் , கண்களில் இருந்தது. அவளது அறிவியல் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். 

ஒரு நிமிடம் சுகந்தியின் குரல் மங்கலாகி அறிவியல் பாடம் கவனத்துக்கு வந்தது. நீரோட்டம் இயற்பியல் ஆகி இருந்தது. 

பத்து நிமிடம் கொடு புவனா, வந்துவிடுகின்றேன் என்றான். புவனா தலை அசைத்து நகர்ந்தாள்.

கூகிள் மீட் செயலியில் கூட்டம் முடிந்து புவனாவிடம் வந்தான். புவனா குழப்பத்துடன் சோர்வுடன் இருந்தாள். அப்பாவைப் பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்தாள். 

இயற்பியல் குழப்பமாக இருக்கின்றதா,  சுகந்தி ஆண்ட்டியிடம் கேட்டுள்ளேன். அவர்கள் மகன் கல்லூரியில் முறையாக இயற்பியல் படித்தவன், பல நண்பர்களின் குழந்தைகளுக்கு அட்வான்ஸ்ட் இயற்பியல் கற்பித்துக் கொண்டிருப்பவன். இந்த வாரத்தில் பிடித்து விடலாம். கவலைப்படாதே,  எனக் குடாகேசன் சொன்னான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பா. இரண்டு வாரத்தில் இந்தப் பாடத்தில் வினாடி வினா வரும், தயாராக இருக்கவேண்டும்.. எனச் சோர்வில்லாத மொழியை அப்பாவுக்குக் காட்ட விழைந்து சொன்னாள். 

குடாகேசன் மகளின் அருகே உட்கார்ந்து, அவள் தோளில் மெதுவாக கை வைத்தான்.

புவனா, சங்க இலக்கியத்தில் ஒரு பாட்டு வரும்… ‘நல்லன் என்றும் யாமே, அல்லன் என்னும் என் தடமென் தோளே’ என்று சொல்வார்கள் .. குடாகேசன் ஆர்வமுடன் சொன்னான்.

புவனா புத்தகத்திலிருந்து தலை தூக்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

சங்க இலக்கியத்தின் பெண் சொல்கிறாள்… வாயால் நல்லதென்று சொல்கின்றேன், ஆனால் உடம்பு நல்லதில்லேன்னு காட்டுகிறது…. குடாகேசன்  கண்கள் விரிய, குரல் துள்ள விளக்கினான்.  இயற்பியல் உனக்கு அப்படித்தான்… படிக்கிறேன்னு சொல்கின்றாய், ஆனால் உன் சோர்வான முகமும், தளர்ந்த தோள்களும் கஷ்டமா இருக்கிறது என சொல்லுது  இல்லையா?,  குடாகேசன் கேட்டான்.

புவனா நிமிர்ந்தே பார்க்கவில்லை, அவள் கண்கள் இன்னும் இயற்பியல் புத்தகத்திலேயே இருந்தன.

வீட்டில் உள்ள பசலைக் கொடி  படர்ந்து வெளியே ஆற்றங்கரை பேய்க்கரும்பு  புல்லைப் போலச் சுற்றியது போல எதிர்பார்ப்போடு இருந்ததாம், உன் இயற்பியல் வகுப்பறை டென்ஷன் பள்ளிக்கூடத்தில் வேர் விட்டு நம் வீட்டுக்குள் வந்து நம்மை எல்லாம் சுற்றுவது போல … என அந்தப் பாடலின் வரும் காட்சியை வைத்தான். 

குடாகேசன் மகளின் முகத்தைப் பார்த்தான். அவன் எதிர்பார்த்த பிரகாசம் அவள் முகத்தில் தெரியவில்லை.

புவனா புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள்.

நல்ல கவிதைடா புவனா,  என சொன்னான்.

அவள் தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கி விட்டு தன் அறைக்குச் சென்று விட்டாள். குடாகேசன் அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வருடம் அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோ எழுதிய “ஸ்டில் ஐ ரைஸ்” கவிதை குறித்து மகள் எழுதிய மூன்று பக்கக் கட்டுரையை வாசித்து இருந்தான். அவள் பள்ளியில் நடக்கும் இதழில் கவிதை எழுதுவதை வாசித்து இருக்கின்றான். ஆனால் அவன் சொல்லும் சங்கக் கவிதைக்கான எதிர்வினை வேறு மாதிரி இருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் முகம் வாடியது. தன் முகம் வாடியதைப் பேய்க்கரும்பு புல்லுடன் ஒப்பிட அவனுக்கு விருப்பமில்லை. 

பின்னர் வாலிபால் விளையாட உடுப்பு மாற்றிக் கொண்டு கிளம்பிய குடாகேசன், ஜன்னல் வழியாகப் பார்த்தான். மனைவி காய்கறி படுகையில் செடிகளை நட்டு முடித்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தார். கைகளும், கால்களும் படுகையின் மண்ணுடன் இருந்தது. மனைவியைச் சுற்றி தோட்டத்தின் குருட்டுக் கொசுக்கள், அருகில் இருந்த வாசனை பூக்களுக்கு வரும் வண்டுகள் ரீங்காரித்ததை பார்த்தான். அவன் முகம் ஒரு கணம் “யக்” என மாறியது. அந்தக் கணம் தொலைப்பேசி அதிர்ந்தது. எடுத்தால் நண்பன் கதிரவன் அழைத்திருந்தான். முகம் மலர எடுத்தான். தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஒருவர் வரும் செய்தியை நண்பன் பகிர்ந்து இருந்தான். அவன் எதிர்பார்த்திருந்த தொலைப்பேசி அழைப்பே.

மகளிடம் சொல்லிவிட்டு வாலிபால் விளையாடக் கிளம்பினான். மகள் மேடம் போவெரி படித்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் புன்முறுவல் இருந்தது. அவளது ஆங்கில வகுப்பில் அது பாடத்தில் ஒன்று, அவள் கட்டுரை எழுத வேண்டும். பாதிரிப்பூ மண்பானையில் இருக்கையில் பானையின் நீருக்கு மணம் தருவது போல அந்தப் புத்தகம் அவளுக்கு முறுவல் தருகின்றது என நினைத்துக் கொண்டான். அந்த உவமை தனக்குத் தோன்றியதை எண்ணிப் பார்க்கையில் அவனுக்குக் கூடுதல் மகிழ்ச்சி வந்தது.

அம்மாவிடம் சொல்லுப்பா.. மகளிடம் சொன்னான்.

மகள் ஒரு நிமிடம் கண்ணால் பார்த்து விட்டு , மறு நிமிடம் புத்தகத்தில் போய் விட்டாள். சிறுவயதில் தான் அது போலப் பாலகுமாரன், சுஜாதா படித்ததை நினைத்துக் கொண்டான். அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. எழுத்தாளர்களை குடாகேசனுக்கு மிகப் பிடிக்கும். அவர்களைச் சந்தித்து உரையாடப் பிடிக்கும். சாயங்காலம் சந்திக்கப்போவதை எண்ணியபடியே காரை கிளப்பினான்.

அவன் எண்ணத்தினை விட மெதுவாகவே சாயங்காலம் வந்த பொழுது கோடைக்கால மேரிலாந்து பற்றிக் கொண்டு  எரிந்து கொண்டிருந்தது. குடாகேசன் கதிரவன் வீட்டுக்குச் சென்றான். கதிரவன் அப்பொழுதுதான் நியுயார்க்கில் இருந்து திரும்பி இருந்தான். வீட்டுக்கு வந்த எழுத்தாளர் சுபகையை கார்த்திகேயன்  கூட்டிக் கொண்டு நியூயார்க் போய் இருந்தான். இன்று பயணம் முடிந்து திரும்பி இருந்தார்கள். எழுத்தாளர் சுபகை தமிழில் சிறுகதை, நாவல், கவிதை போன்றவற்றினை எழுதியிருந்தவர். வெயிலில் களைத்திருந்தார். கொஞ்சம் தூங்கி எழுந்து வந்திருந்தார். சோர்வு முழுக்க போகவில்லை.

நியுயார்க் எப்படி இருந்தது,  குடாகேசன் ஆவலுடன் கேட்டான்.

நல்ல பயணம், இரண்டு நாட்களும் போவதே தெரியவில்லை…சுதந்திர தேவி, மெட் ம்யூசியம், எம்பையர் ஸ்டேட் கட்டிடம், டைம்ஸ் ஸ்கோயர் சதுக்கம் என எல்லா இடமும் போய் வந்தோம். ஒரு ப்ராட்வே ஷோவுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்தோம், க்ரேட் கேட்ஸ்பி, ப்ரேக்பாஸ்ட் இன் டிபானி, ஏஜ் ஆப் இன்னாசென்ஸ், பெல் ஜார் என நாவல்களில் கண்ட நகரம் கண் முன்னே பருப்பொருளாய் கண்டோம். வெயில் சற்று கடுமை,  உற்சாகமான குரலில் சுபகை சொன்னார். 

ஏஜ் ஆப் இன்னாசென்ஸ் , யார் எழுதிய நாவல், அது படித்தது இல்லை, குடாகேசன் யோசனையாகச் சொன்னான்.

அது எடித் வார்ட்டன் உடையது, நல்ல நாவல், அது அவசியம் படியுங்கள். அமெரிக்கக் கலாச்சாரம் யுக சந்தியின் மாற்றத்தில் இருந்ததைப் பேசும் நாவல்.

உங்கள் நாவல் “வெட்ட வெளி” படித்தேன், பெல்ஜாரில் சில்வியா ப்ளாத் பேசும் கருப்பொருளைப் போல இருந்தது, குடாகேசன் தொடர்ந்தான்.

அப்படியா, அது மனச்சிதைவை வேறு கோணத்தில் அணுகுகின்றது.. பெரு நகரச் சூழலைப் பேசுவதால் பெல்ஜாருடன் ஒப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்… சுபகை மென்முறுவலுடன் சொன்னாள்.

இங்கே அமெரிக்க சூழலில் சங்க இலக்கியங்களை விடாமல் முன்னெடுக்கின்றோம். இங்கிருக்கும் குழந்தைகளுக்கு அதைக் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.. இன்றைக்குக் கூட வீட்டில் மகளிடம் ஓரம்போகியார் பாடலில் வரும் ஆற்றங்கரையின் பேய்க்கரும்பினை, வீட்டில் உள்ள பசலைக் கொடி தேடியக் காட்சியைச் சொன்னேன். அவளிடம் எதிர்வினையே இல்லை. ஆனால் மாயா ஏஞ்சலாவை ரசிக்கின்றாள்.

சுபகை பதில் சொல்லாமல் மையமாகச் சிரித்தாள்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், குடாகேசன் சொன்னான்.

அறையில் மௌனம் நிலவியது. பதிலை சுபகை திரட்டிக் கொண்டிருப்பதை குடாகேசன் கண்டான்.

தமிழக நிலப்பரப்பின் மருத நிலக் காட்சியினைப் பாடிய ஓரம்போகியார் இப்பொழுது அமெரிக்கா வந்தால் அவரை காண, அவருடன் உரையாட மாயா ஏஞ்சலாவை வாசிக்கும் உங்கள் மகளை அனுமதிப்பீர்களா? சுபகை கேட்டாள்

நேரம் எங்கே இருக்கின்றது, வீட்டுப்பாடம், சயின்ஸ் போட்டிகள், விளையாட்டு நடவடிக்கைகள் என இவர்களுக்கு நேரமே இருப்பதில்லையே. இவர்களை எப்படிக் கூட்டி வருவது.. குடாகேசன் உடனடியாகப் பதில் சொன்னான். மகளின் கால அட்டவணையை நினைத்தால் அவனுக்குப் பெரிய யோசனையாகவே இருந்தது.  கொஞ்சம் இடைவெளி விட்டான். சுபகை அவனையே பேசு என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் இதயத்தில் சங்க இலக்கியம் இருந்தால் எல்லாம் சரியாகும்… இதயத்துக்கு எடுத்து போகும் வழிதான் தெரியவில்லை,  குடாகேசன் குரலில் கவலை இருந்தது.

கொஞ்ச நேரம் சுபகை அமைதியாக இருந்து விட்டு, சிறிய முறுவலுடன் புரிந்து கொள்ள முடிகின்றது,  என்றார்.

குடாகேசனுக்கு தான் கேட்ட கேள்விக்குப் பதில் சுபகை சொல்லவில்லை எனத் தோன்றியது, பதிலுக்கு ஏதேனும் கேள்வி கேட்டு மழுப்புகின்றார் என நினைத்தான்.

இன்றைய தலைமுறைக்கு எப்படி நம் இலக்கியம் வழியேயான மதிப்பீடுகளைக் கொண்டு செல்வது, கேள்வியைத் தொடர்ந்தான்.

சொன்னேனே.. என சுபகை சொன்னாள். 

புரியவில்லையே… குடாகேசன் குழப்பத்துடன் கேட்டான்.

சரி , இப்படிப் பாருங்கள் ஒரு நாகரீகத்தின் அக மதிப்பீடுகள், அதன் புற வெளிப்பாடுகள் பற்றி விரிவான புரிதல் இருந்தால் இளையவர்களுக்குத் தங்களை இணைத்துக் கொள்ள உதவும், நேரடியாக அனுபவம் கிடைக்காத அடையாளங்கள் வழியே கற்பனையைத் தொட்டு விரித்துக் கொள்வது கடினமல்லவா.. சுபகையின் குரல் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது.

குடாகேசன் இன்னமும் கூடுதலாகக் குழம்பி இருந்தான். முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தான். 

தமிழ்ப் பள்ளிக் கூடத்துக்குப் போய் இன்னொரு மொழியாகத் தமிழைப் படிக்க வைக்கவும் இங்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் என் கேள்வி இன்றைய எழுத்தாளர்கள் அதில் என்ன செய்ய வேண்டும், தன் கேள்வியை மீண்டும் ஒரு முறை  முயற்சி செய்தான்.

தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் எழுத, படிக்க, பரீட்சை எழுதச் சொல்லிக் கொடுப்பார்கள், இலக்கியச் சிந்தனையை விவாதிக்கும், கற்பனை செய்யும், உருவாக்கும் வசதி இல்லையே,  தமிழ்ப் பள்ளி, தமிழ் எழுதப் படிக்க , அதில் சான்றிதழ் பெற்றுக் கொள்ள உதவும்.. சுபகை முணுமுணுத்தாள்.

குடாகேசன் அதை ஏற்காது தலை அசைத்து மறுத்தான். நான் கேட்டது எழுத்தாளர் தரப்பில் எனச் சொன்னான்.  

சுபகையின் முகம் வெளிறியது. அவள் பற்கள் இறுக்கமாகக் கடிபட்டன. அவள் விரல்கள், ஆமை ஓட்டுக்குள் புதைவது போலப் புதைந்து இறுகின. அவள் கண்கள் சின்ன சிவப்புத் தீற்றல் கொண்டன. சுபகை மூச்சு உள்ளுக்குள் வந்து வெளியே போவதைச் சிறிது நேரம் உற்றுக் கவனித்தாள். உள்ளொன்று திரண்டு வந்தது.

“பெறுதியே எவையும் செல்வம் பேர் அறிவாள சீரிற்று
அறிதியே என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்
இறுதியே இயைவது ஆனால் இடைஒன்றால் தடைஉண்டாமோ?” 

எனப் பாடல் ஒன்றினை சுபகை பாடினாள். 

பாடி முடித்ததும் அவள் மெல்ல இருக்கையில் பின்னே சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

குடாகேசன் அவள் வார்த்தைகளை மெல்ல அசைபோட்டான். 

பின் என்னதிது, இது வரை கேட்டதில்லை என குடாகேசன் கேட்டான்.

இது கம்ப ராமாயணப் பாடல் என சொன்னாள் சுபகை.

அவள் குரல் ஆழத்திலிருந்து ஒலித்தது போல இருந்தாக குடாகேசன் நினைத்தான். கம்ப ராமாயணம் என்ற சொல் அவனுக்கு எழுச்சியைத் தந்தது.

ஆஹா, கேட்கவே இனிமையாக உள்ளது.  என்ன பொருள் என எழுச்சியினை தொடர்ந்து சொன்னான்.

மகோதரனுக்கு ராவணன் சொன்ன பாராட்டு எனக் கம்பராமாயணத்தில் வரும். இதன் பின்னர் கும்பகர்ணன் எழுப்பப்பட்டு போருக்கு அனுப்பப்பட்டான். சிறந்த அறிவுடையனே! நீ செல்வம் யாவையும் பெறுதற்கு உரியவன்; சிறந்த செயல்களை நீ அறிந்துள்ளாய். நீ என்னிடம் கொண்ட அன்புக்கு அளவு உண்டா?  நீ எனக்கு உறுதி பயக்கும் செயலையே உரைத்தாய்.., எனப் பொருள் வரும். நீங்கள் மகோதரன் போல என  சுபகை சொன்னாள்.  இறுக்கமான குரலில் சொன்னாள்.  

தன்னை எழுத்தாளர் பாராட்டுகின்றார் என குடாகேசன் நினைத்தான். எழுத்தாளருக்கு வழிகாட்டிய பெருமையில் அவன் மனம் இனித்தான். 

இந்தப் பாடல் கும்பகர்ணன் வதை படல பாடல். மகோதரன் அறிவுரையால் எழுப்பப்பட்ட ராவணன் இறந்து விட்டானே.. எனக் கதிரவன் கேட்டான். 

அதுவரை உரையாடலில் பங்கு பெறாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கதிரவனைக் கம்ப ராமாயணம் பேச வைத்தது என குடாகேசன் எண்ணினான்.

அது முக்கியமா என்ன, இந்தப் பாட்டில் உள்ள விஷயங்களை மட்டும் பார், என குடாகேசன் தன் பார்வையைத் தொடர்ந்து முன் வைத்தான்.

பெரிய கேன்வாஸில் பார்க்க வேண்டாமா எனக் கதிரவன் கேட்டான்.

தேவையில்லை என குடாகேசன் சொன்னான்.

சுபகை ஏதோ யோசனையில் இருந்ததை குடாகேசன் பார்த்தான்.

என்ன யோசனை என்றான் 

பாடலின் கடைசி வரி “ அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது” என பொருள் வரும். அது பாடலிலேயே ராவணன் குரலாக வராது, ஆசிரியர் கம்பனின் குரலாக வரும் என சுபகை சொன்னாள்.

அதை விட்டு விட்டுப் பார்ப்போம் என்பது என் எண்ணம், இந்தப் பாடல் எத்தனை அழகான சொற்களைக் கோர்த்து எத்தனை அழகாக “என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ?” எனக் கேட்கின்றது. பெறிதி, உறுதி, அறிதி என கம்பன் வைக்கும் சொல் கொடுக்கும் உள்ள நெகிழ்வு, ஒலி நயம் எத்தனை சுவை?  அதைப் பார்த்தால் போதும் என குடாகேசன் சொன்னான்

நானும் அந்த வரிசையின் ஆசிரியர் என சுபகை மெல்லிய குரலில் சொன்னாள்.

குடாகேசன் அவள் சொன்னதைக் கேட்டான். அவன் மனதில் ஒரு கண்ணாடி எழுந்தது, அதில் அவள் சொல்லின் மீதான தன்  எண்ணங்களைப் பிரதிபலித்துப் பார்த்தான். ஆடியில் தெரிந்தது அவனுக்கு மாயமாக இருந்தது, அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சற்று முன்னகர்ந்து நாற்காலியின் நுனிக்கு வந்தான். 

என்ன சொன்னீர்கள் என குடாகேசன் கேட்டான்.

சுபகை உற்றுப் பார்த்தாள். குடாகேசன் அவள் கண்கள் வறண்டு இருந்ததை கண்டான். 


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.