தூயக் கடலாள்

குறுஞ்செய்தியை பார்த்ததும் பிரபுவுக்கு துயரத்தை விட பயம் அதிகம் மேலிட்டது. பதட்டத்தோடு படுக்கையை விட்டு முழுவதுமாக எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் ஒருமுறை நம்ப முடியாமல் போனை எடுத்துப் பார்த்துவிட்டு விளக்கை எரிய விட்டான். 

பாத்ரூம் போய் கண்ணாடி முன்பு நின்றவனுக்கு எதிரில் மொத்த காலமும் கை கட்டி அடுத்தது என்ன என்று அவனைப் பார்த்து எக்காளமாய் சிரிப்பது போலத் தோன்றியது. சிவந்திருந்த கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. ஓவென வாயெடுத்து அழலாம் போலத் தோன்றியது.ஆனால் அழுகை வரவில்லை. 

‘என்னங்க வெளிய வாங்க’ என பதட்டத்தோடு ககவைத் தட்டும் வசந்தியின் குரல் கேட்டது. அவளும் குறுஞ்செய்தியைப் பார்த்திருப்பாள்.

கையில் ஃபோனோடு ‘என்னங்க இது? உண்மையா?’ எனப் படபடத்தாள். நடுங்கும் விரல்களோடு போனை வாங்கியவன் விஜியை அழைத்தான். 

‘ஆமாம்டா.. இப்பதான் அந்த பொண்ணு பேரென்ன? நர்மதாவா ? அது கூப்டு சொன்னுச்சு. பாவம்டா ரொம்ப அழுவுது’

‘என்னடா இப்படி பண்ணிட்டான்’

‘ஆமாம் போ.. நீ உடனே உன் வீட்டுல எல்லாரையும் எங்கயாச்சும் அனுப்பிடு. கண்டிப்பா போலீஸ் வரும். புள்ளைங்க முன்னாடி எதும் தெரிய வேணாம். நான் போய் பாத்துட்டு என்னனு கூப்பிடுறேன்’

அவன் ஃபோனை கட் செய்த பிறகும் இவன் காதில் வைத்துக் கொண்டே நின்றிருந்தான். வசந்தி தோளில் தொட்டதும் ‘நான் என்னப்பா பாவம் பண்ணேன்’ என்று திரும்பாமலேயே அழத் தொடங்கினான்.

‘நான்லாம் எங்கயும் போக மாட்டேன் உங்க கூடத்தான் இருப்பேன்’ என வசந்தியும் விசும்பத் தொடங்கினாள்.

அறையில் விளக்கு இன்னமும் எரிந்து கொண்டிருக்க பிள்ளைகள் இருவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். வெறித்த பார்வையோடு தலையில் கை வைத்தபடி பிரபு கீழே அமர வசந்தியும் தளர்ந்துப்போய் உட்கார்ந்தாள்.

சங்கர் நர்மதாவை முதல்முதலாக வீட்டிற்கு அழைத்து வந்த நாள் இன்னமும் நினைவிலிருக்கிறது. அது ஒரு ஜூலை மாத மழையிரவு. 

கதவைத் திறந்தபோது தொப்பலாய் நனைந்தபடி இருவரும் உள்ளே வந்து நின்றார்கள். 

‘வேற வழியே தெரியல.. வீட்ட விட்டு ஓடி வந்துடுச்சுடா மச்சான். ஏதாவது பண்ணுடா’ என அவன் கெஞ்சுவதைப் பார்த்து செய்வதறியாது இவன் நின்றிருக்க வசந்தி உள்ளே ஓடிப்போய் டவல் எடுத்து வந்து அவளுக்கு தலை துவட்டி விட்டாள்.

‘நீங்க வந்து உட்காருங்கண்ணா எல்லாம் பாத்துக்கலாம்.. ‘ என தைரியமூட்டியவாறு நர்மதாவின் கைகளைப் பிடித்து இழுத்து வந்து சோஃபாவில் அமர்த்தினாள்.

மறுநாள் வடச்சென்னிமலை முருகன் கோயிலில் நண்பர்கள் புடைசூழ திருமணம் நடந்ததிலிருந்து அவர்களுக்கு வீடு பார்த்து தனியே குடித்தனம் வைக்கும் வரை அவர்கள் இருப்பிடத்திலேயே தங்க வைக்கப்பட்டார்கள்.  வசந்தியும் நர்மதாவும் நெருக்கமானது குறித்து சங்கர் பிரபுவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தான்.

கண்ணயர்ந்திருந்தவன் விழித்துப் பார்த்தபோது பன்னிரெண்டு மிஸ்டுகால்கள் வந்திருந்தன. எல்லாம் நண்பர்களின் அழைப்புகள்.

‘இந்தக் காலை ஏன் இத்தனை துக்ககரமானதாக விடிய வேண்டும் கடவுளே’

வசந்தி தேநீரை எடுத்து வந்து குடிக்குமாறு வற்புறுத்தினாள்.

‘எது நடந்தாலும் பாத்துக்கலாம் விடுங்க’ என்றவளின் குரல் நடுங்கிக் கொண்டிருந்தது. பெயரளவிலான ஆறுதல் கடந்து அவள் இதயமும் துக்கத்திலும் அச்சத்திலும் உறைந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. விஜி மீண்டும் அழைத்தான்.

‘ரொம்ப கஷ்டம்டா.. தோள்ல சாஞ்சி அழக் கூட ஆள் இல்லாம அந்தப் பொண்ணு மயங்கிக் கெடக்குது. ரெண்டு பேர் வீட்லயுமே யாரையும் காணோம். தூரத்து சொந்தக்காரங்க ஒண்ணு ரெண்டு பேர் நிக்கிறாங்க. ஆம்புலன்ஸ் வந்துருக்கு. போலீஸ் விஏஓலாம் விசாரிச்சிட்டு இருக்காங்க. ‘

‘புள்ளைங்க…?’

‘அதுங்க இன்னும் பாவம். என்ன நடக்குதுன்னு அதுங்களுக்கு ஒண்ணும் புரியல. அம்மா பாலுன்னு மயங்கிக் கெடக்குறவ சீலையப் புடிச்சி இழுக்குதுங்க. அப்புறம் நாந்தான் கூட்டிக்கிட்டுப் போய் டீ பிரட் வாங்கி குடிக்க வச்சேன். எப்ப வேணாலும் உனக்கு போன் வரலாம்டா. தைரியமா இரு’

விஜி போனை வைத்ததும் இவனுக்குள் நிழலான காயத்தின் வலி மீண்டும் படர்ந்தது.

தோழமைக்கான மிகச் சிறந்த உதாரணமாக சங்கரை பிரபுவும் பிரபுவை சங்கரும் மெச்சிக் கொள்வதான காலமொன்று ஆறு மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததை இப்போது நினைத்தாலும் கலைந்துப்போன நற்செயலொன்றின் நினைவு நெடும்பனையாய் நிற்கிறது. 

சங்கர் கொஞ்சம் முன்கோபி. முணுக்கென்றால் கோபித்துக் கொண்டு போய்விடுபவனுக்கான இங்கிதத்தை நர்மதா சேர்த்து சுமக்க தொடங்கியிருந்தாள். இரு தம்பதிகளும் விடுமுறைக் காலங்களில் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வதும் கூடிக் களிப்பதுமான வாழ்வு ஊரார் மத்தியில் பேசுபொருளாகி இருந்தது. 

விஜிக்கு கூட மூன்றாவது இடம்தான். ‘பரவால்ல மாப்ள காலேஜ் முடிஞ்சு நாங்கலாம் சேந்துக் குடிக்கவும் டிரிப் போகவும் தான் ஒண்ணாச் சேருவோம். நீயும் சங்கரும் குடும்பத்தோட சேந்து ஊர் சுத்துறதும் ஒருத்தர் வீட்டுல இன்னொருத்தர் குடும்பத்தோட தங்குறதும் எனக்கே கொஞ்சம் பொறாமையா இருக்குடா’ என்பான்.

பிரபுவின் அக்காவுக்கு சுத்தமாக சங்கரைப் பிடிக்காது.

‘நாங்கலாம் மனுசங்க இல்ல இவனுக்கு எப்ப பாத்தாலும் சங்கரு சங்கரு.. போன வாரம் கோவா போனானே அக்கா மவளுக்குனு அக்காவுக்குனு ஏதாச்சும் வாங்கிட்டு வந்தானா? இவன் புள்ளைங்களுக்கு மாதிரியே அவன் புள்ளைங்களுக்கும் மேட்சிங்கா டிரஸ்ஸு.. அத போட்டோ எடுத்து வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் வேற.. இருக்கட்டும்..’ எனக் கறுவியவளை சமாதானப்படுத்த பிரபுவுக்கு வெகு நேரம் ஆனது. இப்படித்தான் யார் இருவரது நட்பு குறித்து புகாரளித்தாலும்

‘விடுங்கப்பா.. எனக்கு நீங்கலாம் இருக்கீங்க.. அவனுக்கு என்ன விட்டா யாரு இருக்கா? வாழ்த்துக்கு நன்றி.. இன்னும் நல்லா வாழ்த்துங்க’ என்று சிரிப்பான்.

சங்கரும் சளைத்தவனல்ல.  குடலிறக்கம் ஏற்பட்டு இவன் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தபோது அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். மருத்துவமனை சாப்பாடு ஒத்துக்கொள்ளாது எனக்கூறி நர்மதாவை தினமும் விதவிதமாக சமைக்கச் சொல்லி எடுத்துவந்துப் பரிமாறினான். 

‘அண்ணனா தம்பி.. இவ்வளவு பிரியமா சாப்பாடு எடுத்துட்டு வராரு?’

‘அவன் என் சிநேகிதனுங்க ஐயா’

என இவன் உரைத்தபோது பக்கத்து பெட்காரர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

எல்லாவற்றுக்குமான முடிவு என்பது ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து விஸ்வரூபம் எடுத்துவிடுவதைப் போன்றான ஒரு விஷயம் தங்களுக்குள்ளும் நடக்குமென்பதை பிரபு நினைக்கவில்லை.

கைகட்டி பணி செய்து ஊதியம் வாங்குவதில் சங்கர் தொடக்கத்திலிருந்து விருப்பமற்றவனாக இருந்தான். அவனது கனவெல்லாம் ஒரு கார்மெண்ட்ஸ் வைத்து எப்படியேனும் முன்னேறிவிட வேண்டுமென்பதாக இருந்தது. அதற்கான மூலதனத்தை திரட்டுவது குறித்து பலமுறை பிரபுவுடன் விவாதித்து இருக்கிறான். பிரபுவையும் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதில் அவனுக்கு அதீத ஆர்வம் இருந்தபோதிலும் இவன் அதற்கு உடன்படவில்லை. பெரும்பாலான நேரங்களில் பிசினஸ் குறித்த தரவுகளேதும் தெரியாத தனக்கு அது நடுச்சமுத்திரத்தில் குதித்து நீந்துவது போன்றதான பிரமையை அளிப்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான். 

சங்கர் முதன்முறையாக பத்து லட்சரூபாயை கேட்டபோது இவனுக்குள் மெலிதான பயம் பரவினாலும் அதனை பூசி மெழுகிவிட்டு சிநேகிதனின் முன்னேற்றத்தில் தனது பங்காக இந்த உதவியைச் செய்துவிடலாம் என்றே கருதினான். ஆனால் அதுவே அவனுக்கு பெரிய தொகைதான் எனும்போது அது குறித்து வசந்தியுடனும் தீவிரமாக கலந்து கொண்டான்.

நீண்ட யோசனைக்குப் பிறகு ஏழு லட்சத்தை காசி மாமாவிடம் மூன்று வட்டிக்கு வாங்கித் தருவதாக முடிவானது. பத்திரத்தில் பிரபுவே கையெழுத்திட்டு பணத்தை வாங்கித் தந்தான். கார்மெண்ட்ஸ்க்கென ஒரு கடையை லீசுக்கு எடுத்தார்கள். துணிகள் வாங்க பெங்களூரு வரை பிரபுவும் போய் வந்தான்.

முதலிரண்டு மாதங்கள் சொன்ன தேதியில் முறையாக வட்டிப்பணம் கைக்கு வந்துவிடுவது கண்டு காசி மாமா பூரிப்புடன் சொன்னதில் பிரபு மிகவும் மகிழ்ந்தான். ஆனால் முன்பைவிட இப்போது சங்கருடனான சந்திப்பு குறைந்துகொண்டே போனது. போன் பேசினாலும் பணி மும்முரத்தில் இருப்பதாகக் கூறி அவசரமாக பேசிவிட்டு வைத்துவிடுவான். எந்நேரமும் வேலை வேலையென்றே அலைவதாகவும் வீட்டிற்கே சரிவர வருவதில்லை எனவும் நர்மதா சங்கரைப் பற்றி குறைபட்டுக் கொண்டதாக வசந்தி தெரிவித்தபோது இவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

பணம் வந்ததும் தன்னிடம் மட்டும் தான் இப்படி விலகிப்போகிறானோ என்ற எண்ணம் பொய்யானதில் சிறு ஆறுதல்.

சில வாரங்களுக்குப் பிறகு எதேச்சையாக சங்கரின் கடை இருந்த பகுதிக்குச் சென்றவன் அங்கே கடையில்லாதது குறித்து துணுக்குற்றான். விசாரித்தபோது வியாபார நிமித்தமாக கடையை மாற்றிவிட்டதாகக் கூறினார்கள். ஆனால் அதன்பிறகான மாதங்களில் வட்டிப்பணம் சரிவர வருவதில்லையென காசி மாமா சலித்துக் கொண்டபோது சங்கரின் பேச்சிலும் நடத்தையிலும் மாறுதலைக் கண்டான். நர்மதாவிடம் ஃபோன் செய்து கேட்டபோது வியாபாரம் எதிர்பாராத அளவு நஷ்டமடைந்து விட்டதாகவும் அதை நிமிர்த்த முடியாமல் குடித்துவிட்டு வந்து இரவுகள் தோறும் புலம்புவதாகவும் கூறி அழுதது இவனுக்குள் கலக்கத்தை மேலும் அதிகமாக்கியது. இவனே ஒருநாள் வலியச் சென்று சங்கரைப் பார்த்தபோது அதிர்ந்தான். முன்பிருந்த சங்கர் இப்போதில்லை. ஆயிரம் முறை தோற்றுக் களைத்தவனிடத்தில் ஒரு முற்றும் தெரிந்த, பிறரது அறிவுரைகளை முற்றிலுமாக புறந்தள்ளிவிடுகிற, நீ யாரடா என் தோல்வியைப் பற்றி ஆராய.. என்று கேட்கிற ஒரு திமிர்பிடித்த சாதுவின் தோரணையில் அவன் பிரபுவை எதிர்கொண்டான்.

இவனது ஆறுதலனைத்தும் கடனைத் திருப்பிக் கேட்பதற்கான முன்னேற்பாடுகளாகவே அவன் அர்த்தப்படுத்திக் கொண்டான். 

இவனைப் போலவே கடன் கொடுத்த மற்றவர்களும் புலம்பியும் திட்டியும்விட்டுப் போவதாக நர்மதா அழுவதாக வசந்தி தெரிவித்தபோது இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்னொருபக்கம் காசி மாமாவும் அடிக்கடி கடனைத் திருப்பிக் கேட்டு வீடு வரை வந்துவிட்டுப் போனார். ஓரிருமுறை அழைத்து இதுபற்றிக் கேட்டபோது ‘என்னடா நீ கூடவா நெலமப் புரியாம நச்சரிக்கிற? காசு இருந்தா குடுக்க மாட்டனா? பிச்சக்காசு ஏழு லட்சம்.. இதுக்குப் போய் இப்படி போன் பண்ணிட்டே இருக்க? ‘ என்று பதிலுக்குக் கேட்டான்.

‘ஏ சாமி உனக்கு அது பிச்சக்காசு தான்ப்பா.. ஆனா அது எனக்கு ரொம்பப் பெரியக் காசு. நீ மொதல்ல வாங்குன கடன குடுத்துட்டு வேலையப் பாரு’ என முதன்முறையாக குரலில் கோபத்தைக் கூட்டிக் கேட்டபோது தனக்குள் தானே திகைத்து தான் போனான். இவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மறுமுனையில் அழைப்பை துண்டித்ததில் எல்லாமே அர்த்தமற்றுப் போனதாகத் தோன்றியது.

நர்மதா கூட போனில் பேசுவது நின்றுவிட்டதும்  வாரம் ஒருமுறை வெளியிலோ வீட்டிலோ சந்தித்துக் கொள்ளும் வழக்கமும் இல்லாமல் போனதும் இப்போது வினோதமாகத் தெரிந்தது. பிள்ளைகள் சங்கரின் பிள்ளைகளோடு விளையாட வேண்டுமென அழைத்து வரச் சொல்லி அழுதார்கள். வீடு தேடிச் செல்லும் பெரும்பாலான நேரங்களில் பூட்டியேக் கிடந்தது. கடன் தொல்லை தாங்காமல் வேறு பகுதிக்கு வீடு மாற்றிக் கொண்டு போய்விட்டதாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

அதன்பிறகு பெயர் கெட்டுவிடக்கூடாதென காசி மாமாவுக்கு இவனே வட்டிப்பணத்தைக் கொடுக்கத் தொடங்கினான். மாத ஊதியத்தை நெருக்கிப்பிடித்து சிரமத்துக்கிடையில் வண்டி ஓட்ட வேண்டியதாகிப் போனது. 

‘அவன் தான் கடன வாங்கிக்கிட்டு எஸ்கேப் ஆகிட்டானாமேப்பா? இதெல்லாம் சரியா வராது. நீ வட்டி தரலன்னாலும் பரவால்ல முதல்ல அசலக் கட்டு.. உங்கப்பா மொகத்துக்காகப் பாக்குறேன் இல்லனா நான் கேட்குற தொனியே வேற மாதிரி இருக்கும்’ என காசி மாமா மீண்டும் ஒருமுறை வந்து கடுகடுத்துவிட்டுப் போனபோது இவனுக்கு இதற்குமுன் சந்தித்திராத அவமானமாக இருந்தது.

வரும்போதெல்லாம் வீதியில் சத்தம் கேட்காமலிருக்க ஐந்தாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து ஒப்பேற்றத் தொடங்கியதில் வண்டியை ஸ்டேண்டில் போட்டுவிட்டு பஸ்ஸில் போகத் தொடங்கினான். தன் இயலாமை மீதான கோபமனைத்தும் இப்போது முழுவதுமாக சங்கரின் பக்கம் திரும்பியிருந்தது. போன் நெம்பரையும் சங்கர் மாற்றிவிட்டதில் வெறுப்படைந்து அங்குமிங்கும் அலைந்துத் திரிந்தவனுக்கு விஜி தான் அவன் ஆத்தூர் விநாயகபுரம் பக்கம் குடிபோய்விட்டதை பார்த்ததாகக் குறிப்பு தந்தான். ஒருவழியாக வீட்டை தேடிப்பிடித்து போய் நின்றவனை சங்கர் முதலில் எதிர்பார்க்கவில்லை.

‘வாடா வா வா’ என தேய்ந்தக் குரலில் அழைத்தான். ஆளே மாறிப்போய் இளைத்து இல்லாமையின் ரேகைகள் ஓடிய முகத்தோடு நின்றிருக்க

இவன் உள்ளே பார்வையை ஓட்டினான். தட்டில் பரிமாறிய சூடான இட்லிகளின் மீது அப்போது தான் நர்மதா கறிக்குழம்பை ஊற்றியிருந்தாள். இவனைப் பார்த்ததும் ‘வாங்கண்ணா உள்ள வாங்க’ என உடைந்தக் குரலில் தழுதழுக்க அழைத்தாள். பிள்ளைகள் இவனையும் தட்டிலிருந்த இட்லியையும் மாறி மாறி கலக்கத்தோடு பார்த்தன.

பிரபு எதையும் கண்டுகொள்ளும் நிலைமையில் இல்லை. 

‘நீ வீடு மாறிட்டா என்னால கண்டுபுடிக்க முடியாதா.. நீ என்னா அவ்ளோ பெரிய புடுங்கியா?’ எனச் சீறினான்.

‘பிரபு.. சத்தம் வேணாம். உன் காசு வரும் மொதல்ல கெளம்பு’

‘அடேங்கப்பா.. உனக்கு வாங்கிக் குடுத்துட்டு நான் கடங்காரனுக்கு பதில் சொல்லணும். வந்து கேட்டா நீ நோவாம கெளம்பச் சொல்லுவ. பத்திரத்துல கையெழுத்து போட்ட நான் இளிச்சவாயனா போய்ட்டனா உனக்கு?’ எனக் கத்தினான்

நிலைமை கைகலப்பாகும் போலத் தெரிந்து நர்மதா குறுக்கே புகுந்துக் கெஞ்சினாள். குழந்தைகள் எழுந்து நின்று இதற்குமுன் பார்த்திடாத மாமாவை மிரட்சியாகப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தன. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கினர்.

‘ஏ ஆமாம்டா தரமுடியாதுடா. காசு வரும்போது தான் கெடைக்கும். மொதல்ல வெளிய போ’ என அவன் கை நீட்டுவதும் இவன் மீறுவதுமான காட்சி புதிதாக இருந்தது.

‘போக முடியாதுடா. நீ நாளைக்கே வீட்ட மாத்திட்டு எங்கயாவது ஓடிப்போய்டுவ.. நான் திரும்பவும் தேடிக்கிட்டு அலைய முடியாது. எனக்கு இப்பவே பணம் வேணும். யார வேணாலும் கூப்பிடு. இன்னிக்கு ஒரு வழி தெரிஞ்சே ஆகணும். இல்லனா போலீஸ்ல கேஸ் குடுத்துதான் ஆகணும். வேற வழியில்ல’ என்று இவன் சட்டையைப் பிடித்தபோது தான் சண்டை முற்றிலுமாக வேறு திசைக்கு மாறியது.

‘ஓஹோ.. நீ கேஸ் குடுப்பியா? குடு.. நானும் வூட்டுல தனியா இருக்குற பொம்பள கையப் புடிச்சி இழுக்குறான்னு கேஸ் குடுக்குறேன்’ என்று சங்கர் சொன்னதும் இவன் ஸ்தம்பித்துப் போனான். நர்மதா ‘ஐயோ..’ என குரலெடுத்து அழுதாள்.

பிரபுவுக்கு கண்கள் கலங்கியிருந்தன. இத்தனை வருட பந்தத்தையும் அசைத்துவிட்ட சொல் அது. சட்டென வெளியே வந்தான். ஒரு வாரமாய் தீனி கேட்டுக் கொண்டிருக்கும் தன் பிள்ளைகள் நினைவுக்கு வந்தார்கள். அடகு கடைக்குப் போன வசந்தியின் தோடு நினைவுக்கு வந்தது. இவன் தன் தரப்பில் சொற்களை உதிர்த்தான்.

‘வாங்குன கடன குடுக்க வக்கில்ல. கறியெடுத்து குழம்பு வச்சி திங்க எப்படித்தான் வயித்துல ஒட்டுதோ..’

தன்னை மீறிக் கொண்டு வந்து விழுந்த வார்த்தைகள் அடுத்தடுத்து உருப்பெற்றன. ‘இதுக்கு பேசாம ரோட்டுல கெடக்குற நரவல எடுத்து வச்சித் திங்கலாம். த்தூ…..’ என்றபடி நடக்கத் தொடங்கியதை தெரு மௌனமாக வேடிக்கை பார்த்துவிட்டுக் கலைந்தது. அதுதான் சங்கரிடம் தான் கடைசியாக உதிர்க்கப் போகும் சொற்கள் என்பதை பிரபு இத்தனை வருடங்களில் கற்பனைகூட செய்திருக்க மாட்டான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தவனின் அருகில் வசந்தி வந்து அமர்ந்தாள்.

‘விஜிண்ணா ஃபோன் பண்ணாரு. இப்பத்தான் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சி பாடி வந்து எல்லாரும் போய்  தகனம் பண்ணிட்டு வந்தாங்களாம். நானாவது போயிருக்கலாம்.. யாரு என்னா சாபம் குடுப்பாங்களோன்னு பயந்துகிட்டே போகாம விட்டாச்சு. அந்த புள்ளைங்க முகத்தப் பாத்தாலாவது அந்த மனுசனுக்கு தூக்கு போட்டுக்கணும்னு தோணுமா? கடவுளே’

அவர்கள் நினைத்தது போல எந்தப் போலீஸும் தேடி வரவில்லை. நர்மதா யாரைப் பற்றியும் எந்தப் புகாரும் அளிக்கவில்லையாம்.தொழிலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மனமுடைந்து தற்கொலை என மறுநாள் பேப்பரில் செய்தி வந்திருந்தது.

சில மாதங்கள் கடந்ததில் எல்லா நினைவுகளையும் சிரமப்பட்டு அழித்தவாறு இயல்பு வாழ்க்கைக்கு இருவரும் திரும்பத் தொடங்கிய ஒரு ஓய்வு நேர மதியத்தில் கதவு தட்டப்பட்டது. வசந்தி கதவைத் திறந்ததும் பேச்சற்று நின்றதைப் பார்த்து வாசலை நோக்கினான். பிள்ளைகளோடு நர்மதா நின்றிருப்பதைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிக்கொண்டு ‘ஓ’வென வசந்தி அழத் தொடங்கினாள்.

‘ஏண்ணா இத்தன மாசத்துல என்ன பாக்க வரல?’ என்றவளின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் ‘என்ன மன்னிச்சிடும்மா’ என கைகளைக் கூப்பியவாறு இவனும் அழத் தொடங்கினான். சற்றைக்கெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிள்ளைகள் நால்வரும் இணைந்து விளையாடத் தொடங்கியிருந்தார்கள்.

‘சங்கர் அன்னிக்கு இராத்திரி உங்களப் பத்திதான் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாருண்ணா. எங்க நட்பு இப்படி வீணா போய்டுச்சேனு புலம்புனாரு. ஆனா ஒரு வார்த்தக்கூட உங்களப்பத்தி தப்பா பேசல.எப்படிலாம் நாங்க கூடியிருந்தோம் தெரியுமான்னு ஒவ்வொண்ணா அனத்திக்கிட்டே இருந்தாரு. நானும் அழுதுட்டே தூங்கிட்டேன். ஆனா இப்படி பண்ணுவாருன்னு நினைக்கலண்ணா’ என்றபடி கைப்பையிலிருந்து  காசோலையை எடுத்து நீட்டினாள். 

‘தெரிஞ்சவங்க கம்பெனிக்கு வேலைக்குப் போறேண்ணா. எப்படியும் வாழ்க்கைய நகத்திதானே ஆகணும். அங்கதான் லோன் போட்டுருக்கேன். இப்போதைக்கு ரெண்டு லட்சம் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா தந்துடுறேன்’ என்றவளை பிரபுவால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

எல்லாக் காயங்களும் தன்போக்கில் ஆற்றுப்பட்டுவிட்டபிறகு  நர்மதாவின் வீட்டுக்கு போயிருந்த ஒருநாளில் வசந்தி அவளுக்குத் துணையாக அடுப்படியில் உதவிக் கொண்டிருக்க பிரபு அலமாரியிலிருந்த புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். எதேச்சையாக எடுத்த நர்மதாவின் டைரியிலிருந்து விழுந்த கடிதத்தை எடுத்துப் பிரித்தான். அதை சங்கர் காவல்துறைக்கு எழுதியிருந்தான். அதில் தன் தற்கொலைக்குக் காரணமானவர்கள் என அவன் குறிப்பிட்டிருந்த பட்டியலில் பிரபுவின் பெயர் முதலில் இருந்தது. பிரபு கைகள் நடுங்க நிமிர்ந்து பார்த்தான். நர்மதா அடுப்படியில சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

2 Replies to “தூயக் கடலாள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.