எழுத்தாளர் பொன்னம்மாள்

கடந்த புதன்கிழமை என்னுடைய அம்மா, — எழுத்தாளர் பொன்னம்மாள் மறைந்து விட்டார்.

அ.மி, அவருடைய பாஸைக் குறித்து எழுதியது போல், ஆழ்வார்கள் அவர்களை நீக்கமற நிறைந்தவர்களைக் குறித்து பாசுரங்களில் உருகியது போல், நிறைய எழுதலாம்.

முதலில் அவர் ஆதர்ச தாயார். கண்டிப்பும் அன்பும் இரண்டறக் கலந்தவர். ‘கால் முடியலம்மா’ என்று சோம்பி உட்கார்ந்தால், உற்சாகமும் இரக்கமும் கலந்து எழச் செய்பவர். ‘ஃபிஸிக்ஸ் ஃபெயில்’ என்றால் அக்கறையும் அலட்சியமும் சரிவர கலந்து சரிப்படுத்துபவர்.

ஆங்கிலம் தெரிந்தபின், கொஞ்சம் போல் கற்றபின், உரையாடல்களில் எனக்குப் பிடித்த வார்த்தை ‘Paradox’ – முரண்பாடு. ஒன்றை விட்டுக் கொடுத்து இன்னொன்றை சாதிப்பது. 

அம்மா அதை நடைமுறையில் காண்பித்து, போதித்து, கற்றுக் கொடுத்தவர்.

கல்லாவில் பைசா இருக்காது. இருந்தாலும் காட்பரீஸ் சாக்லேட் கேட்டால் வாங்கித் தர தவற மாட்டார். குஞ்சுகளை அருகிலேயே அடைகாக்க ஆசை. பொறியியல் கல்லூரி எல்லாம் உள்ளூரில் கிடைக்காது. இருந்தாலும் கவலைப்படாமல் தைரியம் சொல்லி தூரதேசம் அனுப்புவார். 

இந்த முரண்கள், பொது வாழ்க்கைக்கும் உதவியது. ஜாதகத்தைப் பெரிதும் நம்பினார். அதை துருப்புச்சீட்டாக்கி வாழ்வில் சோர்ந்தவர்களுக்கு பரிகாரங்களும், ஊக்க மந்திரங்களும், குட்டிக் கதைகளும் தொடர்ச்சியாகச் சொல்லி, பற்பலரை தூக்கி விட்டவர். மண வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதைத் தனிமையில் ஆலோசனை வழங்கி தாம்பத்திய உறவை வெற்றிப் பெறச் செய்வதாக இருக்கட்டும்; வியாபாரத்தைத் தூக்கி நிறுத்தும் நிர்வாகமும் சந்தையாக்கமும் கலந்த துப்புகளைக் கொடுக்கும் மேலாண்மைப் பயிற்சி பட்டறை ஆகட்டும்; நடுத்தர வயது அலுப்பு; குழந்தை வளர்ப்பு; காதல்; இயலாமை; தள்ளாமை; முதுமை; நிராசை – எல்லாவற்றுக்கும் சௌந்தர்ய லஹிரியும் வால்மீகி இராமாயணமும் கொண்டு பல்லாயிரக்கணக்கோருக்கு தீர்வுகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தவர். 

அம்மாவிற்கு முடியாத காரியம் என்று எதுவும் இல்லை. செய்யமாட்டேன் என்று எதையும் சொன்னதில்லை. சற்றே விவரம் தெரிந்த பின், எனக்கு ஈ.வெ. ராமசாமி மீது அருவருப்பு கலந்த புறந்தள்ளல் ஏற்பட்டது. அப்பொழுது அவரிடம் ஒரு புத்தக வெளியீட்டாளர் கேட்கிறார்: “நூலக உத்தரவு வந்திருக்கிறது. பெரியாரைக் குறித்து எழுத முடியுமா? அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதித் தருவீர்களா?”

அம்மாவும், “எனக்கும் அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அது அவரைக் குறித்து எழுதுவதற்குத் தடையேயில்லை.” என்று காந்தியை, நேருவை, படேலை, ராஜேந்திர பிரசாத்தை, போஸை, பாரதியைப் பற்றி புத்தகம் போட்டது போல், ஈ.வெ.ரா. குறித்தும் எழுதி வெளியிடுகிறார். 

அது போல் ஆன்மீகம், ஜாதகம், குழந்தைகளுக்கான கதைகள், தலபுராணங்கள், ஷேத்ராடனங்கள், உல்லாசப் பயணங்கள், அறிவியல் கட்டுரைகள், ராமாயணம், மஹாபாரதம், நாவல்கள், புனைவுகள், சுவாரசியமான தகவல் தொகுப்புகள், 4000 பாசுரங்கள், திருமுறைகள் – என இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள். 

தெருமுக்கில் இருக்கும் கேசவப் பெருமாள் திருமங்கையாழ்வாரிடம் தன் நகையை எல்லாம் தொலைத்துவிட்டு, தாயாரிடம் கோவிலுக்குள் நுழையக் கெஞ்சுவதை இல்லறத்துக்கே உரிய காதலுடனும் இறைக்கே உரிய கிரணங்களும் கொண்டு சுவாரசியமாக்கி, தெரிந்த கதையை புதியதாக்குவார். திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்று சமீபத்தில் வாசித்ததை விரிவாக்கி, முழுமையான அனுபவத்தை உருவாக்குவார். மீனாட்சி மஹாத்மியத்தில் மூன்றாம் தனம் மறைந்ததை முன் ஜென்மம், திருமுறைப் பாடல், சங்கரர் பாஷ்யம், கிளைக் கதை, ஒட்டுக் கதை எல்லாம் வைத்து விக்கி போல் விவரங்களும் குமுதம் போல் விவகாரங்களும் கொண்டு, ‘இதில் உங்களுக்கு ஏதேனும் தெரியாத விஷயம் இருக்க வேண்டும். தெரிந்த விஷயம் வித்தியாசமாக வந்திருக்க வேண்டும்!’ என்பதைப் பார்த்துக் கொள்வார்.

இப்பொழுது பா.ரா. (எழுத்தாளர் மெட்ராஸ் பேப்பர் பா. ராகவன்) எழுதித் தள்ளுகிறார். எழுதியதை வாட்ஸாப் அலைவரிசையில் போடுகிறார். அதை உடனுக்குடன் அவருடைய வாசகர்கள் படிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

அந்த மாதிரி ஒரு வாய்ப்பு எனக்கு, என் அம்மாவின் எழுத்துகள் மூலமாக, நினைவு தெரிந்த காலம் முதல் கிட்டியிருக்கிறது. ஐந்தாவது படிக்கும்போது, திருக்குறள் நீதிக் கதைகள், புராணக் குட்டிக்கதைகள், சாகச வரலாறுகள் எனத் துவங்கி, ஆறாவதில் தல புராணங்கள், சான்றோர்களின் சொற்பொழிவுகள் என வளர்ந்து, ஏழாவதில் பாசுரங்கள், எட்டாவதில் தத்துவங்கள் எனத் தொடர்ந்து கொண்டே வந்தது.

அதனாலேயே ஜெயகாந்தன், புதுமைப் பித்தன், சுஜாதா போன்றோர் அறிமுகமானார்கள். அவர்கள் கங்கை எங்கே போகிறாள், சாப விமோசனம், நகரம் எல்லாம் எழுதினால், அம்மாவும் சளைக்காமல் சமூகக் கதைகள் எழுதுவார்.

அம்மவின் சிறப்பு – விடாமுயற்சி + தன்னம்பிக்கை + நிலைநிற்றல்.

கிழக்கு பதிப்பகம் நடத்தும் ‘சென்னையர் தினம்’ போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு முயல்வார் – இது எந்தப் போட்டியிலும் எப்பொழுதும் பங்களிப்பாளராக, முயல்பவராக இருக்க வேண்டும் என்னும் நிலைநிற்றல்.

எந்தப் பதிப்பகத்திற்கும் நேரில் சென்று, அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து, தன்னுடைய எழுத்துப் பிரதிகளையும் கொடுத்து, படித்துக் காண்பித்து, தொடர்ச்சியாக எப்பொழுது, எவரிடம் தன் ஆக்கங்களை வெளிக்கொணரலாம் என்று விடாமல் முயல்வார்.

ஒருவர் ‘உதவாது’ என்றாலோ, இன்னொருவரும் ‘சரியில்லை’ என்றாலோ, சோர்ந்து போகாமல், எதனால் உதவாது என்பதையும், எப்படி மாற்றலாம் என்பதையும் கேட்டும், உணர்ந்தும் முயன்றும் மாற்றிக் கொண்டு மீண்டு எழுந்து நின்று அதையே தட்டி கொட்டி மிளிர வைப்பது தன்னம்பிக்கை.

இன்றைய அலுவல் சூழ்நிலையில் கூட அந்த விடாமுயற்சியும் நிலைநிற்றலும், இலட்சியங்களாக, எனக்கு ஆதர்சமாக உச்சியில் நிற்பவர்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் பள்ளியில் இந்த மாதிரி முறைமையைப் பின்பற்றினார்கள். இடைக்காலத் தேர்வுகள் என்பது என்னுடைய வகுப்பிற்குள் மட்டும். மொத்தம் எழுபது மாணவர்கள் மட்டுமே. ஆனால், காலாண்டு, அரையாண்டு எல்லாம், அனைத்து ஏழாம் வகுப்புப் பிரிவுகளையும் சேர்த்து மதிப்பிட்டு தரநிலை வரிசைப்படுத்துவார்கள். அது ஐந்து வகுப்பிற்கும் பொது என்பதால் 350 மாணவர்கள். இந்த மாதிரி மூன்று இடைக்கால பரிசோதனைகள், பெரிய பொதுத் தேர்வுகள் என ஐந்திலும் ஐந்தாவது ரேங்க் எடுத்திருந்தேன். பள்ளியின் நடத்துனரே சற்றே பிரமிப்பும் நிறைய மகிழ்ச்சியும் கொண்டு வாழ்த்தினார். ‘இந்த மாதிரி கன்சிஸ்டென்சி நீங்க எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். எழுபது பேருக்கு நடுவிலும் ஐந்தாவது ரேங்க். காலாண்டு, அரையாண்டுகளில் அஞ்சு வகுப்புகளுக்கு நடுவில் பெரும் போட்டியிலும் ஐந்தாவது ரேங்க். இது அல்லவா நேர்பாடு செயல்பாடு!’

அந்த நிலைநிற்றல், என் அம்மாவிடம் நான் உணர்ந்து கற்றது.

சமீபத்தில் அம்மாவின் பிறந்த நாளையொட்டி பத்து பத்து நூலாக கலைத்துப் போட்டு புத்தகங்களைப் படம் பிடித்து நிலைத்தகவல் வைக்கலாம் என்று வேலையைத் துவங்கினேன். ஒரு தருணத்தில் இது வேலைக்காகாது என்று மலைத்துப் போய், கைவிடுமளவு தலைப்புகள், உபதலைப்புகள், துறைகள். பதினாறு வயதில் எழுதத் துவங்கியவர். ஆறு தசாப்தங்களாக தொடர்ந்து இயங்கியவர். தொடர்பு கொண்டோருக்கெல்லாம் நாடித் துடிப்பாக உத்வேகம் ஊட்டியவர்.

நான் பொடிசாக இருந்தபொழுது அம்மா பக்த விஜயமும் பாட்டி சொன்ன கதைகளும் எழுதினார். ஒவ்வொரு பக்கமும் அவரின் பேனா ஆவி பறக்க முடிந்தவுடன், சுடச்சுட வாசிக்கக் கிடைக்கும். அப்படித்தான் சிறுவர்களுக்கான புராணங்களும் பெரியோர்களுக்கான தத்துவங்களும் எனக்கு ஒருசேரக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா வந்திருந்தபொழுது அவரின் வாழ்க்கையை சுயசரிதையை கொஞ்சம் கற்பனை கலந்து புதினமாக எழுதுமாறு வலியுறுத்தினேன். முதல் அத்தியாயம் எழுதினவுடன் என்னிடம் கொடுத்தார். என்னுடைய அகம்பாவமோ, அதிமேதாவித்தனமோ… அதைக் கடுமையாக விமர்சித்தேன். அவர் அங்கேயே நிறுத்தி விட்டு திவ்விய பிரபந்தமும் பன்னிரு திருமுறையும் 1008 ஸ்தலங்களும் எழுதப் போய்விட்டார். அப்பொழுது அந்தக் காட்டத்தை அடக்கி இருந்தால், பொறுமையாக இருந்திருந்தால், கடந்த நூற்றாண்டின் வரலாறும் தமிழகக் கலாச்சாரமும் கலந்த அபாரமான சமூகச்சித்திரம் கிடைத்திருக்கும். சில பல சிக்கல்களும் எழுந்திருக்கும்.

அம்மாவின் வார்த்தையில், ‘எல்லாம் நன்மைக்கே!’


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “எழுத்தாளர் பொன்னம்மாள்”

  1. அன்புள்ள பாலா, தங்கள் அம்மா குறித்த நினைவுகள் கண்டு நெகிழ்ந்தேன். எல்லா அம்மாக்களுமே ஏதோ ஒரு வகையில் தங்களின் ஒரு சில இயல்புகளையாவது நம்மிடம் நிலை நிறுத்தி விட்டுப் போய் விடுகிறார்கள். அவை வாழ்நாளின் ஏதாவது ஒரு கட்டத்தில் – நாமே அறியாமல் நமக்குத் துணை வந்து விடுகின்றன. உங்கள் தாயின் வொடா முயற்சியும்,தன்னை நிலைநிறுத்தலும் என்னை ஈர்த்தன. அம்மாவின் சுயசரிதம் எழுதப்படாமல் போனதை நீங்கள் வாழ்க்கை வரலாறாக அல்லது புனைவாக எழுதி ஏன் ஈடுகட்டக்கூடாது? என் அம்மாவின் வாழ்வும் 100 ஆண்டுக்காலப் பெண்களின் சமூக கலாச்சார வரலாற்று அடிப்படை கொண்டது. வரலாற்றில் பதிவாக விடுபட்ட – கண்டுகொள்ளப்படாத ஆளுமை அவர். அவரது வாழ்வைப் புனைவும் சேர்த்து யாதுமாகி என்னும் நாவலாக்கி (Biofiction )என்னை சமாதானம் செய்து கொண்டேன்.அது ஆங்கிலத்திலும் என் தோழியால் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. நீங்கள் அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என்பது என் விருப்பம். அம்மாவுக்கு நீங்கள் ஆற்றும் அரிய கடனாகவும் அது அமையும்.அன்புடன், எம் ஏ சுசீலா

  2. ஈன்று புரந்தருதல் என் தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்று ஒரு புற நானூற்றுப் பாடல் சொல்லும். உங்கள் அம்மா, தாயாய், தந்தையாய், நல் ஆசிரியராய், மனக் கோணல்களை நிமிர்த்தும் தத்துவம் தெரிந்தவராய், சிறந்த எழுத்தாளராய் இருந்திருக்கிறார். இக்கட்டுரையின் மூலம் நல்லதோர் அஞ்சலி செய்திருக்கிறீர்கள். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.