தெலுங்கு மூலம்: பொத்தூரி விஜயலட்சுமி
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
ஒரு காலத்தில் போலீஸ் கான்ஸ்டபுளுக்கும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் மட்டுமே நம்பர்கள் இருந்தன. இப்போது அடுக்கு மாடி வளாகக் கலாச்சாரம் பரவிய பின் அனைவருக்குமே நம்பர்கள். முன்னூற்று மூன்று அம்மாவும் அறுநூற்று இரண்டு அம்மாவும் சேர்ந்து கடைத்தெருவுக்குச் சென்றார்கள். நூற்று மூன்றாம் நம்பர் ஐயாவுக்கு நூற்று மூன்று ஜுரம். நானூற்று ஒன்று பையன் அமெரிக்கா செல்கிறான் என்று நம்பரைச் சொல்லியே குறிப்பிடுகிறார்கள்.
நாங்களும் ஒரு அடுக்கு மாடி வளாகத்தில்தான் வசிக்கிறோம். அதனால் எங்களுக்கும் ஒரு நம்பர் உண்டு. இருநூற்று இரண்டு. நான், என் கணவர், என் அக்கா மூவரும் அதில் வசிக்கிறோம். குழந்தைகள் சிறகு முளைத்துப் பறந்து விட்டார்கள். எங்கள் வளாகத்திலயே ஐந்தாம் மாடியில் எங்கள் அக்கா மகன் ஒரு போர்ஷனை வாங்கினான். அவன் அமெரிக்காவில் இருப்பதால் அந்த வீட்டையும் நாங்கள்தான் பார்த்துக் கொள்கிறோம்.
அந்த போர்ஷனில் வசித்த ஆதிநாராயண ராவு, வேலை மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் செல்கையில், “ஆபீசில் என் வேலையை நிரப்புவதற்கு யார் வருகிறாரோ அவருக்கே என் போர்ஷனை வாடகைக்குக் கொடுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார். சாதாரணமாக வங்கி உத்யோகிகளின் விஷயத்தில் அது போல் நடப்பதுண்டு. எங்களுக்கும் சிரமமில்லாமல் இருக்கும்.
மறு வாரமே ஒரு ஆசாமியை வங்கி உதவியாளர் அழைத்து வந்தான். “என் பெயர் ஏ.வி. ராவ்” என்றான் வந்த மனிதன்.
“உங்களுக்கு எந்த ஊர் தம்பி?” என்று கேட்டுக் களத்தில் புகுந்தாள் என் அக்கா. அவளுக்குக் கேள்வி கேட்கும் கெட்டப் பழக்கம் உண்டு. “எந்த ஊர்? எந்த ஜாதி? திருமணம் ஆயிற்றா? எத்தனை குழந்தைகள்? உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தது வந்தவரை வாட்டுவது அவள் வழக்கம். எல்லோர் வீடுகளுக்கும் சென்று அவர்களின் விவரங்களைச் சேகரித்து அறிவுரை கூறி வருவாள். அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கேட்கமாட்டாள். ஓரிரு முறை இவளுடைய அந்தப் பழக்கத்தால் எங்கள் உயிருக்கே ஆபத்து நேர்ந்ததுண்டு.

நூற்று நான்காம் நம்பர் வீட்டில் இருக்கும் தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை. அதற்காக அவர்கள் கவலையும் படவில்லை. வயதும் ஆகி விட்டது. அவர்கள் சும்மா இருந்தாலும் என் அக்கா விடவில்லை. தினமும் அவர்களிடம் சென்று, “உன் வயிற்றில் ஒரு காய் காய்க்க வேண்டும்” என்று வாழ்த்தி விட்டு வருவாள். உண்மையாகவே அவளுக்கு வயிற்றில் கட்டி வந்துவிட்டது. அவர் இவர்கள் வீட்டுக்கு வந்து வாயில் வந்த வசுவுகளைக் கொட்டித் திட்டிவிட்டுப் போனார்.
என் அக்கா இப்போது ஏ.வி. ராவைப் பிடித்துக்கொண்டாள். அவன், “எனக்கு இந்த வீடு வேண்டாம்” என்று ஓடி விடுவானோ என்று நாங்கள் அஞ்சினோம். ஆனால் அவன் பதிலுக்கு. “என் பெயர் ஆகண்ட வரப்பிரசாத ராவ். என் மனைவியின் பெயர் ஸ்ரீலதா. எங்களுக்கு குண்டூர். அம்மா அப்பா அங்கேயே உள்ளார்கள். எனக்குத் தம்பி ஒருவன் உள்ளான். அவன் வெளிநாட்டில் இருக்கிறான். அவனுக்குத் திருமணமாகி விட்டது. நான் என் அக்கா மகளையே மணம் புரிந்தேன். என் அக்காவும் அத்தானும் காக்கிநாடாவில் உள்ளனர்” என்று விவரமாகக் கூறினான். என் அக்கா மேலும் சில விவரங்களைக் கேட்டறிந்து கொண்டாள். அவள் கேட்டதை விடவும் அவன் அதிகமான விவரங்களைக் கூறினான்.
அதன் பிறகு என்னை பார்த்து, “வாருங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு” என்றான். “ஏன்? என் அக்கா கேள்வி மேல் கேள்வி கேட்டதற்கு என்னைப் போலீசில் பிடித்துக் கொடுப்பதாவது?” என்றேன்.
அதற்கு இல்லையாம். இதற்கு முன் இருந்த ஊரில் சட்ட விரோதமான செயல்கள் நடந்த போது யாரோ ஒருவரோடு சேர்த்து இவனையும் அரெஸ்ட் செய்து ஒரு இரவு பூராவும் லாக்கப்பில் வைத்திருந்தார்களாம். அப்போதிலிருந்து முன்ஜாக்கிரதையாக வீட்டுக்காரர்களையும் வேலைக்காரர்களையும் போலீசாருக்கு பரிச்சயம் செய்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளானாம்.
நான் என்றுமே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றதில்லை. “நான் வரமாட்டேன்” என்று நிச்சயமாகச் சொல்லிவிட்டேன்.
என்ன நினைத்தானோ, “அட்ரஸ் ப்ரூப் கொடுங்கள்” என்றான். ரேஷன் கார்டைக் கொடுத்தேன்.
“வேண்டுமானால் நான் வருகிறேன்” என்றாள் என் அக்கா.
“வேண்டாம், வேண்டாம்” என்றான் அந்த ஆசாமி.
அடுத்த நான்கு நாட்களில் வந்து குடியேறினான். ரொம்ப பரபரப்பான மனிதன். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் காலிங் பெல்லை அடித்துவிடுவான். “எங்கள் பால்காரர் இன்னும் வரவில்லை. நான் டீ குடித்துவிட்டு காலை நடைப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு பால் பாக்கெட் தருவீர்களா?” என்று கேட்பான்.
கொடுத்தனுப்பினால், ஒரு நிமிடம் கழித்து மீண்டும் வந்து காலிங் பெல்லை அடிப்பான். “எங்கள் பால்காரர் வந்து விட்டார். என்று கூறி அந்த பாக்கெட்டைத் திரும்பக் கொடுத்துச் செல்வான்.
அவ்வாறு ஒரு வாரம் அலாரத்தைப் போல எங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டதும், எங்களுக்கு அதுவே பழகிவிட்டது. முன்பு எப்போதோ மறந்து விட்ட காலை நடைப் பயிற்சியை மீண்டும் துவங்கினோம்.
ஒரு நாள் காலையிலேயே வந்து, “உங்கள் டெலிபோன் பில் கொடுங்கள். கனெக்ஷனுக்காகச் சென்றபோது அவர்கள் கேட்டார்கள்” என்றான்.
நான் உள்ளே சென்று பில்லை எடுத்து வந்து கொடுப்பதற்குள் எங்கள் டிராயிங் ரூமை அழகாக அடுக்கி வைத்து விட்டான். “ஐயோ, உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?” என்று கேட்ட போது, “சும்மா நிற்கப் பிடிக்காமல் பேப்பரை எல்லாம் மடித்து வைத்தேன்” என்றான்.
அவனிடம் நான் கவனித்தது என்னவென்றால், அவனிடம் அளவுக்கு அதிகமான பரபரப்பும் அவசரமும் காணப்பட்டது. காலும் கையும் ஒரு கண நேரம் கூட சும்மாயிருக்காது.
ஒரு நாள் வந்தான். “இந்த ஊரில் நல்ல மெடர்னிடி ஹாஸ்பிடல் எங்கே உள்ளது?” என்று கேட்டான். “ஏன்?” என்றேன்.
அவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள். ஏழாவது மாதம். அவளுடைய பிறந்த வீட்டில் தான் பிரசவம் என்று நினைத்தார்கள். ஆனால் அவனுடைய மாமனாருக்கு காகினாடாவிலிருந்து கடக் என்ற நகரத்திற்கு ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது. அது புதிய ஊர். அதோடு நம் மாநிலம் கூட இல்லை. அதனால் இங்கேயே அழைத்து வரலாம் என்று நினைக்கிறார்களாம். எனக்குத் தெரிந்த ஹாஸ்பிடல் பற்றிக் கூறினேன். அங்கு நல்ல வசதியாக இருக்கும். தாயையும் சேயையும் உடனிருக்கும் துணையையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். பத்து முறை ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய வேலை இருக்காது எங்கள் மகளுக்கும் மருமகளுக்கும் அங்குதான் பிரசவம் ஆனது. அதையும் அவனிடம் சொன்னேன்.
“அப்படியென்றால் வாருங்கள் போகாலாம் என்றான்.
“இப்போது நாம் இருவரும் எதற்காக மெடர்னிடி ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும்? உங்கள் மனைவி வரட்டும்” என்றேன்.
“முதலில் நாம் சென்று அறிமுகம் செய்து கொண்டால் நல்லது அல்லவா?” என்றான்.
“அறிமுகத்திற்கு ஒரு முறை. டெஸ்டுக்கு ஒருமுறை என்று போவதற்கு அந்த டாக்டர் காலை நீட்டிக் கொண்டு சாவகாசமாக உட்கார்ந்திருக்க மாட்டார். அவருக்கு ஓய்விருக்காது. ரொம்ப பிசியாக இருப்பார்” என்றேன்.
ஒரு நல்ல நாள் பார்த்து மனைவியை அழைத்து வந்தான். அவன் மனைவி அழகாகக் கிளி போலிருந்தாள். ஆனால் குணத்தில் இவனுக்கு நேர் எதிர். இவன் ஓவர் சுறுசுறுப்பு. அவள் ரொம்ப நிதானம்.
முதலில் அப்பாயின்ட்மென்ட் பெற்றுக் கொண்டு லேடி டாக்டரிடம் சென்றோம். மூன்று பேர் போகக் கூடாதென்று கூறி என் அக்காவும் உடன் வந்தாள். அக்காவை வெளியில் உட்கார வைத்து விட்டு நாங்கள் மூன்று பேரும் டாக்டரின் அறைக்குள் சென்றோம். டாக்டர் என்னை அடையாளம் கண்டு புன்னகையோடு நலன் விசாரித்தார். ஐந்து நிமிடங்களில் அவருடைய புன்னகை மறைந்து போனது. ஏ.வி. ராவ் ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்தில் பதினான்கு வார்த்தைகள் பேசினான். அந்தப் பெண் வாயே திறக்கவில்லை.
“அம்மா, முதலில் இந்த தொணதொணப்பை வெளியில் அனுப்புங்கள்” என்றார் டாக்டர் என்னிடம்.
“வாருங்கள்” என்று அவனை வெளியில் அழைத்து வந்தேன். “இத்தனை தூரம் வந்துவிட்டோம். வாருங்கள். ரூம்களை எல்லாம் பார்த்துவிட்டு வரலாம்” என்றான்.
ரிசெப்ஷனில் சென்று கேட்டோம். அங்கிருந்தவர் ஒரு ஆளைத் துணைக்கு அனுப்பி அறைகளைக் காட்டச் சொன்னார். எல்லா அறைகளையும் பார்த்து விட்டு விவரங்களை ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டான். கீழே வந்தோம். என் அக்கா பாவம். தனியாக அமர்ந்திருந்தாள்.
“இங்கு நிறைய பேர் இருந்தார்களே. அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? என்று கேட்டான்.
அங்கிருந்த ஒரு ஆயா கோபத்தோடு எழுந்தாள். “இந்த அம்மா கேட்கும் கேள்விகளைத் தாங்க முடியாமல் எல்லோரும் ஓடி விட்டார்கள். அங்குமிங்கும் ஒளிந்து கொண்டுள்ளார்கள். முதலில் இவங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்” என்றாள்.
என் அக்காவையும் ஏ.வி. ராவையும், “நீங்கள் சென்று காரில் அமருங்கள்” என்று அனுப்பிவிட்டு, டாக்டரின் அறையை நோக்கிச் சென்றேன். ஸ்ரீலதாவுக்கு எல்லாம் நன்றாகவே இருப்பதாக டாக்டர் கூறினார். மருந்து, உணவு விவரங்களை எழுதிக் கொடுத்தார். கன்சல்டேஷன் முடிந்து மருத்துவ ஃபைலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.
டாக்டர் கூறியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்தான் ஏ.வி. ராவ். வாக்கிங் செய்யச் சொன்னாராம் டாக்டர். கறாராக ஸ்ரீலதாவை கீழே அழைத்து வந்தான். அந்தப் பெண் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒரு ரவுண்ட் சுற்றுவதற்குள் இவன் இருபது ரவுண்டுகள் சுற்றிவிடுவான். ஸ்ரீலதாவுக்கு ஏழாவது மாதம் நிரம்பிய போது அவளுடைய அம்மா வந்து சேர்ந்தாள். ஸ்ரீலதாவின் அம்மா அவனுடைய சொந்த அக்காதான். அவள் அவனை விட பரபரப்பு மனிஷி.
வந்த மறுநாளே எங்கள் வீட்டுக்கு வந்து, “உங்கள் வீட்டில் தையல் மிஷின் உள்ளதா?” என்று கேட்டாள்.
“இல்லை. ஆனால் முன்னூற்று ஏழாம் வீட்டில் உள்ளது” என்று கூறி அவளை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன்.
மறுநாள் அந்த முன்னூற்று ஏழாம் பெண்மணி அழுது கொண்டே என்னிடம் வந்தாள். “நேற்று காலையில் ஒன்பது மணிக்கு வந்து தையல் மிஷினில் அமர்நத அந்த அம்மா இரவு ஒன்பது ஆனாலும் அதை விட்டு எழுந்திருக்கவே இல்லை. என் வீட்டுக்காரர் என்னைத் திட்டித் தீர்த்து விட்டார். பிறக்கப் போகும் குழந்தைக்கு ஆயுள் முழுவதும் நாப்பியே கட்டப் போகிறார்களா? கிளம்புங்கள் என்று பலவந்தமாக வெளியில் விரட்டினேன். நாளைக் காலையில் மீண்டும் வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறாள். அவளை வீட்டிற்குள் வரவிட்டால் காலை முறித்து விடுவேன் என்று மிரட்டுகிறார் என் கணவர். என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றாள்.
ஏன் அறிமுகம் செய்து வைத்தோம் என்று வருத்தப்பட்டேன். “உங்கள் மிஷின் வீணாகி விட்டதென்று சொல்லி விடுகிறேன். கவலை வேண்டாம்” என்று கூறி முன்னூற்று ஏழாம் பெண்மணியை அனுப்பி வைத்தேன்.
எங்கள் பணிப்பெண், “மேலே குடியிருக்கும் அம்மாவுக்கு இடுப்பு வலியாம். எழுந்திருக்க முடியவில்லையாம்” என்று செய்தியைச் சுமந்து வந்தாள்.
ஏழு மாதம் தானே ஆகிறது. அதற்குள் வலியா, என்று பதறிப் போய் நானும் என் அக்காவும் மாடிக்கு ஓடினோம். போய்ப் பார்த்தால்தான் தெரிந்தது. வலி மகளுக்கு இல்லை. தாய்க்கு என்று.
முதல் நாள் பன்னிரண்டு மணிநேரம் விடாமல் தையல் மிஷினில் தைத்ததால் அவளுக்கு இடுப்பு பிடித்துக் கொண்டு விட்டது. கால் தூணைப் போல வீங்கிவிட்டது.
“தற்போது எல்லா உடைகளுமே கடைகளில் கிடைக்கிறது. நீங்கள் அனாவசியமாக சிரமப்படாதீர்கள்” என்று கூறிவிட்டு வந்தேன்.
ஸ்ரீலதாவுக்கு ஒன்பதாம் மாதம் நடந்தது. ஊரிலிருந்து பாட்டி வந்து இறங்கினாள். அவள் இடுப்பிலும் கழுத்திலும் பெல்ட் போட்டிருந்தாள். வேலைகளில் உதவ முடியாவிட்டாலும் பேச்சுத் துணைக்காவது இருப்பேன் என்று கூறினாள்.
அன்று மருத்துவமனைக்குச் சென்று காட்டியபோது அந்த வாரமே பிரசவம் ஆகிவிடும் என்றார் டாக்டர். ஏ.வி. ராவும் அவனுடைய அக்காவும் பரபரப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். ஹாஸ்பிடலுக்கு எந்த நேரத்திலும் செல்ல வேண்டியிருக்கும் என்று தாய்க்கும் குழந்தைக்கும் வேண்டிய பொருட்களை எல்லாம் ஒரு சூட்கேசில் எடுத்து வைத்தார்கள். வீடு முழுவதும் ஒட்டடை அடித்தார்கள். ஸ்ரீலதா “அம்மா” என்று குரல் கொடுத்தவுடனே லிஃப்டில் அழைத்து வந்து வாட்ச்மேனின் நாற்காலியில் உட்கார வைத்தார்கள். கரென்ட் போய் விட்டால் மாடிப்படிகளில் இறங்குவது கஷ்டம் அல்லவா?
“நான் ஆபீசில் இருக்கும் போது வலி வந்து விட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று பில்டிங்கில் அனைவரிடமும் கூறிவிட்டு தினமும் அலுவலகம் சென்று வந்தான் ஏ.வி. ராவ். அந்த சுப முகூர்த்தமும் வந்தது. ஸ்ரீலதாவுக்கு பிரசவ வலி எடுத்தது. அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் ஏ.வி. ராவ் வீட்டிலேயே இருந்தான். ஓடிவந்து என்னிடம் கூறினான். புடவை மாற்றிக் கொண்டு மேலே சென்று பார்த்தேன். அங்கு ஒரே பரபரப்பாக இருந்தது. எங்கள் அடுக்குமாடி வளாக வாசிகள் ஏறக்குறைய எல்லோருமே அங்கு குழுமி இருந்தார்கள்.
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சூட்கேஸ் பீரோவின் மேல் இருந்தது. அதை எடுப்பதற்காக பிளாஸ்டிக் ஸ்டூலின் மேல் ஏறப் போனான் ஏ. வி ராவ். அதன் கால் சற்று வளைந்து கொடுக்கவே அது ஒரு பக்கம் சாய்ந்தது. அதைப் பிடிக்கப் போனாள் அவனுடைய அக்கா. அவளால் இயலவில்லை. அக்காவும் அவள் மேல் தம்பியுமாக இருவரும் கீழே விழுந்தார்கள். பீரோவின் மேலிருந்த சூட்கேஸ் நழுவி கீழே நின்றிருந்த பாட்டியின் தலை மேல் விழுந்தது.
அவர்களை எழுப்பி நிற்க வைக்கலாம் என்று பார்த்தால் முடியவில்லை. உடனே நூற்றி எட்டுக்கு யாரோ போன் செய்தார்கள். அவர்கள் ஒரு கால் மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார்கள். மூவரையும் ஆம்புலன்சில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றார்கள். இரண்டு கார்களில் சிலர் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். நானும் மேலும் இரு பெண்களும் சேர்ந்து ஸ்ரீலதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நார்மல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தில் அந்தக் குடும்ப அங்கத்தினர்களின் நிலைமை மோசமாக இருந்தது.
ஏ.வி. ராவுக்குக் கால் முறிவு. அவனுடைய அக்காவுக்கு இடுப்பு சுளுக்கு. பாட்டிக்குக் கழுத்தில் நல்ல அடி. பத்து நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வந்தது. குண்டூரிலிருந்து மாமனாரும், கடக்கில் இருந்து மாப்பிளையும் வந்தார்களே தவிர, பாவம், அவர்கள் என்ன செய்ய முடியும்? அப்பார்ட்மென்ட் வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு உதவ முன் வந்தார்கள். முப்பத்தொன்பது குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதில் கஷ்டம் எதுவும் இருக்கவில்லை. கடவுள் அருளால் அந்தக் குடும்பத்தினர் உடல் நலம் பெற்று வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.
குழந்தைக்கு மூன்றாம் மாதம் மிக வைபவமாக பெயர் சூட்டும் பண்டிகை நடத்தி ‘நவதீப்’ என்று பெயரிட்டார்கள். அனைருக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தான் ஏ.வி. ராவ். அதோடு கூட அப்பார்ட்மெண்டில் அனைவருக்கும் துணிமணி கூட வாங்கிக் கொடுத்தான். அது மட்டுமா? குழந்தை பிறந்த அதே மாதத்தில், எங்கள் அப்பார்ட்மென்டின் ஐந்தாவது மாடியில் ஒரு போர்ஷன் விலைக்கு வந்தது. லோன் எடுத்து அந்த வீட்டை வாங்கினான் ஏ.வி. ராவ். அவ்விதமாக ‘நவதீப்’ எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு அங்கத்தினரானான்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
