கல்கோனாக்கள் கரைவதில்லை

‘தூங்கு..தூங்கு..பாலா நீ..’ என்ற எருமைக்குரல் காதில் நுழைந்து மூளையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன் நிலக்கோட்டைக்கும் மதுரைக்கும் நடுவே. சரியாக காதுக்கு நேரே ஒலிபெருக்கிக்குழாய். என் தூக்கத்தைக் கெடுத்த அந்தப் பாடகன்(பாதகன்?) யார் என்று பார்ப்பதற்குள் பேருந்து ஊரைக்கடந்து விட்டது. சர்ச்சில் ஒரு விழா. சர்ச்சை வைத்துத்தான் ஊரே. ஊர் பெயர் முருகத்தூரான்பட்டி. எங்கே கேட்டிருக்கிறேன் இந்தப் பாடலை? ‘தூங்கு ….தூங்கு..பாலா நீ’ தாலாட்டுப்பாடி கிழவனையே எழுப்பிவிட்டான். பாலனா தூங்குவான்? கண்டுபிடித்து விட்டேன். ‘பெத்தலையில் பிறந்தவரை போற்றித்துதி மனமே?…’ ‘குளிரும் பனியும் கொட்டிலிலே..கோமகனும் தொட்டிலிலே…ஆரீரோ..ஆரீரோ..ஆரிராரோ…’ என்ற வரி அன்றைக்கு முழுதும் அலைக்கழித்தது. சுசிலாவோ லீலாவோ பாடிய இனிமையான பாடல். அடேயப்பா..கேட்டு நாற்பது வருடங்கள் இருக்கும். எப்போதோ வானொலியில் கேட்டது.    

அகில இந்திய வானொலி தொடக்க இசை 

இதெல்லாம் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபதுகளின் பிற்பகுதியில். அன்றைக்கு சினிமாவைத் தவிர இருந்த ஒரே பொழுதுபோக்கு வானொலிதான். அதிகாலையில் அகில இந்திய வானொலியின் தொடக்க இசையோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். முதலில் வந்தேமாதரம், தொடர்ந்து பக்திப்பாடல்கள். முக்கியமான மூன்று மதப்பாடல்களும் போடுவார்கள். இதிலிருந்து மதங்களே மொத்தம் மூன்றுதான் என்பதே அன்றைய மக்களின் புரிதல். ‘உனைப் பாடும் தொழிலன்றி வேறு இல்லை’ என்பார் டி.எம்.எஸ். எவ்வளவு பெரிய பொய்? பொதுவாக திரைப்படங்களில் அசரீரியாக அலறும் சீர்காழி கோவிந்தராஜன் நல்ல அமுந்த குரலில் பாடிய பக்திப்பாடல்களைப் போடுவார்கள்.’சின்னஞ்சிறு பெண்போலே…’, ‘உள்ளெமெனும் கோவிலிலே..’,’தணிகை மலைப்படிகள் எல்லாம்…’, ‘காவிரி சூழ்பொழில்..’, இப்படி. ஜெய விஜய பாடிய ‘படிப்படியாக உயர்ந்தபடி….’ , எஸ்.பி.பி சினிமாப் பாடல்களைப் போலவே கொஞ்சிக் குழைந்து பாடிய ‘திருத்தணிகை வாழும் முருகா…’,’திருப்பதி மலை வாசா…’ நல்லவேளையாக சிரிக்கவில்லை. ஜிக்கியின் ‘தேனினிமையிலும் யேசுவின் நாமம்..’, ‘தந்தானே துதிப்போமே…’, சுசிலாவின் ‘அய்யய்யா நான் வந்தேன்…தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்..’ போன்ற   கிறித்துவப்பாடல்கள்.  ‘ஈச்சை மரத்தே இன்பச்சோலையில்… ‘,’கருணைக் கடலாம் காதரு வலியின் காரணச்சரிதம் கேளுங்கள்…’ போன்ற இஸ்லாமியப் பாடல்கள் உடனே நினைவுக்கு வருபவை. அநேகமாக தினமும் நாகூர் ஹனீபா பாடல் உண்டு.  எந்தமதத்திற்கும் பொருந்தும் ஜேசுதாசின் ‘அருள்வடிவே..பரம்பொருள்வடிவே..’ என்ற பாடலும் எப்போதாவது உண்டு.

அது முடிந்ததும் வேளாண் அரங்கம். ‘விவசாயிகளே, உழவர் மன்ற அமைப்பாளர்களே’ என்று அழைத்து எண்டோசல்பான் இருநூறு மில்லியை எப்படியெல்லாம் தெளித்து பூச்சிகளை ஒழிக்கவேண்டும் போன்ற விவசாய நிகழ்ச்சிகள். சம்பாப்பருவம், தாளடிப்பருவம், பட்டுப்புழு, பாக்டம்பாஸ். தொடர்ந்து மாநிலச்செய்திகள். காந்தியநெறி மக்களுக்கு மறவாமல் இருக்க, காந்தியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி. ‘காந்தியைப் போலொரு சாந்தசொரூபனைக் காண்பதும் எளிதாமோ’ என்ற   எம்.கே.டியின் பாடல். தொடர்ந்து டெல்லிச் செய்திகள்.  தமிழில்தான். ஜெயம் என்று ஒருவர் வாசிப்பார். கணீரென்ற குரல். இதெல்லாம் எழுபதுகளில். பிறகு எண்பதுகளில் சரோஜ் நாராயணஸ்வாமி என்றொருவர் வாசித்தார். அதே கணீர்க்குரல். தொடர்ந்து சினிமாப்பாடல்கள் அரை மணிநேரம். பின் ஹிந்தியில் செய்தி. அதன் பின்னர் ஆங்கிலத்தில். ‘தினமும் தொடர்ந்து கேளுங்கள், ஆங்கில அறிவு வளரும்’ என்று வற்புறுத்துவார்கள் பெரியவர்கள். தொடர்ந்து கேட்டதென்னவோ சினிமாப் பாடல்கள்தான். எனவே, அது சம்பந்தமான அறிவே வளர்ந்தது.  பின்னாளில் ஆங்கிலப்படங்கள் பார்த்தபோது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதற்காகத்தான் பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டோம்.

நிகழ்ச்சிகளின் நடுநடுவே, ‘விளம்பர இடைவேளை’ நடைமுறையில் வராத அந்தக் காலத்தில் ‘நிலையவித்வான் வாசிக்கிறார்’ என்ற அறிவிப்போடு வீணை, வயலின் இசையை ஒலிபரப்புவார்கள். ஐயோ பாவம், பெயரையாவது சொல்லக்கூடாதா? என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பன் என்றைக்கு வீட்டில் உப்புமா செய்தாலும் ‘என்ன, இன்னைக்கும் நிலையவித்வானா?’ என்பான். சில சமயம் ‘ஜான் பி ஹிக்கின்ஸ் பாடுகிறார்’ என்ற அறிவிப்போடு ஒலிபரப்புவார்கள். வெள்ளைக்காரர் கர்நாடக சங்கீதம் பாடுவது ஆச்சரியமாக இருக்கும். கூத்தபிரான், டி.ஆர்.பாப்பா, வானொலி அண்ணா என்று சில பெயர்கள் அவ்வப்போது காதில் விழும். இரவில் செய்திகள், கர்நாடக அரங்கிசை, இந்தி, ஆங்கிலச் செய்திகள், தொடர்ந்து ஆல் இண்டிய ரேடியோ, சங்கீத சம்மேளன் இசை நிகழ்ச்சிகள், அநேகமாக பிஸ்மில்லாகான் ஷெனாய், வட இந்தியப்பாடகர்கள் என வாத்தியத்தாலும், வாயாலும் அழுது அன்றைய நிகழ்ச்சிகளை முடித்து வைப்பார்கள். சனி, ஞாயிறுகளில் தொடர் நாடகங்கள். இந்த இரவுநேர நிகழ்ச்சிகளெல்லாம் அன்று புழக்கத்தில் இருந்த மங்கிய பகலைப்போல ஒளிரும் குண்டு ‘பல்போ’டும், பச்சை விளக்கொளிரும் ஃபிலிப்ஸ் ‘வால்வு’ ரேடியோவோடும்தான் (மர்∴பி ரேடியோ, ட்ரான்சிஸ்டர்கள் எண்பதுகளின் நடுவேதான் வந்தது) நினைவுக்கு வருகின்றன.

அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா வானொலி நிலையங்களிலும் இதே நிகழ்ச்சிநிரல் தான். மொத்தநாளிலும் ஒரே ஒரு மணிநேரமே சினிமாப்பாடல்கள். சாதாரண, இசை  பண்பாட்டுப் பயிற்சியற்ற வளரிளம் பருவத்தினருக்கு  இந்நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட வெறுமையைப் புரிந்து கொள்ள நேரமில்லாமல், நாடே  கோல்ட் கண்ட்ரோல், எமர்ஜென்சி, அரசு ஊழியர் வேலைநிறுத்தம் என்று தொடர்ந்து ஒரே கொந்தளிப்பாக இருந்தபோது, அந்த வெறுமையைப் புரிந்து கொண்டு, இந்தப் பெரும்பான்மை சமூகத்தின் பொழுதுபோக்கு தாகத்தைத் தணித்து, மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதையே தனது முழுநேரப்பணியாகக் கொண்டிருந்தது அன்றைய இலங்கை வானொலி என்கிற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு. முழுநேரமும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பி இந்த சாதா’ரணங்களுக்கு’ மருந்து தடவியது. இலங்கை வானொலி பிரபலமான பிறகே ‘ட்ரான்ஸிஸ்டர்’ எனப்படும் சிறிய ரேடியோக்கள் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது. பேருந்து செல்லும் வழிதோறும் நீண்ட சுவர்களில் மர்ஃபி ரேடியோ விளம்பரங்கள். ‘ரேடியோ மெக்கானிக்’ என்பவர் சமூகத்தில் முக்கியமான ஒருவரானது அப்போதுதான்.

‘நாலு வகைப் பூவில் மலர்க் கோட்டை’ என்றொரு பாடல் ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ படத்திலிருந்து. ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது. இசை கங்கை அமரன். ஏ..ராசையா..என்று ஜானகி முடிக்காமல் இழுப்பார். அவ்வளவு சுகமாக, பள்ளிக்கூடம் விட்டு வருகிற ஆனந்த பரவசநிலைக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும். இன்றைய கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவின் முதல் படம். அதேபோல “மதுக் கடலோ மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ” என்றொரு பாடல் ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ படத்தில் ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது. சங்கர் கணேஷ் இசை. ‘எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ’ இசை இளையராஜா. பாடியவர்கள் ஜேசுதாஸ் – ஜானகி. படத்தில் பாடியவர்கள் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி. இது எப்படி இருக்கு? அட, படத்தோட பேரே அதுதாங்க. ‘மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜாச்செடி’ படம் மச்சானைப் பாத்தீங்களா? பாடியவர்கள் ஜேசுதாஸ் – சுசீலா. இசை சந்திரபோஸ். ‘சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்’ பாடலைப்பாடியவர்கள் எஸ்.பி.பி.- வாணிஜெயராம். படத்தில் பாடியவர்கள் மோகன் (மழைதருமோ உன்மேகம் பாடலில் வருவாரே) – கே.ஆர்.விஜயா. படம்: நாடகமே உலகம், இசை: வி.குமார். அவரின் இன்னொரு பாடல் ‘வாழ்வில் சௌபாக்கியம் வந்தது… ‘ எஸ்.பி.பி – சுசிலா படம் தூண்டில் மீன். ‘வா இந்தப்பக்கம்’ படத்தில் தீபன் சக்ரவர்த்தி – ஜானகி பாடிய ‘ஆனந்த தா..கம்..’ , இசை: ஷ்யாம்.  

மேலே குறிப்பிட்ட பாடல்களில் ஒன்று மட்டும்தான் இளையராஜா, மற்றதெல்லாம் வெவ்வேறு இசையமைப்பாளர்கள்.  ஆனால் என்னைப்போலப் பலரும் இதெல்லாம் இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தோம். அதேபோல் ‘நீ வரவில்லையெனில் ஆதரவேது’ (மங்கையர்திலகம்) ‘காணா இன்பம் கனிந்ததேனோ’ (சபாஷ்மீனா) போன்ற பாடல்களைப் பாடியவர் கண்டசாலா என்றுதான் ரொம்பநாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். பாடியவர்கள் முறையே சத்யம், டி எம்.மோதி என்று இப்போது காணொளிகளைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அதுபோலவே ஜெயச்சந்திரனுக்கும், ஜேசுதாசுக்கும்  வித்தியாசம் கண்டுபிடிப்பது எல்லோராலும் முடியாது. இதுபோல ஒருவருக்குக் கிடைக்கிற பெயர் இன்னொருவருக்குக் கிடைப்பது அன்று சாதாரணம். விஜயபாஸ்கர் என்றொரு இசையமைப்பாளர். இவர் இசையமைத்த ‘சம்சாரம் என்பது வீணை..’,’மோகனப்புன்னகை ஊர்வலமே’, ‘யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா..’ எல்லாம் எம்.எஸ்.வி யுடையது என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். மேற்கண்ட நுண்தகவல்களெல்லாம் பின்னாளில் ‘கூகுள்’நாதனின் துணையால் அறிந்தவை. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வரிசையாக வீடுகளிலிருந்தும், கடைகளிலிருந்தும் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த இந்தப் பாடல்களெல்லாம் வாயில் அதக்கிக் கொண்டிருந்த ஜவ்வு முட்டாயோடும், அது ஒலித்த மாலைநேர வெய்யில் பொழிவோடும்தான் நினைவுக்கு வருகிறது. 

‘குட்டிக்குறா’ பவுடர் போட்டுக்கொண்டு, தலையை ‘ப∴ப்’ வைத்து வாரிக்கொண்டு, அம்மா அப்பா கையைப் பிடித்துக்கொண்டு, வேர்க்க விறுவிறுக்க வரிசையில் நின்று, கலர் கலர் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, ‘திடு திடு’ வென்று ஓடி ‘பேக்பெஞ்’ சீட்டைப்பிடித்து, ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ பாட்டோடு ((பதினோரு மணிக்காட்சி மலையாளப் படத்துக்கும் இதே பாட்டுதான் என்றான் பின்னாளில் பள்ளி நண்பன் செல்லப்பாண்டி .’பின்ன, சாமி படம் சாமியைக் கும்புட்டுதான ஆரம்பிக்கணும்’)  ‘ஸ்லைடு’ களைப் பார்த்து, ‘விகோ டர்மரிக் இல்லை காஸ்மெட்டிக்’ விளம்பரம், உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கான விளம்பரங்கள். ‘பீகாரில் வெள்ளம்’ என்ற கனத்த குரலோடு ஆரம்பிக்கும் செய்திப்படம் முடிந்து, ஏழிலிருந்து ஆரம்பித்து ஒன்று வரை எண்கள் திரையில் தோன்றி மறைந்து, மழை பெய்வது போன்ற ‘ஸ்பெஷல் எபெக்ட்’ ல் நடுங்கும் சென்சார் செர்டிபிகேட்டோடு ஆரம்பிக்கும் படங்கள்தான் நமக்கு எவ்வளவு பரவசத்தை அள்ளிக்கொடுத்தன. அதுவும் எழுத்துப் போடும்போது ‘சண்டைப்பயிற்சி’ என்று யார் பேராவது போட்டால் மனது மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும். இதோ, இப்போது விரல்தொடுகையில்  ‘கெட்டிக்கார’ செல்பேசிகளில் பழையபாடல்களைக் காணுகிறபோதுகூட தியேட்டரில் சாப்பிட்ட முறுக்கையும், தேங்காய் போட்ட கடலை மிட்டாயையும் நாவில் உணரமுடிகிறது.   

எங்கள் வீட்டில் நாகம்மாள் என்றொரு சௌராஷ்டிரப் பெண்மணி வேலைசெய்தார். அம்மா, அப்பா வராத சமயங்களில் எங்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வது அவர் பொறுப்பு. தண்ணீர்புட்டி, கருப்பையா கடை முறுக்கு, முட்டைக்கோஸ் (கடலை மாவில் செய்தது), கடலை முட்டாய் சகிதம் கிளம்பிவிடுவோம். அன்றெல்லாம் டூரிங் தியேட்டருக்கு வெளியே படம் ஆரம்பிக்கும்வரை பாடல்கள் போடுவார்கள். பத்ரகாளி படத்தின்  ‘வாங்கோன்னா…வாங்கோன்னா..’தான் கடைசிப் பாடல். ‘வாங்கோன்னா..’ போட்டுட்டான், ‘எழுத்துப் போட்டுட்டான்..  ஓடு ஓடு என்று இடத்தைப்பிடிக்க ஓடுவார்கள் மக்கள். தரை டிக்கெட்தான். ஆத்து மணலை கொட்டி வைத்திருப்பார்கள். நாங்கள் சிறுவர்களாதலால் முன்னால் அமர்ந்திருப்பவர் மறைக்காமல் இருப்பதற்காக மணலால் சிறு குன்றுகளை எழுப்பி அதன்மீது அமரச் செய்வார் நாகம்மாள். மற்றவர்களுக்கு மறைக்குமே? அதனாலென்ன. படம் ‘கழுகு’. ‘ஒரு பூ வனத்துல’ என்ற பாடலில் ரஜினி ரயில் வண்டி போல (அந்தக் காலத்து கரி என்ஜினில் அப்படிதான் புகை வரும்) சிகரெட்டை ஊதிக்கொண்டே இருப்பார். ‘மிண்டப்பய, என்னா.. ஊது ஊதுறான்’ என்றார் நாகம்மாள் சத்தமாக. வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொன்னேன். ‘அதெல்லாம் செல்லமா திட்றது’ என்றார். இப்போதும் அந்தப் பாடலைப் பார்க்கும்போது அவருடைய ‘கமெண்ட்’ தான் காதில் ஒலிக்கிறது. ‘முரட்டுக்காளை’ படத்தின் இடைவேளையில் போனவாரம் படித்த ஏ.ஜி.கார்டினரின் ஆங்கிலக்கட்டுரையை மனப்பாடமாகச் சொல்லி ‘சினிமா பார்த்தால் படிப்பு வராது’ என்று யாரோ போகிறபோக்கில் சொன்னது உண்மையோ என்ற சந்தேகத்தை தூள்தூளாக்கியதும் நினைவுக்கு வருகிறது.  அன்றெல்லாம் படம் வெளிவந்தவுடனேயே அந்தப் படத்தின் பாடல்கள் அடங்கிய பாட்டுப்புத்தகமும் வெளிவந்துவிடும். கடும் பயிற்சிக்குப்பிறகு ‘எந்தன் பொன்வண்ணமே…’ என்ற டி.எம்.எஸ் சின் பாடலைப் பாடி பள்ளி ஆண்டுவிழாவில் மூன்றாம் பரிசு வாங்கினேன். ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ பாடி முதல்பரிசைத் தட்டிக்கொண்டு போனான் பீர்முகம்மது.  

இலங்கை வானொலி மதியம் 1.30 மணிக்கு இந்திப்பாடல்கள், 2 மணிக்கு இருபடப்பாடல்கள், 2.30 க்கு விவசாயிகள் விருப்பம், மூன்று மணிக்கு நேயர் விருப்பம், 4 மணிக்கு இசையும் கதையும் – கதை சொல்வார் அறிவிப்பாளர், நடு நடுவே பொருத்தமான சினிமாப் பாடல்கள். 4.30 க்கு ஒரு பொருட் கோவை என்று ஒரே சொல்லில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்கள்,  ஐந்து மணிக்கு டி.எம்.எஸ்ஸின் ‘பிறந்த நாள்…இன்று பிறந்தநாள்’ பாட்டோடு  பிறந்தநாள் வாழ்த்துக்கள், 5.30 மணிக்கு ஊற்று பொங்கி வழிவது போன்ற ஒரு இசையோடு ஆரம்பமாகும்  ‘பொங்கும் பூம்புனல்’, இரவில் தூங்கவைக்க ‘இரவின் மடியில்’ என்று நாள் முழுதும் சினிமாப்பாடல்களில் மிதக்க விடுவார்கள்.  ‘நல்ல தமிழ் கேட்போம்’ என்றொரு நிகழ்ச்சியில் அநேகமாக சிவாஜி கணேசனின் நீண்ட திரைவசனங்களை ஒலிபரப்புவார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘திரை விருந்’தில் திரைப்பட ஒலிச்சித்திரம். முழுப்படத்தின் வசனமும் இரண்டு வாரங்களாக ஒலிபரப்புவார்கள். நண்பன் வீட்டில் ‘பாசமலர்’ ஒலிச்சித்திரத்தைக் கேட்டு அவனுடைய அக்காக்கள் விசும்பி விசும்பி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியாக தொடக்க இசையும் (தீம் மியூசிக்) உண்டு. நடு நடுவே செய்திகள், மரண அறிவித்தல்கள், ‘டிக்கட்டுகள் மண்டப வாயிலில்’ என்று நாடக விளம்பரங்கள். இலங்கை வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி க்கான விளம்பரங்கள். சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கே…’,’சுராங்கனிக்கா மாலுக்கண்ணா..’ போன்ற பப்பிசைப்பாடல்கள்.

பொங்கும் பூம்புனல் இசை 

எம்.கே.டி , பி.யு .சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம், நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி, சிதம்பரம் ஜெயராமன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பி.சுசிலா, எஸ். ஜானகி, ஜமுனாராணி,சந்திரபாபு, எஸ்.பி.பி, கே.ஜெ.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன், பி.ஜெயச்சந்திரன் என்று பலரும் எனக்கு அறிமுகமானது அங்குதான். இவர்கள் பாடலை அவர்கள் ‘பேக்கேஜ்’ செய்கிற விதம்தான் அபாரம். ‘பாட்டும் பதமும்’ என்றொரு நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் ஒரு வாக்கியத்தைக் கூறுவார். அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆரம்பிக்கும் ஒரு பாடலைப் போடுவார்கள். வீட்டில் இருப்பவர்களிடையே அடுத்த பாடலைக் கண்டுபிடிப்பதில் ஒரு போட்டி இருக்கும். இலங்கை வானொலியின் பெரும்புகழுக்குக் காரணம் பரராஜசிங்கம், மயில்வாகனம் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா, ஜெயகிருஷ்ணா, விதூஷா, புவனலோசனி நடராஜசிவம், ராஜேஸ்வரி ஷண்முகம், அப்துல் அமீது என்று பெரும் நட்சத்திர அறிவிப்பாளர் வரிசை. பாடல்களுக்கு இவர்கள் கொடுத்த விளம்பரத்திற்காகவே இங்கு சுமாராக ஓடிய கமலின் ‘குரு’ இலங்கையில் ஒரு வருடம் ஓடியது. ஆழக்கடலில் தேடிய முத்து (சட்டம் என் கையில்) தூரத்தில் நான் கண்ட உன்முகம் (நிழல்கள்), புத்தம் புதுக் காலை (அலைகள் ஓய்வதில்லை), மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே (நண்டு) , சிப்பிக்குள் ஒரு முத்துவளர்ந்தது (விக்ரம்) போன்ற திரையில் ஒலிக்காத பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். 

அவர்கள் ஒலிபரப்புகிற பாடல்கள் கூட நம்முடைய வானொலி நிலையங்களில் பெரும்பாலும் ஒலிபரப்பாத பாடல்களாகத்தான் இருக்கும். எஸ்.பி.பி யின் ‘ஒரு சின்னப்பறவை அன்னையைத்தேடி’, ‘ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்’, ‘இல்லம் சங்கீதம்…’, ‘சித்திரப்பூ…சேலை’ – புதுச்செருப்பு கடிக்கும், ‘படைத்தானே பிரம்மதேவன்’, ‘வாழ்வில் சௌபாக்கியம் வந்தது’, ‘கண்ணெல்லாம் உன்வண்ணம்’, ‘விழியிலே மலர்ந்தது…’ ‘ காத்தோடு பூ உரச’ – அன்புக்கு நான் அடிமை, ‘தென்றலுக்கு என்றும் வயது பதினாறு அன்றோ ‘ ‘அவள் ஒரு மேனகை’ –  சிவரஞ்சனி, ‘ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை’ – ராகம் தேடும் பல்லவி , ‘ மலரே என்னென்ன கோலம்’ – ஆட்டோ ராஜா, ‘அந்தரங்கம் யாவுமே…எப்பிடி எப்பிடி’,’மௌனம் நாணம் மலரும் புதுயவ்வனம்’ – மயூரி, ‘நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே..’ ‘நீலக்குயிலே உன்னோடுதான் பண்பாடுவேன்…’ – மகுடி,’சந்தனப்புன்னகை சிந்திய கன்னிகை….’   போன்ற பாடல்களை இலங்கை வானொலியில் மட்டுமே கேட்டிருக்கிறேன். அதேபோல மலேசியா வாசுதேவனுக்கு  ‘எந்தாத்துப் பையனவன்..’,’சுகம் சுகமே..’,’பட்டுல சேல..கழுத்துல ரத்தினமாலை..’,’மலர்களே..நாதஸ்வரங்கள்…’ ,’மலர்களிலே ஆராதனை’ ‘பனிவிழும் பூ நிலவே’ ஜேசுதாசுக்கு  ‘ராஜா வாடா சிங்கக் குட்டி’, ‘காஞ்சிப் பட்டுடுத்தி…கஸ்தூரிப் பொட்டுவெச்சு’, ‘கூந்தலிலே மேகம் வந்து…’ – பாலநாகம்மா, ‘ஏதோ… நினைவுகள்…’, ‘ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா’, ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது’ ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’,  ‘உறவுகள் தொடர்கதை..’, ‘மலரே குறிஞ்சி மலரே’ ‘வீணை பேசும்…அது மீட்டும் விரல்களைக் கண்டு’ – வாழ்வு என் பக்கம், ‘மாம்பூவே..சிறு மைனாவே’.

இலங்கை வானொலியில் இடம் பெற்ற பாடல்களின் தொகுப்பு  

ஜெயச்சந்திரனுக்கு ‘மந்தார மலரே..’,’மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம்’,’ராஜாப் பொண்ணு..’ ‘பூ வண்ணம் போல நெஞ்சம்’ – அழியாத கோலங்கள், ‘ஊதக்காத்து வீசயில’, ‘நான் தாயுமானவன்’,’மாஞ்சோலைக் கிளிதானோ..’,’கலையோ..சிலையோ..’,’தவிக்குது..தயங்குது ஒரு மனது’ ‘ஒரு வானவில் போலே..’ ‘ஸ்விங்…ஸ்விங்…ஸ்விங்…உனது ஊஞ்சல் நான்’   என்று ஒவ்வொரு பாடகருக்கும் பிரத்தியேகப் பாடல்கள் உண்டு. சரியான ‘ஆணாதிக்கப்பன்றி’ யாக இருப்பாய் போலிருக்கிறதே? (சரஸ்வதி சபதம் முதல் சகலகலாவல்லவன் வரை இந்தப் ‘பன்றி’ களை வளர்த்தெடுத்ததில் சினிமாவுக்குப் பெரும்பங்கு உண்டு) இவர்களோடெல்லாம் பெண்களும் பாடவில்லையா என்ன, என்கிறீர்களா? உண்மைதான். சுசிலா, ஜானகி, வாணிஜெயராம் இவர்களுக்கும் இந்தப் பாடல்களின் வெற்றியில் பங்குண்டு. ஞாயிறு தோறும் தபால் ஓட்டுக்கள் அதிகம் பெரும் பாடல் முத்லிடத்தைப் பிடிக்கும். மாதக்கணக்காக முதலிடத்தில் இருந்தது ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…’ – வறுமையின் நிறம் சிவப்பு.  ஜாலி ஆப்ரஹாம் – பி.எஸ்.சசிரேகா பாடிய ‘அடியேனைப் பாரம்மா’ , ஜாலி – வாணி பாடிய ‘மலைராணி முந்தானை சரிய சரிய’, ஜானகி பாடிய ‘தென் இலங்கை மங்கை…வெண்ணிலவின் தங்கை’ – மோகனப் புன்னகை, ஜெயச்சந்திரன் -வாணி ஜெயராம் பாடிய ‘மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை…’, வாணி பாடிய ‘ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்’ , ‘நானே நானா..’  வாணி – ஜேசுதாஸ் பாடிய ‘கங்கை நதியோரம் ராமன் நடந்தான்….’  ‘திருத்தேரில் வரும் சிலையோ’ – எஸ்.பி.பி – சுசிலா போன்ற பாடல்கள், மற்றும் ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பி.பி.சீனிவாசின் பல பாடல்கள் இலங்கை வானொலியின் பெருவிருப்பப்பாடல்கள். ‘இன்பக்காவியம் யாவும் வாழ்வே…’, ‘சின்னச் சின்ன மூக்குத்தியாம்…’, ‘மெல்ல மெல்ல அருகில் வந்து.. – டி.எம்.சௌந்தர்ராஜன் ‘மாடப்புறா பாடுதம்மா..’ – கண்டசாலா, நீ இங்கிலாது யார் சொல்லுவார் நிலவே…’- சிதம்பரம் ஜெயராமன்   ‘கண்ணில் தோன்றும் காட்சி யாவும்…’ –  நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி, ஜிக்கி போன்ற மிகவும் பழைய பாடல்களையும் தொடர்ந்து ஒலிபரப்பி அடுத்த தலைமுறைகளும் அறியும்படிச் செய்தது இலங்கை வானொலி.

அன்றெல்லாம் சிற்றூர்களில் ஒரு வழக்கம் இருந்தது. கோயில் திருவிழா, பட்டிமன்றம், தேநீர்க் கடைகளில் கூட்டம் சேர்ப்பதற்காக திரைப்பட வசனங்களை ஒலிபரப்புவார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற புராணப்படங்கள், பட்டிக்காடா பட்டணமா, தில்லானா மோகனாம்பாள் போன்ற சமூகப் படங்கள் என்று சிவாஜி கோலோச்சிக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர் படம் என்றால் மதுரைவீரன் மட்டும் போடுவார்கள். ‘பதினாறு வயதினிலே’ படம் வந்தது. அடுத்த ரெண்டு வருடத்திற்கு எல்லா இடங்களிலும் சப்பாணியும், பரட்டையும், மயிலும்தான். அந்த வரிசையில் ‘மாந்தோப்புக் கிளியே’ சுருளிராஜன் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஆட்சி செய்தார். கோமல் சுவாமிநாதன் வசனத்தில் ‘தண்ணீர் தண்ணீர்’ வந்து நீண்ட நாட்கள் பேசப்பட்டது, கேட்கப்பட்டது. கடைசியாக நடிகை சுஜாதா ‘விதி’ படத்திலிருந்து ‘மிஸ்டர் தயாநிதீ…’ என்று கத்தியதோடு கடைகளில் வசனம் கேட்கிற கலாச்சாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.  ‘பிளேட்’டுகள் ஒழிந்து ‘டேப்’ கலாச்சாரம் துவங்கியது. வசனத்தின் இடத்தை பாடல்கள் எடுத்துக்கொண்டது. எங்கும் இளையராஜாவின் ஆட்சி. 

சிறுவயதில் நம்முடைய ரசனை அமைவது பெரும்பாலும் பெரியவர்களின் ரசனையை ஒட்டித்தான். சிறந்த நடிகர் சிவாஜி. சிறந்த பாடகர்                           டி.எம்.எஸ்.,ஹிந்துஸ்தானி என்றால் அழுதுவடிவது போன்ற பெரும் கருத்துத்திணிப்பு பலர் வீடுகளிலும் நடந்தது. அந்த நடிப்பையும், பாடலையும் திரையில் கொண்டுவரும் இயக்குனரும், இசையமைப்பாளருமே முதன்மையானவர்கள் என்றும் , திரை மொழிக்கான நடிப்பும், பரிமாணங்களுமே வேறு என்றும், சினிமா இசை மட்டுமே இசையல்ல என்றும் புரிய இன்னும் நீண்ட காலம் போகவேண்டியிருந்தது. கவிஞர் வாலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ‘பாடலாசிரியர், இசையமைப்பாளர்,பாடகர், இயக்குனர் இந்த நான்கு பேரின் பங்களிப்பில் ஒன்று பழுதானால் கூட பாட்டு விழுந்துவிடும்’ என்று. இதில் இந்த இசையோடு கூடிய ‘காட்சிப்படுத்தல்’ நமக்கு  வண்ணப் படங்கள் வந்தபிறகே குறிப்பாக மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் வருகைக்குப் பின்னரே கிட்டியது. அதுவரை கண்டதெல்லாம் காட்சிப்’படுத்தல்’ கள்தான். விதிவிலக்குகள் இல்லாமலில்லை. இந்த இசை ‘காணும்’ அனுபவத்தை மணிரத்தினம், சங்கர் போன்ற இயக்குனர்கள் மேலும் பல தளங்களுக்கு எடுத்துச்சென்றார்கள். இயக்குனரின் அழகியல் இதில் முக்கியமான காரணி. இயக்குனரின் அழகியலுக்கேற்றார்போல இசை அடையும் மாறுபாட்டை நாம் இளையராஜாவில் எளிதாகக் காணலாம். ஒரு ‘தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி…’ மணிரத்தினம் படத்திலும்,’ஓம் நமஹா..உருகும் உயிருக்கு’ பாக்கியராஜ் படத்திலும் நிகழ வாய்ப்பில்லைதானே?        

‘அள்ளிப்போட்டு வைப்போம் எதோ ஒண்ணு மொளைச்சு வரட்டும்’ என்று நினைத்தாரோ என்னவோ, எங்கள் அம்மா சின்ன வயதில் கடவுள் துதிப்பாடல்களோடு, ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ என்ற டி.எம்.எஸ் சின் பாடல்,  அதோடு ஏசுவின் பத்து கட்டளைகளைப் பட்டியலிடும் First I must honour God என்கிற கிறித்தவப் பாடல் ஒன்று, ஜிக்கியின் ‘கல்யாண ஊர்வலம் வரும்’ ‘சின்னப்பெண்ணான போதிலே..’ (டோரிஸ் டே பாடிய ‘when I was just a little girl’ இன் தமிழ் வடிவம்) போன்ற பாடல்கள், ‘மாதர் பிறைக்கண்ணியானை’ என்ற அப்பர் தேவாரம் என்று மானாவாரியாக விதைத்ததில் ஒரு ‘மியாவாக்கி’ இசைக்காடே உருவாகிவிட்டது. பின்னொரு நாளில் ‘மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்…’ என்று ஊரே கேட்டுக்கொண்டிருந்தபோது அதே படத்தின் ‘சம்மதம் சொல்ல வந்தாள்..’ , ‘தேகம் சிறகடிக்கும்..’ என்றும்,  ‘ஒரு மூடன் கதைசொன்னான்’ என்கிற ‘மெலோட்ராமா’ பாடலைத் தவிர்த்து அதே படத்தின் ‘கோடியின்பம் மேனியெங்கும்’ என்றும் கேட்கிற தேர்ந்தெடுத்த சினிமாப்பாடல் ரசனை அமைந்ததற்குப் பின்புலமும் சிறுவயதில் கிடைத்த அந்த இசையறிமுகமாகத்தான் இருக்கவேண்டும். 1985 ஆம் வருடம் இலங்கை இனக்கலவரத்தில் குட்டிமணி, ஜெகன் கொலையுண்டபோது மதுரை மேலமாசிவீதி வடக்குமாசிவீதி ஆலால சுந்தர விநாயகர் கோயில் முக்கில் சமீபத்தில் மறைந்த மதுரை ஆதீனம், நெடுமாறன் போன்றோர் உண்ணாவிரதம் இருந்தது நினைவுக்கு வருகிறது. அந்த வருடம் நான் பன்னிரெண்டாம் வகுப்பு மதுரை சேதுபதி பள்ளியில். இனக்கலவரத்தாலும் தொடர்ந்து நடந்த போராட்டங்களாலும்  நான்கு மாதங்கள் பள்ளி நடைபெறவில்லை. இலங்கை வானொலிக்கு முடிவு கட்டிய இனக்கலவரத்தின் தாக்கம் இறுதித்தேர்வு மதிப்பெண்களிலும் தெரிந்தது. கல்வி, வேலை, திருமணம், குடும்பம் என்று காலம் கரைந்தது.  

மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து ‘நினைவெல்லாம் நித்யா’ காதில் சிலுசிலுக்க சுல்தான் ரோடுவேசுக்காக காத்திருந்து ஏறிச்சென்ற காலமும் உண்டு. பின்னாளில் இந்தத் ‘தொல்லைகள்’ இல்லாத அமைதியான பயணத்தை விரும்பி அரசுப் பேருந்தில் ஏறிச்சென்ற காலங்களும் உண்டு. அன்றைக்குப் பிடிக்காத இந்துஸ்தானி இசை இன்றைக்குப் பெருவிருப்பமாய் உள்ளது. இன்றைக்கு அன்றைய ரசனைத் தெரிவுகளில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். சினிமாப் பாடல்கள் கேட்பதே கூட மிகக்குறைவே. சிறந்த படங்கள். சிறந்த இசை…இந்தா இந்தா என்று விரல்தொடுகையில் உயிர்பெறக் காத்திருக்கின்றன என்ற நிலையில் அந்தப் பழைய பாடல்களின் இன்றைய பெறுமானம் என்ன? விதிவிலக்குகள் தவிர, பல பாடல்களைத் திரும்ப பார்க்கக் கூட முடியாது. தரமான ஒலியமைப்பும் கூட,மிகவும் பின்னால், ஏ.ஆர்.ரகுமான் போன்ற புதிய அலை இசையமைப்பாளர்கள் வந்தபிறகே கிடைத்தது. ஆனால் ஆச்சரியமாக எல்லாப் பாடல்களையும் இன்றும் கேட்க முடிகிறது. இன்றும் கூட சரணத்தில் ஒரு வரி மனதில் எழுந்து இந்தப் பாடல்களையெல்லாம் அன்று முழுதும் மனதில் உருட்டிக்கொண்டிருக்கிறது. அந்த வளரிளம் பருவத்தில் கேட்ட அந்தப்பாடல்கள் நம் மனதைவிட்டு நீங்குவதேயில்லை. 

‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே ராகம்….’, ‘தெய்வீக ராகம்…தெவிட்டாத பாடல்..’,’என்னுள்ளில் எங்கோ…’ ,’தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு…’ என்று இனம் புரியாத சோகத்தையும், ‘நாதஸ்வர ஓசையிலே… தேவன் வந்து பாடுகின்றான்…’ ‘அம்மானை அழகுமிகும் கண்மானை..’, ‘ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…’ ‘விழியெனும் புதிய வானில்…. ‘ என்று இனம் புரியாத மன அமைதியையும், குதூகலத்தையும் மனதிற்குக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன அன்று கேட்ட பாடல்கள். பல பாடல்களின் ‘காணொளி’ யைத் தேடிக் ‘கேட்க’வாவது  தோன்றுகிறது. என்ன காரணம்? நமது மனம் இயல்பாக மகிழ்ச்சியான கணங்களை மனதில் உறையவைத்து அதில் தோய்ந்து கொண்டிருக்கவே விரும்புகிறது. இந்தப் பாடல்களைக் கேட்டது மகிழ்ச்சியான ஒரு காலகட்டத்தில் என்பது மனதில் உறைந்துபோன ஒன்று. சங்கப்பாடலில்(?)  சொல்லப்பட்ட பசும்புல்லை நக்கிக்கொடுக்கும் கிழமாடு போலத்தான். அன்றெல்லாம் கல்கோனா என்றொரு மிட்டாய் கிடைக்கும். வாயில் அதக்கிக்கொண்டால் நாள் முழுதும் அது பாட்டுக்குக் கரையாமல் கிடக்கும். இனிப்பு நீரை உள்ளே செலுத்திக்கொண்டு, மணிக்கணக்காக புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இந்தப் பாடல்கள் எல்லாம் நினைவின் மடிப்புகளில் என்றென்றும் உருண்டு கொண்டிருக்கும், நினைத்தாலே இனிக்கும் கல்கோனாக்கள்.      

இந்தக் கட்டுரையைப் படிக்கும் அடுத்த தலைமுறையினர் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ‘இப்படியும் சில பைத்தியங்கள் இருந்தன’ என்றுதான், வேறென்ன நினைக்கத் தோன்றும். ஆனால் ஒன்று, உங்கள் அப்பாவோ அல்லது தாத்தாவோ, அம்மாவோ அல்லது பாட்டியோ எங்களில் ஒருவரே என்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.