அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம்

யாருமில்லாததை
உறுதி செய்து கொண்டேன்
நேற்று ஓரத்தில்
ஒதுக்கி வைக்கப்பட்ட
என் நாற்காலியை
எடுத்து நடுவில் போட்டு
அமர்ந்து கொள்கிறேன்
இன்று இதுவரை
எங்கும் உரைக்க இயலாத
சொற்களை எல்லாம்
பேச்சாக கட்டமைத்து
பேசத் தொடங்குகிறேன்
பேசி முடிக்கும் வரை
குறுக்கிடாமல் இருப்பதென
கையெழுத்திடப்படாத
ஓர் ஒப்பந்தம்
எனக்கும் இந்தச் சுவருக்கும்
இப்படி ஒரு சுவர்
வாய்த்தலென்பது
எந்த தவத்தின்
வரம்?


எப்போதும்
என் வண்டி
அந்தத் தெருவுக்குள் நுழைந்ததும்
பின்னாடித் தொடர்ந்து
குரைத்துக் கொண்டே
துரத்தி வந்து
பின்னர் மீண்டும்
அந்த தெருவோர
இயல்வாகை மரத்தடியில்
சென்று படுத்துக் கொள்ளும்
அந்தப் பழுப்பு நிறத் தெருநாயை
இன்று ஏனோ காணவில்லை
மோப்பம் பிடித்தப்படியே
அதைத் தேடிச்
சென்று விட்டது மனம்
இப்போது அது
அந்த இயல்வாகை மரத்தடியில்
கொஞ்ச நேரம்
இளைப்பாறிக் கொண்டிருக்கலாம்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.