தமிழ்ப் பண்பாட்டின் குரல்

'பூவா மரமும் பூத்ததே
பொன்னும் மணியும் விளைந்ததே
ஜீவ அமுதம் கிடைத்ததே  
பெரும் செல்வம் பெருகியே சேர்ந்ததே'

வழக்கம் போல பழைய பாடல் தேடலில் மாட்டியது இந்தப் பாடல். படம்: நான் பெற்ற செல்வம் (1956) இசை: ஜி.ராமநாதன். குரலாலேயே விரட்டி விளையாடும் டி.எம்.எஸ், ஜிக்கி. நடுத்தர குடும்பத்தை கண்முன்னே காட்டும் சிவாஜி, ஜி.வரலக்ஷ்மி. தொப்பையில்லாத, தன் ஒவ்வொரு அசைவிலும் ‘நடிகர் திலகம்’ என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயங்கள் இல்லாத சிவாஜி. இந்தப்பாடலில் இவரின் உடல்மொழிகள் கூட ஆரம்ப காலக் கமல் படங்களில் நாம் கண்டவையே. எழுபதுகளின் இறுதியில்  இலங்கை வானொலியில் ஜிக்கி, ஏ எம் ராஜா பாடல்கள் தவிர நேரமிருந்தால் மற்ற பாடல்களும் போடுவார்கள் என்றிருந்த காலத்தில் ஏதோ ஒரு ஓய்ந்த மதிய வேளையில் கேட்ட பாடல். காலத்தை வென்ற இசை மனதை நிறைக்கிறது. 

வேறொன்றுமில்லை. இந்தப் பாடல் ஆரம்பிப்பதற்கு முன்தான் ‘சம்பளக் கவ’ரை, புதுப்புடவை, இனிப்போடு மனைவியின் கையில் கொடுத்தான் நாயகன். அவ்வளவுதான், பூவா மனமும் (மணமா? மரமா? ஏதோஒன்று) பூத்துவிட்டது. இன்றைக்கு ஐம்பது வயதிற்கு மேலிருப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். அலுவலகத்தில் கணக்காளர் ‘பேங்க்’ குக்கு செல்லும்போதே பரபரப்பு ஆரம்பமாகிவிடும். அவர் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வந்து பெயர் வாரியாக ‘கவர்’ போட்டு முதலாளியின் அறையில் ‘ட்ரே’ யில் வைக்க, ஒவ்வொருவராக உள்ளே சென்று வாங்கி வருவார்கள். இப்போதும் ஒவ்வொரு மாதமுதல்தேதியிலும்  மனம் பூக்கிறது கைபேசியில் அந்த ‘Your account is credited with’ என்கிற குறுஞ்செய்தியைக்  காணும்போது. அந்தப்பூ வேறு ஒன்று. அன்றைக்குக் கவரில் கொடுத்ததென்னவோ இன்றைக்கு ஒரு பள்ளிக்கூடப் பையனிடம் புழங்கும்  பணம்தான். ஆனாலும் அந்தக் ‘கையில காசு’ அனுபவம் வேறு.  


சிவாஜிக்கு ஆரம்பத்தில் பின்னணி பாடியவர் சிதம்பரம் ஜெயராமன். ‘தூக்குத் தூக்கி’ யில் முதன்முதலில் டி எம் எஸ்ஸை சிவாஜிக்கு பின்னணிபாட வைத்தது இசையமைப்பாளர் ஜி.ராமநாதனே. சிவாஜி பாடினால்  டி எம் எஸ் குரலில்தான் பாடமுடியும் என்று எல்லோரையும் நம்பவைத்ததே டி எம் எஸ்ஸின் வெற்றி. ‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி’யில் ‘நிகழும் பார்த்திபன் ஆண்டு…’எனும் வசனத்தை சிவாஜியே பேசுவது போல் பாடியிருப்பார். இப்படி ஏராள சோறுபதங்கள் உண்டு. இதுபோலவே இவர் பாடிய எம் ஜி ஆரின் கொள்கைப்பாடல்கள்  (அதாவது சுடப்பட்டு குரல் மாறும்வரை. அதன்பிறகும் கூட ஜேசுதாஸ் குரலில்(!) பாடமுடிந்தது எம்.ஜி.ஆரால்)  தொண்டனின் மனதில் ஆழமாகப்பதிந்து மக்கள் மனதில் அவரை நிரந்தர முதல்வராக்கின.     

‘தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி’ 

இது வேறுபாடல். ‘தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி’    (வெற்றிக்கு ஒருவன், இசை: இளையராஜா ) என்று ஸ்ரீப்ரியாவோடு ஆடும் ‘தொப்பையும் திலகமும்’ ஆன சிவாஜி. அதே டி.எம்.எஸ், ஜானகியோடு. இந்தப் பாடலை நான் முதன் முதலாகக் கேட்டது ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுபதுகளின் இறுதியில். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, அன்றைக்கெல்லாம் குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் மிகத் தீவிரமாக இருந்தது. எங்கள் பள்ளியின் முன் வந்துநிற்கும் பிரசார’வேனி’லிருந்து இந்தப் பாடல் எப்போதும் ஒலிபரப்பப்படும். காரணம் இந்தப் பாட்டில் வரும் வரிகள்.

பேரன் கொஞ்ச வேண்டும் என்று
அப்பா எந்தன் காதில் சொன்னார் – சிவாஜி

பேத்தி கொஞ்ச வேண்டும் என்று
அத்தை எந்தன் காதில் சொன்னார் – ஸ்ரீப்ரியா

போகட்டுமே ரெண்டும் பெத்துக்கொடு – சிவாஜி

ரெண்டுதான் போதுமே அளவுடன் வாழ்வதே
நாளுமே நல்லது வாழ்விலே வாழ்விலே – சிவாஜியும், ஸ்ரீப்ரியாவும் சேர்ந்து.
(விவரம் தெரியாத வயதில் இந்த வரியை அழுத்தம் திருத்தமாகப் பாடி அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். நாங்கள் ஐவர்.)

இதற்குப் பிறகுதான் முக்கியமான பிரச்சாரம். அதைத் தெரிந்து கொள்ள விடாமல் ‘உள்ள போங்க பிள்ளைங்களா’ என்று வெட்கம் படிந்த சிரிப்போடு எங்களை விரட்டிய டீச்சரின் முகம் இன்னும் மறக்கவில்லை. பிரச்சாரம் பெரிய வெற்றி என்று பின்னால்தான் தெரிந்தது. 

மேலே சொன்ன இரண்டு பாடல்களுமே இருபத்திஐந்து வருட இடைவெளியில் வந்தவை. முதல் பாடலில் மென்பாகின் பதத்தில் ஒலித்த குரல் இரண்டாவது பாடலில் முற்றிய வெல்லப்பாகின் பதத்தில் ஒலிப்பதை உணரமுடியும். வெவ்வேறு இனிமை.இளையராஜா இசையில் டி.எம்.எஸ் பாடிய பாடல்கள் சுவாரசியமானவை. என் விருப்பப்பாடல்கள் ‘சிந்து நதிக்கரை ஓரம்’ (நல்லதொரு குடும்பம்), அந்தப்புரத்தில் ஒரு மகாராணி (தீபம்) .

 ‘சிந்து நதிக்கரை ஓரம்’
‘அந்தப்புரத்தில் ஒரு மகாராணி’

தொகுளுவா மீனாக்ஷி அய்யங்கார்(?) சௌந்தர்ராஜன் என்கிற டி.எம்.சௌந்தர்ராஜன். மதுரைக்காரர். சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவர். பட்டுநூல்காரர்கள் என்பார்கள் மதுரையில். ‘நாயக்கர் தொப்பையத் தடவியே பத்துதெருவையும் வாங்கிப்போட்டீங்களேடா?’ என்பார் மதுரையில் நான் வேலைபார்த்த கம்பெனி டிரைவர் பாஸ்கரன் நைனா(நாயக்கர்), பியூன் துவாரகாவை விளையாட்டாக. நாயக்கர் மகாலைச்சுற்றி உள்ள பந்தடி பத்துதெருவும் அவர்கள்தான். தமிழை கொச்சையாகப் பேசுவார்கள். அதன்காரணமாகவே கேலியும் செய்யப்படுவார்கள். விதிவிலக்காக டி எம் எஸ் தமிழ் உச்சரிப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். ‘முத்தைத் திருபத்தித் திருநகை’ என்ற ‘அருணகிரிநாதர்’ (கதாநாயகன் இவரே) படப்பாடல் ஒரு பானைச் சோறு(நடிப்புக்கும் கூட). 

சினிமாப்பாடல்களை பொதுவாக இரண்டுவகையாகப் பிரிக்கலாம். பாடகராலேயே பரிமளிக்கக்கூடிய பாடல்கள். கோபுரங்களில் துருத்தித் தெரிகிற பூதச்சுதையைப் போல பாடகர் துருத்தித் தெரியும் பாடல்கள் இவை. இன்னொன்று இசை, பாடல் வரிகள், பாடியவர் எல்லோரும் தங்க ஆரத்தில் பொலியும் வைரக்கற்களைப் போல சீராக ஒன்றை ஒன்று விஞ்சாத லயத்தில் இணைவது.  முல்லைமலர் மேலே (உத்தமபுத்திரன், இசை: ஜி.ராமநாதன்), மாசிலா நிலவே நம் (அம்பிகாபதி, ஜி.ராமநாதன்), இரவும் நிலவும் (கர்ணன், இசை: எம் எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தி), சின்னச் சின்ன மூக்குத்தியாம்(பாதை தெரியுது பார், இசை: எம் பி சீனிவாசன்), மெல்ல மெல்ல அருகில் வந்து(சாரதா, இசை: கே.வி.மகாதேவன்), யார் அந்த நிலவு (சாந்தி,இசை: எம் எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தி) சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து (பிராப்தம், இசை: எம்.எஸ்.வி) என்று பல்லாயிரம் பாடல்கள் பாடிய டி எம் எஸ் சுக்கே இந்த இரண்டாவது ரகத்தில் ஒரு நூறு பாடல்கள் தேறினால் அதிகம். ஆனால் வெற்றிபெற்ற பாடல்கள் முதல் வகையிலேயே அதிகம்.  கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (கவிஞர் வாலியின் முதல்பாடல்) , ஓராறு முகமும் ஈராறு கரமும், சொல்லாத நாளில்லை,  உன்னையும் மறப்பதுண்டோ, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே போன்ற பக்திப்பாடல்கள் மூலமும் பெரும்புகழ்  பெற்றார் டி எம் எஸ். 

‘மாசிலா நிலவே நம்’ ( பானுமதியோடு, படம் அம்பிகாபதி இசை. ஜி.ராமநாதன்), சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (எஸ்.ஜானகியோடு, படம் குங்குமம் இசை கே.வி.மகாதேவன்) போன்று விசையேறிய குரலில் ‘டூயட்’ பாடிய டி.எம்.எஸ் சால் ‘மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது..’ (சுசீலாவோடு, இசை கே.வி. மகாதேவன், படம் பணமா பாசமா) போன்ற அமைதிபடிந்த குரலிலும் பாடமுடிந்தது. ‘சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே..’  போல கடுமையான சங்கதிகளையும் மென்மையாகப் பாடி பாடலினூடே மிதந்து செல்ல முடிந்தது.  அவர் பாடல்களைக் கேட்டாலே குண்டான ஒருவருக்குப் பாடுகிறாரா அல்லது ஒல்லியான ஒருவருக்குப் பாடுகிறாரா என்று கதாநாயகனின் ஆகிருதி மனக்கண்ணில் தோன்றிவிடுகிறது. ‘எண்ணிரண்டு பதினாறு வயது….’ பாடலைக்கேட்டாலே கதாநாயகன் சிவாஜி என்றும் ‘திருமணமாம் திருமணமாம்…’ பாடலைக் கேட்டாலே கதாநாயகன் எம்.ஜி.ஆர் என்றும் மனக்கண்ணில் காட்டிவிடுகிறார்    டி எம் எஸ். 

ஆரம்ப கால டி.எம்.எஸ் சின் குரல் வலிமையும் இனிமையும் சரிவிகிதத்தில் கலந்த, இள மூங்கிலை நினைவுறுத்தும் ஒரு குரல்.  காலம்தோறும் குரல் கார்வையின் கனம் ஏறிக்கொண்டே செல்வதை யாரால் தடுக்கமுடியும்? ஆனால் குரலின் இனிமை குறையவில்லை. மலைக்காடுகளில் பயணித்தால் பச்சையின் அத்தனை நிறபேதங்களையும் பார்க்கலாம். எது அழகில் குறைந்தது? அதுபோல அவர் திரையிசையை ஆண்ட முப்பது வருடங்களை ஐந்தைந்து வருடங்களாகப் பிரித்துக்கொண்டாலும், அந்தந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த நூறு பாடல்களை ஒலித்தது அவர் குரல். இருபெரும் நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருக்கும் பொருந்திப்போன குரல் அவருடையது. அவர்கள் காலம் முடிந்ததும், காலமாற்றத்திற்கேற்ப கதாநாயகர்களின் உடல்மொழிகளும் மாற, மேலையிசையின் பாதிப்பால் மரபிசையின் நிறமும் மாற அவருடைய குரலுக்கு வேலையில்லாமல் போனது. ‘பொட்டு வைத்த முகமோ…’ என்று சிவாஜிக்கு எஸ்.பி.பி பாடியபோது ஏற்பட்ட அதிர்ச்சி கமலுக்கு ‘வடிவேலன் மனசு வெச்சான்…’ என்று டி.எம்.எஸ் பாடியபோதும் ஏற்பட்டது.  நல்லூழாக நமக்கு அவருடைய நீட்சியாகக் கிடைத்தார் மலேசியா வாசுதேவன். அதன் பின் சங்கர் மகாதேவன்(?). டி.எம்.எஸ் சே கூட தியாகராஜ பாகவதரின் நீட்சிதானே? 

‘இவர் பாடும்போது சேனலை மாற்றக் கைகள் தயங்குகின்றன’ என்பார் சுஜாதா. 1950 ல் பாட ஆரம்பித்தவர் சிவாஜி,எம்.ஜி.ஆரின் குரலாக முப்பது வருடங்கள் திரையை ஆண்டார். பொதுவாக எதிர்மறை வார்த்தைகளை உபயோகிக்கும்போது எச்சரிக்கையாக   இருக்கவேண்டும் என்பார்கள். கால,நேரத்தைப் பொறுத்து நமக்கே பலிப்பதற்கான வாய்ப்புகள் கொண்டவை. ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’, ‘என்கதை முடியும் நேரமிது’ இவைதான் ‘ஒருதலைராகம்’ படத்தில் இவர்பாடிய கடைசிப்பாடல்கள். அத்துடன் பாடகராக இவர் வாழ்வும் முடிந்தது. இத்தனைக்கும் ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ (சதாரம்) என்று முழுதும் எதிர்மறை வார்த்தைகளால்     ஆன பாடலை தான் பாடவந்த காலத்திலேயே பாடியவர் இவர். 

‘கர்ணன்’ படத்தில் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி’ என்று சூரியக்கடவுளை வணங்கி ஒரு விருத்தம் பாடுவார்கள் . ‘தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்’ என்று உச்சஸ்தாயியில் எடுப்பார் டி எம் எஸ். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ‘மெலோடிராமா’ என்கிற போதத்தையும் மீறி, கண்கள் பனிக்கவே அந்தக் காட்சியைக் காணமுடிந்தது.  அவர் குரலின் வலிமை அத்தகையது.  இன்றும்கூட அவருடைய ‘பாட்டும் நானே …பாவமும் நானே’யோ, ‘இசைகேட்டால் புவி அசைந்தாடு’மோ ‘ரியாலிட்டி ஷோ’க்களில் பாடப்படும்போது மெய்மறக்கச்செய்கிறது. ‘கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்…’ என்றோ ‘அம்மானை அழகுமிகும் கண்மானை…’ என்றோ தூய்மைப்பணியாளரின் கைபேசியிலிருந்து ஒலிக்கும் குரல் நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டு கவனிக்கச் செய்கிறது. அலுவலகத்திற்கு மின்சார ரயிலில் செல்லும்போது ‘முத்துக்களோ கண்கள் …’ என்று புல்லாங்குழலில் வாசித்து அவரது பாடலை நினைவுபடுத்தும் கண்தெரியாத கலைஞருக்கு (இவரைப் பிச்சைக்காரர் என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை) பணம் கொடுக்க வைக்கிறது.  திரையிசை உள்ளவரையிலும், திரையிசை ரசிகன் உள்ளவரையிலும், திரையிசைப்பதிவுகள் உள்ளவரையிலும் டி எம் எஸ் வாழ்வார். மலையாளப் பாடகர் உன்னிமேனன்  ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் ”டி எம் எஸ் பாடினா தமிள் கள்ச்சர் கண்ணு முன்னால தெரியும்” என்றார். அத்தகைய ஒரு தமிழ்ப்பண்பாட்டின் குரல் அவருடைய நூற்றாண்டு நிறைவடைகிற நேரத்தில்  பொருத்தமான முறையில் நினைவு கூறப்படவில்லை என்ற வருத்தம் என்னைப்போன்ற எண்ணற்ற ரசிகர்களின் மனதில் எப்போதும் இருக்கும்.  

***

4 Replies to “தமிழ்ப் பண்பாட்டின் குரல்”

  1. அருமையான பதிவு.மலைக்காடுகளில் பயணித்தால் பச்சையின் அத்தனை நிறபேதங்களையும் பார்க்கலாம். எது அழகில் குறைந்தது? அழகான உவமை. TMS ஒரு மகா கலைஞன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.