வெற்றி யாருக்கு?

அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதங்கள் தேர்தலின் ஒரு அங்கமாக மக்கள் மன்றங்களில் நடப்பது ஒரு மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்பு சிறு அரங்கில் மக்கள் முன்னிலையில் நடந்து வந்தது தற்பொழுது வேட்பாளர்களும் விவாத ஒருங்கிணைப்பாளர்களும் மட்டுமே பங்கு பெறும் நிகழ்வாக மாறியுள்ளது. ஒரே மேடையில் எதிரெதிர் வேட்பாளர்கள் தங்கள் கொள்கை நிலைப்பாடுகளை எவ்வாறு விளக்குகிறார்கள் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளவும் வாக்களிக்கும் முடிவுகளை எடுக்க உதவுவதாலும் இவை நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. பொதுவாக, மூன்று விவாத மேடை நிகழ்ச்சிகள் அதிபர் வேட்பாளர்களிடையே நடைபெறும்.

முதல் விவாத மேடை ஜூன் 27 அன்று அன்றைய அதிபர் வேட்பாளர்களான முன்னாள் அதிபர் ட்ரம்ப்பிற்கும் இந்நாள் அதிபர் பைடனுக்குமிடையே ‘சிஎன்என்’ தொலைக்காட்சி நிறுவனத்தினரால் நடத்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக விவாதத்தின் முடிவில் பைடனின் செயல்திறனைக் கண்டு ஜனநாயகக் கட்சியினர் அதிர, அவரைப் போட்டியிலிருந்து விலக்க அதுவே மிக முக்கிய காரணியாகவும் அமைந்தது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனால் செப்டம்பர் 10 அன்று ட்ரம்ப்பிற்கும் ஹாரிஸிற்கும் நடந்த இரண்டாவது விவாதத்தை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். அதுவரையில் செய்தியாளர்களை அதிகம் சந்திக்காத ஹாரிஸ், முன்பே தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்தார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரின் பேச்சைக் காணும் வாய்ப்பும் பல முறை விவாதங்களில் கலந்து கொண்ட முன் அனுபவம் உள்ள முன்னாள் அதிபரை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற ஆவலும் இரு கட்சியினரிடமும் இருந்தது. அதற்காக ஹிலரியும் பைடனும் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும் ஹாரிஸிற்குத் தீவிரமாகப் பயிற்சி அளித்ததாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

தன்னை ஒரு ‘ஆல்ஃபாவாக’ காட்டிக்கொள்ளும் ட்ரம்ப்பின் தாக்குதல்களை 2016ல் ஹிலரி எதிர்கொள்ள முடியாமல் சில இடங்களில் தடுமாறியது போல் இவருக்கும் ஏற்படுமா? இல்லையென்றால் இன்றும் ஆணாதிக்க மனப்பான்மையில் இருக்கும் அமெரிக்காவிற்குச் சவாலாகத் தன்னைச் சிறந்த அதிபர் வேட்பாளராக நிறுத்திக் கொள்வாரா என்று மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த விவாதத்தை ‘ஏபிசிநியூஸ்’ தொலைக்காட்சி நிறுவனம் நடத்தியது. விவாதத்தின் பொழுது கேட்கப்படும் கேள்விகள் வேட்பாளர்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். நம்பித்தானே ஆக வேண்டும். ஏனென்றால் 2016ல் ட்ரம்ப்-ஹிலரியின் விவாதத்தின் பொழுது ‘சிஎன்என்’ தொலைக்காட்சி நிறுவனத்தில் அப்பொழுது பணிபுரிந்து கொண்டிருந்த ஜனநாயகக்கட்சியின் தீவிர ஆதரவாளர் ‘டானா ப்ரஜில்’ மூலமாக ஹிலரிக்கு முன்கூட்டியே கேள்விகள் தரப்பட்டது என்று நிரூபணமானது. வரலாறு. இப்பொழுதும் ஊடகங்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகவும் அப்படி நடக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ட்ரம்ப் தரப்பில் அதைப்பற்றின சந்தேகத்தையும் முன்கூட்டியே எழுப்பிவிட்டிருந்தார்கள். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு இப்போதைக்கு நம்பித்தான் ஆக வேண்டும்.

விவாதங்களில் பெரும்பாலும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் முக்கிய விவாதப்பொருட்களாக இருக்கும். இரு கட்சி வேட்பாளர்களின் கொள்கைகள் தான் பின்பு வாக்குகளாக வெளிப்படும். அந்த வகையில் மக்களின் இன்றைய தலையாய பிரச்சினைகளாக விஸ்வரூபமெடுத்து நிற்கும் பொருளாதாரம், சட்ட விரோத குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை, கருக்கலைப்பு உரிமை, சுகாதாரப் பாதுகாப்பு, உச்ச நீதிமன்ற நியமனங்கள், இன சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், துப்பாக்கி வைத்துக் கொள்வது தொடர்பான கொள்கைகள் போன்றவை இந்தத் தேர்தலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கடந்த பல தேர்தல்களில் இதே பிரச்சினைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு அரசுகள் மாறினாலும் இன்றுவரையில் தீர்வுகள் தான் கிடைத்தபாடில்லை. யாரை நோவது?
இந்தத் தேர்தலில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரம் (93%), குடியேற்றம் (82%), வன்முறைக் குற்றங்களை (76%) முதன்மையான பிரச்சினைகளாகக் கூறியுள்ளனர். வெறும் 18% பேர் இன சமத்துவமின்மை மிகவும் முக்கியமானது என்றும் வெகு சிலரே காலநிலை மாற்றம் மிகவும் முக்கியமானது (11%) என்றும் கூறியுள்ளார்கள்.

ஹாரிஸ் ஆதரவாளர்களோ சுகாதாரப் பாதுகாப்பு (76%), உச்ச நீதிமன்ற நியமனங்கள் (73%), கருக்கலைப்பு (67%), பொருளாதாரம் (68%) சார்ந்த கொள்கைகள் தேர்தலில் மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகின்றனர்.

கருத்துக்கணிப்புகளில், தற்பொழுது பொருளாதாரம் தான் அமெரிக்கர்களின் முக்கியக் கவலையாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளனர். 2022ல் பணவீக்கம் 40 ஆண்டுகளில் உச்சத்தை எட்டியதிலிருந்து கணிசமாகக் குறைந்திருந்தாலும் நுகர்வோர் விலைக்குறியீட்டுத் தரவுகளின்படி, கொரோனா தொற்றுப்பரவலுக்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது அமெரிக்கர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 20% அதிகமாகச் செலுத்துகின்றனர்.

மறுபுறம், தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஆதாரமாக இருந்த வேலைச்சந்தை சமீபத்தில் எச்சரிக்கை அறிகுறிகளை உணர்த்தியுள்ளது. வேலையின்மை விகிதம் மூன்று வருட உச்சத்தை நெருங்கி வருகிறது. நிறுவனங்களும் பணியமர்த்துவதைக் குறைத்து வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது

தற்போதைய நசிந்து வரும் பொருளாதாரம் குறித்து அமெரிக்கர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் விவாதத்தின் போது தங்களது கொள்கைத் திட்டங்களை விவரித்துள்ளனர்.

ட்ரம்ப் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த வரிச் சீர்திருத்தச் சட்டம் அனைத்து வருமானக் குழுக்களுக்கும் முக்கியமாக நடுத்தர வருமான குடும்பங்களுக்கான வரிகளைக் குறைத்து மிகப் பெரிய பலன்களை வழங்கியது. வறுமையைக் குறைப்பதற்கும் செழிப்பை மேம்படுத்துவதற்கும் உதவி பொருளாதார வளர்ச்சியைத் தூண்டியது. அதை மேற்கோள் காட்டிப் பேசியவர், தன்னுடைய அமெரிக்கப் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையால் நடுத்தர குடும்பங்களுக்கான வரி நிர்ணய வரம்பை மாற்றி குழந்தைகளுக்கான வரிவரவை இரட்டிப்பாக்கியது, எந்த நிர்வாகமும் அதுவரை செய்யாத வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் விதிமுறைகளை மாற்றியது, அதன் விளைவாக நடுத்தர குடும்பங்களின் வரிச்சுமை குறைந்து ஊதியங்கள் அதிகரித்தது. சராசரி குடும்ப வருமானம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது. பைடன் அரசின் பொறுப்பற்ற அரசாங்க செலவினங்களால் பணவீக்கம் தொடருகிறது என்று சாடினார்.

அதற்குப் பதிலளித்த ஹாரிஸ், தான் நடுத்தரவர்க்க வீட்டில் வளர்ந்த அனுபவத்தால் மக்களின் துயரைப் புரிந்து கொள்வதாகவும் நடுத்தர வர்க்கம் வலுவாக இருக்கும்போது தான் ​​​​அமெரிக்கா பலமாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார். தான் அதிபரானால் அனைத்து அமெரிக்கர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான செலவுகளைக் குறைக்கவும் முன்னுரிமை அளிப்பேன் என்று கூறினார். முதல் முறை வீடு வாங்க மானியங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் அமெரிக்க நிறுவனங்களை ஒன்றிணைத்து நல்ல ஊதியம் பெறும் வேலைகளை உருவாக்கவும் பொருளாதாரத்தை வளர்க்கவும் அமெரிக்கா தொடர்ந்து உலகை வழிநடத்துவதை உறுதி செய்யவும் தன்னுடைய அரசு கொள்கைகளை வகுக்கும் என்று கூறினாரே ஒழிய எப்படி என்று கூறவில்லை. தற்பொழுது பைடன் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் சரியான பாதையில் செல்வதாகவும் இன்றைய நிலைக்குக் காரணம் ட்ரம்ப் அரசு தான் என்று குற்றம் சாட்டி வாதத்தை நேர்த்தியாகத் திசைதிருப்பினார்.

துவக்கத்தில் இரு வேட்பாளர்களும் தாங்கள் தான் அமெரிக்காவின் சரிந்திருக்கும் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத் தகுதியானவர்கள் என்று பேசினாலும் “இவ்வளவு திட்டங்கள் வைத்திருக்கிறேன் என்று கூறுபவர் ஆட்சியில் இருந்து கொண்டு ஏன் இப்பொழுது ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்? ஏன் தன்னுடைய அரசு கொண்டுவந்த வெளிநாட்டுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை பைடன் அரசு நீக்கவில்லை” என்ற ட்ரம்ப்பின் கேள்விகளுக்கு ஹாரிஸிடம் நேரடியான பதில் இல்லை. “இறக்குமதிப் பொருட்களின் மீதான வரியை உயர்த்தி பெட்ரோல் விலையைக் குறைக்கும் வகையில் உள்நாட்டிலேயே உற்பத்தியை மேலும் பெருக்குவேன்” என்றார் ட்ரம்ப். இறக்குமதி வரியைக் கூட்டினால் பொருட்களின் விலையை நுகர்வோர் தலையில் தான் கட்டுவார்கள். ஏற்கெனவே அதிகளவு எண்ணெய் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய வாக்குறுதி சாத்தியப்படுமா?

‘கேட்ச்22’ என்பதைப் போல சுழலில் மாட்டிக்கொண்ட நிலை தான் இப்பொழுது. இதிலிருந்து வெளிவர தன்னுடைய அரசு மத்திய வகுப்பினரைக் கவனத்தில் கொண்டு விலைகளைக் குறைக்கும் வழிகளைப் பின்பற்றும் என்று கூறினாலும் தெளிவான கொள்கைகளைக் கூற முடியாமல் வழக்கம் போலச் செல்வந்தர்களுக்கான வரி வரம்பு மாற்றம், ட்ரம்ப்பின் பொய், பித்தலாட்டம் என்று திசை மாறிப்போனது விவாதம்.

ட்ரம்ப்பின் பிரச்சார செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “பைடன் அரசு எண்ணற்ற ஆவணமற்ற குடியேறிகளை அனுமதித்திருப்பதால் சுகாதார அமைப்பு, மருத்துவம், சமூக, பொது பாதுகாப்புகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டு ஜனநாயகம் சரியும் நிலையில் இருக்கிறது. ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் மில்லியன் கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்துவார். அனைத்து அமெரிக்கர்களையும் மேம்படுத்துவதற்காக அமெரிக்கர்களுக்கு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும்” என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இன்று பத்தில் ஆறு வாக்காளர்கள் (61%) குடியேற்றக் கொள்கைகள் தங்களின் வாக்குகளுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள். இது 2020 அதிபர் தேர்தலை விட 9 சதவீத புள்ளிகளும் 2022 காங்கிரஸ் தேர்தலை விட 13 புள்ளிகள் அதிகமாகும். அதுவும் குடியரசுக் கட்சி வாக்காளர்களுக்கு இது மிகவும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. ட்ரம்ப் ஆதரவாளர்களில் 82% பேர் இந்தத் தேர்தலில் பொருளாதாரத்திற்கு அடுத்தபடியாக குடியேற்றம் தொடர்பான கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருவதாகக் கூறியுள்ளார்கள். நாட்டில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு கள்ளக்குடியேறிகள் தான் காரணம் என்பது போல ட்ரம்ப் கூறுவதில் சிறிது உண்மை இருந்தாலும் தேவையற்ற உண்மைக்குப் புறம்பான வேறு சில செய்திகளைக் கூறி அவமானப்பட்டார். பைடன் அரசு எல்லையைத் திறந்து வைத்திருந்தாலும் பெரிதாக குடியேற்றச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வராதது ஏமாற்றமே.

கட்டுமானப்பணிகள், விவசாயம், தோட்ட வேலைகளைப் பெரும்பாலும் முறையான ஆவணமில்லாத குடியேறிகளைக் கொண்டு தான் நடத்தி வருகிறார்கள். ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியங்களும் உள்ளது. நாட்டில் ஏற்கெனவே பலதுறைகளில் தகுதியான ஆட்கள் இல்லாமல் இருப்பதும் கண்கூடு.

ஹாரிஸ் ஆதரவாளர்கள் பத்தில் நான்கு பேர் மட்டுமே (39%) குடியேற்றம் தங்களின் வாக்குக்கு மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்றத்தை மிக முக்கியமானதாகக் கூறிய 46% பைடன் ஆதரவாளர்களை விட இது குறைவு தான். குடியேற்றக் கொள்கை விஷயத்தில் ஹாரிஸ் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பார் என்று 45% வாக்காளர்கள் அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும் ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் மீது அவரது வாக்காளர்கள் 52% நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர் தொடர்ந்து ஏழு புள்ளிகள் அதிகம் பெற்று ஹாரிஸை விட முன்னிலையில் இருக்கிறார். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளக்குடியேற்றம் தடுக்கப்பட வேண்டியது அவசியம்.

தத்தம் நாடுகளில் கடுமையான குற்றங்களைச் செய்தவர்களை, சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை அமெரிக்காவிற்குள் நுழைய பைடன் அரசு அனுமதிக்கிறது. அமெரிக்காவிலும் அவர்கள் கொலை, கொள்ளை, போதைமருந்து கடத்தல், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என குடியரசுக்கட்சியினர் கூறி வருகின்றனர். டெக்சாஸ் மாநில குடியரசுக் கட்சியின் பிரதிநிதி டோனி கோன்சலேஸ், குற்றவாளிகளைப் பற்றின தகவல்களைக் கேட்க, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE)யும் அவருடைய கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் தரவை வெளியிட்டது.

ஜூலை 21, 2024 நிலவரப்படி, ICE தனது மேற்பார்வையின் கீழ் 662,556 பேர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கிட்டத்தட்ட 15,000 பேர் காவலில் இருப்பதாகவும் 647,572 பற்றின தகவல்கள் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது. இதுவே தற்பொழுது பேசுபொருளாக ஹாரிஸிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

‘ICE’ மேற்பார்வையிடும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, “இந்த எண்ணிக்கை பல தசாப்தங்களாக, டிரம்ப் நிர்வாகம் உட்பட பிற அதிபர்களின் ஆட்சிக்காலத்தையும் உள்ளடக்கியது. மேலும் ICE காவலில் இல்லாதவர்கள் ஒரு மாநில அல்லது உள்ளூர் நிறுவனத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்” என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. ஆக, குற்றவாளிகள் சுதந்திரமாக நாட்டிற்குள் திரிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் வரிப்பணம் அவர்களுக்குச் செலவிடப்பட்டு வருகிறது. அதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளைக் கையாண்டு வரும் ஹாரிஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ட்ரம்ப்பும் துணை அதிபர் வேட்பாளர் ஜேடி வேன்சும் எல்லா மேடைகளிலும் கூறி வருகிறார்கள். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் ட்ரம்ப் அரசு மட்டுமே கள்ள குடியேற்றத்தைத் தடுக்கும் கொள்கைகளைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்று வருகிறார்கள்.

நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் எல்லை தாண்டி நுழைந்தவர்களையும் சட்டவிரோத குடியேறிகளையும் நாடு கடத்துவேன் என்று ட்ரம்ப் கூறிவருவது வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

2020 தேர்தலில் ‘கருக்கலைப்பு உரிமை’ மிக முக்கிய அங்கம் வகித்தது. ‘Roe v. Wade’-ஐ ரத்து செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் முடிவைத் தொடர்ந்து, கருக்கலைப்பு உரிமை என்பது வாக்களிக்கும் பிரச்சினையாக மாறியது. இன்று 67% ஹாரிஸ் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்சினையை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். ட்ரம்ப் ஆதரவாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (35%) மட்டுமே இப்போது கருக்கலைப்பு உரிமை தங்கள் வாக்குகளுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள். இதன் தொடர்பான விவாதத்தில் இது மாநிலங்களின் உரிமை என்று மழுப்பி விட்டார் ட்ரம்ப். மக்கள் தங்கள் முடிவைத் தங்களின் வாக்குகள் மூலம் கூறட்டும் என்று துணை அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தின் பொழுது ஜேடி வேன்சும் கூறிவிட்டார்.

அமெரிக்க அரசியலில் மதத்தின் குறுக்கீடு இல்லையென்பதெல்லாம் பொய் தானோ?

கருக்கலைப்பு கொள்கை முடிவுகளைக் கையாள்வதில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஹாரிஸ், ட்ரம்பை விட 11-புள்ளி அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த விஷயத்தில் பெண்களின் ஆதரவும் அவருக்கு அதிகம் கிடைத்துள்ளது. இதன் தொடர்பில் விவாதத்தின் பொழுது ட்ரம்ப் அரசின் அடாவடி சட்டத்தால் பெண்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக, தெளிவாகப் பேசியது கவனத்தை ஈர்த்தது. துணை அதிபர் வேட்பாளர் வால்ஸ்ம் பெண்ணின் உடல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டுப் பேசினார்.

(கருக்கலைப்பு உரிமை பற்றின மேலதிக தகவலுக்கு இணைப்பைக் ‘கிளிக்’ செய்யவும்.)

சட்ட அமலாக்கம், குற்றவியல் நீதிப் பிரச்சினைகளைக் கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்ப் சற்று முன்னிலை வகிக்கிறார் (51% ட்ரம்ப், 47% ஹாரிஸ்). சுப்ரீம் கோர்ட்டுக்கு நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருவர் மீதும் வாக்காளர்கள் சமமாக நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டில் 41% ஹாரிஸ் மீதும் 36% ட்ரம்ப் மீதும் நம்பிக்கைவைத்துள்ளதாகக் கூறியுள்ளார்கள்.

விவாதத்தின் பொழுது கிடைத்த சந்தர்ப்பங்களை விடாமல் ட்ரம்ப்பைத் தாறுமாறாகக் கிழித்துத் தொங்க விட்டுவிட்டார் ஹாரிஸ். இந்த விவாத மேடையில் தன்னை அதிபர் பதவிக்குத் தகுதியானவராக நிலைநிறுத்தி வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும் பொருளாதாரம், குடியேற்றம், வெளியுறவுக் கொள்கைகளில் ஹாரிஸை விட வாக்காளர்கள் ட்ரம்ப் மீதும் கருக்கலைப்புக் கொள்கை குறித்து நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் இனப் பிரச்சினைகளைத் திறம்பட நிர்வகிக்க ட்ரம்ப்பை விட ஹாரிஸ் மீது அதிக நம்பிக்கையும் மக்கள் வைத்துள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

விவாதத்தின் முடிவில், நான்கில் மூன்று அமெரிக்கர்கள், வரவிருக்கும் அதிபர் தேர்தல் அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்று நம்புவதாகவும் எந்த வேட்பாளரால் அதிக அச்சுறுத்தல் உள்ளது என்பது அவர்களின் அரசியல் சார்புகளைப் பொறுத்தது என்றும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

‘அசோசியேட்டட் பிரஸ்-என்ஓஆர்சி சென்டர் ஃபார் பப்ளிக் அஃபர்ஸ் ரிசர்ச்’ நடத்திய ஆய்வில், ஜனநாயகக் கட்சியினரில் பாதிக்கும் மேற்பட்டவர்களும் 10ல் 4 குடியரசுக் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் எதிர்வரும் நவம்பர் தேர்தல் அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு “மிகவும் முக்கியமானது” என்று கருதுவதாக வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை முறியடிக்க முயன்ற பின்னர் ஜன. 6, 2021 அன்று அமெரிக்க பாராளுமன்றத்தைத் தாக்கிய கலகக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் ட்ரம்ப்பை பல ஜனநாயகக் கட்சியினர் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவே கருதுகின்றனர். அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் எதிரிகளைப் பழிவாங்குவார். சிறுபான்மையினர், ஆவணமற்ற குடியேறிகளுக்குப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று அச்சப்படுகின்றனர்.

ஆனால் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பலர் ‘பைடன்- ஹாரிஸ்’ அரசு தான் ஜனநாயகத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் என்று ட்ரம்ப்புடன் உடன்படுகிறார்கள் என்பதையும் கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ட்ரம்ப் மீது பைடன் அரசு தொடர்ந்த வழக்குகள் மூலம் நீதித்துறையை அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் கள்ளக்குடியேற்றம் மூலமாக ஜனநாயகக்கட்சியே இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என்று குடியரசுக்கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன, உக்ரைன்-ரஷ்ய போர் விஷயங்களில் ஆளும் அரசின் மீதான விமரிசனங்கள் அதிகரித்து வரும் வேளையில் நடுநிலை வாக்காளர்கள் பொருளாதாரம், பணவீக்கம், வேலைவாய்ப்பு, குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தருவார்களா அல்லது வெளிநாட்டுக் கொள்கைகள், கருக்கலைப்பு உரிமை, நாட்டை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பார்களா?

‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ வாக்காளர்கள் தான் இந்தத் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கப் போகிறவர்கள் என்பதால் இரு கட்சி வேட்பாளர்களும் தொடர்ந்து அங்குள்ள மக்களைச் சந்தித்து வருகின்றனர். சமீபத்திய நியூ குன்னிபியக்’ பல்கலைக்கழக கருத்துக்கணிப்பு பென்சில்வேனியா, மிச்சிகன் ‘ஸ்விங்’ மாநிலங்களில் ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதைக் காட்டுகிறது. நவம்பர் தேர்தலுக்கு 30 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இந்தக் கருத்துக்கணிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜியாவில் பெரும் போட்டி நிலவி வருகிறது. ஹாரிஸ், ட்ரம்ப் இருவருக்குமே ஜார்ஜியாவில் வெற்றி பெறுவது முக்கியம். தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரிகிறது. 2020ல் பைடனுக்கு வெற்றியைத் தந்த மாநிலம். 2024ல் ஹாரிஸுக்கு எப்படியோ?

ஆறு எலக்டோரல் வாக்குகள் மட்டுமே கொண்ட தென்மேற்கு மாநிலமான நெவாடாவில் கணிசமான அளவு வெள்ளையர் அல்லாத மக்கள் உள்ளனர். மாநிலத்தின் தகுதியான வாக்காளர்களில் சுமார் 40% பேர் லத்தீன், கறுப்பர், ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகள். ஹாரிஸ் அதிக ஆதரவைப் பெற்றிருந்தாலும் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு, பணவீக்கம் பிரச்சினைகளில் முன்னாள் அதிபருக்குச் சாதகமாக இருக்கலாம்.

விஸ்கான்சின் மாநில ஜனநாயகக் கட்சித் தலைவர் சொல்வது போல் இந்த மாநிலத்தின் முடிவு அதிபர் தேர்வை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போடலாம்.கடந்த தேர்தலைப் போல தங்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்று ஹாரிஸும் 2016ல் பெற்ற வெற்றியைத் திரும்பப் பெற ட்ரம்ப்பும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பல தசாப்தங்களாக ஜனநாயக கட்சியினர் வசம் இருந்த மிக்சிகன் 2016ல் ட்ரம்ப் வெள்ளை அமெரிக்கத் தொழிலாள வர்க்க வாக்காளர்களுக்கு ஆதரவாகப் பேசி குடியரசுக்கட்சி ஆளும் மாநிலமாக்கினார். தற்பொழுது ஹாரிஸிற்கு ஆதரவாக இருந்தாலும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் விஷயத்தில் பைடன் அரசின் மீது அதிருப்தி கொண்டிருக்கும் மத்திய கிழக்கு அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெற என்ன வாக்குறுதிகள் கொடுப்பாரோ? வெள்ளை அமெரிக்கர்களின் வாக்குகள் முற்றிலும் ட்ரம்ப்பிற்கு கிடைக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? அந்த மாநிலத்தில் ஹாரிஸ் தான் முன்னிலையில் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது.

பென்சில்வேனியா மாநிலமும் ஹாரிஸுக்கு ஆதரவாக மாறி வருகிறது.

‘சிவப்பு மாநில’மாக இருந்த அரிசோனா 2020ல் ஜோ பைடனுக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைத்தது. 2024லும் அது தொடருமா?

கடந்த 10 அதிபர் தேர்தல்களில் 9ஐத் துல்லியமாகக் கணித்ததில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஆலன் லிக்ட்மேன், இந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்குச் செல்பவர் ஹாரிஸ் என்று கணித்திருக்கிறார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் செனட் அல்லது காங்கிரஸ் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்த முடியும். 2020 தேர்தலில் செனட்டில் இருகட்சியினரும் சம அளவில் இருந்ததால் ஜனநாயகக் கட்சியினரின் பல திட்டங்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதுவரையில் குடியரசுக்கட்சியினர் மிகவும் கவனமாக தங்கள் உறுப்பினர்கள் செனட் அல்லது மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டு வந்திருந்தனர். தற்பொழுது அந்த நிலையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.பல ‘சிகப்பு மாநில’ செனட்டர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார்களா என்ற இழுபறி நிலையில் ஹாரிஸ் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இந்த பரபரப்புக்களுக்கிடையே இருமுறை துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியவரை யார், எதற்காக கொல்ல நினைக்கிறார்கள் என்ற மர்மம் வேறு நிலவி வருகிறது. ஊடகங்களும் கமுக்கமாக இருக்கிறது. செப்டம்பர் 19ம் நாள் கருத்துக்கணிப்பின் படி ட்ரம்ப்பும் மூன்று ஸ்விங் மாநிலங்களில் முன்னிலையில் இருக்கிறார். இந்த வருடத் தேர்தலில் ஜெயிக்காவிட்டால் குடியரசுக்கட்சி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் எப்பொழுது அமருமோ என்று அக்கட்சி கடுமையாக உழைக்கிறது. ட்ரம்ப் ஆட்சிக்கு வருவதை நினைத்துக் கூட பார்க்க விரும்பாத ஜனநாயக கட்சி செனட் பெரும்பான்மையுடன் வெற்றி பெற போராடிக் கொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற நிலையில் அக்டோபர் 1, 2024 அன்று இரு துணை அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நடந்த விவாதம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக இவர்களின் விவாதம் அதிபர் தேர்தலில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிசுடன் மூன்றாவது விவாதம் செய்ய மறுத்ததால், ‘வேன்ஸ்-வால்ஸ்’ விவாத மேடை அதிக கவனத்தை ஈர்த்தது.

அவர்களும் மத்திய கிழக்கில் தற்பொழுது நடைபெற்று வரும் போரில் அமெரிக்காவின் பங்கு, குடியேற்றம், பணவீக்கம், கருக்கலைப்பு உரிமைகள் போன்ற பிரச்சினைகளை நாடு எவ்வாறு கையாள வேண்டும் என்பது உட்பட பல முக்கிய பிரச்சினைகளை விவாதித்தார்கள். வீட்டு விலைக்குறைப்பு, துப்பாக்கி வன்முறை, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை விளக்கினார்கள். இருவரும் அதிபர் வேட்பாளர்களை விட நாகரீகமாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசியது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த விவாதத்தின் மூலம் கட்சியில் தன்னை ஒரு தலைவராக முன்னிறுத்தி வெற்றி பெற்றுள்ளார் வேன்ஸ். வால்ஸ் அதைத் தவற விட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன்.

இதுவரையில் ட்ரம்ப்பை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று ஜனநாயகக் கட்சியினர் போட்ட கணக்கில் ஹாரிஸ் கொஞ்சம் தடுமாறுவதைப் போலத்தான் தெரிகிறது. ஆனாலும் இன்று வரையில் பாப்புலர் வாக்குகளில் ஹாரிஸ் தான் முன்னிலையில் இருக்கிறார். ஊடகங்களின் ஒரு கட்சி சார்பு நிலையால் எலக்டோரல் வாக்குகள் யாருக்கு கைகொடுக்கப் போகிறது என்பதைத் துல்லியமாக கணக்கிட முடியாமல் கருத்துக் கணிப்புகள் மாறிக்கொண்டே வருவதும் 2016 தேர்தலை நினைவுறுத்துகிறது.

2020 தேர்தலில் 60 சதவீத ஜனநாயகக் கட்சியினரும் 32 சதவீத குடியரசுக் கட்சியினரும் அஞ்சல் மூலம் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்தனர். இந்த வருடமும் அதற்கான வேலைகள் சில மாநிலங்களில் ஆரம்பித்து விட்டன.

2016 தேர்தலின் பொழுது ட்ரம்ப் அரசியலுக்குப் புதியவர் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. இப்பொழுது அவர் மீது வழக்குகள் பல தொடரப்பட்ட நிலையிலும் அவரை முன்னிறுத்தி அவரால் மட்டுமே மீண்டும் வெள்ளை மாளிகையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று குடியரசுக்கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. போர்களை நிறுத்தி அந்நிய செலவினங்களைக் குறைத்து அமெரிக்காவை முன்னேற்றுவதே தன்னுடைய குறிக்கோள் என்று முழங்கி வரும் ட்ரம்ப்பிற்கு இன்றைய நாளில் ‘battleground’ மாநிலங்களில் ஆதரவு பெருகி வருகிறது.பைடனுக்குப் பிறகு வேகமாக முன்னேறி வந்தாலும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவரும் ஹாரிஸ் செனட் பெரும்பான்மை இழப்பாரா? அல்லது தக்க வைத்துக் கொள்வாரா? பாப்புலர் வாக்குகள் அதிகம் பெற்றாலும் எலக்டோரல் வாக்குகள் அவருக்கு கிடைக்குமா என்பதை நிர்ணயிக்கும் “ஸ்விங்” மாநில மக்கள் கைகளில் தான் அமெரிக்காவின் எதிர்காலம் இருக்கிறது.

தேர்தல் வரலாறு காணாத வகையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கணிக்க முடியாத அளவிற்குப் போட்டி பலமாக இருக்கிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அக்டோபர் மாதம் என்ன ரகசியங்களை வைத்திருக்கிறதோ? மாற்றங்களைக் கொண்டு வருமா?

God Bless America!


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.