இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக நட்புநாடுகளாக இருந்த இந்தியாவும், சீனாவும் இன்று ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. இதற்குக் காரணம் என்ன என்று அறியுமுன், எந்த அளவுக்கு நட்புடன் இருந்தன என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவுடன் சீனா ஆயிரமாயிரம் ஆண்டுகள் நட்பாக இருந்தது1 என்பது பலருக்கும் வியப்பாக இருக்கும். அதைவிட வியப்பு என்னவென்றால், சீனா தனது ஆன்மீக வழிகாட்டியாக இந்தியாவை எண்ணிவந்தது என்பதை அறிந்தால் இன்னும் வியப்பாக இருக்கும். வியப்பைத் தீர்க்கும் சான்றுகளைகள் கீழே:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு நேபாளத்தில் அவதரித்த அரசகுமாரர் சித்தார்த்தர், போதி மரத்தடியின் கீழே ஞானம் பெற்றுக் கௌதம புத்தராகியதை உலகமே அறியும். இன்றும் அந்தப் போதி மரம் புத்த கயாவில் கோடிக் கணக்கானோரால் கண்டு வணங்கப்படுகின்றது.2 அங்கிருக்கும் புத்தர் ஆலயம் உலகின் பல கோடிப் பௌத்த சமயத்தோருக்குப் புண்ணியத் தலமாக இன்றும் விளங்கிவருகிறது.

அப்படிப்பட்டுச் சிறந்து விளங்கும் பௌத்த சமயம், இந்தியாவின் மேற்கில் ஆப்கானிஸ்தான் முதலாகக் கிழக்கிலிருக்கும் சீனாவுக்குச் சென்றது. சீனாவிலிருந்து கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் பரவியது. அதுமட்டுமல்ல, சென்ற திக்கில், பர்மா (இன்றைய மியன்மார்), தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் முதலிய நாடுகளிலும் வேரூன்றிப் பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் மாபெரும் பேரரசை நிறுவிய அசோகரின் மகள் சங்கமித்திரை புத்தகயாவிலிருந்து எடுத்துச் சென்ற போதி மரத்தின் கிளை3 இலங்கை அரசன் தேவனாம்பிய திஸ்ஸனால் அனுராதபுரத்தில் நடப்பட்டுப்4,5பல்கிப் பெருகி இலங்கையின் வழிபாட்டுத் தலத்தில் இருந்து வருகிறது.

இப்படிப் பௌத்த சமயம் உலகெங்கும் பெருகிப் பரவிவரும்போது, இந்தியாவும் சீனாவும் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததை உலகில் முதல் பொருளாதார நூலான அர்த்தசாத்திரத்தை இயற்றியவரும், சந்திரகுப்த மௌரியரை அரசுக் கட்டிலில் அமரவைத்தவருமான கௌடில்யர் எனப்படும் சாணக்கியர், சீனாவை ‘மகாசீனா’ என்றும், “சீன-அம்சுக்” என்றும் அந்த நூலில் குறிபிடுகிறார்..6 மேலும், பௌத்த சமயத்தைப் போற்றிவளர்த்த பேரரசர் ஹர்ஷ வர்த்தனர், சீனத் ‘தாங்’ வம்சப் பேரரசர் தாய்-சுங்கின் அரசவைக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்பியதால், அவரும் தன் பிரதிநிதிகளை இருமுறை அனுப்பிவைத்தார்.7

இப்படி தென்கிழக்கு நாடுகளுக்கு ஆன்மீக வழிகாட்டியாக விளங்கிய பௌத்த சமயத்தை அறிந்துகொள்ள, அதன் சமயநூல்களைச் சரியாகப் படி எடுத்துச் செல்லவேண்டி, சீனப் பயணிகள் இருவர் இந்தியாவுக்கு வெவ்வேறு சமயத்தில் வந்தனர்.

முதல் பயணி ஃபா-ஹியன் நான்காம் பொது நூற்றாண்டின் இறுதியில் (399-413) இந்தியாவுக்கு வந்தார்.8

பேரரசர் ஹர்ஷ வர்த்தனர் காலத்தில் ஹையன்-சாங் பொது நூற்றாண்டு 629லிருந்து 645வரை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.9

அவர் முதலில் காமரூபத்தின் (அஸ்ஸாம்) அரசர் பாஸ்கர வர்மனின் அரசவையில் சிலகாலம் தங்கியிருந்து, நாலந்தா கலாசாலையில் ஐந்தாண்டுகள் தர்க்க சாத்திரம், இலக்கணம், வடமொழி, யோகாசார பவுத்தம் ஆகியவற்றைப் பயின்றார்.10 அங்கு யோகாசார வல்லுனர் சைலபத்திரரையும் சந்தித்தார்.

பின்னர் ஆஃப்கானிஸ்தானம் சென்று அங்கிருந்த மூவாயிரத்திற்கும் மேலான புத்தபிக்குகளையும், அவர்களில் சிறந்த பிரஞ்ஞானகரா, தர்மசிம்மர் ஆகியோரையும் சந்தித்து, தன் நாட்டில் பவுத்த சமய நூல்களில் இருந்த முரண்பாடுகளையும், ஒவ்வாமையையும் களைந்து தெளிவுபெற்றார். அதைச் சியுகி (மேலை நாடுகளின் பதிவுகள்) என்ற நூலில் எழுதினார்.

‘திரைகடலோடியும் திரவியம் தேடு,’ என்ற பழமொழிக்கேற்பப் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் சீனாவுடன் தொடர்ந்து வணிகம் நடத்திவந்தனர்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலும் பலகாலம் மறைந்து, மறந்திருந்து சில ஆண்டுகள் முன்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனாவின் தென்கிழக்குப் பகுதியில், ஃப்யுஜி-யான் மாநிலத்தின் க்வான்-ட்சு நகரில் உள்ள கோவிலில் தமிழ் கல்வெட்டுகளும்11, கோவில் கட்டிக்கொள்ளச் சீனப் பேரரசர் கொடுத்த மாண்டரின் மொழியிலுள்ள அனுமதி முத்திரையும் உள்ளன. அந்த முத்திரைதான் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்டுகொள்ள உதவியது.

இந்தியாவின் மேற்குக் கடலில் அராபியரும், கிழக்குக் கடலில் தமிழரும் கடல் வணிகம் திறம்பட நடத்தினர். இப்பொழுது அந்தக் கடல் வணிகப் பாதைகளில்தான் உலகக் கடல் வணிகம் நடைபெற்று வருகிறது.

ஒன்றுக்கொன்று மிகவும் நட்புடன் விளங்கிய நாடுகளுக்குள் பெரும் பிணக்குவரக் காரணம் — திபெத்…!

இந்தியா ஆங்கிலேயர் வரவுக்கு முன்னர் 56 பகுதிகளாகப் பிரிந்து அரசர்களால் ஆட்சிசெய்யப் பட்டுவந்தாலும், உணர்வால் ஒன்றியிருந்தது – இருக்கிறது. வீட்டிலோ, கோவிலிலோ எந்தவொரு நற்செயலையும் தொடங்கும் முன்னர் இந்தியா முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் உறுதிமொழியில் (சங்கல்பம்), “ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே..” என நாவலந்தீவான (மூன்று திசைகளில் கடலாலும், வடக்கில் இமயமலையாலும் தீவாகத் தனிப்படுத்தப்பட்ட) இந்தியாவின் 56 பகுதிகளையும் ஒரு குடைக்கீழ் கொணர்ந்து ஆட்சிசெய்த பரத மன்னனின் பெயரைச் சொல்லிப் பாரத நாடும், பரதக் (துணைக்) கண்டம் என்னும் இந்தியாவின் மக்களாகிய நாங்கள் செய்யப்போவது இச்செயல் என்று குறிப்பிடுகிறோம்.

அப்படிப்பட்ட இந்தியாவில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மக்கள் தங்குதடையின்றிச் சென்றுகொண்டுதானிருந்தனர். தென்னக மக்கள் தங்கள் வாழ்நாளில் வடக்கிலிருக்கும் காசிக்கும், வடக்குப் பகுதி மக்கள் இராமேஸ்வரத்திற்கும் செல்வதைக் குறிக்கோளாய்க் கொண்டிருந்தனர். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் புதிது புதிகாகக் கண்டுபிடிக்கப் படும் அறிவியல், கலைகள் அனைத்தும் அந்தந்த அறிஞர்களால் காசியிலிருக்கும் கலாசாலைகளில் வடமொழியில் எழுதிவைக்கப் பட்டன.

அதுபோல, மற்ற பகுதியிலிருப்பவர்கள் காசிக்குச் சென்று அக்கலைகளைப் பயின்று அவற்றைத் தம் பகுதிக்குக் கொணர்ந்தனர். இது இன்னும் ‘காசியாத்திரை’ என்னும் சடங்காகத் தென்னிந்தியத் திருமணங்களில் நடத்தப்படுகிறது. 12,13

இன்னும் சிலர் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கயிலை மலையைத் தரிசித்து வலம்வரத் திபெத்துக்குச் செல்வர். கயிலைமலை பௌத்த சமயத்தோருக்கும் புனிதமான ஒன்றாகும்.

போதிசத்துவரின் அவதாரமாகத் திபெத்தியர் தங்கள் தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மகாயான பவுத்தம் அவரையே அவலோகிதேஸ்வரர் என்று குறிப்பிடுகிறது. திபெத்திய பவுத்தத்தில் இவ்வாறு தலாய் லாமாவைப் பலநூறு ஆண்டுகளாகத் (முதல் தலாய் லாமா 1391ல் பிறந்தார்) தேர்ந்தெடுத்து வருகிறது.14 இது அத்வைதப் பெரியோர் தலைமுறை தலைமுறையாகச் சங்கராசாரியரைத் தெரிந்தெடுப்பதைப் போன்றதே.

திபெத் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து சீனாவின் க்விங் அரசவம்சத்தின் கீழ் இருந்தாலும், அது தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குக் குடிபெயர்வதும் அவ்வளவாகக் கட்டுப்பாட்டில் இல்லை.

பிரித்தானியர் தங்கள் வசமுள்ள இந்தியாவை வலுப்படுத்த 1903ல் திபெத்தின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான லாசாவைக் கைப்பற்றினர். அத்தோடு நில்லாது சீன, திபெத்திய, நேபாள, பூட்டானியப் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். அதன் வாயிலாகப் பிரித்தானியர் திபெத்தின் விவகாரங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டனர்.15

ஆனால், க்விங் அரசபரம்பரை ஜப்பானியரிடம் தோற்று, ஜப்பானும் இரண்டாம் உலகப் போரில் தோற்றவுடன் என்ன ஆயிற்று என்பதுசென்ற பதிவில் விளக்கப்பட்டது.

சீனா தன்னாட்சி பெற்றவுடன், மா-சே-டாங் திபெத் சீனாவின் ஆளுகைக்குள் அடங்கவேண்டும் என்று கீழ்க்கண்ட காரணங்களுக்காக முடிவுசெய்தார்:

  • இல்லாவிடில், திபெத், பிரிட்டானியர் வசமாகி, அதுவோ, அமெரிக்காவோ அங்கு ராணுவ தளம் அமைக்கவோ ஏதுவாகிச் சீனாவின் பாதுகாப்புக்கு ஊறு விளையலாம்.
  • சீனாவின் விவசாயத்திற்கு இன்றியமையாத மஞ்சள் (ஹ்வாங் ஹே) ஆறும், யாங்-சி ஆறும் திபெத்திலிருக்கும் இமயமலைப் பனிக்கட்டிக் கூரைகளில் உருவாகின்றன. எனவே, அந்த ஆறுகள் கட்டுப்படுத்தப் பட்டால், விவசாயம் குன்றி, சீனாவின் 55 கோடி மக்களும் பட்டினி கிடக்கும் நிலை உருவாகும்.
  • இமயமலைத் தொடர் சீனாவுக்குச் சிறந்த பாதுகாப்பான எல்லையாகும். மேலும் உலகின் கூரையான அது சீனாவிடம் இருக்கும் பட்சத்தில் அதைத் தாண்ட முயற்சிப்பவர் சீனாவுக்குப் பதில்சொல்லியாக வேண்டும்.
  • நூறாண்டுகள் காலனி ஆட்சியாளர்களின் அடக்குமுறையில் சிக்கித் தவித்த சீனாவின் எல்லைப் பகுதிகளைப் பலப்படுத்துவது, தலையாய ஒன்றாகும்.16

எனவே, சீன இராணுவம் 1949ல் திபெத்தின் எல்லையைக் கடந்து உள்நுழைந்து, அந்த நாட்டின் மிகச் சிறிய பாதுகாப்புப் படையைச் சிதறடித்தது. மே மாதம் 1951ல், திபெத்தியப் பதினேழு அம்ச விடுதலை ஒப்பந்தத்தை அமல்படுத்தியது.

ஐக்கிய நாடு அவையில் பிலிப்பீன்ஸ், தாய்லாந்துப் பிரதிநிதிகள் எடுத்துச் சொன்ன எதையும் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.17 அப்பொழுதும் இந்தியா அமைதிகாத்தது. சீன நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், திபெத்துக்குச் சாதகமாகப் பேசவில்லை.

அதன்பின் நடந்த ஒரு நிகழ்வே, இந்திய-சீன நட்பை – ‘இந்தோ-சீனி பாயி-பாயி,’ என்று சூ-என்-லாய் செய்த முழக்கத்தை18,19 – முறிக்கக் காரணமாக அமைந்தது.

அதுதான் தலாய் லாமா இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த நிகழ்ச்சி. அதை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, “தலாய் லாமா எண்பது உதவியாளர்களுடன் தாவாங் மூலம் இந்தியா வருகிறார்,” என்று பார்லிமென்ட்டில், அறிவித்தார். 20

“திபெத்திய அரசே இப்பொழுது இந்தியாவில்தான் இருக்கிறது; எங்கு தலாய் லாமா இருக்கிறாரோ, அங்குதான் அது இருக்கும்,” என்று முன்னாள் திபெத்தியப் பிரதம மந்திரி சிலுன் லோகொங்வா அறிவித்தார்.

அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு நிகழ்வும் இந்திய-சீன உறவை முறித்துத் தகர்ப்பனவாகவே அமைந்து வந்தன — வருகின்றன.

முதலாவதாக, அஸ்ஸாம்-திபெத் எல்லையைக் குறிக்கும் – 1913-14ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹென்றி மக்மேன் (McMahon) கோட்டைச் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.21 இன்றைய அருணாசல் பிரதேஷ் என்று அழைக்கப்படும், அன்றைய வடகிழக்கு எல்லைப்புற முகமையகமத்துக்குச் (Northeast Frontier Agency) சொந்தம் கொண்டாடியது.

இருப்பினும், இந்திய அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்திய-சீன சகோதரத்துவத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. சீன இராணுவம் சிலசமயம் எல்லையைக் கடந்து வந்தபோதும் அதை அத்துமீறலாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் திபெத்தையும், ஷின்-ஜியான் (Xinjiang) மானிலத்தையும் இணைக்கச் சீனா லடாக் பகுதியின்மூலம் சாலை அமைத்தபோது தூங்கிவிட்டுப் பின்னர் புகார் செய்தது. அதையும் சீனா பொருட்படுத்தவில்லை.

இந்தக் கவனக் குறைவுகளால், சீனா 1962 அக்டோபர்-நவம்பர் வாக்கில் இந்திய எல்லையை வடகிழக்கு, காஷ்மீர் பகுதியில் மீறியபோது இந்தியாவால் எதிர்த்து நிற்க இயலவில்லை. ஏழாயிரம் இந்திய வீரர்கள் தேவையின்றி இறக்க நேரிட்டது.22

இந்தியப் பிரதமர் நேரு உதவிக்கு அழைத்ததால், அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பியது. உடனே சீனா போர் நிறுத்தத்தை அறிவித்துத் தான் பிடித்த பகுதிகளிலிருந்து பின்வாங்கினாலும், 14700 சதுர மைல் (38000 சதுர கி.மீ) இந்தியப் பகுதிகளை இன்னும் தன் வசம் வைத்திருக்கிறது.

இந்தப் போரின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்திலும், உலகத்தின் பார்வையிலும் சீனா முக்கியத்துவத்தை அடைந்தது; பாகிஸ்தானின் அயல்நாட்டுக் கொள்கையிலும் குறிப்பிடத் தக்க மாற்றம் ஏற்பட்டது.23

கம்யூனிஸ்ட் அல்லாத உலகநாடுகள் அமெரிக்காவுடனோ, கம்யூனிஸ்ட் நாடுகள் ரஷ்யா-சீனாவுடன் கூட்டுவைத்து, இணங்கிவரும்போது, இந்தியப் பிரதமர் நேரு, யுகோஸ்லாவிய அதிபர் டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ, கானாவின் நுக்ருமா ஆகியோர், கூட்டில்லா நாடுகள் (non-aligned nations) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.24 இந்த இயக்கத்தில் கிட்டத்தட்ட 120 நாடுகள் அங்கத்தினராகச் சேர்ந்தன.

இதுவும் ஒருவிதத்தில் இந்தியாவுக்கு எதிராகவே அமைந்தது. கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு ஆசியாவில் மேலும் பரவக்கூடாது என்று விரும்பிய அமெரிக்கா, அதன் – முக்கியமாகச் சீனா/ரஷ்யாவின் — செல்வாக்கை குறைக்கவேண்டி, பாகிஸ்தானைத் தன் வசம் இழுக்கத் தொடங்கி அதற்குப் பொருள், இராணுவ உதவி செய்யத் தொடங்கியது.

இது இப்படியிருக்க, போக்ரனில் மே 18, 1974ல் வெற்றிகரமாகச் செய்த அணுகுண்டு வெடிப்புச் சோதனையால் (சிரிக்கும் புத்தர்) – உலக அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக இந்தியா ஆகியது.25 அது அமெரிக்காவைத் அதிரச் செய்தது. பாகிஸ்தானுடன் அதன் நெருக்கம் அதிகரித்தது.

3. இந்தியப் புலியும், சீனக் கரடியும், அமெரிக்கக் கழுகும்

உலகநாடுகள், முக்கியமாக அமெரிக்கா, சீனாவின் மாற்றத்தைக் கவனிக்கத் தவறவில்லை. அதனால்தான் அமெரிக்க அதிபர் நிக்சன் தன் ஆலோசகர் ஹென்ரி கிஸ்ஸிஞ்சரை உலகநாடுகளால் ஒதுக்கிவைக்கப்பட்ட சீனாவுக்கு, அந்த நாட்டைத் தன் கிடுக்கிப் பிடியில் வைத்திருந்த மாசே-டாங்கின் மறைவுக்குப் பிறகு அனுப்பிவைத்து, எதிரியை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையைப் பின்பற்றினார்.

சீனா முதலில் அமெரிக்காவுக்கும், பின்னர் உலகத்திற்கும் மலிவுவிலையில் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாகியது. மாசே-டாங்கின் காலத்தில் உலகத்தில் ஒதுங்கி – ஒதுக்கப்பட்டு வாழ்ந்த சீனாவுக்கு உலகமே அதன் சட்டைப் பைக்குள் வந்து அடங்கியது போன்ற வாய்ப்பு உண்டாகியது.

முதலில் ஜப்பான், பின்னர் கொரியா போன்ற நாடுகளுக்கு மலிவு விலையில் பொருள்களை உற்பத்திசெய்ய அமரிக்கா அனுப்பினும், அந்த நாடுகளின் வாழ்க்கைத் தரம் உயர உயர, அந்நாடுகளின் தொழிலாளர் கூலியும் உயர்ந்தது. ஆனால், சீனாவின் பெரும் மக்கள்தொகையாலும், சீன அரசினால் கட்டுப்படுத்தப்பட்டதாலும் சீனத் தொழிலாளரின் மலிவான கூலி உயரவே இல்லை.

ஆகவே, அமெரிக்கா சீனாவுக்கு முதலில் தொழில்திறமை தேவையில்லாத சாதாரணப் பொருள்கள், பின்னர் விலையுயர்ந்த பொருள்கள் – இவற்றின் உற்பத்தியை அனுப்பத் தொடங்கியது. அடுக்கிய சீட்டுகள் கவிழ்வதுபோல (டாமினோ எஃபெக்ட்) அமெரிக்காவின் ஒவ்வொரு தொழிற்கூடமும் சீனாவுக்கு அனுப்பப்பட்டது. 2001ல் சீனா உலக வணிக நிறுவனத்தில் (World Trade Organization) உறுப்பினராக ஆகியதும், தன் நிலைமையான “மலிவுவிலைத் தொழிற்கூட”த்திலிருந்து படிப்படியாக வளர்ந்து, உயர்தரத் தொழில்நுட்பக் கூடமாகவும் பரிணமித்தது.1

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்,

என்ற திருவள்ளுவரின் குறளுக்கிணங்க அமெரிக்கா கூலிகொடுத்துக் கூலிகொடுத்து, பின்னர் பொருள்களை இறக்குமதி செய்துசெய்து பெரிய கடனாளி ஆகியது.2 அமெரிக்கா அச்சடித்து வழங்கும் கருவூல உறுதிச்சீட்டு (treasury bond) உலகெங்கும் வாங்கப்பட்டு வருகிறது. அதனால்தான் அமெரிக்க டாலர் எங்கும் மதிக்கப்படுகிறது. இக்கட்டுரையை எழுதும்போது அமெரிக்காவின் மொத்தக் கடன் 31.4 டிரில்லியன் டாலராக3 (31,400 பில்லியன் டாலர், அதாவது, 25,12,00,000 கோடி ரூபாய்) உயர்ந்து நிற்கிறது. அதில், ஜப்பானுக்கு அடுத்தபடியாகச் சீனாவிடம் அமெரிக்கா 980 பில்லியன் டாலர் (78,40,000 கோடி ரூபாய்) கடன்பட்டிருக்கிறது.4

இந்த அளவுக்குப் பணமும், பொருளும், மதிப்பும் சேர்ந்ததும், இந்தியாவும் தன்னைப்போல அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ந்துவருவது சீனாவின் கண்ணை உறுத்தியது. அதனால் மெல்லமெல்ல இந்தியாவுக்கும் மலிவு விலையில் பொருள்களைத் தயாரித்து அனுப்பும் தொழிற்கூடமாக மாறத் தொடங்கியது. சான்றாக, இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் கடவுளர் உருவச் சிலைகளும் சீனாவில்தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன. இவைகளின் கலைநுணுக்கம் நம்மை அயரச் செய்யும்.

ஒருபக்கம் இப்படி இந்தியாவுடன் வணிகத் தொடர்பு வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் அதற்குத் தீராத தொல்லைகொடுக்கவும் தீர்மானித்துத் செயல்படத் தொடங்கியது.

அதற்கு இந்திய-பாகிஸ்தான் பிணக்கு, அதன் 1965ல் நிகழ்ந்த போர் உதவியது.

அந்தப் போரில், முதலில் பாகிஸ்தானின் கை ஓங்கினாலும், இந்தியா காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட முக்கியமான யூரி-பூஞ்ச்சுடன் ,கோழிக்கழுத்து என்று முக்கியமான பகுதியையும் மீட்டெடுத்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்ட பாட்டன் டாங்க்குகளையும், சேபர் ஜெட் விமானங்களையும் தனது நாட் என்ற சின்னஞ்சிறு விமானத்தால் வீழ்த்தியது. இச்சோகில் கால்வாய் மட்டும் கரைபுரண்டு ஓடாதிருந்தால், இந்திய இராணுவம் லாகூர் நகருக்குள்ளேயே நுழைந்திருக்கும்.

ரஷ்யாவின் (இப்பொழுதைய உஸ்பெக்கிஸ்தான்) தாஷ்கண்ட் நகரில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் மர்மமான முறையில் உயிர்நீத்தார்.

அவருக்குப் பின் பிரதமரான இந்திரா காந்தி, பாகிஸ்தானின் தொல்லையைச் சமாளிக்க – அதற்கு உதவிசெய்ய அமெரிக்காவும், இரகசிய ஆலோசனைக்குச் சீனாவும் உதவும்போது — தனித்துச் செயல்படுவதில் பயனில்லை என்று உணர்ந்து, ஆகஸ்ட் 1971ல் ரஷ்யாவுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நட்பு ஒப்பந்தம் செய்துகொண்டார்.5 அதனால் அமெரிக்கா மேலும் பாகிஸ்தான் பக்கம் நகர்ந்தது. இந்திய-ரஷ்ய நட்பு பெரிதாக வளர்ந்தது.

‘மத்தளத்துக்கு இருபக்கமும் இடி’யென்றால், மூன்று பக்கமும் இடியாக, இந்தியாவுக்குப் பாகிஸ்தான் மேற்கிலும் கிழக்கிலும், சீனா வடக்கிலும் அமைந்து தொல்லை கொடுத்தன. தனது இராணுவ வலிமையைப் பெருக்கினால்தான் இந்த மூன்று இடிகளையும் தாங்க இயலும் என்று தீர்மானித்த இந்தியா ரஷ்யாவிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவும், ரஷ்ய விமானங்களை இந்தியாவில் தயாரிக்கவும் தொடங்கியது.

இச்சமயத்தில்தான் மூன்றாம் இந்திய-பாகிஸ்தான் போர் 1971ல் தொடங்கியது. தனக்கு இருபக்க இடியை இடையறாது தந்துவந்த பாகிஸ்தானை இருநாடுகளாகப் பிரித்து, உலகத்திலேயே அதிகமான போர்க்கைதிகளையும் (90,000) மேற்கு எல்லையில் 5000 சதுர கி.மீ நிலப்பரப்பையும் பிடித்து,6 பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜோர்டான், துருக்கி, ஈரான், இலங்கை உதவிக்கு வந்தும், ரஷ்யாவின் உதவியுடன் அதை முறியடித்த பெருமையையும் ஈட்டியது.

ரஷ்யாவின் கட்டாயத்தினால் சீனா வடக்கிலிருந்து அப்போது தொல்லை கொடுக்காமல் அமைதிகாத்தது.

அதிலிருந்து இந்தியாவுக்கு போர்மூலம் தொல்லை கொடுக்க இயலாது என்ற உண்மையைப் பாகிஸ்தான் உணர்ந்தது. இந்தியாவைக் கட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால் தானும் அணு ஆயிதத்தைப் பெறவேண்டும் என்று தீர்மானித்துச் செயல்பட்டது. மாஜி பிரதமர் சுல்பிகார் அலி புட்டோதான் அதற்கு முக்கியமான காரணம். அவர் 1972ல் அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்த திட்டம், 1998ல் வெற்றியடைந்தது.

பாகிஸ்தான் மே, 1998ல் இருமுறை அணுகுண்டுச் சோதனைகள் செய்து உலக அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக ஆகியது7. இனி போர் வந்தால் இந்தியாவைத் தடுத்து நிறுத்தத் தன் அணுகுண்டு உதவும் (mutually assured destruction) என்று இறுமாப்புற்றது. அத்துடன் முதலில் அணுகுண்டை உபயோகிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கவும் மறுத்துவிட்டது.

அதுவரை பாகிஸ்தானுக்கு நிபந்தனையின்றி உதவிவந்த அமெரிக்கா – அதனிடமிருந்து ‘வாங்கிய தளவாடங்களைத் தற்காப்புக்குமட்டுமே கையாளுவோம்,’ என்ற பொய்யான உறுதிமொழியை நம்பிவந்த அமெரிக்கா – பாகிஸ்தானைப் பற்றிய தனது முடிவை மாற்றிகொண்டது. அதற்குத் தன் வலிமைவாய்ந்த எஃப்-16 விமானங்களை வழங்குவதையும் நிறுத்திவைத்தது.

முதன்முதலாக அதன் கனிந்த பார்வை இந்தியா பக்கம் திரும்பியது.

ரஷ்யா கிளாஸ்நோஸ்ட் செய்து துண்டுதுண்டாகி அதன் பழம்பெருமையை இழந்ததும், சீனா மெல்ல மெல்ல ரஷ்யாவின் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்ததும், பாகிஸ்தானுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆயுத உதவி செய்ய ஆரம்பித்ததும், பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தானின் தாலிபானை அரவணைத்ததும் மற்ற காரணங்களாக அமைந்தன.

அத்துடன், ஒய்2கே, இந்தியாவை மென்பொருள் பூதமாக வளர்த்தது. இந்தியா வல்லரசுகள் வரிசையில் இடம்பெறும் என்று உலக நாடுகள் சோதிடம் கூறின. அதன் பொருளாதார நிலையும் உயரத் தொடங்கியது. இந்திய-அமெரிக்க உறவும் மெல்லமெல்ல வலுப்பட்டது.

இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய அளவில் வேலை ஒப்பந்தங்களைப் பெற்றன. அமெரிக்காவின் இந்திய வெளியுறவுச் செயல்பாட்டிலும் கணிசமான மாறுதல் ஏற்பட்டது.

இச்சமயத்தில்தான் சீனாவின் அதிபராச் சி-க்ஷின்-பிங் பதவியேற்றார். ஆக்டபஸ்போல சீனாவின் கட்டுப்பாட்டை உலகெங்கும் பரப்ப விரும்பினார்.

அதற்கு நில-நீர்த் தடங்கள் மிகவும் முக்கியம் என உணர்ந்த சீனா, அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகத் தொடங்கியது.

இலங்கைக்கு மிக அதிக அளவில் கடனைக் கொடுத்து, அக்கடனைக் குறிப்பிட்ட சமயத்தில் திருப்பாவிடில் இலங்கையில் அதன் துறைமுகத்தில் தனக்கு ஏகபோகச் செயல்பாட்டு உரிமையை வழங்கவேண்டும் என்று ஒப்பந்தமிட்டது. அதன்படியே நடந்ததால் இலங்கையின் ஹம்பன்தோட்டத் துறைமுகம் 99 ஆண்டுகள் சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்துசேர்ந்தது.1

இதுதான் சீனாவின் முத்து மாலையின் ஒரு முத்தாகும். இந்தியாவின் கழுத்தில் சுருக்குப் போட்டு, அதன் மூலம் இந்தியாவின் கடற்படை மேலாண்மையையும் இந்து மாக்கடலின் கடல்வழியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து, அதை நீர்-நிலத் தடங்களில் செயலிழக்கச் செய்வது அதன் நெடுநாள் திட்டமாகும்.2

சீனா அத்துடன் நிற்கவில்லை. இலங்கையில் ஒரு துறைமுகம் என்றால், பாகிஸ்தானில் இன்னொரு துறைமுகத்தையும் தன் திட்டத்திற்குள் கொணரவேண்டி, பாகிஸ்தானில் க்வாதர் என்ற இடத்தில் துறைமுகம் அமைக்க உதவிவருகிறது.3

க்வாதர் துறைமுகம் இன்னொரு விதத்திலும் சீனாவுக்கு முக்கியமானது. இந்தத் துறைமுகத்திற்கு காரகோரம் சாலை என்றொரு சாலையும் சீனாவிலிருந்து போடப்பட்டு வருகிறது. அத்துடன் இரண்டு பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு எண்ணெய் சுத்தரிப்பு ஆலையும் நிறுவப்பட இருக்கிறது. இந்தியப் பெருங்கடல் வழி தடைப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணையைச் சுத்தப்படுத்தி அங்கிருந்து நிலவழியாக சீனாவுக்குக் கொண்டுசெல்ல இத்துறைமுகம் பெரிதும் உதவும்.

க்வாதர் துறைமுகம் சீனாவுக்குப் பாகிஸ்தானிய அரசால் நாற்பது ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இத்துடன் சீனாவின் குன்-மிங்கிலிருந்து பர்மாவின் (மியன்மார்) கியாக்ப்யுவுக்கும் (Kyaukphyu) சாலை அமைக்கப் படுகிறது.

நிலவழியிலும், நீர்வழியிலும் இவ்வாறாகச் சீனா இந்தியாவின் கழுத்தை இறுக்க முத்துக் கயிற்றை அமைத்துள்ளது. இங்கு முத்துகள் துறைமுகங்கள்; கயிறு நிலவழி, நீர்வழிப் பாதைகள். இதுதான் சீனாவின் புவிசார் அரசியல் சூழ்ச்சி (geopolitica gambit).4

இதற்கும் மேலாகச் சீனா இயற்கையையும் ஓர் ஆயுதமாகச் செயல்படுத்த முனைந்து, செயலாற்றி வருகிறது. இந்தியாவுக்குத் திபெத்திலிருந்து வரும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்காகப் பத்தே ஆண்டுகளில் பதினைந்து மைல் (24 கி.மீ) தூரத்திற்குள்ளாக, இந்தியாவின் அருணாசல் பிரதேஷ் எல்லைக்கு அருகில், மூன்று பெரும் அணைகளைக் கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் நூறுகோடி கனமீட்டர் நீரை – சுமாராக நாற்பது மேட்டூர் அணைகளின் கொள்ளளவைத் தேக்கிவைக்க முடியும். இதுபோல இன்னும் மூன்று அணைகளைத் திபெத்தின் நியாங் ஆற்றின் குறுக்கே கட்டிவருவதும் தெரிகிறது.1

ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது நீர்ப்பாசனத்திற்கும், மின்சார உற்பத்திக்கும்தானே, பல நாடுகளும் அதைத்தானே செய்துவருகின்றன என்றுதான் நினைக்கத் தோன்றும்.

ஆனால், பிரம்மபுத்திராவின் நீரோட்டம்தான் பங்களாதேஷை வங்கக் கடலில் சீற்றத்திலிருந்து காப்பாற்றி வருகிறது. அதன் நீர் தடுக்கப்பட்டால், பெரும்பாலும் கடலிலிருந்து சில அடிகள் உயரத்திலேயே உள்ள பங்களாதேஷின் உள்ளே கடல்நீர் உட்புகுந்து, அந்த நாட்டின் பெரும்பகுதியை முழுகடிக்கவும், அந்த நாட்டின் நிலத்தையே உவர்நிலம் ஆக்கிப் பெரும் பஞ்சத்தையும் உண்டுபண்ண இயலும்.

அதுமட்டுமல்ல. அணைகளில் தேக்கிவைக்கப்பட்ட நீரை ஒரேயடியாகத் திறந்துவிட்டு, அதுவும் மாரிக்காலத்தில் கடும் மழையின்போது திறந்துவிட்டு, இந்தியாவின் அருணாசல் பிரதேஷ்,அஸ்ஸாம் மானிலங்களையும், பங்களாதேஷையும் வெள்ளத்தில் முழுகடிக்கவோ, அதன் பயிர்களை அறுவடைகாலத்தில் அழித்தொழிக்கவோ, இயலும், ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் போக்குவரத்தை நிறுத்தி, இந்தியாவின் வடகிழக்கு மானிலங்களின் மீது படையெடுத்து, இராணுவம் வராதபடி தடுக்கச் செய்யவும் இயலும்.2

இத்தோடு, அமெரிக்காவுக்கும் சீனா டைவான் தீவுக்கு உரிமைகொண்டாடி எப்படித் தொல்லை கொடுக்கிறது என்பதும் முன் பகுதியில் விளக்கப்பட்டது.

இதை இந்தியாவும் அமெரிக்காவும், ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் நன்கு உணர்ந்திருக்கின்றன. ஆகவே, இதைத் தடுக்க, அவை ஒன்றுசேர்ந்து போர் விளையாட்டுகள் நடத்தி வருகின்றன. இதன் முதல் கட்டம் வங்கக் கடலில் நடந்தது.

இரண்டாம் கட்டத்தில் அரபிக் கடலில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் விக்கிரமாதியாவும், அமெரிக்கக் கடற்படையின் நிமிட்ஸ் குழுவும் கலந்துகொண்டதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அறிக்கை தெரிவித்தது.3

சென்ற நூற்றாண்டில் ஜப்பானிடம் தோல்வியுற்று டைவானை இழந்ததை இன்னும் சீனா மறக்கவில்லை. ஆகவே, அது ஜப்பானுக்கு அருகிலுள்ள தன் கடற்படை, விமானப் படைத் தளங்களைப் பெரிதாக்கியது. கிழக்குச் சீனக் கடலிலுள்ள மனித நடமாட்டமில்லாத, ஜப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள செங்காக்கு தீவுகளையும் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமைதியை விரும்பி, இராணுவப் பெருக்கம் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த ஜப்பானும், சீனாவின் ஆதிக்கப் போக்கைத் தடுக்கவேண்டித் தன் கடற்படையை வலுப்படுத்த அமெரிக்கவுடன் கைகோர்த்து இராணுவ உறவைப் பலப்படுத்தப் போவதாக அறிவித்தது.4 அத்துடன் தன் இராணுவச் செலவையும் இருமடங்காக்கியுள்ளது.

சீனா விண்வெளியிலும் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது. இப்படியே போனால் சீனா விரைவிலேயே சந்திரனையும் தனதாக உரிமை கொண்டாடிவிடும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் தலைவர் பில் நெல்சன் தெரிவித்தார். தென் சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல் அவரை அப்படிச் சொல்லவைத்தது. மேலும் சீனா விண்வெளித் துறையில் மாபெரும் வெற்றியையும், முன்னேற்றத்தையும் அடைத்துள்ளதாகவும் கூறினார்.5

இதையெல்லாம் பார்க்கும்போது, சீனா உலகத்தையே தன் உள்ளங்கைக்குள் கொணரத் திட்டம் தீட்டி நன்கு செயல்படுகின்றது என்பது தெளிவாகிறது. எந்த ரஷ்யாவின் வலிமைக்குத் தலைசாய்த்து 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் அமைதி காத்ததோ, அந்த ரஷ்யா இப்பொழுது சீனாவை அடக்க இயலாத நிலையில்தான் உள்ளது என்பதைக் கடந்த உக்ரேன் போர் நமக்குக் காட்டுகிறது.

எனவே, ரஷ்யாவை நம்பி இந்தியா வாளாவிருக்க இயலாது என்றுதான் அது தன்னுடைய இராணுவ பலத்தைப் பெருக்கிவருவதுடன், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து தன் பாதுகாப்பைப் பலப்படுத்திவருகிறது.

சீனக் கரடி கட்டுப்பாடின்றிச் செயலாற்றுவதை இந்தியப் புலியும், அமெரிக்கக் கழுகும், ஆஸ்திரேயக் காங்கருவும், ஜப்பானிய மகாக் பனிக்குரங்கும் எதிர்காலத்தில் தடுத்து நிறுத்தும் என்று நம்புவோம்.

*** *** ***

1 China’s dams in Tibet may pose threat to India’s water supply,” by Col. Vinayak Bhat (Rtd) and Abishek Bhalia, India Today, Aug 9, 2020, China’s dams in Tibet may pose threat to India’s water supply | Satellite images explain (indiatoday.in) 

2 “How China is conspiring to use Brahmaputra river as weapon against India?” by Manish Shukla, Zee Media, Feb 11, 2021, https://www.dnaindia.com/india/report-how-china-is-conspiring-to-use-brahmaputra-river-as-a-weapon-against-india-2874550

3 “Australia, US, Japan and India join forces to counter China,” by Tarric Brooker, Sep 13, 2020, news.com.au, https://www.news.com.au/finance/economy/australian-economy/australia-us-japan-and-india-join-forces-to-counter-china/news-story/03b2a3fd09579f8c83e4912ab5191421

4 “US and Japan to strengthen military relationship with upgraded Marine unit in attempt to deter China,” by Oren Libermann, Haley Britzky, Phil Mattingly and Brad Lendon, CNN, Jan 11, 2023, https://www.cnn.com/2023/01/11/politics/us-japan-marine-unit-china/index.html

5 “NASA chief says China could claim the moon as its own territory if it beats the Us to the lunar surface,” by Kate Duffy, Yahoo News, Jan 2, 2023, https://www.yahoo.com/news/nasa-chief-says-china-could-105234428.html

1 “How China got Sri Lanka to give up a port,” by Maria Abi-Habib, Toronto Star, Jun 26, 2018, https://www.thestar.com/news/world/2018/06/26/how-china-got-sri-lanka-to-give-up-a-port.html

2 “Geopolitics of Chinese Foreign Policy,”by Ashay Abbhi , E-International Relations, Jul 26, 2020, https://www.e-ir.info/2015/07/26/string-of-pearls-india-and-the-geopolitics-of-chinese-foreign-policy/

3 Pakistan’s Gwadar Port: A New Naval Base in China’s String of Pearls in the Indo-Pacific,” by Gurmeet Kanwal, Center for Sttragtegic and International Studies, Apr 2, 2018, https://www.csis.org/analysis/pakistans-gwadar-port-new-naval-base-chinas-string-pearls-indo-pacific

4 China’s Geopolitical Gambit in Gwadar,” by Isaac Kardon, Asia Despatches, Oct 20, 2020, https://www.wilsoncenter.org/blog-post/chinas-geopolitical-gambit-gwadar

1 “How a Rising China Has Remade Global Politics,” World Politic Review, Jan 13, 2023

2 “China as the World’s Creditor and the United States as the World’s Debtor,” by Shailendra D. Sharma, Open Edition Journals, https://doi.org/10.4000/chinaperspectives.5346

3 “The US will likely reach its debt limit on Thursday,” by Zachary B. Wolf, CNN, Jan 18, 2033, https://www.cnn.com/2023/01/18/politics/us-debt-ceiling-what-matters/index.html

4 “How Much U.S. Debt Does China Own?” byu Michael J. Boyle, Investopedia, July 24, 2022, https://www.investopedia.com/articles/investing/080615/china-owns-us-debt-how-much.asp

5 “Ambassador Pankaj Saran’s visit to Chechnya Republic,” Embassy of India, https://indianembassy-moscow.gov.in/70-years-of-india-russia-relations-a-historic-milestone.php

6 “Indo-Pak War 1971: An Insider’s View of a Blundering Pakistan,” Financial Express, Dec 16, 2021, https://www.financialexpress.com/defence/indo-pak-war-1971-an-insiders-view-of-a-blundering-pakistan/2381353/

7 “On This Day: Pakistan becomes a nuclear power,”  The Express Tribune, May 28, 2021, https://tribune.com.pk/story/2302130/on-this-day-pakistan-becomes-a-nuclear-power

1 “Brief History Of India China Relations History Essay,” UKEssays, Jan 1, 2015, https://www.ukessays.com/essays/history/brief-history-of-india-china-relations-history-essay.php

2 “Bodh Gaya – The centre of the Buddhist world”, Pragyatha, https://pragyata.com/bodh-gaya-the-centre-of-the-buddhist-world/

3 “The Bodhi Tree Project”, by Dee Denver, Exploring the Intersections of Buddhism and Science, https://bodhitreeproject.org/2017-sri-lanka-stories/

4 “Who bring the Sri Maha Bodhi to Sri Lanka?” Curvesandchaos.com, July 19, 2022, https://www.curvesandchaos.com/who-bring-the-sri-maha-bodhi-to-sri-lanka/

5 “All About Jaya Sri Maha Bodhi, The Miracle Sacred Tree in Sri Lanka,” by Team Travel Sri Lanka, Jan 2, 2021, https://nexttravelsrilanka.com/sri-maha-bodhi/

6 ebid, “Brief History Of India China Relations History Essay”

7 ebid, “Brief History Of India China Relations History Essay”

8 “Historical Travellers to India”, Rajras, Oct 2, 2016, https://www.rajras.in/historical-travelers-india/

9 “Hiuen Tsang – Chinese – Foreign Accounts of ancient travellers – Ancient India History Notes,” by Amruta Patil, Prepp by Colledunia, Oct 14, 2022

10 “Contributions/role of Chinese Travellers of Ancient India,” Officers’ Pulse Free Learning Center, Dec. 12, 2021, https://officerspulse.com/discuss-the-contributions-role-of-chinese-travellers-in-ancient-india/

11 “Stone inscription with Tamil script found in China,” by Padmini Sivarajah, The Times of India, July 2, 20219 https://timesofindia.indiatimes.com/city/chennai/stone-inscription-with-tamil-script-found-in-china/articleshow/70043737.cms

12 “Kashi was historically a focus for higher education and studies, as well as religious and spiritual understanding. A trip to Kashi is a trip to partake from that wisdom,” in “The Significance of a Kashi Yatra,” by Vidhi Maingi Gaur, Weddingwire.in, Mar 10, 2019, https://www.weddingwire.in/wedding-tips/kashi-yatra–c2857

13 “Reason behind Kashi Yatra in Indian Wedding,” Hinduism, https://hinduism.stackexchange.com/questions/15848/reason-behind-kashi-yatra-in-indian-wedding

14 “The Dalai Lama: Selection & Role in Tibetan Buddhism”, by Rashid Nuzha, Study.com, https://study.com/learn/lesson/dalai-lama-selection-role-tibetan-buddhism.html

15 “Is Tibet a Part of China?” by Kallie Szczenpanski, ThoughtCo, May 31, 2018, https://www.thoughtco.com/tibet-and-china-history-195217

16 “Why did China Annex Tibet?” History Stack Exchange, 2016, https://history.stackexchange.com/questions/32470/why-did-china-annex-tibet

17 “The Legal Status of Tibet”, by Walt van Pragg & Michael C. van, Cultural Survival, Feb 22, 2010, https://www.culturalsurvival.org/publications/cultural-survival-quarterly/legal-status-tibet

18 “..for a brief period in the mid-1950s, China and India came together in the spirit of “Hindi Chini Bhai Bhai” (India and China are brothers),” in “The Rise and Fall of Hindi Chini Bhai Bhai”, by Sergey Radchenko, Foreign Policy, Sep 18, 2014, https://foreignpolicy.com/2014/09/18/the-rise-and-fall-of-hindi-chini-bhai-bhai/

19 “The Years of Hindi-Chini Bhai-Bhai,” by Claude Arpi, Indian Defence Review, July 3, 2015, http://www.indiandefencereview.com/spotlights/the-years-of-hindi-chini-bhai-bhai/

20 “Dalai Lama Gets Asylum In India; Harried In Flight,” The New York Times archive, April 4, 1959, https://archive.nytimes.com/www.nytimes.com/library/world/asia/040459atibet-special.html

21 “McMahon Line – international boundaruy, China-India,” Britannica, https://www.britannica.com/place/Tibet

22 “Sino-India War 1962,” Brittanica, https://www.britannica.com/topic/Sino-Indian-War

23 “Indo-China War 1962,” History Pak.com, https://historypak.com/indo-china-war-1962/

24 “Non-Aligned Movement International Organization,” by Andre Munro, Britannica, https://www.britannica.com/topic/Non-Aligned-Movement

25 “Pokhran I: India’s first nuclear bomb test was carrout out underground and code named ‘Smiling Buddha’,” India Today, May 18, 2018, https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/pokharan-i-first-nuclear-atomic-bomb-test-of-india-324141-2016-05-18

3 Replies to “இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.