மூலம் : வசுதேந்திரா
தமிழாக்கம் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி
எங்கள் கிராமத்திலிருந்து இரண்டு கி.மீ தூரத்திலிருந்த ஒரு கிராமத்திலிருந்து தான் என் பால்ய ஸ்நேகிதன் சங்கர் கௌடா பள்ளிக்கூடத்துக்கு வருவது வழக்கம். கிராமத்து பெரிய மனிதரான கௌடா குடும்பத்தின் கடைக்குட்டி அவன். அந்த குடும்பத்திற்கு நிலம், பணம் அதிகாரம் எல்லாம் இருந்தது. சங்கர் கௌடா நல்ல உயரமும் நிறமும் திடகாத்திரமான உடலும் கொண்டவன். மிகச்சுலபமாக எந்தப் பெண்ணிற்கும் கனவு நாயகனாக அவன் இருந்திருக்க முடியும். ஆனால் கடவுள் தான் அவன் மீது அவ்வளவாக கருணை காட்ட வில்லை.
அவனுடைய நடை, உடை, பாவனை, பேச்சு, விருப்பங்கள் எல்லாமே பெண்களுக்குரியவையாக இருந்தன.
பள்ளிக்கூடத்தில் சங்கர் கௌடா எல்லோருடைய கேலிக்கும் நகைச்சுவைக்கும் ஆளாவதுண்டு. அவனைப் போலவே மென்மையான குரலில் பேசியும் பெண்களைப் போன்ற அவனது நளினமான நடையையும் எல்லா பையன்களுமே காப்பி அடித்தும் கேலி செய்வதுண்டு.
அவனுடைய வகுப்பு தோழர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள் கூட அவனை கேலி செய்வது உண்டு. ஒரு முறை உயிரியல் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தும் போது, சில சமயம், குரோமோசோம்களின் பொருந்தாச்சேர்க்கையால் ஒரு குழந்தை ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் பிறக்க நேரிடுகிறது என்று விவரித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவர் அதை சொல்லும்போது அவருடைய கண்கள் சங்கர் கௌடாவின் மேல் பதிந்ததோடல்லாமல் அருவருப்பான சிரிப்பு ஒன்றும் அவரது உதடுகளில் விரிந்தது. முழு வகுப்பும் “சங்கர் கௌடா” என்று கூச்சலிட்டுக் கொண்டே பெருங்குரலில் சிரித்தது.
ஆனால் சங்கர் கௌடா அத்தகைய கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஒருபோதும் பயந்ததில்லை. மாறாக அவர்களுடன் சேர்ந்து சிரிப்பான். போதாததற்கு அவனுடைய நடவடிக்கைகளும் மற்றவர்களின் கேலி கிண்டல்களை ஈர்ப்பனவாகவே இருந்தது. “ஹூவு செலுவெல்லா நந்தித்து” என்னும் பி சுசிலா பாடிய பாடலை அவன் அதே இனிமையான பெண் குரலில் பாடிக் காட்டுவான். தன்னுடைய நோட்டுப் புத்தகத்தின் கடைசி பக்கங்களை விதவிதமான ரங்கோலி கோலங்களால் நிரப்பி வைத்திருப்பான். கடைகளில் புதுப் புடைவவைகளை தொங்க விட்டிருந்தால், “ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று கண் விரியப் பார்த்து வியப்பான். கபடி வாலிபால் போன்ற, பையன்கள் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் அவனுக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை; மாறாக அவன் பெண்களோடு டென்னிகாய்ட் விளையாடுவதில் மகிழ்ந்தான்.
தன் உடலை நளினமாக நெளித்து, வளைத்து, ஒசித்து அவனுடைய கிராமத்தில் இருக்கும் வேசியர்கள் எப்படி ஆண்களை ” அண்ணா இரவு என்னிடம் வாருங்கள் அண்ணா” என்று கூவி அவர்களைக் கவர முயற்சி செய்வார்கள் என்று எங்களுக்கு செய்து காட்டி மகிழ வைப்பான். இது பையன்களை மட்டுமல்லாது பெண்களையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கும். நாங்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுத்துக் கொள்ளாது எங்களை மகிழ்விக்க அவன் எப்போதும் சித்தமாக இருப்பான்.
சங்கர் கௌடா வகுப்பில் எப்போதும் என் அருகில் தான் உட்காருவான். அவனுக்கு அவ்வளவாக படிப்பு வராது. எனவே என் உதவி அவனுக்கு தேவைப்பட்டது. அவன் என்னுடைய நோட்டு புத்தகத்திலிருந்து பாடங்களை காப்பி செய்து கொள்வான். அதற்கு பதிலாக நெல்லிக்காய், விளாம்பழம், நாவல் பழம் இனிய புளியங்காய் போன்றவற்றை தன் கிராமத்தில் இருந்து எனக்காக கொண்டு வருவான். சில சமயம் அவன் தான் வரைந்த வித விதமான வண்ணங்கள் கொண்ட ரங்கோலி கோலங்களின் டிசைன்களை எனக்குத் தருவான். அவன் மிகவும் நல்ல குணம் படைத்தவனாக இருந்ததால் எனக்கு அவனுடன் நட்பாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை.
ஆனால் வீண் பெருமை பார்க்கும் அவனுடைய குடும்பத்தாருக்கு அவளுடைய பெண்மை கலந்த நடை உடை பாவனைகள் கசப்பு மருந்தை போல கசந்ததால் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனுடைய இரண்டு சகோதரர்களும் தகப்பனாரும் தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அவனை தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்கள். அவனால் ஒருபோதும் முடியாத ஒன்றுக்கு அவன் எப்படி தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்?
ஒருமுறை அவன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. அவனுடைய கிராமத்திலிருந்து வந்த மற்ற பையன்கள் அவன் உடல் நலமற்று இருப்பதாகச் சொன்னார்கள். நான்காவது நாள் அவன் பள்ளிக்கு வந்தபோது வெளிறிப் போயிருந்தான். பள்ளிக்கூடம் முடிந்த பின் நான் அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன். அவன் பள்ளிக் கட்டிடத்தின் பின்பக்கம் என்னை அழைத்துச் சென்றான். அங்கு, யாரும் பார்க்க முடியாத இடத்தில் அவன் தன்னுடைய சட்டையையும் பேன்ட்டையும் கழற்றினான். பல இடங்களில் அவனுடைய உடல் வீங்கியும் உடல் முழுவதும் கரு நீல நிற தழும்புகள் நிறைந்தும் காணப்பட்டது. எனக்கு அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. சங்கர் தன்னுடைய அப்பாவும் அண்ணாவும் அவனை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு அவனுடைய பெண்மை நிறைந்த பழக்கங்களை உடனடியாக விட்டுவிட வேண்டும் என மிரட்டி அடித்ததாக கூறினான். அதற்குப் பிறகு அவர்கள் சங்கர் கௌடாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று எல்லோரிடமும் கூறினார்கள். அவர்கள் அவனை ஒரு டாக்டரிடம் கூட அழைத்துச் செல்லவில்லை. அவனுடைய தாயார் மட்டும் அவனுடைய காயங்களின் மீது தேங்காய் எண்ணெயை தடவினாராம்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சங்கர் கௌடாவின் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது; அவன் முன்னைப் போலில்லாது மிகவும் அமைதியாகிவிட்டான். பள்ளி ஆண்டு விழா நெருங்கிக் கொண்டிருந்ததால் எங்கள் ஆசிரியர் எங்களை “திரௌபதி வஸ்திர ஹரணம்” நாடகத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தார். ஆனால் சபையில் துகிலுரியப்படும் திரௌபதியின் பாத்திரத்தை ஏற்று நடிக்க எந்த பெண் தான் தயாராக இருப்பாள்? சங்கர் கௌடாவிற்கு அந்த பாத்திரத்தை கொடுக்கலாம் என்று பையன்கள் ஆலோசனை அளித்தார்கள் – ஆசிரியரும் அதை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் சங்கர் அந்த யோசனையை கேட்டதும் நடுங்கினான். ” என் தந்தை என்னை கோபிப்பார். நான் பெண் பாத்திரம் ஏற்று நடிக்க முடியாது” என்று மறுத்தான்.ஆசிரியர் அவனை வற்புறுதத்தினார் – ஆனால் பயன் ஏதும் இல்லை. கடைசியில் அந்த பாத்திரத்திற்கு வேறு ஒரு பையன் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆண்டு விழா தினத்தன்று நாடகத்தில் நடிக்கப் போகும் பையன்கள் ஒப்பனை செய்து கொண்டிருந்த அறைக்கு சங்கர் கௌடா வந்தான். திரௌபதி வேடம் தரிக்க இருந்த பையனுக்கு அருகே சென்று மென்மையான பட்டு புடவையையும், ரவிக்கையும் நகைகளையும் ஏக்கத்துடன் தொட்டுத் தடவிப் பார்த்தான்.
பியுசி படிப்பை முடித்த பிறகு நான் வேறு ஒரு நகரத்திற்கு பொறியியல் படிப்பு படிக்கச் சென்றேன். மெல்ல மெல்ல குழந்தை பருவ நண்பர்களோடு தொடர்பு விடுபட்டு போனது. சங்கர் கௌடா பியூசியில் ஒரு முறை பெயில் ஆகி மறுபடியும் பரிட்சை எழுதி பாஸ் செய்து உள்ளூர் கல்லூரியில் பிஏ சேர்ந்திருப்பதாக கேள்விப்பட்டேன்.
நான் எப்போதாவது கிராமத்துக்கு வரும்போது நான் வருவதை கேள்விப்பட்டால் சங்கர் என்னை சந்திக்க முயற்சி செய்வான். ஆனால் நான் அவனைத் தவிர்த்தேன். அவன் இப்போதும் கூட வரும்போதெல்லாம் நெல்லிக்காய்களையும், கொய்யாப்பழங்களையும, இனிப்பு புளியங்காய்களும் கொண்டு வருவதை நிறுத்தவில்லை. அவன் என் மீது காட்டும் கவனத்தை என்னால் வெகுவாக பொருட்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாததால் நான் அவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவேன். ஒருமுறை நான் கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து என்னிடம் ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்தான். பேருந்து கிராமத்தை விட்டு நீங்கிய பிறகு நான் மெதுவாக அந்த பொட்டலத்தை திறந்து பார்த்தேன். பொட்டலத்திற்குள், விலை உயர்ந்த உடம்பு தேய்த்துக் குளிக்கும் தைலம், குளியல் பொடி, தலைக்கு தேய்த்து குளிக்கும் ஷாம்பூ, வாசனை திரவியங்கள் அடங்கிய குப்பிகள் இருந்தன. கூடவே ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் ” என் நண்பன் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. யாரேனும் அதை பார்த்து விடுவார்களோ என்று பயந்து, பேருந்து கண்டி நரசிம்ம சுவாமி குன்றை சென்றடையும் வரை அதை இருக்கைக்கு அடியில் ஒளித்து வைத்தேன். பேருந்து நகர ஆரம்பித்ததும், அந்த பொட்டலத்தை பள்ளத்தாக்கில் வீசிவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
பொறியியல் படிப்பை முடித்த பிறகு எனக்கு பெங்களூரில் பெரிய கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. மெதுவாக சங்கர் கௌடா மீது எனக்கு இருந்த வெறுப்பு குறைந்து பரிதாபம் ஏற்பட ஆரம்பித்தது. நான் எப்போது ஊருக்கு போனாலும் அவன் என்னை வந்து சந்திப்பான். பிஏ படிப்பை முடிக்க முடியாததால் அவன் குடும்பத்தாரால் அவன் உதாசீனப்படுத்தப்பட்டு உபயோகமற்று சீரழிந்து கொண்டிருப்பதை பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
ஒருமுறை என்னை அவன் சந்திக்க வந்த போது நான் அவனிடம் உன்னுடைய தகப்பனார் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன்.
சங்கர் வெடித்து சிரித்தபடியே “இனி அவர் பருப்பு என்னிடம் வேகாது ” என்றான். அவர் என்னை வசை பாட வந்தார். நான் அவரை சாட்டையால் கண்மண் தெரியாமல் அடித்து விரட்டி விட்டேன். 15 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டி இருந்தது. இப்போதெல்லாம் அந்த தேவிடியா மகன் என் வழிக்கு வருவதில்லை. அதற்கான தைரியமும் இல்லை. ஒரு வேலை தேடிக் கொள்ளுமாறு நான் அவனுக்கு அறிவுரை கூறினேன். யார் எனக்கு வேலை தருவார்கள் என்று அவன் இளித்துக்கொண்டே சிரித்தான்.
உள்ளூரில் இருந்த ஏதோ ஒரு நிறுவனத்தில் பியூன் வேலைக்கு இன்டர்வியூவுக்கு சென்றதாக என்னிடம் சொன்னான். மூன்று ஆண்கள் இன்டர்வியூ செய்தார்களாம். அவர்கள் அவனிடம் உனக்கு நன்றாக என்ன செய்யத் தெரியும் என்று கேட்டதற்கு அவன் நான் நன்றாக பாடவும் ஆடவும் செய்வேன் என்று பதில் அளித்தானாம்.
“அப்படியானால் எங்கள் முன் ஆடிக் காண்பி” என்று அவர்கள் சொன்னார்களாம்.
இன்டர்வியூ நடந்த அறையில் அவன் அவர்கள் முன்னால் “ஜில் ஜில் ஜில்ஜிலக்கு காலு கஜ்ஜே ஜலக்கு” என்று பாடிக்கொண்டே நடனம் ஆடினானாம். இன்டர்வியூ எடுக்க வந்தவர்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்களாம்.
அவன் நடனமாடி முடித்ததும் “பிரமாதம்” என்று அவர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்களாம். அவனுக்கு கண்டிப்பாக வேலை தருவதாக கூறி அவனை அனுப்பிய போதும் அவர்களிடமிருந்து இன்னும் பதில் எதுவும் வரவில்லை என்றான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அவனுக்கு வேலை தேடுவதில் ஆர்வம் அறவே இல்லாமல் போனது.
இன்னொரு முறை நான் ஊருக்கு வந்த போது நகருக்கு வெளியே இருந்த அனுமான் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றான். கோவிலுக்கு போகிற வழியில் எங்கள் இருவருக்கும் தெரிந்த நண்பன் குமாரசுவாமி – நாங்கள் அவனை கொம்மி என்று அழைப்போம் – துணிக்கடை வைத்திருந்தான்.
நான் அவனை சந்திக்க விரும்பினேன். சங்கர் கௌடா வெகு தூரத்திலிருந்து “ஏலேய் கொம்மி” என்று கூக்குரல் இட்டு அவனை அழைத்தான். தனது வாடிக்கையாளர்களுக்கு துணிகளை காண்பிப்பதில் ஈடுபட்டிருந்த கொம்மி பிச்சைக்காரனை விரட்டுவது போல கையசைத்து அவனை விரட்டினான். இதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் சங்கர் கௌடா, “நீ பெரிய ஆள் என்று எனக்கு தெரியும். நீ என்னுடன் பேச வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் யார் வந்திருக்கிறார்கள் பார்” என்றான். என்னை பார்த்ததும் கொம்மி தன் வேலையை விட்டுவிட்டு ஓடி வந்தான்.
“எப்போது வந்தாய் மாறைய்யா, வா வா உள்ளே வா!” என்று அவன் மகிழ்ச்சியுடன் என கையைப் பிடித்து கடைக்குள்ளே அழைத்துச் சென்று குளிர்பானம் தருவித்துக் கொடுத்தான். சங்கர் கௌடா எங்களை மவுனமாக பின் தொடர்ந்தான். கொம்மி கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் பேசிக் கொண்டிருந்த போதிலும் சங்கர் கௌடாவை ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவோ அவன் எப்படி இருக்கிறான் என்றோ கேட்கவில்லை. நாங்கள் புறப்படும் போது, சங்கர் கௌடா, “அது இருக்கட்டும் கொம்மண்ணா, சந்திரவ்வா எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான். இது கொம்மண்ணாவை வெகுவாக சீண்டியது. “தாயோளி மகனே” என்று அவன் சங்கர் கௌடாவை திட்டிக்கொண்டே அடிக்க முற்பட்டபோது, சங்கர் கௌடா அவனிடமிருந்து சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறி தெருவில் நின்று கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல சிரித்தான்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் நான் கொம்மண்ணாவிடம் சந்திரவ்வா யார என்று கேட்டேன்.
“விடு. அந்தப் பன்றி எதையோ உளறுகிறான்” என்ற படியே கொம்மண்ணா உறுமினான். “தேவிடியா மகனுக்கு நாக்கு நீளம்” என்றான். தெருமுனையில் நின்று கொண்டிருந்த சங்கர் கௌடாவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். “கடந்த இரண்டு வருடங்களாக அவள்தான் அவனுடைய வைப்பாட்டி” என்று சங்கர் கௌடா விளக்கினான். “துர்க்கம்மா கோவிலுக்கு பின்னால்தான் அவள் இருக்கிறாள். அவன் அவளுக்கு ஒரு தங்க நெக்லஸ் கூட வாங்கித் தந்திருக்கிறான்” என்று சங்கர் கௌடா, நக்கலாக சிரித்தான்.
நாங்கள் போய் சேர்ந்த போது கோவிலில் ஒருவரும் இருந்திருக்கவில்லை. கோவில் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கோவில் மீது குடை போல் விருந்திருந்த மல்லிக் கொடியின் கிளையிலிருந்து பறவை ஒன்று பாடிக் கொண்டிருந்தது. காற்றில் நறுமணம் நிரம்பியிருந்தது. நாங்கள் கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு மூலையில் வைத்திருந்த விளக்கைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டடோம். சங்கர் கௌடா ஒரு நிமிடம் நின்று தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டான். அவன் என் நெற்றிலும் குங்குமத்தை இட்டுவிட்டு அதன் துகள்கள் என் கண்களில் விழாமல் கையால் தடுத்தபடி ஊதி விட்டான்.
சற்று நேரம் நாங்கள் மௌனமாக அமர்ந்திருந்த பின் நான் அவனிடம் “கௌடா, நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றேன். அவன் பலமாக சிரித்ததில் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது. திடீரென தீவிரமான முகபாவத்துடன்,” தயவு செய்து நீயும் என்னை கேலி செய்யாதே” என்றான் நான் அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பின் நாங்கள் வீடு வரை மௌனமாக நடந்தோம்.
அன்றிரவு நான் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தபோது கொம்மி வந்தான். ” நீ பெங்களூர் காரன். இங்கு என்ன நடக்கிறது என்று உனக்கு புரியாது. தயவு செய்து நான் சொல்வதைக் கேள், நான் உன்னுடைய நன்மைக்காக தான் சொல்கிறேன்” என்றான். நான் சங்கர் கௌடாவுடன் ஒன்றாக சுற்றுவதை நிறுத்த வேண்டும் என்றான் அவன்.
“ஏன் அப்படி சொல்கிறாய்? என்ன இருந்தாலும் அவன் நமது வகுப்புத் தோழன் இல்லையா?”
“வகுப்பறையில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பது போல என்னிடமும் கேள்வி கேட்காதே” கொம்மி கோபத்துடன் சிடுசிடுத்தான். ” புரிந்து கொள்ள முயற்சி செய். நீ புத்திசாலி பையன். நமது நகரத்தில் உன்னைப்போல மார்க் வாங்கியவர்கள் யாரும் இல்லை. எதிர்காலத்திலும் யாரும் இருக்கப் போவதும் இல்லை. நீ எங்கள் நகரத்தின் பெருமிதம். உனக்கு பெங்களூரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஒரு நண்பனாக மட்டும் இல்லை உன் மூத்த சகோதரனாகவும் நான் இதை உனக்குச் சொல்கிறேன். நான் சொல்வதைப்போல செய். மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட பேசாதே. ஊரில் உள்ளவர்கள் உன்னை பற்றி வம்பு பேசும்போது என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அந்த தேவிடியா மகனோடு உனக்கு இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்.”

ஐந்து வருடங்கள் உருண்டோடின. என்னுடைய பெற்றோர்கள் பெங்களூருக்கு வந்து என்னுடன் வசிக்க ஆரம்பித்தார்கள். தூரத்து உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக நான் கிராமத்திற்குச் சென்றேன் அப்போது நான் சங்கர் கௌடாவை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் அதிர்ச்சிகரமான தகவல் எனக்காக காத்திருந்தது. கல்யாண மண்டபத்தில் ஒரு சிலர் சங்கர் கௌடா தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக என்னிடம் சொன்னார்கள்.
தன்னுடைய சொந்த தந்தையையே சாட்டையால் அடிக்கும் தைரியம் இருந்த சங்கர் கௌடா எதற்காக தூக்கு போட்டுக் கொண்டான்?
திருமண மண்டபத்தில் இருந்த யாராலும் சரியான பதில் தர முடியவில்லை.
அன்று மாலை நான் கிராமத்திற்கு சென்றேன். நான் அவனுடைய வீட்டை அடையும்போது இருட்டியிருந்தது. நடுக் கூடத்தில் அவனுடைய தாயார் வெந்தயக் கீரையை சுத்தம் செய்து அடுக்கிக் கொண்டிருந்தார். அவனுடைய தந்தை கட்டிலில் படுத்துக் கொண்டு பீடி குடித்துக் கொண்டிருந்தார்.
இருட்டில் நான் யார் என்று சரியாக அடையாளம் காண்பதற்காக அவனுடைய தாயார் கண்களை சுருக்கிக் கொண்டு என்னை பார்த்தார். “யாரை பார்க்க வந்திருக்கிறீர்கள்?” அவனுடைய தந்தை உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.”நான் சங்கர் கௌடாவுடன் படித்தேன். இப்போது நான் பெங்களூரில் இருக்கிறேன். ஒரு திருமணத்தில் பங்கேற்க நான் நகரத்திற்கு வந்தபோது சங்கர் கௌடா இறந்து போன செய்தியை கேட்டேன். அவனுடைய தாயார் முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டார். “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள என்று கூறி நான் தொடர்ந்தேன். “என்னுடைய நோக்கம் உங்களை காயப்படுத்துவது அல்ல. அவனுடைய மரணச் செய்தி என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது. திடீரென்று சங்கர் கௌடா ஏன் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”. அவனுடைய தாயார் அழ ஆரம்பித்தார். அவர் எழுந்து உள்ளே போனார். இன்னமும் பீடி குடித்துக் கொண்டிருந்த அவருடைய தகப்பனாரை நான் பார்த்தேன்.
அவர் நீளமாக பீடியை இழுத்து புகையை வெளியே விட்டு விட்டு துண்டு பீடியை தரையில் போட்டு நசுக்கினார். “இறப்பவர்கள் எதற்காக இறக்கிறார்கள் என்று நாம் எப்படி சொல்ல முடியும். அவன் இறந்து விட்டான். அவ்வளவு தான். ஒருவேளை அவனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டதோ என்னவோ. இல்லாவிடில் எங்களை – இப்போது இங்கு காத்திருப்பவர்களை – தவிக்க விட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதனால் அவன் இறந்து போயிருக்கலாம்.” அவர் வெறுப்புடன் அமிலம் கக்கினார்.
“இல்லை. அப்படி எதுவும் இருக்காது… ஆனால் அவன் இறப்புக்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரிய வேண்டாமா?”
“எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களுக்கு தெரியாது” அவர் குரலை உயர்த்தினா சங்கர் கௌடாவின் சகோதரர்களும் அவர்களது மனைவிமார்களும் வெளியே வந்தார்கள். ” அதைப் பற்றி உனக்கு என்ன கவலை?” அவர் உரத்த குரலில் தொடர்ந்தார். “யார் நீ அவனுடைய கணவனா அல்லது காதலனா? ஏற்கனவே நாங்கள் தேவைக்கும் அதிகமான கவலையில் ஆழ்ந்திருக்கும் போது கரடியைப் போல நீயேன் நடுவில் வருகிறாய் அவன் ஏன் இறந்தான் என்று நீ கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனைப் போலவே நீயும் தற்கொலை செய்து கொள். மேலே போனதும் நீயே அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள். இப்போது வீட்டை விட்டு வெளியே போ” என்று அவர் கையை வாசற்புறம் நீட்டினார். அவருடைய கை கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.
நான் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டேன். கொஞ்ச தூரம் நடந்ததும் நான் திரும்பிப் பார்த்தேன். புறக்கடை பக்கம் சங்கரின் தாயார் நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரேனும் ஏதாவது எனக்கு சொல்ல கூடும் என்று நினைத்து நான் அவரை நோக்கி நடந்தேன். ஆனால் அவர் உடனேயே வீட்டுக்குள் திரும்பி விட்டார். அவர் மனம் மாறி வெளியே வருவார் என்று நான் வெகு நேரம் காத்திருந்தேன். ஆனால் அவர் வெளியே வரவில்லை.
வீடு திரும்பும் போது நான் கொம்மியை அவனுடைய வீட்டில் சந்தித்தேன். அவனுக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு மகன் இருந்தான். அவன் தன்னுடைய மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் அவருடைய மனைவி பிகாம் படித்திருந்தாள். ஹகர பொம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவள். கொம்மி தன் மகன் செய்யும் குறும்புகளைப் பற்றி பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து நான் அவனிடம் சங்கர் கௌடா ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று கேட்டேன். கொம்மி பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் தன் மகனிடம் “கண்ணே! சமையலறைக்குப் போ. உன் அம்மாவிடம் போ” என்று அனுப்பி வைத்தான். கொம்மி என் பக்கம் திரும்பினான். “நீ எப்போது பெங்களூரு திரும்பப் போகிறாய்?” என்று கேட்டான்.
“நாளைக்கு”
“பிறகு ஏன் இந்த பழங்கதைகளை எல்லாம் தோண்டி எடுக்க முயற்சி செய்கிறாய், அமைதியாக திரும்பிப் போ.” என்றான். ஆனால் என்னால் அதை அவ்வளவு சுலபமாக விட முடியவில்லை. நான் மௌனமாக கொம்மியை பார்த்தவறே அமர்ந்திருந்தேன். அவனால் வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. ” வா வெளியே போகலாம்” என்றான். நகரை விட்டு வெளியே இருந்த ஹோட்டலுக்கு அவன் என்னை அழைத்துச் சென்றான். நான் அவனிடம் நான் குடிப்பதில்லை என்று சொன்னேன்.
“அது எனக்கு தெரியும். ஆனால் எனக்கு குடிக்க வேண்டும். குடிக்காவிட்டால் இம் மாதிரியான விஷயங்களை என்னால் பேச முடியாது” என்று கோபத்துடன் கூறினான். அவன் கொரிப்ப்பதற்கும் குடிக்கவும் தேவையானவற்றை வாங்கிக் கொண்டான். பிறகு அவன் ஆரம்பித்தான். “சகோதரா இந்த ஊர் முன்பிருந்ததைப் போல இல்லை. ஆனால் நீ மட்டும் சின்ன வயதில் எப்படி இருந்தாயோ இன்னமும் அப்படியேதான் இருக்கிறாய். துளி கூட மாறவில்லை. நீ ஒரு நல்ல மனிதன். எங்களைப் போல் இல்லை. நீ எந்த கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்த நகரம் முன்னைப் போல இல்லை. கொஞ்ச நேரம் வரை அவன் இது போலவே தத்துவார்த்தமாக எதை எதையோ பேசிக் கொண்டிருந்தான். என்னுடைய பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது. நான் அவனுடைய கையைப் பிடித்து என் பக்கம் இழுத்தேன்.
“சொல். அவன் எப்படி இறந்து போனான்?”
கொம்மிக்கு லேசாக போதை தலைக்கேறி இருந்தது. அவன் என் கண்களை நேருக்கு நேர் பார்த்து, ” அவன் சாகவில்லை. அவர்கள் தான் அவனை சாகடித்தார்கள்” என்றான்.
“யார்?”
“அவனுடைய தந்தையும் சகோதரர்களும். அவனைக் கொன்று விட்டு தூக்கில் தொங்கவிட்டுவிட்டார்கள்.” அவன் தன்னுடைய கண்ணாடி டம்ளரில் இருந்ததை ஒரே மூச்சில் கவிழ்த்துக் கொண்டான்.
“அவன் அந்த வீட்டு மகன். அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்தவன் தானே”எனக்கு கண்ணீர் முட்டியது. “அவர்களால் அவனை எப்படி கொல்ல முடியும்?” கொம்மி தன் கண்ணாடி கிளாஸில் இன்னும் கொஞ்சம் மதுவை ஊற்றிக் கொண்டான். பதில் எதுவும் சொல்வதற்கு முன் இரண்டு மூன்று மிடறுகள் குடித்துக் கொண்டான். “உனக்கு மூட்டை பூச்சிகளைப் பற்றி தெரியும் தானே. அவை படுக்கைக்குள் புகுந்து கொண்டு இரவு முழுவதும் கடிக்கும். தூக்கத்தை கெடுக்கும். அந்த தேவிடியா மகனும் மூட்டை பூச்சியை போலத்தான். அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த காரணத்திற்காக மக்கள் மூட்டை பூச்சியின் மீது அன்பு காட்டுவார்களா? இல்லை. அவர்கள் மூட்டை பூச்சியை காண நேர்ந்தால் அதை நசுக்கி சாகடித்துவிட்டு கை கால்களை சுத்தமாக அலம்பிக் கொள்வார்கள். இதைத்தான் அவனுடைய தந்தையும் சகோதரர்களும் அவனுக்கு செய்தார்கள். ஒரு நாள் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அவர்கள் ஒரு தலையணையை அவன் முகத்தின் மீது அழுத்தி அவனை கொன்று விட்டார்கள். பிறகு அவனுடைய போர்வையையே உபயோகித்து அவனை உத்திரத்தில் தொங்கவிட்டு விட்டார்கள். அடுத்த நாள் காலை மார்பில் அடித்துக் கொண்டு அழுது எல்லோரும் பார்க்க பெரிய நாடகம் நடத்திவிட்டார்கள்.”
“உனக்கு யார் இதையெல்லாம் சொன்னது?”
“எனக்கு மட்டும் இல்லை. முழு நகரத்துக்கும் இது தெரியும். அந்த மூன்று பேரும் இதை ரகசியமாக வைத்திருக்க முயற்சித்தார்கள். ஆனால் சங்கருடைய தாயாரால் தன்னுடைய துக்கத்தை எப்படி மறைத்துக் கொள்ள முடியும்? அவர் சிலரிடம் தன்னுடைய துயரத்தை மனம் விட்டுச் சொல்லி அழுதிருக்கிறார். அவருடைய சோக கதையை கேட்டவர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அதே கையோடு அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்”
நான் பெருமூச்சு விட்டேன். “அவன் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான். அவர்கள் அவனை ஏன் கொலை செய்தார்கள்? அது எப்பேர்பட்ட கொடுமையான குற்றம்!”
“அவசரப்படாதே. அவசரப்படாதே. நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை. அவன் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் யாரும் இப்படி ஒரு செயலை செய்திருக்க மாட்டார்கள்!”
” உயிர் தியாகம் செய்ய வேண்டிய அளவுக்கு அவன் செய்த பாவம் தான் என்ன?”
“அவன் மும்பைக்கு ஓடிப் போய் விட்டான். அங்கு ஆறு மாதம் தங்கியிருந்தான். அங்கு அவன் தன் குறியை அறுத்து தள்ளிவிட்டு புடவையும் ரவிக்கையும் அணிந்து கொண்டு முழுவதும் பெண்ணாக மாறி திரும்பி வந்தான்.”
நான் வாயடைத்துப் போனேன். கொம்மி தொடர்ந்தான்.
அன்று உகாதிப் பண்டிகை. தேர் திருவிழா வேறு. இடையர்கள் பறை அடித்துக் கொண்டிருந்தார்கள். நந்தி கொலு ஆடுபவர் ஆடிக்கொண்டிருந்தார். இவன் புயலென உள்ளே புகுந்து இடையர்களின் பறைக்கு ஏற்றபடி ஆட ஆரம்பித்தான். பார்ப்பதற்கு திரைப்பட நடிகையைப் போல இருந்தான். நம் நகருக்கு வந்திருக்கும் இந்த புதிய பெண் யார் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். நகரத்து இளவட்டங்கள் இடுப்பை ஒசித்து நெளித்து அவனோடு கூட சேர்ந்து அதே வேகத்தில் ஆட ஆரம்பித்தனர். யாருக்குமே அது சங்கர் தான் என்று அடையாளம் தெரியவில்லை. தேர் பசவன்னா கோவில் வாசலை வந்து சேரும்போது நானும் என் மனைவியும் தலை குனிந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் சங்கர் அருகே வந்து சந்திரவ்வா எப்படி இருக்கிறாள் என்று கேட்டு கிண்டலாக சிரித்து விட்டு சென்றான். அப்போது தான் அவன் யாரென்று எனக்கு அடையாளம் தெரிந்தது. எனக்கு அப்போது தான் திருமணம் ஆகி இருந்தது. சந்திரவ்வா யார் என்று கேட்டு என் மனைவி தொந்தரவு செய்ய ஆரம்பித்ததும், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எனக்கு அவளைச் சமாதானம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது.”
அடுத்த நாளே அவன் தன் கைவண்ணத்தை காட்ட ஆரம்பித்து விட்டான். அவன் நேராக என் கடைக்கு வந்தான். “எனக்கு ஐந்து பிராவும் ஐந்து ஜட்டிகளும் வேண்டும்” இன்று அதட்டலாக கேட்டான். நான் அவனை கடையை விட்டு உடனே வெளியேறும்படி கூறினேன். ஆனால் அவனுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு தைரியம் வந்ததென்று தெரியவில்லை. “எனக்கு என்ன தேவையோ அதை நான் வாங்குவேன் அதில் உனக்கு என்ன சங்கடம்?”என்று பதிலளித்துவிட்டு அவனுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுதான் கடையை விட்டு அகன்றான். இந்த செய்தி நகர் முழுவதும் தீயைப் போல பரவியது. நகரத்து மக்கள் அவருடைய தந்தையையும் சகோதரர்களையும் பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுத்தனர்”. கொம்மி நடுவே நிறுத்தினான். “அவர்களுடைய மகன் பெண்ணாக மாறி புடவையைச் சுற்றிக்கொண்டு அவர்கள் நடுவே வந்து நின்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்? நீயே சொல்!” என்றான். “அவர்கள் அவனை வீட்டை விட்டு துரத்த முயற்சி செய்தார்கள். அவன் சொத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று தன் உரிமையை நிலைநாட்ட முயற்சித்தான். சொத்தில் மகன்களுக்கு மட்டும்தான் பங்கு மகளுக்கு இல்லை என்று அவனுடைய சகோதரர்கள் தகராறு செய்தார்கள். மும்பையில் அவனுக்கு யார் இந்த அளவுக்கு தைரியம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை, அவன் ஒரு போதும் வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டான். அவன் குளித்து சாப்பிட்டு தூங்கியது எல்லாமே அந்த வீட்டில் தான்”
அதோடு அவன் தன் குசும்புகளை நிறுத்திக் கொள்ளவில்லை. நகரத்தில் இருந்த ஆண்களை ஒருவர் பின் ஒருவராக தன் வசப்படுத்த ஆரம்பித்தான். அவன் பார்ப்பதற்கு அச்சசல் பெண்ணை போலவே மாறிவிட்டான். பார்க்க மிக அழகாக தோற்றமளித்தான். நம்பினால் நம்பு, நம் நகரத்துப் பெண்கள் ஒருத்தி கூட அவனுடைய அழகுக்கு முன் நிற்க முடியாது. இடுப்பு, தொடை, பின்பகம், மார்பகம் என உடலின் முக்கியமான பாகங்கள் அனைத்தையும் மும்பையில் அவன் சரி செய்து கொண்டிருந்தான். ஆண்களும் ஒருவர் பின் ஒருவராக அவனிடம் செல்ல ஆரம்பித்தனர். அவன் அதை ஒரு தொழில் போல நடத்த ஆரம்பித்தான். வீட்டிலிருந்த பெண்கள் அவனுக்கு வயிறெரிந்து சாபமிட்டனர். கிராமத்து மக்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் கௌடாவும் அவரது குடும்பத்தினரும் அவமானத்தில் தலை குனிந்தனர். அதுமட்டுமில்லை பஞ்சாயத்து தேர்தலில் அதுவரை ஒருமுறை கூட தோற்றிறாத அவனது தந்தை அந்த முறை படுதோல்வியை சந்தித்தார்.
அவர்களும் எவ்வளவு நாள் தான் இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்வார்கள்? கிராமத்தில் அவர்களுடைய குடும்பம் ஒரு காலத்தில் மிகுந்த மரியாதையுடன் வாழ்ந்து வந்தது. அவர்களுடைய பொறுமை எல்லை மீறி விட்டது. என்ன வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிடுகிற அளவுக்கு கொம்மி குடிபோதையில் இருந்தான். கடைசியில் அவருடைய தந்தையும் சகோதரர்களும் அவனை கொலை செய்து விட்டார்கள். கிராமத்தில் இப்போது எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள்”
“அவனை சாகடிப்பதற்கு பதிலாக அவன் கேட்டபடி சொத்தில் பங்கை கொடுத்திருக்கலாம் இல்லையா?” நான் கொம்மியிடம் கேட்டேன். “அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்திருந்தால் அதை வைத்து அவன் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அதில் அமைதியாக வசித்து இருப்பான்”
“அடடா! இங்குதான் நீ மறுபடியும் தவறு செய்கிறாய். அவனுக்கு பணத்துக்கு ஒரு பஞ்சமும் இல்லை. அவனுடைய தொழில் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தது. அவன் இறந்தபோது அவனுடைய கணக்கில் ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்ததாக நான் கேள்விப்பட்டேன். தனக்குப் பிறகு தன் அம்மாவுக்கு அந்த பணம் கிடைக்குமாறு அவன் எழுதி வைத்திருந்தான். பணத்தை யாராவது விடுவார்களா? இரண்டு மகன்களும் அம்மாவை வங்கிக்கு அழைத்துச் சென்று மொத்த பணத்தையும் அவனுடைய கணக்கிலிருந்து எடுத்து விட்டார்கள். உண்மையில் பணம் ஒரு பிரச்சனையே இல்லை. அவனுடைய சிறுமதி தான் அத்தனை பிரச்சனைக்கும் மூல காரணம். அதே வீட்டில் தான் தங்குவேன் என்றும் தனக்கும் அவர்களைப் போல எல்லா உரிமைகளும் உண்டு என்றும் அவன் அவர்களை வற்புறுத்தினான். இது பைத்தியக்காரத்தனம் இல்லையா, சொல்? கொம்மி வயிறு குலுங்க சிரித்தான்.
எனக்கு வயிற்றைப் பிரட்டியது.
“இதோ பார் சகோதரா! இதில் நீ வருத்தப்பட எதுவும் இல்லை. கண்ணில் பட்ட ஆண்கள் எல்லோரோடும் அவன் உறவு வைத்திருந்தான். கண்டிப்பாக அவனுக்கு ஒரு நாள் எய்ட்ஸ் நோய் வந்திருக்கும். அவன் நோய்வாய்ப்பட்டு வேதனையில் இறந்திருப்பான் ஆனால் அதற்கு முன் நகரத்தில் இருக்கும் அனைவருக்கும் அவன் நோயைப் பரப்பி இருப்பாள். அப்படி நடப்பதற்கு முன்னால் அவனை சாகடித்ததன் மூலம் அவனுடைய தந்தையும் சகோதரர்களும் நல்லதைத் தான் செய்திருக்கிறார்கள். எனக்கு மேற்கொண்டு எதுவும் கேட்க விருப்பமிலலாததால் பணத்தைக் கொடுத்துவிட்டு கொம்மியை அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வலுக்கட்டாயமாக தள்ளிக் கொண்டு வந்தேன்.
இன்னமும் குடிபோதையில் இருந்த கொம்மி பெண்ணாக மாறிய சங்கர் கௌடாவின் அழகைப் பற்றியே வர்ணித்துக் கொண்டிருந்தான். என்னதான் சொல் அந்த தேவிடியா மிகவும் அழகாக இருந்தாள். கையை கழுவி சுத்தம் செய்து கொண்டுதான் தொட வேண்டும் என்கிற அளவுக்கு அப்பழுக்கற்ற அழகு. அவள் புடவை கட்டிக் கொள்கிற விதமும் அதற்கு ஏற்றார் போல ரவிக்கை அணிவதும் கழுத்தில் மாலைகளும் கைகளில் வளையல்களும், பூசிக்கொள்ளும் பவுடரும் வாசனை திரவியங்களும், ஆஹா! வீடு வந்து சேர்ந்ததும் என் கையை குலுக்கி விட்டு அவன் விடை பெற்றான்.
“கொம்மி, உன்னிடம் நான் ஒன்று கேட்பேன். உண்மையை சொல்வாயா” என்றேன்.
“கேளுங்கள் மகாராஜா! என்ன கேட்க வேண்டுமோ கேளுங்கள்! நான் உண்மையைச் சொல்கிறேன். உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டேன். நீதிமன்றத்தில் சொல்வது போல சொல்லி, தன் பதிலை எண்ணி தனக்குத்தானே சிரித்துக்கொண்டான்.
“நீயும் சங்கர் கௌடாவுடன் மகிழ்ந்திருந்ததுண்டா?”
கொம்மியின் சிரிப்பு சட்டெனன நின்றது. அவன் அவசரமாகக் கையை விடுவித்துக் கொண்டு தன் வீட்டுக் கதவருகே சென்று திரும்பிப் பார்த்தான்.
“யாரேனும் என் அருகில் படுத்து கொண்டு என்னைத் தொட்டு ஆரத்தழுவி முத்தமிட்டால் நான் எப்படி சும்மா இருக்க முடியும்? நானும் ஆண் தானே! இந்த நகரத்தின் மற்ற ஆண்களைப் போலத்தானே நானும்! ” அவன் வேகமாக நடந்து வீட்டுக்குள் சென்று கதவை சத்தத்துடன் அறைந்து மூடினான்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
