விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10

This entry is part 10 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தப் பகுதியில், இந்தப் பிரச்சினைக்கு, விஞ்ஞானிகள் என்ன பரிந்துரைகளை முன் வைக்கிறார்கள் என்று பார்ப்போம். எல்லாப் பிரச்சினைகளையும் ஆராய்வது மட்டும் விஞ்ஞானம் அன்று. அமில மழை, பெட்ரோலில் ஈயம், ஓஸோன் அடுக்கில் ஓட்டை எல்லாவற்றிலும், விஞ்ஞானம், தகுந்த பரிந்துரைகளையும் செய்தது. அதனால்தான், இன்று ஓரளவு இந்தப் பிரச்சினைகளிலிருந்து நாம் தப்பியுள்ளோம்.

விஞ்ஞானிகளின் பரிந்துரைகளை ஆராயும்முன், ஒரு முக்கியத் தவறான கருத்தை இங்கு தெளிவுபடுத்த வேண்டும். அல் கோர் மற்றும் விஞ்ஞானிகள், இந்தப் பிரச்சினையைப் பற்றி விளக்கியபொழுதும், இவர்கள் பூமியைக் காப்பாற்ற வந்தவர்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில், மனிதர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். சுற்றுச்சூழல் அழிந்த பூமியிடமிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வது அவ்வளவு எளிதான விஷயமன்று. பூமியில் சமீபத்திய விருந்தினர்கள் நாம். 4.6 பில்லியன் வருடங்களில், கடந்த 120,000 வருடங்கள்தான் நாம் இந்தக் கிரகத்தில் வசித்துவந்துள்ளோம். பூமி (இயற்கை), சுற்றுச்சூழல் அழிந்த நிலையைத் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியைக் கடந்த ஒன்று. நாம் அழிந்துவிட்டாலும், பூமி அழியாது. மனித இனம், தன்னைக் காப்பாற்றி கொள்ளவேண்டிய முயற்சிகள் இவை. பூமியைக் காப்பாற்ற செய்யும் முயற்சிகள் அல்ல.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக, புவிச் சூடேற்றம் பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், பெரிதாக, இந்த உலகம் எதையும் மாற்றவில்லை. மாறாக, தொல்லெச்ச எரிபொருட்களுக்கு மேலும் அடிமையாகிக்கொண்டே வந்துள்ளது. விஞ்ஞானிகளின் பார்வையில், நேரம் சற்று கடந்துவிட்டாலும் இன்று தொடங்கி மனித இனம் தன்னைக் காப்பற்றிக் கொள்ளமுடியும்.

முதலில், இந்தப் பிர்ச்சினைக்குக் காரணம், அதிகமாக நாம் பயன்படுத்தும் பெட்ரோல், இயற்கை வாயு மற்றும் கரி. பூமியின் 1.5 டிகிரி சராசரி வெப்ப உயர்வுக்குக் பெரும் காரணம், இந்தத் தொல்லெச்ச எரிபொருட்களே. இதனால், எந்த ஒரு பரிந்துரையும் இவற்றை மையாக வைப்பதில், எந்த வியப்பும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள், சராசரி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் (செல்சியஸ்) வைக்கவாவது நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நடைமுறையில் யோசிக்கத் தொடங்கியுள்ளார்கள். 1.5 டிகிரி உயர்விலிருந்து நாம் மீள பல நூறு ஆண்டுகள் பிடிக்கும். ஆனாலும் வேறு வழியில்லை. 2 டிகிரி சராசரி வெப்ப உயர்விலிருந்து நாம் மீளவே முடியாது.

  1. முதல் வழி, மொத்தத்தில் ஒவ்வொரு நாடும், மேலும் வெப்ப அதிகரிப்பிற்கு எந்த ஒரு பங்கீடும் இல்லாமல் பார்த்துக்கொள்வது. உதாரணத்திற்கு, 1 மெகா டன் கரியமில வாயுவை ஒரு நாடு காற்று மண்டலத்தில் சேர்க்கிறது என்றால், அதே ஒரு மெகா டன் கரியமில வாயுவை உள்வாங்கும் மரங்களை (காடுகளை) உருவாக்கவேண்டும். இது Net zero emissions என்று சொல்லப்படுகிறது. இதைப் பரிந்துரைப்பது எளிதாகத் தோன்றினாலும், இதைச் செயல்படுத்துவது மிகவும் கடினம். நார்வே, ஐஸ்லாந்து போன்ற சில நாடுகளே இந்த முயற்சியில் வெற்றிபெற்றுள்ளன. இந்த நாடுகள், மின்சாரக் கார்கள், புவி வெப்ப சக்தி உற்பத்தி போன்ற விஷயங்களுக்கு ஊக்கம் அளித்து, காடுகள் அழிவதையும் தடுத்து, ஓரளவு வெற்றிபெற்றுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், பல கசப்பான முயற்சிகளை மக்களும், அரசாங்கமும் எடுக்க வேண்டிவரும்
  2. இந்த இலக்கை அடைய இன்னொரு வழி, கரியை உமிழும் தொழிற்சாலைகளுக்கு வரி விதிப்பது. பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழித்திட்ட நாடுகள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட உமிழ் அளவிற்கு ஒப்புக்கொண்டன. பெரும்பாலான நாடுகள், கரியமில வரி (தமிழில் கொஞ்சம் வினோதமான carbon tax) போன்ற ஓர் அமைப்பை அமல்படுத்துவதாக ஒப்புக்கொண்டன. முன்னாள் டிரம்ப் அரசாங்கம், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கி, உலகின் இந்த ஒரு வழியைத் தவிடு பொடியாக்கியது. 2021-ல் பதவியேற்ற பைடன் அரசு, நல்ல வேளையாக, பாரீஸ் ஒப்பந்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்ததோடு, க்ளாஸ்கோ மாநாட்டிலும் உற்சாகமாகப் பங்கேற்றது
  3. மேலே சொன்ன இரண்டு முயற்சிகள், உலகின் உமிழும் பாணியை மாற்றும் என்று 2015–ல் நம்பப்பட்டது. அதாவது, 2050–ல், உலகின் புதிய கரியமில உமிழ் பூஜ்ஜியமாகும் என்று கணக்கிடப்பட்டது. அதாவது, ஒவ்வொரு நாடும், தான் வெளியேற்றும் கரியமில வாயுவைக் காட்டிலும், உள்வாங்கும் தன்மையை உருவாக்கிவிடும் என்பது இந்தக் கணக்கின் அடிப்படை. இன்று, இது தப்பான கணக்கு என்று, தற்போது தெரிய வந்துவிட்டது. 2015–ல் ஒப்புக்கொண்ட உமிழ் அளவை எந்த நாடும் எட்டவில்லை. கையெழுத்திட்டு மீண்ட அரசாங்கங்கள், சில முயற்சிகளை எடுத்தும், மிகப் பெரிய உமிழ் தொழிற்சாலைகளின் சக்தியில் திக்குமுக்காடுவது மிகவும் வேதனைக்குரியது
  4. இந்த முயற்சிகளுக்குப் பின்னால், பல சிறிய முயற்சிகளும் அடங்கியுள்ளன:
    1. புதிய காடுகளை உருவாக்குவதோடு, பழைய அழிந்த காடுகளையும் உயிர்பித்தல், இந்த முயற்சிகளில் ஒன்று. புதிய காடுகளை உருவாக்கப் பல பத்தாண்டுகளாவது தேவைப்படும். ஆனால், பழைய அழிந்த காடுகளை உயிர்பித்தல், அத்தனை நேரமெடுக்காது
    2. புதிய வயல்களை உருவாக்குவதைவிட (இதற்காகக் காடுகளை அழிக்க வேண்டும்), இருக்கும் நிலத்தைச் சரியாகப் பாதுகாத்தால், நம் உணவுத் தேவைகளைச் சரிகட்ட முடியும். குறைந்த நீரைக்கொண்டு பயிர்களை வளர்ப்பது, மண்ணில்லா பயிர் / செடி வளர்ப்பு (hydroponics), சரியாக ஏரிகளைத் தூர் வார்வது போன்ற பல முயற்சிகள் இதற்கு உதவும்
    3. பெரும்பாலான உமிழ், தொழிற்சாலைகளில், புகைக்குழாய் (smoke stack) வழியாக, காற்று மண்டலத்தில் கலக்கிறது. இந்த வெளியேறிய புகையில் ஏராளமான கரியமில வாயு அடங்கும். வெளியேறியபின், அந்தப் புகையை உறிஞ்சும் (இதில் குறைந்த அளவே வெற்றி பெற முடியும்), தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், (direct air capture technology) ஓரளவு இந்தத் தாக்கத்தைக் குறைக்க முடியும். இன்னொரு வழி, வெளியேறும்முன், புகையை மண்ணுக்குள் கலக்க விடுவது. இது சற்று அதிக செலவானாலும், மிகவும் பயனை அளிக்கும் முயற்சி (carbon storage and sequestration)
    4. புதிய தொழில்நுட்பம் வளருவதற்கு அரசாங்கங்கள் ஊக்கம் அளிக்கவேண்டும். இதனால், இன்றைய குறைகளை ஓரளவு சரிகட்ட வழி வகுக்கும்
    5. நதிகளைச் சரியாகப் பாதுகாக்க பல முயற்சிகளை அரசாங்கங்கள் எடுக்க வேண்டும். நதி நீர் குறைந்து வருவதை உடனே நம்மால் சரி செய்ய முடியாது. ஆனால், கிடைக்கும் நீரைத் தேக்கி, மீள்பயனாற்ற வழி வகுக்க வேண்டும். எல்லா நாடுகளிலும் இது முடியாது என்றாலும், சிலவற்றில் செய்ய முடியும். உதாரணத்திற்கு, தென் மேற்கு அமெரிக்காவில், ஏறக்குறைய கொலராடோ நதி போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டார்கள். ஆனால், காவிரி, கங்கை, மிஸ்ஸிஸிப்பி போன்ற நதிகளில், இன்னும் முயன்றால், விவசாயத்தைக் காப்பாற்றலாம்
    6. கடலோரப் பகுதிகள், 1.5 டிகிரி வெப்ப உயர்வில் நிச்சயம் பாதிக்கப்படும். சும்மா வெட்டி விவாதத்தை விட்டு, கடலோர நகர அரசாங்கங்கள், நகரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இன்றே ஈடுபட வேண்டும். மயாமி, மும்பை, கோல்கத்தா, நியூ யார்க், ரியோ போன்ற நகரங்கள், இந்த முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். இந்த முயற்சிகள் இல்லையேல், இந்தக் கடலோர நகரங்கள் மறைவது தவிர்க்க முடியாதது
    7. கடல் மட்ட அளவில் உள்ள சிறு தீவுகள், இந்த வெப்ப உயர்வால், முதலில் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. இது போன்ற நாடுகள் / தீவுகளுக்கு உதவப் பணக்கார நாடுகள் முன்வர வேண்டும். குறைந்தபட்சம், புவிச் சூடேற்ற அகதிகள் என்ற ஒரு புதிய குடிபுகுதல் சட்டத்தை, பணக்கார நாடுகள் நிறைவேற்ற வேண்டும்
    8. மலைப் பகுதிகளில், நிலச்சரிவுகள் அதிகரித்து வருவதற்குக் காடழிப்பே காரணம். காடுகளைப் பாதுகாத்தல், மலைவாழ் மக்களுக்குப் பெரிதும் உதவும். மலைகளில் வாழும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்
    9. பங்களாதேஷ் போன்ற மிக ஏழை நாடுகள், புவிச் சூடேற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும். இந்தியாவைப்போல, மிகவும் மக்கள்தொகை அதிகமான நாடு இது. புவிச் சூடேற்றத்தால் பங்களா மக்களுக்கு உதவ ஆசிய நாடுகள் முன்வர வேண்டும்
    10. மலைப் பகுதிகளில், சுற்றுலா என்பது ஒரு முக்கிய வருமானம் தரும் தொழில். மாறுகின்ற பருவநிலையால், இவை பாதிக்கப்பட்டுள்ளதும் உண்மை. சுற்றுலாவிற்குத் தகுந்த மாதங்கள், முன்பைவிடக் குறைவாகவே இருப்பதால், இந்தச் சுற்றுலாத் தலங்கள் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, உள்ளூர் போக்குவரத்து யாவும் மின்சாரப் போக்குவரத்தாக மாற்றப்பட வேண்டும். பைக்குகள், ரயில் போகும் தளங்களில், லாரியைத் தடை செய்வது போன்ற விஷயங்கள் மேலும் வெப்பத்தைக் குறைக்க உதவும். மலைப் பகுதியில் உள்ள ஏரிகளைப் பாதுகாக்க, சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுபோல, பல சமாளிப்புகள் ஓரளவு தாக்கத்தைக் குறைக்க உதவும்
    11. நகரங்களில் லாரி போக்குவரத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். வட அமெரிக்காவில் சரக்கு லாரிகள் எந்தத் தடையுமின்றி நாள் முழுவதும், ஒவ்வொரு மாதமும் / வருடமும் பயணிப்பது புவி சூடேற்றத்திற்கு நல்லதல்ல
    12. எந்தக் காரணத்திற்காகவும், ஒரு நாட்டின் குறைந்தபட்ச உமிழ் அளவிற்கு மேல் உமிழும் ஊர்த்திகளை, சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்படக் கூடாது

இதுவரை, இங்கு சொல்லியுள்ள பல பரிந்துரைகளில் ஒரு விஷயம் உதைப்பது போலத் தோன்றலாம். இது என்னவோ ஓர் அரசாங்கப் பணிக்கான பரிந்துரைப் பட்டியல் என்று தோன்றலாம். இதில் அரசாங்கம், தொழில், வியாபாரம், மற்றும் தனிநபர்களுக்கு எல்லாம் பங்குண்டு. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவதோடு இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது.

தனி நபர் பரிந்துரைகள்

  • குளிர் நாடுகளில் வாழும் மனிதர்கள், தங்களுடைய வீட்டில் திறன் வெப்ப சீர்நிலைக் கருவியை (smart thermostat) நிறுவுவது அவசியம். தேவையில்லாத நேரங்களில், அநாவசிய எரிபொருளும், வெப்பமும் மிச்சமாகும். கோடைக் காலத்தில், அநாவசியக் குளிர்சாதனப் பயனையும் இது குறைக்கும். பல நாடுகள், நகரங்கள், மாநிலங்கள் இவ்வகைக் கருவிகளை நிறுவ, ஊக்கம் அளித்து வருகின்றன. இது மேலும் உலகெங்கும் பரவுதல் அவசியம்.
  • துணிகளைக் குளிர்ந்த நீரில் துவையுங்கள். பெரிய துவைக்கும் எந்திரத்தில் கொதி நீர் அநாவசியம். இரண்டு / மூன்று துணி என்று துவைக்காமல், வாரம் ஒரு முறை குடும்பத்தின் துணிகளைத் துவையுங்கள்
  • குளிர் நாடுகளில் வாழ்பவர்கள், கோடைக் காலத்தில், சூரிய ஒளியில் துணிகளைக் காயப் போடுங்கள். உலர்த்தும் எந்திரம் ஏராளமான மின்சார உறிஞ்சி
  • வீட்டில் உள்ள விளக்குகளை எல்.ஈ.டி. விளக்குகளுக்கு மாற்றுங்கள். இவ்வகை விளக்குகள் சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும்
  • ஒவ்வொரு தனிநபரும் ஒரு சக்தி ஆடிட் செய்யலாம். இதில், என்ன மாற்றங்கள் செய்தால், வீட்டில் சக்திச் செலவைக் குறைக்கலாம் என்று தெரியவரும். செலவு குறைவதோடு, சக்தியையும் குறைவாகப் பயன்படுத்துவீர்கள்
  • பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பனைப் பார்க்கச் செல்லும் மகனை / மகளை நடந்து போகச் சொல்லுங்கள்
  • குளிர் நாடுகளில் வசிப்பவர்கள், சரியான மின்காப்பு / வெப்பக்காப்பு (insulation) இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு தொடர் வேலை. இந்த ஆண்டின் வெப்பக்காப்பு, அடுத்த ஆண்டிலும் வேலை செய்யுமா என்பது சந்தேகம். அதுவும் சற்று பழைய வீடுகளில், இது மிக அவசியம்
  • உணவில், மாமிசத்தைக் குறைக்க வேண்டும். ஆடு, மாட்டிறைச்சி உற்பத்தி, ஏராளமான மீதேன் வாயுவை நம் காற்றுமண்டலத்தில் அதிகரிக்கும் தொழில். இறைச்சிக்காக இந்த விலங்குகளைப் போக்குவரத்து செய்வதால், மேலும் தொல்லெச்ச எரிபொருள் விரயம். இதனால், கரியமில வாயுவின் உமிழ்வும் குறையும்
  • முடிந்தவரை உள்ளூரில் விளையும் பொருட்களையே உண்பது நலம். தூரத்திலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவு அதிகம். வட அமெரிக்க இந்தியர்கள் வாழைக்காய்க்கும், இந்தியர்கள் கிவ்வி பழத்திற்கும் ஆசைப்படுவது புவிச் சூடேற்றத்தை அதிகப்படுத்தும் உதாரணங்கள்
  • சைக்கிள்கள் சாலையிலிருந்து தொலைந்து போய்விட்டன. பக்கத்தில் வேலை அல்லது பள்ளி / கல்லூரி செல்லச் சைக்கிளைப் பயன்படுத்துதல் சுற்றுச்சூழலுக்கு நல்லது. பைக் கலாசாரத்தில் மூழ்கிவிட்ட இந்தியாவிற்கு, இது மிக முக்கியம்
  • வீடுகளில் பயன்படுத்தும் மேஜை, நாற்காலிகள், சோபா போன்ற பொருட்கள், மறுபயன்பாட்டுப் பொருள்களாய் வாங்குங்கள். இதனால், அந்தப் பொருளை உருவாக்கச் சக்தித் தேவை குறையும்
  • துவைக்கும் எந்திரம், குளிர்சாதனப் பெட்டி, கணினி போன்ற உபகரணங்கள் எனர்ஜி ஸ்டார் உபகரணங்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்
  • மின்சாரக் கார் வாங்க முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் ஹைப்ரிட் கார் வாங்குங்கள். சொகுசான பென்ஸ், ஆடி, ஹம்மர் போன்ற கார்கள் பெட்ரோலை உறிஞ்சம் அரக்கர்கள்
  • பகல் நேரத்தில் மின்விளக்குகளைப் பயன்படுத்தாதீர்கள். இது அலுவலகங்களுக்கு மிகவும் பொருந்தும்
  • வீட்டின் வெளியே எரியும் விளக்குகள், தானே சூரிய வெளிச்சம் வந்தவுடன் அணையும் விளக்குகளைப் பொருத்துங்கள்
  • தோட்டத்தில் அலங்கார விளக்குகளுக்கு, சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளைப் பொருத்துங்கள்
  • இதைச் சொன்னால் வட அமெரிக்க வாசகர்கள் கோப்ப்படக்கூடும். உலகின் மிக மோசமான (நான் உட்பட) விவசாயிகள், நகரவாசிகள். அழகிற்காகப் புல்தரை வளர்த்து, பெட்ரோல் புல்வெட்டியை இயக்கி, தண்ணீரை வீணாக்குவதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. இது தேவையில்லாத அலங்காரம்
  • ப்ளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்காதீர்கள். குழாயிலிருந்து நீர் அருந்துவது சூழலுக்கு நல்லது. மறுபயன்படும் தண்ணிர்க் குவளைகளில் நீர் பருகுங்கள்
  • அப்படியே பெட்ரோல் கார்தான் (பைக்) உங்களால் ஓட்ட முடியும் என்றால், வீட்டில் ஒரு மின் காற்று அழுத்தி வாங்கி, வாரம் ஒரு முறை, சரியான காற்றழுத்தம் உள்ளதா என்று சரி பாருங்கள். இந்த ஒரு விஷயம், உங்களது பெட்ரோல் பயனைக் குறைக்கும்
  • உங்கள் வீட்டைச்சுற்றி ஓரிரு மைல் சுற்றளவுக்குள் என்னென்ன கடைகள் இருக்கின்றன என்று கூகிள் வரைபடம் மூலம் பார்த்துக்கொண்டு, எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அதிக எடையான பொருளை வாங்கும்போது தவிர, இந்தக் கடைகளுக்கு நடந்தே செல்லுங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் நடந்தே செல்லச் சொல்லுங்கள்
  • காரை எங்கு ஓட்டிச் சென்றாலும், 1 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் (இது தொல்லெச்ச எரிபொருள் ஊர்த்திகள் அனைத்திற்கும் பொருந்தும்), தயவு செய்து எஞ்சினை அணைத்து விடுங்கள்
  • நகர மையப் பகுதியில் வாழ்ந்தால், வாடகை சைக்கிளோ அல்லது சொந்த சைக்கிளையோ பயன்படுத்துங்கள்
  • உங்கள் ஊரில் உள்ள ஆறு மற்றும் ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுங்கள்
Series Navigation<< புவிச் சூடேற்றம்- பகுதி 9மறுசுழற்சி விவசாயம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.