பலிபீடம்

பாகற்காய் விதை ஆமையின் ஓடுபோல வலுவாக இருந்தது. அதை என் விரல்களால் பிடித்து அழுத்தினேன். என் விரலில் உள்ள தசைகள் உள்ளழுந்தின. விரல்கள் வலித்தன. அந்த விதையை என் உள்ளங்கையில் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“டேய்! இது வீரியமான பாகற்காய்விதை டா!” என்றான் என் நண்பன்.

அவன் அரசுத் தோட்டக்கலைத் துறையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்தான். அவனுக்கு எல்லாத் தாவரங்களைப் பற்றியும் விரிவாகத் தெரியும். ‘வீட்டில் கொடித் தாவரங்களை வளர்க்கலாம்’ என்ற சிந்தனை வந்ததும், அதனைத் தொடர்ந்து எழுந்த பேச்சில், அம்மா கூறியது ‘புடலையும் அவரையும் பாகற்காயும்’தான். எனக்கு இவன் நினைவுதான் வந்தது. நேராக இவனைப் பார்க்கச் சென்றேன்.

‘இவன்தான் புடலையும் அவரையும் வேண்டாம். பாகற்காயை மட்டும் விதை’ என்றான். இவன் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். எங்கள் வீட்டில் செடிகளை வளர்க்க எந்த இடமும் இல்லை என்பது இவனுக்கு நன்றாகவே தெரியும்.

என் வீட்டின் பின்பக்கம் உள்ள மோட்டாருக்கு அருகில் மட்டுமே கையளவு மண்பரப்பு இருக்கிறது. மற்றபடி வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளம்தான். ‘மொட்டை மாடி’ என்ற ஒன்று இருந்தாலும் அதற்குச் செல்ல ஏணியோ, மாடிப் படிகளோ இல்லை.

முற்றமோ, பால்கனியோ இல்லாத வீடு எங்கள் வீடு. மிக நெருங்கியபடி அக்கம் பக்கத்து வீடுகள் இருப்பதால், எல்லோரின் வீட்டு நிழலும் எங்கள் வீட்டின்மீதே விழுந்து கிடக்கும்.

இப்படிப்பட்ட வீட்டில் தாவரத்தை எங்கு வளர்க்க முடியும்? அதனால்தான் என் நண்பன் சரியாகக் கூறினான், “உங்க வீடு செடிகளை வளர்க்க ஏத்த வீடு இல்லை. தொட்டிச் செடி வச்சாலும் அதுக்குக் கொஞ்சமாவது சூரிய வெளிச்சம் வேணும்ல. அதனால நீ பாகற்காயை மட்டும் வளர்த்து வா. அது கொஞ்சம் மண்ணுலையும் சின்ன வெளிச்சத்துலையும் தழைச்சு எழும்” என்றான்.

அவன் பேச்சில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. பத்து விதைகளை வாங்கித் தாளில் மடித்து, வீட்டுக்கு எடுத்து வந்தேன்.

பாகற்காய் விதையைப் பார்த்ததும் அம்மாவின் கண்கள் சுவையில் விரிந்தன.

“டேய்! இது மிதி பாகற்காயா?” என்று கேட்டார்.

“இல்லை, கொடிப் பாகற்காய்” என்றேன்.

“சரி, சரி எதுனாலும் சுவையாத்தான் இருக்கும்” என்றார்.

“புடலை, அவரை?” என்று கேட்டார்.

“அதெல்லாம் நம்ம வீட்டுக்குச் சரி வராதாம்” என்றேன்.

“சரி” என்றார்.

நான் மோட்டாரின் அருகில் சென்றேன். டேய் அதை அப்படியேவா விதைக்கப் போறே?” என்று கேட்டார் அம்மா.

“ஆமாம்” என்றேன்.

“டேய்! முட்டாப் பயலே. அதனோட விதை கடினமா இருக்குல்ல. கொஞ்ச நேரம் தண்ணீல ஊறப் போடு. அப்புறமா மண்ணை ஈரமாக்கிட்டு, ரெண்டு அங்குலம் தோண்டி, விதைச்சுடலாம்” என்றார்.

நான் அந்தப் பத்து விதைகளையும் ஒரு டம்ளர் நீரில் ஊறப் போட்டேன். மதியம் முழுவதும் அது ஊறியது. நான் மறந்தேவிட்டேன். மாலையில் தற்செயலாகப் பாகற்காய் விதைகளின் நினைவு வந்தது. வேகமாக வந்து டம்ளரைப் பார்த்தேன்.

அந்தப் பத்து விதைகளுள் ஒன்று மட்டும் உப்பி, மெல்லிய கோடாக வெடித்திருந்தது. அதனுள் இருக்கும் பருப்பு இளம்பச்சை நிறத்தில் வெளியே தெரிந்தது. மற்ற ஒன்பது விதைகளும் தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் முதலைகள்போல அசைவற்று இருந்தன.

நான் முளைக்கத் தொடங்கிய அந்த ஒரு விதையை மட்டும் எடுத்துக்கொண்டு மோட்டாரின் அருகில் சென்றேன். அதன் அருகில் இருந்த கையளவு மண்ணில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, இரண்டு அங்குலம் அளவுக்கு விரல்களால் தோண்டி அந்த விதையை இட்டு, மண்ணை மூடினேன்.

இறந்தவர்களை, இறந்தவற்றைப் புதைப்பதுபோல அல்ல அது; ஓர் உயிரைப் புதைக்கும் செயல். புதைக்கப்பட்ட பின்னரும் உயிர்த்தெழும் சக்தி இந்த உலகில் விதைகளுக்கு மட்டுமே இருக்கிறது. ‘விரைந்து எழுந்து வா பாகற்கொடியே!’ என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டு, வீட்டுக்குள் வந்தேன்.

அன்று முழுநிலா. பாகற்காய் மண்ணில் காலூன்றி, தன் இரு கைகளாலும் மண்ணை விலக்கிக்கொண்டு வெளியே வந்தது. அதன் இரு இளந்தளிர் போன்ற கைகளுக்கு இடையிலிருந்து அடுத்தடுத்து இலைகள் சுருண்டு, விரிந்தன. ஒவ்வொரு ஈரிலை அடுக்கின் தண்டுப் பகுதி இணைப்பில் இருந்தும் இளம்பச்சை நிறத்தில் கம்பிபோன்ற வலுவான ஒன்று எழுந்தது. அது அருகில் இருக்கும் சுவரைப் பற்றிக்கொண்டது.

அடுத்தடுத்து நீண்டு வளர்ந்த சுருள்கள் அருகில் இருக்கும் சிறு பொருளைக்கூடப் பிடித்து, கம்பிச் சுருள்போல அவற்றைச் சுற்றிக்கொண்டு, பாகற்கொடிக்கு நல்ல பிடிமானத்தை வழங்கின. எண்ணற்ற கம்பிச் சுருள்கள் நீண்டு வளர்ந்தன. ஒவ்வொன்றும் ஒரு பற்றுக்கோட்டினைப் பிடித்துக்கொள்ள, பாகற்கொடி விரைவாக மேலெழத் தொடங்கியது.

மோட்டாருக்கு அருகில் உள்ள சன்னலுக்கு அருகில் என்னுடைய கட்டில் இருந்தது. நான் சன்னலைப் பார்த்தவாறு தலையை வைத்துக்கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தேன். என் வலக்கை சன்னலை நோக்கி நீண்டிருந்தது. பாகற்காயின் கொடி சன்னலின் உயரத்துக்கு எழுந்து, நின்று என்னைப் பார்த்தது.

அது தன்னிலிருந்து ஒரு நீண்ட சுருளினை என் விரல்களை நோக்கி அனுப்பியது. அது என் ஆட்காட்டி விரலைப் பிடித்துக்கொண்டு, சுருளத் தொடங்கியது. மலைப்பாம்பு தன் இரையைச் சுற்றி இறுக்குவதுபோல இருந்தது அதன் செயல்பாடு.

நான் திடுக்கிட்டு விழித்தபோது என் உடல் முழுக்கவும் பாகற்கொடி படர்ந்திருந்தது. என் கைகளின் விரல்களிலும் கால்களின் விரல்களிலும் பாகற்கொடியின் நீண்ட சுருள்கள் சுற்றியிருந்தன.

பசுந்தாவரத்தின் பச்சை வாசனையை என்னால் நுகர முடிந்தது. அதனோடு சேர்ந்து, பாகற்காயின் கசப்புச் சுவையை என் நா சுவைக்கத் தொடங்கியது. அதன் பின்னர் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு காட்டுக்குள் கிடந்தேன். என் கண்களுக்குத் தெரிந்த பகுதிகளில் எல்லாம் பல்வேறு வகையான கொடித் தாவரங்கள் இருந்தன. அத்தனையும் காற்றையே தன் நீண்ட சுருள்களால் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தன. அத்தனையும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன்.

என் உடலில் சுற்றியிருந்த பாகற்கொடி மெல்ல விலகி, என்னை விடுவித்தது. ஆனாலும், அது தன்னுடைய ஒரேயொரு சுருளால் மட்டும் என் கழுத்தை இறுக்கிப் பிணைத்திருந்தது. நான் எழுந்து நின்றேன். அந்தப் பகுதியில் முழு நிலாவொளி படர்ந்திருந்தது. நான் ஒரு குற்றவாளிபோல அங்கு நிறுத்தப்பட்டிருந்தேன்.

பாகற்கொடி முன்னால் நடக்க, அதன் சுருள் என் கழுத்தைப் பிடித்து அதனோடு இழுத்துச் சென்றது. நான் நடக்க நடக்க என் அருகில் இருந்த அத்தனை கொடிகளும் சேர்ந்து நடந்தன.

அந்தப் பாகற்கொடி என்னை மலைச் சரிவுக்கு அழைத்துச் சென்றது. அங்கு பெரும் பெரும் பாறைகள் இருந்தன. சிறிய குகைக்கு அருகில் என்னைக் கொண்டுசென்று நிறுத்தின. அது குகையா அல்லது கோவில் கருவறையா? என எனக்குத் தெரியவில்லை.

அந்தக் குகைக்கு முன்னால் சிறிய வட்ட வடிவில் ஒரு கல் இருந்தது. வழக்கமாகச் சிவன் கோவிலின் கருவறைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்திக்கும் உயர்ந்து நின்றும் கொடிமரத்துக்கும் நடுவில் இருக்கும் சிறிய பலிபீடம்போல அந்தக் கல் இருந்தது. அதன் வடிவமைப்பும் அழகும் அதுபோலவே எனக்குத் தோன்றியது.

அருகில் சென்று அந்தக் கல்லினைப் பார்த்தேன். ஒரு பெரிய பூவினைக் கவிழ்த்து வைத்ததுபோல அது இருந்தது. ‘கற்பூவோ!’ என்று நினைத்து வியந்தேன். அந்தக் கல் மெல்லச் சுழலத் தொடங்கியது. ஒவ்வொரு சுழற்சிக்கும் அரையடி என்ற விகிதத்தில் அது விரியத் தொடங்கியது. விரிந்து விரிந்து பெரிய தாம்பாளம்போல மாறிவிட்டது. நான் சற்றுப் பின்னகர்ந்தேன். இன்னும் இன்னும் விரிந்து விரிந்து அது மிகப் பெரிய தாம்பாளம்போல மாறியது. கற்தாம்பாளம்! அதன் சுழற்சி நின்றது.

“என் கழுத்தைப் பற்றியிருந்த பாகற்கொடி என்னிடம் பேசத் தொடங்கியது.

“எதைப் பலிகொடுக்க உள்ளாய்?” என்று கேட்டது.

“எதற்குப் பலிகொடுக்க வேண்டும்?” என்று கேட்டேன்.

“என்னை விதைத்தவரைப் பக்குவப்படுத்த வேண்டியது என் கடமை. நீதான் என்னை விதைத்தாய். நான் உன்னைப் பக்குவப்படுத்த வேண்டும். நீ பக்குவப்பட வேண்டும் என்றால் நீ உன்னில் இருக்கும் தீய குணத்தை இங்குப் பலியிட வேண்டும்,” என்றது.

“என்னிடம் எந்தத் தீய குணமும் இல்லையே!” என்றேன்.

உடனே எனக்கு அருகில் இருந்த அனைத்துக் கொடித் தாவரங்களும் வாய்விட்டுச் சிரித்தன.

“உன்னிடம் உள்ள அனைத்துக் குணங்களும் தீயவையே!” என்றது பாகற்கொடி.

“இல்லை இல்லை,” என்றேன்.

உடனே, அனைத்துக் கொடித் தாவரங்களும், “ஆமாம் ஆமாம்,” என்றன.

“சொல், எதைப் பலியிடப் போகிறாய்?” என்று கேட்டது.

“ஒரு தீய குணத்தைப் பலியிட்டால் நான் பக்குவப்பட்டுவிடுவேனா?” என்று கேட்டேன்.

“இல்லை” என்றது பாகற்கொடி.

“பிறகு எதற்கு நான் பலியிடவேண்டும்?” என்று கேட்டேன்.

“தீய எண்ணங்களைப் பலியிடுவது எப்படி என்பதை உனக்கு அறிமுகப்படுத்தவே உன்னை இங்கு அழைத்து வந்தேன்” என்றது.

நான் அமைதியா இருந்தேன். அதுவே தொடர்ந்து பேசியது.

“இந்த அறிமுகத்துக்குப் பின்னர்?” என்று கேட்டேன்.

“இனிமேல், நீயே ஆத்மார்த்தமாக உனக்குள் இருக்கும் தீய குணங்களை ஒவ்வொரு நாளும் பலியிட்டுக் கொள்ளவேண்டும்” என்றது.

நான் அமைதியாக இருந்தேன். அதுவே தொடர்ந்து பேசியது.

“உன்னுடைய எந்தத் தீய எண்ணத்தை நீ பலியிடப் போகிறாய்?” என்று கேட்டது.

“எது தீய எண்ணம்?” என்று கேட்டேன்.

“இப்படி நடிப்பதும்கூடத் தீய எண்ணமே!” என்றது.

எனக்கு வெட்கமாக இருந்தது. நான் தலையைக் குனிந்துகொண்டேன்.

“சீக்கிரம் சொல்! சீக்கிரம் சொல்!” என்றன அனைத்துக் கொடித் தாவரங்களும்.

நான் என் கழுத்தில் சுற்றியிருந்த அந்த ஒற்றைச் சுருளினைப் பற்றிப் பிடித்து அறுத்தேன். அனைத்துக் கொடித் தாவரங்களில் இருந்தும் எண்ணற்ற சுருள்கள் என்னை நோக்கி வந்தன. அடுத்த விநாடியே நான் துள்ளிக் குதித்து, அந்தப் பலிபீடத்தின்மீது ஏறி நின்றேன்.

அனைத்துக் கொடித் தாவரங்களும் திடுக்கிட்டு, என்னைப் பார்த்தன. அவை அனைத்தும் செயலற்று நின்றன.

பாகற்கொடி என்னைப் பார்த்து, “என்ன செய்கிறாய்? நீ உன்னையே முழுவதுமாகப் பலியிட்டுக்கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டது.

ஆம்! என்று கூறியபடியே நான் அந்தப் பலிபீடத்தின் மீது அமர்ந்தேன்.

அந்தக் கற்தாம்பாளம் சுழலத் தொடங்கியது. அது சுழல சுழல கற்பீடம் சுருங்கத் தொடங்கியது. அது சுருங்கி சுருங்கி, சிறிய பலிபீடமாக மாறியது. நானும் உருவத்தில் சிறுத்துக்கொண்டே வந்தேன்.

கவிழ்ந்த பூப்போன்ற அந்தப் பலிபீடம் சட்டென நிமிர்ந்தது. அந்தக் கற்பூவுக்குள் நான் இருந்தேன். அந்தப் பூ தன் இதழ்களை மூடி மொட்டாக மாறியது. நான் அந்த மொட்டுக்குள் உறைந்தேன்.

எனக்கு அருகில் வெளியே நின்றிருந்த அனைத்துக் கொடிப் பூக்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது.

“ஒரு தீய குணத்தை அல்லது சில தீய குணத்தை ஆத்மார்த்தமாகப் பலியிடுபவர்களையே நாம் பார்த்திருக்கிறோம். இவன் என்னடான்னா….”

“தன்னையே முழுவதுமாகப் பலியிட்டவர் இவர் ஒருவர்தான்.”

“தன்னையே பலியிட்டுக்கொள்ளும் அளவுக்கு இவன் மனம் எப்படி ஒரு நொடியில் மாறியது?”

“ஒரு நொடியில் பக்குவப்பட முடியுமா?”

“இவன் மனிதன்தானா? இல்லை, சாபம் பெற்ற கந்தர்வனோ?”

“இவனுக்கு நாம்தான் சாப விமோசனம் தந்துவிட்டோமோ?”

“பலிபீடம் மூடிக்கொண்டதே! இனி நாம் யாரையும் கொண்டுவந்து பலியிடுமாறு கூறிப் பக்குவப்படுத்த முடியாதோ?”

“நாம் நம்மை விதைப்பவர்களைப் பக்குவப்படுத்த முடியாவிட்டால், நம்மால் எப்படிச் செழித்து வளரமுடியும்?”

“இவன் தன்னைப் பலியிட்டு, இந்தப் பலிபீடத்தைச் செயலற்றதாக மாற்றிவிட்டான்.”

“இவன் செய்த இந்தச் செயலால், நம் அனைவரின் வாழ்க்கையும் அழிந்துவிட்டது.”

“இவனின் தீய குணமே பிறரின் வாழ்க்கையை அழிப்பதுதானோ?”

“அந்த அளவுக்குத் தீமைக் குணம் நிறைந்தவனா இவன்?”

“இனி என்ன செய்யலாம்?”

“பலிபீடத்தை உடைத்து, இவனை மீட்கலாம்.”

“பலிபீடத்தை உடைப்பது பெரும் பாவம். அதை உடைக்க நினைப்பதே பெரிய தீக்குணம்தான்.”

“இப்போது என்ன செய்வது?”

“ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றும் செய்ய வேண்டாம். இவன் இங்கேயே உறைந்திருக்கட்டும். நாம் இங்கிருந்து கலைந்து செல்வோம்.”

இரவில் அம்மா எழுந்து வந்தார். விளக்கினை எரியச் செய்தார். தண்ணீரைப் பருகுவதற்காக அந்த டம்ளரை எடுத்தார். அதில் பாதி அளவுக்குத் தண்ணீர் இருந்தது. உள்ளே ஏதோ கிடப்பதைப் பார்த்துவிட்டார். விரல்களால் அதை எடுக்க முயன்றார்.

அந்த டம்ளருக்குள் இருந்த ஒன்பது விதைகளுள் ஒன்று மட்டும் உப்பி, மெல்லிய கோடாக வெடித்திருந்தது. அதனுள் இருக்கும் பருப்பு இளம்பச்சை நிறத்தில் வெளியே தெரிந்தது. அந்த விதைக்குள் இருந்தபடியே நான் என் அம்மாவைப் பார்த்தேன், நித்ய தூயோனாகி.

– – –

16 Replies to “பலிபீடம்”

    1. Sir, this story really makes our heart to feel-light and finally makes us to think about how good we are. Overall it has many textures, starting from information about seeds to how deep it enters into the subconscious mind and the communication of those creepers which has a scared intention of making the person good, who planted them on soil. Your ability in articulation the growth and communication of those creepers brings the realistic picture in front of us and makes us to stick to the story without any deviation.
      Thank you sir for such a good story with a different perception!

      1. தோழி ஆர். கல்பனா அவர்களுக்கு, வணக்கம். இந்தச் சிறுகதையில் வருவதுபோலவே ஒவ்வொருவரும் தன்னைச் சுயவிசாரணைக்கு உட்படுத்திக்கொண்டால், எல்லாமே சரியாகிவிடும். சுயதிருத்தமே நிலையான திருத்தம். இந்தப் பிரபஞ்சம் வேண்டுவதும் அதுவே. பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
        – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

    2. பேராசிரியர் உயர்திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுக்கு, வணக்கம். நனவுக்கும் தூக்கத்துக்கும் இடையிலான ஒரு நூலிழையில்தான் இந்தக் கதை உருப்பெறத் தொடங்கியது. பாரபட்சமற்ற சுய விசாரணையே இந்தக் கதையின் மையம். இந்தக் கதை உங்கள் மனத்தை ஈர்த்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  1. முனைவர் ப. சரவணன். எழுதிய பலிபீடம் கதை படித்தேன். ஒரு கட்டத்தில் அண்மையில் ஜெயமோகன் அவர் தளத்தில் வெளியிட்ட டார்த்தீனியம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆமையின் ஓடு நல்ல உவமை. புதைப்பதில் வேறுபாட்டை நன்கு எழுதி உள்ளார். இது ஒருவகை மாயாயதார்த்தவாதக் கதைதான். மனிதன் தாவரங்களைத் தன் விருப்பத்திற்கேற்பப் பலியிடுகிறான். அவை திரண்டெழுந்து அவனைப் பலியிட்டால் என்ன ஆகும் என்று கதை யோசிக்க வைக்கிறது. அம்மனிதனின் தீயகுணம் மற்றவற்றை அழிப்பதே என்பதைக் கதை உணர்த்துகிறது.

    1. பெருமதிப்பிற்குரிய கவிஞரும் எழுத்தாளரும் விமர்சகருமான உயர்திரு. வளவதுரையன் ஐயா அவர்களுக்கு, வணக்கம். தாவரங்களின் உலகத்தை ஒரு குறுக்குவெட்டாகக் காட்ட நினைத்தேன். அதைக் கதையாக்கம் செய்யும்போது அது தன்னொழுக்கத்தையும் சுயவிசாரணையையும் வலியுறுத்துவதாக அமைந்துவிட்டது. தங்களுக்கு இந்தக் கதை தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் ‘வெண்முரசு’ உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் டார்த்தீனியம் குறுநாவலை நினைவூட்டியமை குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன். ஆம்! ‘அவர் தொட்ட கதைத்தளத்தை நானும் என் கற்பனையின் விரல்களால் எட்டித் தொட்டுள்ளேன்’ என்பதே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  2. என்ன ஒரு கற்பனைத் திறன் , ஆஹா அருமை .
    தாவரங்களை நேசிப்பதை மறந்தே விட்டோமோ நாம்? என்ற ஒரு ஆழமான விதையை மனதில் விதைத்து விட்டார் முனைவர் ப. சரவணன்.
    பாகற்கொடி போன்று ரத்த நாளங்கள் நம் உடல் பற்றி நம்மை சுருக்கி நம் நிலை உணர்துவது போன்ற நிலை .

    இறந்தவர்களை, இறந்தவற்றைப் புதைப்பதுபோல அல்ல அது; ஓர் உயிரைப் புதைக்கும் செயல். புதைக்கப்பட்ட பின்னரும் உயிர்த்தெழும் சக்தி இந்த உலகில் விதைகளுக்கு மட்டுமே இருக்கிறது.

    என்ன ஒரு நிஜம்..

    பலிபீடத்தில் தீய எண்ணங்களை பலியிட்டு ,
    புத்துயிர் பெறும் நல்விதையானது மனது.

  3. மனிதனுடைய எண்ணங்களை அழகாக வடித்துள்ளீர்கள். சொல் என்னும் விதையில் பசுமையான தாவரம் எனும் கதையை எனும் கதையை எழுதி உள்ளீர்கள் . பாகற்கொடிக்கும் அம்மனிதனுக்கும் நடைபெறும் உரையாடல் அருமையான களம். மேலும் ஆத்மார்த்தமாக உனக்குள்…….. என்ற வரியும் மிகவும் சிறப்பு. அவன் பலிபீடத்தின் உள்ளே செல்வதும் அதன் பின் தாவரங்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதும் தங்களது அருமையான படைப்பின் உச்சக்கட்டம்.

    1. திரு. சபாபதி அவர்களுக்கு, வணக்கம். என்னுடைய இந்தக் கதையை ரசித்துப் படித்தமைக்கு நன்றி.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  4. நண்பர் உயர்திரு. க. ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு, வணக்கம். காலந்தோறும் தாவர உலகத்துக்கும் மனித இனத்துக்கும் ஒத்திசைவும் முரணும் இருந்துகொண்டே உள்ளன. அவற்றை அறிந்துகொள்ளவே முடியவில்லை. விஞ்ஞானி உயர்திரு. ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் ‘தாவரங்களுக்கும் சுயசிந்தனை உள்ளது’ என்பதைப் பல்வேறு கோணங்களில், பலவேறு காரணிகளை முன்வைத்து விளக்கிய பின்னரும் மனித இனம் அதை நம்புவதற்குத் தயங்குகிறது. இந்தக் கதை தாவர உலகத்தை ஏறத்தாழ மனித இனத்துக்கு இணையானதாக நிறுவ முயல்கிறது. ‘நமக்கு ஒன்றைப் பற்றித் தெரியவில்லை என்பதற்காக, அது இல்லை என்று ஆகிவிடாது’ என்பதே என் கணிப்பு. அதை மனத்தில் நிறுத்தியே இக்கதையினை எழுதினேன். ‘இனிப்புக் கட்டியை எந்தப் பக்கத்திலிருந்து கடித்தாலும் அது இனிப்பையே தரும் என்பது போல’ இந்தக் கதையைத் தாங்கள் பல்வேறு கோணத்தில் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. தங்களுக்கு அது இனிப்பையே தந்திருக்கும் என்று நம்புகிறேன். தங்களைப் போன்ற தெளிவான வாசகர்கள், தொடர்ந்து பல எழுத்தாளர்களின் நல்ல கதைகளுக்கு விரிவான விமர்சனங்களை எழுத வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.
    – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  5. வணக்கம். இந்தக் கதையில் தாவரங்கள் கதாப்பாத்திரங்களாக வலம் வருவது மிக அருமை. அவன் எதைப் பலியிட வேண்டும் .எதனால் பலியிட வேண்டும் என்று நடைபெறும் உரையாடல்களை வாசித்த பின் வியப்பில் ஆழ்ந்து விட்டேன். இறுதியில் அவன் புரிந்த நிகழ்வில் நானும் தாவரங்களின் அருகில் இருப்பது போன்று உணர்ந்தேன். மனித மனம் எத்தகையது என்பதை உணரச் செய்த விதமும் அருமை. தாங்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தில் இருப்பது பாராட்டுதலுக்கு உரியதாகும்.

  6. தங்களுடைய பலிபீடம் வாசிக்கும் போது என்னைத் தாவரமாக நினைத்து அதன் உள்ளே சென்று விட்டேன் . இக்கதை பல நாட்களாக என் மனதிற்குள் சுழன்று கொண்டே இருந்தது. மனிதனின் மன எண்ணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள் .பெரும்பாலும் தன்னை உயர்ந்த பிறவியாகக் காட்டிக் கொள்ளவே முற்படுகிறான். இதில் அவன் எதைப் பலியிட வேண்டும் .எதற்காகப் பலியிட வேண்டும் என்று கூறி உள்ளீர்கள் . இறுதியில் அவன் செய்த செயல் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது . அருமையான படைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    1. திருமதி. பிரியா நடராஜன் அவர்களுக்கு, வணக்கம். என்னுடைய எல்லாக் கதைகளையும் தொடர்ந்து படித்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  7. நீயே ஆத்மார்த்தமாக உனக்குள் இருக்கும் தீய குணங்களை ஒவ்வொரு நாளும் பலியிட்டுக் கொள்ளவேண்டும்” என்றது.

    அருமையான வரிகள்.நம்மை நாமே புடம் போட நம்மில் இருக்கும் தீய குணங்களை களையக் களைய நற்குணங்கள் வெளிப்படும்.பலிபீடம் அருமையான கருத்தை பாகல் கொடி மூலம் வழங்கி உள்ளது.முனைவருக்கு நன்றி.

    1. உயர்திரு. ஜனார்த்தனம் அவர்களுக்கு, வணக்கம்.
      ஒவ்வொரு விடியலிலும் நாம் புதிதாகவே பிறக்கிறோம். ஆனால், நம்மில் தேங்கியுள்ள அழுக்குகளைச் சுமந்தபடியேதான் அந்தப் புதிய விடியலை எதிர்கொள்கிறோம். மனிதனுக்கு எல்லாவற்றையும் ஏற்றிக்கொள்ள மனமிருக்கிறது. ஆனால், அவனுக்குத் தன்னிலிருந்து எதையும் இறக்கிவைக்க மனம் வருவதேயில்லை.
      தன்னுள் தான் ஒவ்வொருநாளும் ஏற்றிக்கொள்பவற்றுள் எது விஷம் எது அமுது என்பதைப் பிரித்தறிவதற்குள் மறுநாள் விடிந்துவிடுகிறது. மிகக்குறுகிய அந்தப் பொழுதில் தன்னுள் ஏற்றிக்கொண்டவற்றைப் பகுத்தாய்ந்து இறக்கிவைக்க வேண்டியவற்றை இறக்கிவைக்கவும் தன்னுள்ளே நிலைநிறுத்திக் கொள்ளவேண்டியவற்றை வாழ்நாள் முழுவதும் இறுக்கிப்பிடித்துக் கொள்பவனுமே உண்மையில் வாழ்கிறான். மற்றவர்கள் வாழ்வதுபோல நடித்து ஒவ்வொரு விடியலையம் தோற்போம் எனத் தெரிந்தே வாளேந்தும் வேந்தர்களைப் போலவே சுமைகளுடன் எதிர்கொள்கிறார்கள்.
      நன்றி.
      தங்கள்
      சரவணன், மதுரை.

Leave a Reply to R.KalpanaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.