கசப்பு

கிடைக்கும் வேப்பம் பூக்களின்
தேன் சொட்டுக்களை
ஒரு வாய் பருகும் அளவு
சேகரித்து முடிக்கும் பொழுது
கசக்கும் பூக்கள் பிடித்திருந்தன
தேன் கசந்தது.
இப்போது
வேண்டாமென
கீழே சிந்திய தேனை
பருக வந்திருக்கும்
எறும்புகளை
பாவம் என்றெண்ணுவதற்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
பொறாமை.
-ப. ஆனந்த்
யாரு சாமி நீ..
அய்யப்பன் அன்பழகன் விஜயா
உன்னை வைத்து உலகத்தைச் சுருக்க நினைத்தேன்
இன்று உன்னுள் நான் சுருங்கிக் கிடக்குறேன்..
சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தவன்
இன்று உன் சிறு கூட்டிற்குள் என்னை அடைத்துக் கொண்டேன்..
சிந்தனை என்ற திறனை மறந்து
சித்துப் பிடித்தவனாய் உன்னுள் அடங்கிவிட்டேன்..
உன் துணையால் தொடர்பு கொள்ள நினைத்தேன்
இன்று உன்னால் எல்லாத் தொடர்பும் இழந்துக் கிடக்குறேன்..
உண்மை கிடைக்குமென்று உன்னுள் தேட
கிடைத்ததை எல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டேன்..
கைக் கடிகாரம் கழட்டி எறிந்துவிட்டேன்
கால் நடைகூட உன்னைக் கணக்கிடச் சொன்னேன்..
என் சிறு மூளை தேவை இல்லை நினைக்க,
உன் நினைவகம் மட்டும் போதும் என்றேன்..
காகிதம் கசக்கிக் கவிதை எழுதியவன்
இன்று கட்டை விரலோடு முடித்துக்கொண்டேன்..
ஊடகத்தை உன்னுள் அடக்கினாய்
ஊர்க் கதையை உரக்கக் கூறினாய்
அக்னிச் சாட்சி தேவையில்லை
உன் கண் சாட்சி போதும் என்றார்கள்
வெற்றிலையில் மையைப் போட்டுத்
தேடத் தேவையில்லை
நீ திசை காட்டும் கருவியாய் மாறியபின்
அறிவியலும் அரை நொடியில் உள்ளங்கையில்
அள்ளித் தருவாய்
வான் சாஸ்திரம் கூட வாய்விட்டுக் கேட்டாலே
கொட்டி விடுவாய்
வரும் மழையைக் கூட வானம் பார்க்காமல்
சொல்லி விடுவாய்
உலகத்தை இணைத்து வாழ்பவன் நீ
மின்சாரத்தை உண்டு வாழ்பவன் நீ
மின்னலாய்ச் செயல்படுபவன் நீ
அடிக்கடி உரு மாறுபவன் நீ
நீ கீச் கீச் என்று சிணுங்கினால் போதும்
கீர்த்தனை பாடிக்கொண்டிருந்தாலும்
உன்னை அள்ளி அணைக்க வந்து விடுவோம்
உலகத்தைக் கையில் பிடிக்க நினைத்தானே அலெக்சாண்டர்
இன்னும் அவன் கை, கல்லறையின் வெளியே நீட்டியுள்ளதா?
இவனை அவன் கையில் சேர்த்து விடுகிறேன்
அவன் ஆத்மா… சாந்தி அடையட்டும்.
அந்த அட்சயப் பாத்திரம் நீதானோ?
ஞானப்பழமாய் உன்னை நினைத்து
பல சேகரம் சுற்றி உன்னை அடைந்தேன்..
பாவிப்பயலே சில ஆயிரமாய் இருந்த நீ
இன்று பல ஆயிரமாக உயர்ந்து விட்டாய்..
இருந்தாலும் நீ கவசக் குண்டலமாய்
என் செவியோடு இணைந்து விட்டாய்..
கைபேசிய நீ ?
கதை சொல்லிய நீ ?
நாள் காட்டிய?
திசை காட்டிய?
நிழல் படம் எடுப்பவனா
இல்லை நீந்தாமல் கடல் கடப்பவனா?
கால் நூற்றாண்டு தான் உன் வரலாறு
இருந்தாலும் இன்று நீ சொல்வதுதான் வரலாறு
மொத்தத்தில்
யாரு சாமி நீ?
நல்லவனா, கெட்டவனா?
அய்யப்பன் அன்பழகன் விஜயா
“சிந்தனை என்ற திறனை மறந்து
சித்துப் பிடித்தவனாய் உன்னுள் அடங்கிவிட்டேன்” –
இதை விடச் சுருக்கமாய் நாம் கைபேசிக்குள் சுருங்கிக் கிடப்பதை யாரால் சொல்ல முடியும்? அருமை ஐயப்பன்!
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🤝👍🎉