தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

விவரித்துச் சொல்லமுடியாதபடி நாம் தனித்திருக்கிறோம்
என்றென்றைக்கும் தனித்திருக்கிறோம்
அது அப்படியாக இருக்கவே
விதிக்கப்பட்டிருக்கிறது,
அது வேறெப்படியும் இருக்க
என்றைக்கும் விதிக்கப்படவில்லை –
மரணத்துடனான போராட்டம் தொடங்குகையில்
கடைசியாக நான் பார்க்க விரும்புவது
என்னை சுற்றித் தெரியும்
மனித முகங்களாலான வளையத்தை –
அதுவும் எனது பழைய நண்பர்களை
என் சுயத்தின் சுவர்களை,
அவர்கள் மட்டுமே அங்கிருக்கட்டும்.
நான் தனித்து இருந்து இருக்கிறேன் ஆனால் என்றைக்கும்
தனிமைப் பட்டதில்லை.
எனது தாகத்தைத் திருப்திப் படுத்தியிருக்கிறேன்
எனது சுயத்தின் கிணற்றில்,
அந்த திராட்சைப் பழரசம் நன்றாக இருந்தது,
நான் இதுவரையிலும் அருந்தியதில் சிறப்பானது,
இன்றிரவு
உட்கார்ந்து
வெறித்துக் கொண்டிருக்கிறேன் இருட்டை.
இறுதியில் இப்போது நான் புரிந்து கொண்டேன்
இருட்டை
வெளிச்சத்தை
இரண்டுக்கும் இடையேயான
அத்தனையையும்.
புத்திக்கும் இதயத்திற்கும்
அமைதி வந்து சேருகிறது
நாம் எப்போது இவற்றை
ஏற்றுக் கொள்கிறோமோ:
இந்த விசித்திரமான வாழ்க்கையில்
பிறந்து விட்டுள்ள நாம்
ஒப்புக் கொள்ள வேண்டும்
சூதாட்டத்தில் வீணடித்த நம்
நாட்களை
மேலும் சற்று திருப்தி அடையலாம்
அத்தனையையும் விட்டு விடுவதில்
கிடைக்கிற மகிழ்ச்சியில்.
எனக்காக அழாதீர்கள்.
எனக்காகத் துயரப்படாதீர்கள்.
வாசியுங்கள்
நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை
பிறகு
மறந்து விடுங்கள்
அத்தனையையும்.
உங்கள் சுயத்தின்
கிணற்றிலிருந்து அருந்துங்கள்
பிறகு தொடங்குங்கள்
மறுபடியும்.
*
மூலம்:
‘Mind and Heart’ By Charles Bukowski
**
கவிதைகள் பெருகுகையில்..
கவிதைகள் ஆயிரக் கணக்கில் ஆகுகையில்
உணர்வீர்கள் நீங்கள் உருவாக்கியது
வெகு குறைவு என்பதை.
அவை வந்து நிற்கின்றன மழை, சூரிய ஒளி,
போக்குவரத்து, இரவுகள், வருடத்தின் நாட்கள்,
மற்றும் முகங்களில்.
இவற்றோடு வாழ்வதை விடவும்
இவற்றை விட்டு விடுவது சுலபம்,
ஒருவன் வானொலி வழியாக
பியானோ வாசிப்பதைப் போன்றது
மேலும் ஒரு வரியைத் தட்டச்சுவது.
ஆகச் சிறந்த எழுத்தாளர்கள்
வெகு குறைவாகவே சொல்லியிருக்கிறார்கள்
ஆக மோசமானவர்கள்,
வெகு அதிகமாக.
*
மூலம்:
‘As the poems go’ By Charles Bukowski
**