சுமை

சுமை

    ஆடிக்காற்று தெருவில் கிடந்த மணலைத் தூற்றி விளையாடியது. மரங்கள் சாமி வந்த பெண் போல் பேயாட்டம் ஆடின. கிளைகள் முறிந்து விழுந்து விடுமளவுக்கு அப்படியொரு ஆட்டம். தெருவில் நடந்து செல்வோர் கண்களில் காற்று மண்ணைத் தூவியது. உடைகளைப் பிடித்திழுத்து விளையாடியது. 

அம்மா அப்படியும் சமாளித்துக்கொண்டு கடைக்குப் போய் வந்துவிட்டாள். கையிலிருந்த மஞ்சள் பையை புடவைக்குள் மறைத்து பத்திரப்படுத்தியிருந்தாள். அதில் குழந்தைக்கு குளியல் சோப்பும், பவுடர் டப்பாவும் சில மளிகை சாமான்களுமிருந்தன.

அம்மாவின் நாக்கு வறண்டிருந்தது. அவசரமாக சொம்புத் தண்ணீரை வாயில் சரித்துக் கொண்டாள்.

” மணி பன்னிரண்டாயிடுச்சு. குழந்தையை குளிப்பாட்டலாம், கொண்டுவா…..”

கொல்லையில் வெயில் பழுத்துக் கிடந்த சிமெண்ட் தளத்தில் பலகைப் போட்டு அம்மா கால் நீட்டி அமர்ந்து கொண்டாள். குழந்தை இளஞ்சிவப்பு நிறத்தில் கூடை கவிழ்த்த தினுசில் முடிக் கற்றைகள் புரள பாட்டி காலில் கையைக் காலை அசைத்தபடி கிடந்தது.

சூடான நீர் ஊற்றியதும் கத்தத் தொடங்கியது. அம்மா செல்லம் கொஞ்சியபடியே சோப்பு போட்டாள். வெந்நீர் ஊற்றி கை, கால்களை பிடித்து விட்டாள். இரண்டு கால்களையும் நேராக சேர்த்து வைத்து அழுத்தி விட்டாள்.

கஸ்தூரி மஞ்சளில் தண்ணீர் விட்டு குழைத்து உடலெங்கும் பூசிக் குளிப்பாட்டினாள். கடைசியாக தண்ணீரால் சுற்றி திருஷ்டி கழித்து தூக்கி கவிதாவின் கையில் கொடுத்தாள்.

” சீக்கிரம் துவட்டிவிட்டு பால் குடு.”

தண்ணீர் ஊற்றி சிமெண்ட் தளத்தை அலசி நிமிர்கையில் இடுப்பு வலித்தது. மெல்ல, மெல்ல நிமிர்ந்து ஒரு நிலைக்கு வந்து உள்ளே நுழைந்தபோது மணி பன்னிரண்டரையாகி இருந்தது.

‘ ஒரு பவுன்ல செயினும், அரை பவுன்ல கைக்கு காப்பும் போடணும்.’
மனதின் முணுமுணுப்பு அடங்கவேயில்லை. உறக்கமின்றி படுத்திருக்கும் போதும்,
சமைக்கும் போதும் அது முணுமுணுத்துக் கொண்டிருப்பது காதுகளில் விழுந்தபடியிருந்தது.

மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகளின் தொடர்ச்சியான கிறீச்சிடல் போல அது சதா சத்தமிட்டுக் கொண்டேயிருந்தது.
குழந்தை பசியடங்கி உறங்கத் தொடங்கியிருந்தது. நாக்கில் தங்கிவிட்ட பாலின் ருசி மகிழ்ச்சியைத் தந்தது போலும். அவ்வபோது கன்னத்தசைகள் இளக இதழ் பிரியாமல் சிரித்தது.

” பார்வதி தாமரைப் பூவைக் காட்டி விளையாட்டு காட்டறா. அதான் பாப்பா சிரிக்குது” என்றாள் அம்மா. திடீர், திடீரென உதடுகளைக் குவித்து செருமிய போது, நரி மிரட்டல் என்றாள்.

வீட்டு வேலைகளுக்கு நடுவில் குழந்தையைக் கொஞ்ச அவளுக்கு நேரமேயில்லை. போகும்போதும் வரும்போதும்,

” என்ன பார்க்கிறீங்க, யாரு நீங்க, இங்க எதுக்கு வந்தீங்க…..” என்று நின்று நாலு கேள்விகள் கேட்டு விட்டுப் போனாள்.

குழந்தை பிறந்த வீட்டில் வேலைகளுக்குப் பஞ்சமேயில்லை. குழந்தை துணி அலசி, பத்திய சாப்பாடு சமைத்து, மற்ற வேலைகளைப் பார்த்து அம்மாவுக்கு அசந்து போய்விட்டது.

” பெரியம்மாவை ஒத்தாசைக்குக் கூப்பிடலாமா…..?” என்று கவிதா கேட்டாள்.

“அதுக்கும் சேர்த்து நான் செய்யணும்.”
அம்மா முடித்துவிட்டாள்.

  அம்மா புடவையை உதறி நன்றாக உடுத்திக் கொண்டாள்.

” கதவை தாழ் போட்டுக்கோ. நான் கடைக்குப் போயிட்டு வந்திடறேன்.”

கையகல நோட்டை மஞ்சள் பைக்குள் வைத்து புடவை முந்தானைக்குள் மறைத்துக்கொண்டாள். குதி தேய்ந்த செருப்புகளை அணிந்து வீதியில் இறங்கி நடக்கத் துவங்கினாள்.

கடை அடுத்த தெருவிலிருந்தது. காற்று, உலர்ந்த சருகைப் போல அவளை இழுத்துச் சென்றது. கொஞ்சம் சுதாரித்து நடக்க வேண்டியிருந்தது. இல்லாது போனால் அவளை தன்போக்குக்கு இழுத்து சென்றுவிடும் போலிருந்தது.

அம்மா மனதின் முணுமுணுப்பை பொறுக்கமாட்டாமல் அல்லாடிக் கொண்டிருந்தாள். இப்போது காற்று வேறு. சேர்த்து வைத்த காசு சிசேரியனுக்கு செலவழிந்ததிலிருந்தே மனம் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டது.

” அதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா. …..என் பொண்ணுக்கும் உங்களைக் கேட்டுத்தானே செஞ்சேன்.”
கவிதா மாமியார் எளிதாக சொல்லி விட்டாள். அம்மாவுக்கு நா எழவில்லை. தலை பாறாங்கல்லாய் கனப்பது போல மெதுவாகவே அசைந்தது.

அம்மா வேகவேகமாகத் திரும்பி வந்தாள். மஞ்சள் பை காது இற்றுப்போய்விடும் போல கனத்தது.

” பதினாறாம் நாள் காப்பு போடணும்னு இல்ல. மூணாம் மாசம் போட்டுக்கலாம். உங்க நிலைமை எனக்குப் புரியாதா என்ன…”

கவிதா மாமியார் பெருந்தன்மையாகச் சொல்லி விட்டுப் போயிருந்தாள்.
நிலவு குளிரைப் பொழிந்தது. உடல் விறைக்காத குளிர். காற்று அடங்கித் தணிந்திருந்தது. அம்மா கால் நீட்டி குழந்தையைப் படுக்க போட்டிருந்தாள். இரவு உணவை முடித்த பிறகு அவளுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும். அந்த நேரத்தில் குழந்தையை அவள் கவனித்துக் கொள்வாள்.

” தா பூ, தாமரைப்பூ, தாயார் கொடுத்த தாழம்பூ…..” என்று பாடுவாள்.

“நாளைக்குப் பை எடுத்துட்டு கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வர்றீங்களா……?” என்று கேட்பாள்.

” ஊருக்குப் போனதும் பாட்டியை மறந்துடக் கூடாது. அடிக்கடி வந்துப் பார்க்கணும். சரியா….?” என்பாள். கவிதாவுக்கு சிரிப்பு வரும்.

அம்மா, குழந்தையை கவிதாவிடம் தந்து விட்டு எழுந்தாள். கால்கள் மரத்துப் போயிருந்தன. அடியெடுத்து வைக்க சிரமமாயிருந்தது. நின்று சுவரைப் பிடித்துக் கொண்டு கொல்லைப்புறம் போனாள்.

வயிறு முட்டிற்று. தாமதித்தால் புடவை நனைந்துவிடும் அபாயத்திலிருந்தது. அப்படியே சாக்கடையருகில் ஒதுங்கி கால் கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள். மறுநாள் கவிதாவின் ஒன்றுவிட்ட நாத்தனார் குழந்தையைப் பார்க்க வருவதாக இருந்தாள்.

அவளுக்குப் பாயசத்துடன் சாப்பாடு போட வேண்டும். மறுநாளைக்கான வேலைகள் நினைவில் வந்து உடம்பை அசத்தின.

” லைட் அணைச்சிடவா……?”

அம்மா சத்தம் வராமல் கேட்டாள். குழந்தை பெரும், பெரும் மூச்சுகள் எடுத்து உறங்கிக் கொண்டிருந்தது. விளக்கணைத்துப் படுத்தபோது கால்கள் வலித்தன. உடம்பின் ஒரு பகுதி போலல்லாமல் அவை தனித்து சதா வலித்துக் கொண்டேயிருந்தன.

அம்மா கொஞ்சம் மண்ணெண்ணெய் எடுத்து கால்களில் தேய்த்து விட்டுக் கொள்வாள். இப்போது எழுந்து புட்டியை எடுப்பதற்கே அலுப்பாயிருந்தது. வலிந்து கண்களை மூடிக்கொண்டாள். அரவமடங்கி கனத்த இருளுக்குள் கிடந்தபோது மனதின் முணுமுணுப்பு கேட்கத் துவங்கியது.

‘ ஒரு பவுன்ல செயினும், அரை பவுன்ல கைக்கு காப்பும் போடணும்.’

அம்மா இருளை வெறித்தாள். நாள் ஒன்றிலிருந்து யோசித்துப் பார்த்தும் ஒரு வழியும் புலப்படவில்லை. அரும்பாடுபட்டு சேர்த்து வைத்த காசு கவிதாவின் கல்யாணம் நடத்தப் போதுமானதாயில்லை. கொஞ்சம் கடனும் வாங்க வேண்டியிருந்தது.

வாங்கிய கடனை அடைக்க வீட்டுப் பத்திரம் அடகுக்குப் போனது. அதை இன்னும் மீட்டபாடில்லை. அதற்குள் இன்னொரு செலவு.

அம்மா மாதத்தின் முதல் வாரத்தை மிகவும் எதிர்பார்த்தாள். அப்பாவின் இறப்புக்குப் பிறகு பாதியாகிப்போன அரசாங்க உதவித் தொகை அவளை வாழ்க்கையோடு இணைத்திருந்ததில் முதல் வார நாட்கள் அவளுக்கு சந்தோஷத்தைத் தந்தன.

மளிகைக் கடை கணக்கைத் தீர்க்க செல்லும் நாட்களில் அவளுக்குக் கால்கள் நடுங்கவில்லை. தெருவில் ஒரு பூனை போல பதுங்கிச் செல்லாமல் நிதானமாக நடந்தாள். கடையில் நாலுபேர் நிற்கையில் பின்தங்கி கடை காலியான பிறகு சாமான்கள் வாங்கும் பழக்கத்தை அன்று கை விட்டு விடுவாள்.

கடைச் சிப்பந்தியை உரக்க அழைத்து கணக்கை நேர் செய்யச் சொல்லும் போது அவள் கண்களில் பெருமிதம் மின்னும். ஒரு கையை இடுப்பில் ஊன்றியிருப்பாள். ஊன்றிய கையில் மஞ்சள் பை தொங்கும்.

    குழந்தை அழுது கொண்டேயிருந்தது. கதாகாலட்சேபம் போல இடைவிடாத அழுகை. 

” வயிறு வலிக்குதோ என்னவோ” என்று அம்மா வசம்பை சுட்டுத் தொப்புளைச் சுற்றித் தடவி விட்டாள். அழுகை தணியவில்லை.

” அடிக்கிற காத்துக்கு நமக்கே உடம்பு வலிக்குது. பச்சை மண்ணு என்ன பண்ணும்” என்று கவிதாவை அணைத்தபடி படுத்துக் கொள்ளச் சொன்னாள். எதற்கும் அழுகை நிற்கவில்லை.

” டாக்டர்கிட்ட காட்டிடலாம்மா…..” கடைசியாக கவிதா, அம்மா பயந்தபடியே சொல்லிவிட்டாள். டாக்டர் பீஸ், மருந்து என்று கணிசமாக செலவழிந்திருந்தது. அதன்பின் குழந்தை அரவமின்றி உறங்கியது.

கவிதாவின் கணவன் குழந்தையைப் பார்க்க வந்திருந்தான். பிரசவத்தின்போது வந்து விட்டுப் போனவன் ஒரு மாதம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான். பத்திய சமையலோடு விருந்து சமையலும் சேர்ந்துகொண்டது.

அம்மா அடிப்படியே கதியென்று கிடந்தாள். வெயில் ஓட்டிலிருந்து இறங்கி முற்றத்தில் கிடந்து தாழ்வாரத்தில் நகர்ந்து தேயும் வரை அவளுக்கு வேலையிருந்தது. அடுப்பு எரிந்து கொண்டேயிருந்தது. மளிகைக்கடை கடன் நோட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் சரசரவென்று தீர்ந்தன.

” உருளைக்கிழங்கு போண்டா அவருக்கு ரொம்பப் பிடிக்கும்மா. சாயந்தரம் செஞ்சிடு” என்றாள் கவிதா.

அம்மா இரவு பதினோரு மணிக்கு கட்டையை சாய்த்து நான்கு மணிக்கு எழுந்து கொண்டாள். நான்கு நாட்கள் கல்லைக் கட்டிக் கொண்டு மெதுவாக நகர்ந்தன. ஐந்தாம்நாள் காலை அம்மா ஆறு மணிக்கு எழுந்து கொண்டாள்.

கொல்லையில் தத்திக் கொண்டிருந்த தவிட்டுக் குருவிகளை பார்த்தபடி சிறிது நேரம் நின்றாள். இரவின் நிலவு மறைவதற்கு முன்னமே சூரியன் முகாமிட்டிருந்தது. அம்மா ஞாபகம் வந்ததுபோல் பரபரவென்று இயங்க ஆரம்பித்தாள்.

பஞ்சாயத்து போர்டு குழாயில் வந்த நீரை குடத்தில் பிடித்து உள்ளே கொண்டு வந்தாள். சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்தாள். வெந்நீர் கொதிக்க வைத்து கவிதா குளிக்க வாளியில் நிரப்பினாள். அவளின் பொழுதுகளில் வேலைகள் சங்கிலிக்கண்ணிகளாய் தொடர்ந்தன.

      அம்மா உச்சி உறுமும் நேரத்தில் ரேஷன் கடையிலிருந்து திரும்பி வந்தாள். முகம் சுட்டக் கத்தரிக்காய் போல கறுத்திருந்தது. தலைமுடி கலைந்து பஞ்சு மிட்டாய் போல பம்மலாய் அடர்ந்திருந்தது. 

” கடையில ஏகப்பட்ட கூட்டம். கியூவுல நின்னு சாமான் வாங்கறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சு.”

அம்மா மின்விசிறிக்குக் கீழே கால் நீட்டி அமர்ந்தாள். குதிகால்களில் வெடிப்புகள் ஓடியிருந்தன. கவிதாவின் முகம் பிரகாசித்தது. அவள் ஏதோ சொல்ல விழைந்தது புரிந்தது.

” என்னாடி…..?” அம்மாவின் தலை கேள்வியாய் அசைந்தது.

” பாப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைப் பார்த்து சிரிச்சிதும்மா.”

” முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சாச்சா…….”
அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் மின்னி மறைந்தன. கை, காலை அசைத்தபடி கிடந்த குழந்தையைப் பார்த்தாள்.

” கண்ணுல முடி விழுந்து மறைச்சுது. எடுத்துவிட்டேன். ஈ…ன்னு ஒரே சிரிப்பு.”

” மூணாவது மாசம் முகம் பார்த்து சிரிக்கும்பாங்க……”
அம்மா பட்டென்று சொல்லிவிட்டாள். அவளுக்கு பகீரென்றிருந்தது.

‘ ஒரு பவுன்ல செயினும், அரைப் பவுன்ல கைக்கு காப்பும் போடணும்.”
மனம் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

***


One Reply to “சுமை”

 1. அடித்தட்டு மக்களின் வாழ்வில் குழந்தைப் பிறப்பு என்பது சந்தோஸிக்க முடியாத சந்தோஷமாக ஆடிக்காற்றாக அசைத்துக் கொண்டிருப்பதை உருக்கமாக கதைத்திருக்கிறார் கிருத்திகா .வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.