மரப்படிகள்

-1-

மதியச் சாப்பாட்டுக்காக நான் வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா என்னிடம் எரிச்சலுடன், “டேய்! முருகேஸ்வரியோட மூணாவது மகன் பேசினான்டா. அந்த அரண்மனை வீட்டை ஏதாவது ஒரு தொகையைக் கொடுத்துட்டு எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டான்டா. சாவியை நம்ம கிராமத்து மணியக்கார் வீட்டுலதான் கொடுத்து வச்சிருக்கானாம். அவர் கிட்டையும் சொல்லிட்டானாம். நேர்ல போயி ஆக வேண்டியதைப் பார்ப்பியாம்” என்றார்.

என் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்துவிட்டது. சாப்பிடாமலேயே வயிறு நிறைந்துவிட்டது போலத்தான் இருந்தது. ஆனாலும், சாப்பிட அமர்ந்தேன். அம்மாவுக்கு அவன்மீது தாங்கமுடியாத சினம் இருந்தது. எனக்குச் சாப்பாட்டை எடுத்துவைத்துக்கொண்டே அம்மா தொடர்ந்து பேசினார்.

“டேய்! அவன் போன வருஷமே அந்த வீட்டை நமக்குக் கொடுத்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். நாமளும் எத்தனை வருஷமா அந்தப் பூட்டிக் கிடந்த வீட்டை ரெண்டு மடங்கு விலைக்குக் கேட்டுக்கிட்டே இருந்தோம். இப்பப் பாரு, இடி விழுந்து நெருங்கிப் போச்சு. இப்பப் போயி, ‘ஏதாவது கொடுத்துட்டு அந்த வீட்டைப் பிரிச்சு, ஏதாவது பண்ணிக்கோங்க’னு சொல்றான். முட்டாப் பயல்” என்றார் அம்மா ஏளனமாக.

எப்போதுமே அம்மாவின் கோபங்கள் நியாயமானதாகவே இருக்கும். பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்த வீட்டை, கேட்பாரற்றுக் கிடந்த அந்த வீட்டை, யாரும் விலைக்கு வாங்கத் தயங்கிய நிலையில், நாங்கள் இரு மடங்கு விலைக்குக் கேட்டும் அவர்கள் அதை எங்களுக்குக் கொடுக்கத் தயங்கினர். 

அந்த வீட்டின் ‘அல்லி ராணி’ முருகேஸ்வரி அண்ணி கடந்த மாதம்தான் அமெரிக்காவில் காலமானார். அதுவரை அந்த வீட்டின் மீதான உரிமையைத் தன்னுடனேயே வைத்திருந்தார். அந்த வீடு இருக்கும் வரைதானே அவர் தன்னுடைய ‘அரண்மனைக்காரி’ என்ற பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்! 

அந்தப் ‘பட்டம்’ அவரின் அம்மாவுக்குப் பின்னர் அவரைத் தொடர்ந்து வரும் ‘கௌரவப் பட்டம்’ அல்லவா? அவரிடம் இருக்கும் சொத்து மதிப்பில் ஆகக் குறைந்த மதிப்புடைய ஒரே சொத்து இதுதான். ஆனால், அந்தச் சொத்து இருந்தால்தான் அவர் தன்னை ‘அரண்மனைக்காரி’ என்று அந்தக் கிராமத்துக்குள் நிலைநாட்டிக் கொள்ள முடியும். 

அதனாலேயே முருகேஸ்வரி அண்ணி அந்த வீட்டைத் தன் பங்கிலேயே வைத்திருந்தார். ‘தனக்குப் பிறகு அது தன்னுடைய மூன்றாவது மகனுக்குத்தான் சேர வேண்டும்’ என்று உயில் எழுதியிருந்தார். காரணம், அவருடைய மூன்றாவது மகன் மட்டும்தான் தமிழ்நாட்டில் வாழ்கிறார்.

‘அந்த வீட்டை எப்படியாவது வாங்கிவிட்டால், ‘அதில் குடியேறி அந்த ‘அரண்மனைக்காரி’ என்ற பட்டத்தைத் தனதாக்கிக் கொள்ளலாமே!’ என்ற திட்டத்தில்தான் என் அம்மா, முருகேஸ்வரி அண்ணியின் மூன்றாவது மகனிடம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கும்போது, அம்மா அவனிடம் சொல்லும் இறுதி வாக்கியம், “சீக்கிரம் நல்ல முடிவுக்கு வாப்பா. அந்த அரண்மனைவீட்டை எங்களுக்கே கொடுத்துடு” என்பதாகத்தான் இருக்கும்.

-2-

பள்ளிகளுக்குக் கோடைக்கால விடுமுறை தொடங்கிவிட்டால், அப்பா என்னையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு தான் பிறந்து, வளர்ந்த கிராமத்தில் உள்ள குடிசைவீட்டுக்குச் செல்வார். அங்குதான் என் பெரியத்தையின் அரண்மனைவீடு இருக்கிறது. 

என் அப்பாவின் உறவினர் வழியில் வயதில் மூத்தவரின் ஒரே மகன்தான் பெரியத்தையைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் வழிவழியாகவே பெரும் பணக்காரர்கள். அந்தக் கிராமத்தில் பெரிய தலைக்கட்டு. என் அப்பாவின் குடும்பம் ஏழ்மையானது எனத் தெரிந்தும்தான் பெரியத்தையைத் தன் வீட்டு மருமகளாக்கிக் கொண்டனர். அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. பெரியத்தை மிகுந்த பொறுப்புடையவர் என்பதே! 

பெரிய அத்தைக்குத் திருமணமானபோது அவர் தன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளியிருந்த அது அரண்மனைவீட்டுக்குக் குடிபெயர்ந்தார். அது பெரிய அத்தையின் கணவரின் மூதாதயரின் பாரம்பரிய அரண்மனைவீடு. அந்த அரண்மனைவீட்டில்தான் பெரியத்தையைத் தனிக்குடித்தனம் வைத்தனர்.  

‘அரண்மனை’ என்றவுடன் அது என்னமோ ராஜா-ராணி காலத்து அரண்மனை என்று நினைத்துவிடாதீர்கள்!. அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரேயொரு பெரியவீடு அது. ஓரடுக்குமாடியை உடைய வீடு. அதன் நிலைக்கதவுகள் மிகப் பெரியவை. வீட்டுக்கு முன்பாக இரண்டு பெரிய தூண்கள் இருக்கும். சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தார் அந்த வீடு ஓர் அரண்மனை போலவே இருக்கும். அதனால் அந்தக் கிராமத்து மக்கள் அந்த வீட்டை ‘அரண்மனைவீடு’ என்றுதான் அடையாளங்கூறினர்.  

திருமணத்திற்கு முன்னர் குடிசைவீட்டில் வாழ்ந்துவந்த பெரிய அத்தை திருமணத்திற்குப் பின்னர் அந்த அரண்மனை வீட்டில் குடியேறியவுடன் அவருக்குப் பெருமை கூடிவிட்டது. அவரை அவரே சற்று நிமிர்ந்துதான் பார்த்துக்கொண்டார். கிராமத்துக்காரர்கள் பெரிய அத்தையைப் பெயர் கூறி அழைப்பதைக் கைவிட்டு, பெரியவ என்றும் பெரிய அத்தை இல்லாதபோது ‘அரண்மனைக்காரி’ என்றும் குறிப்பிடத் தொடங்கினர். 

நாங்கள் கிராமத்துக்குச் செல்லும்போது பெரும்பாலும் நாங்கள் பெரிய அத்தையின் அரண்மனை வீட்டில்தான் தங்குவோம். என் நினைவில் முதன்முதலாகப் பதிந்தது அந்த அரண்மனை வீட்டில் இருந்து மரப்படிகள்தான். 

ஹாலில் இருந்து முதற்தளத்துக்குச் செல்வதற்காக, அந்தக் காலத்தில் பர்மாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேக்கு மரங்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய மரப்படிகளைக் கொண்ட மாடிப்படிகள் அவை. நான் அப்போது சிறுவன். என்னால் அந்தப் படிகளில் நிமிர்ந்த நிலையில் ஏறிச் செல்ல முடியாது. நான் என்னுடைய இரண்டு கைகளையும் கால்களையும் ஊன்றி நாய்போலத்தான் படிகளில் ஏறிச் செல்வேன். ஒவ்வொரு படியிலும் என்னுடைய இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றிய பின்னர்தான் என்னால் அடுத்த படிக்கே செல்ல முடியும். 

பத்துப் படிகள் ஏறிவுடன் நான் களைத்துவிடுவேன். உடனே, நான் படிகளில் அமர்ந்து கொள்வேன். ஒவ்வொரு படியிலும் மரத்தூண்கள் வழவழப்பாக இருக்கும். அவற்றின் உச்சியில் பெரியவர்கள் தடுமாறிவிடாமல் இருப்பதற்காகத் தங்களின் கைகளால் பற்றிப் பிடித்துச் செல்வதற்காக மரத்தாலான பற்றுக்கோடு இருக்கும். 

அது மலைப்பாம்புபோல மேலிருந்து கீழ்வரை வளைந்து, நெளிந்து இறங்கிவந்து, அரைவட்டமாகச் சுழன்று இருக்கும். அந்த மலைப்பாம்பினைத்தான் ஒவ்வொரு படியிலிருந்தும் செங்குத்தாக இருக்கும் மரத்தூண்கள் தாங்கியபடி இருக்கும். என்னால் அந்த மலைப்பாம்பினைத் தொடக்கூட முடியாது. அது என்னைவிட உயரத்தில் இருந்தது. 

மெல்ல மெல்ல படிகளில் ஏறி முதல் தளத்திற்குச் சென்றால், மிகப் பெரிய ஹால் இருக்கும். அதன் தூரத்து மூலையில் பெரிய மரக்கட்டில் இருக்கும். அந்தக் கட்டிலில் வெள்ளை நிறத்தில் கொசுவலை எப்போதுமே கட்டப்பட்டிருக்கும். அந்தக் கொசுவலைக்குள் அகப்பட்ட பெரிய கொசுவாக முருகேஸ்வரி அண்ணி இருப்பார். 

நான் பார்க்கும் போதெல்லாம் பெரும்பாலும் அவர் தூங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். சில நேரங்களில் சாய்ந்து படுத்திருப்பார். சில சமயங்களில் சாய்ந்து உட்கார்ந்திருப்பார். நான் வருவதைப் பார்த்ததும் “வா தம்பி!” என்பார். என்னைவிட அவர் வயதில் மிகவும் மூத்தவர். என்னைப் பார்த்த பின்னர்தான் நாங்கள் குடும்பத்துடன் அவர்களின் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற தகவலே அவருக்குத் தெரியும். கொசுவலையை விலக்கிக்கொண்டு எழுவார். 

தன்னுடைய பட்டுப் பாவாடையைச் சிறிது உயர்த்தி, சிவந்த பாதத்தை மிகவும் மெதுவாகத் தரையில் ஊன்றி ஊன்றி நடக்கப் பழகும் குழந்தைபோலத் தள்ளாடி தள்ளாடி நடந்து என்னை நோக்கி வருவார். ‘தண்ணீர் படர்ந்த தரையில் வழுக்கி விழுந்துவிடக் கூடாதே!’ கவனத்தோடு நடக்கும் ஒரு கிழவிபோல அவரின் நடை இருக்கும். 

என்னுடைய வலது கையைப் பிடித்துக்கொண்டு மரப்படிகளில் இறங்கத் தொடங்குவார். நான் அவரின் கைகளில் தொங்கியபடியே மரப்படிகளில் என் கால்களைத் தேய்த்து தேய்த்து இறங்குவேன். அவரின் பாதம் மரப்படிகளில் மெல்ல மெல்ல ஊன்றி ஊன்றி மேலெழும். அவரின் காலில் உள்ள ஐம்பொன் கொலுசு மெல்ல மெல்லச் சிணுங்கும். 

இறுதிப் படிக்கு வந்ததும் “வாங்க மாமா! வாங்க அத்தை!” என்று என் அப்பாவையும் அம்மாவையும் அழைப்பார். என்னை அவர்களிடம் விட்டுவிட்டு, மெல்ல திரும்பி, மரப்படிகளை நோக்கிச் செல்வார். ஆறு படிகளில் மெல்ல ஏறி, ஏழாவது படியில் அமர்ந்துகொண்டு, எட்டாவது படிக்கும் ஏழாவது படிக்கும் இடைப்பட்ட தூண்களின் இடைவெளியில் தன் தலையை நீட்டியபடி எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். 

நாங்கள் பெரிய அத்தையின் இந்த அரண்மனை வீட்டில் மூன்று நாள்கள் மட்டுமே தங்குவோம். மற்றபடி கோடை விடுமுறை முடியும்வரை என் அப்பாவின் மூதாதயரின் குடிசை வீட்டில்தான் தங்குவோம். நாங்கள் அங்கிருக்கும் அந்த மூன்று நாள்களிலும் நான் பார்க்கும் போதெல்லாம் முருகேஸ்வரி அண்ணி அந்த ஏழாவது மரப்படியில்தான் உட்கார்ந்திருப்பார். 

நான் மெல்ல மெல்ல மரப்படிகளில் ஏறி, ஆறாவது படிக்குச் செல்வேன். அவர் என் தலையை வருடுவார். நான் அவரைக் கடந்து ஏழாவது, எட்டாவது படிக்குச் செல்ல முயலும்போது என் தொடையில் மெல்லக் கிள்ளி, என்னைத் தடுப்பார். ‘எனக்கு மாடிக்குச் செல்ல வேண்டும்’ என்று ஆசை ஆசையாக இருக்கும். ஆனால், முருகேஸ்வரி அண்ணி என் தொடையில் கிள்ளி என் ஆசையைக் கலைத்துவிடுவார். 

மூன்றாம் நாள் நாங்கள் அங்கிருந்து புறப்படும்போது, பெரியத்தையிடம் நான், “அத்தை! அத்தை! எனக்குப் பணியாரம் செஞ்சுகொடுங்க” என்று கேட்டேன். 

பெரியத்தை, என் தலையைத் தொட்டு, “நீ அடுத்த முறை லீவுக்கு இங்க வரும்போது அத்தை செஞ்சு தாரேன்!” என்றார் சிரித்துக்கொண்டே. இப்படித்தான் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் நான் பெரியத்தையின் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் நான், ‘பெரிய அத்தையிடம் பணியாரம் கேட்க வேண்டும்’ என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், அரண்மனை வீட்டுக்குச் சென்றவுடன் எனக்கு அது மறந்துவிடும். 

அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்து, பின்னர் என் அப்பாவின் குடிசை வீட்டுக்குச் செல்லும்போதுதான் எனக்குப் பணியாரம் நினைவுக்கு வரும். நான் பெரிய அத்தையிடம் “அத்தை! அத்தை! எனக்குப் பணியாரம் செஞ்சுகொடுங்க” என்று கேட்பேன். பெரியத்தை, என் தலையைத் தொட்டு, “நீ அடுத்த முறை லீவுக்கு இங்க வரும்போது அத்தை செஞ்சு தாரேன்!” என்பார் சிரித்துக்கொண்டே.

நான் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் அங்குச் செல்லும்போதெல்லாம் முருகேஸ்வரி அண்ணி வளர்ந்துகொண்டே இருந்தார். ஒருமுறை தன் அக்காவிடமிருந்து ‘தந்தி’ வந்திருப்பதாக அப்பா தெரிவித்தார்.  “முருகேஸ்வரிக்குச் ‘சடங்கு. நாளைக்கே ஊருக்குப் போகணும்” என்றார் அப்பா. 

நாங்கள் மூவரும் கடைக்குச் சென்று முருகேஸ்வரி அண்ணிக்குப் பட்டுத் துணிகள் வாங்கினோம். பாத்திரங்கள், பழங்கள் வாங்கினோம். விடியற்காலையில் புறப்பட்டு நாங்கள் அரண்மனை வீட்டுக்குச் சென்றபோது, அங்குக் கூட்டம் கூடியிருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் என் அப்பாவுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். 

எனக்கு வியப்பாக இருந்தது. எத்தனையோ முறை இந்த வீட்டுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். ஆனால், ஒருமுறைகூட இப்படி இவர்கள் என் அப்பாவையும் அம்மாவையும் “வாங்க! வாங்க!” என்று வாய்நிறைய அழைத்ததே இல்லை. ‘ஒருவேளை நாங்கள் இங்கு வரும்போதெல்லாம் இப்போது போலவே துணிகள், பாத்திரங்கள், பழங்கள் வாங்கி வந்தால்தான் இவர்கள் எங்களை இப்படி விழுந்து விழுந்து வரவேற்பார்களோ!’ என்றும் நான் சிந்தித்தேன்.  

அன்று காலை முழுவதும் நாங்கள் ஹாலில் விரிக்கப்பட்ட சமுக்காளத்தில்தான் அமர்ந்திருந்தோம். மாடிக்கோ, மாடிப் படியின் அருகிலோ செல்ல என்னை யாரும் அனுமதிக்கவில்லை. மதிய உணவை வெளியில் இருந்த வெற்று இடத்தில் கல்லமைத்துச் சமைத்தனர். ஹாலில்தான் பரிமாறினர். 

அதன் பின்னரும் நாங்கள் அந்த இடத்தில்தான் அமர்ந்திருந்தோம். அன்று மாலையில் முருகேஸ்வரி அண்ணி பாவாடை சட்டையிலிருந்து பட்டுத் தாவணிக்கு மாறிவிட்டார். கூட்டம் இன்னும் கூடியிருந்தது. டவுணிலிருந்து புகைப்படம் எடுக்க ஆட்கள் வந்திருந்தனர். 

எங்கள் குடும்பத்தினரை முருகேஸ்வரி அண்ணியோடு சேர்ந்து நிற்கவைத்துப் புகைப்படம் எடுத்தனர். முருகேஸ்வரி அண்ணியை விதவிதமாக அலங்கரித்தனர். அன்று இரவு அந்த ஹாலிலேயே நாங்கள் படுத்திருந்தோம் மறுநாள் அதிகாலைப் பேருந்தைப் பிடித்து நாங்கள் தூங்கிக்கொண்டே ஊர்வந்து சேர்ந்தோம். 

அந்த ஆண்டின் கோடை விடுமுறையிலும் நாங்கள் அரண்மனை வீட்டுக்குச் சென்றோம். அன்றும் முருகேஸ்வரி அண்ணி பட்டுத் தாவணிதான் அணிந்திருந்தார். கால்களில் மருதாணிச் சிவப்பு ரத்தச் சிவப்பில் மின்னியது. நான் மரப்படிகளில் ஏழாவது படிகளைக் கடக்கும்போது, அவர் என் தொடையில் வலுவாகக் கிள்ளினார். 

நான் அவரின் கையை விலக்கிக் கொண்டு எட்டாவது மரப்படிக்குக் கால்வைக்கும் போது, என் கணுக்காலைப் பிடித்துக் கொள்வார். அவரின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் நான் ஏழாவது படியிலேயே உட்கார்ந்து விடுவேன். 

அவரின் மீது சாய்ந்துகொண்டு, “அண்ணீ! அண்ணீ! நான் மாடிக்குப் போகணும் அண்ணீ!” என்று கெஞ்சுவேன். 

“நான் மாடிக்குப் போறப்ப உன்னையும் கூட்டிக்கிட்டுப் போறேன். சரியா?” என்று கேட்பார் அண்ணி. 

நான் வேறு வழியின்றிச் “சரி” என்பேன். 

உடனே, அண்ணி, என் கன்னத்தைக் கிள்ளியபடியே “என் செல்லம்” என்று என்னைக் கொஞ்சுவார். ஆனால், நான் ஹாலிலேயே ஓடி, ஆடி, விளையாடி, களைத்துத் தூங்கிய பின்னர்தான் அவர் அந்த ஏழாவது படியைவிட்டு எழுவார். 

அடுத்தடுத்த கோடை விடுமுறையில் நாங்கள் எந்த ஊருக்கும் செல்லவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘தந்தி’ வந்தது. முருகேஸ்வரி அண்ணிக்குத் திருமண உறுதி செய்தார்கள். வழக்கமாக நாங்கள் செல்லும் பேருந்து அன்று வரவில்லை. மூன்று மணி நேரம் நாங்கள் தாமதமாகத்தான் சென்றோம். 

நாங்கள் அரண்மனை வீட்டுக்குள் நுழைந்தபோது ஹாலில் மாப்பிள்ளை வீட்டார்கள் அமர்ந்திருந்தனர். என் அப்பாவை அவர்கள் அழைத்துச் சென்று  ஹாலில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமர வைத்தார்கள். அம்மா பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்துகொண்டார். நான் என் அப்பாவின் அருகில்சென்று ஒடுங்கி அமர்ந்துகொண்டேன். 

சிறிது நேரத்திற்குப் பின்னர், இரண்டு பெண்கள் முருகேஸ்வரி அண்ணியை அணைத்துப் பிடித்தபடி மாடியிலிருந்து மரப்படிகளில் இறங்கச் செய்தனர். அண்ணி பச்சை நிறத்தில் பட்டுப் புடவை அணிந்திருந்தார். கழுத்து நிறைய வைர நகைகள். கைகளில் விதவிதமான வளையல்கள், கைவிரல்களில் நெளிந்தும் வளைந்தும் பலவித வடிவில் இருந்த மோதிரங்கள். 

அண்ணி மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வந்தார். காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தார். மாப்பிள்ளை ஒரு வயர்சேரில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். அவரிடமிருந்து சற்று தள்ளி பிரம்புச்சேரில் அண்ணியை உட்கார வைத்திருந்தனர். எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. நான் எழுந்து அம்மாவின் அருகில் சென்று, அம்மாவின் தோள்மீது சாய்ந்து தூங்கத் தொடங்கினேன்.

அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாங்கள் மீண்டும் இங்கு வந்தோம். முருகேஸ்வரி அண்ணிக்குத் திருமணம். தெரு முழுக்கப் பந்தல் அமைத்திருந்தனர். ஒவ்வொரு தெரு விளக்குக்கும் ஒரு குழாய் ஒலிபெருக்கியைக் கட்டியிருந்தனர். அவற்றின் வழியாக எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலிருந்து காதல் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அதை அந்தக் கிராமமே ரசித்துக் கொண்டிருந்தது. அரண்மனை வீட்டை மிக அழகாக மாற்றியிருந்தார்கள். இரவில் அந்த வீடு முழுவதும் வண்ண விளக்குகளைப் பொருத்தியிருந்தார்கள். வீட்டுக்கு வெளியே கல்லடுப்புப் போட்டு சமையல் நடந்துகொண்டிருந்தது. பாயசத்துக்காக முந்திரிப்பருப்பை நெய்யில் வறுக்கும் மணம் தெரு முழுவதும் கமழ்ந்தது.

அரண்மனை வீட்டுக்குள் உறவினர் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்த சில வீடுகளிலும் உறவினர்களைத் தங்க வைத்திருந்தனர். அரண்மனை வீட்டின் ஹாலில்தான் திருமணம். என்னைப் போன்ற சிறுவர்கள் மரப்படிகளில் அமர்ந்த படியே திருமணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நானும் ஓடிச்சென்று அவர்களுடன் சேர்ந்து மரப்படியில் அமர்ந்தேன். எனக்கு ஆறாவது மரப்படிதான் கிடைத்தது. இந்த முறையும் என்னால் ஏழாவது மரப்படியைக் கடக்க முடியவில்லை. 

டவுனிலிருந்து புகைப்படக் கலைஞரும் வீடியோ எடுப்பவரும் வந்திருந்தனர். எங்கள் கிராமத்தில் எடுக்கப்படும் முதல் வீடியோ இதுதான். வீடியோக்காரர் மரப்படியில் கொலு பொம்மைகள்போல உட்கார்ந்து, தொங்கிக் கொண்டிருந்த எங்களையும் ஒருமுறை பதிவுசெய்தார்.

மாலையில் உறவினர் கூட்டம் கலையத் தொடங்கியது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் ஹாலைச் சுத்தம் செய்துவிட்டு, சமுக்காளத்தை விரித்து அமர்ந்திருந்தோம். முருகேஸ்வரி அண்ணியும் மாப்பிள்ளையும் மற்றவர்களும் தரைத்தளத்தில் இருந்த வெவ்வேறு அறைகளில் அமர்ந்திருந்தனர். என் அப்பாவும் அவரின் நண்பரும் மாடிக்குச் சென்றனர். நானும் அவர்களின் பின்னாலேயே மாடிக்குச் சென்றேன். 

ஏழாவது படியைக் கடந்து ஏறும்போது எனக்குள் மகிழ்ச்சி பொங்கியது. அவர்கள் அந்த மாடியில் இருந்த முருகேஸ்வரி அண்ணியின் கட்டிலைப் பூத்தோரணங்களால் அலங்கரித்தனர். அந்த அறை முழுக்கவும் பூவாசம் கமழத் தொடங்கியது. பின்னர் அவர்கள் இறங்கி வந்தனர். நான் மட்டும் இறங்காமல், மாடிப்படியின் மேலே உள்ள முதற்படியில் அமர்ந்துகொண்டேன். அங்கிருந்து பார்த்தால் ஹாலில் நடப்பவற்றை எல்லாம் பார்த்துவிட முடியும். 

மதியச் சாப்பாடே எனக்கு இன்னும் ஜீரணமாகவில்லை. அதனால், ‘இரவில் சாப்பிடாமலேயே இருந்துவிடலாம்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹாலில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. அம்மா என்னைத் தேடினார். எப்பவுமே நான் அம்மாவின் அருகில் அமர்ந்துதான் சாப்பிடுவேன். நான் சாப்பிடாமல் அம்மா சாப்பிடவே மாட்டார். 

அம்மா என்னைத் தேடிக்கொண்டே தற்செயலாக நிமிர்ந்து மாடிப்படியைப் பார்த்தார். என்னைப் பார்த்ததும், “சப்தமாக! யாருக்கடா காவல் காக்குற? கீழ இறங்குடா. இனி, நீ பொழுது விடியுறவரைக்கும் மாடிக்குப் போகக் கூடாது” என்றார் அம்மா கறாராக. 

மனசே இல்லாமல்தான் நான் அந்த மரப்படிகளில் இறங்கினேன். நான் ஏழாவது படியில் நின்றுகொண்டு அம்மாவைப் பார்த்து, “ஏம்மா, நான் போகக்கூடாது?. ஏம்மா, பொழுது விடியுற வரைக்கும் நான் மாடிக்குப் போகக்கூடாது?” என்று நான் திரும்ப திரும்ப அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அம்மா பதிலே சொல்லவில்லை. ஆனால், என்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே இருந்தார். 

நான் ஒவ்வொரு படியாக மெல்ல மெல்ல இறங்கி, அம்மாவின் அருகில் வந்தேன். அம்மா சற்றுக் குனிந்து, மெல்லிய குரலில் என்னிடம் “இந்தக் கேள்வியை உன்னோட அண்ணிக்கிட்ட கேளு” என்றார். நான் “சரிம்மா” என்று கூறிவிட்டு, முருகேஸ்வரி அண்ணியைப் பார்க்கச் சென்றேன்.

ஓர் அறையில் முருகேஸ்வரி அண்ணியும் மாப்பிள்ளையும் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். அந்த அறையில் பலரும் அமர இடம் இருந்தது. ஆனால், அவர்கள் மட்டும் கூட்ட நெரிசலில் பேருந்தில் அமர்ந்திருப்பதைப் போல ஒருவரையொருவர் நெருக்கியடித்தபடித்தான் அமர்ந்திருந்தனர். அந்த அறையில் மாப்பிள்ளையின் அக்காவும் முருகேஸ்வரி அண்ணியின் பெரியம்மாவும் பெரியப்பாவும் அமர்ந்திருந்தனர்.

நான் முருகேஸ்வரி அண்ணியின் முன் நின்றுகொண்டு, உரத்த குரலில் எங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க, ‘நீ பொழுது விடியுறவரைக்கும் மாடிக்குப் போகக் கூடாது’ன்னு. ‘ஏன்?’னு நான் கேட்டேன். ‘அதை உன்னோட அண்ணிகிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ’ணு அம்மா சொன்னாங்க. சொல்லுங்கண்ணி! நான் ஏன் …” என்று கேட்பதற்குள் முருகேஸ்வரி அண்ணி ‘க்ளுக்’ என்று சிரித்துவிட்டு, தன் வாயை வலது கையால் மூடிக்கொண்டார்.

மாப்பிள்ளை மிகவும் வெட்கப்பட்டார். தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார். மாப்பிள்ளையின் அக்காவுக்கு முகம் கோணிக்கொண்டது. அவர் முருகேஸ்வரி அண்ணியின் பெரியம்மாவைப் பார்த்து, “உங்க வீட்டாளுகளுக்கு இங்கீதமே தெரியாதா?” என்று சினத்துடன் கேட்டார். எல்லோரும் என்னையே முறைத்துப் பார்த்தார்கள். 

அவர் ‘இங்கீதம்’ என்று கூறியது எனக்குச் ‘சங்கீதம்’ என்று கேட்டது. நான் மாப்பிள்ளையின் அக்காவைப் பார்த்து பார்த்து, “எங்களுக்கு யாருக்குமே அது தெரியாதே! உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்குச் சொல்லிக் குடுங்களேன்” என்றேன். மாப்பிள்ளை ‘க்ளுக்’ என்று சிரித்துவிட்டு, தன் வாயை இடது கையால் மூடிக்கொண்டார். உடனே, முருகேஸ்வரி அண்ணி என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். உடனே, முருகேஸ்வரி அண்ணியின் பெரியப்பா எழுந்து அறைக்கு வெளியே சென்றுவிட்டார். 

நான் என் வலதுகையை இடது கன்னத்தின்மீது வைத்துக்கொண்டு அழுதபடியே, “எனக்குச் சங்கீதம்ணா ரொம்பப் பிடிக்கும். அதான் கேட்டேன்” என்றேன். நான் கூறியதை அங்கிருந்தவர்கள் யாரும் தங்களின் காதுகளில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. நான் வெளியே வந்துவிட்டேன். வாசலுக்குச் சென்று என் நண்பர்களுடன் விளையாடத் தொடங்கினேன். 

சற்று நேரத்துக்குப் பின்னர் அம்மா என் பின்னாலிருந்து என் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். என்னை ஓங்கி அறைந்தார். அவரும் அழுதுகொண்டுதான் இருந்தார். அம்மா ஏன் அழுகிறார்? அவர் என்னை ஏன் அறைந்தார்? என்று எனக்குப் புரியவில்லை. அப்பா முன்னே நடக்க, நாங்கள் இருவரும் அவரின் பின்னாலேயே நடந்து குடிசை வீட்டுக்குச் சென்றோம். மறுநாள் முதல் பேருந்தில் ஏறி ஊருக்குச் சென்றோம். 

அதன் பின்னர் நாங்கள் இரண்டு கோடைக்கால விடுமுறைகளுக்குப் பின்னர்தான் அரண்மனை வீட்டுக்குச் சென்றோம். ஹாலில் துணித்தொட்டில் தொங்கியது.  அருகில் இருந்த பெரிய மரக்கட்டிலில் அமர்ந்திருந்த முருகேஸ்வரி அண்ணியின் மடியில் ஒரு குழந்தை கால்களையும் கைகளையும் ஆட்டிக்கொண்டு இருந்தது.

-3-

என்னுடைய கார் கிராமத்துக்குள் நுழைந்து, மணியக்காரரின் வீட்டுவாசல் நின்றது. நானும் அம்மாவும் இறங்கினோம். மணியக்காரர் சுவர்களைப் பிடித்துப் பிடித்து தள்ளாடியபடியே நடந்து வந்து, எங்களை வரவேற்றார். மணியக்காரரின் பேத்தி எங்களுக்கு மோர் கொடுத்தார். பருகினோம். அவர் அந்த அரண்மனை வீட்டின் சாவியை எடுத்து அம்மாவிடம் கொடுத்தார். சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த அந்த வெங்கலச் சாவியை அம்மா ஒரு குழந்தையை ஏந்துவதுபோல தன்னிரு கைகளிலும் வைத்துக்கொண்டார். 

நானும் அம்மாவும் நடந்தே அரண்மனை வீடு வரை வந்தோம். இடிவிழுந்த அரண்மனை வீடு நிலைகுலைந்து கிடந்தது. அதன் முதற்தளம் பாதி சரிந்தும் பக்கச் சுவர்கள் சரிந்தும் கிடந்தன. அம்மா அரண்மனை வீட்டின் முன்பு நின்றபடி அதிர்ந்து நின்றிருந்தார். தலைவாசல் நிலைக்கதவு பின்னோக்கிச் சரிந்துகிடந்தது. அந்தச் சாவிக்கு இனி வேலையே இல்லை.  

அம்மா அந்தச் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு, வேகமாக நடந்து அப்பாவின் பூர்வீக குடிசை வீட்டை நோக்கி நடந்தார். நான் அவரின் பின்னாலேயே சென்றேன். அந்தக் குடிசை வீடு எங்களின் அப்பா காலத்திலேயே எங்களைவிட்டுக் கைநழுவிவிட்டது. இருந்தாலும் அதைப் பார்க்க அம்மா விரும்பினார். 

அந்தக் குடிசை வீடு இருந்த இடத்தில் மண் குவியல்களும் ஓலைக் குவியல்களும்தான் இருந்தன. அம்மா மெல்ல அழுதுகொண்டே, “நான் காருக்குப் போறேன்” என்று நாக்குக் குழறக் கூறினார். நான் ‘சரி’ என்பதுபோலத் தலையை அசைத்துவிட்டு, கார் சாவியை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக்கொண்டு, வேக வேகமாக நடந்தார். நான் அவருக்குப் பின்னால் மெதுவாக நடந்துவந்தேன். அம்மா அரண்மனை வீடு இருக்கும் தெருவினைத் திரும்பிப் பார்க்காமலேயே நேராக மணியக்காரரின் வீட்டை நோக்கி நடந்தார். 

நான் அரண்மனை வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தேன். எனக்கு என்னவோ முருகேஸ்வரி அண்ணியின் திருமணவிழா நினைவுக்கு வந்தது. அன்று பாயசத்துக்காக முந்திரிப் பருப்பை நெய்யில் வறுக்கும் மணம் தெரு முழுவதும் கமழ்ந்ததை நினைத்துக்கொண்டேன். என்னால் இப்பவும் அந்த மணத்தை நுகர முடிந்தது. அம்மா என் பின்னாலிருந்து என் தலைமுடியைப் பிடித்து இழுப்பதுபோல உணர்ந்தேன். எனக்கு உச்சந்தலை வலித்தது. மெல்ல என் தலையைத் தடவிக்கொண்டே, அரண்மனை வீட்டுக்கு முன்பாகச் சென்று நின்றேன்.

இடிபாடுகளுக்குள் கவனமாக நடந்து நடந்து, அந்த அரண்மனைவீட்டின் ஹாலுக்குச் சென்றேன். அங்கு மரப்படிகள் சரிந்து மூன்று துண்டுகளாக உடைந்துகிடந்தன. அந்த மரப்படிகளைக் கீழிருந்து எண்ணிப் பார்த்து, அந்த ஏழாவது படியை அடையாளம் கண்டுகொண்டேன். அதை மட்டும் உருவி எடுக்க முயன்றேன். பலமாக முயற்சி செய்த பின்னர், அந்தப் படி தன் படிச்சரத்தைவிட்டு விலகி, என் கையோடு வந்துவிட்டது. 

இனி, யாரும் அந்த ஏழாவது மரப்படியில் அமர முடியாது. இனி, யாரும் அந்த ஏழாவது மரப்படியைக் கடந்து செல்ல முடியாது. இனி, அது ஏழாவது மரப்படியல்ல; ஒரு பலகை மட்டுமே! அதை எடுத்துக்கொண்டு நான் காரை நோக்கி நடந்தேன். 

.  – – –

6 Replies to “மரப்படிகள்”

    1. வணக்கம். பொதுவாகவே எல்லா மனிதர்களும் இனிப்புத் தடவப்பட்ட காரங்கள்தான். நெருங்கிப் பழகும் போதுதான் அவரின் காரச் சுவையை உணரமுடியும். முருகேஸ்வரி அண்ணியும் அதற்கு விதிவிலக்கல்லர்.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  1. ‘மரப்படிகள்’ சிறுத்தையில் அவன் படியில் அமர விரும்பினான். ஆனால் அந்தப் படி அவன் கையில்தான் இறுதியில் அமர்ந்தது.
    -அனுசுயா தேவி.

    1. வணக்கம். ‌ இந்தச் சிறுகதையில் ‘மரப்படிகள்’ என்பன வாழ்க்கையில் நாம் நமக்காக, நாமே முயன்று அடைவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் இலக்குகளுக்கான குறியீடுகள். பெரும்பாலும் நாம் அவற்றை அடைந்துவிடுகிறோம் – காலதாமதமாக. அதனாலேயே நாம் தோற்றவர்களாகிறோம்.
      – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

  2. கொம்பில் கனிந்த பழத்தைத் தின்ன ஆசைப்பட்டு காலம் கடந்து வெம்பிய கையைத் தொட்ட கதை தான் மரப்படி. காட்சிப்படுத்தும் திறன் அருமை. வாழ்த்துகள் சரவணன்.

  3. உயர்திரு. ஜெனநேசன் அவர்களுக்கு, வணக்கம். மிக்க நன்றி தோழரே!
    பெரும்பாலும் கனவுகளையே நாம் லட்சியமாக்கிக் கொள்கிறோம். அதனால்தான் அவை கலைந்துவிடுகின்றனவோ என்னவோ!
    – எழுத்தாளர் முனைவர் ப. சரவணன், மதுரை.

Leave a Reply to முனைவர் ப. சரவணன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.