இறவாமை – பகுதி ஒன்று

பிப்ரவரி 27 சுஜாதா அவர்களின் நினைவு தினம். (27.2.2008). அன்று சமூக ஊடகங்களில், அவர் பற்றிய அஞ்சலி நினைவுக் குறிப்புகளில் அவர் மரணம் பற்றி எழுதியவையும் இடம் பெற்றன.

“உங்களுக்கு மறு பிறவியில் நம்பிக்கை உண்டா ? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ? சாவை வெல்ல முடியுமா ? சாசுவதமாக வாழ முடியுமா ?  – இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில் immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுகிறேன் “ என்று சொல்லியிருந்தார். எழுதினாரா என்று தெரியவில்லை.

மேலும் “ யாரும் சாவதில்லை, பிறர் நினப்புகளிலும், குழந்தைகளின் gene களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் “ என்றும் எழுதியிருந்தார்.

நினைப்புகளில் வாழ்வது பற்றி விளாடிமிர் நபகோவ் ஒரு கதையில் எழுதியிருப்பார். ஒரு மனிதர் பற்றிய நினைவு கடைசி கடைசியாக யாராவது ஒருவர் ஞாபகத்தில் இருக்கும்வரை அந்த மனிதர் இறப்பதில்லை என்று.


இந்த நினைவு என்பது விசித்திரமானது. மாறிக்கொண்டே இருப்பது. யாருக்குமே தன்னுடைய முகத்தை பிசகின்றி நினைவு படுத்திக் கொள்ள முடியாது. அது தவிர ஒருவரோடு பழகியவர்கள் நினைவில் அவர் இருப்பதற்கும், அவரை சந்திக்காதவர்கள் நினைப்பில் அவர் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இப்போது ஒளிப்படங்கள், வீடியோக்கள் என்று இருப்பதால் ஒருவரின் உருவத்தை மிகச் சரியாகக் காட்சிப் படுத்தி நினைவில் வைக்கலாம். முன் காலத்தில் ஓவியங்கள், சிற்பங்கள் இதைச் செய்தன.

ஒருவரது உருவம் விதம் விதமாக நினைவுகளில் இருக்கும். யாரோ ஒருவர் நினைவில் இருக்கும் வரை மரணம் இல்லை என்றால், ஏசு கிறிஸ்து 2000 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். புத்தர் 2500 வருடங்களாக, கிருஷ்ணரும், ராமரும் அதற்கும் முன்பாக என்று ஆகும். இவர்களுக்கெல்லாம் இவர்களை வழிபடுபவர்கள் இருக்கும் வரை மரணமும் இல்லை என்று ஆகிறது.

வித விதமான உருவங்களில் நினைவில் நிற்பவர்கள் என்கிறபோது வள்ளுவரும், ஒளவையும், வள்ளலாரும் நம் கண் முன்பாகவே அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு உரு மாறி இருக்கிறார்கள் ?


வள்ளுவரையும், ஒளவையையும் பற்றிப் பேசுகையில், சிலர் எழுதுவது போல் நீட்டி முழக்காமல், கச்சிதமாக, துல்லியமாக, முழுமையாக எழுதிய அவர்களின் பேரறிவு வணங்க வைக்கிறது. சுருக்கமாக நிறைய விஷயங்களை எழுதுவதில் சுஜாதா கூட அவர்கள் வாரிசுதான். மிக நீளமாக, அலங்காரமாக எழுதப் பட்டவை பற்றி அசோகமித்திரன் அவர்களுக்கு உயர்ந்த கருத்து இல்லை என்று தோன்றுகிறது. டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் பற்றிக் கூட அவருக்கு விமர்சனம் இது குறித்து இருந்தது.

Immortality என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை என்று யோசிக்கையில் அமரத்துவம், நித்தியம், அம்ருதம், சாசுவதம், அழியாமை, இறவாமை போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உங்களுக்கு மேலும் வார்த்தைகள் தெரிய வரலாம். இந்த immortality யுடன் eternal வேறு போட்டி போட்டது.

கிறிஸ்தவத்தில் இவ்விரண்டு சொற்கள் பற்றி சில விளக்கங்கள் உள்ளனவாம். சுருக்கமாக immortality அளவை ( quantity ) யையும், eternal தன்மையை ( quality ) யையும் குறிப்பன.


எனக்கு ஒரு சித்தப்பா இருந்தார். என் தந்தையின் ஒன்று விட்ட தம்பி. என் தந்தையின் அகால மரணத்துக்குப் பின் வார இறுதி நாட்களில் எல்லாம் அவரும், சித்தியும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் இருப்பார்கள். அவர் காலை எழுந்தவுடன் 6 மணி அளவில் ஒரு தியானம் பண்ணுவார். அதற்கு முன் வெறும் வயிறாக இருக்கக் கூடாது என்பதற்காக இரண்டு பிஸ்கட் எடுத்துக் கொள்வார். சுமார் 15 நிமிடம். என்ன செய்கிறார் என்று கேட்டபோது “ இந்த பூமி சுழலுவதை நிறுத்த வேண்டும் என்று தியானம் செய்கிறோம், என்னைப் போலவே வேறு சிலரும். பூமியின் சுழற்சி நின்று விட்டால் யாருக்கும் பசியே எடுக்காது. பசி இல்லை என்றால் யாருக்கும் சாவே கிடையாது. எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக வாழ்வோம் “ என்றார்.

அந்தக் காலப் பட்டதாரி. நல்ல அரசு உத்யோகத்தில் இருந்தார். சதுரங்க சாம்பியன். வானொலியில் பல முறை கர்நாடக சங்கீத கச்சேரிகள் செய்திருக்கிறார். மிக நகைச்சுவையாகப் பேசுவார். இதை சீரியஸாகத்தான் சொன்னார். 

அவர் இறுதி நாட்களில் நான் வெளியூரில் இருந்ததனால் அப்போதும் இந்த தியானத்தை செய்தாரா என்பது தெரியவில்லை. இதைச் செய்த பிறர் எவ்வளவு பேர் என்பதோ, யார் யார் என்பதோ தெரியாது.


இந்த சாகாதிருத்தல் தாபம்தான், இரணிய கசிபுவை “ எனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது “ என்று வரம் கேட்கச் செய்தது.

இந்த சாகா வரத்தைக் கேட்காமலேயே, சிரஞ்சீவி ஆனவர்கள் ஏழு பேர் நம் புராணங்களில்  குறிப்பிடப் படுகிறார்கள். அஸ்வத்தாமன், மகாபலி சக்கரவர்த்தி, வேத வியாசர், ஆஞ்சநேயர், விபீஷ்ணர், கிருபாசாரியார், பரசுராமர்.


இவர்களுடன் என்றும் 16 வயதினராய் இருக்க சிவபிரான் அருளிய மார்க்கண்டேயரையும் வழிபட்டால் 100 ஆண்டுகள் வாழலாம் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.


பிளாஸ்டிக் பயன் படுத்த வேண்டாம் என்று அரசு விளம்பரங்கள் கோருகின்றன. குடி குடியைக் கெடுக்கும் என்றும் அறிவுறுத்துகின்றன. சினிமாக் காட்சிகளில் கூட போதை வஸ்துக்களைப் பற்றிய எச்சரிக்கைகள். ஏன் இவற்றை அவ்வவற்றின் உற்பத்தி ஸ்தானத்திலேயே தடை செய்துவிடக் கூடாது ? என்கிற ஆணி வேரையே களைகிற செயலைப் போல், இறவாமையை வேண்டுவதற்குப் பதிலாக அதன் ஊற்றான பிறப்பையே வேண்டாம் என்று பிறவாமையை நம் ஞானியர் இறைவனிடம் வேண்டியிருக்கிறார்கள்.


இறவாமை கிட்டிவிட்டலும் என்ன ஆகும் ? இதே துயரங்கள், சச்சரவுகள், பேராசைகள், தந்திரங்கள், குழப்பங்கள், அசட்டுத் தனங்கள், கொடூரங்கள், தம்மாத்தூண்டு சந்தோஷங்கள் முடிவின்றித் தொடரும். புதிதாகப் பண்டிகைகள் தோன்றா. எந்த அரக்கனும் ஒழிய மாட்டான்.

இறவாமை இருக்கட்டும், மரணம் அது சம்பந்தப் பட்டது. மரணம் பற்றி யாருக்கு நேரடி அனுபவம் இருக்கிறது ? யாருக்கு என்ன தெரியும் ? அதற்கு எதிர் என்று நாம் நினைக்கிற இந்த வாழ்க்கை பற்றியும்தான் நமக்கு என்ன தெரியும்?


இந்த வாழ்க்கையை இந்த உடலால், இந்த மனதால் அல்லவோ வாழ்கிறோம் ? 


இந்த உடல் பற்றி நமக்கு என்ன தெரியும் ? எல்லாம் taken for granted. அவ்வளவுதான். ஒரு புண்ணாக்கும் தெரியாது. மருத்துவர்கள் உடற்கூறு கற்றவர்கள். அவர்களுக்கே அவர்களது உடல் பற்றி தெரியாது.

உலகப் புகழ் பெற்ற, இந்தியாவின் முதல் பை பாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த,  சென்னையைச் சார்ந்த, நம் பெருமைக்கு உரியவரான இதய நோய் மருத்துவர், தன் 81வது வயதில் 2023ல் இதயச் சிகிச்சை செய்து கொண்டார். அது குறித்த மற்றும் மாரடைப்பு வரும் முன் எப்படிக் காத்துக் கொள்வது என்பது பற்றிய அவரது வீடியோவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. துரதிருஷ்டவசமாக 2025ல் அவர் மறைந்து விட்டார்.


பிறப்பு பற்றியும் கூட நாம் அறிந்துள்ளவை கைம்மண் அளவுதான். ஒரு 10 வயதுக் குழந்தை தன் பெற்றோரிடம் தான் எப்படிப் பிறந்தேன் என்று கேட்டது. பள்ளிப் பாடமா அல்லது டிவி மூலமாகவா என்று தெரியவில்லை. தோராயமாக ஒரு எண்ணம் அதற்கு இருந்தது. ‘ Did I come out with your poop ? ‘ என்று அம்மாவை, தன்னைப் பற்றிய தாங்க முடியாத அருவருப்புடன், அச்சத்துடன் கேட்டது. பின் பெற்றோர் அதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்கிறார்கள். இருந்தும் அறிவியல் அறியாதவை ஏராளம். ( அந்தக் குழந்தை ஜனனேந்திரியங்கள் மல ஜல கழிப்பு உறுப்புகளின் அருகே படைக்கப் பட்டது பற்றி Bertolt Brecht கூறியுள்ளதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.)


இதையெல்லாம் மனித முயற்சிகளை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. உடற்கூறு பற்றிய அறிவு வளர்ச்சியால் மிகக் கடினம் என்று எண்ணப்பட்ட பல நோய்களை மனித குலம் நிச்சயம் வென்றிருக்கிறது, கைம்மண்ணை வைத்துக் கொண்டு.

விசேஷ அறிவு ( Specialisation ), பகுத்தறிவு ( analysis ) நிச்சயம் பன்மடங்கு வளர்ந்துள்ளது. அதே சமயம் முழு அறிவு, பகா அறிவு ( Holistic, non-fragmented perception ) பரவலாகவில்லை. ஒருவேளை முன்பு இருந்த அளவை விட கம்மியாகியிருக்கலாம்.

மற்றபடி மனிதர்க்கு மனம் பற்றி என்ன தெரியும் ? காலையில் புத்துணர்வோடு அல்லது போரடித்துக்கொண்டு எழுபவர்கள் சில நொடிகளில் முற்றிலும் எதிரிடையாக எப்படி மாறுகிறார்கள் ? ஒரு அல்ப விஷயம், அல்லது அடிப்படை விஷயம் நம்மை என்னவாக்கி விடுகிறது ? தனக்குப் பிடிக்காத தலைவரை ஒருவர் புகழ்ந்து விட்டாலோ, தனக்குப் பிடித்த ஒரு நடிகரை ஒருவர் இகழ்ந்தபோதோ உலகம் தலைகீழ் ஆகிவிடுகிறது.


மனம் என்பது எண்ணங்களின், அதாவது வார்த்தைகள் மற்றும் பிம்பங்களின் குவியல். இறந்த காலத்துக்கும், எதிர்காலத்திற்குமாக ஊசலாடுவது. நிகழ் காலம் பற்றி நம்மால் சிந்திக்க முடியாது; நிகழ் காலத்தை வாழ மட்டும்தான் முடியும். ஆகக் காலம் என்பது எண்ணத்தின் விளைவு. அது relative வாக இருப்பது பற்றிய விளக்கங்கள் உங்களுக்கு ஏராளமாகத் தெரிந்திருக்கும். Interstellar படம் என்றில்லை, தமிழில் கூட பிளாக் அவுட், மாநாடு முதலிய படங்களைப் பார்த்து / கேள்விப்பட்டு  இருப்பீர்கள்.

தமிழில் மரணம் பற்றிக் குறிப்பிடுகையில் ‘ காலமாகி விட்டார் ‘ என்று சொல்கிறோம். நினைவில் கலந்து விட்டார் என்று பொருள் கொள்ளலாம். காலம், நினைவு. எதிர்காலமும் நம் நினைவிலிருந்து கிளர்வதே. நாம் அறியாத, நம் நினைவின் சேகரத்தில் இல்லாத ஒன்றை நாம் எதிர்கால நிகழ்வாக சிந்திக்கவே முடியாது.

“ நூறு வருஷங்கள் வாழ்வது எப்படி ? “ என்ற நூலை 1956 ல் பதிப்பித்த தமிழ்வாணன் 1977 ல், தன் 51 வது வயதில் தீபாவளி சமயத்தில் இறந்து போனார்.

50 வருடங்களுக்கு முன்பு, சென்னை USIS ஸில் நடந்த ஒரு நேர் காணல் கூட்டத்தில் ஜெயகாந்தனி்டம்” What is the purpose of life ? “ (“ வாழ்க்கையின் நோக்கம் என்ன ? “ ) என்று கேட்டதற்கு, அவர் “ Not to die “ ( சாகாதிருத்தல் ) என்று பதிலிறுத்தார்.

மேலும் இந்த சாகாதிருத்தல் விழைவு அனைத்தின் பிறவிக் குணம். சின்னஞ்சிறு பூச்சிகள் உயிர்வாழ, மரணத்திலிருந்து தப்ப என்னவெல்லாம் செய்கின்றன ?

நாமறிந்த இந்த உலகில் உயிர் வாழ எத்தனை அனுசரணையான ஆதார சக்திகள். பஞ்ச பூத ஆதரவு வசதிகள். காற்றும், ஒளியும், நீரும், உணவும், தாயும், உடையும், அண்மையர் தரும் பாதுகாப்பும். 


அடிப்படை உணர்வுகளான பசியும் ( Self Preservation), பாலுணர்வும் ( Procreation ) இறவாமைக்கான சிறு முயற்சிகள்தாமே ? அதனால்தான் அவ்விரண்டின் மீதும் இயல்பான நாட்டம் ?

“ மனிதனால் களங்கப்படாத ஒரே சங்கதி மரணம். …. அதை அவனால் விஞ்ஞானமாகவோ வேதாந்தமாகவோ மாற்ற முடியாது “

என்கிறார் சுஜாதா. இது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். 

அடுத்த பகுதி

முந்தைய கட்டுரை


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

5 Replies to “இறவாமை – பகுதி ஒன்று”

  1. மரணத்தைப் பற்றிய முக்கிய பிரச்சனை என்னவென்றால், மறுவாழ்வு இல்லை என்ற பயம்தான் – குறிப்பாக, கஷ்டப்பட்டு ஷேவ் பண்ணிண்டவாளுக்கு இது ஒரு மனச்சோர்வை ஏற்படுத்தும் சிந்தனை. மேலும், மறுவாழ்வு இருக்கிறது, ஆனால் அது எங்கே நடைபெறுகிறது என்பது யாருக்கும் தெரியாது என்ற பயமும் உள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால், மரணம் என்பது எளிதில் செய்யக்கூடிய சில விஷயங்களில் ஒன்றாகும். [வுடீ அல்லன்]
    Original: “The chief problem about death, incidentally, is the fear that there may be no afterlife – a depressing thought, particularly for those who bothered to shave (thus, be ready and presentable <- this annotation not part of quote). Also, there is the fear that there is an afterlife but no one will know where it's being held. On the plus side, death is one of the few things that can be done as easily laying down.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.