குறியீடு

வான் போன்று அகண்டிருக்கும் பெரும் அலைகள் மேடுகளாய் விரிந்திருக்கும் புல்வெளியின் ஒரு மேட்டின் உச்சியில் அங்கன் அமர்ந்திருந்தான். தென்றல் சற்றே ஈரப்பதத்துடனும் வாசனையுடனும் அவன் முகத்தில் மென்மையாக அறைந்துகொண்டிருந்தது. அவன் இடது கன்னத்தில் சூரியன் மஞ்சள் நிறத்தை அப்பிக்கொண்டிருந்தது. அவன் கண்கள் தூரத்தில் ஏதோ ஒரு மிருகத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தன. அவன் பதினைந்து பனிப்பொழிவுகள் கடந்திருந்தான். இடுப்பில் மட்டும் சுற்றியுள்ள மயிர்த்துணியாலான ஆடை. தோள்களும் மார்பும் மென்மையும் முறுக்கும் கலந்து இருந்தன. வயிறு அடங்கி இருந்தது. உதட்டுக்குமேலே இப்போதுதான் முடி சற்றே எழுந்துகொண்டிருந்தது. அங்கன் எழுந்து மெலிதாக வாய்க்குவித்து காற்றைத் தள்ளி குரலெழுப்பினான். குதித்துக்கொண்டு விரைந்து அவன் முன் வந்தது. “ஆசு ஆசு ஆசு” என்றான். அவனைப் புரிந்துகொண்டதுபோல அது சற்றே தாழ்ந்தது. அடிபட்டு சற்றே திரும்பிய தனது இடது காலைத் தரையில் வலிமையாக பதிய வைத்து, ஆசுவின் கழுத்தில் கைவைத்து அழுத்தி, எம்பி, தன் வலதுகாலை அகட்டி சுழற்றி அதன் முதுகின் எதிர்ப்புறம் கொடுத்து அதன் மேல் அமர்ந்தான். அதன் பின்கழுத்தில் உள்ள தீப்போல அலையலையாக நீண்ட மயிர்க்கற்றையினுள் கைவிட்டு தன் விரல்களால் துழாவி, தெய்வத்தைக் காண்பதுபோல் வான் நோக்கினான்.

அங்கன் பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவன் பிதையன் அதைக் கொண்டுவந்திருந்தார். முதலில் வந்தபோது அது அடங்கவே அடங்காது. அவர்கள் குடிலுக்குப் பின்னே மரத்தால் வரைகட்டிய சிறு புல்வெளி உண்டு. அங்கு தரையில் மரத்துண்டடித்துக் அதைக் கட்டினாலும் அது தங்கவே தங்காது. எங்கோ எதற்கோ யாரோ கூப்பிடுவது போல ஊரின் சுற்று மண்மேட்டிற்கு வெளியே குதித்து ஓடுவிடும். விட்ட குதிரையின் விசையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. பிதையன், “அங்கா, மூதாதை அழைப்பதால் ஓடுகிறது. அதன் கால்கள் காலத்தை அளக்கும்.” என்று சொல்வார்.

அவனுடைய ஐந்தாம் பனிப்பொழிவின்பின் அது ஓடாமல் அவர்கள் குடிலுக்கு அருகிலேயே தங்கியது. ஓரத்தில் அடுக்கிவைக்கப்பட்ட மரக்கட்டைகளில் ஏறித்தான் அதன் மீது அங்கனால் உட்காரமுடிந்தது. ஒவ்வொருநாளும் நீர் எடுத்து வர சூரியன் உதித்தப்பின் அவன் கிளம்புவான். அதுவும் சரியாக மரக்கட்டை அருகில் வந்து நின்றுகொள்ளும். ஏறும் முன் தரையில் நின்றுகொண்டு தன் கையைத் தூக்கி அதன் மேல்கழுத்து கூந்தலைத் தொட்டு அளாவுவான். மென்புற்களைக் கழுத்தில் கொண்ட மிருகம் என்று நினைத்துக்கொள்வான். அதன்பின் கையைக் கழுத்தின் அடிக்கு கொண்டுவந்து வருடிக்கொடுப்பான். அம்மிருகமும் குரலெழுப்பி ஆதரிக்கும்.

பன்னிரெண்டாம் பொழிவின் ஆண்டு, சூரியக்காலத்தில் பக்கத்துக் குழுவுடனான சண்டையின் போது அவன் காலில் பெருத்த அடிபட்டிருந்தது. அப்போது குழுவின் பெரியோன் தன்னிடம் உள்ள ஒரு களிமண் உருண்டையை உடைத்து, அதில் சேமித்துவைக்கப்பட்ட பச்சைநிறமான ஏதோவொன்றை அவன் காலில் முட்டியிலிருந்து கனுக்கால்வரை பூசினார். அவனுக்கு அவ்வலியிலும் அத்தொடுகை சிலிர்ப்பாய் இருந்தது. அதன் மீது துணிவைத்து மூடினார். பின் அதன் மேல் குதிரை கூந்தலின் ஏழு கற்றைகளை நீட்டி வைத்து அதன்மேல் மேலும் ஒரு துணியைவைத்து மூடி, துணியாலான நூலிலேயே கட்டினார்.

அந்த நாளிலிருந்து ஆசு அவனைவிட்டுப் பிரிவதேயில்லை. பின்னர் சற்று கால் சரியானவுடன், வேட்டைக்குத் தானே வந்து அழைத்துச்செல்லும். தீ வளர்த்து சுட்டுச் சாப்பிடும்போது அவன் சாப்பிடுவதையே பார்க்கும். குழுச்சண்டையின் போது அவனைத் தரையில் விழவே விடாது. தீமேல் ஒளிபோல அங்கன் ஆசுவின் மீது எப்போதும் படர்ந்தே இருந்தான். இருகால் தொங்கும் நான்குகால் குதித்துப் பாயும் ஒற்றை மிருகமாய் இருந்தனர்.

*

“இன்னொரு குர்கன் மேடு கிடைத்திருக்கிறது”, மித்ரன் தன் விடுதி அறையில் கோடை காலையின் மெல்லிய ரஷ்யக் குளிரில் எழுந்து குறுஞ்செய்தியைப் பார்த்ததும் உற்சாகமானார். எழுந்து காலை காரியங்களை முடித்து, ஷவருக்கு அடியில் நின்று வெப்பம் பக்கம் பைப்பைத் திருகினார். வோல்கோக்ராடிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த இந்தச் சிற்றூரில் வசதியான அறை கிடைப்பதே கடினம், அதுவும் வெந்நீர் இருக்கிறது அதிர்ஷ்டம் என்று இந்நாளும் நினைத்துக்கொண்டார். சூடான நீர் தன் தோளின் மீது விழுந்தபோது சுருங்கிய தோல் விரிந்துகொடுத்தது. குளித்துமுடித்தபோது குளியறையே நீராவியால் நிரம்பியிருந்தது. கண்ணாடியில் தன் உருவம் மேகத்தில் வரைந்தது போல இருந்ததைக் கண்டார். மறந்துபோய்விட்ட எக்ஸாஸ்ட் பேன் சுவிட்சைப் போட்டார். ஆவி மெல்ல மெல்ல விலகி தன்னுடைய உருவத்தை வரைந்துகொண்டிருப்பதைக் கண்டார். காது விளிம்பின் ஓரமாக முன்னிலிருந்து பின்வரை தலைமுடி நரைத்துவிட்டிருந்தது. தாடி முழுமையாக இருந்தது, அதிலும் உதட்டின் கீழே வெண்மை. இந்திய அகழ்வாய்வு துறையில் பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சியாளனாக வேலை செய்த முகம். இப்போது இந்தச் செயற்திட்டத்துக்காக சென்னையிலிருந்து வோல்கோகிராட் வந்தாக வேண்டியிருக்கிறது. இங்குள்ள பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து செய்யும் திட்டம்.

சித்திரையையொட்டி தான் விண்ணப்பித்த விடுமுறைக்கு இன்னும் இரண்டுநாளே இருக்கின்றன என்று ஆசுவாசம் அடைந்தார். அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்தே அடுத்த வருகை. அந்த ஒருமாத இடைவெளியில் கண்டெடுத்த எல்லா மேடுகளைப் பற்றியும் அவற்றில் கண்டெடுத்த பொருட்கள் பற்றியும் லிடியா கோத்லோவாவை ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணச் சொல்லவேண்டும். என்ன ஒரு சின்சியரான மாணவி. வோல்கோகிராட் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டுதான் படிக்கிறாள் என்றாலும் தானே முன்வந்து இந்த இண்டெர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பித்து ஒவ்வொரு தோண்டல் போதும் களத்தில் இறங்கி கற்றுக்கொள்கிறாள்.

மித்ரன் தன் விடுதியிலேயே காலையுணவு முடித்துக்கொண்டதும் ஒன்பதரை மணிக்கு அவருக்காக வந்திருந்த கியா காரின் பின் சீட்டில் ஏறிக்கொண்டார். “ஊத்ரா” என்று ஓட்டுநரிடம் சொன்னார். பதிலுக்கு “குத் மார்னிங்” என்பதோடு புன்னகையும் வந்தது. அரைமணிநேரம் பயணம் செய்து அவர்கள் வந்த இடம் காய்ந்துகொண்டிருக்கும் புல்வெளியாக இருந்தது. சூரியன் கனத்துக்கொண்டிருந்தது. லிடியா ஏற்கனவே தன் காரில் வந்து வேலையைத் தொடங்கியிருந்தாள். அவர்கள் ஏற்கனவே தேர்வு செய்த இடம் முதலில் ஒரு கர்ப்ப மேடு போல இருந்தது. அது குர்கன் புதைமேடாக இருக்கலாம் என யூகித்து, இப்போது அதில் சதுரமாக குழி வெட்டப்பட்டிருந்தது. வேலையாட்களைக் கொண்டு பள்ளத்தில் மண் அகற்றுவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். பெரும்பாலும் மண் அகற்றியாகிவிட்டது.

“இரண்டு எலும்பு வகைகள் இருக்கின்றன” லிடியா. “ஒன்று மனிதன். பதின்ம வயது பையனாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். மற்றது குதிரை.” மித்ரன் குழியில் பார்த்தார். மனித உருவம் பக்கவாட்டில் முட்டி மடக்கி ஆங்கில “என்” போல் இருந்தது. பக்கத்தில் பெரிய உருவமாக இன்னொரு எலும்பு தொகுப்பு.

லிடியா தொடந்தாள், “யம்னயா மக்களின் அடக்கமுறைப்படி அவனை வான் நோக்கியவாறு படுக்கவைத்து, கால் மடக்கப்பட்டு, பாதம் பதிந்து புதைத்திருக்கவேண்டும். காலப்போக்கில் எலும்புகள் சரிந்து பக்கவாட்டில் சாய்ந்திருக்கின்றன. பெரிதாக சேதம் எதுவும் இல்லை. முழு எலும்புத்தொகுப்பும் ஏறக்குறைய இருக்கிறது.”

“இந்தச் சிறு வயதிலேயே ஏன் அவர்கள் இவனைப் புதைத்திருக்கிறார்கள்? எதுவும் நோய்வாய்ப்பட்டிருப்பானோ?”

“இல்லை. கால் எலும்பில் ஒரு விரிசல் இருக்கிறது. மண்டையெலும்பிலும் கிளை விரிந்த விரிசல் இருக்கிறது. தலையில் பலத்த அடிபட்டிருக்கவேண்டும். ஒருவேளை அவன் போரில் அடிபட்டு இறந்திருக்கலாம்.”

மித்ரன் “ஆனால், பொதுவாக யம்னயா மக்கள் புதைப்பது போன்று நான்குசக்கர வண்டி எதுவும் இல்லை போல இருக்கிறதே.”

“ஆம். பக்கத்தில் வேறெதும் இல்லை. குதிரை மட்டுமே.”

“ம்ம்ம் இண்டிரெஸ்டிங். கடந்த மாதம் முழுவதும் நாம் கண்டெடுத்த குர்கன் மேட்டில் எல்லாம் வண்டி மீது அடக்கம் செய்யப்பட்ட ஆட்கள், இல்லையா? பக்கத்திலேயே வகைவகையாக ஆபரணங்களும் கத்திகளும் கூர்வேல்களும் கூட இருந்தன.”

“இவன் குழுத்தலைவனாக இருக்க முடியாது. நீங்கள் கணிப்பது சரியே.”

“ஆனாலும் இவன் மிக பழக்கப்பட்ட குதிரையோட்டியாக இருக்க வேண்டும். பத்து ஆண்டுகளாக குதிரையோட்டிய பதினைந்து வயது சிறுவன்!” என்று மித்ரன் ஆச்சரியப்பட்டார்.

தொடை எலும்பின் மேல்நுனி பெல்விசோடு சேரும் சாக்கெட் இடத்தைக் காட்டினார். அங்கு ஒருவிதமாக கரிய தேய்ப்பு போன்று இருந்தது. “ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் முன்னால் உள்ள மனிதர் எலும்புகளில் இது இருக்காது. கால்தொடைகள் சற்றே விரிந்து உட்கார்ந்து, விழாமல் இருக்க தொடையைக் குதிரையோடு இறுக்கிப் பிடித்து, தொடர்ந்து குதிரையோட்டுவதால் மட்டுமே இது வரமுடியும். மாட்டின் மீதோ கழுதையின் மீதோ அமர்ந்து சென்றாலும் கூட இம்மாதிரி எலும்பு சிராய்ப்பு வராது. குதிரையின் வேகத்திற்கும் குதிப்பிற்கும் ஈடு கொடுக்கும்போது மட்டுமே ஏற்படுவது. மனித வரலாற்றிலேயே முதன்முறையாக நாம் அவ்வளவு வேகத்தை கைகொண்டோம். அடுத்தப் பாய்ச்சல் வர தொழிற்புரட்சி வரை காத்திருக்க வேண்டிருந்தது.” என்று விளக்கினார்.

*

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பக்கத்தில் நான்கு வீடுகள் கொண்ட சிறிய அபார்ட்மெண்ட். ஒரு சுற்றுப்புறச்சுவர், அதன் உள்ளே ஒரு வேப்பமரம் மட்டும் இருந்தது.

“எப்பப்பாரு கேம்ஸ்தானா. சேர விட்டு நகர்ரானா.. எழுந்துர்ரா நகுல்.” என்று மாலதி நான்காம் முறையாகச் சொன்னாள். மித்ரனிடம் தொடர்ந்தாள். “அதான் இரண்டு நாள் லீவ் ஆய்டுச்சே. இன்னுமா சும்மா ரெஸ்ட் எடுத்துண்டு புக் படிச்சுண்டு இருப்பேள். கொஞ்சம் அவன்கிட்ட சொல்லுங்கோளேன். இன்னும் அவன் துணி பேக்கிங் ஆரமிக்கவே இல்ல.”

“என்னம்மா இங்கதானே பக்கத்துல போப்போறோம். டிரெயின்ல ஏஸி தத்காலும் கெடச்சாச்சு. தூங்கி எழுந்தா காவேரியும் ஊரும் வந்துரும். அதும் மூணுநாள் தானே.”, நகுல்.

“புது துணிய கரெக்டா எடுத்து வை மொதல்ல. அப்றமா போய் மைசுர்பாக் மட்டும் வாய்ண்டு வந்துரு. ஒங்க தாத்தாவுக்கு அதான் பிடிக்கறது. என்ன செய்ய. பைக்ல தான போற. அப்படியே நல்லெண்ணயும் வாங்கிக்கோ. ஊர்லேந்து திரும்பி வந்தப்பறம் நாந்தானே அவஸ்தபடனும்.”

நகுல் மரத்தடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சற்றே சாய்ந்த பைக்கின் ஹாண்ட்பாரை இரண்டு கைகளாலும் பிடித்து, அதன் ஸ்டாண்டை தன் நுனி காலால் மெலிதாகத் தள்ளி, பைக்கை நேர்ப்படுத்தினான். அதன் சீட்டை வருடி தன் உள்ளங்கையால் வாரிய பின், இடக்காலை ஊன்றி வலக்காலைத் தூக்கி மறுபுறம் வளைத்து அமர்ந்தான். பைக்கின் கண்ணாடியில் தன் முகம் பார்த்து, கைவிரல்களால் முடியைத் துழாவி எடுத்து தூக்கிவிட்டுக்கொண்டான். பின் வலதுகாலைக் கிக் ஸ்டார்ட்டரில் வைத்து, இடதுகாலை ஊன்றி சற்றே முன்னெழுந்து கை ஹாண்டிலைச் சற்று திருகிக்கொண்டு ஸ்டார்ட்டரை இருமுறை உதைத்தான். பைக் உருமல் வந்ததும், சீட்டில் அமர்ந்து, மறுபடி கண்ணாடியைப் பார்த்து, தனக்குத் தானே சிரித்து, உடனே சுற்றும் முற்றும் வேகமாக யாருமில்லையெனப் பார்த்து, தன் ஷார்ட்டின் முன்பக்கத்தில் சற்றே இழுத்துவிட்டுக்கொண்டான். பின் பைக் ஹாண்டிலைத் திருகி கடையை நோக்கி ஓட்டினான்.

*

“வேஷ்டி கட்டிண்டு கோயிலுக்குப் போடா. சட்டையும் வேண்டாம், நம்ம குலதெய்வக்கோயிலுக்கு சட்டைப்போட்டுண்டு போவாளா”, தாத்தா படுக்கையிலிருந்தே சொன்னார். நகுல் நாலு முழ வேட்டியைச் சுற்றிக்கொண்டான். நீளம் அதிகமாக இருந்தது. மேலே சற்று உருட்டித் தூக்கி சரிசெய்ய முயன்றான். பாதத்திற்கருகே உள்ளிருந்து வேட்டி நுனி சற்று வெளியே தெரிந்தது. இன்னும் போராட முடியாது என்று விட்டுவிட்டான்.

ஆண்டுக்கொருமுறை வரும் சிவன்கோயில். நகுலுக்கு சிறுவயதிலிருந்தே வருவதால் எல்லாம் அத்துபடி. முன் கோபுரம். அதன் பக்கத்தில் செருப்புவிடும் இடம். கோயிலுக்கு வெளியே நந்தி. அருகிலேயே பலிக்கல். மிக அகண்ட நுழைவுப்படி. இப்போது வளர்ந்துவிட்டதால் மிதிக்காமல் தாண்டலாம். உள்ளே நுழைந்தும் கோபுர அடியில் உணரும் குளிர்ச்சி. உள்ளே பல நிலைகளுக்கு அப்பால் இருந்தாலும் அங்கிருந்தே நேராக தெரியும் கருப்பான சிவலிங்கம். அப்பாவின் புத்தகங்களில் படித்த லிங்க வடிவ சிலைகளின் வரலாறு நினைவு வந்தது. சற்றே புன்னகைத்துக்கொண்டான்.

பின்காலை பதினொரு மணியளவில் அபிஷேகம் முடிந்து, இன்னும் இறுதி அர்ச்சனை தான் மீதம். “கருப்புசாமி கோயிலுக்குப் போயிட்டு வந்துரலாம்”, மித்ரன் சொன்னார். சிவன்கோயிலுக்கு வெளியே அருகிலேயே கருப்புக்கோயில் இருந்தது. நகுல் நடந்து வரும்போது அதன் சுற்றுச்சுவரையும் தாண்டி குதிரை சிலையின் பின் புறமும் தலையும் தெரிந்தன. அரச மரம் நடுவில் நின்றுகொண்டு முழுக்கோயிலுக்கும் நிழல் தந்துகொண்டிருந்தது. உள்ளே வந்ததும் அக்குதிரை சிலையுடைய உயரம் முழுவீச்சோடு ஓங்கி தெரிந்தது. அதன் முன்னே குதிரைக்காரன் சிலை – கையும் காலும் முறுக்கி வலிமை மிக்கவையாகவும் பெரிய மீசையோடும் – நின்றுகொண்டிருந்தது.

சுற்றுச்சுவர்க்குள்ளேயே இருந்த சிறிய அறை இருந்த கட்டிடத்தில் இருந்து பூசாரி வந்தார். சிகப்பு வேட்டி அணிந்திருந்தார். வாசற்படியில் ஒரு சிறுபெண் உட்கார்ந்திருந்தாள்.

“என்ன மணியா, மழையே இல்ல போலருக்கே”

“ஆமாங்க வாய்க்காலெல்லாம் வத்திருச்சு”

அரசமரத்தடியில் சிறுசிறு சிலைகள் நின்றிருந்தன. வரிசையாக யானைகள் குதிரைகள். சிறிதும் பெரிதுமாக இரும்பு வேல்கள் நடப்பட்டிருந்தன. நீண்ட ஒற்றை இரும்பு காலும், இரும்பே ஒற்றை நீர்த்துளியென தலையும் என நின்றிருக்கும் வேல்கள் துரு பிடிக்காமல் இருந்தன. சிறிய வேல்களுக்கு நடுவில், பரந்த சமவெளி ஒன்றில் தான் மட்டும் வளர்ந்த பனைமரம் போல, என்றைக்குமான கூர்மையை நிலைநாட்டுவதுபோல் நீண்ட வேல் ஒன்றும் நின்றுகொண்டிருந்தது. நகுல் தன் உயரத்தைவிட அது கூடுதலமாக இருக்குமோ என்று ஆச்சரியப்பட்டான். சிலைகளின் இடது பக்கத்துத் தரையில், முக்கோணம் போல செங்கல்கள் கருத்துப்போய் அடுக்கப்பட்டிருந்தன, அதனுள் தீ எரிந்துகொண்டிருந்தது.

மணியன் குடம்நீரை எடுத்து, சிலைகள் மீதும் சிறிய வேல்களின் மீதும் வரிசையாக ஊற்றினார். பின்னர் நடுவேலின் உச்சியிலிருந்து அடிநுனி வரை ஊற்றினார். மஞ்சள் நிற பட்டுத்துண்டை வேலின் நுனியில் தலைப்பாகைபோல கட்டினார். மஞ்சளும் இரண்டு உருண்டைகள் எடுத்து வேலின் இலைப்போன்ற பாகத்தில் இடதும் வலதுமாக வைத்தார். அதில் கண்போல குங்குமம் வைத்தார். நகுலுக்கு அக்கணம் அது உயிர்பெற்று தன்னைப் பார்ப்பதுபோல் இருந்தது.

செங்கல் பிறையிலுள்ள தீயிலிருந்து சூடம் பற்ற வைத்து வேலுக்கு தீபம் காட்டினார். மூவரும் கன்னத்தில் அடித்துக்கொண்டனர். சிலைகளுக்கு பின்னால் சென்று அங்கிருந்த சிறு புதைகல் போன்று அமைக்கப்பட்ட மேடைக்கு சூடம் காட்டினார். முடிவாக தீபத்தை வேலுக்கு முன் அடியில் வைத்தார். அவர்கள் தீபத்தை ஒற்றிக்கொண்டனர். அங்கிருந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டனர்.

“நம்ம பொண்ணு தானே”

“ஆமாங்க.”

“வாடாமல்லி” மணியன் இங்க வா என்று பெண்ணுக்கு சைகை செய்தார். சிகப்புப் பாவாடை அணிந்து மகள் அருகே வந்து கண் திருப்பி எல்லாரையும் ஒருகணம் பார்த்துப் புன்னகைத்தாள்.

“என்னம்மா படிக்கிற?”

“எட்டாவது. இப்போ எக்ஸாம் முடிஞ்சா நைன்த்து போயிருவேன்.”

“நல்லா படிக்கனும் சரியா?”

வாடாமல்லி தலையாட்டிவிட்டு அவர்கள் அருகிலேயே தள்ளி நின்றுகொண்டாள்.

“நல்ல காரியம் எல்லாம் முடிஞ்சுதா” என்று மாலதி கேட்டாள்.

“இல்லம்மா இனிமே தாங்க நடக்கனும். பையனும் வளர்ந்துட்டாருங்களே”

“ஆமா பத்தாவது படிக்கிறான்.”

ஆலமரத்திலிருந்து மழைபோன்று விழுதுகள் தொங்கிகொண்டிருந்தன. அவர்கள் சிலைகளைச் சுற்றிவரும்போது, நகுல் அவற்றை விலக்கி விலக்கி நடந்து கொண்டிருந்தான். வேட்டி கால்தடுக்கி, அவன் விழப்போவதுப்போல் முன்சென்று, பின் நிமரும்போது, அது சற்றே அவிழ்ந்து விலகியது. அக்கணம் வாடாமல்லி, ஒருகணம், அவனைக் கண்டாள்.

எல்லாரும் அகன்றதும், அவள் இயல்புக்கு வந்து, தனக்குத்தானே புன்னகைத்துக்கொண்டாள். குதிரைக்காரனுடைய சிலை அவளுக்கு இப்போது பிடிக்கவில்லை எனத் தோன்றியது. தோள்கள் சற்று மெலிதானவையாக இருந்திருக்கலாம். வெயிலில் வியர்ப்பவையாக இருந்திருக்கலாம். வயிறும் அடங்கி இருந்திருக்கலாம். மார்பும் முடியற்றதாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. சிறிய அரும்புமீசை அச்சிலைக்கு இருந்திருக்கலாமோ எனவும் நினைத்தாள். அக்குதிரை சிலை இருக்கும் மேடையின் அடியிலேயே படுத்துக்கொண்டாள். குதிரையின் அடிவயிற்றின் மீது எப்போதும் இருப்பது போலல்லாமல் வேறொன்று புதிதாகத் தெரிந்தது. ஒவ்வொரு புல்நுனியிலும் ஒரு பூ தோன்றியதுபோல மயிர்க்கூச்செரிந்தாள்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “குறியீடு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.