
பெரும் ரகசியங்கள்
ஒரு குட்டி ஸ்கூல் பையுடன்
குட்டிக் கையுறைகள் அணிந்து கொண்டு
ஒரு குட்டி சைக்கிளில்
ஒரு குட்டிப் பெண்
குதூகலமாகச் செல்கிறாள்.
தயவு செய்து சொல்லிவிடாதீர்கள்
அவள் சென்று கொண்டிருக்கும்
பாதை
மிக நீண்டதென்று.
இப்படியே நீடித்திருக்கக் கடவதாக
குட்டிக் குதூலகங்கள்.
சக்கரங்களைச் சுழற்றுதல்
சைக்கிளின் முன் சக்கரத்தை
அதன் தடுப்பில் நேராகப் பொருத்தியவள்
ஏனோ அதன் உடலை மட்டும்
நான்கு மணி கடிகார முள் போல
நிறுத்திச் செல்கிறாள்.
திடீரென
அந்த சைக்கிள் நிறுத்தத்தில்
முளைத்து விடுகிறது
ஒரு ஒழுங்கமைதி.
இப்பொழுதோ
நேராக நிற்கும்
முப்பத்து சொச்சம் சைக்கிள்களையும்
துல்லியமாக
அதே நான்கு மணி கோணத்துக்கு
திருப்பிக்கொண்டிருக்கிறேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
