பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்

எம்பெருமான் நாராயணன் இப்பூவுலகில் வந்துதித்த போதில் அவரின் திருப்பாதங்கள் முதன் முதல் பட்ட இடம் திருவேங்கடம்தான். அத்தகு தெய்வத் தன்மை பொருந்திய திருவேங்கடத்தை ஆழ்வார் பெருமக்கள் பலர் மங்களாசாசனம் செய்து அனுபவித்திருக்கின்றனர்.

மூவாழ்வார்களில் முதலாம் ஆழ்வாரான பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் பல இடங்களில் திருவேங்கடத்தைப் போற்றிப் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

”எழுவார், விடைகொள்வார், ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல்—தொழுவார்
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச்சுடரைத் தூண்டும் கோல்”

என்பது பொய்கையாழ்வார் அருளிச்செய்துள்ள முதல் திருவந்தாதியின் 26-ஆம் பாசுரம் ஆகும். எழுவார், விடைகொள்வார், வைகல் தொழுவார் என மூன்றுவகையினரை ஆழ்வார் இப்பாசுரத்தில் காட்டுகிறார். தாங்கள் விரும்பிய செல்வம் கிடைக்கப்பெற்றதும், எம்பெருமானை விட்டு விட்டு எழுந்து செல்பவரும், தாங்கள் விரும்பிய மோட்சம் கைவரப்பெற்றதும் எம்பெருமானிடம் விடைபெற்றுப் போகும் கைவல்யார்த்திகளும், திருத்துழாயை அணிந்த எம்பெருமானை எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் முமுட்சுகளுமே அந்த மூன்றுவகையினர் ஆவர். அம்மூவகையினருடைய தீவினையாகிய நெருப்பை அணைத்து வானத்தில் இருக்கும் நித்ய சூரிகளின் மனமாகிய விளக்கைத் தூண்டி ஒளிரச்செய்யும் மலையே திருவேங்கடமாகும் என்று ஆழ்வார் அருளிச்செய்கிறார்.

அடுத்துப் பொய்கையாழ்வார் தம் திருவந்தாதியில் 37 முதல் 40 முடிய நான்கு பாசுரங்களில் திருவேங்கடத்தை அனுபவிக்கிறார்.

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி—திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த ஊர்.

[37]

“கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?” என ஆண்டாள் நாச்சியார் வினவிய வெண்சங்கினைத் தம் திருவாயில் வைத்து ஊதியதை இப்பாசுரத்தில் ஆழ்வார் அருளிச்செய்கிறார். அற்ப பலன்களையும், மேலான பொருள்களையும் பிரித்து அறிய வகைசெய்யும் நுண்மாண் நுழைபுலமாம் கேள்வியறிவு வாய்க்கப்பெற்ற அடியவர்கள் நாள்தோறும் தூபதீபங்களையும், மலர்களையும், தீர்த்தம் போன்றவற்றையும் தத்தம் கைகளில் ஏந்திக் கொண்டு பல திசைகளிலுமிருந்து வந்து வணங்கும் இத் திருவேங்கடமே வெண்சங்கினைத் தம் திருவாயினிலே வைத்து ஊதிய எம்பெருமான் எழுந்தருளி உள்ள இத் திவ்யதேசமாகும் என ஆழ்வார் அனுபவிக்கிறார்.

அடுத்த பாசுரத்தில் பொய்கையாழ்வார் அருமையான இயற்கைக் காட்சியைக் காட்டுகிறார்.

ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை
பேர எறிந்த பெருமணியை—-காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலகரர்
எம்மென்னும் மால திடம்

[38]

திருவேங்கட மலையில் வரிவரியாகத் தன்மீது கோடுகளை உடைய ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது மலைமீதே நிரந்தரமாக வசித்து வரும் குறவர்கள் தம் வயல்களை மேய வரும் யானைகளை விரட்ட அவற்றின் மீது பெரிய மாணிக்கக் கல்லை வீசுகின்றனர். மின்னுகின்ற அம்மாணிக்கத்தை மின்னல் என்றே நினைத்து ஊர்ந்துகொண்டிருந்த நாகம் அஞ்சித் தன் புற்றுக்குள் செல்கிறது. அப்படிப்பட்ட அழகுகள் வாய்க்கப்பெற்ற திருவேங்கடமே எங்கள் எம்பெருமான் குடிகொண்டு அருள் பாலிக்கும் இடம் என எல்லாவற்றிலும் மேம்பட்ட நித்தியசூரிகள் விரும்புகிறார்கள்.

அடுத்த பாசுரத்தில் திருமாலின் வராக அவதாரத்தையும், கிருஷ்ணாவதாரத்தையும் தொண்டரடிப் பொடியாழ்வார் ஒருங்கே அனுபவிக்கிறார்.

இடந்தது பூமி; எடுத்தது குன்றம்;
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச—கிடந்ததுவும்
நீரோத மாகடலே; நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது.

[39]

கடலின் நிறம் கொண்டவர் எம்பெருமான். அவர் வராக அவதாரத்தில் பெரிய உருவெடுத்து இப்பூமியைத் தம் கோட்டால் குடைந்து தேவியைக் கொணர்ந்தார். கிருஷ்ணாவதரத்தில் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து ஆயர் பாடியைக் காத்தார். கம்சன் அச்சப்பட்டு முடிந்து போகும்படிச் செய்தார். அவர் பள்ளிகொண்டு கிடந்த கோலம் காட்டுவது திருப்பாற்கடலில் ஆகும். தம் பெருமை எல்லாம் பொலிய நின்ற கோலம் காட்டி அருள் செய்வது திருவேங்கடத்திலே என்று பொய்கையாழ்வார் அனுபவிக்கிறார்.

இப்பாசுரத்திற்கு வியாக்கியானம் செய்யும்போது பெரியவாச்சான் பிள்ளை, ”நாமெல்லாம் உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் ஆழ்வார் பெருமக்களோ இடந்தது பூமி, எடுத்தது குன்றம் என்று அவனுடைய பெருமைகளைத்தாம் மாறி மாறி அனுபவிக்கிறார்கள் என்கிறார்.

பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம்—இருவிசும்பில்
மீன்விழக் கண்டஞ்சும் வேங்கடமே மேல்அசுரர்
கோன்விழக் கண்டுகந்தான் குன்று.

[40]

இப் பாசுரத்தில் பொய்கையாழ்வார் திருவேங்கடத்தின் பெருமையைக் கூற வரும்போது நரசிம்மாவதாரத்தைப் போற்றி அருளுகிறார்.

இந்த வேங்கடமலையில் பெரிய வில்லையும், அம்புகளையும், கொண்டு வாழும் குறவர்கள் தம் வயலில் மேய வரும் யானையை விரட்டத் தீப்பந்தங்களைக் கொளுத்தித் தம் கைகளில் கொண்டு செல்வர். அந்த நெருப்பைக் கண்டு அஞ்சி யானையானது விலகிச் செல்லும். அப்போது வானிலிருந்து ஒரு விண்மீன் கீழே விழுகிறது. அதையும் நெருப்புப் பந்தம் என்று கருதி யானை அஞ்சுகிறது. அத்தகைய காட்சியைக் கொண்ட திருவேங்கடம்தான் முன்னொரு காலத்தில் இரணியனை அழித்து மகிழ்ந்த எம்பெருமான் அருளாட்சி செய்யும் திவ்யதேசமாம்.

பொய்கையாழ்வார் திருவேங்கடமலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாளைப் போற்றிப் புகழ்ந்து உம் பெருமையை உண்மையில் யார் உணர முடியும் என்று வினாக்கள் தொடுப்பதுபோல் இப்பாசுரத்தை அமைத்துள்ளார்.

உணர்வார்ஆர் உன்பெருமை? ஊழிதோ றூழி
உணர்வார்ஆர் உன்னுருவந் தன்னை—-உணர்வார்ஆர்
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்
பண்ணகத்தாய்! நீகிடந்த பால்?

[68]

”பரமபதமாகிய விண்ணகத்தில் எழுந்தருளி இருப்பவனே! இம்மண்ணுலகில் அவதாரங்கள் பல புரிந்தவனே! திருவேங்கடத்தில் எழுந்தருளி இருப்பவனே! பண் அமைக்கப்பெற்ற நான்கு வேதங்களில் உறைபவனே! இப்படிப்பட்ட உம் பெருமைகளைக் காலம் உள்ளவரை ஆராய்ந்து பார்த்தாலும் அறியக்கூடியவர் யாவர்? அடியவரைக் காக்க நீ திருப்பள்ளி கொண்டிருக்கும் திருப்பாற்கடலையும் அறிய வல்லார் யாருளர் என்று அருளிச்செய்கிறார் பொய்கையாழ்வார்.”

உணர்வார் யார் என்று கேட்பதனால் எல்லாவற்றையும் அறியக்கூடிய உன்னாலும் உன்பெருமைகளை அறிய முடியாது என்பது உணரப்படும். இதையே நம்மாழ்வார், “தனக்கும்தன் தன்மை அறிவறியான்” என்பார்.

எம்பெருமான் ஓங்கி உளகளந்து அருளிச் செய்ததைத் திருவேங்கடத்துடன் சேர்த்து அனுபவிக்கிறார் பொய்கையாழ்வார்.

வழிநின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே ஆவர்—பழுதொன்றும்
வராத வண்ணமே விண்கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங் கடம்.

[76]

”வழிவழியாய்ப் பக்தி மார்க்கத்தில் நின்று தன்னைத் தொழுவோர் உபநிடதம் கூறும் நற்கதியை அடைபவரே ஆவார். உலகளந்த பெருமான் எழுந்தருளி இருக்கும் இத் திருவேங்கடமே தம்மைப் பற்றியவர்க்கு நற்கதியை அருளிச்செய்யும் திவ்யதேசமாகும். அப்படி இருக்க இங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானைத் தொழுவோர் நற்கதி அடைவார்கள் என்பதைச் சொல்ல வேண்டுமா” என்கிறார் பொய்கையாழ்வார்

”பரன்சென்று சேர் திருவேங்கட மாமலை           

அது ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”

என்னும் நம்மாழ்வார் பாசுர அடிகளும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கன. ”எம்பார் இப்பாசுரத்தை நாள்தோறும் அனுசந்திப்பது வழக்கம்” என்கிறார் பெரியவாச்சன்பிள்ளை.

திருவேங்கடத்தை மங்களாசாசனம் செய்யும் பொய்கையாழ்வார் கூடவே இன்னும் மூன்று திவ்ய தேசங்களையும் போற்றி எம்பெருமானின் நின்ற, அமர்ந்த, கிடந்த, நடந்த என்னும் நான்கு திருகோலங்களையும் அனுபவிக்கிறார் இப்பாசுரத்தில் என்று சொல்லலாம்.

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும்—நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்.

[78]

திருவேங்கடத்தில் எம்பெருமானின் நின்ற கோலம் காணலாம். திருஅரிமேய விண்ணகரத்தில் அமர்ந்த கோலம் கண்டு மகிழலாம். திருவெஃகாவில் கிடந்த கோலமும், திருக்கோவலூரில் நடந்த கோலமும் காணலாம் என்று பொய்கையாழ்வார் இப்பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.அத்தகைய பெருமானைத் துதித்தால் துன்பம் அழியும் என்கிறார்.

இப்பாசுரத்திலுள்ள விண்ணகர் என்பது சற்று ஆராயத்தக்கது. விண்ணகரம் என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான திவ்யதேசம் என்று பொருளாகும். விண்ணகரம் என்னும் சொல்லை முதன் முதல் நம்மாழ்வார்தான் முதன் முதல் கையாண்டுள்ளார். அவர் ஒப்பிலியப்பன் கோவிலை திருவிண்ணகர் என்றே மங்களாசாசனம் செய்வார். 108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்யதேசங்களைத் திருமங்கையாழ்வார் விண்ணகரம் என்று குறிப்பிடுகிறார். அவையாவன: பரமேச்சுர விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், நந்திபுர விண்ணகரம், காழிச் சீராம விண்ணகரம்,

இவற்றில் முதல் நான்கு திவ்யதேசங்கள்தாம் இப்பாசுரத்துக்கேற்றவாறு அமர்ந்த கோலத்தில் பெருமான் காட்சி தருவனவாம். காழிச்சீராம விண்னகரம் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்செய்யும் திவ்யதேசமாகும். விண்ணகர் என்பதை ஒப்பிலியப்பன் கோவில் எனக்கொண்டாலும் அங்கும் எம்பெருமான் நின்றகோலத்தில்தான் காட்சியளிக்கிறார்.

படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள் பைம்பூந்
தொடையலோ டேந்திய தூபம்—இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை.

[82]

இப்பாசுரத்தில் உள்ள பாரசி என்பது துவாதசியைக் குறிக்கிறது. திருவேங்கடத்தில் துவாதசி நாளில் வேல்போன்ற கண்களை உடைய பெண்கள் வாடாத மலர்களைக் கொண்டு மாலைதொடுத்து, அத்துடன் தீப தூபங்களை ஏந்திப் பெருமானைத் தொழச் செல்கிறார்கள். அவர்களின் தூபமானது வானில் உள்ள நட்சத்திரங்கள் மறையும்படி மாசு ஏற்றுகிறதாம். அப்படிபட்ட திருவேங்கடமே முன்னொரு காலத்தில் மாயமானாக வந்த மாரீசன் மாயும்படி அம்பு எய்த இராமபிரான் உறையும் மலையாகும்.

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்னும்
உளன்கண்டாய் உள்ளுவா ருள்ளத்—–துளன்கண்டாய்
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தி னுள்ளானென் றோர்

[99]

”என்னுடைய மனமே! எம்பெருமான் நம்மைப் பாதுகாப்பதனாலேயே பயன்பெற்றுள்ளான். அவன் எப்பொழுதும் நம்மைக் காப்பதிலேயே கவனமாக இருக்கின்றான். அடியவர்கள் மனத்தில் எப்பொழுதும் வாசம் செய்கின்றான்; அவனே திருப்பாற்கடலுள் கண்வளர்கின்றான்; திருவேங்கடத்திலே நின்றகோலத்தில் காட்சி தருகின்றான். இப்போது நம் இதயத்தில் வந்து புகுந்து வாசம் செய்கின்றான் என்று அறிந்து கொள்வாயாக” என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.

எங்கும் எல்லாவற்றிலும் நின்று அருள்செய்யும் பரம்பொருள் நம் மனித மனத்துக்குள்ளேயே கோயில் கொண்டு நிற்கிறது. நாம் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானித்தால் அவனைக் காணலாம் என்று இப்பாசுரத்தின் மூலம் பொய்கையாழ்வார் அருளிச்செய்கிறார்.

இப்படிப் பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் திருவேங்கடத்தைப் பலவாறாக அனுபவித்து மகிழ்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.