நிகர் செய்திடாத நியாயங்கள்
வாய்விட்டழும் இவ்வேளையில்
வடித்த கண்ணீருக்கு
மதிப்பற்று கழிந்த நாட்கள் அவை.
நீங்கள் விரிந்து
நாங்கள் சுருங்கிய நரகமது.
சமன் செய்திடாத அசுரத்தன வீக்கத்தின் புரையோடிய அவலம்.
விட்டு
வெறுண்டோடிய புலம்பெயர்தலின் ரண ஓலம்
இதயம் எட்டவில்லை ஒருபோதும்.
கூடிய நெருக்கடி கூத்தின்
மீளாய்வு செய்திடாத ஓட்டத்தில்
இதயம் தொலைத்த
இயந்திரங்களின்
சிதில பொழுதில்
மகிழலவில்லைதான்
சேர்மானமாகி இருப்பதால்.
காடும் மலையும்
காணக் கிடைக்காத ஏரியும்.
ஓடியாடிய நதிகளும்
அதில்
ஒட்டுறவாக இருந்த உயிர்களையும்
கொன்றழித்த
கொடூரத்திற்கு முன்
இவ்வழுகையும்
அவலமும்
குறைவுதான்
தனக்கு
மட்டுமென
இவ்வுலகை
நினைக்கும் வரை.

இப்படியானதுதான் யாவும்
இந்த தெருவிற்குள்
இதற்கு முன்
வந்ததை
கணக்கிலடக்க முடியாது
இத்தெருவில்தான்
பிறந்து வளர்ந்தேன் என்பதால்.
இந்த புங்க மரத்தில்
ஊஞ்சல் ஆடி
ஒடிந்த கையில்
தழும்பு இருக்கின்றது
மண்ணறை செல்லும்வரை
மறக்காமல் இருக்குமாறு.
வாலாட்டும் தெரு நாய்க்கு
தெரிந்திருக்கின்றது
வாசனையற்றவனின் வாசனைகளை.
கட்டவிழ்ந்து வரும்
நினைவுகளை
தாழிட முடியவில்லை
கதவை கண்டெடுக்காமல்
போனதால்.
ஏதேச்சையாக
வந்துவிட்ட
இப்பொழுதில்
எனக்கான
யாவுமாய்
இருந்த தெரு
எப்படி
அந்நியமாகிப் போனது
வேறொரு இடத்திற்கு
வீட்டை
மாற்றிய பிறகு.
விட்டகலாததாக ஒரு வேண்டல்
எழுந்து சென்று
பயணித்து
பார்க்கும் தூரத்தில் இருக்கும் உன்னை
ஒரு பொழுதுதான்
காணவில்லை
என்றாலும்
உருகிறது
உள்ளே
கசியும் கண்ணீராக.
என் அன்றாடங்கள்
யாவும்
நிகழ்தேறுகிறது
உன்னைப்பற்றிய
சிணுங்கிடும் பொழுதுகளாக.
மறுக்க முடியாத
வேலைகள் முடித்து
மாலை வருவதற்குள்
பருகும் அன்பை
பாதுகாத்து வை.
நாளை பார்க்கலாமென
நஷ்டத்தைக் கடந்து
நான் வந்துவிடும்
சாத்தியம்
முட்டியென்னை
மூச்சடைக்க வைக்கிறது
ஓடி வந்து
உன் முன்
நிற்பதற்கு
ஒவ்வொரு
கணமும்.
உயிர்த்தலில் லயித்து
அநேகமாக
நீ சொன்ன
ஒவ்வொன்றிலும்
பொய்யும் மெய்யும் கலந்தே இருந்தது.
மெய்யை ஆடையாக்கி பொய்யை செறித்துக்கொண்டேன்.
மெய்யென
பொய் பேசும்
இவ்வேளையில்
செறிக்க மறுக்கிறது
சிந்தை கனத்து.
மேவிய காதலால்
விட மறுக்கிறது
மனம்
வாழ்வியலின் உன் கோட்பாடென.
கானகம் சென்று
உண்டு வாழ்வோம்
உயிர் வாழ்வதற்காக
கற்றும்
மறக்கவியலாத
காதலில் திளைத்து.
இருளுக்குள் இறைஞ்சி
இருள்
சூழ்ந்த
இவ்வேளையில்
பார்வையில்
பழுதில்லை
சூரியனின் சூடு
தகிப்பதால்.
நிராகரிப்பின்
கொடுமையில்
யாவும் இருக்கின்றது
என்னைச் சூழ்ந்து
ரணங்களறியாது
வெளிப்புற மாயையில்
வீழ்ந்து.
வெளிச்சமற்ற வானத்தில்
மின்னவே இல்லை
நினைவு நட்சத்திரங்கள்
நிம்மதி தருமாறு
எப்பொழுதும்.
அன்பைக் கொன்ற
அசௌகரியத்தை
சமர்ப்பிக்கின்றேன்
சற்றேனும்
நீ அமைதி கொள்ள.
பிணமொன்று பேசியலையும்
அவலத்தில்
மறுமுறை
மடிவதற்குள்
பார்வையொன்று
போதும்
நான்
பௌருஷம்
கொள்ள.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
