புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும்

This entry is part 2 of 7 in the series பூமிக்கோள்

கோரா

1969-ல் மனிதன் நிலவில் கால் பதித்தான். 1977-ல் நாசா விண்ணில் செலுத்திய இரட்டை வாயேஜர் விண்கலம், தொடர்ந்து சூரிய மண்டலத்தின் வெளி வீச்சுக்களை ஆராய்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது. செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நாசாவின் விடாமுயற்சி (perseverance ) ரோவர் ரோபோட் களமிறங்கி அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து  வருவதும்,  புதிய தொடுவானங்கள் (New Horizons) என்னும் கோள்களுக்கிடை (interplanetary) விண்வெளி ஆய்வுக் கலம் ப்ளூட்டோவை  படம் பிடித்து அனுப்பியதும்  விண்வெளி ஆராய்ச்சி அண்மையில் நமக்கு அளித்த உவகை தரும் தகவல்கள். 

இவ்வாறு சில பில்லியன் மைல்கள் அப்பாலுள்ள தகவல்கள் நமக்கு எளிதில் கிடைத்து வருகையில், நம் காலடிக்குக் கீழ் சில ஆயிரம் கி.மீ ஆழத்தில் உள்ள புவியின் உட்புற ஆராய்வுகளை  அறிவியலாளர்களால் எளிதில்  மேற்கொள்ள  முடிவதில்லை.  புவி சுமார் 12750 கி. மீ விட்டம் கொண்ட ஒரு கோளம் என்ற விவரம் பண்டைய கிரேக்கர்களுக்குத்  தெரிந்திருந்தது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டில் தான் அது வேகவைத்த ஒரு முட்டையைப் போன்று 3 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது என்று அறிவியலாளர்களால் தீர்மானிக்க முடிந்தது. முட்டையின் பகுதிகளான மேலோடு, வெண் கரு, மஞ்சள் கரு  என்பவைகளை முறையே பூமியின் மேலோடு (crust), கவசம் (mantle), உள்ளகம் (core ) ஆகியவற்றுடன் ஒப்பிட்டார்கள். புவியின் மேலோடு, முட்டை ஓடு போல் நொறுங்கக் கூடிய தன்மை கொண்டது. கவசம் முட்டையின் வெண் கருவை ஒத்தும்  உள்ளகம் மஞ்சள் கருவை ஒத்தும் இருப்பதாகப் புரிந்து கொண்டார்கள். ஒப்புமைகள் இந்த மட்டத்தில் முடிந்து போகின்றன.  

உண்மையில் புவியின் உள்ளகம், அக உள்ளகம் மற்றும் புற உள்ளகம் என்ற இரு பகுதிகளைக் கொண்டது. அக உள்ளகம் வெகு ஆழத்தில் இருப்பதால் பேரழுத்தம் காரணமாக திண்ம நிலையிலும் அதன் மேலுள்ள புற உள்ளகம் திரவ நிலையிலும் உள்ளன. அவற்றின் பொது எல்லையில் கதிரவனின் மேற்பரப்புக்கு நிகரான வெப்பம் நிலவுகிறது. புவியின் தரைப்பரப்பில் இருந்து  புவிமையம் வெறும் 6400கிமீ  ஆழத்தில் இருந்த போதிலும் அங்குள்ள அளவிட முடியாத வெப்பமும்(>5000°C), பேரழுத்தமும் (பூமியைப்போல்  3.6 மில்லியன் மடங்கு வளிமண்டலங்கள்) யாருமே நெருங்க விடாமல் செய்து விடுகின்றன.  புவியின் அடுக்குகள் தூண்டும் நில அதிர்ச்சிகள், எரிமலை உமிழ்வுகள்  நம்மை குலை நடுங்கச் செய்யக் கூடியவை. புவியின் மேற் பரப்பில் நாம் காணும் விண்ணைத் தொடும் மலைத் தொடர்கள், கற்பனைக்கெட்டா ஆழ் பெருங்கடல்கள் ஆகிய இயல்புக் காட்சிகளே நம்மை மலைக்க வைத்துவிடுகின்றனவே?  

 புவியின் உள்ளகப் பரிமாணங்களுடன் ஒப்பிடுகையில் இவையனைத்தும் அற்பமானவை. உலகின் மிக ஆழமான ஆற்றுப் படுகையும் கூட (Hells Canyon in North America-2436 meters depth)  புவியின் மேற் பரப்பில் காணப்படும் சிறு கீறலாகக்  கருதப்படக்  கூடிய ஒன்றே. புவியின் பிரம்மாண்டத்தை வழக்கமான நேர் முறைகளில் ஆராய்தல் இயலாது. நில நடுக்கத்தின் போது உண்டாகும் நில அதிர்வலைகள் (Seismic waves), எப்போதாவது நிகழும் எரிமலை உமிழ்வுகள் மற்றும் விண்கற்களின் உள் கட்டமைப்பு ஆகியனவற்றை ஆராய்வதின் மூலம் அறிவியலாளர்களுக்கு புவியின் மேலோடு, கவசம், உள்ளகம் பற்றிய கவர்ச்சிகரமான உள்ளொளி கிடைத்து விடுகிறது. ஆலிவ் பச்சை நிற படிகக் கற்களும் உருண்டோடும் இரும்புத் தாதுக் கடலும் கொண்டுள்ள புவியின் உள்ளகக் கட்டமைப்பை ஓரளவுக்கு அவர்களால் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. 

புவியின் அடுக்குகள் :

புவி உருண்டையின் மையத்தில் ஆரம்பித்து 4 தனித்துவமான அடுக்குகளாகப்  புவி அமைந்துள்ளது. அவற்றை, மிக மிக ஆழமானது முதல், நம் கால் பதியும் மேலடுக்கு வரை வரிசைப் படுத்தி உரிய பெயர்களில் குறிப்பிடுவது இவ்வாறு : அக உள்ளகம் (inner core), புற உள்ளகம் (outer core), கவசம் (mantle), மேலோடு (crust) ஆகியன. கண்டங்களின் மேலோடு தவிர, பிற அடுக்குகளை நேரில் கண்டறிந்தவர் எவருமிலர். பெருங்கடலின் அடியில் குறைந்த அளவும் கண்டங்களின் அடியில் அதிக அளவும் என வேறுபடும்  தடிமன் கொண்ட  மேலோடு கூட முழுதுமாக இதுவரை ஆராயப் படவில்லை. பூமியில் ஒரே ஒரு இடத்தில் 20 ஆண்டுகால மனித உழைப்பில் அதிக பட்சமாக 12கிமீ வரை துளையிடப் பட்டதே இதுவரை நடந்துள்ள பெரிய ஆராய்ச்சி. இமய மலைக்கு அடியில் இருக்கும் மேலோடு 70 கி.மீ  தடிமன் கொண்டது என்னும் போது அதை ஆராய்ச்சி செய்ய எவ்வளவு பெரிய முயற்சி தேவைப்படும் என்பது சொல்லாமலே உங்களுக்குப் புரியும்.

அக உள்ளகம் (Inner Core):

இது ஒரு உலோக உருண்டை. அதன் விட்டம் (diameter ) 2440 கிமீ. புவியின் மேற்பரப்பிலிருந்து 5180 கிமீ ஆழம் முதல் 6400 கிமீ வரை பரவியுள்ளது. பெரும்பாலும் இரும்பு, கொஞ்சம் நிக்கல் என தனிமங்களை உள்ளடக்கிய மிகமிக அடர்த்தியான  பகுதி. புவியின் பிற பகுதிகளை விட சற்று அதிக வேகத்தில் அக உள்ளகம் சுழல்கிறது. கதிரவனின் மேற்பரப்பில் நிலவுவதைப் போன்ற கடும் வெப்பம் (>5400°C) அக உள்ளகத்திலும் நிலவுகிறது. நாம் தரையில் உணர்வதைப் போல் 3 மில்லியன் மடங்குக்கும் அதிகமான அழுத்தம் அங்கே நிலவுகிறது. அக உள்ளகத்தினுள்ளும் மற்றுமொருவகை இரும்பாலான உள் அக -உள்ளகம்(inner-inner) இருக்கக் கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. (கட்டுரையின் கடைசிப் பகுதியில் இதைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம் )

புற உள்ளகம் (outer core):

புற உள்ளகம் திரவ நிலையிலுள்ள இரும்பு-நிக்கல் சேர்மம் (compound ) நிறைந்த பகுதி.  தரைப் பரப்பிலிருந்து 5180 கி.மீ  ஆழம் முதல் 2880 கி .மீ  ஆழம் வரை பரவியுள்ளது. யுரேனியம் மற்றும் தோரியம் ஆகிய தனிமங்களின் கதிரியக்கச் சிதைவுகள் உண்டாக்கும் வெப்பத்தால் உள்ளக தனிமங்கள் உயர் கொதிநிலை அடைந்து, தொடர்ந்து கடைவுறும் (churning)  கொந்தளிப்பான பிரவாகமாக  புற உள்ளகத்தினுள் சுழன்றோடுகின்றன. உருகியோடும் திரவத்தின் சலனங்களால் மின்னோட்டம் உருவாகி அதன் மூலம் புவியின் காந்தப் புலம் உருவாகிறது. உள்ளகங்கள் சார்ந்த, ஆனால் இன்னும் அறியப்படாத காரணங்களால், 2-3 லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை  காந்தப் புலத்தின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின்னர் அதன் முனைவுத் தன்மையில் (polarity ) தலைகீழ் மாற்றம் நேரிடுகிறது. தற்போதய காந்தப் புலம் வலுவிழந்து வருவதை அறிந்துள்ள ஆராய்ச்சியாளர்கள்,  தலைகீழ் மாற்றத்திற்கான தருணம் இதுவெனக் கருதுகிறார்கள்.

புவியின் கவசம் (mantle):

கவசம் எனப்படும் 3000கி. மீ. தடிமனுள்ள இப்பகுதியே புவியின் மேலதிக தடித்த பகுதி. இந்த கற்பாறைக் கவச அடுக்கு புவியின்  கொள்ளளவில் 84% கொண்ட பெரிய பகுதி. புவியின் மேற்பரப்புக்கு கீழ் வெறும் 30கி. மீ. ஆழத்தில் தொடங்குகிறது. பெரும்பாலும் இரும்பு, மக்னிசியம், சிலிக்கன் ஆகிய தனிமங்களால் ஆன அடர்த்தியான மிகை வெப்ப அரைத் திண்ம (caramel candy-யை நினைவூட்டும்) அடுக்கு இது. கீழ் அடுக்கைப் (புற  உள்ளகம் ) போன்றே இதுவும் சுழல்கிறது, ஆனால் சற்று மெதுவாக.

மேலோட்டை ஒட்டியுள்ள கவசத்தின் வெளிப்பகுதி வெப்பம் குறைந்தும் இணக்கமற்றும் (rigid), மேலோட்டின் இயல்பையே கொண்டதாக இருக்கும்.  கவசத்தின் மேல்பகுதி  மற்றும் மேலோடு  இணைந்த பகுதி  கற்பாறைக் கோளம் (lithosphere ) என்ற பெயரில் அழைக்கப் படுகிறது .

கவச அடுக்கின் இடைப் பகுதியில், தோராயமாக மேலிருந்து  110கி.மீ முதல் 200 கி.மீ வரையுள்ள ஆழத்தில் எங்கேயோ, கவசத்தின் வெப்ப நிலை இரும்பின் உருகுநிலையை எட்டுகிறது. அதனால் அங்கே  பகுதியளவில் உருகிய  இரும்பு  அடுக்கு ஒன்று உருவாகிறது. இது மென்பாறைக் கோளம் (asthenosphere) என்றழைக்கப் படுகிறது. இந்த சூடான வலுவற்ற வழுக்குப் பாறைப் பகுதியில்  நின்று சவாரி செய்யும் கண்டத் தட்டுகள்(tectonic plates )  இங்குமங்கும் சறுக்கிச் செல்கின்றன என்று புவியியலாளர்கள் கூறுகிறார்கள்..

கவசம், புவியின் மேலோட்டின் படிமலர்ச்சியில்(evolution) பெரும் பங்கு வகிப்பதுடன் கண்டத் தட்டு நகர்தலுக்கான வெப்ப மற்றும் இயங்கு விசைகளை வழங்குகிறது. உள்ளகங்கள் விடுவிக்கும் வெப்பம் முழுதுமாக கவசத்திற்குள் இடம் பெயர்கிறது. அதில் பெரும் பகுதி (>90%) வெப்பச் சலன முறையில் கவசத்தின் வழியாக கற்பாறைக் கோளத்தின் (lithosphere) அடிக்கு  செல்கிறது.

கவசத்தின்  மையப் பகுதி ஆலிவ் பச்சை படிகக் கற்பாறைகளும் கொந்தளிக்கும் திரவநிலை இரும்புக் கடலும் கொண்டது என்பது அவர்களின் ஊகம். எரிமலை உமிழ்வின்போது வெளிப்படும் படிக கற்பாறைகள்  தரைக்கு வந்தபின் kimberlite என்ற பெயரைப் பெறுகின்றன. 

புவியின் மேலோடு (crust):

வேக வைத்த முட்டையின் ஓடு போன்ற அமைப்பு புவிக்கும் உண்டு. அது மேலோடு (crust) என்று சொல்லப் படுகிறது. பிற அடுக்குகளுடன் ஒப்பிடுகையில் இதை மெல்லியது, குளிர்ச்சியானது மற்றும் எளிதில் நொறுங்கும் இயல்புடையது எனக் கருதலாம். சிலிக்கா, அலுமினியம், உயிரியம் (oxygen) போன்ற தனிமங்களாலானது மேலோடு. இதன் தடிமன் பெரிய அளவில் வேறுபட்டிருக்கும். பெருங்கடல்களின் அடியில் இந்த அடுக்கின் தடிமன் மிகக் குறைவாக 5கிமீ அளவிலும்  கண்டங்களின் அடியில் உள்ள மேலோடு அடுக்கின் தடிமன் 30கிமீ முதல் 70கிமீ வரையும் இருக்கும்.

கண்டத்  தட்டுகள் (tectonic plates )

மேலோடும் அதை ஒட்டிய கவசத்தின் மேல் பகுதியும் ஒட்டுமொத்தமாகப் பல துண்டங்களாக (சூறைத் தேங்காய் ஓட்டைப் போல்) உடைந்து ஒரு ராட்சத குறுக்கு வெட்டுப் புதிர் போல ( jigsaw puzzle) போல காணப்படுகிறது.  இவற்றைக் கண்டத்  தட்டுகள் என்கிறோம். இவை மிக மெதுவாக ஆண்டுக்கு 3-5 cm என்ற விகிதத்தில் நகர்கின்றன. எது இவற்றை நகர வைக்கிறது என்பது முழுதுமாக இன்னும் அறியப் படவில்லை. கவசத்தின் கீழ்ப் பகுதிகளில் நடைபெறும் வெப்பச் சலன ஓட்டம் காரணமாக புவியத் தட்டுகளின் நகர்வுகள் ஏற்படக் கூடும் என்பது ஓர் ஊகம். வெவ்வேறு அடர்த்தி கொண்ட மேலோட்டின் பலகைகள் (slabs) உண்டாக்கும் இழுப்பு விசை காரணமாக, புவியத் தட்டுகள் ஒருங்கியோ, விலகியோ அல்லது ஒன்றின் மேல் மற்றொன்று சறுக்கியோ செல்ல நேரிடலாம் என்கிறார்கள் சில அறிவியலாளர்கள். இவை கீழ் மட்டத்தில் நடைபெறும் சிறு அசைவுகளே என்றாலும் நில மட்டத்தில் பேரழிவு தரும் நிலநடுக்கம் அல்லது எரிமலை உமிழ்வுகளை ஏற்படுத்துகின்றன.

புவியின் அடுக்குகளின் தன்மைகள் அறிதல் :

மேரிலண்ட் பல்கலையின் நில அதிர்வு ஆய்வாளரான வேத்ரன் லேகிச் (Vedran Lekic) கூறுவது: “நாம் கோள்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் பூமிக்குள் சென்று தொழில் நுட்ப ரீதியாக அதன் உள்ளமைப்பை புரிந்து கொள்வது, விண்வெளிக்கு செல்வதை விட, உண்மையில் பன்மடங்கு கடினமானது.” ஆனாலும் நில அதிர்வுகள், எரிமலை உமிழ்வுகள், சூரிய ஒளிக் கதிரியக்கம் ஆகியவற்றின் நுணுக்கமான வெளிப்பாடுகளின் மூலம், புவிக்கோளின் கவசம், மேலோடு மற்றும் உள்ளகம் பற்றிய அனுமானங்களுக்குத் தேவையான கவர்ச்சிகரமான உள்ளொளிகள் கிடைத்து விடுகின்றன.

புவிக்  கட்டமைப்பு அறிதல் 

புவியின் மேலோடாகவும் இருக்கின்ற புவியத் தட்டுகள் ஒன்றை மற்றொன்று கடந்து செல்லும் போது, முதலில் நெருங்கி மோதிப்  பின்னர் விலகுவதுண்டு. மோதல் மற்றும் அத்துடன் உருவாகிய சக்தி அலைவுகளின் வெளிப்பாடு நில நடுக்கம் அல்லது பூகம்பம் என்று அழைக்கப் படுகிறது. விடுபடும்  அதிர்வலைகள் அனைத்தும் நம் செவியின் கேட்பு எல்லைக்குக் கீழான அலைவு எண்(அளவு) கொண்டவை. அவை மோதல் நடந்த  இடத்தில் இருந்து எல்லாத் திசைகளிலும் வெகு தூரம் பரவுகின்றன. அவற்றின் வெளிப்பாடுகளை ஆய்கின்ற அறிவியலாளர்கள், நிலநடுக்கம் எப்போது எங்கே ஆரம்பமானது என அறிந்து கொள்ள முடியும். X-கதிர்கள் மூலம் மனித உடலை ஆய்வது போலவே நில அதிர்வு அலைகளின் மூலம் புவிக்கோளை ஆய்வு செய்ய முடியும்.

நில நடுக்கத்  தரவுகளை விளக்குவதோடு மட்டுமல்லாமல், நில அதிர்வு ஆய்வாளர்கள் அதிர்வலைக் கருவி மற்றும் வெடிவைப்பு மூலம் செயற்கை நில நடுக்கச் செயல்பாட்டை நடத்தியும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். புவியின் உட்பகுதி வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டிருப்பதையும் அவற்றில் சில அடுக்குகள் பிற அடுக்குகளை விட நில அதிர்வலைகளை எளிதில் கடத்துவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த அடுக்குகளின் அடர்த்தி எண்ணையும் அவர்களால் துல்லியமாகச் சொல்ல முடியும்.  அடர்த்தி எண் தகவல்களை மேலும் ஆராய்பவர்கள், கோள்களின் உள் அடுக்குகளின் மூலப் பொருட்கள் அறிவியல் கற்ற கனிம இயற்பியலாளர்கள் (mineral physicists). அவர்கள் வெவ்வேறு அடுக்குகளை முழுமையாக்கும் மூலப் பொருட்களை ஆய்வு மூலம் உறுதி செய்வார்கள்.

கனிமங்கள் அறிதல்

தர்க்க ரீதியாகப் பார்த்தால் கதிரவனிலிருந்து வெடித்துச் சிதறியவை கோள்கள் என்பதால் அவற்றில்  கதிரவனில் நிகழும் வேதி வினைகளால் (chemical reactions) உருவாகும் தனிமங்களே நிறைந்திருக்கும். உட்கவர்வு நிறமாலையியலின் படி (Absorption Spectroscopy), ஒவ்வொரு தனிமமும் ஒளியின் குறிப்பிட்ட அலைநீளங்களை மட்டுமே உறிஞ்சிக் கொள்ளும். அந்த உத்தியைப் பயன்படுத்திக்  கதிரவனில் அதிக அளவில் சிலிகான், உயிரியம் (oxygen), மக்னீசியம், இரும்பு தனிமங்களும் குறைந்த அளவில் பொட்டாசியம் மற்றும் கால்சியமும் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். இதே விகிதப்படியே கதிரவனும், மூத்த முதல் நிலை விண் கற்களும் கனிமங்களைக் கொண்டிருக்கின்றன. மூத்த விண்கற்களில் தென்படும் கட்டமைப்புக் கோவைகளே (building blocks) புவி உள்ளிட்ட எல்லாக் கோள்களுக்கும்  உரியதாக இருக்க வேண்டும். புவிக்கு வெளியிலிருந்து கிடைக்கும் இவ்வித தடயங்களோடு, எரிமலை உமிழ்வுக் குழம்பில் கலந்து வரும் புவிக் கவசத் துண்டுகள் மூலமாகவும் மூலகக் கலவை பற்றிய முக்கிய தடயங்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தையும் கனிம இயற்பியலாளர்கள்  நில அதிர்ச்சியியல் தரவுகளோடு பொருத்திப் பார்த்து புவிக்கோளில் தனிமங்களின் பரவல்கள் எவ்வாறுள்ளது எனப் புரிந்து கொள்கிறார்கள்.

புவியின் உள்ளகம் ஒரு அடர் திண்மம் என புவி அதிர்ச்சியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கதிரவன் மற்றும் விண் கற்களில் கோபால்ட், நிக்கல், குரோமியம் போன்ற பிற கனத்த தனிமங்களை விட இரும்பு அதிக அளவில் இருப்பதைப் போன்றே நம் கோளின் உறுப்புக் கோவையில் (building-block) இரும்பின் அளவு மிகுந்தும், அதில் மிக கணிசமான அளவு உள்ளகத்தை நிறைத்திருக்கும் என்று எளிதில் முடிவு செய்து விட்டார்கள். அதற்காக  உள்ளகப் பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை.

புவிக்குள் உள்ள நிலைமை, புவியின் கட்டுமானத் தனிமங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிய விரும்பும் கனிம இயற்பியலாளர்கள்  அதே போன்ற நிலைமைகளை எப்படியாவது சோதனைச் சாலைகளில் உருவாக்கியே உற்று நோக்கி அறிகிறார்கள். நேரில் பார்த்து அறிய முடியாத போது, அர்த்தமுள்ள கோட்பாடுகளின் அடிப்படையில் அறிந்த உண்மை நிலைமைகள் அனைத்தையும் மிகச் சிறிய அளவில்  உருவாக்கி சோதனையில் ஒத்த முடிவுகள் எட்டப் படுவது அறிவியல் ஆய்வு முறைகளில் ஒன்று. மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெப்பம் தணிந்து வந்த நிலையில், புவிக்கோளின் மையப் பகுதியை திண்ம நிலை இரும்பு நிரப்பியபின் அதன் கவசமாகவும் பரவி இருக்கலாம் என்ற முடிவு, இரு வைரங்களின் மத்தியில் ஒரு மிகச் சிறிய தனிமத்தை வைத்து அதிக அழுத்தம் கொடுத்து Mao என்னும் கனிம இயற்பியலாளரால் எடுக்கப்பட்டது.  நம் காலடிக்கு கீழேயுள்ள பூமிப் பந்தின் தன்மையை முழுதாக அறிவதற்கு உரிய சோதனைகளை இயற்றவும் மேற்கொள்ளவும் அறிவியலின் வெவ்வேறு பிரிவுகளின் கூட்டு ஆராய்ச்சி  மிக மிக முக்கியம்.

முடிவுரை:

எரிமலைகள் வெளிப்படுத்தியனவும்,  புவி அதிர்வுகள் கிசுகிசுத்தனவுமே புவியின் மேலோட்டினுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது பற்றிய நம் அனுமானங்களின்  அடிப்படை. புவியின் உள்ளக அமைப்பும் அவ்வாறே அனுமானிக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி புவியின் அக  உள்ளகமும்  இரு அடுக்குகளைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்துக்கு வலு கூடி வருகிறது. உட்புற-அக (inner-inner) உள்ளகம் என்ற அடுக்கு சற்று விசித்திரமானதும் கூட. பன்னாட்டு நில அதிர்ச்சியியல் மையம் பல்வேறு தசாப்தங்களில் கண்டறிந்து சேகரித்து வைத்துள்ள தரவுகளை ஆயிரக்கணக்கான உள்ளக மாடல்களுடன் பொருத்திப் பார்த்தபோது 

நில அதிர்ச்சி சார் (seismic ) அலைகள் புவிமையத்தில் இருந்து வடக்கு-தெற்கு திசையில் செல்லும்போது விரைவாகவும், நில நடுக்கோட்டின் திசையில் செல்லும்போது அதைவிடக் குறைந்த வேகத்திலும் முரணின்றி எப்போதும்  பயணித்து வருவதை  ஸ்டீபன்சன் மற்றும் சகாக்கள் கண்டுபிடித்துள்ளனர். வெப்பநிலையும் அழுத்தமும் உச்ச அளவில் இருக்கும் போது குளிர்ந்து திண்மையடையும் இரும்பு உலோகத்தின் உள்  கட்டமைப்பு(grains ) வேறுபட்டிருக்கக்  கூடிய சாத்தியம் உண்டு என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். அதுவே புவியின் காந்தப் புல மாற்றங்களுக்கு (தலைகீழ் மாற்றம் உட்பட்ட) தாக்கத்தை உருவாக்கும் காரணியாக இருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார்கள்.  உள்ளகத்தில் மற்றொரு அடுக்கு என்னும் கருதுகோள் நிறுவப்பட்டால், பாட நூல்களில் புவியின் 5 அடுக்குகள் என்று திருத்தி எழுதப் பட வேண்டியிருக்கும்.

சுட்டிகள் 

https://www.discovermagazine.com/planet-earth/how-we-know-whats-deep-inside-the-earth-despite-never-traveling-there

https://www.livescience.com/new-earth-layer-solid-inner-core.html

https://www.sciencealert.com/earth-s-hidden-innermost-core-hints-at-an-even-more-dramatic-planet-history

https://www.sciencedirect.com/book/9780123852274/earth-as-an-evolving-planetary-system

Series Navigation<< புவிக்கோளின் நான்கு வடமுனைகள்புவி எனும் நம் கோளின் தனிச் சிறப்புகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.