நிறங்கள்

எனக்குக் கணக்கு வராது. என்னை யாரிடமாவது டியூஷனுக்கு அனுப்பிவிட அம்மா நினைத்தார். பக்கத்து வீட்டுக்குப் புதிதாக ஒரு குடும்பம் குடிவந்தது. மறுநாள் காலையில் அவர்களின் வீட்டில் கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்குச் செல்லாமல் பெண் இருப்பதை அம்மா அறிந்துகொண்டார்.

அந்தப் பெண்ணின் அம்மாவிடம் என் அம்மா, “என் மகனுக்கு உங்க பொண்ணு டியூஷன் சொல்லித்தருமா?” என்று கேட்டார்.

“எம்பொண்ணுக்கிட்ட கேட்டுக்கிட்டுச் சொல்றேன்” என்று அவர் கூறினார்.

அந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை காலையில், “இன்னைக்குச் சாய்ந்தரம்” உங்கப் பையனை டியூஷனுக்கு அனுப்புங்க” என்று அந்தப் பெண்ணின் அம்மா என் அம்மாவிடம் கூறினார்.

மாலையில் நான் குளித்து, சிறிதளவில் மேக்கப் போட்டுக்கொண்டு, கையில் எட்டாம் வகுப்புக் கணிதப் புத்தகத்தையும் ஒரு நோட்டையும் ஜியோமெட்ரி பாக்ஸையும் எடுத்துக்கொண்டு, கணக்குப்பாடம் படிக்கச் சென்றேன்.

மஞ்சள் நிறத்தில் சுரிதார் அணிந்த பெண் கதவைத் திறந்தார். புத்தகமும் கையுமாக வந்த என்னைப் பார்த்ததும், ‘இவன்தான் டியூஷனுக்கு வந்தவன்’ என்பதை உணர்ந்துகொண்டு, “வராந்தாவில் உட்காரு. வாரேன்” என்றார்.

நான் சாப்பாட்டுக்கு உட்காருவதைப்போல நன்றாக வசதியாக வராந்தாவில் அமர்ந்தேன். என் முன்னால் நான் கொண்டுவந்தவற்றைப் பரப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் அந்தப் பெண் வந்தார். எனக்கு முன்பாக அமர்ந்தார்.

‘இப்போது இவர் என்னுடைய பெயரைக் கேட்பார்’ என்று நான் எதிர்பார்த்தேன். அப்படி அவர் கேட்டால், ‘என் பெயரை இன்ஷியலோடு கூற வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டு, என் பெயரை இன்ஷியலோடு ஒருமுறை எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அவர் என் பெயரைக் கேட்கவில்லை. என் புத்தகத்தை எடுத்து, புரட்டினார்.

“உங்க டீச்சர் எதுவரையும் நடத்திருக்காங்க?” என்று கேட்டார்.

“தெரியாது” என்றேன்.

“கணக்குப் பாடத்துல எதுவரையும் உனக்குத் தெரியும்? என்று கேட்டார்.

“எதுவும் தெரியாது” என்றேன்.

அவர் என்னைப் பார்த்து, முறைத்தபடி “கூட்டல், கழித்தல், வகுத்தல் தெரியுமா?” என்று கேட்டார்.

‘இவற்றையும் ‘தெரியாது’ என்று கூறினால், இவர் என்னை அடித்துவிடக்கூடும்’ என்று அஞ்சி, நான் ‘தெரியும்’ என்பதுபோலத் தலையை அசைத்தேன்.

“பின்னம் தெரியுமா?” என்று கேட்டார்.

இப்போது நான் ‘தெரியும்’ என்று கூறினால், ஒருவேளை அவர் என்னிடம், ‘ஒரு பின்னக் கணக்கினைப் போட்டுக்காட்டு’ என்று கூறினால் என்ன செய்வது?’ என்று சிந்தித்தேன். ‘எதுக்கு வம்பு? உண்மையைக் கூறிவிடுவோம்’ என்று நினைத்து, ‘தெரியாது’ என்றேன்.

அவர் சற்றுச் சிந்தித்தார். அழுத்தமான குரலில், “சரி, உனக்கு முதல்ல நான் பின்னத்துல இருந்தே பாடம் நடத்துறேன்” என்று கூறிவிட்டு, என்னுடைய கணக்கு நோட்டை எடுத்தார். என்னுடைய பேனாவினை வாங்கினார்.

தன் வலக்கையில் இருந்த நான்கு கண்ணாடி வளையல்களையும் அழுத்திப் பிடித்து, பின்னுக்குத் தள்ளினார். அவை அவரின் வலது நடுக்கைவரை சென்று இறுகிக்கொண்டன. அவர் பின்னத்தை எழுதத் தொடங்கினார். இரண்டு மஞ்சள் நிறக் கண்ணாடி வளையல்களை அணைத்துப் பிடித்தபடி இரண்டு பக்கத்திலும் பச்சை நிறக் கண்ணாடி வளையல்கள் இருந்தன. அவரின் மஞ்சள் நிற சுரிதாருக்கு இவை பொருத்தமாகவே இருந்தன.

நான் தயங்கியபடியே மெதுவான குரலில், “நீங்க என்னோட பெயரைக் கேட்கவேயில்லையே?” என்று கேட்டேன்.

அவர் சட்டென நிமிர்ந்தார். என்னை முறைத்துப் பார்த்தார்.

“பெயரில் என்ன இருக்கு? பெயரைக் கேட்டு என்ன ஆகப்போகுது இப்ப?” என்று கேட்டார்.

இதற்கு என்ன பதில் கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. அவர் குனிந்து எழுதத் தொடங்கினார். நான் என் பெயரை என் மனத்திற்குள் மீண்டும் ஒருமுறை என் பெயரை இன்ஷியலோடு சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

அவர் அழகான கையெழுத்தில், குண்டு குண்டாக பின்னக் கணக்குகளை எழுதினார். எழுதும்போதே அந்தக் கணக்கு பற்றி விரிவாகக் கூறினார். அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தெளிவான உச்சரிப்பில், அழகாக இருந்தன. எனக்கு அவரின் குரல் பிடித்துக்கொண்டது.

அவர் கை அசைய அசைய கண்ணாடி வளையல்கள் மெல்ல மெல்ல இறுக்கம் தளர்ந்து, இறங்கி வந்தன. ஒன்றுடன் ஒன்று மோதி ஒலியெழுப்பின. நான் அந்த ஒலியை ரசித்துக்கொண்டே, பின்னக் கணக்கினைக் கவனித்தேன். அவ்வப்போது அவர் கண்ணாடி வளையல்களை அழுத்திப்பிடித்து, பின்னுக்குத் தள்ளிக்கொண்டார்.

இரண்டு மணிநேரங்கள் கடந்தன. எனக்கு ஓரளவுக்குப் பின்னக் கணிதம் பிடிபட்டது. புறப்படும்போது, ‘அவரின் பெயரைக் கேட்கலாமா?’ என்று நினைத்தேன். ‘வேண்டாம்’ என்று நினைத்து, கேட்காமலேயே வீட்டுக்குச் சென்றேன்.

அம்மா கேட்டார், “என்னடா, ஸ்ருதி நல்லாக் கணக்குச் சொல்லிக்கொடுத்துச்சா?” என்று.

‘ஓ! அவங்க பேரு ‘ஸ்ருதி’யா?’ என்று நினைத்துக்கொண்டு, நல்லாச் சொல்லித் தந்தாங்கமா” என்றேன்.

மறுநாளும் சென்றேன். இன்று பச்சை நிற சுரிதாரில் இருந்தார். பின்னத்தின் தொடர்ச்சி இன்று தொடங்கியது. எழுதுவதற்கு முன்னர் தன் வலக்கையில் இருந்த நான்கு கண்ணாடி வளையல்களையும் அழுத்திப்பிடித்து, பின்னுக்குத் தள்ளினார்.

இரண்டு பச்சை நிறக் கண்ணாடி வளையல்களை அணைத்துப் பிடித்தபடி இரண்டு பக்கத்திலும் மஞ்சள் நிறக் கண்ணாடி வளையல்கள் இருந்தன. அவரின் பச்சை நிற சுரிதாருக்கு இவை பொருத்தமாகவே இருந்தன.

ஒவ்வொரு நாளும் அவர் கணக்குகளை எழுதத் தொடங்கும்போதும் நான் அவரின் கண்ணாடி வளையல்களைப் பார்ப்பேன். நடுவில் இருக்கும் வளையல்கள் மட்டும் அவரின் சுரிதாரின் நிறத்திலேயேதான் இருக்கும். அவை தம் இறுக்கம் தளர்ந்ததும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒலியெழுப்பத் தொடங்கிவிடும். அவ்வப்போது அவர் அவற்றை அழுத்திப் பிடித்து, பின்னுக்குத் தள்ளிவிடுவார்.

காலாண்டுத் தேர்வில் நான் தேர்ச்சி பெற்றேன். கணிதத்தில் நான் 35 மதிப்பெண். காலாண்டு விடுமுறையின்போது அவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வெளியூர். நாங்கள் குடும்பத்தோடு திருமணத்தில் கலந்துகொண்டோம். நல்ல விருந்து.

மறுநாள் தலைமுழுக்குக் கறிச்சோறுக்கு அழைப்பு விடுத்தார்கள். அம்மா என்னை மட்டும் அனுப்பி வைத்தார். நான் சென்றேன். அப்போது அவர் தம் கைகளில் பொன்னிறத்தில் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்தார். இரண்டு கைகளிலும் நெருக்கமாக அவை இருந்தன.

ஆனால், அவற்றால் சீராக ஒலியெழுப்ப இயலவில்லை. அன்று அவர் சிவப்பு நிறச் சேலை அணிந்திருந்தார். அதற்கும் கண்ணாடி வளையல்களின் நிறத்துக்கும் பொருத்தமே இல்லை. இரண்டு நாள்களுக்குப் பின்னர் அவர் மாப்பிள்ளையோடு வெளியூர் சென்றுவிட்டார்.

காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் எனக்குக் கணக்குச் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை. நான் பின்னத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியிருந்தேன். அடுத்த மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர் தன் கணவரோடு வெளியூரிலிருந்து வந்திருந்தார்.

மறுநாள் காலையில் அவர் வீட்டுக்கு நிறையபேர் வந்தனர். நான் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றேன். வீட்டில் அனைவரும் கூட்டமாக அமர்ந்து காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன். அவர் அழுது கொண்டிருந்தார். அவர் கைளில் வெவ்வேறு நிறங்களில் கண்ணாடி வளையல்கள் இருந்தன. அவை இரண்டு கைகளிலும் சமமான எண்ணிக்கை அளவில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் கறுப்பு நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தார்.

அவரின் அம்மா என்னைப் பார்த்ததும் வேகமாக வாசலை நோக்கி வந்தார்.

“நீ அப்புறமா வா! நாங்க பஞ்சாயத்துப் பேசிக்கிட்டு இருக்கோம்!” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘சரி, அப்புறமா வருவோம்’ என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அன்று மதியத்திற்குள் அனைவரும் புறப்பட்டுவிட்டனர். ஆனால், அவரை மட்டும் இங்கேயே விட்டுச்சென்றனர்.

நான்கு நாள்களுக்குப் பின்னர், அவரின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். “தம்பியைப் படிக்க அனுப்புங்க. இனிமே எம்பொண்ணு இங்கதான் இருக்கும்” என்றார்.

என் அம்மா வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டு, “சரி, அனுப்புறேன். நீங்க ஸ்ருதியை தைரியமா இருக்கச் சொல்லுங்க” என்றார்.

அன்று மாலையே நான் என் கணக்குப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு அங்குச் சென்றேன். அவர் வந்தார். அமர்ந்தார். கறுப்பு நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தார். கைகளில் ஐந்து கண்ணாடி வளையல்கள், வெவ்வேறு நிறங்களில் இருந்தன. அவர் முகம் வாடியிருந்தது.

“இன்னைக்கு என்ன பார்க்கலாம்?” என்று கேட்டார். அவர் குரலில் வழக்கமான இனிமை இல்லை.

“பின்னம்” என்றேன்.

“அது நடத்தியாச்சே!” என்றார்.

“மறந்துடுச்சு” என்றேன்.

“சரி, திரும்பவும் நடத்துறேன்” என்று கூறிவிட்டு, என் கணக்கு நோட்டில் எழுதத் தொடங்கினார். அந்த ஐந்து வளையல்களையும் அவர் பின்னுக்குத் தள்ளவில்லை. அவை ஒன்றுடன் ஒன்று மோதி ஒலியெழுப்பின. அவரின் கையெழுத்து வெறும் கிறுக்கலாக இருந்தது.

அவர் வலக்கையை உலுக்கிவிட்டு மீண்டும் எழுதினார். ஆனாலும் அவை ஒலியெழுப்பின. “ச்சீ” என்று எரிச்சலோடு கூறிக்கொண்டே, அந்த ஐந்து வளையல்களையும் கழற்றி, வீட்டின் சுற்றுச்சுவருக்கு வெளியே வீசி எறிந்தார். ஒலிம்பிக் வளையங்கள்போல அவை காற்றில் மிதந்து, பறந்து, சுற்றுச் சுவருக்கு வெளியே விழுந்து, உடைந்து சிதறின.

அவர் மீண்டும் எழுதினார். எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அவரின் குரலில் எரிச்சல் மட்டுமே மிஞ்சியிருந்தது. அரைமணி நேரம் கடந்தது.

“இன்னைக்கு இதுவரை போதும். எனக்குத் தலைவலிக்குது. நாளைக்கு வா!” என்று கூறிவிட்டு எழுந்தார்.

பொழுது மங்கிக்கொண்டிருந்தது. நான் என் உடைமைகளை எடுத்துக்கொண்டு, வெளியே வந்தேன். உடைந்து சிதறியிருந்த வளையல்களின் அனைத்துத் துண்டுகளையும் பொறுக்கியெடுத்து, என் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டேன்.

நான் வீட்டுக்கு வந்ததும் அம்மா என்னிடம், “டேய்! ஸ்ருதி எப்படியும் இன்னும் ரெண்டு மூணுமாசம் இங்கதான் இருப்பாபோல இருக்கு. அதுக்குள்ள நீ கணக்குப் பாடத்தை நல்லாக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்றார்.

நான் ‘சரி’ என்பதுபோலத் தலையை ஆட்டிக்கொண்டேன்.

மறுநாள் பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் வழியில், போட்டோக்களுக்கு பிரேம் போடும் கடைக்குச் சென்றேன். அங்கிருக்கும் பலவிதமான போட்டோக்களையும் பலவகையான பிரேம்களையும் பார்த்தேன். வெவ்வெறு அளவுகளில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் இருந்தன.

கடைக்காரர் என்னிடம், “என்ன வேணும்?” என்று அலட்சியமான தொனியில் கேட்டார்.

“அண்ணே! எனக்குக் கொஞ்சம் கண்ணாடிச் சில்லு வேணும்?” என்றேன்.

உடனே அவர், “கலெய்டாஸ்கோப் வேணுமா? பத்து ரூபாய்” என்றார்.

“இல்லைன்ணே, நானே செஞ்சுக்குறேன். எனக்குச் செய்யத் தெரியும். எனக்குக் கண்ணாடிச் சில்லு மட்டும் குடுங்களேன்” என்றேன்.

“சரி, அஞ்சு ரூபாய்” என்றார்.

“அண்ணே! எங்கிட்ட காசு இல்ல. ஒடைஞ்ச சில்லா இருந்தாலும் பரவாயில்லை. எனக்குக் கொடுங்கணே” என்றேன்.

“சும்மா தரமுடியாது” என்றார்.

நான் சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்க்காமலேயே, “அதான் சொல்லிட்டேன்ல, போ” என்றார்.

எனக்கு அவமானமாக இருந்தது. மெல்ல நடந்தேன். அந்தக் கடைக்கு அருகில் குப்பைகளைக் குவித்திருந்தனர். அதில் சில கண்ணாடிச் சில்லுகளும் இருப்பதைப் பார்த்தேன். வேகமாகச் சென்று, அந்தக் குப்பையைக் கலைத்துப் பார்த்தேன். சில கண்ணாடிகள் உடையாமல் இருந்தன. ஆனால், அவை அளவில் மிகச் சிறியவை.

குவிந்திருந்த குப்பையை முழுவதுமாகக் கலைத்துப் பார்த்தேன். நான்கு, ஐந்து கண்ணாடிச் சில்லுகள் கிடைத்தன. அவற்றை எடுத்து என்னுடைய பள்ளிப் பைக்குள் போட்டுக் கொண்டேன். அப்போதுதான் நான் பார்த்தேன் என் வலதுகைச் சுண்டுவிரலில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. குப்பையைக் கலைக்கும்போது கண்ணாடித் துண்டு கிழித்துவிட்டதுபோல. நான் என் விரலை வாயில் வைத்துச் சூப்பிக் கொண்டேன்.

இன்றோடு பின்னக் கணக்கு முடிந்தது. இன்று அவர் கண்ணாடி வளையல்களை அணியவில்லை. கைகள் வெறுங்கைகளாகவே இருந்தன. ஆனாலும் பழைய பழக்கத்தில் அவர் எழுதுவதற்கு முன்னர் தன் வலது முன்கையைப் பிடித்து, அழுத்தி, பின்னுக்குத் தள்ளிக்கொண்டார். அவர் கையில் இல்லாத கண்ணாடி வளையல்கள் பின்னகர்ந்து, அவரின் நடுக்கைவரை சென்று, இறுகி, ஒலியெழுப்பாமல் நின்றுவிட்டதாக நான் நினைத்துக்கொண்டேன்.

நாளைமுதல் ஜியோமெட்ரி நடத்துவதாக அவர் கூறினார். அப்போதுதான் நான் நினைத்தேன், ‘நாளை முதல்தான் ஜியோமெட்ரி நடத்தப் போகிறார் என்றால், நாம் ஏன் இத்தனை நாள்களாக ஜியோமெட்ரி பாக்ஸைக் கொண்டுவந்தோம்?’ என்று.

அந்தக் கண்ணாடிச் சில்லுகளைப் பலவிதமாக அடுக்கி, சரி செய்து, முக்கோணமாக நிமிர்த்தி, அதைச் சுற்றிச் செய்தித்தாளை ஒட்டி, காய வைத்தேன். ஒலிம்பிக் வளையங்களாகப் பறந்து, விழுந்து, சிதறிய கண்ணாடி வளையல்களிலிருந்து ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு துண்டினை எடுத்து, அவற்றை ஒரே சீரான அளவில், ஒடித்து, தரையில் தேய்த்து, சரிசெய்தேன்.

இன்று ஜியோமெட்ரியை நடத்தத் தொடங்கினார். காம்பஸ் கருவியை எவ்வாறு பிடிக்க வேண்டும், அதில் எவ்வாறு பென்சிலை இணைக்க வேண்டும், அதை ஸ்கேலில் வைத்து எவ்வாறு அளவு எடுக்க வேண்டும், அதைத் தாளில் எவ்வாறு நிறுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும், அதை எவ்வாறு சுழற்ற வேண்டும் என்று கூறிமுடித்தார். அவர் அழகாகத் தன் கையை வளைத்து காம்பஸ் கருவியைச் சுழற்றினார். தாளில் வட்டம் வரைபட்டது.

“இவ்வளவுதான் வட்டம் போடுறது” என்றார்.

இதுக்குப் பதிலா கண்ணாடி வளையலை வச்சே வட்டம் போட்டுடலாமே!” என்றேன்.

அவர் என்னைப் பார்த்து முறைத்தார்.

“சரி, இந்த காம்பஸை வச்சே வட்டம் போடுறேன்” என்றேன்.

மறுநாள், காய்ந்திருந்த அந்த கலெய்டாஸ்கோப் முக்கோணத்தின் ஒருமுனையில், ஒரே அளவில் இரண்டு கண்ணாடிச் சில்லினை வைத்தேன். அவற்றுக்கு நடுவில், கண்ணாடி வளையல் துண்டுகளைப் போட்டேன்.

முக்கோணத்தின் மறுமுனையில் மற்றுமொரு சிறிய கண்ணாடிச் சில்லினை வைத்தேன். அது ஸ்டிக்கர் பொட்டு அளவுக்கு மட்டும் வெளியில் தெரியுமாறு வைத்து, அதன் மற்ற பகுதிகளைச் செய்தித்தாளால் மறைத்து ஒட்டினேன்.

மறுநாள் மாலையில் நான் கணக்குப் புத்தகத்தை என் பள்ளிப் பையில் போட்டுக்கொண்டு சென்றேன். அதே பையில் கலெய்டாஸ்கோப்பையும் வைத்துக் கொண்டேன். ‘ஜியோமெட்ரியில் இவ்வளவு வட்டங்களா!’ என்று நான் வியக்கும் வகையில், அவர் பலவிதமான அரை வட்டங்களையும் கால் வட்டங்களையும் சில சிறு வளைவுகளையும் வரைந்து காட்டினார். அன்றைய பாடம் முடிவுற்றதும் அவர் எழுந்தார்.

நான் தயங்கியபடியே மெல்லிய குரலில், “நான் உங்களுக்கு ஒரு கிஃப்ட் கொண்டு வந்திருக்கேன்” என்றேன்.

“கிஃப்டா? என்னது? எதுக்கு? ஏன்?” என்று இத்தனை கேள்விகளையும் கேட்டார்.

நான் பதிலே சொல்லாமல் என் பள்ளிப் பைக்குள் இருந்து கலெய்டாஸ்கோப்பை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கினார். நிமிர்ந்து, குண்டு பல்பினைப் பார்த்தார். அதை நோக்கிக் குறிவைப்பது போல கலெய்டாஸ்கோப்பைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தார். அதை மெல்ல மெல்ல சுழற்றினார்.

அவரின் உதடுகள் புன்னகையால் விரிவதைப் பார்த்தேன். அந்தப் புன்னகை சிரிப்பாக மாறியது. அவர் கைகள் வேக வேகமாகக் கலெக்டாஸ்கோப்யைச் சுழற்றத் தொடங்கின. நான் மெல்ல நகர்ந்து வாசலைக் கடந்தேன்.

சட்டெனத் திரும்பிய அவர், உரத்த குரலில், “டேய்! இந்த கிஃப்ட்ல உன்னோட பேரை எழுதிக்கொடு. உன்னோட நினைவா இதை வச்சுக்கிறேன்” என்றார் மெல்லச் சிரித்துக்கொண்டே.

நான் வாசலுக்குள் எட்டிப் பார்த்தபடியே “நீங்களே எழுதிக்குங்க” என்றேன்.

“சரி, உன்னோட பேரு என்ன?” என்று மிகுந்த சப்தமாகக் கேட்டார்.

“பெயர்ல என்னங்க இருக்கு?” என்று கேட்டுவிட்டு, என் வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன்.

6 Replies to “நிறங்கள்”

 1. An interesting story.. bcoz of this I regain my scl memories… Thank u Sir… It’s not a matter hw many times I read this.. I never get bored… we all have few memories of some people without knowing their name… Remembering old days always gives a pleasure… And I learned in this story that not every fully packed things give us happiness but having a little bit of deficiency also gives a happiness like that sound of a few bangles rather than a full of bangles

 2. செல்வி சுஸ்மிதாவுக்கு, வணக்கம்.
  தொடர்ந்து என்னுடைய சிறுகதைகளைப் படித்துவருகிறீர்கள். மகிழ்ச்சி.
  எப்பொதுமே சிறிய செயல்களின் நேர்த்தியில்தான் கடவுளின் உன்னதம் நிறைந்திருக்கிறது என்று நான் கருதிவருகிறேன். உலக அளிவில் நேர்த்தியான சிறிய செயல்களே பெரும் போற்றுதலுக்கு உரியவையாக இருந்திருக்கின்றன. ‘அன்பு’ என்பதும் அவ்வாறே. உலகின் மிகநேர்த்தியான எளிய செயல் அன்பினை வெளிப்படுத்துவதுதான். ஆனால், அதைச் செய்யத்தான் நாம் மிகவும் தயங்குகிறோம். தங்களின் விமர்சனத்திற்கும் அன்புக்கும் நன்றி.
  – முனைவர் ப. சரவணன், மதுரை. 9894541523.

 3. வணக்கம். இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட வாசகசாலை என்னும் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற உரையாடலில் தங்களுடைய ஓவியா என்னும் சிறுகதையைப் பற்றித் திருமதி. அகிலா அவர்கள் பேசினார் . அந்தக் காணொலியில் தங்களுடைய எழுத்தின் வலிமையை அழகுபட பேசினார் .தங்களுடைய கதையைக் கண் முன் கொண்டு வந்தார் . அதற்காக என்னுடைய வாழ்த்துகளைத் தங்களுக்குத் தெரிவித்து கொள்கிறேன் . நிறங்கள் என்னும் கதையில் சிறுவனின் மன எண்ணங்களை அழகாகக் கூறி உள்ளீர்கள். ஸ்ருதிக்கும் சிறுவனுக்கும் நடைபெறும் உரையாடல் இயல்பானவையே. உண்மை யில் அன்பிற்குப் பெயர் தேவையில்லை . அவளுடைய வளையல்களைக் கொண்டு பரிசுப் பொருள் செய்தமையும் அதற்காக அவள் குப்பையில் தேடியமையும் அன்பின் ஆழம். கணக்குப் பாடம் நடத்தும் பொழுது நடைபெறும் உரையாடல் என் மனதிலிருந்து நீங்கவில்லை .
  அவளுடைய மகிழ்ச்சியையும் வருத்தத்தினை யும் வளையல்கள் வழி கூறியமை அருமை .

 4. திருமதி. பிரியா நடராஜன் அவர்களுக்கு, வணக்கம்.
  ‘சொல்வனம்’ இதழில் வெளிவந்த ‘ஓவியா’ சிறுகதையைப் பற்றி ‘வாசகசாலை’ இலக்கியக் கூட்டத்தில் திருமதி. அகிலா ஸ்ரீதர் அவர்கள் நிகழ்த்திய விமர்சன உரை அற்புதமானது. ஓர் இலக்கியக் கூட்டத்தில் என் சிறுகதை விவாதிக்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த வகையில் நான் சொல்வனத்திற்குத்தான் முதற்கண் நன்றியினைக் கூற வேண்டும்.
  பார்வைக்காக –
  https://m.facebook.com/story.php?story_fbid=344363553343333&id=450426635163331&fs=0&focus_composer=0&m_entstream_source=video_home&player_format=permalink&ref=watch_permalink
  ‘சொல்வனத்தில்’ வெளிவந்த எனது ‘நிறங்கள்’ சிறுகதை ஒருவகையில் அக்கா-தம்பி பாசம்தான். உடன்பிறந்தால்தான் உறவா என்ன? இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள கணித ஆசிரியையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியே ஒரு நாவலாக எழுத நினைத்திருந்தேன். அந்த நாவலில் வரும் சிறிய கதைமாந்தர்தான் இந்த மாணவன்.
  எப்போதுமே நான் கதைக்கருவை நாவலாகவே என் மனத்தில் விரித்து, அதைச் சிறுகதையாக எழுதிப் பார்ப்பதும் பின்னாளில் அதை நாவலாக எழுதுவதும் என்னுடைய வழக்கம். ‘ஓவியா’ சிறுகதையும் அவ்வாறு எழுதப்பட்டதுதான். இது ஒரு வகையான சிந்தனைப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி. ஒரு கதை சிறுகதையாக வெற்றி பெற்றால் மட்டுமே அதை நாவலாக்குவேன். அந்த வகையில் ‘நிறங்கள்’ சிறுகதை தன்னளவில் வெற்றிபெற்றுவிட்டது. பின்னாளில் இது என்னால் நாவலாக எழுதப்படும்.
  தொடர்ந்து என்னுடைய சிறுகதைகளைச் ‘சொல்வனத்தின்’ வழியாக வாசித்து வருகிறீர்கள். அதற்காக நான் தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  நன்றி.
  தங்கள்,
  முனைவர் ப. சரவணன், மதுரை, 9894541523.

 5. வணக்கம். சொல்வனத்தின் வழியாக தங்கள் கதையை வாசித்து வருகிறேன். சிறந்த எழுத்தாளரை எங்களுக்குத் தந்த சொல்வனத்திற்கு மிக்க நன்றி. இந்தக் கதையை அன்பிற்குரியவர்களின் ஆழமான பாசத்தைக் கூறுகிறது .அன்பானது பால் பேதத்திற்கு அப்பாற்றப்பட்டது. அது வயதை அடிப்படையாகக் கொண்டு வருவதில்லை என்பதையும் அழகாகக் கூறி உள்ளீர்கள். இதில் நிறங்கள் ஒவ்வொரு நிகழ்விலும் மிளிர்கிறது. கணக்குப் பாடத்தைப் படிக்கும் போது நடைபெறும் உரையாடல் அருமை .முதலில் சிறுவன் தன் பெயரைக் கூற முற்படுவதும் இறுதியில் அவன் தன் பெயரைக் கூறாமல் செல்லும் போது கூறும் வார்த்தை என் மனதைக் கவர்ந்து விட்டது. வாழ்த்துகள்.

 6. வணக்கம் அய்யா,
  கதையின் தொடக்கத்தில் ஏதோ ஒட்டுதல் இன்றி என் மனம் உடைந்த வளையல்களின் வண்ணங்களை போல சிதறி கிடந்தது.
  ஏற்கனவே படித்து பழகிய கதைப் போன்ற எண்ணம்.
  ஆனால் , பெயரில் என்ன இருக்கிறது என்றவுடன் வண்ண்த்திரையில் ஏற்படும் திருப்பத்தில் அமர்ந்து இருக்கும் இருக்கையின் நுனியில் அமர்வது போன்று சடாலென்று கதைக்குள் புகுந்தேன்.

  ஒரு இளம் பெண், ஒரு 👦 சிறுவன்.
  இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளாவிடினும் அவர்களது எண்ணங்களை மிக அழகாக கதையில் பகிர்ந்துள்ளிர்கள் அய்யா.

  பெண்ணின் எதிர்கால கனவுகளை நிறங்களாக்கி அவற்றை வளையல்களில் காட்சிப்படுத்துவதும் , அதே நிறங்கள் சிதைந்து வாழ்க்கை கேள்விக்குறியாக வளையல்கல் நொறுங்கி போவதுவும் , அதே நிறங்கள் பலவண்ண காட்சி கருவியின் ஊடே தனது வாழ்க்கையில் வசந்தத்தை காணும் அவளை , சிறுவனின் தாய் கூறியது போல் இன்னும் ஒரு சில நாள் மட்டுமே பின் தன் கணவர் வந்து அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையின் சாட்சி.
  சிறுவனின் வயதிற்கேற்ற குறும்பு, வண்ணங்களை தன் எண்ணங்களாக்கி தன் அன்பை வெளிப்படுத்தும் விதம் அருமை.

  கதையை படித்தவுடன் என் நினைவுகள் வண்ணத்துப்பூச்சிகளாய் என் வயதை குறைத்து என் இளம் பிராயத்தை மென்மையாக தொட்டுச்சென்றது என்றே சொல்ல வேண்டும்.
  அருமை அய்யா .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.