விதி

வேலை செய்து கொடுத்த கூலியை கேட்க, கோதண்டத்தின் வீட்டிற்கு முன்னால் வந்து  நின்றான் கதிரேசன். சுத்துப்பட்டி கிராமத்துல குடிசை வீடு கட்டுறவங்களுக்கு மண்ணால சுவர் எழுப்பி கொடுக்குறதுல கதிரேசனுக்கு மிஞ்சின கெட்டிக்காரன் இல்லைன்னு சொல்லலாம்.  கைராசிக்காரன்னு பேரு எடுத்தவன். வேலைக்கு ஏற்ற கூலியை கறாராக கேட்டு வாங்கிடுவான். வயசு அறுபதை கடந்துவிட்டது. இதுவரைக்கும் ஓய்வு எடுப்பதற்கான சூழ்நிலை அமையவில்லை. இனிமேலும் அமைவதற்கான வாய்ப்பும் இல்லை.

அதற்காக, கதிரேசன் ஒன்றும் புள்ளகுட்டி பெறாதவன் இல்லை.  ஆசைக்கு ஒன்னு, ஆஸ்திக்கு ஒன்னுன்னு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொண்ணுக்கு காலா காலத்துல கல்யாணத்தை பண்ணி வைத்து, அவள புருஷன் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டான். பையன் நல்லவன்தான், கெட்டிக்காரன்தான். பெற்றவர்களை மதித்து நடந்துக்கிற பிள்ளைதான். அவனுக்கும் திருமணமாகி புள்ளை குட்டி என்றாகிவிட்டது. அவனும் விவசாயக் கூலியா இருந்து கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கறான்.  அப்பா, அம்மாவ உட்கார வைத்து கஞ்சி ஊத்துகிற நிலையில் அவன் இல்லை.

கதிரேசனை அடுத்து கல்லும் மணலும் அடித்து கொடுத்ததற்கான வண்டி சத்தம் கேட்டு வண்டிக்கார முத்தையனும் வந்து நின்றான். 

அப்போது இருவரும் வந்து நின்றுக்கொண்டிருந்த வீட்டிற்கும் அதன் பக்கத்தில் இருந்த குடிசைக்கும் நடுவில் மூன்று நாட்களுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்டு சரியாக ஈரம் காயாத மண் சுவற்றின் ஒரு பாதிப் பகுதி இடிந்து போய் கிடந்தது. அதன் மறுபாதியை இருவர் இடித்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடிந்து கிடந்த கல்லையும் மண்ணையும் அப்புறப்படுத்தும் பணியில் அந்த சுவற்றின் கட்டுமான பணியில் ஈடுபட்ட சொர்ணமும் அவளோடு மற்றொரு பெண்ணும் ஈடுபட்டிருந்தாள். அங்கே நடந்துக்கொண்டிருப்பதை பார்த்த கதிரேசனுக்கும் முத்தையனுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

“அஞ்சி நாளுக்கு முன்னாலதான் இந்த சுவரைக் கட்டனும்ன்னு சொல்லி கல்லும் மண்ணும் வேணுன்னு கேட்டாங்களேன்னு அடிச்சி கொடுத்தேன். அதுக்கான வண்டி சத்தத்தைக் கூட இன்னும் வாங்கல. வாழப் போற வீட்டுல உவரு ஏறி காரை பேர்ந்துடக் கூடாதுங்கறதுக்காக ஓடையில நல்ல வெள்ளம் கரைபுரண்டு அரிப்பு எடுத்து ஓடுற இடமா பார்த்துதான் மணலை அள்ளி கொண்டுவந்து கொடுத்தேன். கல்லையும் மண்ணையும் பற்றிக்கூட எந்தக் குறையும் சொல்ல முடியாது. இன்னைக்கு இவங்க தர்ற, வண்டி சத்தத்த வாங்கிட்டு போயிதான் நாள மறுநாளு வரப்போற தைப்பொங்கலுக்கு, கல்யாணமாகி புருஷன் வீட்டுல இருக்கற என்னோட பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் பொங்கல் படி கொடுக்கலாம்ன்னு நெனச்சுக்கிட்டு வந்தேன். கட்டுன சுவரு காயுறதுக்கு முன்னால இடிக்கிற நிலைமைக்கு என்ன நடந்திருக்கும்?”என்று யோசித்த முத்தையன் அருகில் நிற்கும் கதிரேசனை ஜாடையாக பார்த்துவிட்டு “இவன் எப்படிதான் சுவர வச்சி கொடுத்தானோ! வயசாகிப் போச்சு இன்னும் பழம் பெருமையை பேசிட்டு இருந்தால் முடியுமா? சுவரு கட்டுமானத்துக்கு மண்ணு சேர்க்கறதுங்கறது லேசுப்பட்ட காரியமா? மண்ணை நல்ல மிதிச்சி  கொளைச்சி வச்சாதான பலம் கிடைக்கும். அதுக்கு, இவன் உடம்புல சத்து ஏது? என்னவோ, ஆண்டவன் விட்ட வழிப்படி நடந்துட்டு போகுது. நமக்குத் தர வேண்டிய பணத்தை இல்லேன்னு சொல்ல முடியாது. தப்பு நடந்திருந்தால் அதுக்கு, இவன் மட்டும் தான் காரணமாக இருப்பான்.” என்று மனதிற்குள் நினைத்தவாறு நின்றுக்கொண்டிருந்தான் முத்தையன்.

“சுவரை வச்சி கொடுத்து மூனு நாளுதான் ஆகுது. அதுக்குள்ள இத இடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கும். செம்மண், மணல் கலவையகூட சரியான விகிதத்தில் கலந்து தண்ணீர் ஊத்தி, நல்ல மிதி மிதியென்று மிதிச்சி கொளச்சிதான் சுவர வச்சி கொடுத்தேன். இதுவரைக்கும் நான் கட்டிக்கொடுத்த சுவரு. சுண்ணாம்பு, சிமெண்ட் கலவையில கட்டுன சுவத்துக்கு எந்த விதத்திலும்   கொறைஞ்சி போனதில்லை. இந்த சம்பளத்தை வாங்கிட்டு போயிதான் ரெண்டு நாளா படுத்தப் படுக்கையாய் கெடக்கற  என் பொண்டாட்டிய ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போகலாம்னு நெனச்சிருந்தேன். நினைக்கிறதெல்லாம் நடந்திடும்மா?  நான் ஆண்டவனுக்கு பொதுவாகத்தான் வேலையை செய்து கொடுத்தேன். யாருக்கும் துரோகம் பண்ணுனதில்ல. கட்டுறதும் இடித்து தள்ளுவதும் அவரவர் தனிப்பட்ட விஷயம் அதுல போயி நாம  தலையிடுறது முறையில்ல. வீடு வரைக்கும் வந்தாச்சி. கேட்க வேண்டிய கடமை கேட்டு பார்த்துட்டு போகலாம். கூலியை தரும்போது தரட்டும். செய்து கொடுத்த வேல இல்லன்னு போகாது.” என்று நினைத்தவாறு நின்றுக்கொண்டிருந்தான் கதிரேசன்.

முத்தையன், கதிரேசன் இருவருமே பக்கத்து, பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள். அதனால இந்த வீட்டில் நடந்த விஷயங்கள் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இருவரும் இடிந்த கிடந்த சுவற்றையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது, சுவற்றின் கட்டுமான பணியின்போது  சித்தாள் வேலைக்கு வந்திருந்த சொர்ணம் அள்ளிக்கொண்டு சென்ற மண்ணை வெளியில் கொட்டி விட்டு திரும்ப வந்தாள். 

அவளை பார்த்ததும் “சொர்ணம்” என்று பேர சொல்லி அழைத்து நிறுத்திய கதிரேசன் “என்ன சொர்ணம் நடக்குது. முந்தா நேத்து தான சுவரை வச்சோம். அதுக்குள்ள இடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்றதும்

கண்கலங்கிய சொர்ணம் “இந்த சுவத்த வச்ச நேரமோ என்னவோ தெரியல வீட்டில நடக்கக் கூடாததெல்லாம் நடந்து போச்சிது.”

“என்ன சொர்ணம் சொல்ற?” முத்தையன் பதறிக்கொண்டு குறுக்கிட்டான்.

“ஆமாங்க, நம்ம தங்க பாண்டியோட குழந்தை தவறிடுச்சி”

“அடக்கடவுளே! அன்னைக்கு மண்ணு வைக்கிறப்பகூட நல்ல தானே இருந்தது. என்னை கூட அதோட மழலை குரல்ல தாத்தா, தாத்தான்னு கூப்பிட்டது. இன்னும் என் காதுக்குள்ள, கேட்டுட்டே இருக்குதே” என்று தனது ஆதங்கத்தை காட்டிய கதிரேசன் “எதனால இறந்துச்சி? உடம்புக்கு ஏதும் முடியாம இருந்துச்சா?”

“புள்ள எல்லாம் நல்லாதான் இருந்தது. உடம்புல எந்தவிதமான குறையும் கிடையாது. தங்கபாண்டியோட அப்பா, கோதண்டம் இருந்தாரே, அவரு  ஒரு வார்த்தை அதிர்ந்து பேச மாட்டாரு. எதற்காகவும் உணர்ச்சி வசப்பட மாட்டாரு. அடுத்தவங்க பேசுற எதையும் இலகுவா உள்வாங்கிக்கிட்டு அப்பறம், பேசக்கூடியவரு. அவரோட சமயோசித புத்தியாலதான் இவ்வளவு, நாளும் வீட்டு சத்தம் வெளியில வராம பார்த்துக்கிட்டாரு. அவரு தல எப்ப சாயும்ன்னு காத்துட்டு இருந்த மாதிரி, கோதண்டம் இறந்து போன நாளுலயிருந்து பூர்வீக வீட்டை யாரு எடுத்துக்கிறதுங்கறதுல பெரியவன் வேலாயுதத்துக்கும் சின்னவன் தங்கப்பாண்டிக்கும் சின்ன மனஸ்தாபம் வந்தது.  அதையே சின்ன மருமகளும் பெரிய மருமகளும் ஊதி, ஊதி பெருசாக்கி, ஒரு வாரத்துக்கு முன்னால  அண்ணன், தம்பிக்குள்ள கை கலப்பாகி, ஊர் பஞ்சாயத்துல வச்சி பேசி முடிக்கற அளவுக்கு விஷயத்த கொண்டு வந்துட்டாளுங்க. 

அண்ணனும் தம்பியும் அக்காவையும் தங்கச்சியையும்தான் கல்யாணம் பண்ணியிருக்கானுங்க. ரெண்டு பேரும் காலத்துக்கும் ஒத்துமையா இருக்கணும்ன்னு நினைச்சிதான் கோதண்டம், அண்ணன், தம்பிக்கும் ஒரே வூட்டுல இருந்த அக்காவையும் தங்கச்சியையும் பார்த்து கட்டி வச்சாரு. என்ன பிரயோஜனம். சொத்துன்னு ஒன்னு உள்ள வரப்போயி, நீ யாரு? நான் யாருன்னு? ஆகிப்போச்சி. அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்த்தா ஒரு தாய் வயிற்று புள்ளைக இதுகளுக்குள்ளேயே ஒத்துமையாய் இருக்க முடியலன்னா, வேற யாராலதான் முடியுங்கற? பஞ்சாயத்துல நாலு பெருசுங்க நல்லது, கெட்டது சொன்னதுனால அண்ணன், தம்பி ரெண்டு பேரும் விஷயத்த புரிஞ்சுகிட்டு மனசு ஒத்து விட்டுக் கொடுத்துப் போக  தயாராயிட்டானுங்க. ஆனா, இந்த பொம்பளைங்க விட்டுக் கொடுக்க மாட்டேன்னுட்டாளுக. ஒரு வழியா கடந்த வாரம்தான் ஊர்க்காரங்கள வச்சி பேசி முடிவு பண்ணினாங்க. அண்ணன்காரன் ஒரு கெரையம் போட்டு வீட்டை எடுத்துக்கறதுன்னும், தம்பிக்கு வீட்டு மதிப்புல சரி பாதி பணம் கொடுக்கிறதுன்னும்  முடிவு பண்ணுனாங்க. அதோட பிரச்சனை தீர்ந்ததுன்னு விடாம இரண்டு பேர் இடத்துக்கும் நடுவே சுவர் வச்சிடனும்ன்னு பொம்பளைங்க பிடிவாதமா இருந்ததால இந்த சுவத்தையும் வச்சாங்க.” என்று பேச்சை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்க்க.

கதிர்வேலும் வேலாயுதமும் அடுத்து என்ன என்பது போல ஆர்வமாய் நிற்க. 

பார்த்துவிட்டு தனது பேச்சைத் தொடர்ந்த சொர்ணம் “கோதண்டம் பொண்டாட்டி பொன்னம்ம, பெரியவன் வேலாயுதத்தோட போயி இருந்தாள். பொன்னம்மா தான் இந்தப் பிள்ளைய எந்த நேரமும் மார்மேலயும் தோள்மேலயும்  தூக்கிப்போட்டுட்டு அழையுவாள். ரெண்டு நாளா உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாக கிடந்த பொன்னம்மா நேத்து தான் செத்த தலைய தூக்கி  உட்கார்ந்து பேச ஆரம்பிச்சா. அவ குரல கேட்டதும் குழந்த விடாம அழுதுட்டு இருந்திருக்கு. பொன்னம்மாள் உடம்புக்கு முடியாததால எழுந்திருக்க முடியாம  இருந்திருக்கறா. அழுத குழந்தையை தங்கபாண்டி பொண்டாட்டி சுவத்துக்கு மேலோடி தூக்கி அந்தப்பக்கம் விடுறதுக்கு முயன்றிருக்கறா. சுவரு  எக்காம ஈர சுவத்து மேல சாஞ்சிட்டா. சாஞ்சதுதான் அவளுக்கு உணர்வு இருந்திருக்கு. சுவரும் தாயும்மா,  பச்சை குழந்த மேல கெடந்திருக்காங்க. மண்ண வாரிபுட்டு பார்த்தப்ப குழந்த பொணமாதான் கிடைச்சது.” என்று கண்கலங்கி விட்டு சொர்ணம் சென்றுவிட ஐயா குட்டியும் முத்தையனும் சிறிது நேரம் மவுனமாய் நின்றுவிட்டு வீட்டுக்காரர்களை சந்திக்காமலே அங்கிருந்து சென்றனர்.


One Reply to “விதி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.