
சிறிய குளத்தை ஒட்டிய சின்னஞ்சிறு மேடைக்குச் செல்ல இரு குறுகிய படிகள். அதில் கீழ்ப்படியில் தன் புகழ் பெற்ற ஆடையணிந்து குத்திட்டு நிற்கும் சில முடிகளுடன், வட்டக் கண்ணாடி அணிந்து ஆர் கே லெக்ஷ்மணின் ‘பொது மனிதன்’ உட்கார்ந்து இருக்கிறார். அவரைத் தாண்டிக் கொண்டு இருவர் அந்த மேல்படிக்கட்டில் அமர்ந்து, அவர் கவனிக்க வேண்டுமென்றும், அவர் ஒரு பொருட்டேயில்லையென்றும் சொல்வதைப் போல பேசத் தொடங்குகிறார்கள்
எக்ஸ் : என்னய்யா, பெரிய ஜனநாயகம். எவன் பதவிக்கு வந்தாலும் தங்குடும்பத்த மட்டுந்தான பாக்குறான்.
வொய் : என்ன தப்புன்றேன். குடும்பத்த பாக்க வேண்டியது அவனவன் கடம தான.
எக்ஸ் : அடப்பாவி, எத்தனயோ தலமொறக்கி சொத்து சேக்கறதா குடும்பத்தப் பாக்கறது.
வொய் : அப்படியில்ல, ஆனாக்க அந்த அமப்பிருக்கே, அது அப்டித்தான் நடக்கும்.
எக்ஸ் :அப்ப, ஜன நாயகம் படுத்துருதில்ல. அப்பன், ஆத்தா, மகன், மகள், மருமகங்க, பேரன், பேத்தி, மச்சினன், நாத்தானாருன்னு குடும்ப நாயகம்தான நாடு பூரா நடக்குது.
வொய் : எல்லா ஸ்டேட்லயுமா அப்டி நடக்குது?
எக்ஸ் : அதுவாய்யா கேள்வி? முக்காவாசி அப்படித்தான் நடக்குது. வொறவுமுறயில கண்ணாலம் கட்டி சொத்த பெருக்கறமாரி, நாட்ட இவனுங்களே கூறு போட்டுக்குறாங்க. இத விட நீதிபதிகள அமத்தறதுல கூட சொந்த பந்த நீக்குப் போக்கு நடக்குது.
வொய்: என்னய்யா சொல்லுதீரு? குண்ட தூக்கிப் போடுதீரு.
நம் ‘பொது மனிதன்’ சுவாரஸ்யமாகிறார்.
எக்ஸ்: நம்ம உச்ச நீதி மன்ற தலம நீதிபதியே சொல்றாரு. இப்டி நேராச் சொல்லல. நெறய வழக்கு தேங்கி நிக்குது; கோர்ட்டுங்க போதுமான அளவுல இல்ல; நீதிபதிகள் இன்னமும் வேணும்; கணினிங்க, தொடர் அலவரிசன்னு இன்னும் பல கோர்ட்ல கெடயாதாம்.
வொய்: இத்தயெல்லாம் செய்யுணும்தான?
எக்ஸ் : சிரிப்பாணியா வரதுய்யா; நம்ம வரவு –செலவு திட்டம் போட்றாங்கல்ல அதுல வெறும் 0.4% நீதித் தொறக்கி. இந்த வருஷ மே மாசக் கணக்குப்படி 4.7 கோடி வழக்குங்க நிலுவைல நிக்குதாம். அதுல மூணரை கோடி கீழமை நீதிமன்றத்ல; 30 வருஷமா இரண்டு லட்சம் வழக்குங்க நடக்குதாம்.
வொய் : நல்லா இருக்கு போ, தாத்தன் கேசை பேரன் நடத்துவான் போலருக்கு. இத்தனைக்கும், பொருளாதார குற்ற வழக்குங்க, குடும்ப விவகாரங்களுக்கெல்லாம் வெவ்வேற கோர்ட் இருக்குதே.
எக்ஸ் : இந்த வயித்தெரிசலைக் கேளுய்யா. நாடு மொத்தத்துக்குமே 25000 சொச்சம் நீதிபதிங்கதான். இதுல, சட்டத்த பத்தின வெவரம் தெரியுதோ இல்லயோ, உரிமயப் பத்தி அவனவனும் பேசுதானுங்க; கன்ஸ்யூமர் வழக்கு, பொது நல வழக்கு, தகவலு அறியற உரிம வழக்கு, படிப்புக்கான உரிம கோரி வழக்கு, அவமதிப்பு வழக்குன்னு ஏகமா எகிறிப் போச்சு.
வொய் : இன்னையா, இதெல்லாம் தப்புன்னுறியா?
எக்ஸ் : அப்டிச் சொல்லல. ஒரு அரசுத் தொற, இன்னொரு அரசுத் தொற மேல போட்ற வழக்கே ஏராளம். சுற்றுச் சூழல் தொறயும், மாசு கட்டுப்பாட்டும் கோர்ட்ல தா சந்திக்குது.
பொது மனிதன் ஆர்வமாகிறார். அவர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்கின்றனர்.
வொய் :சட்டம்னாலே சிக்கலு. நேரம் நெறைய எடுக்குமில்ல.
எக்ஸ் : அப்டி இல்லைய்யா. நாம நமக்கு உகந்த சட்டத்தை எடுத்துக்கலன்னு தலம நீதிபதி சொல்றாரு.
வொய்: அப்டினாக்க?
எக்ஸ் :முன்னூறு ஆண்டு இங்க இருந்தவங்க பாணிய எடுத்துக்கிட்டோம். அதுக்கும் முந்தய ஆயிர வருஷ பழசான, சரியான, நம்ம மக்களுக்கான சட்டத்த கை விட்டுட்டோம்.
வொய்: அதான பாத்தேன். நெலம் உள்ளவன், பணக்காரன், ஆம்புள அவனுங்க வச்ச சட்டம். அதக் கொண்டாரணும் சொல்ற
எக்ஸ் : முட்டாத்தனமா பேசாதே. எது நல்லதா இருக்கோ அத எடுத்துக்கிட வேணும்; காலத்துக்கு பொருந்தலயா கழட்டி விட்டிடணும். தின்னவேலி கிட்ட மானூர் இருக்கில்ல, அதான்யா, அம்பல நாத சாமி கோயிலு அங்க சாமி கும்பிடப் போவச் சொல்ல அந்தக் கல்வெட்டைப் படி.
வொய்: என்ன பெருசா இருக்கப் போவுது? சாமி பாட்டா இருக்கும்.
எக்ஸ் : ஊர்க்கூட்டத்ல எப்டி நடந்துக்கணும்னு சொல்லுதாஹ; நம்ம தருமி சொன்னாப்ல ‘குத்தம் கண்டுபிடிச்சே புகழ் வாங்கும் புலவங்க இருக்காங்கள்ல, அவனுங்க எல்லாக் காலத்லயும் உண்டு; அதனால, எதுக்கெடுத்தாலும் மறுப்பு சொல்றவனுக்கு தீர்வை அஞ்சு செப்புக் காசு.
நம் பொது மனிதன் ‘ஆஹா’ என்றான். நாடாளுமன்றத்திலும், சட்ட சபையிலும் எத்தனை பேர் தங்கள் மேதமையைக் காட்டிக் கொள்ள மட்டும் விவாதங்களைத் தேவையற்று வளர்க்கிறார்கள். அவர்களுக்கும் ஃபைன் போட்டால்…
எக்ஸ் : இன்னும் கேளுங்க. அவரு க்ராமத்தச் சேந்தவரா இருக்கணும்; அவருக்கு அங்க நெலம் இருக்கணும். வேதமோ, தர்ம விதிகளோ தெரிஞ்சிருக்கணும்; தர்ம விதிகள அறிஞ்ச ஆளான்னு சோதிச்சுப் பாக்க குழு ஒன்னு உண்டு.
பொது மனிதன் அடக்க மாட்டாமல் ‘அப்போ நம்ம எம் பி, எம் எல் ஏ, எம் எல் சி, கவுன்சிலர், எல்லோருக்கும் நம்ம கான்ஸ்டிடூஷன் தெரிஞ்சிருக்கான்னு சோதிக்கணும்; அதான் சரி’ என்றார்.
எக்ஸ் : அட சும்ம கிடமையா; எத்தன மாறுதல், திருத்தங்க கிடக்கு அதுல. அந்த பாசை இருக்கே, பலருக்கு அது என்ன சொல்ல வரதுன்னு புரியறதில்ல.
வொய் : என்னதிது அக்குறும்பு.
எக்ஸ் : சட்டம் போட்றச்ச தெளிவில்லாம செல நேரம் ஆயிடுது. அதை அக்கக்காப் பிரிச்சு ஆயறேன்னு இடியாப்பச் சிக்கலாக்கி…ம் என்ன சொல்ல?
வொய்: அப்ப சட்டத்த பழய மொறைக்கு மாத்திடலாங்கற
எக்ஸ் : நடமொறைக்கு வர ஏலாது. ஆனா, பஞ்சாயத் லெவல்ல உத்திர மேரூர்ல சொல்லியிருக்காப்ல செய்யலாம்.
வொய்: என்ன சொல்லியிருக்கு அதுல?
எக்ஸ் : ஆட்சிக் குழு உள்ளூரு அமைப்பு. வரியும், இராணுவமும் அரசன் பொறுப்பு. உள்ளூர்ல குழுவில இருக்கறவனுடைய உறவுகள் எந்தப் பதவிக்கும் ஆட்சிக் குழுல வரக்கூடாது. தாய் வழில சித்தி, பெரியம்மா மகனுங்க, தாயோட உடம்பொறப்புங்க, அதே போல தந்தை வழி உறவுங்க, மகன், மருமகன்னு உறவுங்க இவரோட பதவிக்காலத்துல சபைல பதவி வகிக்க முடியாது.
வொய்: அது சரிதான்யா; ஆனா, நெலம் இல்லாதவன் சபைக்கே வர ஏலாதே. பொண்ணுங்களுக்கும் அதே தான நெல.
எக்ஸ் : அத மாத்திக்கலாம் இப்போ. ஏன் நெலம் இருக்கணும்னு வச்சாங்கன்னா, அந்த ஆளு ஊரோட இருப்பாரு; நெலவரம் தெரிஞ்சிருப்பாரு. அது மட்டுமில்ல. கடமல தவறினா, ஊர விட்டு ஒதுக்கிடுவாங்க; நெலம் பறி போயிடும். பலதும் பாத்துத்தான் செஞ்சிருக்காங்க.
வொய் : ஒன்னு மட்டும் தெரியுது. முடியரசு, இராணுவ அரசு, குடியரசு, இன்னும் என்னென்னவோ… ஆனா, முன்னேறிட்டோம்னு சொல்லிக்கற நம்மால நல்ல, எல்லாருக்கும் நன்ம செய்யற சட்டம் செய்ய முடியல.
எக்ஸ்: நீதிங்கறதும், நியாயங்கறதும் ஒன்னாத்தானிருக்கும் என்பதுல முழு உண்ம இல்ல. பலத ந்யாயப்படுத்லாம்-ஆனா, நீதி தள்ளி நிக்கும்.
வொய் : என்னமோ சொல்லுதீரு; புரியுது போல இருக்கு, ஆனா, முழுசா புரியல்ல..
இருவரும் பொது மனிதனைப் பொருட்டாக நினைக்காமல் இறங்கிச் செல்கின்றனர்.
அவர் நினைத்தார்:
மக்களுக்கு நம்பிக்க கொறஞ்சு வருது.
அரசுத் தொறைகளே தங்க உள் பிரச்சனைக்கெல்லாம் கோர்ட்டுக்குப் போனா வழக்குங்க தேங்காம என்ன செய்யும்?
தேசிய வழக்காடும் கொள்கைன்னு ஒன்னு கொணாந்தாங்க. அது கிடப்ல கடக்கு.
கோர்ட்ல என்ன பேசுறாங்க, என்ன தீர்ப்பு சொல்றாங்கன்னு பல மக்களுக்கு வெளங்கறதில்ல. ஏன்னா, அதுல வர வார்த்தைங்க நம்மளோடதில்ல.
எப்படி தள்ளிப் போற தீர்ப்பு, நீதியைக் கிடைக்காம செய்யுதோ, அவசரப்படுற தீர்ப்பு, நீதியைப் பொதைச்சுடுது.
முடிஞ்ச மட்டும் சிவில், குடும்ப வழக்குகள கொறக்கப் பாக்கணும். தனி மனிதனோட நேர்ம தான் சமுதாயத்தோட பலம்.
உசாவி: இணைய தளங்கள், நாளேடுகள் மற்றும்