மின்னல் கருமேகங்களில் உருவாகும் போது அதன் ஆற்றலின் வடிகாலுக்கு இரு பாதைகள் உண்டு. மேகத்திற்குலேயே ஒளித்து விடலாம் அல்லது மேகத்திலிருந்து கீழே தரைக்கும் இறங்கலாம். மின்னல்கள் உருவாகக் கருமேகத்தில் நீர்த்தேக்கம் இருப்பது அவசியம். வெண்மேகங்களில் மின்னல்கள் உருவாவதில்லை. மீறல் இலக்கியமும் அதைப்போலத்தான். மீறல் இலக்கியம் உண்டாகவும் தேக்கம் தேவை. சமுதாயத்தில், கலையில், சிந்திப்பில், கலாச்சாரத்தில், அறிவியலில் தற்கால போக்கில் தேக்கம் கண்டுவிட்டால் மின்னலை போன்ற மீறல் படைப்புகள் உருவாவது இயல்பு. இத்தகைய தேக்கம் உருவாவது எப்படி?. பழமையைப் புதுமை இடம் பெயர்ப்பது இயற்கை நிதி . இந்த பெயர்ப்பை வலுக்கட்டாயமாக நடக்கவிடாமல் தடுத்தால் ஆக்க அழுத்தங்கள் உருவாகி அதிர்வுகள் நிகழ்வதை தடுக்க முடியாது. புரட்சியை துவக்குவது கடினம் ஆனால் அதைவிட கடினம் அதனை தக்கவைத்து முன் நடத்துவது. மீறல் மூலம் கொண்டுவரப்படும் சிந்தனை மாற்றங்கள் நிலைக்குமா என்பது அந்த எண்ணங்களின் சமுதாய ஒப்புதலை பொறுத்தது.

இந்திய இலக்கிய உலகிற்கு மீறல் இலக்கியம் புதிதல்ல. சதாத் ஹாசன் மன்தோ மூன்று முறை அப்போதைய ஆங்கில அரசின் ஆபாச வழக்கிற்கு உள்ளனர். தக்காழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய “தோட்டியின் மகன்” (“தோட்டியுடெ மகன்”, 1947), தி ஜானகிராமனின் “மோகமுள்” (1964), புதுமைப்பித்தனின் “விபரீத ஆசை” (1939) போன்ற உரைநடை மீறல்கள் இருப்பினும், கவிதை உலகில் மீறலையே ஒரு கொள்கையாகக் கொண்டு சூறாவளியின் வேகத்துடன் உருவெடுத்த இயக்கம் ஒன்று வங்காள மாநிலத்தில் அறுபதுகளில் உருவானது. 1961ல் மலே ராய்சௌத்ரி, அவரது அண்ணன் சமீர் ராய்சௌத்ரி, சக்தி சட்டோபாத்யாய் , டெபி ராய் நால்வரால் உருவாக்கப்பட்ட “Hungryalist Generation ” எனப்படும் இயக்கம் அப்போதைய சமுக நிலைப்பாடுகளை கவிதை மீறல் மூலம் வன்மையாக தாக்கியது.
கவிதைகளை பற்றி
” இனி கவிதை நாகரீகப்படுத்தும் செயலல்ல. அழிக்கப்பட்ட தோட்டத்தில் புணர் நாட்டு நடவையல்ல; கவிதை ஒரு படுகொலை, வன்மம்மிக்க ஐந்தாவது பாடலின் சிந்தை-மறந்த உச்சரிப்பு, பிரளயப் பசியின் நடவை .
கவிதை, சித்தரவதைக்கப்பட்ட நெஞ்சின் செயல். மெதத்துவத்தை ஊக்குவிக்கும், வார்த்தைகளிலிருந்து உடல் பேரின்பத்தை பிறப்பிக்காத, செயற்கை சேற்றிலிருந்து கொப்பளங்களாக வெளிவரும் பிரசுர காதலியான நவீனத்துவத்தை உதறிவிட்டோம்….”
சிறுகதைகளை பற்றி
“சிறுகதை பாதிக்கப்பட்டவரின் ஒப்பாரி. இதனால் அது நிஜங்களையோ அல்லது எண்ணங்களையோ சொல்லக்கூடாது. அதன் ஒரே வேலை கர்த்தரின் சிலுவையறையில் அவருக்கு எற்பட் முதுகெலும்பு முறிவு வலியின் தீவிரத்தை போல இருப்பது மட்டும்தான்.
இக்கால சிறுகதைகள் ஐந்து விரல் காதல் லீலைகளை, வார்த்தை ஜாலங்கள், செத்த ஊர்வனத்தின் கண்ணிலிறிந்து பார்த்தால் தெரியும் தர்க்க நிகழ்வு நடை…”
1961ல் மேற்கண்ட வரிகள் கவிதையைப் பற்றியும் சிறுகதைகளைப் பற்றியும் பசிப் புலவர்களின் முதல் அறிக்கையில் வெளிவந்த போது அவர்களுடைய படைப்புகளின் தாக்கம் இலக்கியத்தின் மீது எவ்வளவு இருக்கும் என யூகித்திருக்க முடியாது. பசிப் புலவர்கள் இயக்கம் வங்காளத்தில் அக்காலகட்டங்களில் நிலவிவந்த வேலையின்மை, வறுமை, நம்பிக்கையின்மை, விவசாயிகளின் நிராசை போன்ற யதார்த்தங்களிலிருந்து உருவெடுத்தது எனக் கூறலாம். நால்வரால் உருவாக்கப்பட்ட இயக்கம் விரைவில் விரிவடைந்து நாற்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களாக வளர்ந்தது. பெரும்பாலும் மலிவு விலை காகிதத்தில் தேநீர் கடைகளிலும் கல்லூரி கான்டீன்களிலும், நாட்டுச் சாராய கடைகளிலும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் தங்கள் எழுத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பசிப் புலவர்கள் இயக்கம் தங்களை பாட்டாளிகளின் குரலாக பிரகடணப்படுத்தினார். தங்கள் உறுப்பினர்களின் கீழ்மட்ட சமுதாய பின்ணனியை மிக அழுத்தமாக பறை சாற்றினார். அக்காலங்களில் வங்காளத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் படைப்புகளுக்கு எழுதப்படாத பிரசுரத் தடை இருந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பினோய் மஜூம்தார் போன்ற தலித் கவிஞர்களுக்கு பசிப் புலவர்கள் இயக்கத்தில் குரல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வங்காளத்தில் அந்நாட்களில் பிரபலமாக இருந்த திரை இயக்குனர்கள், பத்ரிகையாளர்கள் பசிப் புலவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ரித்விக் கடக்கின் ஒரு திரைப்படத்தில் பசி புலவர்களின் கவிதையில் வரும் ஒரு வரியின் திரையாக்கம் மிக பிரபலமானது.
” சிகப்பு, நீல நிற மீன்கள் நீஞ்சும் மீன் தொட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மீன் தின்கிறேன்”
” டைம் பாம்பை கழுத்தில் கட்டிக்கொண்டு ஒரு அமைதிப் புறா பறந்து கொண்டிருக்கிறது”
” வேசிகளை விட அதிகமாக ஆண்களை பார்த்த மேலக்குடி பெண் ஒருவள் எனக்கு தெரியும்”
“(அம்மா) உன் வேகும் கட்டையிலிருந்து சிகரெட்டை பத்தவைத்து கொள்வேன்”
“உன் செலோஃபோன் கன்னித்திரையிலேருந்து உலகை பார்க்க வேண்டும்”
“என் அப்பா பிற பெண்களுடன் என்னை கருத்தரித்திருந்தால் நான் மலே
ராய்சௌதிரியாக பிறந்திருப்பேனா?”
“சிறுநீர் கழிப்பிடத்தில் இலவச ஆஸ்பத்திரி திறந்துளோம்”
“இருப்பது இருபத்தைந்து அகவை வரை
என் உறுப்பை உபயோகிக்க வேண்டும்
அண்ணனுக்கும் தங்கைக்கும் விலை பேரம் நடப்பதை பார்க்க நேரிடும்”
“நான் சைதன்யாவின் அன்பு போதிக்கும் தர்மத்தின் சிஷ்யன்
நக்ஸல்களுக்கும் அன்பை கொடுத்தேன்
ராணுவத்திற்கும் அன்பை கொடுத்தேன்
இப்போது இருவருடைய ஹிட் லீஸ்ட்டிலும் இருக்கிறேன்”
“வேசிகளுக்கும் மாதவிடாய் உண்டு
மூன்று குழந்தைகளின் அப்பா,
குடும்ப கட்டுப்பாட்டின் உதாரணம்
சிறுவயதில் சுய மைதுனதம் செய்துருக்கிறார் இல்லையா?”
“வைணவ மந்திரங்களை மட்டும் கற்போமா அல்லது ஆபாச படங்களையும் பார்ப்போமா?”
மேற்கண்ட வரிகள், பசிப் புலவர்கள் இயக்கத்தின் உறுப்பினர்களால் எழுதப்பட்டவை. வன்மம், காமம், தற்தீங்கு , அதிர்ச்சி போன்றவற்றை ஈட்டிகளாக உபயோகித்து அக்கால இலக்கிய போக்கை மாற்ற நினைத்தனர். உலக கலாச்சாரகளின் அழிவை நிறுத்த முடியாதென்ற ஜெர்மானிய சிந்தனைவாதி ஓஸ்வால்ட் ஸ்பிங்ளரின் (Oswald Spengler) மையக்கருத்தை தங்கள் கொள்கையாக கொண்டனர். அப்போதைய வங்காள/ இந்திய சமுதாயம் அத்தகைய அழிவை நோக்கி போவதாகவும் கருதினர்.
ஓவியர்கள் உறுப்பினர்களாக இருந்தும் பசிப் புலவர்கள் இயக்கம் பெரும்பாலும் கவிதை மொழியிலேயே பேசியது.
தலைப்பு: வேசி
ஆசிரியர் : சந்தீபன் சட்டோபாத்யாய்
மூலம் : வங்காளம் (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து)
“வேசியின் அறையில் முகக் கண்ணாடி இருக்க வேண்டும்
சுவர் அளவு அல்லது சின்னது அல்லது பெரிய மலிவு அல்லது விலை உயர்ந்த கண்ணாடி. அதில் சிலவை அலங்கரிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.
உணவு, பாத்திரங்கள், கண்ணாடிப் பொருட்கள், பித்தலையை அதிகமாக நான் பார்த்ததில்லை.
வேசிகள் பற்றிய முக்கியமான செய்திகளாக இவை இருக்கலாம்
1 அவளுக்கு பரிசுகள் பிடிக்கும்
2 அவளுக்கு ஆன்மா இருக்கிறது
3 அவளுடைய லஜ்ஜை உண்மையானது
4 அவள் அடிப்படையில் லூசு
5 கண்முன்னே யாரும் இல்லாததை போல நடந்து கொள்வாள்
அவளைப் பற்றி ஒரு விஷயம் மட்டும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்
அவள் உடலை ஒருவன் உபயோகிக்கும் போது அவளுடைய மன நிலை
ஒருவன் அவளிடம் வரும் போது அவள் சந்தோஷமாக இருக்கலாம், துக்கமாக இருக்கலாம், அவனை வெறுக்கலாம்
ஆனால் ஒருவன் அவளின் ஆடையை களையும் போது பொறாமை மட்டும் படமாட்டாள்
முதலில் கடுப்படைவாள் அதன் பின் முழு நிர்வாணமான பின் சாதுவாகிவிடுவாள்
ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அவள் முன் முழு நிர்வாணமாவதில்லை
பனியன்கள் ஜட்டிகள் அணிந்து கொண்டுதான் இருப்பார்கள்
அதன் பின் சில விதிமுறைகளைப் பின்பற்றினால்
வேசிகளை சாத்தான் அல்லது கடவுள் காப்பாற்றுவார்
அதனால்தான் வேசிகள் கம்மியாக அவதிப்படுவார்கள்.”
*******
கவிதையை முழுக்க படித்தவுடன் கவிஞர் முடிவில் என்ன சொல்ல வருகிறார் என்ற ஐயம் வாசகர்களுக்கு வரக்கூடும். வேசிகளின் அவல நிலையை எடுத்துரைப்பது அவருடைய நோக்கமென்றால் அவருடைய வரிகள் நிச்சயமாக இந்த இலக்கை அடையவில்லை. மாறாக வேசிகளை கொச்சை படுத்துவதாக தோன்றுகிறது. பசிப் புலவர்கள் சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை படலங்களிலிருந்து தங்கள் தலைப்புகளை தேர்ந்தெடுத்தனர். மேல்குடிகள் போற்றும் தெய்வீகம், அழகியல் போன்றவற்றிற்கு நேர் மாறாக ஒரு பாலியல் தொழிலாளியின் அன்றாட வாழ்க்கையின் ஒரு வெட்டாக இந்த படைப்பு அமைகிறது.
மரபு கவிதை அம்சங்களான உருவகம், உவமை, லயம் போன்றவற்றை துறந்து சுதந்திர வரிகளின் மூலம் ஒரு வித சிதைந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த படைப்பு. அழகியல் அடிப்படையில் அக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளின் நேர் மாறாக கவிதை இலக்கணத்தை மீறுவது மட்டுமின்றி சமுதாய அற மீறல்களையும் உள்ளடக்கியுள்ளது. மொழியில் பாலியல், தற்த்தீங்கு, கொச்சை, மரணம், போன்ற அம்சங்களினால் அப்போதைய மரபு நிலைப்பாட்டை அதிர்ச்சியுறச் செய்து அதனை தகர்க்க முயல்கிறது. இதில் பெரும்பாலும் வெற்றி அடைந்ததாகத்தான் தோன்றுகிறது. கீழ்வரும் கவிதை 1964ல் வெளிவந்தபோது ஆபாச வழக்கிற்கு உள்ளாகி அதன் படைப்பாளி மலே ராய்சௌத்ரி சிறைக்குள் தள்ளப்பட்டார். அவர் வேலை செய்து கொண்டிருந்த ரிசர்வ் வாங்கி அவரை வேலை நீக்கம் செய்தது.
தலைப்பு : கலப்பற்ற மின் தச்சர்
கவிஞர் : மலே ராய்சௌத்ரி
மூலம் : டேனியெல்லா கப்பெல்லோவின் ஆங்கில மொழிபெயர்ப்பு.
ஆண்டு : 1964
(முழுமை அடையாத மொழியாக்கம்)
“நான் சாகிறேன் சாகிறேன் சாகிறேன்
என் தோலில் எரியுது சீற்றம்
என்ன செய்வேன் எங்க போவேன் ஆ! பைத்தியமாகிறேன்
கலைக் குப்பைகளை குண்டியில் உதைப்பேன் ஓடிப் போ ஷுபா
ஸுபா, கட்டப்படாத காவி கொசு வலையின் இருட்டு நிழலில்
உன் ஆடை உடுத்தப்பட்ட முலாம் பழத்தினுள் நுழைவேன்
ஒன்றொண்றாக என் வேர்களை எடுத்தெறிந்துவிட்டேன் கடைசியும் போய்க் கொண்டிருக்கிறது
என்னை அடக்க முடியவில்லை, ஆயிரம் கண்ணாடிச் சில்கள் என் மூளையில் தெரித்துக் கொண்டிருக்கின்றன
.
.
ஒவ்வொரு நரம்பும் கண்ணீரை இருதயத்துக்கு எடுத்து செல்கிறது
மூளையின் தொத்தும் தீப்பொறி வாதத்தால் அழிந்துவிட்டது
அம்மா! என்னை எலும்புக்கூடாக ஏன் பிரசவிக்கவில்லை
கடவுளின் பின்புறத்தை இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முத்தமிட்டு கொண்டு இருந்திருப்பேன்
எதுவும் பிடிக்கவில்லை கேட்க சகிக்கவில்லை
ஒரு முத்தத்திற்கு மேல் கொடுத்தால் வாந்தி வருகிறது
புணர்ந்த பெண்ணை மறந்து சூர்ய நிறமுடைய கவிதைப் போர்வைக்குள் எத்தனை முறை திரும்பியிருக்கிறேன்
இதெலாம் என்னவென்று தெரியவில்லை ஆனால் என்னுள் நடக்கிறது
எல்லாவற்றையும் உடைத்து எரிந்து விடுவேன்
உன் விலா எலும்புக் கூடு பண்டிகையை தகர்தெறிவேன்
இழுத்து வந்து ஷுபாவை ஆட்கொள்ள வேண்டும்
ஸுபா எனக்குச் சரணடைய வேண்டும்
ஆ மலே!
கல்கத்தா இன்று வழுக்கும் ஈரத் தலைகளின் ஊர்வளம் ஆகிவிட்டது
ஆனால் என்னையே நான் என்ன செய்வேன் என தெரியவில்லை
என் ஞாபக சக்தி பழுதடைந்து விட்டது
என்னை தனிமையில் இறக்க விடு
புணரவும் இறக்கவும் கற்க வேண்டாம்
கடைசி சொட்டு மூத்திரத்தை கழிக்க கற்க வேண்டாம்
.
.
இன்னும் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என புரியவில்லை
என் ஒழுக்கம் கேட்ட சபர்ணா- சௌத்ரி வம்சாவெளியை பற்றி நினைக்கிறன்
ஏதாவது வித்யாசமாக புதுமையாக செய்ய வேண்டும்
கடைசியாக ஒரு முறை ஸுபாவின் மெத்து மார்பு போன்ற கட்டிலில் தூங்க வேண்டும்
நான் பிறக்கும்போதிருந்த சுட்டெரிக்கும் ஒளி வட்டம் நினைவிருக்கிறது
என் மறைவை நான் மறைவதற்குள் நானே பார்க்கவேண்டும்
இந்த உலகிற்கும் மலே ராய்சௌத்ரிக்கும் எந்த சம்மந்தமும் இருக்க கூடாது
உன் வன்மம் பார்த்த வெள்ளி கருப்பைக்குள் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்கிறேன் ஷுபா
அமைதியை கொடு ஷுபா எனக்கு அமைதியை கொடு
என் பாவம் நிறைந்த எலும்புக்கூட்டை உன் மாதவிடாயில் கழுவி புதுப்பிக்க விடு
உன் கருப்பையில் என் விந்திலிருந்தே என்னை ஜன்மிக்க விடு
வேறு பெற்றோர் இருந்திருந்தால் இப்படி இருந்திருப்பேனா?
மலே என்ற நான் வேற விந்திலிருந்து பிறந்திருக்க முடியுமா?
பிற பெண்னுடன் என் அப்பா என்னை கருத்தரித்திருந்தால் மலேயாக பிறந்திருப்பேனா?
.
.
சொல்லுங்கள் யாராவது சொல்லுங்களேன்
ஷுபா ஓ ஷுபா
உன் செலோஃபென் கன்னித்திரையிலேருந்து பூமியை பார்க்கணும்
பச்சை பாய்க்கு மீண்டும் ஒரு முறை வா ஸுபா
.
.
.
பிழைப்பேனா இறப்பேனா தெரியாது
இருதயத்தின் தனிமையில் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன
எல்லாவற்றையும் உடைத்தெறிந்துவிடுவேன்
கலைக்காக எல்லோரையும் வெட்டி எரிந்து விடுவேன்
கவிதைக்கு தற்கொலையை தவிர வேறு வழியில்லை
.
அம்மாவின் கருப்பையில் நான் ஏன் காணாமல் போகவில்லை
..
.
.
ஸுபா இன்பத்தில் திளைத்தபோது வெறுத்து போனேன்
.
எனக்குள் நடப்பவை இவை எல்லாம் என்ன?
என் கைகளை, உள்ளங் கைகளை தூக்க முடியவில்லை
என் பைஜாமாவிற்குள் உறைந்த விந்துக்களிலிருந்து றக்கைகள் முளைக்கின்றன
300000 குழந்தைகள் ஸுபாவின் மார்பாகத்திற்கு பறக்கின்றன
ரத்தத்திற்குள்ளிருந்து ஊசி மந்தைகளாக கவிதைக்குள் பாய்கிறது
.
.
சில பிறந்த மேனி மலேக்களை விடுவித்த பிறகு
இந்த அறையில் தொங்கும் ஆக்ரோஷமான கண்ணாடிகள் ஒவ்வொன்றிலும் அவனுடைய நிரூபணமாகாத நோய் தெரிகிறது.”
குறிப்பு : இந்த கவிதையின் தலைப்பு சில மொழிபெயர்ப்புகளில் “Stark Electric Jesus ” என வெளியாகியுள்ளது. வங்காளத்திலிருந்து முதலில் ஹோவர்ட் மக்கார்ட் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில பிரதியில் வங்காள அசல் தலைப்பான “பிரச்சண்டை போதியுதீக் சுத்தார்” (“Pracaṇḍa Baidyutik Chutār “) என்பதை “Stark Electric Jesus ” என மொழிபெயர்த்தார். “சுத்தார் ” எனும் வங்காள வார்த்தை தமிழில் “தச்சர்” (Carpenter) என மொழிபெயர்கிறது. கர்த்தரின் மேற்கோள் இதிலிருந்து உருவாகிறது.
*****
பசிப் புலவர்கள் இயக்கத்திற்கு எதிர்பார்த்த விதமாக கடும் எதிர்ப்பு உருவாகியது. சுனில் கங்கோபாத்யாய் “க்ரிதிபாஸ்” என்ற இதழில்,
“பசிப் புலவர்கள் இயக்கம் நல்லதா, கெட்டதா என எங்களுக்கு தெரியவில்லை. அதன் எதிர்காலத்தை பற்றியும் எங்களால் கூற முடியவில்லை ஆனால் அவர்களின் படைப்பில் எந்தவித இலக்கிய உன்னதமும் இருப்பதாக படவில்லை. சாதாரண வரிகள் பெருமையை தேடுகின்றன. சில படைப்புகள் குழந்தைத்தனமாக இருக்கிறது…இந்த காலங்களில் கூட அரை குறை ஆங்கிலத்தில் எழுதுவது சிரிப்பாக இருக்கிறது. ஒருவேளை இந்த இயக்கம் மாறுபட்ட இலக்கியத்தை உருவாக்கினால் அதை நாங்கள் வரவேற்போம்” என விமர்சித்தார்.
கவிதைக் கூறுகளான காதல், உருவகம், தெய்வீகம், ஏக்கம் போன்றவற்றை பெரும்பாலும் இவர்களது படைப்பில் காணமுடிவதில்லை. பசிப் புலவர்களின் படைப்புக்களை சமுதாய உயர்மட்டத்திலேருந்து பார்க்காமல் தெரு மட்டத்திலிருந்து பார்ப்பது அவசியம். போதை, மதுவின் ப்ரபாவத்தில் எழுதிய வரிகள் பலவை குழப்பங்களாக இருக்கிறது. பசிப் புலவர்களில் ஆங்கிலம் பயின்றவர்கள் குறைந்தவர்களே என்றாலும் அறிக்கையை ஆங்கிலத்திலேயே வெளியிட்டனர். அத்தகைய அறிக்கைகள் அவர்களுடைய வார இதழ்களில் வெளிவந்தன. சுமார் நூறு அறிக்கைகள் வெளிவந்துள்ளது. அவர்களின் தாய் மொழியான வங்காளத்தில் எழுதும்போது வட்டார வழக்குகளில் எழுதினார். இதனால் மொழி பெயர்ப்புகள் தடம் புரள வாய்ப்புகள் அதிகம் உள்ளது . இருப்பினும் ஹிந்தி, குஜராத்தி, உருது, ஆசாமீஸ் போன்ற இந்திய மொழிகளிளும் இஸ்பானீஷ், ஜேர்மன் , ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளிலும் இவர்களது படைப்புகள் மொழி பெயர்ந்துள்ளன. பசிப் புலவர்களின் படைப்புகள் பலவை தனிப்பட்ட வெளிப்பாட்டியங்களாக இருக்கின்றன.
தலைப்பு : மனிதர்களுடன் எனக்கு பகை இல்லை
கவிஞர் : ஃஆல்குனி ராய்
(முழுமை இல்லாத மொழிபெயர்ப்பு)
“இல்லை, எனக்கு மனிதர்களுடன் இனிமேல் பகை இல்லை.
எனக்கு கடன்கொடுத்தவருக்கு விபத்து நேர்ந்தால் தயங்காமல் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வேன்
தயக்கம்மில்லாமல் என் மாஜிக் காதலியின் கணவரிடம் சிகரெட் கேட்பேன்
.
ராமகிருஷ்ணரின் காளி பக்தியில் உலகளாவிய காம அமைதியை பார்க்கமுடிகிறது
பப்பிளுக்கு அவள் கணவன் மீதுள்ள காதலில் உலகளாவிய காம இன்பத்தை பார்க்கமுடிகிறது
ஒரு செருப்பு தொலைந்தால் இனொரு புது ஜோடி வாங்கமுடிகிறது
இல்லை, எனக்கு மனிதர்களுடன் இனிமேல் பகை இல்லை.
.
.
பாய்போட்டா* நாளில் ரெட் லைட் ஏரியாக்களில் அலைகிறேன்
நான் மறைந்தால் மறுஜென்மத்தின் கருவறையை பார்ப்பேன்
என் ஜென்மத்திற்கு ஒரு கணம் முன் வரை நான் ஜீவிப்பேன் என எனக்கு தெரியாது
பிராயச்சித்தம் இல்லாதவன் நான் ஆனால் விதியுடன் உறவாடுகிறேன்
விதி இல்லாதவன் நான் ஆனால் தீவிரவாதத்துடன் உறவாடுகிறேன்
.
.
கவிதையில் நயத்தை தேடுவதைவிட
வாழ்க்கையில் இன்பத்தை தேடுபவன் நான்
இதனால் வாழ்க்கையிடம் பகை இல்லை
மனிதர்களுடன் பகை இல்லை.”
*பாய்போட்டா : ரக்ஷா பந்தன் போல அண்ணன் தங்கை உறவை கொண்டாடும் வங்காள பண்டிகை.
மலே ராய்சௌத்ரியின் சிறைவாசத்திற்கு பிறகு பசிப் புலவர்கள் இயக்கம் தலைமறைவாகிவிட்டது எனவே கூறலாம். வழக்கின் போது சில சக உறுப்பினர்கள் மலே ராய்சௌத்ரிக்கு எதிராகவும் சாட்சி சொன்னார்கள். விந்தையான விஷயம் என்னவென்றால் “க்ரிதிபாஸ்” இதழில் பசிப் புலவர்களை தாக்கிய சுனில் கங்கோபாத்யாய் வழக்கின் போது “கலப்பற்ற மின் தச்சர்” கவிதையை எல்லோர் முன்னும் வாசித்தார். கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பேச்சு சுதந்திரம் காக்க வேண்டும் என்பதனால் அப்படிச் செய்தார். இறுதியில் மூன்றாண்டுகள் நடந்த வழக்கின் முடிவில் மலே ராய்சௌத்ரி நிரபராதி என தீர்ப்பு கூறியது கல்கத்தா உயர்நீதி மன்றம்.
சில படைப்புகளின் படிமம் விந்தையாகவும், விசித்திரமாகவும் அதிர்ச்சியூட்டுபவையாகவும் இருக்கிறது.
தலைப்பு : கடைசி கருவறை
கவிஞர் : ஃஆல்குனி ராய்
(முழுமை இல்லாத மொழிபெயர்ப்பு)
காட்சி ஒன்று: எறியும் சிதை, அதனை சுற்றி அழகான, அசிங்கமான நிர்வாண பெண்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள்.
காட்சி இரண்டு : வேப்பமரத்தின் இலைகளின் இடைவெளியிலெறிந்து நிலாவொளி கசிந்துகொண்டிருக்கிறது
காட்சி மூன்று : சிதையின் தீ முனை ஆகாயத்தை நோக்கி எழுகிறது, பெண்கள் கண்ணீர்மல்க பூமியை பார்க்கிறார்கள்.
காட்சி நான்கு : வேப்பமரத்தின் கிளைகளிலிருந்து சில வாலிபர்களின் சடலங்கள் கயிற்றுச் சுருக்கில் தொங்குகிறது. அவர்களுக்கு கைகள், கால்கள் இல்லை, குறிப்பகுதியில் தொலைக்காட்சி பேட்டி இருக்கிறது. கீழே நெருப்பு மேலே நிலாவொளி
.
.
காட்சி எட்டு : தொங்கிக்கொண்டிருக்கும் வாலிபர்களின் குறிப்பகுதியில் இருக்கும் தொலைக்காட்சி பேட்டியின் ஸ்கிரீனில் கீழ்வரும் வரிகள் தெரிகிறது
எங்களுக்கு உணவு, உடை, வீடு வேண்டும்
பெண்கள் வேண்டும், கவிதை வேண்டும்
சாராயம் வேண்டும், தூய நெடிமிகு சாராயம்
கலை எங்கள் சாராயம்
இலக்கியம் எங்கள் சாராயம்
பசி எங்கள் சாராயம்
இந்த கவிதையை இப்படி பார்க்கலாம். தொங்கும் வாலிபர்கள்- பசிப் புலவர்கள், எரியும் சிதை – சமுதாயத்தின் கட்டுப்பாடுகள், சுற்றியிருக்கும் பெண்கள் பசிப் புலவர்களின் காதலிகள், பெண் உறவினர்கள். தொலைக்காட்சி பேட்டி பசிப் புலவர்களின் படைப்புகள், அறிக்கைகள்.
தலைப்பு: குளிர்ச் சாதன தெய்வம்
கவிஞர் : பசுடெப் தாஸ் குப்தா
” அபாயமான மௌன ராஜ்யத்தின் ஓடையில் நம் படகு மிதக்கிறது
கரையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் தெரிகின்றன
.
.
வலப்பக்கம் தங்கநிற கரையில்
பச்சை நிற புல்வெளியில்
நிர்வாணமாய் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான்
படகை பார்த்ததும் நீரில் குதிக்கிறான்
ஏதோ சொல்ல நினைத்ததை போல
கை செய்கை காட்டிக்கொண்டே நீரில் அடித்து செல்லப்படுகிறான்
யாருக்கு தெரியும் என்ன சொல்ல நினைத்தான் என்று
யாருக்கு தெரியும் எங்கே மூழ்கினான் என்று
அரை டன் பிஸ்கட்டுடன் இந்த படகு முன் செல்கிறது.
பசிப் புலவர்கள் இயக்கம் அமெரிக்க பீட் இயக்கத்தின் ப்ரபாவத்தில் உருவானது என்பது ஒரு பரவலான கருத்து. பீட் இயக்கத்தின் குரு என கருதப்படும் அலன் கின்ஸ்பேர்க் (Allen Ginsberg) கல்கத்தாவுக்கு 1962 ல் வந்து பசிப் புலவர்கள் இயக்கத்தினருடன் உரையாடல்களில் ஈடுபட்டார். சுமார் பதினான்கு மாதங்கள் இந்தியாவில் வசித்த அலன் பசிப் புலவர்களின் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமெரிக்காவில் வெளியிட உதவினார். பசிப் புலவர்களின் படைப்புக்களை பெண்மை ஆசிரியர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். பெண்களை ஒரு பாலின்ப பொருட்களாக மட்டும் சித்தரிப்பதாக சாடியுள்ளார். இதில் உண்மையும் இருப்பதாக தோன்றுகிறது. வங்காளம் ரபீந்திரநாத் தாகூரை ஒரு தெய்வமாகவே பார்த்த சமூகம். அவர் இருந்த சமகாலத்தில் உருவெடுத்த இந்த இயக்கம் தாகூரின் கவிதைப் படைப்புகள் மேல்மட்ட சமுதாயம் கவிதைக்கு விதிக்கும் கூறுகளின் விளைவு என தாக்கியது. தாகூர் சமுதாய யதார்த்தங்களை மறந்து அழகியலை மட்டும் பேணுகிறார் என்பது பசிப் புலவர்களின் வாதம். ஒரு வகையில் இது நிஜமும் கூட. பசிப் புலவர்களின் உறுப்பினர்கள் தாகூரை போல உயர் குடியிலிருந்து வரவில்லை. அதனால் அவர்களுடைய நடை, தலைப்புகள், அவற்றின் பரிசோதனை போன்றவை செவ்வியல் கவிதைக்கு நேர் முரணாக இருந்தது.
மேற்பார்வையில் கொள்கைக்காக ஒன்று கூடிய படைப்பாளிகள் என தோன்றினாலும், ஒருவருக்கு ஒருவர் முரண்பாடுகளுடன் தோழமையற்ற இயக்கமாக தோன்றுகிறது இந்த அமைப்பு. 1964ல் போலீஸ் தடியடியில் உடைந்த இயக்கத்தை பல முறை மீண்டும் துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் சிலர் இதற்கு பின் தொடங்கிய நக்ஸல் இயக்கத்திலும் சேர்ந்தார்கள். சூறாவளியைப் போல ஆரம்பித்த இயக்கம் முடிவில் ஆற்றல் இழந்து மலைச்சருக்கை போல சில தற்காலிக இடைஞ்சல்களை மட்டுமே ஏற்படுத்தியதாக தெரிகிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
