பயம்

தமிழாக்கம் : ஷக்திபிரபா

பெருங்கடலில் ஒன்றென கரைவதற்கு முன்
சிற்றாறு கலங்கிப் போகிறாள்;

கடந்து வந்த காட்சிகளை,
சிகரமெனத் தொட்ட மலையுச்சிகளை,
நெடிது வளைந்தோடிய பாதைகளை,
கானகங்களை – தொடர்ந்தோடிய
கிராமத்து வயல்வெளிகளை,
நினைந்து கிறங்குகிறாள்;
கிறங்கித் தயங்குகிறாள்..

கண்முன்னே ஆர்ப்பரிக்கும் கம்பீரக் கடல்!
ஆழியில் மறைந்திடும் தன் ஊழியை
எண்ணியே கிடுகிடுக்கிறாள்;

சமுத்திரத்தில் சேர்வதொன்றே
புலப்படும் ஒரே வழி ..
புறமுதுகிட்டு பின்னுக்கு சறுக்கலாகாது.
முகம் திரும்பி மீள்வதற்கில்லை.

கடந்துவந்த பாதையில்
சுழன்றோட எவருக்கும் சாத்தியப்படாது.
கதிகலங்கும் நதியதுவும் துணிந்தே கரையோடி
நுரையாடும் திரைகடலில் கரையத்தான் வேண்டும்.

பயம் விலக்கத்தான் வேண்டும்
விரைந்தோடி கடல்கலந்த கணமே..
அச்சமும் அகன்றிட, சட்டென விளங்கிடும்..
‘கடும்புனலவள் கடல்கலந்து தனையிழந்து
காணாதொழியவில்லை – வேறாக
ஆர்ப்பரித்து ஆடிய ஆறுடல் மாறி
ஆழ்கடல் மௌனத்தின் ஆனந்தம் பாடி
ஆழியைத் தழுவும் ஆலிங்கனம் – அவள்
நீள்பயண முடிவில் நீருடன் கூடி,
சாகரமென்றே மாறிய சங்கமம்!’.

3 Replies to “பயம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.