மின்னல் சங்கேதம் – 11

This entry is part 11 of 12 in the series மின்னல் சங்கேதம்

(பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் எழுதிய ‘அஷானி ஷங்கேத்’ வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

(மனைவி ரமாவுடன் பிபூதிபூஷண்)

னங்கா எழுந்து நடக்க முடியாமல் பலவீனமாக இருந்தாள். அதனால் பெரும்பாலும் படுக்கையிலேயே இருந்தாள். கங்காசரணும், ஹபுவும் சமைத்தார்கள். பள்ளிக்கூடம் தினப்படி நடக்கவில்லை. பிஸ்வாஸ் மஷாய் போனதும், பள்ளியும் நலிந்துவிட்டது. இந்தக் கஷ்டகாலத்தில் இன்னொரு இடியாக, ஒருநாள் துர்கா பண்டிட் அங்கே மீண்டும் வந்து சேர்ந்தார். கங்காசரண் பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

”ப்ரணாம் பண்டிட் மஷாய்!”

கங்காசரண் திகைத்துப் போனான். “வாங்க. என்ன இந்த நேரத்துல?”

”அப்படியே வந்தேன் – “

“ஓ! என்ன விஷயம்?”

“என்னோட லக்ஷ்மி தேவி நல்லா இருக்காங்களா?”

“ஓ!”

“குழந்தை பிறந்ததா?”

“ஆமா.”

கங்காசரண் துர்கா பண்டிட் வருகையின் நிஜமான காரணம் என்னவாக இருக்குமென்று யோசித்துக்கொண்டிருந்தான். வீட்டுக்கும் வருவாரா! என்ன சங்கடம்! இந்த நாட்டில் எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மீது தொற்றிக்கொள்ளக் கூடாதா? எல்லாரையும் விட்டுவிட்டு இங்கே ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறார்? அவனால், தனக்கும், நோயாளி மனைவிக்கும், இரண்டு மகன்களுக்குமே சோறு போட முடியவில்லை. இப்போது ஒரு புது வரவு வேறு.

துர்கா ஒரு மாணவனை எழுப்பிவிட்டு விட்டு, மண்ணெண்ணெய் மரப்பெட்டி மீது உட்கார்ந்தார். துண்டை உதறி முழங்கால் மேல் போட்டுக்கொண்டு, தொண்டையைச் செறுமி, குரல் உயர்த்தி, “யாராவது குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க – “ என்றார்.

“கண்டிப்பா, கண்டிப்பா. படோல், இந்தப் பானையைக் கழுவி, தண்ணி கொண்டு வா.”

“உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும். மொதல்ல தண்ணியக் குடிச்சுக்கறேன். வாயெல்லாம் உலர்ந்து போச்சு. ஒரே தாகம்.”

தண்ணீர் குடித்ததும், துர்கா பண்டிட் கொஞ்சம் ஆசுவாசமடைந்தார். “ஆஹ்!”

இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு துர்கா பண்டிட் பேச ஆரம்பித்தார். “நான் ரொம்ப கஷ்டத்திலிருக்கேன், பண்டிட் மஷாய்!”

“சொல்லுங்க.”

”இந்தப் பஞ்சம் போதாதுன்னு, என் வேலை வேற போய்டுச்சு.”

”உங்க பள்ளிக்கூட வாத்தியார் வேலையா?”

“ஆமா. என்னாச்சுன்னா – காம்தேவ்பூர் பள்ளிக்கூடத்துல உதவி ஆசிரியரா ஒன்பது வருஷம் இருந்தேன். சம்பளம் மொதல்ல மூன்றரை ரூபா இருந்தது, இப்போ கிட்டத்தட்ட அஞ்சு ரூபா வருது. யாதவ ஜாதிக்காரர்தான் பள்ளிக்கூட ஸெக்ரட்டரி. எங்கேருந்தோ அவர் ஜாதிக்காரப்பையன் ஒருத்தன வேலைக்குப் பிடிச்சு வச்சாரு. அவன் விடுமுறைக்கு டார்ஜிலிங்குக்குப் போனவன் திரும்பி முழுப்பைத்தியமா வந்தான்.”

“அடடா! என்னாச்சு?”

”எனக்கெப்படி தெரியும்? அவன் ஏதோ ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருந்தானாம். வெள்ளைக்கார சாஹிப்புங்க அவனுக்கு என்னத்தையோ சாப்பிடக் கொடுத்தாங்கன்னு சொல்றாங்க. அவனோட அஞ்சு ரூபா சம்பளத்துக்கு என்ன சுற்றுலா வேண்டிக்கிடக்கு? டார்ஜிலிங் பணக்கார வெள்ளைக்காரங்களுக்கான ஊரு. அங்கபோற பெங்காலிங்களுக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கற என்னத்தையோ அவங்க தராங்களாம். என்ன கொடுமை!”

”அது இருக்கட்டும். என்ன பிரச்சினைன்னு சுருக்கமா சொல்லுங்க.”

”அப்புறம் அந்தப் பையன் மூணு மாசம் கழிச்சு வேலைக்கு வந்தான். இப்போ அவனுக்குப் பைத்தியம் சரியாயிடுச்சு. அவனை வேலைல திருப்பி சேர்த்துக்கனும்கறதுக்காக என்னை ஒரு மாசம் லீவுல போகச் சொன்னாங்க.”

“நீங்க லீவு போட்டீங்களா?”

“வேற வழி? ஹெட்மாஸ்டரே வந்து கேட்டுக்கிட்டாரு. நான் லீவு போட்டதும், உடனே சரின்னுட்டாங்க. இப்போ எனக்கு வேலையில்ல, சம்பளமில்லை, வீட்டுல சாப்பாடுமில்ல. என்னை நம்பி வீட்ல நாலு பேரு இருக்காங்க. அதனால உங்ககிட்ட யோசனை கேக்கலாம்னு வந்தேன். எனக்கு வேற போக்கிடமுமில்ல.”

கங்காசரண் மனதுக்குள், ‘உன் பிரச்சினையைச் சொல்றதுன்னா எவ்வளவு தரம் வேணா சொல்லு, நான் கேட்டுக்கறேன். ஆனா வீட்டுப்பக்கம் மட்டும் வந்துடாத. அது பெரிய ஆபத்து.’ என்று நினைத்துக்கொண்டான். துர்கா பண்டிட்டின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முயன்றான். அவன் மகன்களுக்குக் கொடுப்பதற்கு அரிசி இல்லை. மனைவிக்காக வேண்டி, கெஞ்சியும், பிச்சையெடுத்தும் கொஞ்சம் கோதுமை மாவை வாங்கி வந்திருக்கிறான். இப்போது துர்கா பண்டிட்டுக்கும் கொடுக்க வேண்டுமென்றால் அவன் கதி அவ்வளவுதான். அவன் மனைவியும் எத்தனை முட்டாளென்றால் – இந்த ஆள் அவளிடம் சென்று அழுதால், சந்தோஷமாக உள்ளே கூப்பிட்டு, தன்னுடைய பங்கையும் கொடுத்துவிடுவாள்.

ஓ! என்ன ஒரு சோதனை!

இப்போது இந்தக் கிழவனுக்கு என்ன வேண்டும்?

கங்காசரணின் தலையில் இந்த எண்ணங்கள் அலையடித்தன.

இல்லை, அப்படி நடக்கவிடக்கூடாது. எதாவது கதையைச் சொல்ல வேண்டும். தன் குடும்பத்தைப் பட்டினி போட்டு, இந்த ஆளுக்குச் சோறு போடுமளவுக்கு, அவருக்குத் தான் ஒன்றும் கடன்பட்டிருக்கவில்லை.

துர்கா பண்டிட், “எப்போ பள்ளிக்கூடத்தை முடிக்கப் போறீங்க?” என்றார்.

“முடிக்கறதா? அதுக்கு இன்னும் நேரமிருக்கே?

“ஒரு வேளையா, இல்லை ரெண்டு வேளை சொல்லிக்கொடுக்கறீங்களா?”

“ஒரு வேளைதான்.”

கங்காசரண் அவர் புகைப்பதற்காகப் புகையிலை தருவித்தான்.

துர்கா பண்டிட் புகையிழுத்துவிட்டு, ஹூக்காவை கங்காசரண் பக்கம் திருப்பினார். “இதான் என்னோடு பிரச்சினை. ரெண்டு நாள் குடும்பம் முழுசும் பட்டினி இருந்துட்டு, உங்ககிட்ட வர்ற மாதிரி ஆகிடுச்சு. என்னோட மா-தாக்ருன், என்னோட அன்னபூர்ணா. எனக்குப் பிரச்சினைன்னு வந்தப்போல்லாம் அவள்தான் காப்பாத்தினா. எனக்கு வேற யாருமில்ல.”

அவர் நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அவர் அவன் வீட்டுக்கு வருவதற்காகத்தான் காத்திருக்கிறார். அதனால்தான் இத்தனை நேரமாகியும் கிளம்பவில்லை. எப்போது வந்தாலும், இதைப் போல இரண்டு நாள் பட்டினி, மூன்று நாள் பட்டினி என்ற கதையையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தக் கஷ்டகாலத்தில், அவருக்கு தினசரி சோறு போட யாரால் முடியும்? மனிதர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வேண்டும்.

இப்போது அவரை வீட்டுக்குக் கூட்டிப் போகாததற்கு எதாவது காரணத்தை உருவாக்க வேண்டும். என்ன செய்யலாம்? அனங்கா பெற்றோர் வீட்டுக்குப் போய்விட்டாள் என்று சொல்லலாமா? ஒருவேளை அனங்கா ரொம்பவும் முடியாமல் இருக்கிறாள் என்று சொல்லலாம். வேண்டாம், அப்புறம் அவளை பார்க்கவேண்டுமென்று துர்கா பண்டிட் சொல்லக்கூடும்.

கங்காசரணால் எதையும் யோசிக்க முடியவில்லை. பள்ளி மூடும் நேரமுமாகிவிட்டது. ஆனால் பள்ளியை மூடி, வீட்டுக்கு நடந்தால், அவரும் கூடவே வீட்டுக்கு வருவார். நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது, அனங்காவுக்கும் உடம்பு முடியவில்லை, அதனால் அவரை ஏற்றுக்கொள்வது முடியாத காரியம் என்று நேரடியாக உண்மையைச் சொல்லிவிடலாம் என நினைத்தான்.

ஆனால் அடுத்து நிகழப்போகும் விஷயத்துக்கு அவன் தயாராக இருக்கவில்லை.

அவர்கள் புகைபிடித்தபடி உட்கார்ந்திருக்கையிலேயே துர்கா பண்டிட் அவ்வப்போது வெளியே பிரதான சாலைக்குச் சென்று சேகாத்தி-மணிராம்பூர் குளத்திசையில் எதையோ பார்த்துவிட்டு வந்தார்.

அவர் இப்படி இரண்டு மூன்று முறை செய்ததும், கங்காசரண், “என்ன தேடறீங்க?” என்றான்.

”அவங்கள்லாம் ஏன் இன்னும் வரலைன்னு பார்க்கறேன்.”

“யாரு?”

”சொன்னேனே. என் குடும்பதான். என் மனைவி, மகள், ரெண்டு பசங்க. எல்லாரும் பட்டினி. எனக்கு வேற வழி தெரியல. அதனால, ‘என்னோட மா அன்னபூர்ணாகிட்ட போலாம் வாங்க’ன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். என்னோட பதினாறு வயசுப்பொண்ணு ரொம்பவே கஷ்டப்படறா, மஷாய். மணிராம்பூர்ல நிது சக்ர்வர்த்தி வீட்ல கொஞ்சம் வேகவைச்ச பருப்பைச் சாப்பிட்டோம். அவங்களும் எங்களை மாதிரிதான். யாதவர்கள்கிட்ட வேலை பார்க்கற பிராமணர்கள். அவருக்கும் இப்போ வேலை இல்லை. வீட்ல அரிசியும் இல்ல. நிதுவோட வயசான அம்மாவுக்கு ரெண்டு மாசமா காய்ச்சல். அவளுக்காகக் கொஞ்சம் அரிசிய எடுத்து வச்சிருக்காங்க, அவ்வளவுதான். மத்த எல்லாரும் வேகவைச்ச பருப்பைத்தான் சாப்பிடறாங்க. அதனால என் குடும்பத்துக்கிட்ட நான் முன்னாடி போறேன், நீங்க மெதுவா வாங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.”

’அடக்கடவுளே!’ என்று திகைத்தான் கங்காசரண்.

துர்கா பண்டிட், தான் மட்டுமல்ல, தன்னுடைய மொத்த குடும்பத்தோடு அவன் வீட்டுக்கு வந்து சேரத் திட்டமிட்டிருக்கிறார்! பிரமாதம்!

இப்போது என்ன செய்வது?

ஒருவேளை நேரடியாகச் சொல்லிவிடுவதுதான் ஒரே வழி.

அப்போது, சாலையிலிருந்து ஒரு சிறுமியின் குரல், ”அப்பா –” என்று கூப்பிட்டது.

“யாரு? மொய்னாவா?” என்று துர்கா பண்டிட் வெளியே சென்று எட்டிப்பார்த்தார்.

கங்காசரண், சாலையில், பள்ளிக்கெதிரே ஒரு பதினாறு வயதுப் பெண் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். துர்கா பண்டிட் அவளை உள்ளே அழைத்து வந்தார். “இது என் மகள் மொய்னா. நிஜப்பேர் ஹைமாபதி. அவரை நமஸ்கரிச்சிக்கோ, மொய்னா!”

என்ன சோதனை!

ஹைமாபதி முன்னே வந்து கூச்சத்தோடு அவன் காலைத் தொட்டாள். அவள் அப்பா மெலிந்த, வறண்ட கிழவராக இருந்தாலும், அவள் நல்ல லட்சணமாக இருந்தாள்

துர்கா பண்டிட், “அவங்கள்லாம் எங்கே?” என்றார்.

”அங்கே மர நிழல்ல இருக்காங்க. நான் போய் அவங்களுக்கு உதவி செய்யறேன். அம்மாவால அந்த கனமான மூட்டையோடு நடக்க முடியல.”

கங்காசரண் மூழ்கிக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான். அவர்களைக் கழற்றிவிடுவது இனிமேல் அவ்வளவு எளிதல்ல. அவர்கள் வீட்டை காலி செய்து, சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, உணவைத் தேடி வந்திருக்கிறார்கள். அதிலும் ஹைமாபதி அதற்குள் அவன் இதயத்தை உருக்கிவிட்டாள். இத்தனை அழகான பெண் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை! மிகவும் வேதனை.

கங்காசரண் இதயம் அவளுக்காகப் பரிதாப்பப்பட்டது.

அவன், மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, துர்கா பண்டிட் குடும்பத்தோடு வீட்டுக்குப் போனான்.


சில நாட்கள் சென்றன. துர்கா பண்டிட்டின் குடும்பம் கங்காசரணின் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அனங்காவுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. சிறு முனகலில்லாமல் அவளால் பேசவே முடியவில்லை. இருப்பினும் அவள் யாரையும் விரட்ட விரும்பவில்லை. விளைவாக, அவர்கள் எல்லோருமே பட்டினி கிடந்தார்கள்.

இருந்தாலும், கங்காசரண் மொய்னா வீட்டுவேலைகளில் மிகவும் உதவியாக இருப்பதைக் கவனித்தான். எப்போதாவது சாப்பிடுவதற்கு எதாவது கிடைத்தால், முதலில் நேராக அனங்காவிடம் கொண்டுவந்து, “காக்கிமா (மாமி), முதல்ல இதைச் சாப்பிடுங்க.” என்று கொடுப்பாள்.

அப்படிச் செய்வது அவள் அம்மாவுக்குப் பிடிக்காது. “அதை உன்னோட காக்கிமாவுக்கு ஒண்ணும் தர வேண்டாம். அவளுக்கு உடம்பு சரியில்ல, நீ குடுக்கறதெல்லாம் சாப்பிட்டா, அவளுக்கு இன்னும் மோசமாகத்தான் போகும். எடுத்துட்டுப் போ – “ என்பாள்.

துர்கா பண்டிட் காலையில் எங்காவது கிளம்பிப் போனால் திரும்பி வர மதியத்துக்கு மேலாகி விடும். பெரும்பாலும் திரும்பி வரும்போது சாப்பிடுவதற்கு எதையாவது கொண்டு வருவார். அரிசி இல்லை – ஆனால் ஒரு தேங்காயோ, சேனைக்கிழங்கோ, கொஞ்சம் பருப்போ, இல்லை போரி போன்ற தின்பண்டங்களோ இருக்கும்.

இதையெல்லாம் அவர் யாசித்துதான் கொண்டு வந்தார்.

இப்போதெல்லாம் அவர் யாசிக்கத் தொடங்கிவிட்டார்.

ஆனால் அவர் யாசிப்பது, சாதாரணமாக பிச்சையெடுப்பதைப் போல இல்லை. அதில் ஒரு அதிகாரத் தோரணை இருந்தது.

ஒரு மதியம், காபாலி குடியிருப்புக்குச் சென்றார். நிது காபாலி வீட்டு முற்றத்திலேறி, “கொஞ்சம் புகையிலைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?” என்றார்.

அவர் பிராமணர் என்பதை உணர்ந்த நிது, பரபரப்பானார். “பேஷா. பேஷா. உட்காருங்க தாகுர். எங்கேருந்து வர்றீங்க?”

”என் சொந்த ஊர் காம்தேவ்பூர். இப்போ கங்காசரண் பண்டிட் வீட்டுக்கு வந்திருக்கோம்.”

”ஓ, அவரு உங்களுக்கு சொந்தமா? உங்க மருமகனா?”

“இல்லை, இல்லை! நாங்க ஒரே ஜாதி, அவ்வளவுதான்.”

“நீங்க என்ன செய்யறீங்க?”

“பெரிசா ஒண்ணுமில்ல. எங்களுக்குக் கொஞ்சம் பூர்வீக நிலம் இருக்கு. எப்பவும் என்கிட்ட ரெண்டு களஞ்சியத்துல நெல்லு இருக்கும். ஆனா, அரசாங்கம் இருபது மணங்குக்கு மேல அரிசி இருந்தா பறிமுதல் செய்யப்போறதா கேள்விப்பட்டேன். அதனால எல்லாத்தையும் வித்துட்டேன்.”

இதெல்லாம் பொய்தான் என்று சொல்லவே வேண்டியதில்லை.

ஆனால் நிதுவுக்கு அவர் மீது மிகுந்த மரியாதையாகிவிட்டது. இரண்டு களஞ்சியம் நிறைய நெல் வைத்திருக்கிறவர் என்றால் மிகவும் விசேஷமான பணக்காரராகத்தான் இருக்க வேண்டும். நெல் ஒரு மணங்கு பதினெட்டு ரூபாய். அவரிடம் எழுநூறு, எந்நூறு மணங்கு நெல் இருந்திருக்க வேண்டும். எக்கச்சக்க பணம்!

துர்கா ஹூக்கா புகைத்துக்கொண்டே, “உன் வீட்ல அவல் இருக்கா? எனக்குக் கொஞ்சம் கிடைக்குமா? உங்க ஊர்ல சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம்தான்.” என்று கேட்டார்.

”ஐயா, சொல்றதுக்கே வெட்கமாத்தான் இருக்கு, வீட்ல அவல் இல்லை.”

”சரி பரவாயில்லை. மொத்த கிராமமும் இப்படித்தான் இருக்கு. கொஞ்சம் அவல் சாப்பிடனும் போல இருக்கு. ஆனா எங்கேயுமே கிடைக்க மாட்டேங்குது. ஒருகாலத்துல என்கிட்ட ரெண்டு களஞ்சியம் நிறைய நெல்லு இருந்துதுன்னு நினைக்கும்போது – “

நிது காபாலி வேதனைப்பட்டார். இவ்வளவு பெரிய மனிதருக்கு உதவ முடியவில்லையென்று நினைக்கும்போது…

”அது போகட்டும், வீட்ல ஆம் பாப்பட் (மாம்பழ முரப்பா) இருக்கா?”

”அதுவுமில்லை ஐயா. இருந்ததையெல்லாம் பசங்க சாப்பிட்டுட்டாங்க.”

”பழைய புளியாவது இருக்கா?”

“இல்லை ஐயா. மன்னிக்கனும்.”

”வாய்க்கு ருசியில்லாமப் போய்டுச்சு. அதான் மாங்கா, புளியெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கேன். என்ன சொல்றேன்னு புரியுதுல்ல? வாய்க்கு சர்வதேசப் போர் பத்தியெல்லாம் என்ன தெரியும்? அது சரி, உன் வீட்டுக்கூரையில என்ன விளையுது? பூசணிக்காய் மாதிரி இருக்கே?”

நிது வீட்டுக்கூரை மேலே ஒரு வரிசை பூசணிக்காய் விளைந்துகொண்டிருந்தது. அவர் பணிவாக, “ஆமா ஐயா. அது என்னோடதுதான்.” என்றார்.

”நல்லதா ஒண்ணு பறிச்சுக்குடு. போரி செய்யனும்.”

”கண்டிப்பா ஐயா. இதோ பறிச்சுத் தரேன்.”

நிது உடனடியாகப் பெரிய பூசணிக்காயைப் பறித்துக் கொடுத்தார். துர்கா பண்டிட் சந்தோஷமாக அதை கங்காசரண் வீட்டுக்குக் கொண்டு வந்தார்.

அனங்கா, “இதுல என்ன செய்யறது ஜ்யாத்தா மஷாய்?” என்று கேட்டாள்.

”எதோ கொண்டுவந்தேன்மா. என்ன இருந்தாலும் இது சாப்பிடற பண்டம்தானே. எதாவது செய்யலாம். போரி மாதிரி…”

”போரியா? நாமளே வேகவைச்ச உளுத்தம்பருப்புதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். போரி செய்யறத்துக்குப் பொருள் ஏது?”

”நாளைக்கு அதுக்கும் ஏற்பாடு செய்யறேன்.”

’வேண்டாம் ஜ்யாத்தா மஷாய். நீங்க எங்க வீட்டு அதிதி. நீங்க வீடு வீடா சாப்பாடு தேடிப் போகக்கூடாது. நாம இருக்கறதை வச்சு சாப்பிடுவோம்.”

”உனக்கு ஒண்ணு தெரியுமா? உணவுக்காக யாசிக்கறது பிராமணர்களுக்கு இன்னொரு தொழில். அதுல வெட்கப்பட ஒண்ணுமில்லை. என்கிட்ட ஒண்ணுமில்ல, அதனால அடுத்தவங்ககிட்ட கேட்கறேன். போர் நடக்குதுங்கற ஒரே காரணத்துக்காக நாம பட்டினி கிடக்கனும்னு ஒண்ணுமில்ல.”

”வேண்டாம் ஜ்யாத்தா மஷாய். நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.”

”சரி சரி, நீ அதைப் பத்தி கவலைப்படாதே.”

அன்று மாலை துர்கா பண்டிட் கங்காசரணிடம், “நாம ஒண்ணு செய்யலாம். கிராமப்பகுதிகள்ல ஜோதிடத்து மேல நம்பிக்கை ஜாஸ்தி. கைரேகை ஜோஸியம் சொன்னா என்ன? நாளையிலேருந்து ஆரம்பிக்கலாமா? இப்போ அவங்ககிட்ட நிறைய காசு இருக்கு.” என்றார்.

”அதுல ஒரு பிரயோசனமுமில்லை. முந்தியா இருந்தா ஒருவேளை இந்தத் தொழில்ல வரும்படி இருந்திருக்கும். ஆனால் இப்போ யார்க்கிட்டயும் உணவுப்பொருள் இல்லை. அவங்க நமக்குக் காசு குடுத்தாலும், அதை வச்சு வாங்கறதுக்கு ஒண்ணுமில்ல.”

“அவங்க நெல்லு குடுத்தா?”

”நெல்லு யார்க்கிட்டயும் இல்ல. இருக்கறவங்கள்லாம் நல்லா ஒளிச்சு வச்சுக்கிட்டாங்க. இல்லைன்னா போலிஸ் வந்து பிடிச்சுக்கும். இந்த கிராமத்து விவசாயிகள் பத்தி நீங்க எனக்கு சொல்லத் தேவையில்லை.”

”இருந்தாலும், ரெண்டு பேரும் சேர்ந்து முயற்சிக்கலாம். இல்லாட்டி நாமெல்லாரும் செத்துப்போக வேண்டி வரும்.”

”நிலமில்லைன்னா உணவுக்காக மத்தவங்களைச் சார்ந்து இருக்கனும், இது மாதிரி பஞ்சகாலத்துல கஷ்டப்பட வேண்டி வரும்ங்கறதுதான் யதார்த்தம். விவசாயிகள் விளைவிக்கனும், நாம் உட்கார்ந்து சாப்பிடனும்ங்கற விதியாலதான் பிரச்சினையே. அதனால்தான் நாம இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கோம்.”

அவன் மேலும் தொடர்ந்தான். “ஜோசியமெல்லாம் வேண்டாம். முடிஞ்சா நம்மோட நிலத்தை நாமே உழுதுக்கறதுதான் உத்தமம். கொஞ்சம் நிலம் இருந்தா எவ்வளவோ நல்லா இருக்கும்.”

துர்கா புன்னகைத்தார். “இந்தப்பக்கத்துல நிலத்துக்குக் குறைச்சலே இல்ல. இண்டிகோ விளைவிச்ச காலத்துல இருந்து இந்தப் பக்கத்துல நிறைய நிலம் தரிசாக் கிடக்கு. என்னோட வீட்டுக்குப் பக்கத்துலயே ரெண்டு பிகா நிலம் புதர் மண்டிக்கிடக்கு. என்னோட பூர்வீக சொத்து.”

”அப்புறம் அதுல ஏன் நீங்க விவசாயம் பண்ணக்கூடாது?”

”நான் என்ன செய்ய முடியும்?”

“ஏன்? சர்க்கரைவள்ளிக்கிழங்காவது பயிரிடலாமே? அது கூட ஒருத்தர் வயிறு நிறைய உதவும். நம்மள மாதிரி ’பத்ரலோக்’ (கெளரவமானவர்கள் – gentlemen) ஆளுங்ககிட்ட என்ன பிரச்சினைன்னா, நமக்கு சாப்பாடு வேணும், ஆனா நாமளே எதையும் விளைவிக்கமாட்டோம். நாம எதோ பணக்காரங்களோ, மாசம் இருநூறு ரூபா சம்பாதிக்கறவங்களோ இல்லை, ஆனாலும் நாம கலப்பையைத் தொடமாட்டோம். அதுக்கான விலையைத்தான் இப்போ கொடுத்துக்கிட்டிருக்கோம்.”

துர்கா பண்டிட்டுக்கு இது எதுவும் புரியவில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் செய்ய முடியுமா! வைஸ்யர்கள்தான் விவசாயம் செய்யவேண்டும். பிராமணர்களால் அதைச் செய்ய முடியாது. ஒருவேளை எதிர்காலத்தில் அதையும் செய்ய வேண்டி வரலாம். நகரத்துக்குப் போய் செருப்புக்கடை வைத்த ஒரு பிராமணரைக் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார். சிந்தித்துப்பாருங்கள் – ஒரு பிராமணன் செருப்புக்கடை நடத்துகிறானாம்!

எதற்கும் மரியாதையில்லாமல் போய்விட்டது.


காபாலியின் மூத்த மனைவி வந்து அனங்காவின் காதுகளில் கிசுகிசுத்தாள். “காபாலி போமை நேத்துலேருந்து காணோம்.”

”ஐயோ!”

”உங்களுக்கு அவளைப் பத்தித் தெரியுமே, பாமுன் தீதி! அவளோட பழக்கங்களைப் பத்தியும் தெரியும். இத்கோலால அந்த ஆளோட… உங்ககிட்ட அதையெல்லாம் சொல்ல முடியாது தீதி. நீங்க சதி லக்ஷ்மி, ரொம்ப உத்தமமானவங்க… அவளை நேத்துலேருந்து காணோம். இப்போ என்ன செய்யறது? எல்லோரும் எங்கள ஒதுக்கி வச்சிடுவாங்க.”

”அதெல்லாம் இருக்கட்டும், யார்க்கிட்டயும் இதைப்பத்தி சொல்லாதீங்க.”

”நான் யார்க்கிட்டப் போய் சொல்லுவேன்? அது காதுகளை வெட்டி தலைமுடியில மறைச்சு வைக்கறது போல. இருந்தாலும் கூடிய சீக்கிரமே அக்கம்பக்கதுல எல்லாரும் கேக்கப் போறாங்க. மீன்காரி சோது எப்போ வேணா வர நேரம். அவ ஊருக்குள்ள எல்லார்க்கிட்டயும் டமாரமடிக்கப் போறா. நான் சரியா மாட்டிக்கிட்டேன்!”

காபாலி போமை இரண்டு நாட்களாக யாரும் பார்க்கவில்லை. காபாலிகள் எல்லா பக்கமும் தேடினார்கள். காளிசரண் காபாலியே பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சென்று தேடினார்.

இரவில் அனங்கா கேட்டாள், “ஏதாவது தகவல் கிடைச்சுதா?”

கங்காசரண் சிரித்தபடி, “எதிர்பார்த்தமாதிரியே, அவ அந்த போரா-ஜது கூட ஓடிப்போய்ட்டா.”

”அடக்கடவுளே! இது என்ன கொடுமை. அவளுக்கு என்னாகுமோ, நம்ம சுட்க்கி!”

”அவனுக்குக் காரியமானதும், உதைச்சு விரட்டி விட்டுடுவான். அதுக்கப்புறம் அவ பிச்சையெடுக்கனும், இல்லை நகரத்துக்குப் போய் தெருப்பொறுக்கனும்.”

நான்காம் நாள் காலை யாரோ வீட்டுக்கு வெளியேயிருந்து கூப்பிட்டார்கள்.

”ஓ பாமுன் தீதி!”

மொய்னா முதலில் எழுந்தாள். “யாரோ வெளியேருந்து ’தீதி’ன்னு கூப்பிடறாங்க.”

அவள் கதவைத் திறந்தபோது, காபாலி போம் உள்ளே வந்தாள். வெள்ளை ரவிக்கையும், சிகப்புக்கரை போட்ட புதிய சேலையும் உடுத்தியிருந்தாள். கைகளிலும் புதிய கண்ணாடி வளையல்கள்.

அனங்கா ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும், “சுட்க்கி! என்ன அதியசம்!” என்றாள்.

காபாலி போம் தரையில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் மெல்ல அசட்டுச் சிரிப்பு சிரிக்கத் தொடங்கினாள். மொய்னாவின் அம்மாவும் எழுந்துவிட்டாள். அவளும் காபாலி போம் குறித்து கேள்விப்பட்டிருந்தாள். மொய்னாவின் அம்மா, காம்தேவ்பூரில் அமைதியாக, சாதுவான வாழ்க்கை வாழ்ந்தவள். எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாதவள். காபாலி போமால் எப்படி இந்த நிலையிலும் இப்படி சிரிக்க முடிகிறது என்பது அவள் கற்பனைக்கெட்டாத ஒன்று.

அனங்கா கடுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, “சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்றாள்.

காபாலி போம் சிரிப்பதை நிறுத்தி தலையைக் குனிந்து கொண்டாள். “சும்மாதான்.”

”அந்த மூட்டைல என்ன?”

“அரிசி. உங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன்.”

”ஒரு மண்ணும் தேவையில்லை. அந்த அரிசியை நான் தொடுவேன்னு நினைச்சியா?”

”தயவுசெஞ்சு கோவப்படாதீங்க பாமுன் தீதி! உங்க காலைப் பிடிக்கறேன். நீங்களும் என்னைத் திட்டீனா நான் எங்கே போவேன்?”

ஒருவழியாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நிஜமான கண்ணீர்.

அனங்கா கொஞ்சம் தணிந்தாள். கொஞ்சம் பிரியத்தோடு, “வெட்கங்கெட்டவளே! நீ வளர்ந்த பொம்பளைதானே? எது சரி, தப்புன்னு தெரியாது? இப்பத்த கதைய விடு, நாளைக்கு செத்துப்போனப்புறம் கடவுள்கிட்ட என்ன சொல்லப்போற? எப்படி விளக்கப்போற? அதைப்பத்தி எப்பவாவது யோசித்துப் பாத்திருக்கியா? எனக்கு வர்ற கோபத்துக்கு, இந்த விளக்குமாத்துலேயே அடிச்சா என்னன்னு தோணுது.”

ஒருவேளை கடவுளும், தவறிழைத்த அப்பாவி மக்களை இப்படித்தான் மென்மையாகக் கடிந்து கொள்வாராய் இருக்கும். காபாலி போம் குனிந்த முகத்தோடு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

இதற்கு நடுவே, கதியற்ற மோத்தி முச்சினி அனங்காவின் கிராமத்துக்கு மிக மோசமான நிலையில் வந்து சேர்ந்தாள்.

காலை ஹபு அம்மாவிடம், “மோத்தி தீதிய காபாலி வீட்ல பார்த்தேன்மா. ரொம்பவே உடம்பு சரியில்லாம இருந்தாங்க.”

”எப்படி?”

“ரொம்ப ஒல்லியா இருந்தாங்க.”

“காய்ச்சல் இருந்துதா?”

“அது தெரியலம்மா. நான் போய்க் கேட்டுட்டு வரட்டுமா?”

ஹபு மீண்டும் அங்கே போனான். ஆனால் மோத்தியைக் காணவில்லை.

அடுத்த இரண்டு நாள் மோத்தியை யாருக்கும் நினைவிருக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் காலை மோத்தி அனங்கா வீட்டுக்கு வந்து, வீட்டு முன்னாலிருந்த மாமரத்தின் கீழே மயங்கி விழுந்தாள். அவள் கை, கால், முகமெல்லாம் வீங்கியிருந்தன. அவளிடம் ஒரு மண் பானை மட்டுமே இருந்தது. மதியமெல்லாம் அதிக காய்ச்சலில் அங்கேயே விழுந்திருந்தாள். யாருக்கும் தெரியவில்லை. மாலை கங்காசரண் பள்ளியிலிருந்து திரும்பி வருகையில் அவளைப் பார்த்தான். ஆனால் அடையாளம் தெரியவில்லை. “யார் நீ?” என்றான்.

மோத்தி அடையாளம் தெரியாதபடி ஆகிவிட்டிருந்தாள்.

மிகவும் சிரமப்பட்டு, “நான்தான் தாதா தாகுர்.” என்றாள்.

”யாரு? மோத்தியா? இங்கே ஏன் படுத்திருக்க? என்ன ஆச்சு?”

”காய்ச்சலா இருக்கு தாதா தாகுர். மூணு நாளா சாப்பிடல. கொஞ்சம் சோறு வேணும்.”

”அடப்பாவமே! உன்னால எழுந்து உள்ள வர முடியுமா?’

மோத்தியால் எழுந்திருக்க முடியவில்லை. கங்காசரண் அவளைத் தொடமாட்டான். அதனால் அவள் அங்கேயே கிடக்கும்படியானது. அதைக்கேள்விப்பட்ட அனங்கா மிகுந்த கவலைக்குள்ளானாள். ஆனால் அவள் தோழிக்கு உதவக்கூடிய நிலையில் அவள் இல்லை. அவளே மிகுந்த பலகீனமாக இருந்தாள். கணவனிடம், “கொஞ்சம் அவளுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது குடுத்துட்டு வாங்களேன்.” என்றாள்.

“குடுக்கறத்துக்கு நம்மக்கிட்ட என்ன இருக்கு?”

”உளுத்தம்பருப்பு கொஞ்சம் ஊற வச்சது இருக்கு. ஒரு கைப்பிடி குடுத்துட்டு வாங்க.”

”இதைச் சாப்பிட்டு அவளைச் செத்துப்போகச் சொல்றியா? எத்தனை நாளா அவளுக்கு காய்ச்சல் இருக்குன்னு தெரியல. அவ உடம்பு பூராவும் வீங்கியிருக்கு. இந்தப் பருப்பைக் குடுத்து அவ சாவுக்கு என்னைக் காரணமாகச் சொல்றியா?”

”அப்புறம் வேற என்னதான் செய்யறது? நம்மக்கிட்ட வேற ஒண்ணுமேயில்லையே?”

அனங்கா பரிதவித்தாள். ஆனால் மோத்திக்குக் கொடுக்கும்படியாக வீட்டில் ஒன்றுமில்லை. சேனைக்கிழங்கு இருந்தது. ஆனால் அதையும் நோயாளிகளுக்குக் கொடுக்க முடியாது. ஹபு அதை புப்பாரா காட்டிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் கொண்டு வந்திருந்தான். அதைத்தான் வேக வைத்துத் தின்று கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு துண்டு மிச்சமிருக்கிறது.

அனங்கா, “இந்த சேனைக்கிழங்கை வேகவைச்சு, பிசைஞ்சு கொடுக்கலாமா?” என்றாள்.

”அதை வேணுமானா குடுத்துப் பார்க்கலாம்.”

”ஆனால், இது காட்டுக்கிழங்கு. பரவாயில்லையா?”

“பரவாயில்லை, குடு.”

ஹபு அந்த சொற்ப உணவை வாழையிலையில் பொதிந்து கொண்டு போய் மோத்தியிடம் கொடுத்தான். அனங்கா அதை மிக அக்கறையாக உருவாக்கியிருந்தாள். அது மட்டுமில்லாமல் ஹபுவிடம், “அவளை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வா. முன்வாசல்ல பாய் விரிச்சுப் படுக்க வைப்போம். மாமரத்தடியில எப்படி அவளால படுத்திருக்க முடியும்!” என்று சொல்லியிருந்தாள்.

ஹபு அவளுக்கருகே சென்று, “மோத்தி தீதி! எழுந்திரு, இந்த இதை சாப்பிடு…” என்றான்.

மோத்தி சன்னமான குரலில், “என்ன அது?” என்றாள்.

“அம்மா குடுத்தா. சாப்பாடும், தண்ணியும்.”

“யாரு?”

“என்னோட அம்மா. நான்தான் ஹபு. என்னைத் தெரியலையா?”

மோத்தி பதில் பேசவில்லை. கொஞ்சநேரம் கழித்து ஹபு மீண்டும் கூப்பிட்டான்.

“மோத்தி தீதி!”

“யாரு?”

“இந்தா இதைச் சாப்பிடு. அம்மா குடுத்தா.”

“மைனா, ஓ மைனா, நெல் வயல்ல இருக்க மைனா…”

”ஓ மோத்தி தீதி! என்ன சொல்ற?”

“நீ யாரு?”

“நான்தான் ஹபு. ஞாபகமில்லையா? பாட்சாலால நாங்க இருந்தோமே?”

”குளமெல்லாம் தாமரைப்பூ. மூக்கு நுனியில முத்துப்பூ“

”அப்படியெல்லாம் பேசாத. இதைச் சாப்பிடு. உனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.”

”என்ன இது?”

“இதான், சாப்பாடு.”

”யார் நீ?”

“நான்தான் ஹபு. என்னோட அப்பா பண்டிட் கங்காசரண் சக்ரவர்த்தி, ஸ்கூல் மாஸ்டர். ஞாபகம் இருக்கா?”

”ஹ்ம்ம்ம்…”

”சரி இப்போ இதைச் சாப்பிடு. அம்மா குடுத்தா.”

“அதை அங்கேயே வை.”

“நாய்ங்க சாப்பிட்டிடும். இதைச் சாப்பிட்டுட்டு வீட்டுக்குள்ள வரச்சொல்லி அம்மா சொன்னா.”

“யார் நீ?”

“நான்தான் ஹபு. என்னோட அப்பா…”

மோத்தி அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. ஹபு அவள் தூங்கிவிட்டானென்று நினைத்தான். அவன் சிறுவன்தானே? அவன் இரண்டு முறை கூப்பிட்டும் பதில் வராததால், அவள் தலைக்கருகே உணவை வைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

அனங்கா, “என்ன ஆச்சு? அவ எங்க?” என்று கேட்டாள்.

”அவ தூங்கிட்டு இருக்காம்மா. பைத்தியம் மாதிரி என்னென்னவோ பேசினா. எனக்குப் பயமா இருந்துது. அவ தலைக்கிட்ட சாப்பாட்ட வச்சுட்டு ஓடி வந்துட்டேன்.”

”இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு அவளுக்கு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வா.”

”அப்பா திரும்பி வந்தப்புறம் போய்ப் பார்க்கச் சொல்லேன்.”

“இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு நீயே போ.”

ஹபு கொஞ்சநேரம் கழித்து மீண்டும் சென்று பார்த்தான். அப்போதும் மோத்தி அதே நிலையில் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். உணவு அப்படியே கிடந்தது. அவள் எழுந்திருக்கவோ, அவனிடம் பேசவோ இல்லை. ஹபு பலமுறை கூப்பிட்டுப் பார்த்தான். “ஓ மோத்தி தீதி! ராத்திரியாகப் போகுது, எழுந்திரு.” இருட்டோடு சேர்ந்து மேகங்களும் சூழ்ந்துகொண்டன. மழை வரும் போலிருந்தது. மோத்தி நனைந்து விடுவாளென்று ஹபு கவலைப்பட்டான். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

திரும்பி வந்து அம்மாவிடம் சொன்னான்.

“மொய்னாவைக் கூட்டிட்டுப் போ, ரெண்டு பேரும் சேர்ந்து அவளை உள்ளே கொண்டு வாங்க.”

மொய்னா எப்போதும் சிரித்த முகமாக, துறுதுறுவென்று இருப்பவள். உடனடியாக, “சரி காக்கிமா! அவ என்ன ஜாதி?”

“முச்சினி.”

மொய்னா மூக்கைச் சுளித்து, “சாயந்திர வேளைல முச்சினியைத் தொட விரும்பல. நான் பிராமணச்சி இல்லையா? இன்னொரு தரம் குளிக்கனும்.” என்றாள்.

இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்துக்கொண்டே ஹபுவை அழைத்துகொண்டு மோத்தியைக் கூட்டிவரப் புறப்பட்டாள்.

இருவரும் மோத்தி இன்னும் முன்புபோலவே உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். மண் பானையும், சேனைக்கிழங்கு மசியலும் அவள் தலைக்கு மேல் அப்படியே இருந்தன.

மொய்னா அருகில் சென்று, “ஓ, மோத்தி!” என்றாள்.

பதிலில்லை.

மொய்னா ஹபுவை விடப் பெரியவள். அனுபவமும் அதிகம். அருகில் சென்று கூர்மையாகப் பார்த்துவிட்டு ஹபுவிடம், “ஓடிப்போய் வீட்ல காகாபாபா இருந்தா கூட்டிட்டு வா.” என்றாள்.

”ஏன்?”

“இவள் இருக்கற நிலைமை சரியாப் படல. யாராவது பெரியவங்களைக் கூட்டிட்டு வா.”

அப்போது காபாலி போம் அந்தப்பக்கம் வருவதைப் பார்த்துவிட்டு, அவளைக் கூப்பிட்டார்கள். “ஓ மாஸி, இங்கே வாங்க.”

“என்ன ஆச்சு?”

“இங்கே வந்து மோத்தி தீதி இப்படிப் படுத்திருக்கறதைப் பாருங்க, அசைவே இல்ல.”

காபாலி போம் வேகமாக வந்து மோத்தியை பரிசோதித்தாள்.

மோத்தி இறந்துவிட்டிருந்தாள். அவள் அந்த நீரைக் குடிப்பதற்காகவோ, சேனைக்கிழங்கு பசியலை உண்பதற்காகவோ எழுந்திருக்கப் போவதேயில்லை. அவளிடம் இருந்த சொற்ப உடைமையையும் தெருவிலேயே விட்டுவிட்டு, நிரந்தரமாகச் சென்றுவிட்டாள்.

மொய்னாவிடமும், காபாலி போமிடமும் இதையெல்லாம் கேட்டறிந்த அனங்கா ஆற்றுப்படுத்த முடியாமல் கதறினாள்.


மோத்தியின் இறப்புக்குப் பின் அந்த கிராமத்தில் வசிப்பது மிகவும் கடினமாகிவிட்டது. பட்டினி கிடந்து ஒருத்தி உயிர்விடுவதைப் பார்ப்பது அந்த ஊரினருக்கு அதுவே முதல் முறை. அப்படி நடக்கக்கூடும் என்று யாரும் நம்பத் தயாராயில்லை. பழம் தரும் மரங்களும், மீன்களைக் கொண்ட நதிகளும், நண்பர்களும், சுற்றத்தார்களும் இருக்கையில் இப்படியொன்று நிகழும் என்று யாரும் நம்பவில்லை. யாராவது அவர்களுக்கு உணவு கொடுத்து விடுவார்கள். அப்படித்தான் அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் மோத்தியின் இறப்பின் மூலம்தான் பட்டினி ஒருவரைக் கொல்லக்கூடும் என்று தெரிந்து கொண்டார்கள். இது புத்தகத்தில் படித்தோ, மற்றவர்களிடம் கேட்டோ தெரிந்துகொண்ட கதையில்லை. உயிரோடிருந்த ஒருத்தி அவர்கள் கண் முன்னே செத்துப் போயிருக்கிறாள். யாரும் அவளுக்கு உணவளிக்க முயற்சிக்கவில்லை. யாரும் அவளை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முன்வரவில்லை. அவர்கள் குடும்பத்திலும் இப்படி நடக்கக்கூடும் என்று எல்லோருக்கும் கவலை வந்துவிட்டது.

துர்கா பண்டிட் அன்று முற்றத்திலமர்ந்து மோத்தி உயிர்விட்டதைப் பார்த்திருந்தார். அவர் குடும்பத்திலும் அப்படி நடக்கக்கூடும் என்று பயந்தார். அவர் தங்கியிருக்கும் வீட்டினரே பட்டினிதான் கிடக்கிறார்கள். எத்தனை நாள் அவர்கள் இப்படித் தள்ள முடியும்? அவர்கள் தினப்படி தின்பதெல்லாம் கைப்பிடி வேகவைத்த பருப்பும், ஒரு துண்டு பரங்கிக்காயும்தான். அதையும் அவர்களெல்லாரும் பகிர்ந்து கொள்கிறார்கள். துர்கா பண்டிட்டுக்கு வயதாகிவிட்டது. பசி எளிதில் அடங்குவதில்லை.

மோத்தியின் உடல் மாமரத்துக்குக் கீழே கிடந்தது. நிறைய பேர் வந்து பார்த்தார்கள். தொலைவிலிருந்து பார்த்துவிட்டு நடுங்கியபடி சென்றார்கள். எல்லோரும் ’கடவுள் அருளால நாம பிழைச்சிட்டோம்’ என்று நினைத்தார்கள். அவர்களிருக்கும் நிலைமையின் குரூரத்தைக் காண அவர்கள் கண்களைத் திறந்துவிடுவதற்காகவே மோத்தி உயிர் விட்டது போல ஆகிவிட்டது. அவளுடைய பிணம்தான் அபாயத்தின் முதல் அறிகுறி, நெருங்கிவிரும் இடியோசையின் முதல் முனகல்.

துர்கா பண்டிட், “சொல்லு பாயா, இப்போ என்ன செய்யறது?” என்றார்.

கங்காசரணுக்கு அவரைக் குறித்து வெறுப்பாக இருந்தது. மொத்த குடும்பத்தையும் தன் வீட்டில் கொண்டுவந்து குடிவைத்து, அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப உணவையும் தின்று கொண்டிருக்கிறார். அதனால் எரிச்சலாக, “மத்தவங்களுக்கு என்ன நடக்குமோ, அதுதான் நமக்கும் நடக்கும்! வேறென்ன!” என்றான்.

“சரியான சாப்பாடில்லாம நாம எத்தனை நாள் தாக்குப்பிடிக்கறது? ஆனால் என்ன வழின்னு தெரியாம நாங்க வேற எங்க போறது?”

”இங்கேயே சும்மா உட்கார்ந்திருந்தா ஒரு வழியும் கிடைக்காது. நீங்கதான் போய்த் தேடனும்.”

அனங்கா ஒரு சிறு பொதியைக் கொண்டுவந்து காட்டி, “இதுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியுமா ஜ்யாத்தா மஷாய்? சொல்லுங்க பார்க்கலாம்.”

“தெரியலையே. என்ன?”

“வெள்ளரி, பரங்கி, சங்கு உருளை விதைகள். காபாலி போம் கொண்டு வந்து குடுத்தா. இதையெல்லாம் நான் நம்ம தோட்டத்துல விதைக்கப்போறேன்.”

கங்காசரண், “இதெல்லாம் விளைஞ்சு உன் பசியைத் தீர்க்கும்னு காத்திருக்க நினைக்காத. அதுக்குள்ள நமக்கும் மோத்தி கதியாகிடும்.” என்றான்.

”அதிருக்கட்டும், மோத்தியோட சரீரம் இப்படியே கிடந்து, நாய் நரியெல்லாம் திங்கப்போகுதா? எதாவது செய்ங்க.”

‘என்ன சொல்ல வர்ற?”

”அவ ஜாதிக்காரங்க யாரும் நம்ம ஊர்ல இல்லையா?”

“இருந்தாலும் யாரும் வரமாட்டாங்க. யாருக்கும் இந்த சவத்தைத் தொட விருப்பமில்லை.”

”அப்படீன்னா நாமளே அவளை தகனம் செய்யலாம். அவ இப்படிக் கிடக்கறத நான் அனுமதிக்கமாட்டேன். என் மேல அவளுக்கு அத்தனை பிரியம். அதனாலதான் உயிரை விடறதுக்காக இங்கே வந்திருக்கா. துரதிர்ஷ்டக்காரி! என் மேல அளவுக்கு மீறின பிரியம்…”

சொல்லிவிட்டு, முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

எல்லோருக்கும் இதயமென்ற ஒன்று இருப்பதில்லை. அது இருப்பவர்களுக்கு அதனால் எத்தனைக்கெத்தனை இன்பமோ, அத்தனைக்கத்தனை துன்பமும் உண்டு. அனங்கா வேதனைப்பட்டாள். சாலையோரத்தில் மோத்தியின் உடல் கிடப்பத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்கே உடம்பு முடியவில்லை. இல்லையென்றால் மொய்னாவைக் கூட்டிக்கொண்டுபோய் இந்நேரம் தகனம் செய்திருப்பாள்.

துர்கா பண்டிட், “வா பாயா, நாம ரெண்டு பேரும் சவத்துக்கு என்ன செய்யனுமோ, அதைச் செய்யலாம்.” என்றார்.

துர்கா பண்டிட் இப்படிப் பெருந்தன்மையாக நட ந்துகொள்வதைப் பார்த்து கங்கசாரண் ஆச்சரியப்பட்டான். ஆனால் ஒருவர் மனதின் அடியாழத்தில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. இறுதியில், துர்கா பண்டிட்டும், கங்காசரணும், காபாலி போமும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த சவத்துக்கு மரியாதை செய்து, தகனம் செய்தார்கள்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றன.

கிராமத்தில் பெரும்பாலானோர் வீட்டை விட்டுப் போவதாகக் கேள்விப்பட்டார்கள்.

காபாலி சமூகத்தில் பாதி பேர் அன்றிரவே கிராமத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்கள்.

காபாலி போம் அனங்காவிடம் வந்து வீட்டை விட்டுப் போவதாகச் சொல்லிக்கொள்ள வந்தாள்.

“எங்கே போகப்போற?”

“எல்லாரும் எங்கே போறாங்களோ அங்க. நகரத்துக்கு. ’கொர்மெண்டோ’ (கவர்ன்மெண்ட் – அரசாங்கம்) அங்க எல்லாருக்கும் சோறு போடறதா கேள்விப்பட்டேன்.”

“யாரு சொன்னா?”

”எல்லாரும்தான்.”

”உன் கூட யாரு வர்றா? உன் புருஷனா?”

”அவரு வீட்ல இல்லை. ஒரு வாரம் முன்னாடி கத்திரிக்காய் விற்கப் போனவர் இன்னும் வரலை.”

“எங்கே போனாரு?”

“எனக்கெப்படித் தெரியும்? நான் இங்கே இருக்கேன், நீங்க இருக்க இடத்துல.”

”நீ தனியாப் போகக் கூடாது. சுட்க்கி, நான் சொல்றதைக் கேளு. உனக்கு இளம் வயசு. உன்னை மாதிரிப் பெண்களுக்கு வெளியே எத்தனையோ ஆபத்து. நீ இங்கே என்னோடயே இருந்துடு. எனக்கு சாப்பிடக் கிடைச்சா உனக்கும் கிடைக்கும். என்னோட தங்கச்சி மாதிரி இங்கேயே தங்கிடு. நாம பட்டினி கிடக்க வேண்டி வந்தா, ரெண்டு பேரும் ஒண்ணாவே சாகலாம்.”

காபாலி போம் அவள் சொன்னதைக் குறித்து யோசித்தாள். ஆனால் பதிலெதுவும் சொல்லவில்லை.

“போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு.” என்று அனங்கா வற்புறுத்தினாள்.

”தீதி, நீங்க கட்டாயப்படுத்தினா நான் இருக்கேன். உங்களுக்கு மறுப்பு சொல்ல என்னால முடியாது…. சரி, நான் உங்களோடயே இருந்துடறேன்.”

”கண்டிப்பா? போகமாட்டேதானே?”

”மாட்டேன். இருங்க தீதி. ஒரு வேலை இருக்கு. இதோ வரேன்.”

போரா-ஜது அவளுக்காக செங்கல் சூளைக்கருகிலிருந்த அரசமரத்தின் கீழ் காத்திருந்தான். அப்போது காலை எட்டு மணி இருக்கும். அவளைப் பார்த்தவுடன், “இதுதான் உனக்கு விடிகாலையா? செங்கல்சூளைக்கு ஆயிரம் கூலிக்காரங்க வந்துட்டாங்க. கிட்டத்தட்ட மத்தியானமே ஆயிடுச்சு. எப்போ வண்டி கொண்டு வரது? சாயந்திரமா?”

“வண்டி ஒண்ணும் அவசியமில்லை.”

“என்ன சொல்ற? அவ்வளவு தூரம் நடந்தே வரப்போறியா?”

காபாலி போம் குறும்பாகச் சிரித்து, “நடக்கவும் போறதில்ல, வரவும் போறதில்ல.” என்றாள்.

“வரப்போறதில்லைன்னா என்ன அர்த்தம்? என்ன சொல்ற?”

”அப்படின்னா வரமாட்டேன்னு அர்த்தம்.”

போரா-ஜது எரிச்சலடைந்தான். ”அப்புறம் ஏன் என்னையும் கூட்டிட்டுப் போன்னு நச்சரிச்ச?”

“சும்மாதான்.”

காபாலி போம் போவதற்காத் திரும்புவதைப் பார்த்த போரா-ஜது கோபமாக, “நீ பட்டினி கிடந்து சாகக்கூடாதுங்கறதுக்காகத்தான் உனக்கு உதவி செய்ய நினைச்சேன். போ, போய் செத்துப்போ!” என்றான்.

காபாலி போம் பதிலேதும் சொல்லாமல் போய்க்கொண்டே இருந்தாள்.

போரா-ஜது மீண்டும் ஒருமுறை கத்தினான். “ஏய்! சொன்னாக் கேளு!”

காபாலி போம் திரும்பிப் பார்த்தாள். ஒரு கணம் தயங்கினாள். பின் உறுதியோடு கிளம்பிச் சென்றாள்.

(முற்றும்.)

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 10பிபூதிபூஷணின் மின்னல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.