உறக்கம்
தலைக்குள் அலைச் சத்தம்.
விழிக்குள் மணற் பரப்பின்
விரிப்பு.
ஜன்னல் வழி
ஆகாயம் இறங்கி
நட்சத்திரப் பூச்சொரியும்.
மேகச் சாமரம்.
இரவு ஒரு பனித் துளியாய்
எனை விழுங்கும்.
வேறெங்கோ போய்
நிஜமாய் வாழ்ந்து
நிதமும்
திரும்பி வருவேன்
சாகும் வரை.
_____________________________________________
கடலைப் பார்த்தே பல காலமாச்சு.
மணலில் படுத்தது அதற்கும் எப்பவோ.
இப்போதும் கடல் உண்டு,
மணல் உண்டு.
காட்சிப் பொருளாய் எல்லா
மனிதருமுண்டு.
ஒன்றாய்க் கிளம்பி
ஒரு சேர ஒரே பயணம் செய்து
சிலரைப் பார்த்து, சிலரைத் தழுவி
சிலரை மிதித்து, சிலரைப் பயந்து
பல கோடியைப் பற்றிக்
கூடப் பறப்பவர் என்ற நினைப்பு
கொஞ்சமும் இன்றி
ஒரு வளைக்குள்…..
கடற்கரையில்,
என் காலம்.
கடலைக் காண
மீனவனாய்ப் பிறக்க வேண்டும்.
கவிஞனாய்ச் செய்வது
வெறும் படம் பார்த்தல்தான்.
அதுவோ சம்போகம்.
காம ஆணியில்
என் ஆடை
மாட்டிக் கொண்டு விட்டது.
நானும்
இதுதான் சாக்கென்று
அங்கேயே
தொங்குகிறேன்.
இரயிலில் போகையில்
பொட்டல் புல்வெளியில்
வெள்ளை வெள்ளையாய்………
என்ன பறவைகள் அவை
என
எம்பிப் பார்க்கையில்
அத்தனையும்
பாலீதீன் பைகள்.
இயற்கையை ரஸிக்கையில்
எங்கிருந்தோ துரத்த
ஓடி வரும் நாய்.
ரம்யமான காலை நடையில்
பூங்காவில் சிறு நீர் கழிப்பு போல்.
நிச்சிந்தையான பெண்ணை
விடாது வெறிக்கும் கண்லிங்கம்.
ஏகாந்தம்

காலங் காலமாகக்
காகத்தின் கரையல்.
மனிதரின் அழுகையைப் போல்.
மொட்டு நீர் முளைத்து
காலமின்றி இதழ் விரிக்கும் ஏரி.
கண்ணாடி நீரில்
நீலம் மிதக்கும்.
இலைகளின் ஒளியைக் கதிர் உண்ணும்.
காற்று தளராது உடல் தழுவி
உயிர் ஊட்டும்.
மரணமற்ற பிறப்புமற்ற
மனம் கரைந்த ஆகாயம்.
மேகம் தடையின்றி
ஊடுருவும்
விளிம்புமற்ற
ஸ்படிக நிலை.
மனோ நாசம்
ஆசையாய்க் கட்டிய கோபுரம்
இடிந்து விழுந்ததும்
எஞ்சியது துக்கமில்லை.
மணற் கற்கள்தாம்.
கடலின் கரையில்
கிளிஞ்சலின் பிரபஞ்சத்தில்
கடலைப் பற்றிய கவலையுண்டோ?
அலைகளின் நுரைகளில்
அனந்த கோடி சரித்திரங்கள்.
மாலை, இருள் வரும் முன்
காற்றில் ஆடும் இலைகள்.
ஆனந்தம். இருளின் மடியில்
அமைதி. ஒளி.
ஓம் சாந்தி.
Every illusion ends in disillusionment.
_____________________________________________
மனம் தணியும்
காகம் பிரிந்து சென்ற தென்னை
கலங்கவில்லை.
முன்பும் திரும்பி வரும் என்ற
நம்பிக்கை வெறுமையைக் கொஞ்சம்
குறைத்ததாய் நினைத்ததுண்டு.
வெறுமையும் நம்பிக்கையும்
வேறல்ல என தெளிந்ததும்
தென்னை காகமாச்சு
************
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

வாசிக்க வாசிக்க விரிகிறது ஒரு ஏகாந்த