சந்திரசேகர் கவிதைகள்

(1)

இருட்டில் உறங்கி
இருட்டில் விழிக்கும்
குகைச் சுவரில்
இந்த சித்திரங்களை
வரைந்தவர் யார்
தீ சுடர்ந்த இராவில்
உட்சுவர் ஒழுகும்
இருளின் அடர்வில்
நிலவற்ற நாளின் போர்க்களம்
என்றிருக்கிறது அச்சித்திரம்
ஸ்தம்பித்து நோக்கும்
என் கண்களுக்கு
அதன் கோடுகளை
நன்றாகத் தெரிந்திருக்கிறது
நெருப்பின் கைகள் துலாவி
எரியும் என் குடிசையும்
என் உடலும்
அங்கே தீட்டப்பட்டிருக்கின்றன
யாரின் கதையை
யார் வரைகிறார்
பொருதிய மின்னலில்
வெளிச்சம் பாய்கிறது
குகைக்குள்
ஒரு மர்மக் கை
தோள் பட
திறந்து விடுகிறது
உடல்


(2)

வரிகள் பிறழ்ந்த பிரார்த்தனையுடன்
சுடரைத் தொழ
இரவு வரை
காத்திருக்க வேண்டியிருந்தது
விளக்கு எரிகிறது
சுடர் மலரும் வெளிச்சம்
காட்டைத் திறக்கிறது
அக்கினிப் பசியால் தீராப்பகல்
இரவின் முகத்தோடு
மாலைக்குள்
கால் நீட்டத் தொடங்கிவிட்டது
சடசடப்புடன் இருளை எரித்து
மத்தியில்
கனலும் செம்மஞ்சள்
நம் காமம்
நர்த்தனமாடும் தீயின்
பசி நாவு
நம் காதல்
அனல் பாரித்து கொதிக்கும்
கணத்துக்கு முந்தைய கணம்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
எரியட்டும் விடு
சாம்பலில் இருந்தே
பிறந்திருக்கின்றன
அமைதியின் கதைகள்


(3)

இரண்டு பாதைகளின்
சந்திப்பில்
வந்த வழி மறந்து
இளைப்பாறித் தொடர
சரியாகிறது
கைவிடப்பட்ட ஒன்று
குழப்பம்
பக்கங்கள் அழிந்த
நாணயத்தை முத்தமிட்டுச்
சுண்டலாம்
திரும்பாத நாணயங்களோடு
பாதை முற்றுப் பெறுகிறது
திரும்பாத நாணயங்களோடு
திறப்பு கொள்கிறது
வேறு பாதை
நினைவில்
விழாத நாணயத்தை
முகமாய் நினைவில் கொள்வது
வசதியாய் இருக்கிறது
மறதியுடனான சூது
நாணயங்களை
பந்தயத்தில் தோற்பது
இன்னும் எளிமையாய் இருக்கிறது


(4)

கானகமொன்றை
கனவில் காண
காடு
விழித்துக் கொள்கிறது
தீராக் கனவின் பச்சையை
எங்கே வைப்பது
இன்னொரு கனவில்
கனவுகளை வேண்டி
கண்களை மூட
பகல் தீராமல் வதைக்கிறது
இரவுகள் தொலைந்து
கனவுகள் தீரும் நாளில்
அணையாத பச்சைக் காடு
எரியும்
எரியட்டும்
எரிகிறது


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.