மருந்து

பிள்ளைங்களுக்கு ஜுரம் வந்தால் வீடே அசையாமல் நின்று விடும். ரெண்டு நாளாச்சு, விட்டு விட்டு வந்துட்டே இருக்கிறது. மூத்தவன் பள்ளியிலிருந்து 11  மணிவாக்கில் கூப்பிட்டு போகச் சொல்லி போன் வந்தது. அவள்தான் விரைந்து சென்று கூப்பிட்டு வந்தாள். அவனுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம். சதா மீட்டிங். ஏதோ போன் வந்தது, கிளம்பிப் போறா என்பது வரைக்கும் தான் அவனுக்குத் தெரியும். மீட்டிங் முடிஞ்சு ஹாலுக்கு வந்து பார்க்கையில் மூத்தவன் சோபாவில் படுத்திருந்தான்.

வழக்கமான மூனு மணிக்கு சின்னதையும் கூப்பிட்டு வந்தாள். இவளுக்கும் லேசா சுடுது என்று வேலையில் இருப்பவனுக்கு கேக்குற மாதிரி சத்தத்தை உயர்த்திச் சொன்னாள்.   டைலனால், ஐபூஃபுரோபைன் தான் கை மருந்து. ஆறு மணிநேரத்துக்கு ஒரு முறை மாத்தி மாத்தி கொடுக்கனும்.  

சாயங்காலம் கடைக்கு போய் டைலனாலையும் ஒயிட் பிரட்டையும் வாங்கிவரச் சொன்னாள். டைலனால் காலியானால் நடு ராத்திரி கடைக்கு அலைய முடியாது. கடைக்கு சென்றவன் பன்னும் சேர்த்தி வாங்கி வந்தான். 

குழந்தைகளை மாஸ்டர் பெட்ரூமில் படுக்க வைத்தார்கள். ஒரு ஓரத்தில் பெரியது. மத்தியில் சிறியது. இந்த ஓரத்தில் அம்மா. அப்பா பக்கத்து அறைக்கு வெளியேற்றப்பட்டாகி விட்டது.  குழந்தைகளின் அறையிலிருந்து பெட்ஷீட், தலையணை எடுத்துக்கொண்டார்கள். 

மீட்டிங் எல்லாம் முடிந்த பிறகு சாயங்காலம் ஏறக்குறைய ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தான். தூங்கும் முன் ராசேந்திர சோழனின் சாவி கதையை  வாசித்தான்.  அதன் விமர்சனங்களை நெட்டில் தேடி வாசித்து தமது கருத்தோட ஒத்திருக்கிறதா என்று ஒரு அலசல். அப்புறம் தான் கண்ணயர்ந்தான். பிள்ளைகள் பள்ளிக்குப் போகாததால் காலையில் அரக்கப் பரக்க ஆறு மணிக்கு எழுந்திருக்கத் தேவையில்லை. அலாரத்தை எல்லாம் அணைத்தாகிவிட்டது. 

பக்கத்து அறையில் அவள் மணிக்கணக்கு பார்த்து மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். பத்து மணிக்கு ஒரு குழந்தைக்கு கொடுத்திருந்தாள். பீடியாலைட் கரைத்து ஊற்றி வைத்திருந்தாள். அதை மட்டும் பிள்ளைகள் விரும்பிக் குடித்தன. அவர்கள் தூங்கிய பின் லேப்டாப்பில் ஏதோதோ பார்த்துக் கொண்டிருந்து பன்னிரண்டு மணி வாக்கில் அவர்களை தொட்டுப் பார்த்துவிட்டு  தூங்கினாள். இரண்டு மணிக்கு பெரிசுக்கு அதிக ஜுரம். நூற்றிரெண்டு. மருந்தும் கொடுத்து கொஞ்சம் நேரம் வரை காத்திருந்து காய்ச்சல் குறைந்த பின் மூனு மணி வாக்கில் மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். 

மறுநாள் பகலிலும் மூவரும் இதைத் தான் தொடர்ந்தனர்.காய்ச்சல், மருந்து, தூக்கம். அன்று வழக்கத்தை விட அவனுக்கு அலுவலக வேலை அதிகம். மேல்தளத்தில் ஒரு அறையில் தான் முழு நாளும் இருந்தான். இரவு பத்து மணி வரை வேலை செய்தான். டீ மற்றும் சாப்பாடு நேரத்தில் மட்டும் கீழ் தளத்தில் வந்து குழந்தைகளைப் பார்த்தான். சாயங்கால டீக்கு வரும்போது “காய்ச்சல் நின்ன பாடில்ல.ரெண்டாவது நாளாச்சு. ஹாஸ்பிட்டல் போவோமா” ன்னு கேட்டாள். என்ன நினைத்தாளோ, அவளே “இன்னைக்கு நைட்டும் வந்துச்சுனா நாளைக்கு காலைல போவோம்” என்று முடித்தாள். 

முந்தைய நாள் நடந்த அதே காட்சிகள் அன்றும் நடந்தேறியது. நள்ளிரவுக் காய்ச்சல் மட்டும் வரவில்லை. ஆனாலும் அவளுக்கு தூக்கம் கெட்டிருந்தது. கொட்ட கொட்ட முழித்திருந்து காய்ச்சல் இருக்கா இல்லயா என்று மணிக்கொரு முறை பார்த்துக்கொண்டிருந்தாள். 

காலையில் ஒன்பது மணியாகியும் படுக்கையில் இருந்து அவன் எழும்பவில்லை. வாட்ஸப், பேஸ்புக் என ஒரு ரவுண்டு முடித்தே எழுந்தான். மெது மெதுவாக பக்கத்து அறையில் இருந்து ஒவ்வொருவராக எழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. 

காலையில் குழந்தைகளுக்கு பிரட் போட்டு கொடுத்துவிட்டு டீ  குடிக்க அமரும் போது தான் சிறிசு சோபாவில் தளர்ந்ததைப் பார்த்தாள். தொட்டுப் பார்த்த பின் காய்ச்சல் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக உணர்ந்தாள். அவனையும் தொட்டுப் பார்த்தாள். 

“இவனுக்கு குளுந்து கிடக்குது தான் . ஆனா இவனையும் சேத்து பாத்துடலாம்” 

 உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்து இரண்டு பேருக்கும் அப்பாயின்மெண்ட் வாங்கினாள். நல்ல நேரம் உடனடியாக அப்பாயின்மெண்ட் கிடைத்தது. அவனும் வேலை இன்று அதிகமில்லை என்று அவளுடன் கிளம்ப ஆரம்பித்தான். 

வெயிட்டிங் ருமில் இந்த நால்வர் மட்டும் இருந்தனர். ஒவ்வொரு மாகாணத்திற்கு ஒரு படம் என நிறைய படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதில் வரைபடத்துடன் அந்த மாநிலத்தின் சிறப்பும் எழுதப்பட்டிருந்தது. ஐம்பதும் இருக்கிறதா என்று ஒரு முறை அறை முழுவதும் இரு குழந்தைகளும் உலாவினர். ஜார்ஜியாவைக் கண்டதும் “அவர் ஸ்டேட்” என்று ஒரு உற்சாகம். 

பரிசோதனை அறைக்கு சீக்கிரமாகவே போயாகிவிட்டது. அங்கு கரடி ஒவியம் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. நாலு பேருடைய உள்ளங்கைகளை பெயிண்டால் அச்செடுத்து கரடியின் கால்களாக மாற்றியிருந்தனர். இரண்டு பெரிய கை, இரண்டு சிறிய கை. Kate, Avery, Robert, Kelly என்று ஒவ்வொரு பாதத்திலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. சிறுசு அதனுடைய கையை ஒவ்வொரு கரடியின் காலிலும் பொருத்திப் பார்த்தது. படம் கழன்று விழுவது போன்று ஸ்திரமற்று இருந்தது. உடனே கையை எடுத்து விட்டு அம்மாவின் மடிக்கு ஓடிவிட்டாள். 

 நர்ஸ் வந்து குசலம் விசாரித்து  டெஸ்ட் ஒன்றைப் பரிந்துரைத்தது. 

“யாரு பர்ஸ்ட் வர்ரா” 

சிறுசு வேகமாக அண்ணாவைக் காண்பித்தது. 

அண்ணாவின் மூக்கிற்குள் பஞ்சை வைத்து ஏதோ நோண்டி எடுத்ததைப் பார்த்து விட்டு “எனக்கு வேண்டாம்மா” என்று கையை ஆட்டினாள்.

“வலிக்காது. கொஞ்சம் கூசும் அவ்ளோ தான். அம்மா மடியிலேயே இருந்துக்க.” 

 ” சுவீட் கேர்ள் * என்று பட்டமளித்துவிட்டு நர்ஸ் விடைபெற்றார். 

.  டாக்டர் வரும் வரை கண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் சுவரில் தொங்கவிட்டுளள படங்களையும் தகவல்களையும் உலாவிக்கொண்டும் இருந்தது. 

சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி அறைக்குள் டாக்டர் விரைந்தார். 

“எப்ப இருந்து காய்ச்சல் இருக்குது”

“இவனுக்கு செவ்வாய்க்கிழமை பதினொரு மணிக்கு ஸ்கூல்ல இருந்து பிக்கப் பண்ணச் சொல்லி போன் வந்துது. இவளுக்கு மதியம் மூணு மணி வாக்கில வீட்டுக்கு வந்தப்புறம் ” 

” வாமிட், வயித்தால ஏதாவது போகுதா’

” இல்லை “

“இருமல்”

” இவன் கொஞ்சம் இருமுறான். அவளுக்கு ஒன்னும் இருக்க மாதிரி தெரியல” 

“டெஸ்ட் ரிசல்ட் ரெண்டு பேருக்கும் ஃப்ளு இருக்கதா சொல்லுது. இது வைரல் ஃபீவர். நீங்க டைலனால், மோர்ட்டின் கேட்டுதுனா அதையே கொடுக்கலாம். ரெண்டு பேருக்கும் சிம்டம் வந்து 48 மணி நேரம் இன்னும் ஆகல அதனால இவங்களுக்கு டாமிஃப்ளு கொடுக்க முடியும். இது சிம்டமை குறைக்கும். காய்ச்சல் இருக்குற பீரியடைக் குறைக்கும். நிறய ரிசர்ச் இதத் தான் சொல்லுது. “

அப்பா ” ஏதாவது சைட் எப்பக்ட் இருக்குமா? ” என்று முதல் கேள்வியை ஆரம்பித்தார். 

” எல்லா அண்டிவைரல் மருந்து மாதிரி இதுக்கும் சைட் எப்பக்ட் இருக்கும். “

” இந்த மாசத்துல ரெண்டாவது முறை ஃபீவர் இவனுக்கு. இத சாப்பிட்டா அடுத்த வாட்டி வரத இது தடுக்குமா. ” அம்மா தொடர்ந்தாள். டாக்டரின் கண்கள் இப்போது அம்மாவை நோக்கியது. 

” அதெல்லாம் தடுக்காது. கோவிட் மாதிரி தான். கோவிட் ரெண்டுவாட்டி வரலாம்ல. 48 மணி நேரம் கழித்து இந்த டோஸ் ஆரம்பிச்சா வேலை செய்யாது. இன்னும் 48 மணி நேரம் ஆகாததால் இந்த மருந்துக்கு எலிஜிபுல் தான். உங்க விருப்பம் தான். நீங்க வேணும்னு சொன்னீங்கனா நான் எழுதித் தர முடியும் “

  அவள் பதில் ஏதும் சொல்வதற்கு முன் அண்ணலை நோக்கினாள். அவனும்  நோக்கினான். வார்த்தைகள் ஏதும் பரிமாறப்படவில்லை. 

அவன் முடிவு செய்த தீர்க்கத்துடன் ” நீங்க எழுதித் தாங்க. நாங்க யோசித்து தேவைப்பட்டா வாங்கிப்போம். ” 

 செக் அவுட் பண்ணி முடிச்சுட்டு வெளியே வந்து காரில் ஏறியவுடன் “நீ என்ன சொல்ற. இந்த மருந்து கொடுக்கலாமா”  என ஆரம்பித்தாள். 

“. கூகுள் பண்ணி பார்க்கலாம். நம்ம ஆட்களுக்கு போன் பண்ணி கேட்கலாம்” 

“அவனுக்கு மட்டுமாவது கொடுக்கலாம்னு பாக்குறேன் “

” புஷ்பா வீட்டுல வைரல் காச்சல் வந்ததுலா. அப்ப இந்த மருந்து கொடுத்தாங்களா” 

அவள் உடனே ஆஸ்டினுக்கு போன் செய்ய ஆரம்பித்தாள். அதற்குள் இவனுக்கு இந்தியாவிலிருந்து போன். பழைய ஆபீஸ் கூட்டாளி. 

” யோவ் என்னய்யா பண்றீரு”

” போய்ட்டு இருக்கு. உமக்கு புது ஆபீஸ் எப்படி போகுது. “

” வேலை அதிகம் தான். “

என்று ஆரம்பித்து குடும்ப நலன், நட்பு வட்டாரம், அலுவலக அரசியல் என நீண்டது.  வண்டி மெக்கினிஸ் ஃபெர்ரி ரோட்டில் விரைந்து கொண்டிருந்தது. ப்ளு டூத்தில் பேசியதால் வண்டியில் எல்லாருக்கும் அப்பா பேசுவதுதான் கார் என்டர்டெயின்மெண்ட். கால் மணி நேரத்தில் வீடு வந்துவிடும். வழியில் தான் வழக்கமாக செல்லும் மருந்துக் கடை இருக்கிறது. வழியில் என்பதை விட வீட்டிற்கு மிக அருகில் என்று சொல்லலாம். 

பேச்சு சுவராசியத்திலோ என்னவோ வண்டியை வழிநில்லா பேருந்தாய் மாற்றி நேரே வீட்டு கராஜில் வந்து நிறுத்தினான். சரியான நேரத்தில் போன் உரையாடலும் முடிந்தது. 

“சாரிப்பா நிக்காம வந்துட்டேன். புஷ்பாட்ட கேட்டீயா” 

“அவங்க குடுக்கலீயாம்” 

“விக்னேஷ் வீட்டுப் புள்ளைங்களுக்கு வந்ததே.” 

“ஆமால. அங்கயும் கேக்கலாமே”. 

டிரைவர் சீட்டில் இருந்தபடியே அவன் போனை தடவிக் கொண்டிருக்கையில் எல்லாரும் இறங்கி முடித்தார்கள். 

“வாமிட், டயரியா ன்னு தான் போட்டுருக்கு. வேற பெரிசா சைட் எப்பக்ட் ஒன்னும் போடல” சொல்லியபடியே வீட்டுக்குள் நுழைந்தான்.  குழந்தைகள் வேகமாக ஐபேடை எடுத்தன. அவள் விக்னேஷ் வீட்டுக்கு பேச முயற்சிக்கையில் சாக்ஸ் கூட கழட்டாமல் நேரே மேலேறிக் கொண்டிருந்தான்.  மேக்புக்கில் லாகின் பண்ணி நடந்து கொண்டிருந்த மீட்டிங்கில் ஐக்கியமானான். 

சிறிது நேரத்தில் கீழிருந்து வந்த குரல் மீட்டிங் சத்தத்தில் அரைகுறையாக கேட்டது. “ஏங்க மீட்டிங்கா” என்று கேட்ட மாதிரி இருந்தது. மியூட் பட்டனை இன்னொரு முறை சரிபாத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் அறைக்கு வெளியே வந்தான். 

ஹை சீலீங் வீடு. நடைபாதையை ஒட்டிய சுவரில் கை வைத்துக் கொண்டு கீழே பார்க்கிறான். அவள் கழுத்தை வளைத்து அன்னாந்து பார்க்கிறாள். 

“ஆமாம்பா. என்ன?” 

“என்ன பண்றது. மெடிசின் வாங்கனுமா எப்படி?” 

“விக்னேஷ் வீட்ல என்ன சொன்னாங்க” 

“நித்யா போறப்ப மூனு நாளாயிடுச்சாம். அதனால மருந்து கொடுக்கலியாம். கொடுத்தா வாங்கிக்கங்கன்னு சொல்லிச்சு. பசங்களுக்கு ராத்திரி ராத்திரி காச்சல் வரும். சோந்து போயிருவாங்கன்னுச்சு” 

“அம்மா, எனக்கு மருந்து வேண்டாம். நான் குடிக்க மாட்டேன் ” என்று அவனும் நுழைந்தான். 

“காய்கறி சாப்பிடு ன்னா சாப்பிடறது கிடையாது. காச்சல் வந்தா படுத்துக்கறது. சுத்தமா உடம்புல தெம்பே கிடையாது. இந்த லட்சணத்துல மருந்து வேண்டாம்னு சொல்லு.  மருந்தெல்லாம் கண்டிப்பா சாப்பிடனும் “

*ரெண்டு நிமிஷம் பொறு. மீட்டிங் முடியப் போது.” 

அலுவலக அறைக்குள் மீண்டும் உள்ளே வேகமாக நுழைந்தான். புதிதாக சேர்ந்த கம்பெனி. போன கம்பெனி வேலைக்கும் இந்த கம்பெனிக்கும் சம்பந்தம் இருந்தாலும் இங்க பார்க்குறது அவனுக்கு ரொம்ப வித்தியாசமான வேலை. ஒன்னும் அவனுக்கு இன்னும் தட்டுப்படல. பாதிக்கு மேல மீட்டிங்ல புரியாம அங்க பேசுறத காதுல போட்டும் போடாமலும் சைட்ல வேற வேலை பாத்துட்டே தான் கேப்பான். மீட்டிங் முடியற நேரத்துல யாராவது வந்து நான் என்ன சொல்லி முடிக்கிறேனான்னு சொல்ல ஆரம்பிச்சு கால் மணி நேரம் முழங்குவாங்க. அதுக்கு இன்னொருத்தர் பதில் சொல்ல ஆரம்பிச்சு நீண்டு கிட்டே இருக்கும். 

அன்னைக்கும் அப்படித்தான் ஆயிடுச்சு. ஐந்து நிமிடம் கடந்திருந்தது. கார் சாவி, பர்ஸ் எடுக்கிற சத்தம், கதவு திறக்கிற என சத்தம் கீழ் தளத்தில் இருந்து கேட்டு சில நொடிகள் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் இருந்தான். சரியாக மீட்டிங்கும் முடிய, கம்ப்யூட்டரை மூடி வைத்து விட்டு எட்டிக் கீழேபார்த்துக் கொண்டே விரைந்தான்.

“பாப்பா, அம்மா எங்க” 

” இப்ப தான் கார்ல கிளம்பறா” 

“அம்மாவ நிப்பாட்டு, அப்பா வராங்கன்னு சொல்லு” 

அதிசயமாக ஐபேடில் இருந்தவளுக்கு காது கேட்டது. அசையவும் செய்தாள். ஓடி கராஜில் கிளம்பிய காரை நிறுத்தவும் இவன் வந்து சேரவும் சரியாக இருந்தது. 

“என்னமா மருந்து வாங்க கிளம்பிட்டியா *

” ஆமா. வாங்கிட்டு வந்துடறேன்” 

“கோவமா என்ன?” 

“இல்லப்பா, நீ பிள்ளைங்களைப் பாத்துக்க “

சிறுசு லிவ்விங் ரூம் சோபா. பெருசு ரிசிவிங் ரூம் சோபா. ஆளாளுக்கொரு ஐபேடில் முங்கியிருக்க, இவன் மேலே வந்து வேலை பார்க்க ஆரம்பித்தான். 

சில நிமிடங்களில் போன்” நீ பாதி நான் பாதி ” என ஒலித்தது. 

“என்னம்மா” 

“மருந்து முந்நூறு ரூபாயாம் “

” முந்நூறா. செம காஸ்ட்லி மா “

“எனக்கும் தெரிது. அதான் கூப்பிட்டேன் “

” வாங்கிட்டியா” 

“ஆர்டர் பண்ணிட்டேன். நம்ம இன்சூரன்ஸுக்கு இவ்வளவு ஆகுமாம். நூத்தி நாப்பது ரூபா ஆளுக்கு.  டேக்ஸ் சேத்து முந்நூறு கிட்ட வருது. இருவது நிமிஷம் கழிச்சு வரச் சொல்லி இருக்காங்க. வாங்கவா “

” டிரை பண்ணணும்னா வாங்கித் தான் ஆகனும்” 

” சரிப்பா. பிள்ளைங்க என்ன பண்றாங்க ” 

” டிவைஸ்” 

” அவனை ஒழுங்கா ஹோம்ஒர்க் பண்ணச் சொல்லு. தெம்பா இருக்கறப்ப ஃபுல்லா வீடியோ பாக்குறது. பிறவு ஹோம்ஒர்க் பண்ணச் சொன்னா, டயர்டா இருக்கேம்பா. நான் இருந்து வாங்கிட்டு வர்றேன்”

அவளும் வீடு வந்து சேர்ந்தாள். ஐலேண்டில் வாங்கின மருந்தை வைத்து குழந்தைகளை கூப்பிட்டாள்.  சிறுசு வந்து குடித்துவிட்டு சோபாவுக்கு ஓடி விட்டது. 

” டேய்  வர்றீயா “

” எனக்கு மருந்து வேணாம். நான் வர மாட்டேன் “

” என்ன பண்ற. “

” வாட்சிங் வீடியோ” 

“ஹோம்ஒர்க் பண்ணலீயா டா. டேய் தெம்பா இருக்கறப்ப உருப்படியா ஏதாவது வேலயப் பாரு. ரெண்டு நாள் லீவை கேச்சப் பண்றது கஷ்டம் டா. சரி இப்ப மருந்து சாப்பிட வா” 

“வேணாம் “

டைலனாலே தலைகீழ நின்னுதான் குடுத்தாள். மருந்தென்றாலே அவனுக்கு கசக்கிறது. அந்த ஸ்ட்ராபெர்ரி பிளேவருக்கே முட்டி மோதி தான் குடுக்க முடியும். 

“மனசுல என்ன நினச்சிட்டுருக்க. மருந்து சாப்பிடறதுனா முடியாதுங்கற. சொங்கிப்போய் படுத்துக்கற. ஹோம்ஒர்க்கும் பண்ண மாட்டேங்கிற. வந்து குடுச்சுட்டு வேல பாக்கப் போறீயா எப்படி? வெளுத்து எடுத்துருவேன் யாவம் வெச்சுக்கோ”

சத்தத்தின் சுருதியறிந்து வேகமாக ஓடி ஸ்கூல் லேப்டாப்பை கையிலெடுத்து மீண்டும் சோபாவுக்கு நடந்தான். அவளும் ஐபேடை மூடிவிட்டாள்.

” விழியன், ,வர்றீயா எப்படி “

” “. 

” விழியன்ன்ன்ன்ன்ன்ன்ன்”

இன்னும் சத்தம் வராத காரணத்தால், மருந்தெடுத்துக் கொண்டு சோபாவை நோக்கி விரைந்தாள்.

” என்னடா திமிரு காட்டுற. பதில் பேச மாட்டீங்களோ”. 

டெசிபல் ஏறுவதைப் பார்த்து, நடுக்கத்துடன் சொன்னான். ” அம்மா, அஅம்மா, அங்கவே வர்ரேன்.” 

மீண்டும் ஐலேண்டுக்கு மருந்து வந்துவிட்டது. 

” அம்மா, ஃபார்ட்டி எயிட் அவர் அல்ரெடி ஃபினிஸ்டு மா” 

“இந்த வியாக்கியானத்துக்கொன்னும் குறைச்சல் இல்ல. இப்ப மருந்து குடிக்கப் போறீயா இல்லீயா”. அலற ஆரம்பித்தாள். 

” லிக் பண்ணிப் பாத்துட்டு குடிக்கிறேம்மா” 

“சரி என்ன பண்றன்னு பாக்குறேன். இந்தா இங்க வச்சுடறேன். எவ்வளவு நேரம் எடுத்துக்கறன்னு பாக்குறேன் “

பந்து சிக்சர் போன மாதிரி ரெண்டு கைகளின் ஆட்காட்டி விரலை மட்டும் உயர்த்தி

*நான் உச்சா போயிட்டு வந்துறேம்மா” என்று சொல்லி விட்டு, அவளின் அந்த உக்கிரப் பார்வையை ஏதும் கண்டு கொள்ளாமல் ஓடினான். 

விரல்களால் மெதுவாக தொட்டு வாய் வரைக்கும் கொண்டு போய், கடைசியில் மனம் மாறி மூக்கருகே கொண்டு சென்றான்.  வாசனையைக் கண்ட பின் கையை இறக்கி துடைக்க பேப்பரைத் தேடினான். 

” விழியன்ன், நீயே ஒழுங்கா சாப்பிடப் போறீயா. இல்ல. நான் உன் வாய்ல ஊத்தட்டுமா”  ஒவ்வொரு வார்த்தையும் அதிர்வேறிப் போய் ஒலித்தது. 

” குடிக்கிறேன். ஆனா கொஞ்ச நேரம் ஒர்க் பண்ணுனத்துக்கப்புறம்” 

“எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல. நான் சமைக்கனும். குடிக்கப் போறீயா இல்லீயா”

மறுபடியும் சிக்சர் சிக்னல் கொடுத்தான். 

“ஓக்கே, ஓக்கே நான் பாத்ரூம்ல போய் குடிக்கிறேன். அங்க வா”

” சரி வா.. “

ரெண்டு பேரும் பாத்ரூம் வந்தடைந்தனர். 

 ” சளி வருது. டவல் எடுத்துட்டு வரேன் “

” டேய்ய்ய்… ஒன்னுக்கு மேல ஒன்னு காரணம் ஏதாவது சொல்லிட்டே இருக்க. ஏண்டா மருந்து குடிக்கனும்னா இப்படி உயிர வாங்குற. இதுதான் ஃபைனல். நான் டென் கவுன்ட் பண்றதுக்குள்ள வரணும். இல்லனா நடக்கதே வேற.. தெரிஞ்சிக்கோ “

” ஒன் “

 பின் டிராப் சைலன்ஸ் . அவளின் சுருதி இன்னும் குறையவில்லை. கணீர் கணீர் என்று வார்த்தைகள் ஓடி வருகிறது. 

” டூ ” 

“த்ரீ” 

“ஃபோர்”  

நன்கு இடைவெளி விட்டு எண்களை எண்ணினாள். 

“ஃபைவ்”

” அம்மா, பொறும்மா. பீடியாலைட் எடுத்துட்டு வாரேன் “

கண்கள் கலங்கியிருந்தது. 

” சிக்ஸ் “

“செவன்”

“எய்ட்” 

அவனின் பதட்டமும் டெசிபலுக்கு இணையாக எகிறியது. 

“நைன்”

பாத்ரூமில் அவளுக்கு முன் தலையை பின்னால் சாய்த்து வாயைத் திறந்து காண்பித்தான்.  விழியோரத்தில் நீர் கோர்த்திருந்தது. 

அவள் வெண்ணிற மருந்தை அவள் வாயில் ஊற்றத் தயாரானாள். உதட்டை நன்கு பிடித்து மெதுவாக மருந்தை எடுத்து வாய்க்கருகில் கொன்று செல்ல, அவன் கையை உயர்த்தி ஏதோ சொல்ல முயன்றான். கை மருந்தை தட்டிவிட்டது. 

“ஏங்க இங்க பாருங்க. மருந்தை கொட்டிவிட்டு ஓடிட்டான். அவன மருந்து குடிக்க வச்சுட்டு மத்த வேலயப் பாருங்க ” 

இதற்கு மேலும் அறைக்குள் முடங்கி இருப்பது ஆகாது என்பது போல வேகமாக படியிறங்கி வந்தான்.  அதுவரை நடந்த அமளிகள்  அவனுக்கு மங்கலாக கேட்டுக்கொண்டு தான் இருந்தன. .அவள் மேல்சட்டையில் பெரிது பெரிதாக வெண்ணிற ஈரத் தடயங்களைக் கண்டான். அவனைத் தேடினான். வீட்டிற்குள் இல்லை. 

முன் வாசல் கதவைத் திறந்து பார்த்தான். கல்டிசாக்கில் நடந்து கொண்டிருந்தான். தங்கையாரும் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். இவனும் அவர்களுடன் இணைந்து கொண்டு  ” மருந்து சாப்பிடனும் குட்டிம்மா” என்று ஆரம்பித்தான். 

“இல்ல.” 

“அவ உன்னோட சின்னப்புள்ள. மருந்து குடிக்க ஏதாவது பிரச்சினை பண்றாளா 

ஏன்  நீ மட்டும் இப்படி பண்ற”

“அது பிட்டர் மருந்து. பாப்பா சொன்னா.” 

“டைலனால் மட்டும் பிரச்சனை பண்ணாமலா குடிக்க.” 

“” 

“சரி இப்ப அம்மா கூப்பிடுறா. போய் மருந்து சாப்டலாம்” 

“வரமாட்டேன்” 

“அப்பா ஹெல்ப் பண்றேன்” 

“ம்ஹூம்” 

“இப்படி ஓடுனா என்னடா அர்த்தம்” 

எப்படி சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்து வர என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். 

பக்கத்து வீட்டுக்காரர் மானுக்கு வாழைப்பழம் கொடுப்பதை பார்த்து அண்ணணும் தங்கையும் அவர்கள் வீட்டு கொல்லை ஓரம் நின்றனர்.   இவனும் சேர்ந்து கொண்டான். ஐந்தாறு மான்களும் குட்டி ஒன்றும் வரிசையாய் நிற்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். 

“விழியன், வரப் போறீயா இல்லீயா. இப்ப வரலனா வீட்டுக்குள்ள இனிம விட மாட்டேன்.” 

பல விவாதங்களுக்குப் பின், வீட்டிற்குள் நுழைந்தான். 

“அம்மா, அல்ரெடி ஃபார்ட்டி எயிட் ஹவர்ஸ் ஃபினிஸ்டு மா. ஐ சுட் நாட் டேக் தி மெடிசின்” 

ஒரு காலை உயர்த்தி தரையில் ஓங்கி மிதித்து “ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” என்று உச்ச ஆவேசத்தில் கத்தினாள். 

பின்னர் எந்த விவாதமும் செய்யவில்லை. நேராக பாத்ரூம் செல்வதைப் பார்த்து அம்மாவும் சென்றாள். அவனுடைய உதடு இறுகியிருந்தது. மருந்தை அவள் எடுத்ததும் வாயைத் திறந்தான். அவள் மருந்தை ஊற்றியதும், வேகமாக விழுங்கினான். மேலுதட்டை உயர்த்தி முகத்தின் மற்ற தசைகளை இழுத்து சுருக்கி கண்களையும் உருட்டி சில கோணலான  முக அசைவுகளை காண்பித்து அவனுடைய வழக்கமான சோபாவுக்கு சென்றுவிட்டான். எந்த வார்த்தையும் பேசாமல் ஹோம்ஒர்க் பண்ணத் தொடங்கியிருந்தான்.  

“மருந்து எப்படி இருந்தது டா” 

பதில் எதுவும் சொல்லவில்லை. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 

அப்பாவிற்கு அடுத்த மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்டது. பத்து நிமிடம் தாமதமாகவே இணைந்தான். .வேலையெல்லாம் முடிந்து சாயங்காலம் டீக்கு கீழிறங்கினான். 

“சிறுசு வாமிட் பண்ணிடுச்சு. மதியம் சாப்பிட்டதெல்லாம் வந்துடுச்சு ” 

” நெட்ல பாத்துட்டு சொன்னேனே.  மருந்தோட வந்த பேப்பரிலும் போட்டுருக்கு” 

“இந்த மருந்து போதும்னு தோனுது. நீ என்ன நினைக்குற.” 

“ஆமாம்பா. எனக்கு டென்டிஸ்ட் கொடுத்த மாத்திரைக்கு அப்புறம் வயிறு செட்டாக மாசக்கணக்கு ஆயிடுச்சு “

” வேண்டாம்னா அப்பவே சொல்ல வேண்டியதுதானே. எத்தன தடவ கேட்டேன் “

டீ டம்ளரைக் கழுவப் போட எழுந்தவளை ஐலேண்டில்  இருந்த மருந்து பாட்டில்கள் , அது கூட வந்த பேப்பர், கவர் எல்லாம் ஒருசேர அமைதியாகப் பார்த்தன. 

“இத  எல்லாத்தயும் கண்ணுல படாத இடத்துல வச்சுருப்பா “

பதில் பேச்சு பேசாமல் எழுந்து மாடியில்  கேபினட்டிற்குள் பைல்களுக்குள் மத்தியில் புதைத்து விட்டு திரும்பினான்.

***

உலகளந்த பெருமாள் / நவம்பர் 2022

One Reply to “மருந்து”

Leave a Reply to Muthu rajCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.