இச்சாமதி – 1

This entry is part 1 of 1 in the series இச்சாமதி
  • இச்சாமதி – 1

இச்சாமதி ஒரு சிறு நதி. முழு நதியையும் அப்படிச் சொல்லமுடியாவிட்டாலும், ஜெஸ்ஸூர் ஜில்லாவில் ஓடும் பகுதி மிகச்சிறியது. தெற்கே போகப்போக, முதலைகளும், சுறாக்களும், ஆமைகளும் திளைக்கும் பெரிய உப்பு நீர் நதியாக அது விரிவடைந்து, சுந்தர்பன்னின் அடர்ந்த காடுகளைத் தாண்டி, வங்காள விரிகுடாவில் சென்று சேர்கிறது. ஆனால் அதைக் குறித்து ஜெஸ்ஸூர் ஜில்லாவின் கிராமத்தினர் அறிந்திருக்கவில்லை.

நடியா, ஜெஸ்ஸூர் பகுதிகளில் இந்நதியைப் பார்த்தவர்களுக்கு அதன் அழகைக் குறித்துத் தெரியும். ஆனால் நீண்டகாலமாக இந்தப் பகுதிகளில் வசித்தவர்களால்தான் அதை முழுமையாக உணர முடியும். கடவுள் இந்நதியின் இரண்டு கரைகளையும், பறவையொலிகள் நிரம்பிய பச்சைக் காடுகளால் நிறைத்திருக்கிறார்.

மோறிகாடாவிலிருந்தோ, பஜித்பூரிலிருந்தோ, நீங்கள் சாந்துரியா படித்துறை வரை படகில் சென்றால், இரண்டு பக்கமும் புலிநகக்கொன்றை மரங்களின் சிவப்பு மலர்களும், ஆகாயத்தாமரைகளும், தித்பல்லாக்களின் மஞ்சள் மலர்களும் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். கரைகளில் மக்கள் குடியிருப்புகள் குறைவாக – புராதனமான ஆல மரங்களும், அரச மரங்களும், மூங்கில் தோப்புகளும், நிழல் படர்ந்த உலுத்தி, பச்ரா மரங்களும் நிறைந்திருக்கும். மைனாக்கள் கூடு கட்டுவதற்கு வசதியான பொந்துகளும், தொங்கும் சிறு கொடிகளும், படரும் கொடிகளும் மரங்களுக்குக் கீழே காணக்கிடைக்கும். ஆற்றங்கரைகளில் ஒரு சில வீடுகளே இருந்தன. பெரும்பாலும் மேய்ச்சலுக்கேற்ற பசும்புல்வெளிகளோ, மணல் திட்டுகளோ, வண்ணம் செறிந்த பூக்களைக்கொண்ட சிறு புதர்களோ அல்லது கிறீச்சிடும் பறவைகள் செறிந்த காடுகளோ இருந்தன. கிராமத்துக்கு அருகே படகுகள் படகுத்துறையில் கட்டப்பட்டிருக்கும். உயரமான இலவ மரத்தின் உலர்ந்த கிளையில், சீன ஓவியத்தில் இருப்பதைப்போல, ஒரு கழுகு அசையாமல் உட்கார்ந்திருக்கும்.

சில படித்துறைகளில் பெண்கள் குளித்துக்கொண்டோ, இடுப்பில் குடத்தோடு தோழிகளுடன் அரட்டையடித்துக்கொண்டோ இருப்பார்கள். சில இடங்களில் உயர்ந்த கரைகளில் கிராமத்து ப்ரைமரி ஸ்கூல் – கூரை வேய்ந்த நீளமான கூடங்களோடும், மூங்கில் வேலிகளோடும் இருக்கும். உள்ளே தூண்களில் கட்டிவைக்கப்பட்ட உடைந்த மூங்கில் நாற்கலியொன்றும், சில பெஞ்சுகளும் கிடக்கும்.

மேய்ச்சல் நிலங்களின் பசும்புற்கள் மேலே நிலவொளி பொழியும்போது, கோடைகாலத்தில் வெள்ளெருக்குப் பூக்கள் மலரும்போது, கொன்றை மரத்தின் பூக்கள் ஆற்றிலிருந்து வீசும் தென்றலில் ஆடும்போது, படகில் செல்லும் பயணிகளுக்கு, கரைகளில் எருக்கம்புதர் மண்டி, கறையான் புற்றுக்கள் நிறைந்த, அந்த கைவிடப்பட்ட கட்டடம் காணக்கிடைக்கும். அப்படிப்பட்ட சிதிலமடைந்த வீடுகள், கடந்து சென்ற காலத்தைக் குறித்தும், அந்த வீடுகளோடு தொடர்புடைய அம்மாக்களையும், அவர்கள் பிள்ளைகளையும், அக்கா – தம்பிகளையும் குறித்து யோசிக்க வைத்தன. நமக்குத்தெரியாத எத்தனையோ சந்தோஷமான, துக்ககரமான வரலாறுகள் அந்த வீடுகளில் மழைப்பருவத்து நீர்த்தடங்கள் போல எழுதப்பட்டிருக்கும். சூரியன் அந்த வீடுகளின் மீது வெயிலைப் பாய்ச்சியது; இலையுதிர்காலம் பனித்துளிகளைத் தெளித்தது; இரவில் நிலவு ஒளியைப் பொழிந்தது.

அந்தத் தகவல்களும் பழங்கதைகளும்தான் நம் நாட்டின் உண்மையான வரலாறு. எளிய மனிதர்களின் வரலாறு. பேரரசர்களின், மன்னர்களின் வெற்றிப் பிரதாபங்களல்ல.

வங்காள வருடம் 1270-த்தின் (பொ.யு 1863) வருடத்தின் வெள்ளம் அப்போதுதான் வடிந்திருந்தது.

தெருக்கள் இன்னும் சேறும் சகதியுமாக இருந்தன. வயல்களில் நீர் நிறைந்திருந்தது. மாலை வேளைகளில் இரட்டைவால் குருவிகள் வேல மரத்தின் மலர் நிறைந்த கிளைகளில் அமர்ந்திருந்தன.

நாலு பால் மொல்லாஹாத்தி சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தான். வெற்றிலைகளும், பாக்குக்கொட்டைகளும் நிறைந்த கூடையைத் தலையில் சுமந்தபடி போய்க்கொண்டிருந்தான். மொல்லாஹாத்திக்குச் செல்லும் பாதையில், அவுரித் தோட்ட வெள்ளைக்கார சாஹிப்புக்கள் நட்டு வைத்த ஆலமரங்கள் வளர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தன. களைப்படைந்த நாலு, சுமையை இறக்கி, ஒரு மரத்துக்குக் கீழே அமர்ந்து, துண்டால் விசிறிக்கொண்டிருந்தான்.

நாலுவுக்கு இருபது, இருப்பத்தியொரு வயது இருக்கும். கருத்து மெலிந்து இருந்தான். தலையில் பின்னல் போட்டிருந்தான். தோளில் அந்தக் காலத்து மோஸ்தரான வண்ணமயமான துண்டைப் போட்டிருந்தான். மாமாக்களின் தயவில் வாழ்ந்து வந்ததால், அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவனுக்கென்று சொந்தமாக எதுவுமில்லை. கடந்த ஒருவருடமாகத்தான் வெற்றிலை பாக்கு வியாபாரம் செய்து வந்தான். அவன் அத்தை முதலாகப் போட்டிருந்த பதினேழு ரூபாயில் அந்த வியாபாரம் தொடங்கியிருந்தது. ஒரு வருடத்தில் அந்தப் பதினேழு ரூபாய், ஐம்பத்து ஏழு ரூபாயாகியிருந்தது. சாப்பாட்டுச் செலவு போக நிகர லாபம் அது.

நாலுவுக்கு அதைக் குறித்துப் பெருமிதமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக அவன் மாமா வீட்டில் ஏச்சுக்கள் அதிகமாகிவிட்டன. இருபத்தியொரு வயது மனிதன் சொந்தக்காலில் நிற்பதுதான் சரி. அன்றொரு நாள் தலைக்குத் தேய்த்துக்கொள்ள எண்ணெய் கேட்டபோது, அவன் அத்தை என்னென்னவோ பிரசங்கம்  செய்துவிட்டாள்.

அவன் முகத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, “எங்கேருந்து எண்ணெய் வரும்? தலைமுடிக்கு இத்தனை அலங்காரம் தேவையா? இப்பிடி அலங்காரம் செஞ்சுக்கனும்னா சொந்தமா சம்பாதிக்கனும்.” என்றாள்.

நாலு அசதியில் லேசாகக் கண்ணயர்ந்து விட்டான். சந்தைக்கு இன்னும் நேரமிருக்கிறது. அப்போது அந்த வழியே குதிரையில் வந்த ஒருவர் அவன் முன்னே வந்து நின்றார்.

நாலு பால் மரியாதையாக எழுந்து நின்று, “ராய் மஷாய், நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டான்.

”ஆசிர்வாதம். நீ நாலுதானே? சந்தைக்குப் போறியா?’

”ஆமா மஷாய்.”

”நேரா உட்காரு. இந்தப் பக்கம் ஷிப்டன் ஸாஹிப் வரப்போறாரு.”

”பாபு, சாலையிலேருந்து இறங்கி வயலுக்குள்ள ஓடிப் போயிரட்டுமா? அவரு எல்லாரையும் அடிப்பாராமே?”

“வேண்டாம், வேண்டாம். அவரு எதுக்கு உன்னை அடிக்கப் போறாரு? சுத்த பேத்தல். இங்கேயே உட்கார்ந்திரு.”

”குதிரையிலயா வர்றாரு?”

“இல்ல, டாம் டாம்ல வருவார்னு நினைக்கறேன். சரி, நான் கிளம்பறேன்.”

மொல்லாஹாத்தி அவுரித் தோட்டத்தின் தலைவர் ஷிப்டன் என்றாலே மக்களுக்கெல்லாம் குலை நடுக்கம். உயரமாகவும், குண்டாகவும், புலியைப் போல உருண்டையான முகத்தோடும் இருந்த அவர் கையில் எப்போதும் ஒரு சாட்டை இருக்கும். அந்தப் பகுதி மக்கள் அந்தச் சாட்டைக்கு “ஷ்யாம்சாந்த்” என்று பெயரிட்டிருந்தார்கள். ஷ்யாம்சாந்த் எப்போது யார் முதுகில் பதியும் என்று சொல்லமுடியாததாகையால், ஷிப்டன் வெளியே கிளம்பிவிட்டார் என்று தெரிந்தாலே மக்கள் நடுங்கத் தொடங்கினர்.

அப்போது, எண்ணெய் வியாபாரி சதீஷ் கோலு, கடுகெண்ணெய் நிரம்பிய ஒரு பெரிய மண்பானையைச் சுமந்தபடி அங்கே வந்து சேர்ந்தான். வழியோரம் உட்கார்ந்திருந்த நாலுவைப் பார்த்து, “என்ன இங்க உட்கார்ந்திருக்க? சந்தைக்குப் போகலியா?” என்று கேட்டான்.

“உட்காரு, புகையிலை இருக்கா?”

“இல்ல.”

“என்கிட்ட இருக்கு. ஆனா மொதல்ல ஷிப்டன் ஸாஹேப்  போயிரட்டும்.”

“ஷிப்டன் இந்தப் பக்கம் வரப்போறதா யாரு சொன்னது?”

”ராய் மஷாய்தான் சொன்னாரு. உட்காரு.”

திடீரென்று சதீஷ் கோலு எழுந்து நின்று பயத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு, ஷான்ரா, குட்டிப்பிரை புதர்களுக்குள் பாய்ந்து, பாதைக்குக் கீழிருந்த வயல் வெளிகளுக்குள் நுழைந்து மறைந்தான். ”ஸாஹேப்  வர்றாரு, ஓடி வா!” என்று நாலுவைப் பார்த்துக் கத்தினான்.

வெற்றிலை-பாக்கு சுமையை அங்கேயே விட்டுவிட்டு நாலுவும் பின்னால் ஓடினான். தொலைவிலிருந்து டாம்-டாம் வண்டியின் மணிகளின் ஓசை கேட்டது. கொஞ்ச நேரத்திலேயே  மண்பாதையில் புழுதியைக் கிளப்பியபடி, படுவேகமாக அந்த வண்டி வருவதும் தெரிந்தது. அது மிகச்சரியாக நாலு பால் அமர்ந்து ஓய்வெடுத்த அதே ஆலமரத்தின் கீழே வந்து நின்றது.

பாதையோரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் பெரிய சுமையைப் பார்த்த ஷிப்டன் ஸாஹேப் , “ஏய்! இந்த மூட்டை யாருது?” என்று அரைகுறை பெங்காலியில் கேட்டார். இலக்கண சுத்தமான பெங்காலியையும், பேச்சு வழக்கு பெங்காலியையும் கலந்து ஒரு விநோதமான மொழியில் அவர் பேசினார்.

நெல் வயலில் அரைகுறையாக ஒளிந்திருந்த நாலு பாலும், சதீஷ் கோலுவும் பயந்து நடுங்கிப்போனார்கள். சாஹேபின் எடுபிடியாக வேலை பார்த்த தோல் பதனிடும் ஜாதியைச் சேர்ந்த நஃபர் முச்சி டாம்டாமுக்குப் பின்னாலிருந்து கத்தினான் – “உங்க ரெண்டு பேர்ல யாரோட மூட்டை இது?”

”பதில் சொல்லு! இந்த மூட்டை யாரோடது?” என்று கத்தினார் ஸாஹேப் .

நாலு பால் மிகவும் பயந்துபோய், கவலையான முகத்தோடு மேலேறி வந்து, கைகளைக் கூப்பி, பவ்யமாக, “என்னோடது ஸாஹேப் ” என்றான்.

ஸாஹேப் பதிலேதும் பேசாமல் அவனையே கூர்ந்து பார்த்தபடி இருந்தார்.

“உன்னோடதா?” என்று கேட்டான் நஃபர் முச்சி.

“ஆமா ஹுஸூர்.”

”நெல் வயல்ல என்ன செஞ்சிக்கிட்டு இருந்த?”

“அது வந்து, ஹுஸுர்….”

”எனக்குத் தெரியும். என்னைப் பார்த்தவுடனே எல்லாரும் ஓடி ஒளியறீங்க. நான் என்ன பாம்பா, புலியா?” என்று கேட்டார் ஷிப்டன்.

நாலு பயந்தபடியே, “இல்லை, ஸாஹேப்” என்றான்.

“சரி, இந்த மூட்டைல என்ன இருக்கு?”

”வெத்தலை ஸாஹேப் .”

”மொல்லாஹாத்தி சந்தைக்குக் கொண்டு போறியா?”

”ஆமா ஸாஹேப்.”

”உன் பேரு என்ன?”

“ஸ்ரீ லால்மோஹன் பால், ஹுஸுர்.”

”அதை எடுத்து உன் தலை மேல வை! இனிமே என்னைப் பார்த்தா ஓடி ஒளியக் கூடாது. நான் ஒண்ணும் புலியில்ல. நான் ஜனங்கள சாப்பிட மாட்டேன். புரியுதா? ஓடு.”

“ஹுஸுர்.”

ஸாஹேப்பின் டாம்-டாம் ஓடி மறைந்தது. நாலுவின் இதயம் இன்னும் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. அப்பா, இன்னிக்கு எப்படியோ தப்பிச்சிட்டோம்! ”ஓ சதீஷா குரோ!” என்று விசிலடித்துக் கூப்பிட்டான். சதீஷ் இதற்குள் பாதையிலிருந்து வெகுதூரம் போய் நெற்கதிர்களுக்குள் நன்றாக ஒளிந்துகொண்டிருந்தான். மெல்ல அவற்றை விலக்கி, “வரேன்!” என்று சொல்லி பாதைக்கு வந்து சேர்ந்தான். 

“அடேயப்பா! என்னைக் கூப்பிட்டதும் நீ வயலையெல்லாம் தாண்டி ஓடிப்போய்ட்டியா?”

“என்னப்பா பண்றது? நாம ஏழைங்க. நம்ம முதுகுல ஷ்யாம்சாந்த் விழுந்தா என்ன செய்யறது? ஸாஹேப் உன்கிட்ட என்ன சொன்னாரு?”

“நல்லாத்தான் பேசினாரு.”

“அதுக்கு முன்னாடி ராய் மஷாய் என்ன சொல்லீட்டுப் போனாரு?”

“ஸாஹேப் வர்றாரு, நேரா உட்காருன்னாரு. அவ்ளோதான்.”

”சொல்லமாட்டாரா என்ன! அவருதான் ஸாஹேப்க்கு தரகராச்சே. அவுரித் தோட்டத்து பங்களாவுல வேலை பார்த்து நல்லா சம்பாதிச்சிட்டாரு. ரெட்டை மாடி வீடும் கட்டிட்டாரு.”

ராய் மஷாயின் முழுப்பெயர் ராஜாராம் ராய். மொல்லாஹாத்தி அவுரித்தோட்டதுக்கு அவர்தான் திவான். அவருடைய பேராசையையும், அடக்குமுறையையும் பார்த்து, அவர்மீது கிராமத்து மக்களுக்கு வெறுப்பும், பயமும் இருந்தது. ஆனால் யாருக்கும் எதுவும் சொல்லும் தைரியம் இருக்கவில்லை. அவர், பக்கத்திலிருந்த பஞ்சபோதா கிராமத்தில் குடியிருந்தார்.

மாலை நேரத்து சூரியன் அடர்பச்சைத் தோட்டங்களுக்குப் பின்னே மறையும் வேளையில், ராஜாராம் தன் வீட்டுக்கு முன்னே குதிரையிலிருந்து இறங்கினார். நஃபர் முச்சியின் சொந்தக்காரப் பையன் ஒருவன் ஓடி வந்து குதிரையைப் பிடித்துக்கொண்டான். ராஜாராம் சண்டி மண்டபத்தின் முன்னால் நிறைய பேர் நிற்பதைப் பார்த்தார். நீலக்குத்தியின் தீவான் வீட்டு முன் இப்படி மக்கள் நிற்பது, வருடம் முழுவதும் காணக்கிடைக்கும் விஷயம்தான். கிராமத்து மக்கள், சொந்த விஷயங்கள், வேண்டுகோள்கள், முறையீடுகளோடு தீவானைப் பார்க்க வருவார்கள். சிலர், வழக்கமான விவசாயத்துக்குப் பதிலாக, இண்டிகோ பயிரிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம். சிலர், ஒப்பந்தப்படியான சுமாரான நிலங்களுக்கு பதிலாக, நல்ல வளமான நிலங்களை இண்டிகோ தோட்டத்துக்குக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம். இப்படி எத்தனையோ புகார்கள்.

அந்தப் புகார்களுக்குத் தீர்வும் கிடைத்தன. இல்லையென்றால் தீவான் வீட்டு சண்டி மண்டபத்தின் முன் இப்படி தினம்தோறும் கூட்டம் நிற்காது. லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியமும் கிடையாது. ராஜாராம் லஞ்சம் வாங்குபவர் அல்ல. அதே சமயம், மக்கள் கொடுக்கும் ரூயி மீன்களையோ, சேப்பங்கிழங்குகளையோ, ஈச்சம்பாகையோ வாங்க மறுத்ததாக யாரும் கேள்விப்பட்டதில்லை.

ராஜாராமின் மனைவி ஜகதம்பா ஒரு காலத்தில் மிக அழகாக இருந்தவள். சிவப்புக்கறை போட்ட கைத்தறிப் புடைவையணிந்து, தங்கம், இரும்பு, சங்கு வளையல்களணிந்து, பெரிய குங்குமப்பொட்டு வைத்து, வழக்கமான பெரியவீட்டு எஜமானி போல இருந்தாள்.

ஜகதம்பா வெளியே வந்து, “இப்போ எங்கேயும் போகாதீங்க. முதல்ல சாயங்கால பூஜையெல்லாம் முடிச்சிக்கோங்க.” என்றாள்.

ராஜாராம், புன்னகைத்து, ஒரு சிறு பொதியை அவளிடம் தந்து, “என்ன? இன்னிக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது விசேஷமா செஞ்சிருக்கியா?” என்றார்.

”ஆமா. வறுத்த அவலும், கொண்டைக்கடலை சுண்டலும்.”

”ஆஹா! ஆஹா! மொதல்ல கை கால் கழுவிட்டு வந்துடறேன். திலு, பிலு, நிலு எங்கே?”

”காய்கறி நறுக்கிட்டு இருக்காங்க.”

”இதோ நான் வரேன். திலுவ தண்ணி தயாரா வச்சிருக்கச் சொல்லு.”

சூரிய அஸ்தமனத்துக்குப் பின், ராஜாராம் வராண்டாவின் மூலையில் சந்தியாவந்தனம் செய்ய அமர்ந்தார். திலு முன்னரே தர்ப்பைப்பாயை விரித்து வைத்திருந்தாள். ராஜாராம் பல மந்திரங்களையும், துதிகளையும் சொல்லி, வெகு நேரம் – கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் – வழிபட்டார்.

ஏன் இத்தனை நேரம் பிடிக்கிறதென்றால் – சந்தியாவந்தனம் முடிந்து, ராஜாராம் ஒவ்வொரு தேவ தேவியரையும் தனித்தனியாக மந்திரம் சொல்லி, அவர்களெல்லாம் திருப்திப்படும் வகையில் வழிபட்டார். லக்ஷ்மி, சரஸ்வதி, ரக்ஷா காளி, சித்தேஸ்வரி, மா மானஸா – இப்படி. அவருடைய இப்போதைய வளமான வாழ்வுக்கு ஒரே காரணம் கடவுளரின் ஆசிகள்தான். எங்கே அவர்களுக்கு சரியாகக் கேட்காமல் போய்விடுமோ என்று ஒவ்வொரு துதியையும், தெளிவாகவும், சத்தமாகவும், நிதானமாகவும் சொன்னார்.

திலு அங்கே வந்து, “கொஞ்சம் இளநி தரட்டுமா, தாதா?” என்றாள்.

”வேண்டாம். வெல்லப்பாகு இருக்கா?”

“வீட்ல வெல்லம் இல்லை, தாதா”

”அப்போ தேங்காய் வேண்டாம், மத்ததெல்லாம் கொண்டுவா”

திலு ஒரு வெண்கலப்பாத்திரத்தில் வறுத்த அவலையும், கொண்டைக்கடலையையும் போட்டு, நிறைய கடுகெண்ணெய் விட்டு கலந்து கொண்டு வந்தாள். அந்தப் பாத்திரம் குறைந்தது அரைக் காதா அரிசியாவது பிடிக்கும். பிலு ஒரு வெண்கலத் தட்டு நிறைய பாலாச்சுளைகளைக் கொண்டுவந்து வைத்தாள். நிலு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு கல் கலயத்தில் அரைப்பாவு ஈச்சம்பாகையும் கொண்டுவந்து வைத்தாள்.

ராஜாராம், நிலுவிடம் ஆதுரமாக, “வா, இப்படி உட்காரு. பலாப்பழம் சாப்பிடறியா?” என்றார்.

“வேண்டாம், தாதா, நீங்க சாப்பிடுங்க, நான் சாப்பிட்டாச்சு”

”உனக்கு பிலு?”

“நீங்க சாப்பிடுங்க, தாதா”

ஜகதம்பா பூஜைகளை முடித்துக்கொண்டு அவரருகே வந்து அமர்ந்தாள். ”நீங்க, ஒரு நாள் முழுக்க வேலை பார்த்துட்டு, களைப்பா வந்து உட்கார்ந்திருக்கீங்க. சாப்பிடுங்க. இல்லாட்டி எப்படி சமாளிக்க முடியும்? அந்தக் கருமம் பிடிச்ச சாஹிப் பங்களாவுல உங்களுக்கு வேலையோ வேலை!”

ராஜாராம், “பச்சை மிளகா இருக்கா? இருந்தா கொண்டு வரச் சொல்லேன்?” என்றார்.

“உங்களுக்கு விசிறட்டுமா? திலு, போய் கொஞ்சம் பச்சை மிளகா கொண்டு வா. அடுப்புல பருப்பு எதோ கருகற வாசனை வருதே! நேத்யா மாமி, என்னன்னு பாருங்க!”

ஜகதம்பா கணவனுக்கு விசிறியபடியே, “சாப்பிட்டவுடனே கிளம்பிப் போய்டாதீங்க. ஒரு விஷயம் பேசனும்”, என்றாள்.

“என்ன?”

“அப்புறமா. உங்க தங்கச்சிங்க போகட்டும்.”

“அவங்க போயாச்சு. என்ன விஷயம்?”

“கிராமத்துக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. உங்க தங்கச்சிங்களுக்குப் பொருந்துமான்னு பாருங்க.”

“யாரு அது?”

“சந்த்ரா சாட்டர்ஜிக்கு தூரத்து சொந்தமாம். முந்தி எப்போவோ சாமியாராப் போய்ட்டானாம். நல்ல லட்சணமான பையன். நாளைக்குத் திரும்பிப் போறான்னு கேள்விப்பட்டேன். நீங்க இப்போவே போய் பேசனும்.”

“உனக்கு யார் சொன்னா?”

“தீதி. ரெண்டு வாட்டி வீட்டுக்கு வந்து சொல்லீட்டுப் போனாங்க.”

“பார்க்கலாம்.”

“இந்தப் ‘பார்க்கலாம்’ கதையெல்லாம் வேலைக்காகாது. பிலுவுக்கு இருபத்தியேழு வயசாச்சு. இதுக்கு மேல வரன் கிடைக்கிறது கஷ்டம். ஒருநாள் இண்டிகோ தோட்டத்து வேலை பார்க்கலைன்னா ஒண்ணும் கொறைஞ்சு போய்டாது.”

“நீ சொன்னா சரி. அங்கவஸ்திரம் கொண்டுவா. போகறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹுக்கா பிடிச்சுக்கறேன்.”

சண்டி மண்டபத்தில் நிற்கும் கூட்டத்துக்கு முன்னால் கிளம்பிச்சொல்ல ராஜாராம் விரும்பவில்லை. மஹாராளி மண்டலின் நிலத்தைப் பிரிக்கும் நாள் அது. அவரேதான் நாளையும் குறித்திருந்தார். அவர்கள்தான் வந்து நிற்கிறார்கள் – ராம்ஜன், ஸுகுர், ப்ரஹ்லாத் மண்டல், பனமாலி மண்டல் – மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு தலைவர்கள். அவர்கள் இருக்கும் இருக்கும் வரையில் ராஜாராமைப் போகவிடமாட்டார்கள்.

சந்த்ரா சாட்டர்ஜி, கிராமத்தின் இன்னொரு பெரும்புள்ளி. அவருக்கு இருப்பத்தியேழு பிகா விளைநிலம் தானமாகக் கிடைத்தது. அதிலிருந்து வரும் வருமானமே அவர் குடும்பத்துக்கு எக்கச்சக்கம். பஞ்சபோதா கிராமத்து பிராமணர்களில் ஒருவர் கூட வேலைக்குச் செல்வதில்லை. தினப்படித் தேவைக்கு நிலம் இருக்கிறது. அவரவர் வீட்டு சண்டி மண்டபத்தின் முன் உட்கார்ந்து, இரவு பத்து, பதினொரு மணி வரை சதுரங்கமோ, தாயமோ விளையாடுவது அவர்கள் வழக்கம்.

சந்த்ரா சாட்டர்ஜி, எழுந்து நின்று ராஜாராமை வரவேற்றார். ”வரனும், வரனும். இது எதிர்பாராத ஆச்சரியம். உட்காருங்க. ஒரு ஆட்டம் ஆடலாம்.”

நீல்மொனி ஸமத்தார், “தீவான்ஜி, உங்க ராணிக்கு ஆபத்து, இங்கே பாருங்க.” என்று கூவினார்.

ஃபோனி சக்ரவர்த்தி, “இப்படி என் பக்கத்துல உட்காருங்க. ஹூக்கா பிடிக்கிறிங்களா?” என்றார்.

ராஜாராம் புன்னகைத்து, “உட்காருங்க. சந்தர் காகா, பெரிய ஜமா சேர்ந்திருக்குப் போலயே?” என்றார்.

சந்த்ரா, “என்ன செய்யறது? நீங்கதான் இப்போல்லாம் இந்தப் பக்கமே வரதில்ல்லையே?” என்று அங்கலாய்த்தார்.

ராஜாராமை உபசரித்து பாயில் இடம் கொடுப்பதற்கு எல்லோரும் பரபரத்தார்கள். அங்கே இருந்தவர்களிலேயே, நீல்மொணிதான் வசதிக்குறைவானர். அவர் எல்லோரையும் திருப்தி செய்யவேண்டும். அவர், “தீவான்ஜியால எப்படி வர முடியும்? சாயந்திரமானா வீட்டு தர்பார்ல உட்காரனும். தினப்படி புகார் கொண்டு வரவங்களை விட்டுட்டு இப்படி நம்மோட சதுரங்கம் ஆடிக்கிட்டு இருக்க முடியுமா?” என்றார்.

ஃபோனி சக்ரவர்த்தி, “அது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே? ஒண்ணும் புதுசில்லையே?” என்றார்.

நீல்மொணி, “நீங்க பெரிய கில்லாடி ஆட்டக்காரராச்சே? ஒரு ஆட்டம் போடலாமா?” என்றார்.

ராஜாராம் ஃபோனியிடமிருந்து ஹுக்காவை வாங்கிக்கொண்டார். ஆனால், வயதில் பெரியவரான சந்த்ரா முன்னால் புகைபிடிக்கக் கூச்சப்பட்டு, திண்ணைக்கு அருகேயிருந்த உள்ளறைக்குச் சென்றார். கொஞ்சநேரம் கழித்து வெளியே வந்து, ஹூக்காவை ஃபோனியிடம் கொடுத்துவிட்டு, தன் இடத்தில் அமர்ந்துகொண்டார்.

சதுரங்க ஆட்டம் முடியும்போது பத்து மணிக்கு மேலாகியிருந்தது. ஒவ்வொருவராக எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிப் போனார்கள்.

ராஜாராம், சந்த்ரா சேட்டர்ஜியிடம் தான் வந்த விஷயத்தைக் குறித்துச் சொன்னார். சந்த்ராவின் முகம் மலர்ந்தது. ராஜாராமின் கையைப் பிடித்துக்கொண்டு, “ஆஹா! இதனாலதான் நீங்க இன்னிக்கு இந்தப்பக்கம் வந்திருக்கீங்க. ஆனால் ஒரு விஷயத்த நான் உங்ககிட்ட மறைக்காமச் சொல்லனும். பபானி ஒருகாலத்துல சாமியாராப் போயிருந்தான்.”

“வீட்டுப் பொம்பளைங்ககிட்டச் சொல்றேன். திலுகிட்டயும் சொல்றேன். அவங்க முடிவு செய்யட்டும்.”

“அதுவும் சரிதான்.”

பிறகு, தாழ்ந்த குரலில், “நான் பபானிய இங்கேயே வச்சுக்கனும்னு பார்க்கறேன். நீங்க ஏன் மூணு தங்கச்சிங்களையும் அவனுக்கே கட்டிவச்சுடக் கூடாது. உங்களுக்குத் தலைவலி ஒரேடியா தீர்ந்துடுமே. ஒரு அஞ்சு பிகா நிலம் வரதட்சணையாக் கொடுத்துடுங்க. நான் எல்லாத்தையும் இப்போவே தயார் செஞ்சுடறேன்.” என்றார்.

ராஜாராம், சிந்தனைவயப்பட்டவராய், “வீட்ல கலந்துக்காம என்னால உறுதியாச் சொல்லமுடியாது. நாளைக்குச் சொல்றேன்.” என்றார்.

”கல்யாணத்தைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. என் மருமகன்ங்கறதுக்காகப் பெருமையாச் சொல்லல, பபானி, கடதாவ் பண்டிஹாதி பண்ருரி பிராமணக் குடும்பத்துப் பையன். ஏதோ இந்த ஒரு தலைமுறைலதான் குடும்பம் நசிஞ்சு போச்சு. அவன் ஜாதகத்தை நாளைக்கு உங்களுக்குத் தரேன். உயர்ந்த குலின் பிராமணன்.”

“எத்தனை வயசாச்சு.”

“கிட்டத்தட்ட ஐம்பது இருக்கும். ஆனா உங்க தங்கச்சிங்களும் அப்படியொன்னும் சின்ன வயசில்லையே? அவன் சாமியாராப் போகாம இருந்திருந்தா, இந்நேரம் கல்யாணமாகி, பெரிய குடும்பம் இருந்திருக்கும். அவனைப் போய்ப் பாருங்க. ஒவ்வொருநாள் காலையிலயும் ஆத்தங்கரையிலதான் சந்தியாவந்தனம் செய்யறான். அதுக்கப்புறம் நடை. என்ன உடம்பு! என்ன உறுதி!”

”மூணு பேரையும் கல்யாணம் செய்ய ஒத்துப்பானா?”

”அதை நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க.”

மூங்கில்தோப்புக்கருகில் இருளோவென்றிருந்தது. குன்றிமணிப் புதர்கள் மேல் மின்மினிப்பூச்சிகள் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தன. காட்டிலிருந்து சப்தபர்ணிப்பூக்களின் வாசம் கசிந்துவந்தது.

திலோத்தமாவுக்கு இரவு நீண்ட நேரம் கழித்து விஷயம் தெரியவந்தது. அற்றங்கரையிலிருக்கும் மூங்கில் தோப்புக்குப் பின்னே நிலவெழுந்து கொண்டிருந்தது. தங்கை பிலுவைக் கூப்பிட்டு, “ஏய், பெளடி உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?” என்று கேட்டாள்.

”கல்யாணத்தைப் பத்திதானே? ஓ! சொன்னாளே!”

”ச்சீ, வெட்கங்கெட்டவளே! உன் கல்யாணத்தைப் பத்தியே கூச்சமில்லாமப் பேசறியா?”

“இதுல வெட்கப்பட என்ன இருக்கு? ஏதோ கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது மட்டும் ரொம்ப கெளரவமான விஷயம் மாதிரி!”

“நாம மூணு பேருக்கும் ஒரே கோடாலியில வெட்டு!”

“ஆமா.”

“அதுல உனக்கு சம்மதமா?”

”உண்மைச் சொல்லப்போனா, விதிப்படி என்ன நடக்குமோ நடக்கட்டும்னு விட்டுட்டேன்.”

“அதுவும் சரிதான். நிலுகிட்டயும் நாளைக்குக் கேட்கனும்.”

”அவ என்ன சொல்லப்போறா? அவதான் சின்னவ. நாம என்ன செய்யறமோ அதுதான் அவளும் செய்யப்போறா.”

திலு மொட்டைமாடியில் உட்கார்ந்து நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு முப்பது வயதாகிவிட்டது. அவளைப் பொருத்தவரையில், கல்யாணம், கணவன் எல்லாம் நிறைவேறாத கனவு. இப்போது அவளால் நம்பமுடியவில்லை. அவளுக்கு உண்மையாலுமே கல்யாணமாகப் போகிறதா? அவள் கணவன் வீட்டுக்குப் போகப் போகிறாளா? தங்கச்சிகளோடா? சரி, அதனால் என்ன? ‘குலின்’ குடும்பங்களில் இது சகஜம்தான். சந்த்ரா-காகாவின் அப்பாவுக்குப் பதினேழு மனைவிகளிருந்தார்களாம். உயர்ந்த ஜாதி பிராமண சமுதாயத்தில் இது நடக்கக் கூடிய விஷயம்தான். தாதா ஏற்கனவே நாள் பார்த்துவிட்டாரா? மாப்பிள்ளைக்கு ஐம்பது வயதாம். அதனாலென்ன, இவளும் இளங்குமரி இல்லையே.

அவளுக்கிருந்த உற்சாகத்தில் உறக்கமே வரவில்லை. கொசுக்களின் ரீங்காரத்தில் காடும் விழுத்திருந்தது.

திலு இதையெல்லாம் நினைத்தபடி அர்த்தராத்திரியில் மொட்டைமாடியில் உட்கார்ந்திருக்கையில், நாலு பால் மொல்லாஹாத்தி சந்தையிலிருந்து திரும்பிவந்து, கணக்குகளைத் தீர்த்து, சமைத்து, சாப்பிட்டு, படுக்கைக்குச் சென்றான்.

அவனுக்கு ஒரு யோசனை உதித்தது.

அவனுக்கு வியாபார நுணுக்கங்கள் மிக நன்றாகக் கை வந்ததை அவன் புரிந்துகொண்டான்! அன்று அவன் வெற்றிலை – பாக்கு ஏழு ரூபாய் – ஒன்பது அணாவுக்கு விற்றிருந்தான். அன்று அவன் செய்த செலவெல்லாம் – இரண்டரை சேர் அரிசி இரண்டணாவுக்கு வாங்கியதும், ஒரு பாவு கைரா மீன் இரண்டு பைசாவுக்கு வாங்கியதும்தான். அவன் இரண்டு சேர் மீன் வாங்கவேண்டுமென்று நினைத்தாலும், அவ்வளவு மீனை சமைக்கும் அளவுக்குக் கைவசம் எண்ணெய் இல்லை. சந்தையில் கடுகெண்ணெய்க்குத் தட்டுப்பாடு நிலவியது. ஒரு சேருக்கு மூன்றணாவாக இருந்தது, இப்போது பதினான்கு பைசாவாகிவிட்டது. எப்படி எண்ணெய் வாங்க முடியும்?

அவன் கைவசமிருக்கும் மூலத்தைப் பெருக்க வேண்டும். வெற்றிலை வியாபாரம் மட்டும் போதாது. அவன் துணி வியாபாரமும் செய்ய வேண்டும். அவனுடைய நண்பன் முகுந்தா டேய் அதைக்குறித்துச் சொல்லியிருந்தான். கையில் முப்பது ரூபாய் சேர்ந்ததும், அவன் துணி வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவான்.

நாலுவால் தூங்க முடியவில்லை. இப்போதைக்கு அவன் மாமாவை நம்பியிருக்கும் நிலையிலிருந்தாவது முன்னேறிவிட்டான். தினமும் அத்தையின் ஏச்சைக் கேட்டுக்கொண்டு சாப்பிடும் சிறு பிள்ளையும் கிடையாது. அவனுக்கு உற்சாகமும், லட்சிய வீரியமும் பீரிட்டுக்கொண்டு வந்தது. நிலவெரியும் அந்த ராத்திரியில், சுற்றிலும் சிள்வண்டுகள் கத்திக்கொண்டிருக்கையில், அவனுக்குத் தன் வாழ்க்கைப்பாதை முழுக்கக் கிட்டத்தட்டத் தெரிந்தது.

டுத்தநாள் ராஜாராம் குதிரை மேலேறி இண்டிகோ தோட்டத்துக்குப் போனார். சாலையின் இருபுறமும் நல்ல நிழல்தரும் பசுமையான மரங்களிருந்தன. வெள்ளை அத்தி மரங்களிலிருந்து பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனி மாதக் கடைசியாக இருந்தாலும், கொன்றை மரங்களில் ஏராளமான மலர்கள் இன்னும் மிச்சமிருந்தன.

இண்டிகோ தோட்டத்து வீடுகள் இச்சாமதி நதியின் கரையிலிருந்தன. தூண்களோடிருந்த பெரிய வீடு ஷிப்டன் சாஹிபுடையது. ராஜாராம் பெரிய வீட்டுக்கு கொஞ்ச தூராம் முன்னரே, குதிரையிலிருந்து இறங்கி, குதிரையை காஸுவரினா மரத்தில் கட்டிவிட்டு நடந்து சென்றார். வீட்டை நெருங்கி எல்லா பக்கமும் ஜாக்கிரதையாகச் சுற்றிப் பார்த்தார். பிறகு, காலணியைக் கழற்றுவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தார்.

அங்கே இன்னொரு வெள்ளைக்கார சாஹிப், ஷிப்டனுடமும், அவர் மனைவியுடனும் உட்கார்ந்திருந்தார். ஷிப்டன் அவரை அழைத்து, “இங்கே பார் க்ராண்ட், இதுதான் நம் தீவான் ராய்.”

அந்த இன்னொரு வெள்ளைக்காரர் புதிதாக அங்கே வந்து சேர்ந்த சாஹிப். உயரமாக, மையமான உடல்வாகுடன், முப்பது-முப்பத்தைந்து வயதில், கிறுஸ்துவ பாதிரிமார்கள் போல அகண்ட கழுத்துப்பட்டைச் சட்டையை அணிந்திருந்தார். அவர் பெயர் கோல்ஸ்வொர்த்தி க்ராண்ட் (Colesworthy Grant). அவர் இந்தியப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் ஒரு சித்திரக்கலைஞர், எழுத்தாளர்.  தற்சமயம் வங்காள கிராமங்களைக் குறித்து ஒரு புத்தகம் எழுதுவதில் ஈடுபட்டிருந்தார்.  ராஜாராமைப் பார்த்துப் புன்னகைத்தார். ”ஓ! இவர் ஒரு பெங்காலி ஆளுக்கான பொருத்தமான மாதிரியாக இருப்பார். அதிலும் அவர் டர்பன்…”

ஷிப்டன் அதைத் திருத்தினார். “அது டர்பன் இல்லை, ஷம்லா.”

”ஓ! எனக்கு ஒருக்காலும் இதிலெல்லாம் வித்தியாசம் தெரியப்போவதில்லை.”

“ஏன் முடியாது? அவனுடை டர்பனும், முரட்டுத்தனமும் கொஞ்சம் இருந்தால்…”

” என் கண்ணுக்குத் தெரியும் வரையே மனித சுபாவத்தை நம்புகிறேன். அதற்கு மேல் ஒன்றுமில்லை.”

”அது சரி, அது சரி, உன் விருப்பம்.”

திருமதி ஷிப்டன், “நீங்கள் இருவரும் சண்டை போடுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை. இருவருமே பொல்லாதவர்கள்!” என்றாள்.

மிஸ்டர்  க்ராண்ட் சிரித்துக்கொண்டே, “என்னை மன்னிக்கவும் மேடம்!” என்றார்.

பாஜா முச்சியின் அண்ணன் ஸ்ரீராம் முச்சி, எல்லோருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தார்.  வெள்ளைக்கார சாஹிப் வீட்டில் இப்படி எடுபிடி வேலை செய்பவர்களெல்லாம் முச்சி, பாக்டி போன்ற கீழ் ஜாதியாகக் கருதப்பட்ட ஹிந்துக்கள்தான். அவர்களில் ஒரு சில முஸ்லிம்களும் இருந்தார்கள். குதிரைக்காரன் மாதெர் மண்டல் அவர்களில் ஒருவன்.

ராஜாராம் இன்னும் அங்கே வியர்த்துப்போய் நின்றிருந்தார். ஷிப்டன் உடைந்த பெங்காலிக்குத் தாவி, “நீ இப்போ போலாம். இவன் உன்னை ஓவியமா வரையனுமாம். நீ அதுக்கு சம்மதிக்கனும்”, என்றார்.

”ஆகட்டும் ஹுஸூர்.”

”அப்படியே கணக்குவழக்குகளையெல்லாம் பார்த்துவை.”

சற்றுநேரம் கழித்து, ராஜாராம் அலுவல் காரியமாக இருந்தபோது, ஸ்ரீராம் முச்சி அவரிடம் வந்து, “ராய் மஷாய், அவங்க உங்களைக் கூப்பிடறாங்க. அந்தப் புது ஸாஹிப் உங்களை வரையப் போறாராம். அந்த ‘பிலிட்டி’ மரத்துக்குக் கீழ, இந்த வெயில்ல அவரு என்னவெல்லாம் எடுத்து வச்சிருக்கார் பாருங்க. நல்ல கூத்து. ராய் மஷாய், பெரிய சாஹிப்கிட்ட சொல்லி எனக்கு இன்னொரு ரூபாய் ஜாஸ்தி குடுக்கச் சொல்லுங்க. நெல்லு விலையெல்லாம் ஏறிப்போச்சு. ஒரு ரூபாய்க்கு எட்டு காதா அரிசிதான் கிடைக்குது. அதுல ஜீவனம் நடத்த முடியாது.”

”சரி, நான் அதைப் பார்த்துக்கறேன். அதைப் பத்தி டேவிட் சாஹிப்கிட்ட பேசனும். பெரிய சாஹிப்கிட்ட இல்லை.”

ராஜாராம் கூச்சப்பட்டுக்கொண்டே, ‘பிலிட்டி’ மரத்துக்குக் கீழே நின்றிருந்தார். அந்த மரம் இந்தியன் கார்க் (மரமல்லி) மரம். இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னால், ஷிப்டனுக்கு முன்னால் இருந்த சாஹிப் –   பாட்னா ஜில்லாவின் நாராங்கர் இண்டிகோ தோட்டத்தின் முதல் மானேஜர் – ஆசையாக நட்டுவைத்த மரம். இப்போது அது பெரியதாக வளர்ந்து ஆற்றின் மேல் கிளைகளை நீட்டிச் சாய்ந்திருக்கிறார். இந்தப் பக்கங்களில் அது அரிய மரமாகையால், ‘பிலிட்டி’ (அந்நிய) மரம் என்றழைக்கப்படுகிறது.

ராஜாராம் பிலிட்டி மரத்தின் கீழ் நின்றிருந்தார். என்ன கூத்து! என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறார்கள்? மரத்தின் கீழேயிருந்து அங்கே என்னவோ தொங்குகிறதே? ராஜாராமுக்கு சிரிப்பு வந்தாலும், ஷிப்டன் ஸாஹிப்பின் மனைவி மேம்ஸாஹிப் இருந்ததால் அடக்கிக்கொண்டிருந்தார். இந்த அம்மாள் ஏன் இங்கே வந்திருக்கிறாள்? என்ன கஷ்டம்!

கோல்ஸ்வொர்த்தி க்ராண்ட் ஒரு கலர் பென்ஸிலை எடுத்துக்கொண்டு, ஓவியச்சீலைப் பக்கம் சென்று என்னவோ பார்த்தார். பிறகு மேம்ஸாஹிபிடம், “அவரை ஒரு பத்து நிமிடம் நேராக, அசையாமல் நிற்கச் சொல்கிறீர்களா?” என்றார்.

மேம்ஸாஹிப், “நேரா நில்லுங்க, தீவான்!” என்று கட்டளையிட்டாள்.

”சரி, ஹுஸூர்.”

ராஜாராம் மன்னிப்புக்கோரும் பாவனையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்க முயன்றார். க்ராண்ட் ஸாஹிப் அவருடைய பாஷையில், “உங்கள் தீவான், மிகவும் நாடகத்தனமாக நிற்கிறார். கொஞ்சம் இயல்பாக நிற்கச் சொல்ல முடியாதா?”என்றார்.

மேம்ஸாஹிப் தீவானிடம், “அவ்வளவு விறைப்பா இல்லை தீவான். நெஞ்சை சரி பண்ணுங்க.” என்றாள்.

ராஜாராமுக்கு அவளுடைய விநோதமான பெங்காலி புரியவில்லை. அதனால் நெஞ்சை இன்னும் நிமிர்த்தி வெளியே தள்ளினார். கிட்டத்தட்ட வில் போல வளைந்திருந்தார்.

க்ராண்ட் ஸாஹிப் வாய்விட்டுச் சிரித்து, “அடடா! அப்படியில்லை மனிதனே. இப்படி…” என்று ராஜாராமிடம் சென்று நெஞ்சைக் கைவைத்துத் தள்ளி, இயல்பாக்கினார்.

“I hope to goodness, he will stick to this! God’s death!” என்றார்.

உடனே மேம்ஸாஹிப்பிடம் திரும்பி, “சற்றுமுன் நான் சொன்ன என் வார்த்தைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன் மேடம்” என்றார்.

மேம்ஸாஹிப் புன்னகைத்து, “Oh, you wicked man!” என்றாள்.

ராஜாராம் இந்த முறை சரியாக நின்றார். ”ஓவிய ஸாஹிப்” அந்த அம்மாள் முன்னால் ரொம்பவும் அலட்டிக்கொள்கிறார். அதுவும் ராஜாராமைத் தொட்டுவிட்டார் வேறு! ராஜாராம் இப்போது குளிக்க வேண்டும். இந்த வெள்ளைக்காரர்கள் சுத்தபத்தமாக இருப்பதில்லை, கண்டதையும் தின்கிறார்கள். குளிக்காமல் ராஜாராமால் இன்று வீட்டுக்குள் நுழைய முடியாது.

ஒரு மணி நேரம் கழித்து அவரை விடுவித்தார்கள். அடேயப்பா! அந்த ஸாஹிப் பிரமாதமாக வரைந்திருக்கிறார். அவர் நேரில் நிற்பதைப் போலவே வரைந்திருக்கிறார். ஆனால் முகமும், கண்களும் இன்னும் முற்றுப்பெறவில்லை. சாயந்திரம் அவரை மீண்டும் வரச் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் அவரைத் தொடாமலிருந்தால் நல்லது. சாயந்திரம் திரும்பவும் இன்னொரு முறை அவர் குளிக்க விரும்பவில்லை.

தொடரும்

  1. புலிநகக்கொன்றை –  கல்யாண முருங்கை மரம் – Erythrina Variegata – Coral Tree plant – Tiger Claw tree
  2.  அவுரித்தோட்டம் – இண்டிகோ தோட்டம் – Indigo Plant
  3. டாம் டாம் – குதிரை வண்டி
  4. தாதா – அண்ணா
  5. காகா – மாமா போன்ற உறவுமுறைப் பெயர்
  6. குலின் – பிராமணர்களுக்குள்ளேயே உயர்ந்த பிரிவு. இந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்குப் பல பெண்களைத் திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது.
  7. பெளடி – அண்ணன் மனைவி
  8. க்ராண்ட் – Grant

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.