கைமணியின் கிணுகிணு ஒலி உயர்கிறது. உச்சிகால தீபாராதனை நடக்கிறது போல. இடையீடாக, கோவில் முகப்பில் உள்ள ஆலாட்ச மணியும் ஒலிக்கிறது. நேர்த்திக்கடனை முன்னிட்டு யாரோ புதிதாகக் கொண்டுவந்து கட்டிய மணி. கோவிலின் பரிமாணத்துக்குப் பொருத்தமற்ற விகிதத்தில் பெரியது. கோங் கோங் கோங் என்று ஒலியலைகள் பொங்கிப் பிரவாகமெடுக்கின்றன. குன்றின் உச்சியாக இருக்கும் சிறு திடல் சட்டென்று மாபெரும் சமவெளியாக மாறுகிறது. ஓசைப் பிரளயம் நிரம்பிய சமவெளி.
அடுத்த கணம், சமவெளி ஒரு தொட்டியாகிறது. அதனுள் மணியோசை நிரம்பி, ததும்பி வழிகிறது. மழை நீர் மாதிரி, குன்றின் பக்கவாட்டுச் சரிவில் வழிந்தோடும் ஒலித் தாரைகள் வெறும் கண்ணுக்கே புலனாகிறதாக பிரமை தட்டியது.
ஆனால், ஒலியின் சங்கதி மட்டுமா அப்படி? நீர்ப்பரப்பின் மையத்தில் எழுந்து கரைநோக்கி மிதந்து கரைதொட்டதும் மாயமாகும் சிற்றலைகள் போல, வெயிலும் நினைவுகளும்கூட வளையம்வளையமாக அலையாடத்தான் செய்கின்றன…

சிவப்பிரகாஷ் வலதுபக்கம் திரும்பிப் பார்த்தான். இரண்டடி தள்ளி வழக்கமாய் சாமி உட்கார்ந்திருந்திருக்கும் இடம் காலியாய் இருந்தது. சாமி இவனை முகத்துக்குமுகம் பார்த்ததே கிடையாது – சீடனாக ஏற்றுக்கொண்ட முதல்நாளில் தவிர. தற்போது இங்கே இருந்திருந்தாலும் வேறுபக்கம் முகம் திருப்பி கவனம் பதித்திருக்கும் – அந்தப் பக்கம் வழிகிற ஒலியை உற்றுக் கேட்கிற மாதிரி.
அப்படித்தானா என்று வாய்விட்டுக் கேட்டுவிட முடியாது. சாமி கோபித்துக்கொள்ளவெல்லாம் செய்யாது; கேள்வியே காதில் விழாத மாதிரி, முகத்தில் உணர்ச்சி தெரியாமல் உட்கார்ந்திருக்கும். ’சொல்ல வேண்டியதைத்தான் நானே சொல்வேனே. எதற்கு வீணாகப் பிரயாசைப்படுகிறாய்?’ என்று அந்த மௌனத்துக்கு இவனாக அர்த்தம் ஏற்றிக்கொள்வான்.
சாமியிடம் வந்து சேர்ந்த புதிதில், தான் கேட்டது காதில் விழவில்லையோ என்ற சந்தேகத்தில் இன்னொரு முறை உரத்துக் கேட்பான். இரண்டாம் தடவை சொல்லாது; இவன்புறம் திரும்பவும் செய்யாது. எதிர்வினையே இல்லாத, பாறாங்கல் முகம். சிறுகச் சிறுகப் பழகிவிட்டது. தனக்குள்ளேயே உதித்து உதிர்ந்து மட்கும் கேள்விகள் பழகிவிட்டன. ஒரேயொரு முறை தோன்றியது:
ஒருவேளை, எந்தக் கேள்விக்குமே பதில் கிடையாதோ? அல்லது, பதில் சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் ஒரே விஷயம்தானோ? பதில் கிடைத்த மாத்திரத்தில் திருப்தியடைவது வெறும் அகந்தையின் சுபாவம்தானோ? குறிப்பான பதில் எதுவும் கிடைக்காதபோது அடிவாங்கிப் பம்முவதும் அதுவேதானோ? சாமியைப் பொறுத்தவரை, அது பதில் சொல்லும்போதும் அடி விழத்தானே செய்கிறது?… இப்படித்தான், ஒலியும் வெயிலும் நினைவுகளும் மட்டுமில்லை – கேள்விகளுமே அலையலையாய் எழுந்து அடங்குகிறவைதாம்…
சாமி தன்னியல்பாகக் காக்கும் மௌனத்துக்கு நாமாகப் பொருளேற்றி அவஸ்தைப்படுகிறோமோ என்றுகூட யோசித்திருக்கிறான். ஏனென்றால், இவனிடம்தான் சாமி அதிகம் பேசுவதில்லை – தரிசிக்க வரும் வேறு சிலரிடம் வாய் ஓயாமல் பேசும். சிலது புரியும். பலது புரியாது. கேட்பவர் முகக்குறிப்பிலும், புரிந்துகொண்ட மலர்ச்சி இருக்காது. அவர்களை முன்னால் அமர வைத்து தனக்குத்தானே பேசிக்கொள்கிறது சாமி என்று தோன்றும்.
இவனுடன் இருக்கும்போது மட்டும் கடுமையான மௌனத்தை அனுஷ்டிப்பது ஏன்? ஒருவேளை, சாமி இவனுக்குக் கடத்தித் தர முனைவதும் அந்த மௌனத்தைத்தானோ? கேள்வி கேட்பதைத் தவிர்ப்பது சிறுகச்சிறுகப் பழகிவிட்டால், கேள்விகளின் உற்பத்திஸ்தானம் தூர்ந்துவிடக் கூடுமோ? கேள்விகளும் பதில்களும் பிரயோசனமற்றவை என்று அறியக் கிடைக்குமோ? தவிர, அர்ப்பணிப்போடு உடன் இருக்கும் சீடனும், அவ்வப்போது வந்துபோகிறவர்களும் ஒன்றா? அவரோடு இருந்து இருந்து, இவனுமே எந்நேரமும் மௌனத்தில் அமிழ்ந்திருக்கப் பழகிவிடவில்லையா.
குன்றின் உடம்பெங்கும் மினுமினுத்த வெயிலின் பளபளப்பு இன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாய் இருக்கிற மாதிரித் தோன்றியது. ஆமாம், உள்ளுக்குள் நிசப்தம் நிறையும்போது, வெளியில் புலனாகும் அத்தனையுமே அதிக வீரியமும் காத்திரமும் கொள்ளத்தான் செய்கின்றன; நினைவுகளின் வேகமும்தான்.
மணிகள் ஓய்ந்துவிட்டன. சந்நிதியில் நின்ற நாலைந்துபேர் வெளியேறி வருகிறார்கள். கருவறையின் அழிக் கதவைப் பூசாரி இழுத்து மூடும் சப்தம். நாதாங்கியின் ஒலி உரத்துக் கேட்கிறது. தொடர்ந்து, அவரும் வெளியில் வருகிறார். நேரே இவனிடம் வந்து இரண்டு கதலிப்பழங்களைத் தந்துவிட்டுப் போகிறார்… அவர் போன பிறகும், ஊதுபத்தி, கற்பூரம், எரியும் திரியின் கருகல் மணம், புதுப் பூக்களின் சுகந்தம் என்று சந்நிதியிலிருந்து எழுந்த கலவையான மணம் சுற்றிச் சுற்றி வந்தது.
ஒரே நிமிடத்தில் தானும் குன்றும் மட்டும் மீந்துவிட்டதாகப் பட்டது சிவாவுக்கு. மரத்திலிருந்து இறங்கி வந்து நின்றிருந்த அணில், இவனையே ஓரிரு கணங்கள் உறுத்துப் பார்த்தது. பிறகு, முக்கியமான வேலை எதுவோ ஞாபகம் வந்துவிட்ட மாதிரி பரபரவென்று ஓடி எதிர் மரத்தில் ஏறியது. அத்தனை பருத்த உடம்புக்கு அத்தனை விசையும் துரிதமும் அதிகம்தான் – இவனுடைய வயசுக்குப் பொருத்தமில்லாத ததும்பல் மனசுக்குள் நிகழ்கிற மாதிரி.
கண்ணை அழுத்தி மூடினான். ஓடிய அணிலின் பிம்பம் இமைகளுக்குள் பத்திரமாக இருந்தது. திரும்பத் திரும்ப ஒரேவிதமாக ஓடி ஓடி ஒளிர்ந்தது. விழிகள் திறந்திருக்கும்போது பார்வையில் நிரம்பிய பிரத்தியட்ச உலகம், இமைகள் மூடியதும் யூகத்தில் நிறைவது சுவாரசியமாய் இருந்தது. நாலைந்து தடவை கண்களை மூடிமூடித் திறந்தான். ஓடும் அணிலின் சித்திரம் அகலாது மீந்திருந்தது.
விளையாட்டு போதுமென்று விழிகளை மலர்த்தியே வைத்திருந்தான். இப்போது அணிலின் பிம்பம், கூசும் வெளிச்சத்தின் குறுக்காக ஓடிக் கடக்கும் இருள் துணுக்காய் ஆனது. கொஞ்சநேரத்தில், முழுசாக மறைந்துவிட்டது. உச்சிவெயிலின் அழுத்தம் ஒரு இம்மி அதிகரித்துவிட்ட மாதிரி இருந்தது.
வழக்கமாய் எழும்பும் கேள்வி இப்போதும் எழுந்தது. ‘எப்போதாவது ஒருமுறை கண்ணை மூடித் திறக்கும்போது, இந்தக் குன்றில் இல்லாமல், தன் வீட்டின் நடு அறையில் உட்கார்ந்திருந்தால் என்ன ஆவோம்?!’ என்று கேட்டுக்கொண்டான். புன்னகை அரும்பியது.
அங்கேயும் வெளிச்சம் இருக்கும்; காட்சி இருக்கும்; பாத்திரங்களின் ஓசையும் சமையல் மணமும் இருக்கும். அத்தனையும் சேர்ந்து தான் இருக்குமிடத்தை உறுதிசெய்யும். தான் இருப்பதை உணர்ந்துகொள்வதற்கு என்னென்ன உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது என்று ஆச்சரியம் எழுந்தது. ஒருவேளை, இவை அத்தனையும் இல்லாவிட்டாலும், நான் இருப்பது எனக்குத் தெரியும்தானே!
ஆனாலும், இமை மூடுவதற்கு முன்னால் இருப்பதன் தொடர்ச்சியைக் காணாவிட்டால், ஒரு கணம் மனம் திடுக்குறத்தான் செய்யும்…
புன்னகை சிரிப்பாக மலர்ந்தது…
எங்கே போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போவதில்லை சாமி. இவனைக் கூட்டிப்போவதும் இல்லை. என்ன ஒரு வயிற்றெரிச்சல் என்றால், சாமியின் அருகில் இருக்கும்போது தாகம் பசி தூக்கம் எதுவும் அண்டாது. தனியே விட்டுவிட்டு அது கொஞ்சம் விலகிப் போய்விட்டால், தான் இருப்பது ஞாபகம் வந்துவிடும் உடம்புக்கு.
ஒரு தடவை, கொஞ்சம் அதிகமாகவே வந்துவிட்டது. வீட்டிலிருந்து வரும்போதே உடம்பில் ஒரு கதகதப்பு இருந்தது. உஷ்ணக் காற்று நிரம்பிய பலூன் மாதிரித் தன்னை உணர்ந்தான். பசியும் சேர்ந்துகொண்டது. பெரும்பாலும், காலையில் ஏதும் சாப்பிடாமல்தான் குன்றேறி வருவான்.
இதே மரத்தடித் திண்ணையில் சாமி அமர்ந்திருக்கும். திறந்த கண்களில் இவன் வருவதைக் கண்ட தடயமே இருக்காது. எதிரில் வருவது கண்ணாடித் தண்டு என்கிற மாதிரி இவனை ஊடுருவிப் பின்புறம் பாயும் பார்வை. ஆனால், சாமியைப் பார்த்தவுடன் தனக்குள் எதுவொ ஒன்று முழுசாக நிரம்பிவிடுவதைப் பரவசமாய் உணர்வான்.
அன்றைக்கு, வழக்கமான இடத்தில் சாமி இல்லை. வீட்டிலிருந்து கிளம்ப சற்று நேரமாகிவிட்டது. துவைப்பதற்கு ஏகப்பட்ட துணிகளைக் குவித்திருந்தாள் சித்தி. கசக்கிப் பிழிந்து காயப்போட்டு நிமிர்ந்தால், அவரைக்காய் குவிந்த முறத்தைக் கொண்டுவந்து முன்னால் வைக்கிறாள் – பொடிப்பொடியாய் நறுக்க வேண்டுமாம்…
வெயில் முற்றிய பின்னர்தான் வந்துசேர முடிந்தது. மரத்தடியில் படிந்திருந்த நிழல், இருட்டு மாதிரியே தெரிந்தது. திண்டில் அமர்ந்த மாத்திரத்தில் கண்ணைக் கிறக்கிவிட்டது. மண்மேடையை விட்டுக் கீழிறங்கி, நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டான். அயர்ந்திருப்பான் போல.
நெற்றியில் குளுமையாக ஏதோ படிந்தது. பதறி விழித்தான். சாலாச்சியக்கா. அவசரமாக எழுந்து அமர்ந்தான். தீபத் தட்டை நீட்டும்போது, பூசாரி விசாரிப்பார்:
என்னா, சாலாச்சி!
இப்படித்தான் பெயர் தெரியவந்தது. மற்றபடி, அவளிடம் யாரும் நின்று பேசிப் பார்த்ததில்லை.
சலசலக்கும் கொலுசு ஒலிக்க நடந்துவருவாள்; சந்நிதியை ஏழெட்டுத்தடவை சுற்றுவாள். கணநேரம்கூடத் தாமதியாமல் இறங்கிப் போய்விடுவாள். சாமி அளவுக்கே தனியாக இருப்பவள் என்று தோன்றியது, ஆரம்ப நாட்களில். அப்புறம், ஏகப்பட்ட ஏன்கள். அவ்வளவு பூ ஏன் வைத்துக்கொள்கிறாள்; தாண்டிப் போகும்போது அத்தனை மணம் ஏன் வீசுகிறாள்; ஏன் மாவுபோலப் பவுடரை அப்பிக்கொள்கிறாள்; எந்நேரமும் ஏன் வெற்றிலை சிவந்த உதட்டுடன் இருக்கிறாள்; அநாவசியமாய்ச் சிரித்துக்கொண்டே இருப்பது ஏன்?
ஊரின் பல பகுதிகளில், பலவிதமான ஆண்களோடு அவளைப் பார்த்திருக்கிறான். மதுரை போகும் பேருந்தின் ஜன்னலில் உட்கார்ந்திருந்தவளை இவன் உற்றுப் பார்த்ததைக் கவனித்துவிட்ட சேது விஷமமாகச் சிரித்தான்.
என்னாடா அப்பிடிப் பாக்குறே!
இல்லே, அந்தா ஜன்னலெ ஒட்டி ஒக்காந்துருக்குற அக்காவெ மலெக் கோயில்லெ நெறையவாட்டி பாத்துருக்கேன்…
என்னாது, அக்காவா?!
சேதுவின் குரலில் இவ்வளவு கேலி ஏன் என்று புரியாமல் நிமிர்ந்து பார்த்தான் சிவா.
அது பெரீய கேஸு… தெரியுமில்லே!
தான் சொல்வதன் பொருள் என்ன என்பதையும் விளக்கினான். அது நடந்து நாலைந்து வருடங்கள் போயிருக்கும்.
ஆனால், அதன் பிறகு, சாலாச்சியக்காவின்மீது கவனம் குறைந்து, அவளோடு இருக்கும் ஆண்மகன்கள்மீது பார்வை ஊன்றிப் பதியத் தொடங்கியது. ஒரு முகமாவது தூயதாகத் தென்படவில்லை. அவர்கள் முகத்திலேயே அப்படியொரு பாவம் இருக்கிறதா, அல்லது உள்த்தகவல் தெரிந்த மனத்துக்குத்தான் அப்படிப் படுகிறதா என்று புரியாமல் தவிப்பான்.
எப்படியோ, அதற்குப் பிறகு கோவில் வளாகத்தில் சாலாச்சியக்காவைப் பார்க்கும்போதெல்லாம் இவனுக்குள் ஒருவிதமான கனிவும் பச்சாதாபமும் ஊறும். இன்னதென்று புரியாத துக்கமும்தான்…
மூச்சுவிடும் ஓசை கேட்குமளவு அருகில் நின்றவள், திகைத்துப்போய் அமர்ந்திருந்தவனின் நெற்றியில் கை பதித்தாள்.
ஆத்தாடி. பிள்ளைக்கி என்னா இப்பிடிக் கொதிக்கிது…
என்று பதற்றமாய்ச் சொன்னாள்.
தரையில் அருகில் உட்கார்ந்து, கைகொடுத்து இவனைக் கிளப்பி, மாராப்பு சரியாக மூடாத நெஞ்சில் சாய்த்துக்கொண்டாள். ஓரிரு நிமிடம்தான். அவள் உடம்பிலிருந்து எழுந்த வியர்வைக் கவிச்சி பிடிக்கவும் இல்லை. பிடிக்காமலும் இல்லை. ஆனால், அந்த உடம்பின் மிருது மிகமிக வேண்டியிருந்தது… இதற்குள், பின்னாலிருந்து, வலுத்த செருமல் கேட்டது. வனமிருகத்தின் உறுமல் மாதிரி. சாமி!
ஓசைப்படாமல் வந்து நின்றிருந்தது; கையை உதறியது. சாலாச்சியக்கா விசுக்கென்று எழுந்துகொண்டாள். தலையைக் குனிந்தபடி மெல்ல நகர்ந்தாள். வந்த வேலை முடிந்துவிட்ட மாதிரி, வேகமாகப் படியிறங்கிக் கீழே போனாள்.
சாமி எதுவும் பேசாமல் நின்றது. பார்வையிலிருந்து சாலாச்சியக்கா மறைந்ததும் இவன் முகத்தைப் பார்த்தது, அபூர்வமாக. ஒரே கணம். ‘அதுதானே!’ என்கிற மாதிரித் தலையை அசைத்தபடி வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தது.
சிவப்பிரகாஷுக்குள் சாலாச்சியக்கா பதித்துவிட்டுப் போயிருந்த வசீகரமான துர்மணம் நீங்க மறுத்துச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைவிட, புதிய ஆச்சரியம் ஒன்று உயர்ந்து, லேசில் அடங்க மறுத்தது. சாதாரணமாகப் பெண்கள் வாசனை பட்டாலே உடம்புக்குள் விறைப்பேறி விடும். அதிலும், முத்துமீனாளையெல்லாம் நினைத்தாலே போதும்!
ஆனால், ஒரு பெண்மணியின் மார்மீது சாய்ந்திருக்கும்போதும் தனக்குள் எதுவுமே நடக்கவில்லையே. அப்படியானால், அந்த மிருது வேண்டியிருந்தது யாருக்கு? தனக்கு நிஜமாகவே காய்ச்சல்தான் அடிக்கிறதா.
அல்லது, அல்லது… சதா சர்வகாலமும் தன்னைப் பீடித்திருக்கும் கனவுப் பாதையில் நகரத் தொடங்கிவிட்டதன் அறிகுறியா!
கேள்விகள் அத்தனையும் எழுந்த வேகத்திலேயே அடங்கிவிட்டன. சலனமில்லாமல் பக்கத்தில் அமர்ந்திருந்த சாமியிடம் கவனம் அழுந்தியது.
கையிலிருந்த மஞ்சள்பையிலிருந்து ஒரு முழுத்தேங்காயை எடுத்து, மண் திட்டின் விளிம்பாக இருந்த கருங்கல்லில் ஓரிரு தடவை ஓங்கி மோதி உடைத்தது சாமி. பிறகு பைக்குள் துழாவி சிறு பேனாக் கத்தி எடுத்து தேங்காய்த் துண்டுகளைக் கீறிப் பிரித்தது. இன்னும் சிறு துண்டுகளாக்கி, காலிச் சிரட்டையில் நிரப்பி, இவனிடம் நீட்டியது. பிறகு, தனக்கொரு முழுத் தேங்காய். ஒவ்வொரு துண்டாக வாய்க்குள் மசிந்து வயிற்றுக்குள் நிரம்ப நிரம்ப, வேறு ஏதோ ஒன்றும் நிரம்புவதை உணர்ந்தான் சிவா.
வயிற்றின் பொருமல் முற்றாக அடங்கியதும், சாமியைத் திரும்பிப் பார்த்தான். அமர்ந்த நிலையில், கண்ணை மூடி உறங்கும் பாவனை. அழுத்தமான வெற்றிலை வாசனை. மூச்சு சீராக ஒலித்தது அந்தத் திக்கிலிருந்து. அவ்வளவுதான், இருவரும் அவரவர் நிலைக்குள் மூழ்கி, அவரவர் மௌனத்துக்குத் திரும்பிவிட்டார்கள்.
மணிக்கணக்காக இப்படி அமர்ந்துவிட்டு வீடு திரும்பிப் போகும்போது, சில நேரம், சிந்தை பிறாண்ட ஆரம்பிக்கும். மறுவார்த்தை பேசாத, வாலையும் ஆட்டாத வளர்ப்பு நாய்போல சாமியின் காலடியில் மடித்துக் கிடந்த அதே சிந்தைதான். ஏன் இப்படி இரட்டைத் தாளம்; இரண்டில் எது நிஜம் எது பாவனை என்று யோசனை அல்லாடும். எந்தப் பலன் கருதி அப்படி அடிமைபோலக் கிடந்தோம்? சரி, போகட்டும், சாமி எஜமானன்போல நடந்துகொள்வதில்லையே என்று தானே ஒரு சமாதானமும் கண்டுபிடித்துக்கொள்ளும்.
கனவுப் பாதையைப் பற்றிய கேள்வி, இரண்டுநாள் நீடித்தது. பிறகு தானே அடங்கவும் செய்தது. ஏதோ வாங்கிச் செல்வதற்காக வீட்டுக்குள் வந்த முத்துமீனாளைப் பார்த்தபோது, பழைய உடம்பேதான் மீந்திருக்கிறது என்று நிரூபணமாகிவிட்டது. அதே குறுகுறுப்பும் பரபரப்பும் உடம்பிலும் மனத்திலும் ஊறின. ஆக, முத்துமீனாள் முத்துமீனாள்தான்; சாலாச்சியக்கா சாலாச்சியக்காதான். பார்வைக்கும் கீழே இருந்து வேறொன்று பார்த்துக்கொண்டிருக்கிறது – ரகசியமாக.
மீனாளை அழகி என்று சொல்வதற்கில்லை. ஆனால், ருதுவானபிறகு பூரிக்கத் தொடங்கியவள், மெல்லமெல்லக் கண்ணுக்குள் நிரம்ப ஆரம்பித்தாள். அதே விகிதத்தில் மனத்திலும் நிரம்பி வந்தாள். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு; குழந்தைப் பிராயத்திலிருந்து சரளமாகப் பேசியும் சேர்ந்து விளையாடியும் வந்தவள், சீரான இடைவெளி காக்கத் தொடங்கியது… அவள் விலக விலக, ஈர்ப்பு அதிகமாவதன் தர்க்கம் கொஞ்சம்கூடப் பிடிபடவில்லை.
அபூர்வமாகப் பேச வாய்க்கும் ஓரிரு சந்தர்ப்பங்களில், அவள் காது இவன் புறமும், பார்வை தரையை நோக்கியும் இருக்கும். லேசாய் அதைத்த கன்னத்தின் விளிம்பில், காது மடலையொட்டி, கிருதாபோல அடர்த்தியாக இறங்கும் முடிச்சுருள், உள்ளூர தகிப்பைக் கிளப்பும். எதிர்பாராத கணத்தில் இவனைக் கண்ணுக்குக் கண் பார்த்து லேசாகச் சிரிப்பாள். இவனுக்கு மட்டுமேயானது என்று படுகிறமாதிரி, ஒரு விசேஷ அர்த்தம் அவள் பார்வையில் பொதிந்திருப்பதாய்த் தோன்றும். அதாவது, தனக்கு அப்படித் தோன்றுகிறது என்று நினைத்துக்கொள்வான்…
முத்துமீனாள் சிவாவுக்குத்தான் என்று ஏற்கனவே பெரியவர்கள் மட்டத்தில் பேசி முடித்திருந்தார்கள். இவன் படிப்பை முடித்து சொந்த சம்பாத்தியம் தொடங்கட்டும் என்று காத்திருக்கிறார்கள்.
ருதுவான பிறகு, விலக்கம் மட்டும் வரவில்லை; இவனைப் பார்க்கும்போதெல்லாம் கூடுதலாக வெட்கமும் காட்டுகிறாள் என்று தோன்றும். தாண்டிப் போகும்போது அவளுடைய முகமும் உடலும் கோணுவதைப் பார்க்க வேடிக்கையாய் இருக்கும். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆவலும், அது தவறோ என்று குற்றவுணர்வும் ஒரே சமயத்தில் பெருக்கெடுக்கும். இருந்தாலும், தனியாய் இருக்கும் வேளைகளில் அந்தக் கோணல் வகிடு பெரும் இம்சை செய்யும்.
தற்சமயம் இருக்கும் பயிற்சிகளுக்கும், கனவுகளுக்கும் மணவாழ்க்கை சரிப்பட்டு வருமா என்பதும் குழப்பம்தான். ஆனாலும், முத்துமீனாள் எதிரில் வரும்போது, மனத்தின் இன்னொரு பகுதி சட்டென்று விழித்துக்கொண்டுவிடுகிறது. அவளைத் தன் உடம்பின் பகுதியாகவே உணரவைப்பது எது என்பதும் குழப்பமாய்த்தான் இருக்கிறது…
பெண்கள் பற்றியும், அவர்களுடன் நெருங்கி இருப்பது பற்றியும் விரிவாக ஒருநாள் வம்பு பேசித் தீர்த்தான் சேது. இவன் அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.
ஏண்டா சிவா, இம்புட்டுப் பேசுறேன். ஒனக்கெல்லாம் எளும்பவே எளும்பாதாடா!
என்று வியப்போடு கேட்டான். இவன் பதில் சொல்லாமல் சிரித்தான்.
அந்த வார இறுதியில் சாமியைப் பார்க்கப் போனபோது, யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தது. உரத்த குரல். அவ்வப்போது சிரிப்பு. அநேகமாக, சாமி மௌனமாக இருந்து மட்டுமே பார்த்திருக்கிறானா, அவர்கள் உரையாடுவதையும் அதன் சாரத்தையும் விட்டு கவனத்தை அகற்றவே முடியவில்லை. அது சாமிதானா, அந்த உருவத்தில் அமர்ந்திருக்கும் வேறொருவரா என்றே ஆச்சரியம் பொங்கியது. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த சாமி, திடீரென்று இன்னும் உரத்துச் சொன்னது:
அதெல்லாம் ஒண்ணுக்குப் போம்போது வெளியேறிரும். அப்ப மூத்தர நாத்தமே வேறெ மாதிரி இருக்கும். அவ்வளவுதான்.
சேது தன்னிடம் பேசியதும், தனக்குள் எழுந்த ஐயங்களும் சாமிக்குத் தெரிந்திருக்குமோ என்று தோன்றியது. அருகில் இல்லாதபோதும் சாமி தன்னைக் கண்காணித்துக்கொண்டேதான் இருக்கிறதோ… முதன்முறையாக சாமியைப் பற்றி மெல்லிய அச்சம் தலைதூக்கியது. ஆனாலும், அந்தக் கேள்வி உதிக்கத்தான் செய்தது:
அது சரி சாமி, ஒடம்புலெ ஊறுனது வெளியே போயிரும். மனசுல சதா ஊறிக்கிட்டே இருக்குறது?
வழக்கம்போலவே, சாமியிடம் கேட்கவில்லை.
சாமியும், இவன் ஒரு ஆள் எதிரில் இருப்பதையே கவனிக்காத மாதிரி, வந்தவரோடு குன்றிறங்கிப் போய்விட்டது…
ஆரம்பத்திலேயே தெளிவாகவும் கண்டிப்பாகவும் சொல்லியிருக்கிறது – ‘அது, இது’ என்றுதான் குறிப்பிட வேண்டும்; அவர், இவர்’ என்று சொல்லக்கூடாது’. இவனிடம் நேருக்குநேர் பேசிய அபூர்வ சந்தர்ப்பம் அது. அப்போதும்கூட, இவன் முகத்தைப் பார்க்கவில்லை; வெட்டவெளியை வெறித்தபடி சொன்னது. எதிரில் பரந்திருக்கும் வெற்றிடம் ஒரு முழுமையான, உயிருள்ள, மனிதப் பிராணியோ என்று வியப்புத் தட்டியது சிவாவுக்கு.
இது வெறும் உடம்பு. உசிருக்குத்தான் மரியாதையெல்லாம். செத்துப்போனவனெ வாங்க போங்கன்னு பேசுவியா நீயி?
மேற்கொண்டு ஏதோ சொல்லும் என்று காத்திருந்தான். சாமி அமைதியாகிவிட்டது. அதற்காக, அடுத்த வாக்கியம் இல்லாமல் போகவில்லை. நாலைந்து மாதம் கழித்து, யாரோ ஒரு பெரிய மனிதர் வந்திருந்தார். அவரிடம் சொன்னது சாமி:
உசிருக்கு, தானா இருக்க மட்டும்தான் தெரியும். மிச்சபடி, தான் இருக்குறதே தெரியாது. பெறகு, நீ அதெ மதிச்சா என்னா, மதிக்காட்டி என்னா!?
தனக்கும் சேர்த்துத்தான் சொல்வதாகக் கற்பித்துக்கொண்டான் சிவா. இதுவாவது பரவாயில்லை; இன்னொன்றும் சொன்னது: ‘நீங்க, போங்க, வாங்க’ என்று பேசக்கூடாதாம். எதிரிலிருப்பவரை விளிக்காமல் எப்படிப் பேசுவது!
இங்கெ இருக்குறது ஒரு ஒடம்புதானே. நாலஞ்சுபேரா இருக்காக!
கேலியாகக் கேட்டுப் புன்னகைத்தது. ஆமாம், எத்தனை சின்னக் குழந்தை வந்தாலும் ‘போ சாமி, வா சாமி’ என்றுதான் சாமி பேசும். தன்னையும் ‘சாமீ’ என்றுதான் கூப்பிடவேண்டும் என்று கறாராகச் சொல்லும்.
உசிரெவுடப் பெரிய சாமி இருக்காக்கும்!
என்று சிரிக்கும்.
நீ எங்கிட்டெப் பேசுறதே, என் உசிரோட பேசுறதுதான். ஒடம்பு என்னா செய்யும்? காதாலெ கேக்கும். அவ்வளவுதான். காதுக்கா அர்த்தம் புரியிது!
தொடர்ந்து சிரித்தது. சாமி சிரிப்பதே அபூர்வம்தான்!
இப்படித்தான், இவனுக்குள் ஊறும் எந்தக் கேள்விக்கும் அவ்வப்போதே பதில் கிடைக்காது. பார்க்க வரும் யாரிடமாவது சாமி பேசுவதைக் கூர்ந்து கவனித்து எடுத்துக்கொள்ள வேண்டும்; பள்ளிக்கூடக் கேள்வித்தாளில் இருக்கும் ‘பொருத்துக’ பயிற்சி மாதிரி, இவனாகக் கேள்விகளையும் பதில்களையும் பொருத்திக்கொள்வான். சிலசமயம் பதில்களிலிருந்து கேள்வி உதிப்பதும் உண்டு…
ரங்க சமுத்திரத்தில் இன்னொரு சாமியார் அறிமுகம் கிடைத்தது – இந்தச் சாமியிடம் வந்து சேர்வதற்கு முன்னால். கொஞ்சநாள் போகவர இருந்தான். அத்தைக்கு அதில் கொஞ்சமும் சம்மதமில்லை. சித்திக்கானால், இவன் அந்த ஊருக்குப் போனதிலேயே சம்மதமில்லை. .
மூணு பிள்ளைகளெ வச்சிக்கிட்டு இங்கெ நா ஒருத்தி தட்டுக்கெடுறது எனக்குல்ல தெரியிம்?
என்று முறுமுறுத்தாள்.
சித்தியை முன்னிட்டுத்தான் அக்காவைப் பதினெட்டு முடிவதற்குள்ளேயே கல்யாணம் செய்துகொடுத்து வீட்டைவிட்டு அனுப்பினார் அப்பா. கல்யாணத்துக்கு முன்பேகூட, சமையலறைக்கும் ஆட்டுரலுக்கும் துடைப்பத்துக்கும் வாழ்க்கைப்பட்டு இருந்தவள்தான் அக்கா. புருஷன் வீட்டில், இங்கே பார்த்ததில் பாதி வேலை பார்த்தே மிகப் பிரமாதமான பெயர் எடுத்துவிட்டாள். ஆளும் கொஞ்சம் சதைபோட்டு, முகம் மலர்ந்துவிட்டாள். சிலபேருக்கு, கல்யாணம் மூலமாகக்கூட விமோசனம் கிடைக்கும் போலிருக்கிறது…
சித்திக்கு மனசேயில்லாவிட்டாலும், பெரிய அத்தை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போனாள் இவனை. அப்பாவுக்கும் மூத்தவள் என்பதால், இந்தக் குடும்பத்திலும் அவள் சொல்லை யாரும் தட்ட முடியாது. தம்பி வீட்டுக்கு வந்த இடத்தில் என்னத்தைக் கவனித்தாளோ, அல்லது அப்பாவேதான் என்னத்தையாவது சொல்லிவைத்திருந்தாரோ… ஒற்றைக்காலில் நின்று இவனைக் கூட்டிப்போய்விட்டாள்…
இல்லாவிட்டாலும், மருமகனிடம் தனிப் பிரியம் அத்தைக்கு. ஐந்து வயதுக் குழந்தையை நிர்க்கதியாய் நிறுத்திவிட்டுத் தாயார் காலமானதுவும், தம்பி இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டதுவும் அத்தையின் பிரியத்தைப் பலமடங்கு அதிகமாக்கிவிட்டது.
கோடை விடுமுறையின் ஆரம்பத்திலேயே அந்தச் சாமியாருடன் பரிச்சயம் உண்டானது. அவர் வைத்தியரும்கூட. ஊருக்குள் மிக நல்ல மதிப்பைச் சம்பாதித்திருந்தார். சரும நோய்களைத் தீர்ப்பதில் பெரும் பெயர் எடுத்தவர். அத்தைக்கு முன்னங்கைகளில் வங்கு பிடித்து, சதா சொறிந்தவாறிருப்பாள். அவளோடு போன சந்தர்ப்பத்தில்தான் இவனைப் பற்றி விசாரித்தார்.
தினசரி சாயங்காலம் அவருடைய தோட்டத்துக்குப் போவான். பச்சிலைகளைப் பிரித்துக்கொண்டோ, உலர வைத்தவற்றைக் கிளறிப் புரட்டிப்போட்டுக்கொண்டோ இருப்பார். இவனும் கூடமாட உதவுவான். மற்றவர்கள்தாம் அவரை வைத்தியர் என்பார்கள், அவர் சாமியார் என்றுதான் சொல்லிக்கொண்டார். காவியும் உடுத்தியிருப்பார். பெண்கள் பற்றி ஒரு கருத்துச் சொன்னார்:
பொம்பளைன்றது ஒரு கருவிதானப்பா. இட்லி அவிச்சுக் குடுக்குற கொப்பரெ மாதிரி. வேலெ முடிஞ்சவொடனே களுவிக் கவுத்திர வேண்டியதுதான். அதுக்கு மேப்பட்டு என்னென்ன தோணுனாலும் வெறும் மயக்கம்தான்!
மனைவிக்கு உடல் சுகமில்லை என்று கண்கலங்கச் சொல்லி, திருநீறு மந்திரித்து வாங்கிப்போக வந்திருந்தவரிடம் இப்படிச் சொன்னார். சீக்காளிப் பெண்பிள்ளை, அத்தையின் நெருங்கிய சிநேகிதிகளில் ஒருத்தி.
வீட்டுக்குத் திரும்புகிறான் – இட்லி அவித்து வைத்திருந்தாள் அத்தை. பெற்ற மகனைப்போல நடத்துகிற, குழந்தைப் பேறு வாய்க்காத, அத்தை. சாமியாரின் வாக்கியத்தை அவள்மீது பொருத்திப் பார்த்தான். பகீரென்றது. ஆதிசங்கரரும், பட்டினத்தடிகளும் தாயாரைப் பற்றிச் சொன்னதும் செய்ததும் பொய்யா.
அதை விடு, வேறுலகில் இருக்கும் அம்மாவும், ஊரில் இருக்கும் அக்காவும் இத்தனை பிரியமான அத்தையும் வெறும் இட்லிக்கொப்பரைகளா? அல்லது, மூச்சுவிட்டாலே கையை ஓங்கிக்கொண்டு வரும் சித்திதான் வெறும் மயக்கமா? இல்லை, காற்றுப்போல வருடித் திரியும் முத்துமீனாள் பொய்யா!
அத்தோடு அவரிடம் செல்வது நின்றுவிட்டது. மறுநாளிலிருந்து வீட்டிலேயே இருக்கிறானே என்று யாருமே விசாரிக்கவில்லை. நல்லது என்றுகூட அத்தை நினைத்திருக்கலாம்…
விடுமுறை முடிந்து கிளம்புவதற்கு முந்தின நாள் அத்தையின் சிநேகிதி இறந்தாள். செய்தி வந்ததும் பதறிக் கிளம்பினாள் அத்தை. ஓட்டமும் நடையுமாகப் போகிறவளுக்கு ஈடுகொடுத்து விரைவாய் நடக்கும்போதே, ‘பாத்தரம் நெரந்தரமாக் கவுந்துருச்சு’ என்று இவனுக்குள் ஒரு வாசகம் ஓடியது…
ஆனாலும் அந்தச் சாமியார் சம்பந்தமாக ஒரு கேள்வி-பதில் அழுத்தமாக நினைவில் பதிந்திருக்கிறது. பக்கத்து ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர், வைத்தியத்துக்காக வந்திருந்தார். இரண்டு சாதிகளுக்குள் தகராறு ஆரம்பித்து வெட்டு குத்து என்று நகர்ந்து ஒருவர் கொலையானதில் போய் முடிந்திருந்தது. போலிஸ்காரர்கள் படுத்திய பாட்டில், தலைவருக்கு ஒற்றைத்தலைவலி பீடித்து, அல்லும் பகலும் தூங்கவிடாமல் செய்தது. மருந்து வாங்கிக்கொண்ட பிறகு ஆதங்கமாய்க் கேட்டார்:
இவ்வளவு பெரச்சனெ இருக்குங்களே அய்யா, ஒங்களெ மாரிப் பெரியவுங்க மனசு வைச்சா இதெயெல்லாம் சரி செஞ்சுற முடியாதா!
அதுக்கு எங்களுக்கு அதிகாரமில்லெப்பூ. நாம்ப எல்லாருமே வேடிக்கெ பாக்க வந்தவுகதேன். எங்களெ மாரி ஆளுக கூடக்கொஞ்சம் கிட்டக்க இருந்து உத்துப் பாக்கலாம், அம்புட்டுத்தேன். கூத்துப் பாக்க வந்தவென் ‘நானுஞ் சேந்து ஆடுறேன்’னு எந்திரிச்சா, கூத்தாடுறவன் சரீம்பானா!
அத்தை மாதிரியில்லை, அக்காவும் அப்பாவும். கோவில், குளம், சாமியார்கள் என்றாலே இவன் ஆசையாய்க் கவனிப்பதையும், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சாமியார் சகவாசத்தில் ஈடுபடுவதையும் பற்றி சொந்தக்காரர்கள் யாராவது பிராது சொன்னால், பொருட்படுத்த மாட்டார்கள். இவனிடம் விசாரிக்கவும் மாட்டார்கள்.
ஒரேயொரு தடவை, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து அக்காவைக் கூட்டிக்கொண்டு வரப் போனான். புதிதாக சைக்கிள் ஓட்டப் பழகிய பெருமையும், தன்னைவிட ஆறு வயது பெரிய அக்காவைப் பின்னால் அமர்த்திக் கூட்டிவரும் பெருமிதமும் ததும்ப வந்து நின்றவனைப் பார்த்து அவள் முகம் மலரும் என்று எதிர்பார்த்தால், இவனையே உற்றுப் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை பேசாமல் சைக்கிளில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். வீடு இருக்கும் தெருவில் திரும்பியபிறகு ஒரேயொரு வாசகம் சொன்னாள்:
இன்னமே என்னையக் கூப்புட வந்தா இம்புட்டுத் துன்னாறு பூசாதடா தம்பி….
இவன் சரியென்றும் சொல்லவில்லை; ஏனென்றும் கேட்கவில்லை. சிவப்புக் கயிற்றில் கோத்து, மிகச் சரியாகத் தொண்டைக்குழியில் பதிந்திருக்கும் ஒற்றை ருத்திராட்சம் இருந்தால் பரவாயில்லையா என்று பதிலுக்கு விசாரிக்கவும் இல்லை. ஆமாம், இவனுக்கு மழலை முடியும்போதே, வாய் திறந்து பேசுவதும் நின்றுபோனது என்று அக்காவும் அப்பாவும் மற்றவர்களிடம் சொல்வார்கள் – பாதி கேலியும், மீதிப் பாதிக்கு அளவில்லாத பிரியமுமாக…
பின்னாளில், சாமியிடம் வந்து சேர்ந்தபோது இது உம்மென்று இருப்பது பெரிய சங்கடமாக இல்லை – இவனிடமே இருக்கும் சுபாவம்தானே.
செக்கெண்ணெய்ப் பாட்டன் ஒருமுறை கவலையாய்க் கேட்டார் தம்பி மகனிடம்::
என்னாடா ரங்கராசு, இந்தப் பய இப்பிடித் திரியிறான்?
அப்பா சாவதானமாக பதில் சொன்னார்:
நல்லாப் படிக்கிறான். ஒளுங்காப் பள்ளியோடம் போறான். அவுக சின்னாத்தா ஏவுறதுக்கெல்லாம் சடச்சிக்கிறாமெ ஓடியாறான். ஒளிஞ்ச நேரத்துலெ அவம் மனசுக்குப் பிடிச்சதெச் செய்யிறான். செஞ்சுட்டுப் போட்டுமே. இவென் வயசுக்காரங்ய மாரி பொம்பளெப் பிள்ளைய பின்னாடி சுத்துறானா; சினிமாக் கொட்டாய்க்கி ஓடுறானா!
உண்மையில், இவனுக்குள் ததும்பிக்கொண்டிருக்கும் கேள்விகளும் அவை உருவாக்கிய நிம்மதியின்மையும் பெற்றவருக்கோ மற்றவர்களுக்கோ தெரியாது. எட்டு வயதில், போயலைத்தாத்தா காலமான சமயத்திலேயே இது ஆரம்பித்துவிட்டது. ஆனால், அந்த வயதில் இது தெரியாது. ‘காலமாவது’ என்ற வார்த்தையேகூடத் தெரியாது. அந்த வயதில் புதிராக வந்து தொற்றிய சமாசாரமே வேறு…
குடும்பத்திடம் எட்டுத் தறிகள் இருந்தன. அவற்றை நம்பி ஏழெட்டுக் குடும்பங்களும் இருந்தன. தயாராகும் சரக்கை ஊர் ஊராகச் சென்று விநியோகித்து வருவது அப்பாவின் வேலை. அதே ஊர்களுக்கு ஒரு மாதம் கழித்து வசூலுக்குப் போவார் தாத்தா.
அலையுற வயசு தாண்டீருச்சு. செவனேன்னு வீட்லெ கெடங்க.
என்று பாட்டியும் அப்பாவும் திரும்பத்திரும்பச் சொன்னாலும் கேட்கமாட்டார்., ஊர்திரும்பிய அன்று ’திருப்புளியெ வச்சுக் கொடையிற மாரி இருக்கம்மா’ என்று புலம்பும் மாமனாரின் கால்களில் ஆரெஸ்பதி மருந்தையோ அமிர்தாஞ்சனத்தையோ தடவி அழுத்திப் பிடித்துவிடும் மருமகள் சொல்வதைக் காதிலேயே வாங்க மாட்டார்.
போயலைத் தாத்தா, அம்மா, பாட்டி என்று அவர்கள் விநோத வரிசையில் புறப்பட்டுப் போனார்கள் – அம்மா போய் ஒரே வருடத்தில் சித்தி வந்து சேர்ந்ததற்கே பாட்டியின் அனத்தல்தான் காரணம் என்று தன் கல்யாணத்துக்குப் பிறகு தாய்வீட்டுக்கு வந்த சமயத்தில் அக்கா இவனிடம் சொன்னாள்.
தாத்தா அபூர்வமான பிரியம் காட்டுகிற மனிதர். ஊருக்குக் கிளம்புகிற நேரத்தில் மகன் வெளியே போயிருந்தால், அவன் திரும்பும்வரை காத்திருந்து விடைபெற்றுக்கொண்டுதான் வெளியேறுவார். சிவா பள்ளிக்கூடம்விட்டு வரும்வரை காத்திருந்து, இரண்டு கன்னங்களிலும் நெற்றியிலும் முத்தம் வாங்கிக்கொண்டுதான் புறப்படுவார்.
அப்படிப்பட்ட தாத்தாதான், அன்றைக்கு அப்படிப் படுத்திருந்தார். அந்த நாளின் ஒவ்வொரு தருணமும் பசுமையாக நினைவிருக்கிறது. அன்றைக்கு இவன் சுமந்து திரிந்த கேள்விகளும்தான்.
பல் டாக்டரைப் பார்க்க மகன் போயிருந்த நேரத்தில், கிண்ணத்தில் நிரப்பிய வேர்க்கடலையை அக்காவும் தம்பியுமாகக் கொரித்துக்கொண்டிருந்த வேளையில், சமையலறையில் பாட்டியும் அம்மாவும் ஏதோ செய்துகொண்டிருக்கிறபோது, முன்னறையில் சாவகாசமாக உட்கார்ந்து, தினத்தந்தியைத் தரையில் விரித்து, காலையில் படிக்காமல் விடுபட்ட செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தவர்… திடீரென்று ’காமாச்சீஈஈஈ’ என்று கிரீச்சிட்டார்.
பாட்டியும் அம்மாவும் ஓடிவந்தார்கள். அக்கா அவசரமாய் எழுந்ததில் கிண்ணம் இடறி வேர்க்கடலை சிதறியது. தாத்தா நெஞ்சைப் பிடித்துக்கொண்டிருந்தார்.
என்னமோ செய்யிதுத்தா.
என்றவாறு கண்ணை மூடி, விரித்த தினத்தாளின்மேல் குப்புறச் சரிந்தார்.
ஆமாம், மகன் வரும்வரை காத்திராமலும், பக்கத்திலேயே இருந்த பேரனிடம் முத்தங்களைப் பெற்றுக்கொள்ளாமலும் புறப்பட்டுப் போய்விட்டார். சிவப்பிரகாஷின் இளம் மனத்தில் அலையலையாய்க் கேள்விகள் எழுந்தன.
1 முழு உடம்பும் இங்கேதானே படுத்திருக்கிறது. அப்புறம் ஏன் அவரை ’போய்ட்டாரு, போய்ட்டாரு’ என்று எல்லாரும் பேசுகிறார்கள்.
2 எதற்காக அவ்வளவு அவசரமாய்க் கிளம்பிப் போனார்.
3 உடம்பை இங்கே படுக்கவைத்துவிட்டு, எங்கே போயிருக்கிறார்.
4 தாத்தா போய்விட்டார் என்றால், அசையாமல் இங்கே படுத்திருக்கிறவர் யார்?
5 அவர்தான் தூங்குகிற மாதிரி அசையாமல் படுத்திருக்கிறாரே. அப்புறம் எதற்காக அவருடைய கை கால் விரல்களை துணிக்கிழிசலால் கட்டி வைத்திருக்கிறது – அவரே விரும்பினாலும் எழுந்து நடக்க முடியாத மாதிரி?
6 இத்தனை மனிதர்களும் களேபரமும் இருக்கும் சூழ்நிலையில் தாத்தா மட்டும் எப்படி இவ்வளவு அயர்ந்து தூங்குகிறார்?
7 இந்த அமளியெல்லாம் அவருக்குக் கேட்குமா கேட்காதா?
8 எங்கே போயிருப்பார் என்பது இருக்கட்டும், எப்போது திரும்ப வருவார்.
9 வரும்போது வழக்கம்போலவே கேக், பிஸ்கட் என்று ஏதாவது வாங்கி வருவாரா.
இந்தக் கேள்வி எழுந்ததும் பசிக்கிற மாதிரி இருந்தது. அம்மாவிடம் சென்று ‘சாப்புட ஏதாச்சிம் குடு’ என்று கேட்டான். அழுதழுது வீங்கிய கண்ணை இன்னொரு முறை அழுத்தித் துடைத்துக்கொண்டு எழுந்து வந்தாள் அம்மா. அவள் இருந்த நிலைமையில், ஒரு கேள்வியைக்கூட அவளிடம் கேட்க முடியாது… அடுத்த மூன்று மாதங்களில், கேட்டாலும் காதில் விழாத கண்காணாத் தொலைவுக்கு தானும் புறப்பட்டுப் போய்விட்டாள்…
ஆக, யாரிடமுமே கேட்க முடியாது. அவரவரும் அழுதுகொண்டும், ஆளாளுக்குப் பேசிக்கொண்டும் இருந்தார்கள். இருப்பவர்கள் அழுவது போதாதென்று, புதிது புதிதாக ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் பெண்கள் வந்த மாத்திரத்தில் அழத் தொடங்க, ஆண்கள் இறுகிய முகத்தோடு ஓரிரு விநாடிகள் நின்றுவிட்டு வெளியில் போய் பந்தலுக்கடியில் இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்…
ரங்க சமுத்திரம் சாமியார் பஞ்சாயத்துத் தலைவரிடம் சொன்ன இன்னொரு வாக்கியமும் நினைவில் எழுகிறது:
மாடசாமி, நீங்கள்லாம் இருக்கிறவுங்களெப் பத்தி யோசிக்கிறீங்க. ஒங்களாலெ முடிஞ்ச ஒபகாரத்தெச் செய்யிறீங்க. எங்க கூட்டாளிக, போய்ச் சேந்தவுகளெப்பத்தி, அவுங்க ஒலகத்துலெ என்னாதான் நடக்கும்ன்றதெப் பத்தி யோசிக்கிறோம். எங்க யோசனெ ஒங்குளுக்குப் புரியாது. ஒங்க யோசனே எங்குளுக்கு அவசியப்படாது. என்னா நாஞ் சொல்றது?
சட்டென்று, எழுந்து கிளம்பலாம் என்று தோன்றியது. படியிறங்க ஆரம்பித்தான். பத்துப் படிகள் இறங்கியபிறகு, திடீரென்று ஒரு எண்ணம் சொடுக்கியது.
ஒலியும் வெயிலும் காற்றும் பிராணனும் மட்டும்தானா, உள்ளூரத் திமிறி எழுந்து காட்சிகளாகவும் மணமாகவும் ருசியாகவும் ஸ்பரிசமாகவும் ஒலியாகவும் ரூபம் கொண்டு நிரம்பி, தானே தேய்ந்து மறையும் ஊற்றுமே, புலப்படாத அலையோட்டம்தானே…
*
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
