புவி சூடேற்றம் பாகம்-14

This entry is part 14 of 23 in the series புவிச் சூடேற்றம்

இன்னும், சில சாதுரியமான பருவநிலை மாற்றம் பற்றிய திரித்தல்களை அலசுவோம்.

”செடிகள்/மரங்களுக்கு கரியமில வாயு தேவைப்படுகிறது. மனிதர்கள் அவற்றுக்கு உதவும் வகையில் கரியமில வாயுவை உருவாக்குகிறார்கள். இதில் என்ன பெரிய விஷயம்?”

அடடா, இயற்கையின் மீது எவ்வளவு அக்கறை இவர்களுக்கு என்று தோன்றலாம். செடிகள்/மரங்களுக்கு கரியமில வாயு தேவைதான். இதில்; எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கடந்த 100 ஆண்டுகளில், 18 டிரில்லியன் மரங்களை மனிதர்கள் அறுத்து விட்டு, காடுகளை அழித்து விட்டார்கள்.

இருக்கும் செடி/மரங்களுக்கு தேவையான கரியமில வாயுவின் அளவை விட பல நூறு மடங்கு மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகளால், உருவாக்குவதனால் உருவான பிரச்சினை இது. அளவை மீறியதால், இந்த பூமியின் சமநிலை சவாலுக்கு உள்ளாகியுள்ளது. இயற்கைக்கு, இதைச் சமாளிக்கத் தெரியும். இந்த சமாளிப்பில், மனிதர்கள் இருப்பார்களா, இல்லையா என்பதே பிரச்சினை..

”புதுப்பிக்கக்கூடிய சக்தி (renewable energy) எல்லாம் சும்மா பூச்சுற்றல். சில தனிநபர்களும், அரசாங்கங்களும் செய்யும் சதி வேலை”

இது உண்மையல்ல. கடந்த 60 ஆண்டுகளாக, புதுப்பிக்க்கூடிய சக்தி உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த ஆராய்ச்சியை முன்னே செல்ல விடாமல் தடுப்பது என்னவோ தொல்லெச்ச எரிபொருள் நிறுவனங்கள். சூரிய ஒளியை, காற்றின் ஆற்றலை, மற்றும், புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்தும் முயற்சிகள், நாளுக்கு நாள் செயல்திறன் கூடிக் கொண்டே வருகிறது. 500 கி,மீ. ஒரு மின்னேற்றத்தில் பயணம் செய்யும் மின்கலன் கார்கள் இன்று சாத்தியம்.

இதைச் சொன்னால், உடனே, ஒரு மின் கார் உற்பத்தி செய்வதற்கு எத்தனை தொல்லெச்ச எரிபொருள் செலவாகிறது என்று ஒரு பட்டியலை நம் முன் வைப்பார்கள். பிரச்சினை அதுவல்ல. உருவாக்கப்பட்ட மின்கலன் காருக்கு, பராமரிப்பச் செலவு மிகக் குறைவு. மேலும், எஞ்சினுக்கு எண்ணெய் என்று மேலும் சுற்றுப்புற சூழலை, இவை பாழடிப்பதில்லை. எல்லாவற்றையும் விட மிகப் பெரிய கொடுமை, தொல்லெச்ச எரிபொருள் தொழிலுக்கு அரசாங்கங்கள் கொடுக்கும் சலுகை. புதிய கிணறுகள் தோண்டுவதற்கு, உதவி செய்வது, உடனே நிறுத்தப்பட வேண்டும்.

”மேகமூட்ட நாட்கள் மற்றும் காற்றில்லாத நாட்களில், புதுப்பிக்க்கூடிய சக்தி செயலிழந்து விடுகிறது. இது நம் அன்றாடத் தேவைகளைக் கூட சமாளிக்க முடியாத ஒரு விலை உயர்வான அமைப்பு”

மேகமூட்ட நாட்களில், சூரிய ஒளியால் உருவாகும் சக்தி குறைவுதான். அதில் சந்தேகம் இல்லை. அதே போல, காற்றில்லாத நாட்களில், காற்று, சுழலிகளால் குறைந்த சக்தியைத்தான் உருவாக்க முடியும். ஆனால், உலகின் பெரும் பகுதிகளில், வருடத்தின் 200 –க்கும் மேற்பட்ட நாட்கள் ஏராளமான சூரிய ஒளி கிடைக்கிறது. இந்த நாட்களில் உருவாக்கப்படும் சக்தி முழுவதும் பயன்படுத்தப்படுவதில்லை.

இன்றைய தொழில்நுட்பம், ராட்சச மின்கலன்களில் சக்தியை சேமிக்கும் நுட்பத்தை வழங்கியுள்ளது. சரியாக பயன்படுத்தப்பட்டால், சேமித்த அபரிமித சக்தியை குறைந்த காற்று மற்றும் சூரிய ஒளி இருக்கும் நாட்களில் பயன்படுத்த முடியும். ஒரு முக்கிய பிரச்சினையை இங்கு வாசகர்கள் முன் வைக்க வேண்டும். புதுப்பிக்கக்கூடிய சக்தி முயற்சிகளில் உள்ள மிகப் பெரிய சிக்கல், உருவாக்கிய சக்தியை எப்படி நுகர்வோரிடம் கொண்டு செல்வது என்பதே. உலகின் மிகப் பெரிய நாடுகள் யாவிலும், சக்தி தயாரிப்பு, பெரிய நகரங்கள், தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் (அதாவது 200 கி.மீ. –க்குள்) உள்ளன. பெரும்பாலும், இவை அனல் மற்றும் அணுசக்தி நிலையங்கள். இதனால், மின்னாற்றல் கடத்தல் செலவுகள் குறைவு. ஆனால், புதுப்பிக்கக்கூடிய சக்தி உருவாகும் அமைப்புகள், நுகர்வோர் மையங்களிலிருந்து மிகத் தள்ளியே உள்ளன. இதனால், இந்தப் புதிய முயற்சிகளின் மிகப் பெரிய தடை, மின்னாற்றல் கடத்தல் அமைப்புகளில் அதிக முதலீடு இல்லாதது மிகப் பெரிய குறை என்பது வல்லுனர்களின் கருத்து.

”விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட, பூமி குறைவாகவே வெப்பமடைந்துள்ளது”

இந்த திரித்தல், எவ்வளவு மோசமானது என்பது, இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அதிகமாகத் தான் பூமி வெப்பமடைந்துள்ளது. விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு, 2020 –ல், தொழிற்புரட்சி அளவிலிருந்து (1850) ஒரு டிகிரி, பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் என்பது. உண்மையில் இன்று, 1.5 டிகிரி அதிகரித்துள்ளது. அதாவது, எதிர்பார்ப்பை விட 50% அதிகமாகவே வெப்பமாகியுள்ளது.

அடுத்த பகுதியில், பருவநிலை மாற்றத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் இயக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

***

புவிச் சூடேற்றம்

புவி சூடேற்றம் பாகம்-13 பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.