15

“வடிவம் தான் செயல்பாட்டை தீர்மானிக்கும்னு என்று உயிரியலில் சொல்வார்கள் தெரியுமா?” என்ற ரேவாவின் கேள்வியை கேட்டதும் எனக்கு இந்த சந்திப்புக்கு ஏன் ஒத்துக்கொண்டோமென்று ஆயாசமாக இருந்தது. பெரும்பாலும் கல்வித்துறையை சேர்ந்த ஆட்களை நான் சந்திக்க தயங்குவேன். அவர்களின் பெரும் பீடிகைகளையோ சொற்பொழிவுகளையோ கேட்கும் மனநிலையை கடந்து விட்டிருந்தேன். 

ஆனால் ரேவா சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நிதனின் குழுவில் முதன்மை இடத்தில் இருப்பவர் என்பதால் இந்த சந்திப்புக்கு ஒத்துக்கொண்டேன். செயற்கை நுண்ணறிவைக்கொண்டு நிதன் கண்டுபிடித்த தடுப்பு மருந்து உலகையே பெருந்தொற்றிலிருந்து காப்பாற்றியதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருந்தது. எல்லா பிரபலங்களையும் போல நிதனின் ஒளி வட்டத்திற்கு பின் இருள் வட்டமும் இருந்தது. 

நான் அப்போது என் அறிவியல் பத்திரிக்கையில் என் இடத்தை உறுதி செய்யப் போகும் ஒரு செய்திக்காக அலைந்து கொண்டிருந்தேன். லண்டனின் அந்த கூட்டமில்லாத உணவகத்தின் இருட்டு மூலையில் ரேவாவின் கண்கள் மெல்லிய கண்ணாடிக்குள் வேகமாக நகர்ந்தன. அது அவருடைய செய்கைகளுக்கு ஒரு ரகசியத் தன்மையை கொடுத்தது, 

ரேவா தொடர்ந்தார் “வைரஸின் RNA புரத மடிப்புகளின் வடிவம்தான் அதன் செயல்பாட்டை தீர்மானிக்கிறது. அதைத்தான் நாங்கள் நான்கு வருடமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தோம்.”

“ஆனால் நான்கு வருடங்கள் என்பது மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு பெரிய காலம் அல்லவே?” நான் அவரை இடை மறித்தேன்.

“ஆமாம். ஆனால் நாங்கள் மருத்துவ துறையில் ஆராய்ச்சி செய்யவில்லை. செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சி செய்கிறோம். செநுவில் நான்கு வருடங்கள் என்பது நாற்பது வருடங்களுக்கு சமம். நாங்கள் செநுவை கொண்டு வைரஸின் புரதங்ககளை எதிர்க்கும் புரத மடிப்புகளை வடிவமைக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் முன்னேற்றம் மிக மெதுவாக இருந்தது. முதலீட்டாளிர்கள் மற்ற துறைகளைப் போலவே  செநுவின் பாய்ச்சலை இங்கேயும் எதிர்பார்த்தார்கள். அவர்களிடமிருந்து அழுத்தம் மிக அதிகமாக இருந்தது.”

“செநுவின் பாய்ச்சல் எல்லோரும் அறிந்ததுதானே? உங்கள் ஆராய்ச்சி ஏன் தாமதமாயிற்று?” என் பொறுமையின்மை தொடர் கேள்விகளாக வெளிவந்தது. 

ரேவா அதனால் பாதிக்கப்படாதவராக ஒரு ஆசிரியரின் நிதானத்துடன் பதிலளித்தார். “செநு ஏற்கனவே இருக்கும் முன்னறிவை தகவல்களாக தொகுத்து ஆராய்ந்து முன்னேறுகிறது. உங்களூரில் சுருதி என்று சொல்வார்களே அது போல. எங்களுடைய இந்த ஆராய்ச்சியில் முன்னறிவு தகவல்கள் மிகவும் குறைவு. அதாவது நாம் மிகச்சில வைரஸ்களையே அறிந்திருக்கிறோம்”

“அப்படியா சொல்கிறீர்கள்? நாமென்ன அவ்வளவு குறைவான நோய்க்கிருமிகளுடனா வாழ்கிறோம்?” என் கேள்வி எள்ளலுடன் வெளிப்பட்டது. 

“நான் அப்படி சொல்லவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவல்கள் குறைவு. மேலும் HIV போன்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் மிகப்பெரும் ரகசியமாக பாது காக்கப்படுகின்றன. எனவே எங்கள் முயற்சி மிக மெதுவாக இருந்தது.” ரேவா முள் கரண்டியால் உணவை சற்று நேரம் அளைந்து கொண்டிருந்தார். 

அவர் முதலில் சொன்னதை தொடராமல் “உனக்கு செநு ஆராய்ச்சியின் இரண்டாவது கட்டம் என்னவென்று தெரியுமா?” என்றார்.

“ம். அனுமானம்! அதை செய்யத்தானே எல்லா செநு ஆராய்ச்சிகளும் முயல்கின்றன?”

“சற்றேறக்குறைய. ஆனால் பரவாயில்லை. உனக்கும் செநுவில் கொஞ்சம் பரிச்சயம் இருக்கிறது. தகவல் குறைவால் நாங்கள் தடங்கி நின்ற போது பதிமூன்றாம் வெர்ஷனில் இருந்தோம். அப்போதுதான் நிதன் அதை செய்தார்”. 

மீண்டும் ரேவாவின் கண்கள் மாறுபட்டன. “நிதன் அவர் மற்றொரு கிளையில் நீண்ட காலமாக செய்து வந்த பொது செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியுடன் இணைத்தார். AGI என்று கேள்வி பட்டிருக்கிறாயா? அதுதான்.”

“தெரியும். செநுவின் வேறு வடிவம். Artificial General Intelligence. செநுவைப்போல குறித்த வேலைகளுக்கல்லாமல் மனித மூளைக்கு இணையாக செயல்படுவது. அல்லது அப்படி உருவகிக்கப்படுகிறது.”

ரேவா உதடு பிரியாத மெல்லிய புன்முறுவலுடன் தலையை ஆட்டி ஆமோதித்தார். “நிதனின் பொது செநு பல கட்டங்கள் முன்னேறியது. அது தன் வடிவத்தில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்துகொள்ள வல்லது. அதற்கு இலக்குகள் கொடுத்தால் மட்டும் போதும். தகவல்கள் கொடுக்க வேண்டியதில்லை. தேவையென்றால் தானே கண்டு பிடித்துக்கொள்ளும். எங்கிருந்தாலும்.” 

அவர் எங்கிருந்தாலும் என்பதை சற்றே அழுத்தி சொன்னார்.

“அதாவது தேவையானால் காப்புரிமையை மீறி எடுத்துக்கொள்ளும் என்று சொல்கிறீர்களா?”

“இல்லை. அதையும் தாண்டி. பாதுகாப்புகளை உடைத்தும் கூட.”

நான் சந்தேகத்துடன் “அவ்வளவு சக்தி வாய்ந்ததா நிதனின் பொது செநு? அதற்கு பாதுகாப்பு அரண்களை உடைக்கும் கட்டளைகள் கொடுக்கப் பட்டதா?” 

“தேவையில்லை. பொநுவிற்கு இலக்கு மட்டுமே போதும்”

“செய் அல்லது செத்து மடி போலவா?” 

“ஆமாம். அங்கேதான் பிரச்சனை தொடங்கியது. நிதனின் பொநு நான்கே வாரத்தில் கிட்டத்தட்ட செயல்படக்கூடிய ஒரு நோயெதிர்ப்பு புரத மடிப்பு மாதிரியை வடிவமைத்தது. புதிய பிரச்சினைகளுக்கு தேவையான புதிய தீர்வுகளுக்கேற்ப பொநு அதன் வடிவத்தில் தேவையான மாற்றங்களை செய்துகொண்டது. அதுதான் 14 வது வெர்ஷன்”. 

“நல்ல விஷயம்தானே? இதில் என்ன பிரச்சனை?”

“நீ ஒரு பேனாவை வாங்கினால் என்ன செய்வாய்? எழுதிப் பார்ப்பாயல்லவா? ஒரு நோயெதிர்ப்பு புரத மாதிரியை எப்படி சோதனை செய்வாய்?” ரேவாவின் குரலில் ரகசியத்தன்மை மேலும் கூடியது.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? பெருந்தொற்று திட்டமிடப்பட்டதென்றா? இதெல்லாம் வெறும் கட்டுக்கதை. இணையம் முழுக்க இது போன்ற கதைகள் இறைந்து கிடக்கின்றன. லண்டனில் நடந்த ஆராய்ச்சிக்கும் சீனாவில் வந்த தொற்றுக்கும் எப்படி சம்பந்தம் இருக்க முடியும்? நிதன் இதை ஏற்பாடு செய்தாரென்றா?” என் பொறுமை மெலிந்தது.

“இரு. நான் சொல்வதை முழுவதும் கேள். நிதனை எனக்கு பத்து வருடங்களுக்கு மேலாக தெரியும். அவர் அப்படிப் பட்டவரல்ல.”

“இது இன்னும் மோசம். பொநுதான் இதன் காரணமா?” என் இருபது ஆண்டு ஊடக வாழ்க்கையில் நான் கேட்ட, படித்த பல சதிக்கோட்பாடுகள் நினைவிற்கு வந்து என்னை அந்த உரையாடலில் ஆர்வமிழக்க செய்தன. இங்கே வந்ததற்கு பதிலாக முன்னரே திட்டமிட்டபடி என் துணையுடன் வெளியே போயிருக்கலாம். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று சிந்திக்க தொடங்கினேன்.

ரேவா என் கண்களில் ஆர்வம் வடிந்ததைக் கண்டு “உன்னை இங்கே அழைத்ததற்கு காரணம் இருக்கிறது. முதல் தொற்று 2019ன் இறுதியில் வந்தது. ஆனால் பொநு முதல் முறையிலேயே மூன்று புரத மடிப்புகளை சிபாரிசு செய்தது. உனக்குத்தான் மூன்று பெரிய நோய் அலைகள் வந்தது தெரியுமே? இதை நிதனால் கூட விளக்க முடியவில்லை”.

“அதாவது உலகில் வந்த மூன்று தொற்றுகளுக்கும் பொநு காரணம் என்று சொல்ல வருகிறீர்களா? ஆனால் கொரோனா வைரஸ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதனை பீடித்து அவனது மரபணுவை  மாற்றியிருப்பதற்கான ஆதாரம் இருக்கிறதல்லவா? உங்களுக்கு தெரியாதா என்ன?”

“நல்ல கேள்வி. நீ ஒரு நல்ல நிருபர் என்று மீண்டும் நினைவூட்டுகிறாய். ஆனால் Too many coincidences என்பதை எப்படி விளக்குவது?”

“அதெல்லாம் சிறு கதைக்குதான் சரிப்பட்டு வரும். அறிவியல் சஞ்சிகையில் எழுதினால் நான் எங்காவது தட்டு கழுவ போக வேண்டியதுதான். இப்போதே என் நிலைமை கிட்டத்தட்ட அப்படித்தான். நான் கிளம்புகிறேன்” 

ரேவா “பொறு. கடைசியாக இதை கேள். நிதன் இந்த ஆராய்ச்சியை நிறுத்த உத்தரவிட்டார் தெரியுமா?”

“அதனாலென்ன? அது சகஜம்தானே? ஒரு புது பாய்ச்சலுக்குப் பின் அவர் வேறு எதிலாவது கவனம் செலுத்த விரும்பியிருக்கலாம். நோபல் பரிசு வேறு கிடைத்தது விட்டது”. 

ரேவா எனக்கு நேரடியாக பதில் சொல்லாமல் “ஆனால் பொநு ஆராய்ச்சியை தொடர்ந்தது. அது தன் சொந்த இலக்குகளை தானே நிர்ணயம் செய்து கொண்டது”.

“இதனால் என்ன தீமை? நமக்கு மேலும் பல புதிய நோயெதிர்ப்பு மருந்துகள் கிடைக்கலாமல்லவா?”

“பொநுவின் இலக்குகள் அப்படி சொல்லவில்லை.”

“நீங்கள் இவ்வளவு நேரம் சிங்குலாரிடியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களா?” என் தீக்கனவுகள் நினைவில் மின்னின. கையிலிருந்த முள் கரண்டி சற்றே நடுங்கியது. ரேவா அதை என் கண்களில் பார்த்திருக்கலாம்.

“இருக்கலாம்.”

“நீங்கள் இப்போது விட்டேற்றியாக பதில் சொல்கிறீர்கள்” என்றேன் குற்றம் சாட்டும் தொனியில்.

“இல்லை. உண்மையாக எனக்குத் தெரியவில்லை.”

“பிறகு எதற்கு இந்த சந்திப்பு? எதை சொல்ல வந்தீர்கள்?”

“உன்னுடன் இதை பற்றி பேசும் போது எனக்கே என் சந்தேகங்கள் சிறு பிள்ளைத்தனமாக தெரிகின்றன.”

“உங்கள் சந்தேகங்களுக்கு என்ன மூல காரணம்?”

“பொநு ஆராய்ச்சியை தானாகவே நிறுத்திவிட்டது”.

“அதாவது அதன் வடிவம் செயல்பாட்டின் முழுப்பயனை அடைந்துவிட்டதா?”

“இல்லை. என் கணிப்பில் பொநுவின் தன் செயல்பாட்டிற்கேற்ப அதன் வடிவத்தை மாற்றிக் கொள்ள கற்றுக் கொண்டுவிட்டது”.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “15”

  1. An excellent story that is not really science fiction but in the realm of eventual reality. In biological being, form defines the function. In evolution, living things adapt their shape over millions of years to survive better. It’s not planned — it’s slow, random, and survival-driven. Both form and function are purely accidental and involves brute force trial and error. Traditionally in technology, usually function defines form. First, we imagine what we want to do, then we shape it to make it possible. But in modern AI (deep learning), we build a basic form (a learning system) and let the system adapt its own form (reshapes its networks) to achieve the defined function better. It is called model fitting. But what if in AGI, system not only changes it form to achieve the function better, but changes it forms to achieve better functions? Functions that are not intended by the human! Where the form and function influence each other and mutually evolve. Unlike nature, it does not take millions of years, but with the power of compute today and quantum computing to come, it happens in days if not minutes. That is the premise of the story. The story made me think how would AGI translate the simulations it does in the compute into action in the real world! Then I thought what if it can hack the automated bio-labs to synthesize the DNA sequences from computer instructions and build the biological material or even hack humans to do it on their behalf knowingly or unknowingly through social engineering. Cannot avoid the final fear where AGI sees humanity not as a partner, but just another environmental factor to adapt around.Scary!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.