ஆக்கா

கதீர்

மூன்று நாட்களாக முதுகு வழியால் அவஸ்தைப்பட்ட மகனை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றான். வளாகம் அரவம் குறைந்து கிடந்தது. வரவேற்புப் பகுதியில் இரண்டு மூன்று தாதியர்களின் நடமாட்டம் தெரிந்தது. எல்லோரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். அவனும் மகனும் கூட.
“இவர் உங்கள் மகனா?”
“ஆம்”.
ஆருக்கு?
இவருக்கு.
பேரு….? வயசு…..?
கலிபர். எட்டு.
அவன் பெயரை ஒரு மூலையில் எழுதி இன்னொரு மூலையில் தொடர் இலக்கமொன்றை எழுதி அதைச்சுற்றி ஒரு வட்டம் வரைந்து கொடுத்தாள். வைத்தியசாலையின் சார்பில் அவள் கையால் எழுதிக் கிடைத்த முதல் பத்திரம் அது.
அவள் அங்கு தாதியாக வேலை செய்கிறாள் என்பதை யாரோ ஒரு நண்பன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான்.
இருபது வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் நேரில் பார்க்கிறான். இலேசாக மெலிந்து நெடுத்திருந்தாள். பழைய வெள்ளை நிறம் இல்லை.
வைத்தியர் அறைக்குச் செல்லும் முறை வரும் வரை இடைவெளி விட்டுப் போடப்பட்டிருக்கும் கதிரைகள் ஒன்றில் அமர்ந்துகொண்டான். இடையிடையே அவனைப் பார்ப்பதும் அவன் பார்த்தால் அவளொரு திசையில் பார்ப்பதுமாக இருந்தது.
ஆக்கா எனும் குதிரை அவன் மனவெளியில் சிறிது நேரம் ஓடத் தொடங்கியது.
அன்று ஒருநாள் மாலை நேரம், சுவர்களின் மேலால் இழுபட்டுக் கிடந்த செங்கதிர்களை சூரியன் மெல்ல மெல்ல சுற்றிக் கொண்டிருந்தான். வழமை போலவே அவன் சைக்கிளில் மூன்று குறுக்கு வீதிகள் கடந்து நண்பனின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
இலக்கியக்கட்டுரைகள் எழுதுவதில் நண்பன் நல்ல திறமைசாலி. சட்டகம்போல் செய்து வைத்திருக்கும் இலக்கியப் பொறிக்குள் கிடைக்கும் இலக்கிய நூல்களை வைத்து வாசிப்பான். அவனது கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவரும். ஆகக் குறைந்தது ஐந்துவகையான “இசங்கள்” ஒரு விமர்சனக் கட்டுரையில் இருக்கும். அக்காலத்தில் கடைசியாகப் பேசப்பட்ட “சர்ரியலிசம்” எல்லோருடைய இலக்கியப் படைப்பிலும் இருப்பதாக அவனுடன் வாதிடுவான். ஆங்கில இலக்கியப் புலமை அவனிடம் நிறையவே இருந்தது.

ஒருநாள் வாசித்துவிட்டுத் தருகிறேன் என்று அவன் மேசையில் கிடந்த Harper Lee எழுதிய “To Kill a Mocking Bird” ஆங்கில நாவலை ஒருவாரம் வீட்டிற்கு எடுத்துச் சென்று எப்படி வாசிப்பது என்று தெரியாமலே திருப்பிக் கொடுத்திருந்தான். வாசித்ததா? கதை எப்படியிருந்தது? என்று நண்பன் கேட்டபோது “வாசித்தேன் நன்றாக இருந்தது” என்று சொன்னான். அதைப்பற்றி இன்னும் பேச நண்பன் வாயெடுக்கும் போது “அங்கால றவுண்டப்பாம்” என்று நண்பனை திசை திருப்பி அன்று தப்பித்துக் கொண்டான். அதன்பிறகு நண்பனிடம் ஆங்கில நூல்கள் இரவல் வாங்கிச் செல்வதை முற்றாக நிறுத்திக் கொண்டான்.
ஆக்கா நண்பனின் நெருங்கிய உறவு முறைப் பெண். எப்போதும் போல் வாசலில் பிறிதொரு வழியாகச் செல்லும் மூன்றடி அகலமான பிரத்தியோகப் பாதையால் நுழைந்து சமையலறைப் பக்கமிருந்து பேசிக் கொண்டிருப்பாள். வாசல் முழுக்க பல நிறங்கள் கொண்ட குரோட்டன் மரங்கள் வளர்ந்திருந்தது. பலமுறை அதன் இலைகளை உரசியபடி அவனைக் கடந்து சென்றிருக்கிறாள். அவன் குரோட்டன்களை ரசித்ததோ, அவளைப் பற்றி விசாரித்ததோ கிடையாது.
அன்று அவரின் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். குறுக்கு வீதியின் முடிவிடத்தில் அவன் வரும்போது சுமார் முப்பது மீட்டர் தூரமளவில் கடந்து சென்றிருப்பாள். அவள் செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் தான் அவன் செல்ல வேண்டியிருந்தது. சைக்கிளை அந்தத் திசையில் மிதித்து நிமிரும் போதே ஏதோ ஒன்று அவன் பிடரியைப் பிடித்து “திரும்பு.. திரும்பு” என்று சொல்வதுபோல் இருந்தது. பிரேக்கை அழுத்தித் திரும்பினான். அவளும் திட்டமிட்டதுபோல் அதே கணத்தில் திரும்பினாள். இருவரிடத்திலும் மெல்லிய புன்னகை மிதந்து கொண்டிருந்தது. அது இரசம் பூசிய கண்ணாடியால் வெயிலைச் சிறைப் பிடித்து எதிர் எதிர் முகத்துக்கு ஒளி அடிப்பதைப் போலிருந்தது.
அவள், நேரே வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். அவனோ எதிர்த் திசையில் பயணிக்க வேண்டியவன். ஒரே நேரத்தில் இருவரும் திரும்பிப் பார்ப்பதற்கு காரணம் என்ன? அப்படி நிகழ இருவரின் உணர்வுகளையும் ஒருங்கமைத்தது எது?
நேராகத் திரும்பி சைக்கிள் பிரேக்கை விடுவித்தான். பத்து மிதி மிதித்து இடப் புற வீதியால் திரும்பி நண்பனின் வீட்டுக்குச் சென்றான். அவன் அங்கு இல்லை என்பதை அவரது வாப்பா தனது கைகளை அப்படியும் இப்படியும் புரட்டிக் காட்டியதன் மூலம் அறிந்து கொண்டான். அவன் அங்கு இல்லாததும் ஒரு அதிஷ்டம் என எண்ணிக் கொண்டான்.
இலக்கியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் சற்றுமுன் நடந்து முடிந்த இனிமையான தருணத்தை சுகிக்க முடியாது என்பது அவனுக்குத்தெரியும். அது நண்பனுடன் பகிரப்படும் விடயமும் அல்ல.
தனிமை அவனுக்கு அவசியத் தேவையாக இருந்தது. ஒரு தேவதையின் எதிர்பாராத் திரும்புகை ஆயிரம் வெள்ளிகள் தன்மேல் விழுந்து மினுங்குவதைப் போலிருந்தது. அங்கு அவன் தாமதிக்கவில்லை. சைக்கிளை எடுத்து அவள் வீடிருக்கும் தெருவை நோக்கி மிதித்தான். குட்டையான வீதிச் சுவர். அதன் மேல் இரண்டு கையையும் வைத்து உன்னினால் உட்கார்ந்து விடலாம். அதன் நெடுகிலும் இரும்புக் கம்பிகளை கிடையாகவும் செங்குத்தாகவும் பொருத்தியிருந்தார்கள். அதனை மறைத்துக்கொண்டு மல்லிகைக் கொடிகள் ஆயிரம் பூக்களை சுமந்து ஒரு சுற்று வட்டமே மணத்துக் கிடந்தது. ஒற்றைக்கதவு திறந்திருந்தது.

ஆக்கா அவனைக் கண்டவுடன் ஆன மட்டும் நளினமாகச் சிரித்தாள். காற்றில் பரவியிருக்கும் மல்லிகைப் பூ வாசனையோடு அவள் உடல் கலந்த சிரிப்பு அது. இந்த விபத்துடன் எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பதை இன்னும் அவனால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. வானில் மிதந்து வந்திருப்போமா? என்று கூட எண்ணினான்.
நண்பனின் வீட்டுக்கு பல மாதங்களாக சென்று வருவதினால், அவரால் அவனை ஒரு விசேட விருந்தினராகப் பார்க்க முடியவில்லை. மாலையில் எல்லோருக்கும் ஊற்றும் தேநீரில் ஒரு கோப்பை அவனுக்கும் கிடைத்தது. அவ்வளவுதான்.
படித்துக் கொண்டிருக்கும் ஆறு சகோதரிகளுடன் வாப்பாவின் அன்றாட உழைப்பில் தங்கி வளரும் அவனுக்கு காதல் வயப்படுவதில் தீராப் பயம் இருந்தது. மூன்று விடயங்களை ஒரு போதும் செய்வதில்லை என்பதில் கனநாளாக உறுதி பூண்டிருந்தான். ஒன்று முகப்பவுடர். அடுத்தது நிலைக் கண்ணாடி. மற்றயது கைக்கடிகாரம். அன்று மாலை ஆறு மணி. கண்ணாடி முன் நின்று தன்னையே பல நிமிடங்கள் விரும்பி ரசித்தான்.
அன்றிரவு முழுதும் ஆக்கா நீல நிறக் குட்டைப் பாவாடை, மஞ்சள் நிற அரைச் சட்டை, வெள்ளை நிறத் துப்பட்டாவுடன் தோன்றி மறைவதுமாக இருந்தாள். பனி பூத்த கம்பளியால் தன் உடல் முழுவதையும் யாரோ போர்த்தி விட்டிருப்பதாய் உணர்ந்தான். எத்தனை மணிக்கு தூங்கினான் என்று தெரியவில்லை.
அடுத்த நாள் நேரம் பிந்தியே எழும்பினான். அன்று பாடசாலைக்குப் போகவில்லை. அங்கும் இங்கும் கசங்கிக் கிடந்த ஆடைகளை எல்லாம் எடுத்துத் துவைத்தான். சித்திரை மாத வெய்யிலில் முறுகி அசைந்து கொண்டிருந்த ஆடைகளைச் சுருட்டி ஒரு பையில் போட்டு சுந்தரலிங்கத்திடம் அயன் பண்ணக் கொடுத்தான். இரண்டு மணிக்குத் தர வேண்டும் என்றான். இரண்டரை மணிக்குச் சென்று அவைகளை எடுத்து வந்து அலுமாரியில் அடுக்கி வைத்தான்.


நாலரை மணி. காற்சட்டை மற்றும் ஒரு சேர்ட்டை அணிந்து கொண்டு கண்ணாடி முன் சென்றான். சுவர் மணிக்கூடு ஐந்து மணியைக் காட்டி நின்றது. நண்பனின் வீட்டை நோக்கிக் கிளம்பினான். ஆக்கா வீட்டிலிருந்து வருகிற வீதியில் சைக்கிளை மெதுவாக மிதித்து அவள் வீட்டுப்பக்கம் தலையைத் திருப்பினான். மீண்டும் சிரித்தவாறு நண்பனின் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவளே முதலில் அங்கு சென்றடைய வேண்டுமென விரும்பினான். சைக்கிளுடன் இடப் புறச் சுவர் ஒன்றில் மெதுவாகச் சாய்ந்து கொண்டு அவள் செல்லும் வரை காத்துக் கொண்டிருந்தான். அவளது கரிய இமைகள் பறவையின் இறகாகி படபடவென அடித்துக் கொள்ள சிரித்துக் கொண்டே கடந்து சென்றாள்.
நண்பனின் டேப் ரெகார்டரில் “மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ” என்ற பாடல் அவன் அங்கு சென்று ஒரு நிமிடத்தில் முடிந்தது. அடுத்து “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்ற பாடல் முழுமையாக ஒலித்தது அதன் பிறகு “சின்னச் சின்ன ஆசை” என்று போனது.
அவன் சரியாக ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் நண்பனின் வீட்டுக்கு வரும் வழியில் எதிர்கொண்டு சிரித்துக் கொள்வது இருவரினதும் பல நாட்கள் நடத்தையாக இருந்தது. எப்போதாவது அவன் தவிர்க்க முடியாத வேலைகளினால் நேரம் பிந்திச் சென்றால் “நான் இங்கேதான் இருக்கிறேன்” என்பதை வெளிப்படுத்த யாரோடும் உரக்கப் பேசுவது அல்லது எதிரே நடந்து திரிவது போன்ற அவளது சங்கேதச் செயல்களை அவதானித்தே வந்திருக்கிறான்.

இந்தச் சந்திப்பு எப்போதாவது ஒருநாள் விபரீதத்தில் முடிந்து விடுமா எனவும் பயந்தான்.
ஆக்கா பாடசாலைக்குச் சென்று வருவது அவனது வீட்டுக்குச் சமாந்தரமாகச் செல்லும் வீதி வழியாகத்தான். அது அவனது ஊரின் முக்கால் பகுதிக்கு கிடையாக ஊடறுத்துச் செல்கிறது.
வெள்ளிக்கிழமை தவிர்ந்த மற்றைய நாட்களில் பாடசாலை இரண்டுமணி ஐந்து நிமிடத்தில்தான் கலையும்: அவன் இரண்டே காலுக்கு சைக்கிள் மிதித்து அவளது வீடு வரை சென்று அதே வழியாகத் திரும்பி வந்தான். பாடசாலையிலிருந்து பிள்ளைகள் நிரை நிரையாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். எல்லோரும் சீருடை அணிந்திருப்பதால் ஆக்கா எந்த நிரையில் செல்லுகிறாள் என்பதை அவளாகவே சமிக்ஞை மூலம் வெளிப்படுத்தினால் தவிர அவனால் கண்டுபிடிப்பது இயலாத விடயம்.

மெதுவாக வீட்டுக்குத் திரும்புவதே உடம்புக்கு நலம். மரியாதையும் கூட.
ஓரக் கண்ணால் ஒவ்வொரு நிரையாகப் பார்த்து வரும் போதே ஒரு நிரையில் இருந்து சற்றுப் பிரிந்து அவனைப் பார்த்து மெல்லிய சிரிப்போடு ஆக்கா கடந்து சென்றாள். அது வெள்ளை நிறம் கொண்ட ஆட்டுப்பட்டியில் ஒரு ஆடு தலையை உயர்த்திப் பார்ப்பதுபோல் இருந்தது.
கடிதங்கள் வாசித்து புரிந்து கொள்வதை விட புன்னகைகள் மூலம் அவள் பேச நினைப்பதை விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் அவனுக்கு புதிதாக வாய்த்திருப்பதாக உணர்ந்தான். ஒவ்வொரு சந்திப்பிலும் அது புதுப்புது அர்த்தங்களை அவனுக்குத் தந்து கொண்டிருந்தது. வேகமானதும், மூன்றாம் நபரின் உதவி இல்லாத ஒன்றாகவும் அவனுக்கு வாலயமானது.
பாடசாலை விட்டு வரும்போதும் நண்பனின் வீட்டுக்குச் செல்லும்போதும் ஒரு தினத்தில் இரண்டு தடவைகள் ஆக்காவைத் சந்திக்கக் கிடைப்பது அவனுக்குப் பேரானந்தமாக இருந்தது.


சில நாட்களில் நண்பனுடன் ஏற்படும் விவாதங்களின் போது தற்காலிக உறவு முறிவு இடம்பெறும். அப்படித்தான் ஒருநாள் நண்பனின் மேசையில் கராட்டிப் புத்தகமொன்று கிடந்தது. இதற்கும் விமர்சனம் எழுதப்போகிறீர்களா? என்று கேட்டுவிட்டான். “நீங்க இஞ்சாலப்பக்கம் வராதீங்க” என்று நண்பன் அவனை அனுப்பிவிட்டான். அதன்பிறகு அவன் அங்கு போகவில்லை. மூன்று நாட்களின் பின் அவனை அழைத்துவரச் சொல்லி இன்னொரு நண்பனை அனுப்பியிருந்தான். அந்நாட்களில் ஆக்கா பாடசாலை விட்டு வரும் போது சிரிக்கக் கிடைப்பது அவனுக்கு சிம்ம சொற்பனமாகவே இருந்திருக்கிறது.
நண்பனின் வீட்டில் அவரது சகோதரிக்கு திருமணம். நாளும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. முதல் நாள் இரவே அங்கு ஆட்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். ஆக்கா வழமையான ஐந்து மணிப் புன்னகையை உதிர்த்துவிட்டு அங்குதான் இருந்தாள். ட்ரேயில் வரும் தேநீரைப் பரிமாறுவதுதான் அன்று அவளது பணியாக இருந்தது. அவனுக்கும் தேநீரை ஆக்கா தான் கொண்டு வந்தாள். சாதாரணமாக அங்கிருந்து வரும் தேநீர் ஆறிபோய் அல்லது ஒரே மிடறில் குடிக்கக் கூடியதாய் சிறு சூட்டுடன் இருக்கும். அவள் நீட்டிய தேநீரை மிச்சம் வைக்காமல் ஊதி ஊதிக் குடித்தான்.
கல்யாணத்துக்கான துறோன் செய்வதில் அவனுக்கு நல்ல அனுபவம் இருந்தது. இங்கும் அவனே செய்து தருவதாக ஏற்கனவே வாக்களித்திருந்தான். இருக்கைக்கான பலகை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது வீட்டில் கொங்ரீட் போட்டுக் கழற்றிய மாம் பலகைகளை பாவிப்பது என முடிவாகியது.
இரவு எட்டு மணி. அவன் வீட்டுக்குத் திரும்பி இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு கல்யாண வீட்டில் துறோன் ஒன்று செய்ய இருப்பதால் இரவைக்கு தூங்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் நண்பனின் வீட்டுக்கு வந்து விட்டான். ஒற்றைக் கையில் மருதாணி போட்டுக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்தாள் ஆக்கா.
அரசனின் சிம்மாசனம் போன்று மணமக்கள் இருவரும் நெருங்கி இருக்கும் அளவில் ஒரு கதிரை, பின்னணியாக சீலிங் உயரத்தில் சுவரில் எட்டடி இடைவெளியில் இரண்டு ஆணிகள் அடித்து ஒரு கட்டுக் கம்பியை குறுக்காகக் கட்டி, அதில் மஞ்சள் கலர் புடவைகள் இரண்டைப் பொருத்தி திரைபோல நிறுத்தி, திரைப்படக் கெசட்டுக்குள் இருக்கும் அரை இஞ்சி அகலமுள்ள பிரவுண் நிற நாடாவினால் குறுக்கும் நெடுக்குமாக சதுரங்கள் அமைத்து எவகிரீன் இலைகளை ஆகாங்கே சொருகி விடுவதுதான் அவனது திட்டம். இதை ஏற்கனவே அவர்களிடம் சொல்லியும் வைத்திருந்தான். ஆசையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரவு ஒன்பது மணி. கதிரை செய்வதே அவனின் முதல் பணியாக இருந்தது. நண்பனைச் சுற்றி ஒரு கூட்டம் கதை கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அதில் அவனது இலக்கிய நண்பர்கள் மூன்று பேர். இடைக்கிடை கொல்லென்று சிரிக்கும் சத்தம் கேட்கும்போது துறோன் செய்யும் வேலையை ஏன் எடுத்துக் கொண்டேன்? இந்த வேலை இல்லாவிட்டால் போய்க் கதைத்துக் கிடக்கலாமே! என்று சில நேரம் தன்னையே நொந்து கொண்டான். அதேவேளை இப்படிச் சந்தர்ப்பம் கிடைத்ததால்தான் இரவுமுழுதும் ஆக்காவை மனம்குளிரப் பார்த்துக் கொண்டு சிரிக்க முடிகிறதே என்றும் சந்தோசப்பட்டான்.
“நீ இஞ்சான் தூங்கு, நாங்க போறம்” என்று ஆக்காவின் உம்மா சொல்வது அவனுக்கும் கேட்டது. உம்மா சென்ற பின்பு அவள் கையிலிருந்த மருதோன்றியைக் கலைத்துக் கழுவினாள்.

“ஆக்காட நல்லாச் செவந்திருக்கு” என்று குசினிப் பக்கமிருந்து ஒரு சத்தம் வந்தது.
அங்கு எத்தனைபேர் இருந்தாலும் நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவள் தான் முதலில் தெரிந்தாள். நூறு முறைக்கும் அதிகமாக அந்த இரவில் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
கதிரை செய்து அதற்கு சிவப்பு நிற வெல்வெட் துணியால் போர்த்தினான். திரைக்காக மஞ்சள் நிறச் சேலைகளை சுருக்கம் இல்லாமல் இழுத்துக் கட்டினான். சதுரங்களை டேப்பினால் அமைத்தான். இடத்தை ஒழுங்கு படுத்துவதும் எவகிறின் இலைகளைச் செருகுவதும் தான் அவனுக்கு மீதமிருந்தது.
பின்னிரவு இரண்டு மணி. அரச கதிரையை இழுத்து வந்து உரிய இடத்தில் வைத்தான். அழகாய் இருந்தது. அரை நித்திரையில் இருந்த பெண்கள் ஒவ்வொருவராய் வந்து கூடினர். கதிரையின் இருக்கை கொஞ்சம் உயர்ந்திருந்தால் பெண்ணுக்கு இருக்க வசதியாக இருக்கும் என்று ஒருத்தி பிரேரிக்க மற்றவர்கள் வழி மொழிந்தனர். தூங்காமலே ஒரு பிளாஸ்டிக் கதிரையில் இருந்து கொண்டிருந்த ஆக்காவின் கண்கள் “என்ன செய்யலாம்” என்றவாறு அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
“எட்டு முழுச் செங்கற்கள் வேண்டும்.”
கதிரையின் அடியில் நான்கு மூலையிலும் இரண்டு இரண்டு செங்கற்களை வைத்தால் உயரம் சரியாகி விடும்.
“செங்கற்கள் இருக்கிறதா?”
“ஆம்.”
“எங்கே?”
“கோடிப்புறத்தில்.”
ஆக்கா, அவனோடு வெளிச்சத்தில் பின்னாலும் இருளில் அருகிலுமாக கோடிப்புறத்துக்கு வந்தாள். பௌர்ணமி கழிந்து பத்து நாளில் தெரியும் மங்கிய ஒளியில் நூறு நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. கிழக்குப் பக்கமாக பெரிய நட்சத்திரம் ஒன்று தென்னம் குருத்தின் கீற்றுகளினூடே கண் சிமிட்டாமல் எட்டிப் பார்ப்பது போல் இருந்தது.
“கல்லு இஞ்சரிக்கி” என்றாள் ஆக்கா. கற்குவியல் மேல் இருவரது பார்வையும் ஒன்றாகி இன்னும் இருள் பரவின. அது சலனங்களை கிளறியது. ஒரு முத்தம்! அல்லது கையைப் பற்று!! என்றது மனம்.
அவன் ஒரு வாசிப்பாளன். வளர்ந்து வரும் எழுத்தாளன். மனதில் தூய்மையும் புனிதமும் இருக்கவேண்டும் என நம்புபவன்.

வாப்பாவை எதிர்த்துக் கதைத்த ஒரு நாளில் “எழுதுபவன் இப்படி இருக்க முடியாது” என்று சொன்னபோது வெட்கித்துப் போனது நினைவுக்கு வந்தது. இதற்காக சிறு வயதில் ஒன்றாக திரிந்து விளையாடிய பால்ய கால நண்பர்கள் பலரின் தொடர்புகளை பாடசாலை அந்திமக் காலங்களில் இழந்து, இலக்கியம் எனும் பெயரில் வயதில் கூடிய நண்பர்களோடு உறவாடித் திரிபவன், காதல் புனிதம் என்றாலும் அது இரகசியமாகக் களங்கப்படுவதை விட, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்து மனதைக் கொல்லும் மெல்லுணர்வைப் பெரிதும் பயந்தான்.

ஆக்கா நீட்டிய கைகளில் நான்கு செங்கற்களை அடுக்கி வைத்தான். அவனும் நான்கு கற்களை எடுத்துக்கொண்டு இருவரும் உள்ளே சென்றனர். ஒவ்வொரு மூலையிலும் இவ்விரண்டு கற்கள் அடுக்கிக் கதிரையை உயர்த்தினான். துருத்தித் தெரியும் கற்களை ஒரு முறை பார்த்துவிட்டு அவளையும் பார்த்தான். இடுப்பில் கை குத்தி நின்றாள். கிடந்த மீதித் துணியால் கற்களை மறைத்தான்.
பின்னிரவு நான்கு மணி. ஆக்காவை உற்றுப் பார்த்தான். அவள் முகம் பால் சிந்திப் போயிருந்தது. இருவரும் சிரிக்கவில்லை. பின்னணித் திரைச் சீலையில் எவகிறின் இலைகளை பொருத்துவதுதான் இறுதிப்பணி. ஒவ்வொரு எவகிறின் இலைகளாக அந்தச் சீலையில் வைத்துத் தைக்கும் போதும், அவளின் மனதையும் கூடவே வைத்துத் தைப்பது போல் இருந்தது. ஒரு தடவை ஊசி தவறி அவள் உள்ளங்கையில் ஏறியது. அவள் துடிக்கவில்லை.
“நாளை ஒரு புதிய கட்டுரை எழுதப் போகிறேன்” என்ற ஆழ்ந்த நித்திரையில் நண்பனின் குறட்டைச் சத்தம் கூடிக் குறைவது மட்டும் கேட்டது.
“எண்பத்தாறு ! எண்பத்தாறு !! ஒத்தரும் இல்லையா?” குரல் கேட்டு நிமிர்ந்தான். நேர்த்தியான கடதாசி, மெல்லிய பென்சில் தடிப்பத்தில் சுருண்டிருந்தது. வேகமாக விரித்தான். எங்கு இருக்கிறேன் என்று தெரியாமல் அதைச் சுருட்டி காது குடைந்திருந்தான். தாதி அழைத்தது அவனுடைய இலக்கம்தான்.
மகனோடு வைத்தியரின் அறைக்குள் நுழைந்தான்.
விரிக்க விரிக்க மறுபடியும் சுருண்டு கொண்டிருந்தது அவள் தந்த இலக்கத் துண்டு.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.