தலைமுறை
ஊர் எல்லை ஆலமரத்தில்
குலசாமிக்கு
ஆயிரம் முடிச்சுகள்
ஒவ்வொரு முடிச்சும் சுமக்கிறது
நிறைவுறா நம்பிக்கையை.
முடிச்சுகள் ஒன்றிரண்டு இறங்கினால்
நான்கைந்து ஏறிவிடுகிறது
ஆலமரத்தின் கிளைகள் முடிச்சுகளை சுமக்கவியலாமல் குலசாமியைப் பார்க்கின்றன
குலசாமி கண் திறக்கிறார்
கிளைகள் ஒவ்வொன்றிற்கும்
முட்டுக்கால்களைத் தருகிறார்.
புதிய வேர்கள்
கிளைகளின் வழி
பூமித் தொடுகிறது
பூமாதேவியும் வேர்களை
தன்னுள் அனுமதிக்கிறாள்
நாளுக்கு நாள்
முடிச்சுகள் ஏறியபடியே இருக்கின்றன.
தாத்தாவோடு
தந்தையோடு
மகனோடு
குலசாமி கோயிலுக்கு வந்தவன்
இப்போது பேரனோடு
வந்திருக்கிறேன்.
பல தலைமுறைத் தாண்டிய
ஆலவேர்களைப் பிடித்து
கண்களில் ஒற்றுகிறேன்.
பேரன்களின் வயதொத்த
சிறுவர்கள்
ஆலமரத்தின்
புதிய வேர்களில்
ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
மரமோ
செந்நிறப்பழங்களால்
பூத்துக்குலுங்குகிறது.
கொடியானவள்

சன்னல் கம்பிகளில் படர்கிறது சங்குபுஷ்பம்
கொடி சுற்றிச் சுற்றி
மேலெழும்பி நிற்கும்
வீட்டில் கொடி வளர்வது
நல்லதென்பாள் அம்மாச்சி
நேற்றையைவிட
இன்று எவ்வளவு
வளர்ந்திருக்கிறதென கொடியை அளவெடுத்ததுண்டு
கொடியில் விழித்து கொடியின் நினைவில் உறங்கியதுண்டு
அடியாத்தே குழந்தைக்கு
கொடி சுத்திருச்சாம்ல
என அம்மாச்சி பதறியபோது
புரியவில்லையெனக்கு
கொடி நல்லதுதானே
என்றேன்.
அச்சமயம் கூரை நோக்கி
படர்ந்த கொடியும் வாடத்துவங்கியிருந்தது
தொடர்ந்து
கொடிக்கு நீர் ஊற்றினேன்
பின்
வாடாதே கொடியே
வாடாதேயெனத்
தினமுரைத்தேன்
சில நாட்களில்
வீட்டிற்கு
எங்கள் பாப்பா வந்தாள்
அவள் அருகில் சென்று
என் விரல் கொடுத்தேன்
அவள் கொடிபோல் பற்றிக்கொண்டாள்
அவள் விரலும்
கொடியின் மிருதுவுடனிருந்தது.
பேச்சி
உதிர்ந்த வேப்பம் இலைகளை சுமந்து வரும்
சுழலைக்கண்டால்
அம்மாச்சி
பேச்சி வந்ததாய்க் கூறுவாள்
வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வாரேனு
பேச்சிக்கு
வேண்டுதலும் வச்சிருவா
சுழல்
சிறியதிலிருந்து
எப்ப பெரிசாகும்னு
பேச்சிதான் அறிவாள்.
பிரமாண்ட சுழலில்
வீட்டுக்கூறையும்
ஆடு மாடுகளும் பறந்ததாய்
முன்கதையுண்டு.
அம்மாச்சியின் மறைவு
தந்தையின் பிரிவு
நண்பனின் துயரென
என் வாழ்வையும்
சுழல் சுழட்டியதுண்டு
நீருக்குள் தோன்றும்
சுழலாய்
சில வெளித்தெரியாமலே
மறைந்ததுமுண்டு.
சில நேரம்
வனாந்தரத்தில்
சுழல் தேடிச் சென்று
தரிசனமின்றி திரும்பியிருக்கிறேன்
ஊர் ஒதுக்குப்புற
தேநீர்க் கடையில்
நின்றிருக்கும்
என்னை நோக்கி
சிறு சுழலொன்று
வருகிறது
பேச்சி என்ன சேதி
சொல்லப் போகிறாளோ.?
பனை
கவனிக்க ஆளின்றி
அநாதையாய்க் கிடந்த
பனம்பழமொன்றைப் பார்க்கிறேன்
கனக்கிறது வட்டுருட்டிய நினைவுகள்
பீட்சாவும்
பட்கரும் சுவைத்த
நாவுகளுக்கு
சுட்டப் பழத்தைத் தருகிறேன்
புதிய சுவை
சுரப்பிகள் வழி
உடலெங்கும் விரிய
எங்கள் குடும்ப நண்பராகிறது
பனம்பழம்
முருக்கு மிதக்கும்
கருப்பட்டிக்காப்பி
சில்லுக்கருப்பட்டியென
புதிய தேடல்களில்
குடும்பம் நுழைய
பனை ஓலையில்
பதநீரும்
நுங்குகளும்
பருகிய மகன்
நுங்கு விற்பவரிடம்
வினவுகிறான்
ஒரு பனம்பழம் கிடைக்குமாவென.
பின்புறத்திலிருந்து திறக்கும் முன்புறம்
யானையை
பின்புறமிருந்து பார்க்கிறேன்
எப்படிப் பார்த்தாலும்
அது பிரம்மாண்டம்தான்
யானை
தன் வாலை ஆட்டியபடியும்
வாலால் உடலைக்கோதியபடியும்
ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்தபடியும்
ஒரு மெல்லிய நடனத்தை
உடலுக்கு அளித்தபடியும் நடக்கிறது
யானையின் முகம்
இப்போது தேவையில்லை.
அதன் கண்கள்
நீண்டத் துதிக்கை
முறமொத்த காதுகள்
வெண் தந்தம்
யாவுமே
அதன் முகம் பார்க்காமலே
வந்துபோகின்றன.
யானையின் மேல்
அம்பாரி ஏறுகிறாள்
ஒரு சிறுமி
அவள் முகமும்
தெரியவில்லை
யானையின் நடையிலோ
சிறு தெய்வத்தைச் சுமக்கும்
தோரணைக் கூடுகிறது
பின்புறம்
அசைந்து அசைந்து
புள்ளியாய் மறையும் வரை
அதைக் காண்கிறேன்
பின்புறத்திலிருந்து
ஒரு முன்புறம் திறக்கிறது மெதுவாய்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

குமரேசன் கிருஷ்ணனின் ஐந்து கவிதைகளும் அருமையாக, ரசிக்கத் தக்கனவாக இருக்கின்றன!
அன்பும் நன்றியும் தோழர்