கேளாச்செவிகள்

பத்மபாதருக்கு இரண்டு காதுகளிலும் கடுமையான வலி ஏற்பட்டது. அவரின் மனைவி சிவகாமசுந்தரிதான் அவரை ‘காது, மூக்கு, தொண்டை’ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு முன்பாக மூன்றுபேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் நான்காவது ஆள். சிப்பந்தி வந்தார். நோயாளரின் பெயரைக் கேட்டு, எழுதிக்கொண்டார்.

பத்மபாதருக்கு அருகில் அமர்ந்திருந்தவர், அவரிடம் “என்ன பண்ணுது?” என்று கேட்டார்.

“காதுவலி” என்றார் பத்மபாதர்.

“எந்தக் காதுல?” என்று கேட்டார் அவர்.

“ரெண்டு காதுலையும்தான்” என்றார் பத்மபாதர்.

“எப்ப இருந்து வலிக்குது?” என்று கேட்டார் அவர்.

“நேத்துலேர்ந்து” என்றார் பத்மபாதர்.

“என்ன வயசாகுது?” என்று கேட்டார் அவர்.

“74” என்றார் பத்மபாதர்.

“வயசாகிட்டா ஒவ்வொன்னா வரத்தான் செய்யும். அதெல்லாம் தாங்கிக்கணும். டாக்டர்ககிட்ட வந்து பயனில்லை. இவுங்க கொடுக்குற மருந்துக எல்லாம் வயசானவங்களுக்கு ஒத்துக்காது. ஓவர்டோஸாயிடும். இல்லயின்னா, ஏதும் பண்ணாம சும்மா இருந்துடும். ஒண்ணுத்துக்கும் புரோஜனமில்லை. காசுக்குப் பிடிச்ச கேடு” என்றார் அவர்.

“அதான் பென்ஷன் வருதுள்ள!” என்றார் பத்மபாதர்.

“ரெண்டு பேருக்குமா? என்று கேட்டார் அவர்.

“இல்லை. எனக்கு மட்டுந்தான்” என்றார் பத்மபாதர் கர்வத்துடன்.

“அப்படீன்னா கொஞ்சமாவது நீங்க சேர்த்துவைக்கணும்ல. உங்களுக்குப் பிறகு அவங்களுக்கு வேணும்ல. டாக்டர்ககிட்டையே பென்ஷனை ‘டாக்டர் பீஸா’ கொடுத்துச் சொத்தை அழிச்சுட்டா, பாவம் உங்க மனைவி என்ன பண்ணுவாங்க சாப்புடுறதுக்கு?” என்று கேட்டார் அவர்.

“அதுவுஞ்சரிதான். எனக்கு அப்புறம் அவளும் வாழணும்ல. அவளுக்கு இப்பதானே 54 ஆகுது” என்று ஒப்புக்கொண்டார் பத்மபாதர்.

அடுத்தடுத்து நோயாளர்கள் அழைக்கப்பட்டனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் பத்மபாதரும் அழைக்கப்பட்டார். சிவகாமசுந்தரியும் உடன் சென்றார். ‘காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்’ பத்மபாதரைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.

இரண்டு காதுகளிலும் டார்ச் ஒளியைப் பாய்ச்சியபடியே உற்றுப் பார்த்தார் மருத்துவர். இருட்துளையுள் ஒளிக்கதிர்கள் முட்டி மோதி எதிரொளித்து, மினுமினுத்தன. வேறு ஏவையும் அவருக்குத் தெரியவில்லை. “என்ன சிக்கல்?” என்று அவரால் கண்டறிய முடியவில்லை. காது மடல்களை அழுத்திப் பார்த்தார்.

“வலிக்குதா?” என்று கேட்டார் மருத்துவர்.

“இல்லை” என்றார் பத்மபாதர்.

“எங்கே வலி இருக்கிறது?” என்று கேட்டார் மருத்துவர்.

“காதில்” என்றார் பத்மபாதர்.

“காதுக்குள்ளேயா?” என்று கேட்டார் மருத்துவர்.

“ஆமாம்” என்றார் பத்மபாதர்.

“ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டார் மருத்துவர்.

“ஆமாம்” என்றார் பத்மபாதர்.

உடனே, மருத்துவர் இரண்டு டானிக்குகளையும் ஆறுவிதமான மாத்திரைகளையும் இரண்டு களிம்புகளையும் எழுதி, இறுதியாகத் தன்னிடமிருந்த சிறிய புட்டியில் சொட்டு மருந்தைக் கொடுத்தார். அது மருத்துவ பிரதிநிதிகள் தங்களின் மருந்து நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மருத்துவர்களுக்கு வழங்கும் இலவச மருந்துப் புட்டி.

பத்மபாதர் கேட்டார், “டாக்டர்! காதுவலிக்குச் சொட்டு மருந்துதானே தேவை? மற்றவை எதற்கு டாக்டர்?”

“நான்தான் கேள்வி கேட்பேன். நோயாளர்கள் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது. இதை வெளியே இருக்குற போர்டுல எழுதியிருக்கேன்னே, படிக்கலையா?” என்றார் கறாராக.

உடனே, சிவகாமசுந்தரி அவரிடம் இதே கேள்வியைக் கேட்பதற்காக வாயெடுத்தார். அடுத்த விநாடியே மருத்துவர், “நோயாளருக்கத் துணையாக வந்தவர்கள், என் அறைக்கு வெளியில்தான் நிற்க வேண்டும். நீங்கள் உள்ளே வந்ததே முதல்தவறு” என்றார்.

சிவகாமசுந்தரி சிறிது திறந்திருந்த தன் வாயை இறுக மூடிக்கொண்டார். மருத்துவர் அந்தச் சிறிய மருந்துப் புட்டியையும் மாத்திரைச் சீட்டையும் சிவகாமசுந்தரியிடம் கொடுத்தார்.

தன் கணவரை அழைத்துக்கொண்டு, அவர் அந்த அறையைவிட்டு வெளியேறினார். அறைக்கு வெளியில் இருந்த சிப்பந்தி, அவரிடமிருந்து அந்த மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு, “டாக்டர் பீஸ் 500” என்றார். சிவகாமசுந்தரி கொடுத்தார்.

“அந்த அறையில உட்காருங்க. மருந்துகளை வாங்கிட்டு வாரேன்” என்று ஓர் அறையை அவர்களுக்குக் கைக்காட்டிவிட்டு, அந்த மருத்துவமனையில் இருந்த வேறொரு அறைக்கு ஓடினார் அந்தச் சிப்பந்தி.

பத்மபாதரும் சிவகாமசுந்தரியும் காத்திருப்போர் அறையில் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அந்தச் சிப்பந்தி வந்தார். மருந்துகளைக் கொடுத்தார். 650 என்றார். சிவகாமசுந்தரி கொடுத்தார்.

அவர் செல்லும் முன்னர், “இந்தச் சொட்டு மருந்தை எப்படி, எத்தனைச் சொட்டு இவர் காதுல விடணும்?” என்று கேட்டார் சிவகாமசுந்தரி.

“எவ்வளவு வலி இருக்கோ, அவ்வளவு விடுங்க” என்றார் அந்தச் சிப்பந்தி.

“எப்பெப்ப விடணும்? என்று கேட்டார் சிவகாமசுந்தரி.

“எப்பெப்ப வலிக்குதோ அப்பப்ப” என்றார் அந்தச் சிப்பந்தி.

பத்மபாதரும் சிவகாமசுந்தரியும் எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டனர். செல்லும் வழியில், சிவகாமசுந்தரி, “இங்க இருக்குறவுங்க நாம சொல்றதைக் காதுலையே வாங்கிக்குற மாதிரி தெரியலையே!” என்றார்.

“எல்லாத்தையும் காதுல வாங்கி வாங்கிப் போட்டுக்கிட்டா, காது நிறைஞ்சுரும்ல!” என்று கூறிவிட்டுப் பத்மபாதர் வாய்விட்டுச் சிரித்தார்.

சிவகாமசுந்தரியும் சிரித்தார். அவர் சிரிப்பதைப் பத்மபாதர் பார்த்தார். உடனே, அவர் முகம் சற்றுச் சுருங்கியது. “என்ன, சப்தமே இல்லாம சிரிக்குற?” என்று கேட்டார் பத்மபாதர்.

“இல்லையே சப்தமாகத்தான் சிரிச்சேன்” என்றார் சிவகாமசுந்தரி.

“சத்தமா பேசு! நீ சப்தமே இல்லாம சிரிக்குறீயேன்ணு கேட்டேன்” என்றார் பத்மபாதர் விளக்கமாக.

“இதுக்கு மேலையும் சப்தமா பேசினா, தெருவுல போறவுங்க நம்மளையே வேடிக்கை பார்ப்பாங்க” என்றார் சிவகாமசுந்தரி.

“கொஞ்சம் சத்தமாத்தான் பேசேன்! நீ சப்தமே இல்லாம சிரிக்குறீயேன்ணு கேட்டேன். உனக்குக் கேட்கலையா?” என்றார் பத்மபாதர் சினத்தோடு.

சிவகாமசுந்தரி அவரையே பார்த்தார். பத்மபாதருக்கு வருத்தமாகிவிட்டது.

“ஏன் அப்படி முறைச்சுப் பார்க்குற? ரொம்பநாள் கழிச்சு நீ சிரிச்சதைப் பார்த்தேன். அதான் ஆசையில, ‘சப்தமே இல்லாம சிரிக்குறீயே?ன்ணு கேட்டேன். இது ஒரு குத்தமா? உன்னோட சிரிப்புதான் எனக்கு எப்பவுமே பிடிக்குமே! அதுவும் உனக்குத் தெரியும்தானே? நீ சிரிச்சாத்தானே எனக்குப் பிடிக்கும். அருவி விழ றமாதிரி சிரிப்பீயே! இப்ப என்னடான்னா சப்தமே இல்லாம சிரிக்குற. அதான் கேட்டேன். அதுக்குப் போயி முறைக்குறீயே!” என்றார் பத்மபாதர் கெஞ்சலான சினத்தோடு.

சிவகாமசுந்தரி அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். வரிசையில் ஆறுபேர் அமர்ந்திருந்தனர்.

தன் மனைவியிடம், “சிவகாமி! இப்ப காதுவலி கொஞ்சம் குறைஞ்சுருக்கு. மருந்து, மாத்திரை எடுத்துக்காமலேயே வலிகொறைஞ்சுடுச்சு பார்த்தியா?. அந்த ஆளு சொன்னதுபோல இது வயசுக்கோளாறா இருக்குமோ?” என்று கேட்டார்.

சிவகாமசுந்தரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘இவர் ‘வயசுக்கோளாறு’ என்று எந்த அர்த்தத்தில் கூறுகிறார்?’ என்று சிந்தித்தார். தன் சிரிப்பினை அடக்கிக் கொண்ட, சிவகாமசுந்தரி தன் கணவரின் முகத்தையே உற்றுப் பார்த்தார். சிப்பந்தி வந்தார். நோயாளரின் பெயரைக் கேட்டு, எழுதிக்கொண்டார்.

“ஏன் அப்படிப் பார்க்குற?” என்று கேட்டார். உடனே, சிவகாமசுந்தரி மெல்லப் புன்னகைத்தார்.

பத்மபாதர் சுற்றிலும் பார்த்தார். “சிவகாமி! எங்க பாட்டுப் பாடுது? ஆனா, ரொம்ப மெதுவாகக் கேட்குதே!” என்றார்.

சிவகாமசுந்தரிக்கு எந்தப் பாட்டும் கேட்கவில்லை. அந்த மருத்துவமனையில் இருந்த யாருக்கும் எந்தப் பாட்டும் கேட்கவில்லை. ஆனால், பத்மபாதருக்கு மட்டும் கேட்டது. அது அவரின் காதுகளின் வழியாகக் கேட்கவில்லை. அது அவரின் மனசுக்குள் இருந்து காதுகளின் வழியாக வெளியேறியது.

இது பழைய பாட்டு சிவகாமி. இதோட முதல்வரியை நான் மறந்துட்டேன். உனக்கு நினைவிருக்கா?” என்று கேட்டார் பத்மபாதர்.

சிவகாமசுந்தரிக்கு எந்த இசையோ, பாடலோ அப்போது கேட்கவில்லை. ‘இவருக்கு மட்டும் கேட்கிறது’ என்று நினைத்தவுடன் சிவகாமசுந்தரிக்கு அழுகையே வந்துவிட்டது.

“சிவகாமி! கொஞ்சம் யோசிச்சுப் பாரேன். இந்தப் பாட்டோட முதல் வரி உனக்கு நினைவுக்கு வருதா?” என்று கேட்டார் பத்மபாதர்.

சிவகாமசுந்தரி அவரையே உற்றுப் பாரத்தவாறு, தன் தலையை மட்டும் ‘இல்லை’ என்பது போல அசைத்தார்.

சிறிது நேரத்தில் பத்மபாதர் உள்ளே அழைக்கப்பட்டார். மீண்டும் அதே காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை இருவரும் சந்தித்தனர்.

“டாக்டர்! காதுவலியின்ணுதான் இவரை இங்கக் கூட்டிக்கிட்டு வந்தேன். ஆனால், இப்ப இவருக்குக் காதே கேட்கலை. என்னணு பாருங்க” என்றார் சிவகாமசுந்தரி வருத்தம் தோய்ந்த குரலில்.

மருத்துவர் அவரின் முகத்துக்கு நேராகத் தன் இரண்டு விரல்களையும் ஒட்டிவைத்து, ‘சொடக்குப் போட்டார்’.

“கேட்டதா?” என்று கேட்டார் மருத்துவர்.

“சொடக்குப் போட்டீங்க” என்றார் பத்மபாதர்.

“சொடக்குச் சப்தம் கேட்டதா? என்று கேட்டார் மருத்துவர்.

பத்மபாதர் அமைதியாக இருந்தார்.

“சரி, கண்ணை மூடிக்கோங்க” என்றார் மருத்துவர்.

பத்மபாதர் மருத்தவரையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே, சிவகாமசுந்தரி தன் கையிலிருந்த பையை மேஜையின் மீது வைத்துவிட்டு, தன் கணவருக்குப் பின்பக்கமாக நின்று தன்னிரு கைகளாலும் அவரின் கண்களை மூடினார்.

“என்ன சிவகாமி இது, சின்னப்பிள்ளை மாதிரி? டாக்டருக்கு முன்னால இப்படியா விளையாடுறது. நம்மளைப் பத்தி அவரு என்ன நினைப்பார்” என்றார் சிரித்துக்கொண்டே.

சிவகாமசுந்தரிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் வேறுவழி தெரியவில்லை.

“கையை எடு. கையை எடு சிவகாமி” என்றார் பத்மபாதர்.

மருத்துவர் பத்மபாதரின் முகத்துக்கு நேராகத் தன் இரண்டு விரல்களையும் ஒட்டி வைத்து, ‘சொடக்குப் போட்டார்’. மீண்டும் மீண்டும் சொடக்குகளைப் போட்டார்.

“சொடக்குச் சப்தம் கேட்டதா? என்று கேட்டார் மருத்துவர்.

பத்மபாதர் “சிவகாமி கையை எடு. டாக்டர் என்ன நினைப்பார் நம்மளைப் பத்தி. வயசானாலும் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் குழந்தைதான். அது இவருக்குத் தெரியாதுள்ள? இவரு நம்மளைப் பத்தி என்ன நினைப்பார்?. கொஞ்சமாவது உனக்கு இங்கீதம் இருக்கா?” என்று கேட்டார் பத்மபாதர் சற்று உரத்த குரலில்.

சிவகாமசுந்தரி தன் கைகளை அவரின் கண்களிலிருந்து விலக்கினார். பத்மபாதர் திரும்பி, தன் மனைவியைப் பார்த்தார் முறைத்துக்கொண்டு.

“சிவகாமி! நீ இன்னும் குழந்தையாவே இருக்க. டாக்டர் என்ன நினைப்பார் நம்மளைப் பத்தி” என்று தன் மனைவியிடம் கேட்டுவிட்டு, திரும்பி மருத்துவரைப் பார்த்து, “டாக்டர் சார்! நீங்க ஒன்ணும் சங்கோஜப்படாதீங்க. நாங்க எப்பவுமே இப்படித்தான். எங்களுக்குக் குழந்தையில்லையில. அந்த வருத்தத்தைப் போக்கிக்க, இப்படித்தான் நாங்க எங்களுக்கே குழந்தையாக மாறி விளையாடிக்குவோம். இப்போ உங்களுக்கு ஒரு பெண்குழந்தை இருந்து அது தன்னோட கைகளால உங்களோட கண்களை மூடிச்சுண்ணா நீங்க என்ன அதை திட்டுவீங்களா? அடிப்பீங்களா? அன்பா சொல்லித்தானே திருத்தணும். அப்படியே இவளையும் நினைச்சு மன்னிச்சுக்கோங்க. வயசானாலும் இவளுக்கு அறிவு வளரலை. ஆனா, எனக்கு, அறிவே இல்லை” என்று கூறிவிட்டுச் சிரித்தார் பத்மபாதர்.

இவர் கூறுவதைத் தன் காதுகளில் ஏற்றிக்கொள்ளாமல், மீண்டும் ஒரு மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்தார் மருத்துவர். தன் மேஜையிலிருந்த பத்து மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டையை எடுத்து, சிவகாமசுந்தரியிடம் கொடுத்தார். இதுவும் மருத்துவ பிரதிநிதிகள் தங்களின் மருந்து நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மருத்துவர்களுக்கு வழங்கும் இலவச மாத்திரை அட்டைகள்தான்.

சிவகாமசுந்தரி அதை வாங்கிக்கொண்டு, மேஜையில் வைத்திருந்த தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்தார்.

அந்தச் சிப்பந்தி அங்கு இல்லை. அவர் வேறொருவருக்கு மாத்திரைகளை வாங்கி வருவதற்காகச் சென்றிருந்தார். எதுக்கு இந்த டாக்டருக்கு பீஸ்கொடுக்கணும்? எதுக்கு மருந்து, மாத்திரைகளை வாங்கணும்? என்ன புரோஜனம் இருக்கு?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் சிவகாமசுந்தரி.

“சிவகாமி! புடிச்சுட்டேன். புடிச்சுட்டேன். அது ‘காற்றினிலே வரும் கீதம்…’. அந்தப் பாட்டுத்தான் இது. இதோ இப்பத்தான் அந்தப் பாட்டோட முதல் வரியும் எனக்குக் கேட்குது” என்றார் பத்மபாதர் மகிழ்ச்சியான முகத்துடன்.

சிவகாமசுந்தரி சிந்தனையில் இருந்தார். ‘இங்கு இருப்பதா? அல்லது வெளியெறுவதா?’ என்று முடிவெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் அவர்.

“சிவகாமி! உனக்குக் கேட்குதா? ஆனா, எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப மெதுவாத்தான் கேட்குது. உனக்குக் கேட்குதா?” என்று கேட்டார் பத்மபாதர்.

சிவகாமசுந்தரி தன் கணவரின் இடது கையை அழுத்திப் பிடித்து, வேகமாக அழைத்துக்கொண்டு, அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

“ஏன் இப்படிக் கையைப் போட்டு அழுத்துற? எனக்கு வலிக்குதுள்ள” என்றார் பத்மபாதர்.

சிவகாமசுந்தரி தெருவில் நடந்துகொண்டே, நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தார். வாயைத் திறக்காமல் புன்னகைத்தார். பத்மபாதர் தன் மனைவியை உற்றுப் பார்த்தவாறே, “வாய்விட்டுச் சிரியேன்” என்றார்.

சிவகாமசுந்தரி சற்று கூடுதலாகப் புன்னகைத்தார். உடனே, பத்மபாதர் தன் மனைவியைப் பார்த்து, கண்களைச் சிமிட்டிக்கொண்டு, “காற்றினிலே வரும் கீதம்…” என்று ராகம் போட்டுப் பாடினார். சிவகாமசுந்தரி அவரைப் பார்த்து இன்னும் கூடுதலாககப் புன்னகைத்தார்.

“ரொம்ப பிகு பன்ணாதே! கொஞ்சம் வாய்விட்டுச் சிரியேன்” என்றார் பத்மபாதர் கெஞ்சலான தொனியில்.

சிவகாமசுந்தரியின் கண்களும் முகமும் சிரித்தன. ஆனால், உதடுகள் மட்டும் பிரியாமல் ஒட்டியபடியே இருந்து, மிகுதியாகப் புன்னகைத்தன.

“போ! நீ எப்பவும் இப்படித்தான் நான் கேட்டா ரொம்ப பிகு பன்ணிக்குவ” என்று கூறிவிட்டுச் சிறுபிள்ளையைப் போலத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் பத்மபாதர். சிவகாமசுந்தரி தலைகுனிந்தார். அவர் விழிகளிலிருந்து கண்ணீர்த் துளிகள் சொட்டின.

– – –

4 Replies to “கேளாச்செவிகள்”

  1. எழுத்தாளர் திரு.சரவணன் அவர்களுக்கு வணக்கம். முதுமை பயம் தரக் கூடியது என்று நினைப்பை மாற்றி முதுமை அழகானது என்பதை மொழிந்துள்ளீர்கள். அது மட்டும் அல்லாது அப்பருவத்தின் இயல்பையும் அழகாக வடித்துள்ளீர்கள். மருத்துவமனையில் மருத்துவரிடமும் அருகில் உள்ளோரிடமும் உரையாடல் இயல்பாக நடக்கக் கூடியதே.எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை .வயசானாலும் இவளுக்கு அறிவு வளரவில்லை .எனக்கு அறிவே இல்லை என்பது காதலின் உச்சம். முதுமையிலும் பெருகும் காதலை அழகாக வர்ணித்துள்ளீர்கள். நாவில் ஒட்டிக் கொண்ட நிறம் போலவும் இனிப்பின் சுவை போலவும் என் மனதில் ஒட்டிக் கொண்டது. அவர்கள் இருவரும் தெருவில் நடந்து செல்லும் அவர் கூறும் வார்த்தைகளும் மனைவியின் மன எண்ணமும் சிப்பிக்குள் இருக்கும் அழகு முத்து போன்ற ஓர் உன்னதமான உரையாடல். அன்பான இணைந்து செல்லும் அழகு மனங்களைப் பற்றிய அருமையான சிறுகதை. தாங்கள் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை நிருபித்து விட்டீர்கள். ஒவ்வொரு வாரமும் உங்கள் எப்போது வெளிவரும் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் உங்கள் கதை ஓட்டமும் சொல்லும் சொல்லும் மிக அருமையாக இருக்கும். நன்றி.

    1. பேரன்புள்ள திருமதி. பிரியா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தொடர்ந்து என் சிறுகதைகளை வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி. காதல் இளமையில் கவர்ச்சியாகவும் முதுமையில் அழகாகவும் மாறிவிடுகிறது. இந்தச் சிறுகதையை முதுமையின் நுனியில் சுடரும் காதலில் தனித்துவமான அழகை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினேன். தங்களின் மடல் என் எண்ணம் ஈடேறியதை உறுதிப்படுத்திவிட்டது. நன்றி.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  2. Whenever I read your story, I feel relaxed and even I learn some new words Sir… The main characters in this story were grown well in age but being too childish 😂 It reminds me that when I’m too little I feel happy for getting old but now it’s really scarring to accept that my age is growing faster than me… I feel that this story is too short when compared to your other creations… But it proved that quantity doesn’t matter when the content was still strong… Congrats for your another good work Sir 🙏

    1. பேரன்புள்ள செல்வி. சுஸ்மிதா அவர்களுக்கு வணக்கம்.
      ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் நாம் நமக்கு ஒரு வயது கூடுகிறதாகவே நினைக்கிறோம். அது தவறு. நம் உடலுக்கும் மனத்திற்கும் ஒரு வயது கூடுகிறது என்று நினைப்பது பெருந்தவறு. உடல் வளர்ச்சி நாம் உண்ணும் உணவைப் பொருத்தும் மன வளர்ச்சி நாம் பெறும் வாழ்வியல் அனுபவத்தைப் பொருத்தும் அமைகிறது.
      குரங்கு மரத்தில் ஏறி இறங்குவதுபோல நம் மனமாகிய குரங்கும் வயது எனும் மரத்தில் ஏறி, இறங்கும். குறிப்பிட்ட வயதினை அடைந்த பின்னர் மனக்குரங்கு மெல்ல மெல்ல மரமிறங்கிக்கொண்டே வரும். அதனால்தான் பெரியவர்கள் குழந்தையைப் போலச் செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள்.
      இந்தச் சிறுகதையில் வரும் தம்பதியருக்கு இடையிலான வயது வேறுபாடு மிக முக்கியமானதொன்று. மனைவியும் தன் கணவரின் வயதை ஒத்தவராக இருந்திருந்தால் நிச்சயமாகத் தன் கணவருக்குக் கேட்ட இசை அவருக்கும் கேட்டிருக்கும். இறுதியில் அந்த மனைவி அழ நேர்ந்திருக்காது. அவர்கள் இருவருமே இசையைக் கேட்டபடியே நடந்துசென்றிருப்பார்கள் அல்லவா?.
      தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.