மூலம் : ஒஸாகி ஹொசாய்
தமிழாக்கம் : நந்தாகுமாரன்
கவிதைகள்
எல்லாவற்றையும் மறந்து விடுவதான பாவனையில், ஒரு கோடை காலத் தொப்பியை அணிந்தபடி
வாளிகள் நிறைய ஊற்று நீர்
இரு கைகளிலும்
இருண்ட சாலையில் (நான் நடந்து செல்கிறேன்)
இருண்ட வானம்
அந்தி சாயும் நேரம்
ஒரு பெரிய எறும்பு பாய் மீது ஊர்கின்றது
நாட்கணக்கில் பெய்யும் மழை, குருவிகளும் நானும் கவனிக்கிறோம்
ஏற்கனவே விடிந்துவிட்டது
புத்தரின் பூஜை மேடையின் முன்
கொஞ்சம் சிந்திய அரிசி
காலைக் கனவை மறந்துவிட்டுக்
களை பிடுங்கினேன்
ஒரு குழந்தைக்கு வைக்கோல் செருப்புகளை அணிவித்து
வசந்தகால வானத்திடம் அவனை விடுவிக்கிறேன்
ஒரு புறா கூவுகிறது
மதிய நேரத்தில்
கூரை கனத்துக் கிடக்கிறது
என் காதுகளை ஒரு நெருப்புக்குச்சி கொண்டு நான் சுத்தம் செய்யும் போது இருட்டாகிறது
என் பாதங்கள் போல உருவம் கொண்டிருக்கும் இந்தப் பழைய காலுறைகளை நான் எட்டி உதைத்துத் தள்ளுகிறேன்
கஷ்கொட்டைகள்1 விழுகின்றன, அவை விழும் சப்தத்தை ஒரு குழந்தையுடன் நான் இன்றிரவு கேட்டுக் கொண்டிருக்கிறேன்
முள்ளங்கிகள் பெருத்துக் கொண்டே போகின்றன, காலையும் மாலையும் நான் புத்தருக்கு ஒரு குழந்தைப் பேணுநராகிறேன்
பாதி மயக்கத்தில், நட்சத்திரங்கள் வெளியே வந்திருக்கின்றன
பனி, ஆற்றின் அலைகளில் கரைகிறது, சப்தமில்லாமல் இருள் சூழ்கிறது
விடியல், பேரலைகள், நிர்மலமான வானம், என் முன்னே இவை
நாம் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பொழுதில், இரவு ஆழமாகிறது இந்த கிராமப்புறத்தில்
திருகையைச் சுழற்றியபடி ஒரு பெண்மணி பாடுகிறாள் தனக்காகவே ஒரு பாடலை
இலையுதிர் காலம் செல்லும்போது, குடியமர்ந்துவிட்ட ஒரு மேகத்தின் பின்னே நாள் விடிகிறது
அஸ்தமனச் சூரியனின் நீண்ட விடைபெறுதலுக்குப் பின்
தனித்து விடப்பட்ட இந்த மலை
வினிகரில் ஊற வைத்த விளை மீன்
இரண்டு படகுகள் இந்தப் பனியில் காதலுடன் உரசிக் கொள்கின்றன
எந்த மனிதனையும் போல எனக்கும் சளியினால்2 காய்ச்சல் வந்துள்ளது, பாருங்கள்
குறிப்புகள்
1 கஷ்கொட்டைகள் – Chestnut – உண்ணத் தகுந்த ஒரு வகைக் கொட்டை
2 எனக்கும் சளியினால் – ஜப்பானிய கலாச்சாரத்தில் ‘முட்டாள்களுக்குச் சளி பிடிக்காது’ என்பது ஒரு பொதுவான மூடநம்பிக்கை.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
