வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள்

என்னுடைய சிறப்பான கவிதைகளாக என்னாலும் வாசகர்களாலும் விமர்சகர்களாலும் கருதப்படும் பல கவிதைகள் ஈழத்தின் வன்னிக் காட்டு நிலத்தின் பகைப்புலத்தில்தான் எழுதப்பட்டன. 

எனக்கு ஊர் கரவெட்டி. ஆறுகளோ காடுகளோ இல்லாத ஊர். ஆண்டின்  எட்டு மாதங்களும் அரைப்பாலைவனம் போலத்தான் என்னூர் இருக்கும். 

சிறுவயதிலிருந்தே எனக்கு காட்டில் ஆராத காதல். என் அப்பாவின் ஊர் வரணி. அவ்வூரின் எல்லைகளில் காடுகள் உண்டு.  என்னுடைய கனவுகளில் வரும் காடுகள் அப்பாவின் ஊரிலிருந்து தொடங்கும்.  வன்னி என்னைப்பொறுத்த வரையில் அப்பாவின் ஊரிலிருந்தே தொடங்குகிறது.

சேகுவேராவின் மோட்டார் வண்டி டயறீஸ் படித்திருப்பீர்கள். அப்படி ஒரு சாகசப் பயணத்தை மிதிவண்டியில் நானும் என்னுடைய பாடசாலை நண்பன் கஜேந்திராவும் எம்முடைய பதினேழு வயதில் செய்தோம். அப்போது இரண்டாம் ஈழப்போர் தொடங்கி யாழ்ப்பாணமும் வன்னிப் பெருநிலமும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தவர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை.  கஜேந்திராவின் உறவினர் குடும்பமொன்று மாங்குளம் கரிபட்ட முறிப்பிலிருந்தது. அங்கு சென்று அவர்களின் உதவியோடு காட்டுப்பாதைகள் வழியாக புலிகளை உச்சி வவுனியா நகர் வழியாக கொழும்புக்கு தப்பிச் செல்வதே நமது திட்டம். 

அப்போது நான் ஒரு எழுத்தாளனாகி விட்டேன். என்னுடைய 16 வது வயதிலேயே என் முதல் சிறுகதை என் சின்னக்கால இலக்கியக் குருவான அ.யேசுராசாவின் திசை பத்திரிகையில் பிரசுரமாகிவிட்டது. இலக்கிய வெறிகொண்டு தீவிரமாகப் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த காலம். உலக சினிமாக்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒரு திரைப்பட இயக்குனராக வருவதே என் சின்னக்காலக் கனவு. புலிகளின் போர் நிலத்திலிருந்தால் என் கனவுகள் நனவாகாது என்பதால்தால் நான் ஊரைவிட்டு ஓட முடிவு செய்தேன். 

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போது நான் புலிகளின் பிரச்சாரங்களால் கவரப்பட்டு புலி ஆதரவாளனாகவே இருந்தேன். SOLT எனப்படுகிற புலிகளின் மாணவர் அமைப்பில் நான் உறுப்பினராகவும் இருந்தேன். எனக்கு 17 வயதே அப்போது.

என்னுடைய ஐந்து வயதில் அம்மாவையும் ஏழு வயதில் அப்பாவையும் இழந்தவன் நான். என்னையும் அண்ணாவையும் தங்கச்சியையும் வளர்த்தது தாத்தாவும் சின்னம்மாக்களுமே. 

என்னுடைய சாகசப் பயணத்திற்கு அப்போது 81 வயதாக இருந்த தாத்தா கடும் எதிர்ப்பாக இருந்தார். எனக்குள் எப்படி ஒரு மிருகம் வந்ததோ தெரியாது. அவர் என்னை கொழும்பு செல்ல அனுமதிக்காவிட்டால் நான் இயக்கத்துக்கு போகவேண்டிவரும் என்று மிரட்டினேன். அவர் பேச்சிழந்து மிரண்டுபோனார். என்னுடைய சின்னம்மாவே தாத்தாவுக்கு தெரியாமல் செலவுக்கு பணம் தந்தார் 

முதலில் ஒரு ‘றெக்கி’* பார்க்கும்  பயணமாக இரு மிதிவண்டிகளில் கிளாலி கடல் கடந்து கிளிநொச்சி போய் கரிபட்ட முறிப்புக்குப் போனோம். ஒரு இரவும் அரைப்பகலும் செலவான மிதிவண்டிப் பயணம். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்தோம். கஜேந்திராவின் உறவினர் காட்டுப் பாதைகளில் அறிவுடைய தன் வன்னி நண்பர்களிடம் எம்மை அழைத்துப்போய் உதவி கேட்டார். அவர்கள் சாத்தியமான வழிகளைச் சொன்னார்கள். பிறகு ஊர் திரும்பி நிரந்தரமாக ஊரைவிட்டுப்போகும் வன்னிப் பயணத்தை செய்தோம். இரு தடவைகளும் கஜேந்திராவின் அம்மா எம் வன்னிப் பயணத்திற்கு புளிச்சாதம் கட்டித் தந்தார். வாழ்வில் முதல் முறையாக நான் புளிச்சாதத்தை புசித்தது அப்பயணங்களில்தான். 

இரண்டாவது தடவை ஏறத்தாள ஒரு மாதம் நாம் வன்னி கரிப்பட்ட முறிப்பிலிருந்தோம். ஆசையோடும் நிராசையோடும் நாம் எல்லைகடந்து கரைசேருவோமா என்று வாழ்ந்த அற்புதமான காலம்  கரிப்பட்ட முறிப்பில் கஜேந்திராவின் உறவினரின் பெருந்தயவில் வாழ்ந்த காலம். 

அப்போது ஸ்ரீலங்கா அரசின் பொருளாதாரத் தடை இருந்ததால் சவர்க்காரம், பற்பசை கிடைக்காது. தினமும் சவர்க்காரம் இல்லாமல்தான் குளித்தோம். கரியாலும் குச்சிகளாலும் பல் துலக்கினோம். ஆனால் சாப்பாடுகள் அற்புதம். தினமும் மான், மரை முதலிய இறைச்சிகள். அமேசன் காட்டு  பழங்குடி மக்களைப்போலவே வாழ்ந்த மகத்தான ‘சங்க காலம்’ அது.

இரண்டாம் ஈழப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தாலும் தன்னிறைவான வன்னியில் ஒரு காட்டு உள்ளுரில் போரின் உக்கிர தாக்கங்கள் தெரியவில்லை. 

காலையில் எருமைப் பால் தேநீரிலிந்து தொடங்கும் நம் அன்றாட வாழ்க்கை. யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்த ரூபன் என்கிற பையன் அப்போது அங்கிருந்தான். அவன்தான் எங்களை வீட்டிலிருந்து  நடை தூரத்திலிருந்த காடுகளுக்கு அழைத்துப்போவான். கால் களைக்க காடுகளில் நடப்போம். தேன் கலந்து எருமைத் தயிர் உண்போம். என்னுடைய கவிதைகளில் வருகிற வன்னிக் காட்டு மரங்களினதும் பறவைகளினதும்  பெயர்களை எனக்குச் சொல்லித் தந்தது ரூபன்தான். ஒரு தடவை நடுக்காட்டிலிருந்த கற்கிடங்கு கோயில் விழாவுக்கு போனோம். அந்த அனுபவத்தை வைத்து நான் எழுதிய கவிதை இது.

காடு

நடுக்காட்டுக் கோவிலிலிருந்து
பறை அழைத்தது
ஆடுகுத்துகிற மீசைக்காரக் கறுவல்
தன்முகம் சோகத்தோடு நீண்டு அடிக்கிறான்
பறை ஓய்வுக்குப் பின்னாலும்
நெடுநேரம் அவன் முகத்திலிருந்து
கடந்தகாலம் துயரத்துடன் இசைந்தது
இனி அனைத்தையும் கழுவிக் கொண்டுபோக
சத்தமில்லாத மழை
நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து தூறியது
மருதமரங்கள், காயா, வஞ்சூரன், பனிச்சமரங்கள், கொய்யா
இவற்றில் வெண்மை படிந்தது
பழங்காலக் காவில் மணியும்
சனங்களுக்காகவும் கனகாலம் இருந்த தனிமைக்காகவும்
சிணுங்கியது

தோளிலிருந்து பறையை இறக்கி
கொஞ்சம் புக்கைக்காக பறையன் இருந்துவிட்டு
பறையை எடுத்துக்கொண்டு குனிந்து போனான்
கிறவல் பாதையில்
மண்ணில் புதைந்து வந்தேன் நான்
இக்கங்குல்காலத்தில்
ஈனஸ்வரத்தில் பூனை அழுகிறமாதிரி
மயில்கள் அகவுகின்றன.
❤❤

இது போல பல காட்டுக் கவிதைகள் வன்னியில் நான் வாழ்ந்த ஒருமாத அனுபவங்களிலிருந்து விளைந்த கவிதைகளே.

கடல்தான் தம் குருதியில் ஓடுகிறது என்று மகத்தான கடலோடிகள் சொல்வார்கள். என் குருதியில் ஓடுவது காடு. நான் காட்டான். காட்டை நட்சத்திரன் செவ்விந்தியனிடமிருந்து பறித்துவிட்டால் செவ்விந்தியன் என்கிற கவிஞனே இல்லை. 

தமிழில் எனக்குப் பிடித்த சொல் ஊரா காடா  என்பதில் எனக்குள் நிறைய போராட்டம் நடந்தது. இறுதியில் காடே வென்றது. காடு ஊரைவிடத் தன்னிறைவானது. சங்ககாலத்தில் ஊரே காடாக இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் காடு இருந்தது. பாலை நிலமும் பாலைவனமாகவே இருந்தது.வயலும் காடாக வயல்காடாக. மலையும் மலைக்காடாக. 

இதற்கிடையில் வன்னியிலிருந்து புலிகளை உச்ச பலரைச் சந்தித்தோம். ஒரு தடவை கஜேந்திராவின் உறவினர் வழிகாட்டி ஒருவரைச் சந்திக்க நம்மை பின்னேரம் அனுப்பினார். இருட்டாகிவிட்டது. நாம் திரும்பும் வழி யானைகள் உலாவும் பாதைகள் என்பதால் வன்னி விருந்தோம்பலுக்கேற்ப அவரின் வீட்டில் தான் இனி நாம் தங்கவேண்டும். அவர் மரை வத்தலும் கத்தரிக்காயும் பருப்பும் சோறோடும் நல்ல விருந்து தந்தார். பின் எச்சரிக்கையோடு சொன்னார். அவருடைய மனைவியின் தம்பி புலி இயக்ககாரன். இரவு நேரத்தில் அவன் அங்கு வருவது வழக்கம். அவன் வந்தால் தன்னையும் எம்மையும் தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்வான். ஆகவே அன்றிரவு நாங்கள் அவரின் லொறிப் பெட்டிக்குள் தூங்கினோம். 

நாங்கள் கரைசேர்வோமா என்கிற நிராசையில் எழுதிய இரண்டு கவிதைகள் இவை

மந்து பத்தின நாட்கள்

இந்த வீதியால் சென்றால்
மந்துக்காடுகளுக்குச் செல்லலாம்
திரும்பிப்போனால்
திரும்பி ஊருக்குப் போகிறதைப் பற்றி யோசிக்கவே முடியாது.

இன்றைய சூரியனும் அஸ்தமிக்கிறது
செம்மஞ்சள் சூரியன்
கல் மிதக்கும் தார் வீதியின் பின்
அடியில் மறைகிறது
நேற்று அது
பட்ட மரங்களும்
தூரத்தில் கருநீலமும் அடித்த காட்டில் மறைந்தது
காலையிலிருந்து கழுவாத என்முகத்தில்
அதன் செம்மை கவிந்தது

வீதியால்
பள்ளமான ஒழுங்கைக்குள் இறங்கிப்போய்
கொஞ்ச நேரம் விளக்கில் இருப்பேன்
பிறகு சொற்பமாகச் சாப்பிட்டு விட்டுப் படுப்பேன்
💎💎
கடக்கப்படாத எல்லை
நம்பிக்கை குலைகிறது
ஒரு காலத்தில் அப்படியொரு காட்டுப்பாதை
இருந்தது எனச் சொல்கிறார்கள்
ஒரு மாதத்திற்கு முன்னால் கடந்தவர்களும் இருக்கிறார்கள்

செக்கரில். தோல்வியில்
வீட்டு நினைவுகள் துழாவுகின்றன
எல்லாவற்றையும் எழுத முடிகிறதா என்ன

இன்றைய காலை விழிப்பில்
அதிகமாய் அமுங்கிப் போனேன்
இருபது நாட்களாக இங்கு தங்கியிருந்தேன்
ஒரு ஒற்றையடிப் பாதையைத் தானும்
கண்டடையவில்லை

ஊருக்குத் திரும்பி என்னத்தைச் சொல்வேன்
அங்கே எனக்கு
கல்லறை கட்டி எழுதியும் விட்டிருப்பார்கள்
இந்நாளில் அதில் பட்டி மரங்களும் மண்டி
பாசி பிடித்தும்
எழுத்துக்கள் அழிந்து சிதிலமடைந்தும்…

“காட்டு வழியாய் எல்லையைக் கடந்தவன்;
இந்நேரம் தூரதேசத்தில்
படித்துக் கொண்டிருப்பான்;
கெட்டிக்காரன்; இனி தேசத்துரோகி”

இன்னமும்
ஆபத்தான எல்லையைப் பற்றியே
இரவில் கவலைப்படுகிறேன்

மிதிவெடிகளுக்கும்
ஆட்காட்டிக் குருவிகளின் சிடுசிடுப்புக்களுக்காகவும்
தேசத்துரோகிகளுக்கு விழும் அடிகளுக்காகவும்
என் ஜீவனே இரவில் பயப்படுகிறது

பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது

எல்லையோரக் காடுகளில்
கரிகொண்டு,
பல்துலக்கி நாள் கழிகிறது
சாவும் போரும் நகர்கிறது
💎💎

வன்னியில் ஆநிரைகள் நிறைய உண்டு. காலையும் மாலையும் மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டிமாடுகள் வீதியால் போய்வருவது கொள்ளை அழகு. அதை வைத்து நான் எழுதிய கவிதை இது.

💎

மாலையில்  தூறல் மழையில் வயல்களும் மதகுகளும் கடந்து    நாங்கள் ஓடிவந்தோம்     ஓட முடியாதபோது கொஞ்ச நேரத்துக்கு கால்வாய்கட்டில் இருந்தோம் 

ஒரு கோவிலில்  கடக்கவே முடியாதென்று செம்பரியான் சொன்னான். சாக்காட்டுப் புழுதியடிக்க குளக்கட்டிலேறி மிஞ்சியிருந்த  புற்களில் போயிருந்தோம்

குளத்துக்குள் வந்த மரங்கள் பட்டுள்ளன. சொட்டுத் தண்ணி கூட இல்லமல் வரண்டுள்ளது. இரவுக்கு முன் நீலவானத்தை நெடிதுயர்ந்து வான்நோக்கி தனிமைகொண்ட பட்டமரக்கிளைகள் மறைக்கவும் தெரிகிறது அப்பால் நிலத்தில் காடு கொள்வது. மதியத்தில் கதறும் ஆலா இருப்பது ஆனாலும் அவநம்பிக்கையில்       துவண்டு போயிருந்தோம்     எல்லை கடந்தபிறகு   முரட்டுப் பட்டமரக்கிளைகளும்      தலையணையைப்போல     காட்டுக்கிராமத்தின் ஒத்திசைவை  அனுபவிக்க தவறியது     தெரிகிறது

ஒரு அரைப்போத்தல் பியர் குடிக்கக்கூட நீ பஞ்சிப்படுகிறாய் வரம்புகளைக் கடந்து          ஏழெட்டு எருமைமாடுகள் உழுத    மண்ணின் பிரவாகத்தில் உன்பியர்                     எப்போதும் நுரைத்துக்கொண்டிருக்கும்   

பின்  காட்டில் நடக்க ஏறுகிறது அன்றைய நினைவு .காலைப்பசியில் நாங்கள்   மைல் கல்லில்  சம்புப் புற்களைப்பிடித்துக்கொண்டும் சப்பித் துப்பிக்கொண்டும்           கல்லடிபட்டுக் கிடங்குகளுமுள்ள   தார் றோட்டில்  பட்டிமாடுகள் குளம்புகள் அடிபடச்சென்றன 

💎💎     

ஏறத்தாள ஒரு மாத முடிவில் கஜேந்திராவின் உறவினரே நாங்கள் களவாக எல்லை கடக்கும் திட்டமொன்றை வரைந்தார். காட்டு வழிகளில் அறிவுடைய அவருடைய நண்பர்கள் வழிகளைச் சொன்னார்களே தவிர புலிகள் மீதான பயத்தால் எங்களைக் கூட்டிச் செல்ல முன்வரவில்லை. 

புலிகளின் Pass அனுமதிப் பத்திரம் பெற்ற பயணிகளோடு பயணிகளாக நாங்கள் தாண்டிக்குளம் தடுப்புக்குச் சென்றோம். பிரதான வீதியில் புலிகளின் தடுப்பு அலுவலகமும் சென்றியும் இருந்தது. வீதியின் இருபுறமும் காடு. நிரைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

தான் பீச்சப்போகிறேன் என்று  எல்லோரிடமும் கேட்கக் கூடியவாறு சொல்லிவிட்டு தன்னுடைய யட்டியைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு  காட்டுக்குள் இறங்கி றெக்கி பார்க்க நடந்தார் உறவினர். அரை மணித்தியாலத்தில் திரும்பி வந்தார். 

எல்லைகளிலும் ஊர்கள் இருக்கும். இருக்கிறது. காட்டுக்குள் ஊரும் ஒரு குளமுமிருக்கிறது. உறவினர் குளத்தில் குண்டி கழுவுகிறமாதிரி நடித்து விட்டு குளத்தில் குளித்திருக்கிறார். அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களிடம் கதை கொடுத்திருக்கிறார். அவர்கள் எல்லைக்கு அப்பாலிருக்கும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த லொறி ஓட்டுனர்களும் சிப்பந்திகளும். 

எங்களையும் பீச்சுகிற மாதிரி நடித்து குளத்துக்கு சென்று குளித்து அதே பாதையில் போய் எல்லை கடக்கச் சொன்னார். கஜேந்திராவையும் என்னையும் தனித்தனியாகப் போகச் சொன்னார். எதிர்ப்படுபவர்கள் எல்லோரும் புலிகளின் ஒற்றர்களாக இருக்கலாம். ஆகவே எங்களை யாரும் விசாரித்தால் ராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியிலிருந்து வந்த லொறிச் சிப்பந்திகள் என்று சொல்லச் சொன்னார். 

கஜேந்திரா முதலில் காட்டில் இறங்கினான் ஒரு பத்து நிமிடம் கழித்து நான் இறங்கினேன். அதே பீச்சும் சடங்கு செய்து குளத்துக்குப் போனால் கஜேந்திரா தனியே குளத்தில்  குளித்துக் கொண்டிருந்தான். நாங்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது ஊர் மக்கள் சிலர் குளிக்க வந்தார்கள். எங்களை யார் என்று விசாரித்தார்கள். 

குளித்துக் கரையேறி தெற்கே நடந்தால் புலிகளின் சோதனைச் சாவடியில் அனுமதிக்கப்பட்ட மக்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ராணுவத்தின் சோதனைச் சாவடி நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இராணுவத்தின் சென்றிகளும் ஆங்காங்கே கண்ணில் பட்டன.ஆனானப் பட்ட புலிகளை இப்படி இலகுவாக உச்சலாம் என்பது கனவா நனவா?  நாம் கனவில் நடக்கிற மாதிரித்தான் எல்லை கடந்தோம். 

எங்களுடைய பயணப் பொதிகளை முறையாக புலிகளின் அனுமதிப்பத்திரம் பெற்றுவந்த ஒரு பயணியிடம் கொடுத்திருந்தோம். என்னுடைய பொதியில் ஆடைகளை விட அதுவரை நான் சேகரித்த கவிதை முதலிய இலக்கியப் புத்தகங்களே இருந்தன

வவுனியா நகரிலிருந்து யாழ் தேவி ரயிலில் கொழும்பு மாநகர் வந்தேன். வன்னி காட்டு அனுபவங்களை வைத்து எழுதிய கவிதைகள் நான் கொழும்பிலிருக்கும் போது எழுதப்பட்டவையே. பிறகு நாலு,  ஐந்து மில்லியன் மக்கள் வசிக்கும் சிட்னி மாநகருக்கு வசிக்க வந்தேன். காடு என்னிடமிருந்து நிரந்தரமாகப் பறிக்கப்பட்டது. அன்றிலிருந்து என்னால் நல்ல கவிதைகளை எழுத முடியவில்லை.

இப்போது சிறுகதைகளும் நாவல்களுமே எழுத முடிகிறது. காட்டை என்னிடமிருந்து பறித்துவிட்டாலும் என் புனைகதைகளில் எவராலும் காட்டைப் பறிக்க முடியவில்லை.காடு என்ற சொல் இடம்பெறாது என்னால் ஒரு புனைவையும் எழுதவும் முடியவில்லை.

சங்ககாலக் கவிஞர்களுக்கு விசித்திரமான புனை பெயர்களை அவர்களின் கவிதை வரிகளிலிந்து கொடுப்பார்கள். இயற்கையும் நிலமும் பறவைகள் விலங்குகள் சார்ந்த பெயர்களாக இருக்கும். ஓதலாந்தையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ இப்படியான பெயர்கள். நான் சங்ககாலத்தில் வாழ்ந்திருந்தால் காடு பாடிய பெருங்காட்டான் என்றெனக்கு பெயரிட்டிருப்பார்கள். எனக்கொரு மகன் பிறந்தால் அவனுக்கு காடு என்றே பெயர் வைப்பேன். 

  • றெக்கி = Recce(reconnaissance)

எப்போதாவது ஒருநாள், கவிதைத்தொகுதி, நட்சத்திரன் செவ்விந்தியன், தாமரைச் செல்வி பதிப்பகம், 1999.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.