நூல் விமர்சனம் : கல்லடிக்கும் உளிகளும், உப்பளப் பாறைகளும். ஆசிரியர் : பி. ஏ. கிருஷ்ணன்

என் மனம் கவர்ந்த நாவல்களில் ஒன்றான ‘புலிநகக் கொன்றை’ மூலமாகத்தான் திரு. பி.ஏ. கிருஷ்ணன், வாசகனான எனக்கு, அறிமுகமானார். அவரை சில வருடங்களுக்கு முன் கோவை ‘தியாகு புக் சென்டரி’ல் ஒரு கலந்துரையாடலின் போது சந்தித்து இருக்கிறேன்.அவருடைய கட்டுரைகளில் மற்றும் அவருடைய முகநூல் பதிவுகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.
அவரது அச்சமற்ற, கூறுவதை தெள்ளத் தெளிவாக, வலுவாகக் கூறுகின்ற தன்மை அவரைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது எழுத்துகளின் தனித்தன்மை அந்தத் தெளிவும், சொல்லும் விஷயத்தில் உள்ள தீர்மானமும், வலுவாகச் சொல்லும் முறையும்.
அவரது ஆர்வங்கள் பல்வேறு துறைகள் சார்ந்து இருப்பவை. இந்நூலில் உள்ள கட்டுரைகள் அத்துறைகளில் சிலவற்றைப் பற்றியவை.
அவருடைய பார்வைகள், அரசியல் சார்பு, இலக்கிய எடை போடல்கள் நம்முடையவையோடு ஒத்துப் போகின்றனவோ, அல்லவோ அவருடைய எழுத்துகளில் உள்நோக்கம் இல்லை என்பதை படிப்பவர்கள் உணர்வார்கள்.
‘புலிநகக் கொன்றை’ என்ற பெயரின் வசீகரதிற்கிணையான அழகும், கட்டுக்கோப்பும், வரலாற்று பதிவும், வாழ்க்கையின் பல்சுவையும் நிரம்பியது அந்த நாவல். அதில் ஒரு பத்தியில் நாவலின் தலைப்பு பற்றிய விவரணை வரும். அந்த விதையிலிருந்து முளைத்து, பரந்து விரிந்த விருட்சமாய் அந்நாவல் இருக்கும் .
‘புலிநகக் கொன்றை’ என்ற ஒரு சொற்றொடர் அல்லது சொல் ஓர் அற்புதம் எனில் ‘ஞாழல்’ – அதன் மூதாதையான செஞ்சொல் – இனிமையில், செழுமையில் அதை விஞ்சுகிறது. ‘ஞாழல் பிறந்த கதை’ கட்டுரை விடுதலைப் போராட்டம், சாதாரண மனிதர்களான சுதந்திரப் போராட்ட வீரர்கள், தென்கலை வைணவர்கள், பொதுவுடைமை இயக்கம், நாவலில் வரும் பாத்திரங்களின் வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்நாவல் எப்படிப் பிறந்தது என்று விவரிக்கிறது.
பல கட்டுரைகள் பாரபட்சமற்ற ஓர் ஆய்வாளரின் பார்வைகளைக் கறாராக, அறிவியல் ரீதியாக வாசகர் முன் வைக்கின்றன. ‘அறிவியல் என்றால் என்ன ‘ என்கிற கட்டுரை இதற்கு முன்னுரை போல் அமைந்துள்ளது.
அபிமானம் கண்மூடித்தனமான மிகு உணர்ச்சியாகையில், ஆராய்ச்சிகள் தனிப்பட்ட காழ்ப்புகளால் நிஜத்தைத் திரிக்கையில் அல்லது முற்றிலும் மறைக்கையில் உண்மை புறந்தள்ளப் படுகிறது. பிற பல கட்டுரைகளில், பொய்களும், அதீத போலிப் பெருமைகளும் நிரம்பி இருக்கும் எழுத்துலக, பேச்சுலக, ஆராய்ச்சி உலகச் சூழலில் உண்மை மட்டுமே எனக்குத் தேவை என்று அதைத் தேடிச் சென்று அதை நிரூபிப்பதற்கான தரவுகளையும் கொடுத்து, தன்னுடைய பார்வையை அவர் தெளிவாகக் கூறிச் செல்கிறார்.
உணர்ச்சிப் பீறிடல்களைத் தவிர்த்து நிஜத்தை நாடும் ஆராய்ச்சியாளரின் அறிவியல் அணுகுமுறை கட்டுரைகளில் விரவி இருக்கிறது
உதாரணமாக திரு. தொ. பரமசிவன் அவர்களின் ‘ அழகர் கோவில் ‘ புத்தகத்தின் ஒரு சிறு பகுதியைப் பற்றிய இவரது மறுமொழிகள் தரவுகள் சார்ந்த மற்றும் ஓர் ஆராய்ச்சி நூலைப் போன்ற வாதங்களை வைக்கின்றன.
இது ஒருவரை மறுப்பதற்காக வேண்டிச் செய்யும் விஷயமல்ல. உண்மை எது என்று பார்க்கையில் அந்த உண்மை சார்பான விஷயங்களை எடுத்துச் சொல்வது. அதனால்தான் திரு. தொ. பரமசிவன் அவர்கள் மீது தனக்கு இருக்கும் மரியாதையையும், அதேபோல் திரு. மகுடேஸ்வரன் அவர்கள் மீது தனக்கு இருக்கும் மரியாதையையும் குறிப்பிட்ட பின்னரே அவர்களுடைய கூற்றுகளுக்கு தன்னுடைய மறுப்புகளை பி. ஏ. கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்கிறார்.
எவருடைய கூற்றுகளும் முடிவுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் உண்மை என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
தமிழ் ஆராய்ச்சி உலகில், தமிழ் இலக்கிய உலகில், தமிழ் சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளிலும் – ஒருவேளை இது இந்தியாவிலும் கூட அந்தந்த மொழிகளின் சார்பில் இருக்கலாம். எனக்கு ஓரளவு தெரிந்தது தமிழ் உலகம் என்பதால் அதைக் குறிப்பிடுகிறேன். – ஒரு கூற்றை ஒருவர் தெரிவிக்கையில் அந்தக் கூற்று உண்மையா பொய்யா, சரியாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்வதை விட, தெரிந்து அதை ஏற்பது அல்லது மறுப்பது என்பதை விட கூறியவர் யார் என்று பார்க்கும் ஒரு மனப்பான்மை இருக்கிறது. அந்த மனப்பான்மையின்படி திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களை ஏதோ ஒரு சிமிழுக்குள் அடைத்து இவர் இந்த ஆள் என்று முற்றிலும் புறந்தள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
இந்த நூலை படிக்கும் பொழுது அவ்வாயுதம் பயன்படாமல் போய்விடும் என்பதற்கு இவரது ராமானுஜர் பற்றிய கட்டுரையே சான்று. எவ்வளவு கறாராக பல விஷயங்களை அணுகுகிறாரோ அதற்கு சற்றும் குறையாமல் இவரது மத உட்பிரிவு சார்ந்த மக்களுக்கு கடவுளாய் திகழும் ராமானுஜருடைய வாழ்க்கை பற்றி நிலவும் கதைகளை இதே அறிவியல் ஆராய்ச்சி முறையில் இவர் அணுகி, அவற்றின் “வரலாற்றுத் தன்மை கேள்விக்குரியன” என்கிறார். சிலவற்றை உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்பதை சொல்லவும் இவர் தயங்குவதில்லை. அதே போல் வடமொழி பற்றிய அதீத உயர்வு நவிற்சிகளையும் முற்றிலுமாக நிராகரிக்கிறார். இந்த நேர்மை இவரை ஒரு சிறு வளையத்துக்குள் அடைப்பவர்களுக்கு மிகப்பெரிய தடங்கலாக இருக்கப் போகிறது.
ஆசிரியர் மனம் தமிழில் தோய்ந்த ஒன்று என்பது இந்நூலில் பல்வேறு இடங்களிலும் தெரிய வருகிறது. அவரது எளிய, துல்லியமான மொழியும், அதன் பிரயோகமும் இதற்குச் சான்றாக உள்ளன.
அரசியல், தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வரலாறு, நம் கலைச் செல்வங்களான சிற்பம், ஓவியம் என்று எடுத்துக் கொள்ளும் விஷயங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளும் வாசகர்களுக்குப் பல தகவல்களைத் தரும்.
குறிப்பாக ‘சோழர் காலத்தியப் படைப்புகள் – உலகக் கலை மரபின் உச்சங்கள்’ கட்டுரை ஒரு தகவல் சுரங்கம். கலை என்பது நாடு, இனம், காலம் ஆகிய எல்லைகளைக் கடந்த உலகம் தழுவிய ஒன்று என்பதைச் சொல்லும் அதே சமயத்தில் நமது ‘கோவில் கட்டிடக் கலை’யிலும், அதன் தொழில்நுட்பத்திலும் காலம் நிகழ்த்திய மாற்றங்களையும் (சுடுமண் செங்கற் கோவில்கள், கற்கோவில்கள், பெருங்கற்கோவில்கள்) தெரிவிக்கின்றது.
ஆசிரியர் கட்டிடக் கலை, சிற்பம், செப்புப் படிமம், ஓவியம் போன்ற கலைகள் சோழர் காலத்தில் – இதுவரை நம்மால் தொட முடியாத – உச்சத்தைத் தொட்டிருக்கின்றன என்பதைப் பதிவு செய்கிறார்.
மூன்று முக்கியமான புகழ்பெற்ற கோவில்களான தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்கள் பற்றி இருக்கும் உண்மையான தகவல்களே பிரமிக்க வைக்கின்றன என்று அவற்றை விவரிக்கிறார். சிற்பங்கள் பற்றியும், ஓவியங்கள் பற்றியும், செப்புப் படிமங்கள் பற்றியும் அத்துறைகளில் ஆசிரியருக்கு ஏற்கனவே இருக்கும் ஆர்வம், பரிச்சயம் காரணமாக வாசகருக்குப் பல அரிய தகவல்களைத் தருகிறார். இவை தொடர்பான ஒளிப்படங்களும் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன. இக்கட்டுரையை விரிவுபடுத்தி, ஒளிப்படங்களுடன் ஒரு முழு நூலாக உயர்தரக் காகிதத்தில் கொண்டு வரலாம்.
அரசியல் கட்டுரைகளில், அண்ணா ஹசாரே இயக்கம் பற்றி மிகச் சரியாகக் கணித்து ஆசிரியர் இவ்வாறு கூறி இருக்கிறார்:
“அண்ணா கடைசி வரை இருப்பாரா என்று சொல்ல முடியாது. அவரது பரிவாரங்கள் எனக்கு எரிச்சலைத் தருகின்றன.”
சோவியத் யூனியன் பற்றி, ஜோசஃப் ஸ்டாலின், கோர்பசெவ் ஆகிய தலைவர்கள் பற்றி வரலாற்று ஆதாரங்களோடு இவர் எழுதியுள்ள கட்டுரையைத் தொடர்ந்து இன்னொரு கட்டுரையில் இவரது தகப்பனார் திரு பக்ஷிராஜ ஐயங்கார், இவரைப் பிடித்துக் கொண்டிருக்கும் ‘கம்யூனிசப் பிசாசு’ பற்றிச் சொல்லுவதைப் படிக்கையில் முறுவலிக்காமல் இருக்க முடியாது.
‘நேரு என்றொரு மானுடன்’ கட்டுரையில் நேரு மீதான இவரது பற்று வெளிப்பட்டு இருக்கிறது.
1940, 50 களில் பிறந்த இந்தியர்கள் பலருக்கு 1950, 60 களில் பிறந்த தமிழகத்தவருக்கு எம்ஜியார் எப்படியோ அப்பேற்பட்ட அசைக்க முடியாத அபிமானத்துக்குப் பாத்திரமாய் இருந்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு. எம்ஜியாருக்குக் கூட சினிமாவில் சிவாஜியும், அரசியலில் மு. க. வும் பொருட்படுத்தத் தக்க போட்டியாளர்களாக இருந்தார்கள். நேருவுக்குக் கண்ணுக்கெட்டியவரை போட்டியாளர்கள் என்று அகில இந்திய அளவில் இல்லை. இவருக்கு எதிர் துருவங்களாக இருந்த அரசியல் தலைவர்களும் கண்ணியமாகவும், பரஸ்பரம் மரியாதையோடும் செயல்பட்டார்கள். கொச்சையான தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அப்போதும் உண்டு. ஆனால் அவை வெறும் முணுமுணுப்புகளாகத் தென்படும் அளவுக்கு நாகரிகமான செயல்பாடுகள் உரத்து இருந்தன. அச்சு ஊடகம் மட்டுமே இருந்தது. பத்திரிகைகளும் 95 % கண்ணியமாக இருந்தன. ஒளிபரப்பு ஊடகமும், சமூக ஊடகங்களும் பிரம்மாண்டமாகப் பரவியபின் எல்லா மனக் குப்பைகளும் பொதுவில் வீசி எறியப்படுகின்றன. அவற்றிலிருந்து ஒரு சமுதாயம் எப்பேற்பட்டது என்பதையும் நாம் கணிக்க முடிகிறது.
நேரு பற்றிய பல தற்கால விமர்சனங்கள் இரண்டு வகைகளாகவுள்ளன. முதல் வகை அவர் ஆட்சியாளராகச் செய்த பிழைகள் பற்றிச் சுட்டுகின்றன. (பிழை இழைக்காத மனிதர் இல்லை.) அவை அவரது கணிப்புகளில் உள்ள பிழைகள் தாம், நோக்கத்தில் அல்ல என்பதில் தெளிவாக உள்ளன. இரண்டாவது வகை மஞ்சள் பத்திரிகை வகை. அறிவாளிகள் அவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.
அசைக்க முடியாது என்றிருந்த காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியும் என்று காட்டிய முதல் தலைவரான, நேருவின் கொள்கைசார் எதிர்ப்பாளரான மாமேதை ராஜாஜி, நேருவின் மறைவின் போது கூறியது, “Eleven years younger than me, eleven times more important for the nation, and eleven hundred times more beloved of the nation…”
தமிழன்னை பல உன்னதத் தருணங்களை தன் பண்டை இலக்கியங்களில் அருளி இருக்கிறாள். அவற்றில் தோய்ந்து ஆனந்திக்கும் பேறு ஆசிரியருக்குக் கிட்டியிருக்கிறது. அவ்வானந்தத்தைப் பல்வேறு கட்டுரைகளிலும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
குறிப்பாகக் ‘கம்பனின் இரணியன்’ கட்டுரையில். மேலும் கம்பர், ஆழ்வார்கள், சங்கத் தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி பதினேழாம் நூற்றாண்டின் படிக்காசுப் புலவர் வரை பல்வேறு கட்டுரைகளிலும் இவர் மேற்கோள் காட்டும், விவரிக்கும் இடங்கள் வாசிக்க சுகமாக உள்ளன.
எவருமே பிழையாக எழுதக் கூடும். இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளிலும் வாசகர்கள் பிழைகளைக் காணக்கூடும். இப்போது நீங்கள் வாசிக்கும் இம்முன்னுரையிலும் பிழைகள் இருக்கலாம். பிழைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று: தவறான தகவல்களை நம்புவதாலும், அறியாமையாலும், கவனக் குறைவாலும், பொதுப் புத்தியில் புகுத்தப் பட்டவற்றை அப்படியே பரிசீலிக்காமல் ஏற்றுக் கொண்டதாலும் வரும் பிழைகள்; மற்றொன்று: காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அறிந்தே சொல்லும் பொய்கள்.
எவர் ஒருவருக்குமே விருப்பு, வெறுப்புகள் உள்ளன. பிறந்தது முதற்கொண்டு இந்தக் கணம் வரையிலான பின்புலம் இருக்கிறது. இவற்றின் கட்டுப்படுத்தும் தன்மை மிக வலுவானது. உண்மையை நாடுபவர்கள் இத்தகைய கட்டுப்படுத்தும் தன்மை பற்றி கவனத்துடன் இருந்து, அது தோண்டும் பள்ளங்களில் விழாமல் இருப்பார்கள்.
காழ்ப்புணர்ச்சிகளாலும், பிரசாரத்தாலும் கட்டமைக்கப்பட்ட சமுதாயப் பொதுவெளிக்கு தமிழ் அறிவுலகமும் விலக்கல்ல. அங்கு இன்னமும் கூட அதிக அளவில், அதிக தீவிரத்துடன் அவை பயன்படுத்தப்படுகின்றன. தமிழருக்கு அறிவு வெளிச்சம் கிடைத்துவிடக் கூடாது, தமிழர் இடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது, தமிழர் தம் நிஜப் பெருமைகளை, போலிகள் அனைத்தையும் தவிர்த்து, உணர்ந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் சக்திகளிடையே இவரது தரப்பு வாதங்கள் தரவுகளையும், தர்க்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
உண்மையை மட்டுமே நாடுபவர் இவரோடு உரையாடலாம் என்கிற இடத்தையும் இவர் அளிக்கிறார். இவர் கூறுவனவற்றை ஏற்போர் தவிர, மறுப்போரும் தக்க தரவுகளோடு இவரோடு உரையாடி உண்மையை நோக்கிய பயணத்தைத் தொடரலாம்.
பல விவாதங்களின், உரையாடல்களின் முதலடியாகவும், , இலக்கியத்தில், கலைகளில் தம்மை மகிழ்வித்த இடங்களைத் திரு. பி. ஏ. கிருஷ்ணன் பிறருடன் பகிரும் நன்முயற்சியாகவும் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.
இந்நூலைக் கிட்டத்தட்ட பல விஷயங்களைப் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூல் எனலாம்.
இதில் இருக்கும் கட்டுரைகளைக் கவனம் கூர்ந்து வாசகர்கள் படிப்பார்களேயாகில் பல புதிய வாசல்கள் அவர்களுக்குத் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
*************
நூல் விபரம் : பக்கங்கள் : 160 விலை : ₹180 கிடைக்குமிடம் : பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை 38 )
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
