கொழும்பு டீ

காலையில் ஆறு மணிக்கு அலைபேசி அடித்த போதே தெரியும் அது மலராகத்தான் இருக்கும் என்று. முதல்ல பல்ல துலக்குவோம் அப்புறம் பேசிக்கலாம் என்று மறுபடியும் புரண்டு படுத்தேன்.

மலர் இப்படித்தான், எந்த நேரம் என்று இல்லாமல் அலைபேசியில் அழைப்பது, இன்னும் சற்று நேரத்தில் திருப்ப அழைக்காவிட்டால் அவ்ளோ பிஸி ஆவா இருக்க என்று வீட்டுக்கே கிளம்பி வந்து கோவித்துக்கொள்வது, அவனது அணைத்து அலுப்புகளையும் என் காதுகளுக்கு மடை மாற்றி விடுவது, நான் கோவப்பட்டால் ” நீ தான் என் பஞ்சிங் பேக்” என்று என் மூக்கை செல்லமாக திருகுவது என்று என்னால் வெறுக்க முடியாத ஓரு சித்திரம்.

மலர் எனக்கு அறிமுகமானது நான் கோவையில் வங்கியில் பணிபுரிகையில்தான்.

அது ஒரு தனியார் வங்கி, தேசிய வங்கிகளைப்போல் அல்லாமல் இங்கு பணிபுரிந்த அனைவருமே முப்பத்தைந்து வயதிற்குள் இருந்தவர்கள் தான்.

அது ஒரு புதன் கிழமை, வழக்கமான பரபரப்புகள் இல்லாமல் கொஞ்சம் அரட்டையுடன் அந்த நாள் ஆரம்பம் ஆகியிருந்தது.

எனக்கு வங்கியின் அந்நிய செலாவணிப் பிரிவில் வேலை.

கண்ணன்தான், “சார் புது ஜாயினி வந்தாச்சு,” என்று சொன்னான்.

மலர் சேருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே எங்கள் கிளைக்குப் புது ஆள் போடப்பட்டிருக்கும் விவரம் வங்கியின் மத்திய அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

எங்கள் கிளையில் அனைவரும் ஆவலுடன் மலரின் வருகையை எதிர்பார்த்திருந்தோம், காரணம் அவனின் பெயர். மலரின் முழு பெயர் மலர்வேந்தன்.

மலர் எங்கள் கிளையில் சேரப்போவது பற்றி கிளை மேலாளர் விஸ்வா சார் சொன்னபோதே “பேரு அமர்க்களம் தான், பாக்கலாம் வேல செய்யறானான்னு” என்று ஆரம்பித்தார், அனைவரும் ஜம்பு சார் மேசையில் கூடி பெயர் விவாதம் செய்தோம்.

ஜம்பு சார், தான் முன்பு பணிபுரிந்த வங்கியில் ஒரு பெண் அலுவலர் பெயர் “யாழினும் மென்மொழியாள்” என்று சொன்னதற்கு “கத உடாதீங்க” என்று அவரைக் கிண்டல் அடித்து, அவரவருக்கு கிடைத்த வித்தியாசமான பெயர் அனுபவங்களுடன் அரட்டை நீண்டது.

பெயரைப் போலவே மலர் பார்ப்பதற்கும் ஆள் சிரித்த முகத்துடன் எல்லோருக்கும் பிடிக்கும் ஏதோ ஒரு வசீகரத்துடன் தான் இருந்தான்.

இந்த வேலை அவனுக்கு முதல் வேலை இல்லை, ஏற்கனவே ஒரு தனியார் வங்கியில் இருந்து தான் இங்கு வந்திருந்தான் அதனால் ரொம்ப மெனக்கெட்டு அவனுக்கு வேலைகளைப் பயிற்றுவிக்க வேண்டி இருக்கவில்லை, இயல்பாகவே வேகமாக வேலைகளை முடிக்கும் ஒரு சிலரைப் போன்றவன் தான் மலர்.

வாய் மட்டும் ஓயாது பேசிக்கொண்டேயிருப்பான்.

மலரின் மேலாளர் கண்ணன். கண்ணனின் வேலைகளையும் சேர்த்து முடித்து விட்டு எங்கள் பிரிவில் தான் எப்போதும் இருப்பான்

முதலில் அவனின் பெயரில் இருந்த ஈர்ப்பால் அவனிடம் நான் நன்றாக ஒட்டிக்கொண்டேன்.

வங்கியின் கீழ் தளத்தில் இருந்த டீ கடையில் மாலை டீ குடித்தபடி அவன் சொல்லும் அவனின் பள்ளி, கல்லூரிக் கதைகளை விட அவனின் ஊர் கதைகள் கேட்பதற்கு இதமாக இருக்கும்.

அவை தான் பெரும்பாலான நாட்களின் பணி அழுத்தத்தில் இருந்து என்னை விடுவிப்பவை.

பணி அழுத்தமெல்லாம் எனக்கும் எங்கள் கிளையில் பணியாற்றிய மற்றவர்களுக்கும் தான். அன்றாடப் பணி அழுத்தங்களையும் எரிச்சல்களையும் மலர் எளிதாக கடந்து விடுவான்.

“அது எப்படி டா எப்போ பாத்தாலும் பல்ல காட்டிட்டே இருக்க” என்று நான் கேட்கும்போது எல்லாம் அவனிடமிருந்து வரும் மாறாத பதில் “காதலிக்கனும் லக்ஸு,” என்பான்.

“அட போடா பெரிய கெளதம் வாசுதேவ மேனன் , இவரு காதலிச்சுக்கிட்டே இருப்பாரு,” என்பேன். ” உங்களுக்குப் பொறாமை, நான் உங்களுக்கு டிப்ஸ் குடுக்கிறேன்,” என்று ஆரம்பிப்பான்.

எனக்கு தெரிந்து மலர் இதுவரை மூன்று பெண்களையாவது காதலித்து இருப்பான். உண்மையில் கொஞ்சம் இவன் ஓவராகக் காதலிப்பதினால்தான் இவன் காதலிகள் விட்டால் போதும் என்று ஓடி விடுகிறார்களோ என்று தோன்றும். “கொஞ்சம் அன்பை கட்டுப்படுத்து டா” என்றால் “ஏன்” என்று கேட்பான்.

ம்ம் சொல்ல மறந்துவிட்டேன், லக்ஷ்மன் என்ற என் பெயரை சுருக்கி முடிவில் ஒரு இழுவையுடன் எனக்கு பிடிக்காத மாதிரி “லக்ஸு ” என்று அழைத்து வெறுப்பேத்துவான்.

எங்கள் இருவருக்குமே வீடு கோவையில் தான், வார இறுதிநாட்களில் கோவையை சுற்றி இருக்கும் ஏதாவது பழைய கோவில்களுக்குப் போவதுதான் எங்கள் பிரதான பொழுதுபோக்கு, இதை தவிர நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுவோம், அவ்வளவு தான்.

இப்படியே போய் கொண்டிருந்த எங்கள் வங்கி பணி வாழ்வில் மலருக்கு அடுத்து எல்லோரும் ஆவலுடன் பணிக்கு வந்தது, நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பெண் பணியாளர் ஒருவர் ( அதுவரை எங்கள் கிளை ஆண்கள் உயர்நிலை பள்ளி போல தான்) பெருநிறுவனக் கடன் வழங்கும் துறைக்கு சேர்ந்த அன்று தான்.

சந்தியா கோவைக்கு புதுசு, அவளின் சொந்த ஊர் மதுரை.

கோவையே எங்கள் கையில் என்னும் அளவுக்கு எப்போதும் பெருமை அடிக்கும் எனக்கும் மலருக்கும் சொல்ல வேண்டுமா, வேறு வேறு ஊர்களில் இருந்து எங்கள் கிளையில் பணியாற்றிய கண்ணன், ஜம்பு சார் போன்றவர்களை ஓரம்கட்டிவிட்டு சந்தியாவிற்கு அறிவிக்கப்படாத கோவை நகர ஆலோசகர்களாக நாங்களே எங்களை நியமித்துக்கொண்டோம்.

வீடு, உணவு டெலிவரி செய்வதற்கு ஒரு மெஸ் என்று கொஞ்சம் தினசரி விஷயங்களுக்கு தீர்வு கண்டவுடன், ” நீங்க என்ன பொண்ணுனு பார்க்க வேண்டாம், வார இறுதிகளில் வெளிய போகும் போது என்னையும் கூட்டிகிட்டுப் போங்க,” என்று உரிமையுடன் சந்தியா ஒரு நாள் சொன்னது தான் போதும் என்று அவளையும் புது சைக்கிள் ஒன்று வாங்க வைத்து ஆவரம்பாளையம் முதல் அன்னூர் வரை சைக்கிள் பயணம் செய்தோம், மலர் கேள்விப்பட்டிராத பழைய கோவில்களை தேடிப் பிடிக்க, வார இறுதிகளுக்கு வெள்ளிக்கிழமையே திட்டமிடல் தொடங்கிவிடும்.

சந்தியாவிடம் பிடித்தது ஒரு முறை கூட எங்களிடம் பெண்மைக்கான நளினங்கள் என்று வரையறுக்கப்பட்ட ( யார் இவற்றை எல்லாம் வரையறுத்தார்களோ) நடத்தையை அவள் வெளிப்படுத்தியதே இல்லை என்பது தான்.

சந்தியா தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமே ” இங்க கோடு கிழிச்சிருக்கேன், நானா தாண்டுனாதான் உண்டு” என்று ஒரு வித கம்பீரமும் தெளிவும் கொண்டதாக இருக்கும். கண்ணன் சாருடன் கோவையின் பெருநிறுவனங்களுக்கு சென்று வருவது, அவர்களைக் கையாளும் விதம் எதிலும் ஒரு தொழில்முறை நேர்த்தி இருக்கும்.

சிறந்த உரையாடல்களும், மிக சிறந்த வாக்குவாதங்களுமாக சைக்கிள் பயணங்களில் எங்கள் மூவரின் நட்பும் ஓடிக்கொண்டிருந்தது.

சந்தியாவிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம், விவாதிக்கலாம், புலம்பலாம்…காது கொடுத்து கேட்பாள்.

முதலில் நான் தான் ஆரம்பித்தேன். வங்கிகளின் மென்பொருள் தயாரிப்பிற்காக மென்பொருள் துறையில் வங்கிப் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக எனக்கு கிடைத்த தகவலை மலரிடமும் சந்தியாவிடமும் கூறினேன்.

வேலை துபாயின் அரசாங்க வங்கிக்கானது என்றும், நாம் முயன்றால் பிசினஸ் அனலிஸ்ட் வேலை கண்டிப்பாகக் கிடைக்கும் என்று எங்கள் பேச்சு நீண்டது.

மலரும் ரொம்ப உற்சாகமாக “கண்டிப்பா முயன்று பார்க்கலாம்,” என்றான்.

“நீங்க ரெண்டு பேரும் மொதல்ல வேலையில சேருங்க, நான் அப்படி உடனே வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறேன்னு எங்க வீட்ல சொல்ல முடியாது, கொஞ்சம் பொறுத்து பாக்கலாம்,” என்றாள் சந்தியா.

ஏறத்தாழ ஒரு வருடமாக நாங்கள் மூவரும் நண்பர்களாக இருந்தாலும் தன் குடும்பத்தைப் பற்றி மட்டும்தான் சந்தியா எங்களிடம் கூறி இருக்கிறாளேயன்றி மேலதிகமாக எங்கள் இருவரையும் போல குடும்பச் சண்டைகள், சொத்துப் பிரச்சனை, சொந்த அக்காவுடன் நடக்கும் நீதிமன்ற வழக்கு என்று ஒன்று விடாமல் நாங்கள் அவள் முன்னிலையிலேயே பேசிக்கொள்வது போல அவள் ஒன்றும் கூறியதில்லை.

இரண்டு மாதத்தில் முதலில் மலருக்கும் அடுத்து எனக்கும் துபாய் வங்கியில் வேலை கிடைத்தது.

நாங்கள் துபாயிலும் சந்தியா கோவையிலும் இருந்தாலும் எங்கள் நட்பு அலைபேசியின் குரூப் கால் புண்ணியத்தில் அப்படியே தான் இருந்தது.

ஒரு பொங்கலன்று அலைபேசியில் அழைத்த சந்தியா, தான் மலரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாவும், மூவரும் அது குறித்து பேசி முடிவெடுக்கலாமா என்றும் கேட்டாள்.

அலுப்பாக போய்க் கொண்டிருந்த எங்களுக்கு இந்த விஷயம் போதாதா, அடுத்த இரண்டு மாதத்திற்கு, எங்கள் காதுகளே “டேய் போதும் நிறுத்துங்கடா” என்று கதறும் அளவுக்கு திட்டமிடல் என்ற பெயரில் பேசித் தீர்த்தோம்.

மலருக்கு கல்லூரிக்கு அடுத்து வாய்த்த இரண்டாவது காதல் இது.

சந்தியா வீட்டிலும் பெரிதாக எதிர்ப்பு இல்லை என்று தான் நினைத்திருந்தோம், அந்த அழைப்பு அன்று இரவு வரும் வரை.

சந்தியாதான் அழைத்தாள், இன்னும் இரு வாரங்களில் தனக்கும் தன் அத்தை மகனுக்கும் திருமணம் என்றும் அதற்கு அவள் சொன்ன காரணம் , ஏதோ திரைப்படங்களில் வரும் கதை போல இருந்தது.

சந்தியாவின் அப்பாவிற்கு ஒரு அக்கா.

சந்தியாவின் அப்பா தன் திருமணம் முடிந்த பின்பு நடத்திவந்த உரக்கடையில் நஷ்டம் ஏற்பட, அவரின் அக்கா கணவர்தான் பெரிதும் பண உதவி செய்திருக்கிறார். அதற்கு அன்று திருப்பிக் கொடுக்கப் பணவசதி இல்லாததால் அதற்கு பதிலாக சந்தியாவின் தாத்தா அவர்களின் பூர்வீக வீட்டை தன் மகளுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். அந்த அக்காவின் மகனுக்குத்தான் சந்தியாவை இப்போது திருமணம் செய்யவிருக்கிறார்கள். சந்தியாவின் அப்பாவிற்கு அந்த பூர்வீக வீட்டை திரும்ப தன் குடும்பத்துக்குள் கொண்டு வர வேறு வழி இல்லை என்றும், எவ்வளவு காலம் உழைத்தாலும் மீண்டும் அது போன்ற வீட்டை வாங்கவோ கட்டவோ முடியாது என்றும் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

சந்தியாவின் அத்தையும் “பொண்ண குடு, வீட்டை எழுதிக்கோ” என்று பேச, சந்தியாவும் சம்மதித்திருக்கிறாள்.

“நீ ஏன் சந்தியா ஒத்துக்கிட்ட ” என்று மலர் கேட்ட போது, “என் அத்தை பையன் மேல காதலெல்லாம் இல்லை, ஆனா அவன் கெட்டவனும் இல்லை. கண்டிப்பா நல்லாவே குடும்பம் நடத்தக்கூடியவன் தான் என்னை ஒன்னும் பாழ் கிணத்துல எங்க அப்பா தள்ளல. பூர்வீக வீடு கெடைக்கறதுக்கு இது தான் வழி, அதப் பண்றேன் அவ்வளவு தான், ஏன் என்னைவிட அந்த வீடு தான் பெருசா, அப்போ ஏன் என்கிட்ட கல்யாணம் பணிக்கலாமான்னு கேட்ட, காதலுக்கு என்ன அர்த்தம், இப்படி எல்லாம் நீ கேள்வி கேட்கலாம், அது எல்லாத்துக்கும் ஒரே பதில் இப்போ இருக்கற சூழ்நிலைக்கேத்த மாதிரி நான் முடிவெடுக்க வேண்டி இருக்கு, அதுக்காகப் பின்னாடி நான் வருத்தமும் படலாம், சந்தோஷமும் படலாம் அத அன்னிக்கு பாத்துக்கலாம். இப்போதைக்கு ஒரு சின்ன மன்னிப்புடன் எனக்கு வழி விடுங்கள்,” என்று சொல்லி அந்த அழைப்பை துண்டித்தாள்.

நம்ம மலரும் ஒரு மாதம் அலசி அலசி, முடிவில் சந்தியாவின் முடிவு சரியே என்று மனதைப் பயிற்றுவித்து (வேறு எப்படி இதை முடிவிற்கு கொண்டு வருவது) சகஜமாகினான்.

மலரிடம் எனக்கு பிடித்த குணமே எது நடந்தாலும் அதை தாண்டி அடுத்த விஷயத்துக்கு போய் விடுவது தான்.

துபாய் வாழ்க்கை சலிக்க ஆரம்பித்தவுடன் அடுத்த காதல் வாய்த்தது.

இந்த முறை வாய்த்தது துபாயில் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் அறிமுகமான நவ்யா என்ற ஒரு கேரளா தேவதை.

செவிலியராக பணிபுரியும் தன் அக்காவின் கைக் குழந்தையை மூன்று மாதம் பார்த்துக்கொள்வதற்காக நவ்யா வந்திருந்தாள்.

அன்றாடங்களின் சலிப்பு, பேசத் துணை இல்லாதது என்று நாங்களாக நினைத்துக்கொண்ட காரணங்களால் நவ்யா எங்களிடம் சாதாரணமாக உரையாடும் போதும், ஏதோ அவளுக்கு எங்களுடன் பேசுவது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது என்று ஒரு பெருமிதத்துடன் பேசினோம்.

மலருக்கு நவ்யாவை ரொம்பவே பிடித்திருந்தது.

அவளின் தெளிவான பேச்சு, வாழ்க்கையைப் பற்றிய திட்டமிடல், வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ளும் பாங்கு எல்லாமே அவள் வயது பெண்களில் ஒரு சிலருக்கு மட்டுமே உடையது.

பார்த்தான் மலர், “நவ்யாவ கல்யாணம் பண்ணிக்கட்டுமா” என்று என்னிடம் ஒரு நாள் கேட்டான்.

” ஏன்டா கல்யாணம் கல்யாணம் னு இருக்க, எல்லாரும் கல்யாணம் பண்ணாம தள்ளித்தான் போடுவாங்க,” என்று சொன்ன என்னை முறைத்துவிட்டு, ” லக்ஸு கல்யாணம் பண்ணுகிற வரைக்கும் அந்த பொண்ணு என்னவோ வேறு ஒருவருக்கு உரியவங்கன்னு தோணிக்கிட்டே இருக்கு,” என்று எனக்கு சில காதல் பாடங்களை எடுத்தான்.

“ஏன்டா பொண்ணுங்க தான் விட்டுட்டு போய்ட போறான்னு கல்யாண பேச்சை ஆரம்பிப்பாங்க . நீ பேச ஆரமிச்ச ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டா யாரு ஒதுக்குவாங்க?” என்று நான் சொல்ல,

“லக்ஸு எனக்கு ஒரு வீடு, அந்த கல்யாண பந்தம், அதுல இருக்கற ஒரு பொறுப்புன்னு நான் நெனைக்கிற உணர்வு …இது தான் வேணும்,” என்று விவாதமாக மாறியது. அவன் சொல்வது எனக்குத்தான் புரியவில்லையா என்று யோசித்தவாறே இருவரும் சாப்பிட்டு முடித்தோம்.

உண்மையில் எனக்கு மலரை ஓரளவாவது தெரியும்.

அவன் அவனது வயதுக்கு மீறிய பொறுப்புடன் தான் எப்போதும் வெளிப்படுவான்.

இங்கு துபாய் வீட்டில் கூட வீட்டை பராமரிப்பது, மாதாந்திர கட்டணங்கள் செலுத்துவது, கோவையில் இருக்கும் அவன் அம்மா அப்பா வீட்டு நிர்வாகம், என் வீட்டு நிர்வாகத்துக்கு ஆலோசனை என்று கொஞ்சம் அதீத பொறுப்புதான்.

மலர் மாதிரியான ஆட்களுக்கு, அன்பையும் பொறுப்பாக இருப்பதன் மூலமே வெளிப்படுத்த தெரியும், அதனாலேயே அவனுக்கு எப்போடா கல்யாணம் பண்ணுவோம்னு தோன்றுவது இயல்பே என்று ஒருவாறு புரிந்துகொண்டேன்.

முடிவில் நவ்யாவிடம் கேட்டே விடுவது என்று அன்று மாலை கேட்டும்விட்டான்.

“அய்யோடா, கல்யாணமெல்லாம் எங்க நாயர் ஆளுங்களைத்தான்” என்று அதிகம் ஏதும் பேசாமல் சென்றுவிட்டாள்.

“எனக்கும் கல்யாணத்துக்கும் ஏதோ ராசி இல்ல லக்ஸு ” என்று சில பல சமாதானங்களுடன் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.

மெதுவாக மலருக்குள் இருந்து பூதம் தலை காட்டியது.

அவ்வப்போது ஸ்ரீவள்ளி (இது அவன் கல்லாரி காலத்து காதலி ), சந்தியா, நவ்யா எல்லோரையும் மிக மிக நாசுக்காக பழி சுமத்தி பேச்சை ஆரம்பிப்பான்.

“விடு டா அவங்க அவங்க மனசுல என்ன இருந்துச்சுனு நமக்கு என்னிக்கும் தெரியப்போறது இல்ல ” என்று நான் சொல்லும்போது, ” இல்ல சும்மா சொல்றேன், என் வாழ்க்கையில விளையாடிட்டாங்க,” என்று முடித்து கொள்வான்.

நாள் போக போக, சுய பச்சாதாபம் அதிகமாகவும், கோபம் குறைவாகவும் வெளிப்பட்டது. பின்னர் வந்த நாட்களில் விகிதாச்சாரம் மாறியது. அவர்கள் மேல் கோபம் அதிகமாகவும் தான் ஏதோ ரொம்ப பாதிக்கப்பட்டவன் போலவும் புலம்பல் தொடங்கியது.

தான் பாதிக்கப்பட்டதனாலேயே தான் செய்தது சரி என்ற வாதத்துடன் முன்னாள் காதலிகளை குறை சொல்லி வந்தான். “அன்ப திணிக்க முடியாது மலரு,” என்று சொன்னால் அமைதியாவான். மறுபடியும்

” என்னை வேண்டாம் னு சொல்ல என்ன காரணம் இருக்க முடியும் சொல்லுங்க,” என்று தொடங்குவான்.

இத்தகைய நிலையில் தான் கொரோனா தொற்று காரணமாக நாங்கள் இருவரும் கோவையில் இருந்து வேலையைத் தொடரலாம் என்று எங்கள் வங்கி அனுமதி அளித்தது.

சேர்ந்தே துபாயில் இருந்த போது ” என்ன லக்ஸு, கேக்கறீங்களா….அன்னிக்கு,” என்று எந்நேரமும் இந்த பெண்களைப் பற்றிக் குறை சொல்லி சொல்லி மனதை ஆற்றிக்கொண்டவன், கோவைக்கு வந்தவுடன் அவரவர் வீட்டில் இருந்ததால், நினைத்தால் அலைபேசியில் அழைப்பான், எடுக்காவிட்டால் கிளம்பி வந்து விடுவான்.

ஒரு கட்டத்தில் இவனை மனநல மருத்துவரிடம் அழைத்து போகலாமா என்று நினைத்தேன்.

அப்படி அன்று காலை ஆறு மணிக்கு அவன் அழைத்தது ” ஸ்ரீலங்கா போலாம்” என்று சொல்வதற்கு.

“எனக்கு ஒரு பிரேக் வேணும் லக்ஸு, எனக்கே தெரியுது இப்போதைக்கு கல்யாணத்த தவிர வேற எதுலயாவது கவனத்தை மாத்தணும் நான்,” என்று அவனாக சரணடைந்தான். சரி பையன் பழையபடி மாறி பொலம்பறத நிறுத்தினா தேவலாம் என்று “போலாம்” என்றேன்.

வழக்கம் போல திட்டம் எல்லாம் போட்டு சுற்றுலா வழிகாட்டி நிறுவனம் மூலமாக ஐந்து நாள் பயணமாக ஏற்பாடாகியது.

கொழும்பு போய் இறங்கி எங்களை அழைத்து செல்ல வந்த வழிகாட்டியைப் பார்த்தவுடன் மலருக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது.

ஐம்பதுகளின் கடைசியில் இருந்த அவர் படு சுத்தமாக உடைஉடுத்தி, சரளமான ஆங்கிலத்தில் எங்களுடன் உரையாடினார்.

” ஒரு இள வயது வழிகாட்டிய அனுப்புவாங்கன்னு பார்த்தா, இந்த தாத்தாவை அனுப்பி இருக்காங்க, இவர் என்னத்த சுத்தி காட்டுவாரு,” என்று கடுப்பானான்.

வழிகாட்டியின் பெயர் தாமஸ்.

முதல் சந்திப்பிலேயே மலர் அவரிடம் துடுக்காக ” நீங்கள் தமிழா சிங்களமா” என்று கேட்க ” இந்த பயணம் முடிவதற்குள் நீங்கள் அதை கண்டுபிடியுங்கள்,” என்று சொல்லி அவர் சிரித்தார்.

ஆரம்பித்தது பனிப்போர்.

எப்போவாது தம்மடிக்கும் மலர், சிகரெட் பிடித்துவிட்டு வண்டியில் ஏற போக, தாமஸ் சார் ” ச்சூயிங் கம் எடுத்துக்கோங்க ” என்று நீட்ட , இவன் ” என்கிட்ட மௌத் பிரெஷ்னேர் இருக்கு” என்று முகத்தில் அடித்த மாதிரி சொன்னதை அவர் பொருட்படுத்தவில்லை.

முதல் நாள் மதிய உணவுக்காக எங்களைக் கேட்டுவிட்டுத்தான் ஒரு சிங்கள உணவகத்தில் நிறுத்தினார். சாப்பாடு, மீன், கத்தரிக்காய் எல்லாம் சேர்த்து வாழை இலையில் கட்டிய ஒரு பொதி சோறு பிரமாதமாக இருந்தது.

“வாழை இலை வாசம் ரொம்ப நல்ல இருக்குல்ல, அது தான் இந்த பொதி சாப்பாட்டோட சிறப்பு” என்று தாமஸ் சார் சொல்ல, மலர் உடனே ” எங்க வீட்ல தினமுமே வாழை இலைலதான் சாப்பிடுவோம்” என்று சொல்லி அவரின் உற்சாகத்தை வடிய வைத்தான்.

முதல் நான்கு நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை என்று சுற்றி விட்டு நுவரெலியா செல்லும் போது வழியில் யானையை பார்த்தோம். தாமஸ் சார் மிகுந்த உற்சாகத்துடன் ” பாருங்கள் ஸ்ரீலங்கன் காட்டு யானை, என்னுடன் பயணித்த ஒருவரையும் யானையை காட்டாமல் நான் வழிஅனுப்பியதே இல்லை” என்று பெருமையாக சொல்ல, மலர் ” எங்க ஊர்லயும் காட்டு யானை இருக்கு சார் ” என்று அவரை கிடைக்கும் சந்தர்பத்திலெல்லாம் மூக்கை உடைத்து தன உள்மன வெறுப்புகளுக்கு வடிகால் தேடினான்.

அன்று இரவு ” நீ ஏன் தாமஸ் சார் கிட்ட இவ்ளோ ரூடா இருக்கற மலர் ” என்றதற்கு ” தெரில அவரை எனக்கு பிடிக்கல” என்றான்.

” அவரை எதுக்கு உனக்கு பிடிக்கணும், இந்த பயணம் முடிஞ்சு இங்க இருந்து கிளம்பிட்டா அவர் யாரோ நாம யாரோ, நீ உள்ள இருக்கற வெறுப்பை அவர் மேல ஏத்தி வெளிக்காட்டுகிறாய்” என்று சொல்லிவிட்டு அமைதியானேன்.

” உண்மை தான். ஒருத்தரிடமிருந்து இன்னொருவர்மேல தான் வெறுப்பை மாத்தறேன், சுத்தமா துடைச்சு வீச முடில,” என்று நிதானமாக சொல்லிவிட்டு அழுதான்.

அடுத்த நாள் தான் பயணத்தின் கடைசி நாள், தாமஸ் சார் எங்களை நுவரெலியாவில் இருக்கும் புகழ் பெற்ற தேயிலை தொழிற்சாலைக்கு அழைத்து சென்றார்.

போகும் வழியில் ரோட்டோரம் விற்ற ஸ்ட்ராவ்பெர்ரி வாங்கி தந்தார் தாமஸ் சார்.

மலரிடம் ஸ்ட்ராவ்பெர்ரி டப்பாவை அவர் நீட்ட, எதுவும் பேசாமல் ஒன்றை எடுத்துக்கொண்டான்.

தொழிற்சாலையை சுற்றி பார்த்து விட்டு, தொழிற்சாலைக்கு உள்ளேயே விதம் விதமாக தேநீர் மற்றும் கேக், பேஸ்ட்ரி கிடைக்கும்ஒரு சிறு உணவகத்துக்கு அழைத்து சென்றார்.

காலனிய பாணி கட்டிடடமும், மரங்களால் அமைந்த கூரையும் அந்த உணவகத்துக்கு ஒரு அழகை கொடுத்திருந்தது.

“நுவரெலியா எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏன் சொல்லுங்க ” என்று எங்களை பார்த்து புன்னகைத்தார்.

நாங்கள் விழிக்க, அவரே தொடர்ந்தார், ” யுத்த காலத்துல நான் இங்க தான் வசிச்சேன், நான் காதலித்த பெண் இந்த தேயிலை தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரியின் மகள்,” என்று அவர் சொல்லி வாய் மூடும் முன்பாக மலர், “அவங்களயா இப்போ கல்யாணம் செய்து இருக்கீங்க” என்று முந்திக்கொண்டு கேட்டான். ” கல்யாணம் கட்டி இருந்தா இப்போ இவ்ளோ ஸ்பெஷல் ஆக சொல்லிக்கொண்டிருக்க மாட்டேனே” என்று வாய்விட்டு சிரித்தார்.

“அவர் தமிழர், கால் முட்டி வரை நீண்ட கூந்தல் இருக்கும், மகா அழகி, காதல் விஷயம் வீட்டில் தெரிந்தவுடன், நான்கே நாட்களில் அவரை பேக் பண்ணி அவரின் உறவுகளிடம் கனடாவிற்கு அனுப்பிவிட்டார்கள்” சொல்லும்போது சிரித்துக்கொண்டே தான் சொன்னார் ஆனால் கண்கள் தானாக கலங்கியது.

“என்ன தாமஸ் சார் கண்ணு கலங்குது” என்று மலர் கிண்டல் செய்து சகஜமாக்க முயன்றான்.

“அவங்கள எப்போவாச்சும் மறுபடியும் பாத்தீங்களா, பேசுனீங்களா” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டான்.

” ஓ எங்கட நாட்ல வீட்டுக்கு ஒருத்தர் கனடா பிரான்ஸ்னு இருப்பாங்க தானே, எண்ட அக்காளோட மகன் கனடால தான், அவன் அவளிண்ட முகவரி கண்டுபிடிச்சு அவள் நல்ல சுகமாய் இரண்டு மகன்களோட, கணவரும் நல்ல பதவில இருப்பதாகவும் தெரிந்து வந்து சொன்னான்.”

” என்ன விடப் பெறுமதியான வாழ்க்கைதானே அவளுக்கு கிடைச்சிருக்கு அது எனக்கு மன சமாதானம் ” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும், அவர் கை விரல்கள் பிசைய, தொண்டை குழி ஏறி இறங்குவதை நான் கவனித்தேன்.

கண்டிப்பாகக் கேட்பான் என்று நான் நினைத்தேன், ஆனால் மலர் அமைதியாக தாமஸ் சாரை பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏதோ நினைவு வந்தவர் போல தன் தலையை இடவலமாக இருமுறை ஆட்டி விட்டு தனக்காக சொல்லிக்கொள்வதுபோல ” அவங்க சூழ்நிலை” என்று மட்டும் மெதுவாக சொல்லிவிட்டு மேலே என்ன பேசுவது என்று தத்தளித்தவாறு தன் முன்பு இருந்த தேநீரை பார்த்தபடி இருந்தார்.

“வாங்க நாம் ஒரு லவங்கப்பட்டை டீ ட்ரை பண்ணலாம்” என்று மலர் எழுந்து அவருக்கு கை நீட்டினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.