வெள்ளை

அதிகாலை நேரம், ஆரலின் காற்று இன்னும் உக்கிரமாய் இருந்தது.  தாடகை மலையில் இருந்து இறங்கிய காற்று,  தோவாளை மலையில் வேகமாய் மோதி அதே வேகத்துடன் ஆரல்வாய்மொழியின் எல்லா தெருக்களிலும் தாள வீசிக்கொண்டிருந்தது.  தளவாய்,  தெருவின் முனையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.  அப்படியே தலையை திருப்பி அவன் வீட்டை பார்த்தான்.

மஞ்சள் வண்ண குண்டு மின்விளக்கு எரிய அதிலே அவன் மனைவி பாஞ்சியின் நிழல்,  வீட்டுக்குள் அவள் செய்யும் வேலைகளை வெளியே காட்டியது.  படுத்திருந்த மகள் முத்துவை அள்ளி தோளில் போடுவது தெரிந்தது. ஏற்கனவே வீட்டின் வெளியே பைகளில் சாமான்கள், காய்கறிகள் கட்டப்பட்டு இருந்தது.  தளவாயின் அம்மை கமலம்,  காலுளைச்சலின் விளைவாய் வீட்டின் வெளிநடையில் உட்கார்ந்து இருந்தாள்.  எரிச்சல் பிடித்தவனாய் தளவாய் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தான். பின் கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தான், சரியாக ஐந்தரை ஆகி விட்டது மேலும் வெப்ராளத்தை தூண்டியபடி இருந்தது.  பாவி சரியாக ஐந்துக்கு வருவேன் என்று சொன்னானே, எவனையும் நம்ப முடியவில்லை. வரட்டும் அவனுக்கு இன்றைக்கு நான் யார் என்று காட்டிகிறேன்,  ஏமாற்று பேர்வழி.  

தெருமுனையில் வண்டி ஒன்றின் முகப்பு ஒளியின் வெளிச்சம் படவே, மனம் பதட்டம் ஆனவன் ஒரே பார்வையில் அம்மையையும் பாஞ்சியையும் தயாராக இருங்கள் என்பது போல பார்த்தான்.  இருவரும் எந்திரிக்க,  வேன் ஒன்று வீட்டு அருகே வந்து நின்றது.  வண்டியில் இருந்து இறங்கிய பரமசிவம் நேராய்,  தளவாயிடம் “தோவாளையில ஆக்சிடென்ட் கேட்டுக்கிடுங்க அண்ணாச்சி,  ரெண்டு ஸ்பாட்ல அவுட்.  வண்டியா ஓட்டுக்கானுக தாயோளிங்க. ” என்று சலிப்புடன் சொன்னான்.  தாமதமாய் வந்ததற்குச் சொல்லும் சப்புக்கட்டை என தளவாய் எண்ணிக்கொண்டு அவனை முறைத்தபடி “காலைலயே ஸ்பாட் அவுட், மயிரு அவுட்ன்னு.  நிறுத்தும்.வண்டி கதவ தொரயும்”  என்றான்.

சாமான் பைகள், அம்மை,  பாஞ்சி கையில் குழந்தை என இருவரும் ஏறியவுடன் தளவாய் வீட்டின் வலதுப்பக்க காலிமனையில் கட்டி இருந்த இளம் வெள்ளாட்டை கட்டியிருந்த கயிறை அவிழ்த்து வெளியே இழுத்து வந்தான். வண்டியின் அருகே வரவும்,  பாஞ்சி வண்டியின் இருக்கை சன்னல் வெளியே தலை நீட்டி சைகையால் ஏதோ சொன்னாள். எல்லாம் புரிந்தவனாய் தளவாய் தலையாட்டினான். முத்து எழுந்துவிட்டால் கதை கந்தல் தான் என இருவருக்கும் தெரியும். வண்டியில் ஏறி பின்பக்க இருக்கைகள் இடையே ஆட்டை நிறுத்தி, அது கத்தாமல் இருக்க முட்டைகோசு கொஞ்சமும், நேற்றே பறித்த கீரைகள் கொஞ்சமும் வைத்து விட்டு,  முன் இருக்கையில் அமர்ந்தான். பரமசிவம் வண்டியை எடுக்க, அடுத்த தெருவில் தளவாயின் தங்கச்சியும் வீட்டுக்காரரும், மகன் சந்தனமும் குடும்பத்தாரும் ஏறிக்கொண்டனர். முந்தியே எந்திரித்த அசதி யாரும் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. வண்டி முப்பந்தல் வரவும் பரமசிவம் வண்டியை நிறுத்தி,  இசக்கியிடம் வேண்டியபடி இரண்டு ரூபாயை கோவில் வாசல் முன் வீசி எறிந்தான். வள்ளியூர் வரவும் பாஞ்சியின் அப்பாவும், அம்மையும் ஏறிக்கொண்டனர்.

இருபக்கமும் தரிசாய் கிடந்த நிலம் வழியே பயணித்த சாலையில் வண்டி சென்று கொண்டிருந்தது. தளவாய் வண்டிக்கு கொடுக்க வேண்டிய பணம், கோயிலில் ஆகும் பூஜை செலவு,  வந்தவருக்கு வாங்கி கொடுக்க வேண்டிய டீ மற்றும் இதர செலவுகள் என யோசித்தபடியே வந்தான். எதையும் எண்ணி, குறித்து எடுத்து அதன்படி செலவு செய்வது இவனின் வழக்கம். 

இத்தனை நேரம் அமைதியாய் போய் கொண்டிருந்த வண்டி, பின்னால் கட்டப்பட்ட ஆடு கத்தவே, பட்டென கலவரப்பட்டது. முத்து விழித்து விட்டாள்,  தங்கையின் மகன் பின்னால் ஆட்டருகே சென்று விளையாட அடம்பிடித்தான். கெஞ்சி பார்த்து சமாளித்த பெற்றவர்கள்,  கொஞ்சம் அதட்டவே சிறுவன் அமைதியானான். முத்து இன்னும் சகஜநிலைக்கு வராதவள் போல பாஞ்சியின் மடியிலே படுத்து இருந்தாள். ஆடு கத்திக் கொண்டே இருந்தது.

பின் மெதுவாய் எழுந்து நின்றாள், கைகளை மேல்நோக்கி நீட்டி நெளிந்துக்கொடுத்து அம்மையை பார்த்து கேட்டாள் “அம்மா நாம எங்க போறோம்”,  “நாம கோயிலுக்கு போறோம், பாப்பா தூங்கிட்டு இருந்தியா! அதான் எழுப்பல.” முத்து சிரித்தபடி  “ஐ ஜாலி கோயிலுக்கு வெள்ளையையும் கூட்டிட்டு போறோமா” சிறிய கைகளை தட்டி, தலையை ஆட்டி, சிரித்தபடி நின்ற இடத்திலே வட்டமிட்டாள்.

தளவாயின் அம்மை அவனை பார்த்து வாயை வலித்து ஏதோ செய்கையால் முத்துவை நோக்கி காட்டினாள்,  தளவாய் அமைதியாய் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தான். இது சிக்கலான ஒன்றுதான்,  எத்தனையோ நாட்களை தள்ளிப்போட்டான். ஆனால் இந்த நாள் வந்துதானே ஆக வேண்டும். ஆடு பின்னால் கத்தியபடியே இருந்தது, அலுங்கியபடி போய்க்கொண்டிருந்த வண்டியில் முத்து மெதுவாய் நடந்து ஆட்டின் அருகே சென்றாள். கூடவே தங்கை மகனும் சென்றான். இருவரும் ஆட்டுடன் விளையாட, அதுவும் தன் பங்கிற்கு தலையை சிலுப்பி மேலும் அவர்களை குதூகலப்படுத்தி கொண்டிருந்தது. பெரியவர்கள் ஊர்க்கதைகள் பேசி கதையடிக்க, அதில் ஆர்வம் இல்லாதவனாய் தளவாய் அமர்ந்திருந்தான். வண்டியின் சன்னல் வழியே கடந்து போன காட்சிகளை  பார்த்துக்கொண்டிருந்தான்,  அவை எதுவுமே வெற்றுக்காசாய் கடக்க,  வெள்ளையை அழைத்து வந்த நாளை நினைவில் நிறுத்தினான்.

 முத்து பிறந்து, எதையும் புரிந்துக்கொள்ள ஆரம்பித்த நாட்களில் நை நை என்று கத்திக்கொண்டும், அழுதுகொண்டும் அலைவாள். மூக்கும் வடித்து, தலை வாராமல் வீட்டின் வாசல் அருகே அவன் வேலை முடிந்து திரும்பும் போது நிற்பாள். பைத்தியம் பிடித்தவன் போல வீட்டுக்குள் சென்று கத்துவான் “ரெண்டு பொம்பளைகள் வீட்டுல இருந்து என்ன மயிருக்கு, பிள்ளைய குளுவச்சி மாரிலா வச்சிருக்கு. சவத்து மூதிங்க,  சங்குல மிதிக்கணும்” என்றபடி அம்மையையும் மனைவியையும் திட்டுவான்.

அவன் வீட்டிலும் சரி, அப்பாவை ஒரு கோவக்காரனாகவே அவளுக்கு காட்டினார்கள். “சாப்பிடு,  இல்ல அப்பா வந்து அடிக்கும்”,  “தூங்கு இல்ல அப்பா வந்து அடிக்கும்” என எல்லவற்றுக்கும் இவனை காட்டி பயமுறுத்தியே,  முத்து இவனைக்கண்டால்  எட்டடி தள்ளிச் சென்றுவிடுவாள். அவனுக்கு வருத்தமாகவே இருக்கும், அடித்தாலும் அதட்டினாலும் பிள்ளையை மடியில் அமர்த்தி கொஞ்ச ஆசைப்படுவான் அல்லவா. முத்துவிற்கு அப்பா பூச்சாண்டியை போலவே தெரிந்தான். அவன் வீட்டிலே இருந்தாலே, பயம் தொற்றிக் கொள்ளும்.  எப்போது திட்டுவார், அடிப்பார் என்றே மனதில் எண்ணியபடி எதையும் கவனமாய் செய்வாள்.

அந்த வெள்ளி அன்று,  எதேச்சையாய் பழைய நண்பன் மந்திரத்தை சந்தையில் கவனித்தான். அவன் கையிலே  பால் வெள்ளை நிற ஆட்டுக்குட்டி. மந்திரத்திற்கு இவனை பார்த்ததில் உள்ளூற மகிழ்ச்சி. “லேய் தளவா, சோமா இருக்கியா டே. “.  “நா நல்லாருக்கேன், நீ என்னடே இங்கே. என்ன கையிலே நல்ல இளம்குட்டியோட நிக்க.” “ஆமா மாப்ள,  விக்கணும் இத. கண்டவன்கிட்டயும் விக்க மனசு இல்ல. வீட்டுல கொஞ்சம் கஷ்டம். சங்கடத்தோட தான் நிக்கேன். நல்ல ஆளா பாத்து விக்கணும்.” தளவாய்க்கு  ஆட்டுக்குட்டியை பார்த்ததும் பிடித்துவிட்டது. “சரி, என்ன வில வச்சிருக்க.” “பெருசா ஒன்னும் நினைக்கல,  நீ வாங்கி கிடுகையா?” இருவரும் பரஸ்பரம் பேசி ஒரு விலையை முடிவு செய்து ஆட்டைக் கையில் பிடித்துக் கொண்டு தளவாய் வீட்டிற்கு நடந்தான்.

வீட்டை நெருங்கும்போது வெளியே முத்து விளையாடி கொண்டிருந்தாள். எப்போதும் அவனை கண்ட மறுநொடி வீட்டிற்குள் ஓடி விடுவாள். மாறாய் அன்று  அவனை நோக்கித் தத்தித் தத்தி ஓடி வந்தாள். அவனிடம் “அப்பா, இது நம்மளுக்கா. ஐ ஆட்டுக்குட்டி. வெள்ளை கலரு ஆட்டுக்குட்டி.” “ஆமா தங்கம்,  நமக்கு தான் ஆட்டுக்குட்டி, பிள்ளை பாத்துக்கிடுவாளா?” “நா பாத்துப்பேன்.  சோறு கொடுப்பேன், இட்லி கொடுப்பேன்.லீவு அன்னைக்கு பூரி கொடுப்பேன்.  அப்பா இது பேரு வெள்ளை சரியா. உனக்கு பிடிச்சருக்கா.” “சூப்பரா இருக்கே. யேய் ஆட்டுக்குட்டி இனி உன் பேரு வெள்ளை சரியா.” முத்துவுக்கு நிறங்களின் பெயரை இடுவதில் இஷ்டம்.  அவள் தெருவில் அலையும் நாயிற்கு பெயர் செவலை,  பக்கத்து வீட்டுப் பூனைக்கு பெயர் கருப்பி.

அப்பாவும் மகளும் சேர்ந்து வருவதை கண்ட பாஞ்சி கைகளை கட்டி வலது உள்ளங்கையை கன்னத்தில் தாங்கி ஆச்சர்யமாய் சிரித்தாள். கமலத்திற்கு வெள்ளையைப் பிடிக்கவில்லை. அதை பார்த்த மாத்திரமே “கிடக்குது கிடக்கட்டும், கிழவனத் தூக்கி மனமேடைல வைனு மாரிலா இருக்கு. லேய் உனக்கு இது தேவையா.  இதுக்கு புழுக்கையும், மூத்திரமும் யாரு அள்ளுவா,  உங்க அப்பனா அள்ளுவா,  முட்டாப்பயலே,” என திட்டித் தீர்த்தாள்.  எதையும் காதில் வாங்காத தளவாய் முத்துவுடன் சேர்ந்து வெள்ளையை வீட்டு உள்முற்றத்தில் கட்டி பழைய கஞ்சியை அது குடிக்கக் கொடுத்தார்கள். 

அதன்பின் அப்பாவும், மகளுமாய் அதற்கு ஆகாரம் கொடுப்பது, குளிப்பாட்டுவது என ஒன்றி விட்டார்கள்.

அவ்வப்போது வரும் தங்கச்சி மகனும் அதனோடு  விளையாட வெள்ளையும் பதிலுக்குத் தலையை உலுப்பி ஆட்டும்.  தங்கச்சி வீட்டுக்காரர் மட்டும் விதிவிலக்கு,  ஆள் அசைவ வெறியர்.  அவர்க்கு மட்டும் அது சாப்பிடும் பொருளாகவே தெரிந்தது. சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஆட்டை அறுப்பதைப் பற்றியே பேசுவார். தளவாய் கோபத்தை அவரிடம் காட்டாமல் மனைவியிடம் காட்டுவான். “விளங்காத பயலுக்குக் கட்டி வச்சு, எழவு நானும்லா சீரழிய வேண்டி கிடக்கு. கொடவண்டிக்கு இப்போ ஆடு கேக்கு. சவத்துப் பய,  தங்கச்சி மாப்ளனு பொத்திட்டு இருக்கேன். இல்ல அவன் வாய்க்கு,  தொண்டைக்குழிய பிச்சிருப்பேன்,” அவனை கண்டாலே தினம் ஒரு பாடல் போல பாஞ்சியின் காதில் இவ்வசைகள் விழும். 

சிலமாதம் கழித்து முத்துவிற்கு கடுமையான காய்ச்சல், ஆசுபத்திரி சென்றும் தீரவில்லை. பாஞ்சி அருகில் இருந்த எல்லா கோயிலுக்கும் சென்றாள்,  பலனில்லை. ஒரு ஞாயிறு தங்கச்சி குடும்ப சகிதம் வீட்டிற்கு வந்தாள். “எல்லா சரி ஆயிடும்ணே. நீ சங்கடப்படாதே. பிள்ளைக்கு குணமாயிடும்.  ஏன் வீட்டுக்காரர் ஒன்னு சொன்னாரு. சாத்தூர் போய் நாளாச்சு. இருக்கன்குடி காரிக்கு நேந்துக்கோ. அவ குணப்படுத்திருவா.”,  இதுதான் சமயம் போல அவள் வீட்டுக்காரர் “அத்தான்,  பெருசா நேந்துக்கோ. எங்க பெரிய அண்ணாச்சி வீட்டுல, மைனிக்கு களிலே. ஆசுபத்திரி போய் காசுதான் போச்சு. இருக்கன்குடி காரிக்கு சேவலு வேண்டி மறுநாளு மைனி வழக்கம் போல எந்திரிச்சி வேல பாக்குது. நமக்கு என்ன வீட்டுலயே ஆடு நிக்கி .”வந்தவனை திட்டவும் முடியாது, தளவாய் தலையைத் தொங்கப்போட்டு அமர்ந்து இருந்தான். அம்மையும் உடனே இதுதான் சாக்கு என்பது போல “வேண்டிக்கோலே,  பிள்ளை தானே எல்லாம்.  சரி குணமாகட்டும். உன் நடைக்கு வாரோம் தாயு. பிள்ளையை குணப்படுத்து” என்றபடி பூஜை அறையில் இருந்த திருநீறை உறங்கிகொண்டிருந்த முத்துவின் நெற்றியில் பூசினாள். இரண்டு நாட்களில் முத்துவிற்கு காய்ச்சல் குறைந்து சகஜமாய் விளையாட ஆரம்பித்தாள். 

சில வாரங்களில் அம்மைக்கும் மகனுக்கும் தினம் தினம் சண்டை, காரணம் வெள்ளை.அன்று மகளின் நிலையால் அமைதியாய் இருந்தான். கோயிலுக்கு உடனே போகச்சொல்லி அம்மை கேட்க, பணம் இல்லை,  வேலையில் விடுப்பு இல்லை என பல காரணம் சொல்லி,  போவதை தள்ளிப்போட்டான். அன்று அப்படித்தான் தங்கச்சி மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தான்.  வந்தவுடனே ஆரம்பித்தான் “அத்தான், சொல்லத கேக்கனும், கேட்டியலா.  எத்தன நாளாச்சு.  நேர்த்திக்கடன் கழிக்காண்டமா?  சிலது திருப்பி அடிச்சுரும். பிள்ளைலாவே, மனசு வையும்.  அத்தை இந்த வயசுல கவலைப்படுது.  நாள சீக்கிரம் பாரும்.  சாத்தூர் போயிட்டு வந்திருவோம்.”,  தளவாய்க்கு திருப்பி சொல்ல ஏதுமில்லை. அவன் பதில் பேசி பழக்கப்பட்டதுமில்லை.  இவனை கண்டவுடனே அறிந்துக்கொண்டான், அம்மைக்கு ஏற்ற ஆள் இவன் என்று. “போவோம் மாப்ள, எனக்கும் பிள்ளைதான் உசுரு.  கைல காசு இல்ல கேட்டிலா.  என்ன செய்ய.  நீரு கொடும் உடனே போயிருவோம்.” எதிர்பார்க்கவில்லை தளவாய், இதுக்குத்தான் காத்திருந்தது போல “செலவு கிடக்கு மயிறு.  உமக்கு எவ்ளோ வேணும் அத்தான்.  நா தாரேன்.  போறோம், அம்மைக்கு முன்னாடி வேண்டுதல செய்ரோம்.” செவிட்டில் அறைந்தது போல உணர்ந்தான் தளவாய் “பாவி, ஒரு வெள்ளாடு இறைச்சிக்கு இப்படிப் பதில் பேசுவானா? பாவம் தங்கச்சி எப்படி இவன்கிட்ட கஷ்டப்படுதோ”

“வெள்ளையை பலி கொடுப்பது எப்படி முடியும். அது வெறும் ஆடா?  என் பிள்ளை முத்துக்கு பிரெண்டுலா அது.  இவனுக பொட நிறைய ஆட்ட வெட்டணுமா.  இன்னும் நேரம் இருக்கு. அதுலயும் இந்த கொடவண்டி என்னா வருத்துக்கு வாரான். மச்சான் துணை இருந்தா மலையை இழுக்கலாம், தாயோளி இவன வச்சி மயிர கூட இழுக்கமுடியாது,” மனதிற்குள் இவை மாத்திரமே ஓடிக்கொண்டு இருந்தது தளவாய்க்கு.  வேனின் பின்னால் முத்து வெள்ளையுடன் நின்றுக்கொண்டு இருந்தாள். 

வேன் சாத்தூரை வந்தடைந்தது. தங்கச்சி வீட்டுக்காரர்தான் குதூகலமாய் இறங்கினார்.  வண்டியை பம்புசெட்டு பக்கம் நிறுத்தி, ஒவ்வொருவராய் இறங்கினார்கள். இருக்கன்குடி பனைசூழ் கிராமம். கடைசியாய்  வெள்ளை இறங்கியது. தங்கச்சி மாப்பிளை யாரிடமோ பேசி ஒரு ஓலைக்கொட்டகையும், பாத்திரங்களும் வாடகைக்கு எடுத்துக்கொண்டான். ஆளுக்கு கையில் எடுத்துக்கொண்ட சாமான் பைகளை கீழிறக்கி, சற்றுநேரம் கால் நீட்டி உட்கார்ந்துக்கொண்டார்கள். நெடுநேரம் வேனில் பயணித்தது அசதியை கொடுத்திருக்கும். ஓலைக்கொட்டகை அருகே, வந்தவர்கள் குளிக்க மோட்டார் இயக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிவிசி குழாய்கள் வழியே தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. 

ஒவ்வொருத்தராக குளிக்கச் செல்ல, தளவாயும் முத்துவும் பிள்ளைகளும் வெள்ளைக்கு உண்ண மிச்சம் இருந்த முட்டைகோஸும், பச்சை இலை கட்டுகளையும் கொடுத்துக்கொண்டிருந்தனர். முத்து அதன் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து கொண்டிருந்தாள். தலையை சிலுப்பியபடி வெள்ளையும் அதனை சாப்பிட்டுக்கொண்டிருந்தது.  தங்கச்சி மாப்பிள்ளை குளித்து முடித்து தலையை துவட்டியபடியே “மாப்ளே போதும்வே, இன்னும் கொஞ்சநேரம் தான், சவம் இப்போவே என்னா கனம் கனக்கு.  நிறுத்தும், நீரு இப்போ  குளிக்கிகீரா?  இல்லை முடிச்சுட்டு குளிக்கீரா?  சரி சரி நீரு கடைசியா எல்லாம் முடிச்சுட்டு குளியும். மேலு அழுக்காகும் கோயிலுக்கு போனபொறவு,” என மெலிதாய் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான். “சண்டாளப்பய நிலையழிஞ்சுளா நிக்கான். சேய், என்ன சென்மமோ. தின்னிப்பண்டாரம்,” என தளவாய் மனதிற்குள் திட்டிக்கொண்டான்.

பாஞ்சியும் குளித்து முடித்து, முத்துவை நகர்த்தி குளிக்க அழைத்துச்சென்றாள்.  பிள்ளைகள் எல்லாம் பம்புசெட்டில் கும்மாளம் அடித்துக்கொண்டனர். அங்கிருந்து அவர்களை வெளியே அழைத்துச்செல்லவே அம்மைமார்கள் பெரும்பாடுபட்டனர். தளவாய் யாரிடமும் சொல்லமுடியாத வெப்ராளத்தில் ஓரமாய் அமர்ந்து வெள்ளையையே வெறித்து பார்த்தபடி இருந்தான். கமலம் பின்னால் இருந்து அவன் தலையை லேசாக தட்டி “இப்போ, என்ன குடிமுழுகி போச்சுன்னு இப்டி உக்காந்து இருக்கல. வேண்டுதலுக்கு தான வந்திருக்கோம்.  வந்தவங்கள்ட்ட பேசு. இல்ல நாளைக்கு அது ஒரு பிரச்சன்னு எடுத்துட்டு எல்லாம் வரும். போல, முட்டாப்பயலே.”

எதுவும் கூறமுடியாத ஆத்திரத்தில் விரக்தியாய் முகத்தில் வரவழைத்த சிரிப்பை உதிர்த்தபடி எழுந்தான், பிள்ளைகள் எல்லாம் தலையை துவட்டியபடி அருகே வரவும், சரியாய் ஐஸ்வண்டி காரர் அங்கே வந்தார்.  அவர்க்கு தெரியும் குளித்து முடித்த பசியில் பிள்ளைகள் சாப்பிட எதாவது கேட்டு அடம்பிடிக்கும். நினைத்தபடியே பிள்ளைகள் ஐஸ் கேட்டு அழ, தங்கச்சி மாப்பிள்ளை சொல்லிவைத்தார் போல, அங்கிருந்து எட்டி சென்றார். “சவத்து பய, இவன்தான் இங்க வாரதுக்கு காசு கொடுக்கானாம். ” மனதிற்குள் அவரை திட்டயபடி எல்லாருக்கும் ஐஸ் வாங்கி கொடுத்தான். பாஞ்சிக்கும் வாங்கி கொடுக்க ஆசை, ஆனால் அவளுக்கு மாத்திரம் வாங்கினால் பலர் முகம் முக்கோணலாய் மாறும், எல்லாருக்கும் வாங்கிக்கொடுக்க, சரியாக தங்கச்சி மாப்பிள்ளையும் ஒன்றை கையில் பெற்றுக்கொண்டே “அத்தான் உமக்கு வேண்டாமா” என்றான். “இவன எப்டி நம்பி தங்கச்சியை கட்டிக்கொடுத்தேன். எம்புத்திய பிஞ்ச செருப்பால அடிக்கணும்” என நினைத்தபடியே வழக்கமான சிரிப்போடு “இல்ல மாப்ள எனக்கு வேண்டாம். நீரு வேணும்னா இன்னொரு கைக்கு இன்னொன்னு வாங்கிக்கிடுங்க” என்று சொல்லிமுடிப்பதற்குள் “நீரு சொன்னா தட்டமுடியுமா” என இன்னொன்று வாங்கிக்கொண்டான். தளவாய் வாயில் ஏதோ முணுமுணுப்பதை தங்கச்சியும், பாஞ்சியும் பார்த்துவிட்டார்கள். தங்கச்சி தலையை கவிழ்த்துக்கொள்ள, பாஞ்சி பார்வையாலே நிதானமாய் இருக்கும்படி தளவாயைக் கேட்டுக்கொண்டே,  சம்பந்தக்காரியை பேச்சில் வேறுதிசை நோக்கி இழுத்தாள்.

சரியாக உச்சிவெயில் அடிக்கும் வேளை, எல்லாரும் கோயிலுக்கு நடந்தனர். தங்கச்சி மாப்பிள்ளை வெள்ளை சட்டையும், வேஷ்டியுமாய் மாப்பிள்ளை போல வெள்ளையை ஒரு கையால் இழுத்துக்கொண்டு நடந்தார். தளவாய் “ஓசில ஆட்டுக்கறி திங்க வெள்ளையும் சொல்லையுமாலா வந்திருக்கு கொடவண்டி” என பாஞ்சியிடம் மெதுவாய் சொன்னான். பாஞ்சி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு  ஆமாம் என்பது போல தலையசைத்தாள். முத்து தளவாயின் கைகளை பிடித்தபடி நடந்துவந்தாள்.  செல்லும் வழியில் ஆட்டுமந்தை ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது.  முத்து தளவாயிடம் “அப்பா, இந்த ஆட்டுக்குலாம் வீடு இல்லையா. பாவம்லா.”,  

“ஆமாம் மகளே, ஆனா ஆட்டுக்குனு வீடுலாம் கிடையாது. இங்க பாரு வெளிய அது ஜாலியா இருக்கும். ஆட்டுக்கும் அம்மை, அப்பா, தம்பி எல்லாம் உண்டு.  நம்மல மாதிரிதான் ராசாத்தி”

“அப்போ, வெள்ளை மட்டும் தனியா நம்ம கூட இருக்கு”

“வெள்ளைக்கு முத்து இருக்கா, அவ பாத்துக்கிடுவாளா!

“நா, எங்க அப்பா, அம்மா, ஆச்சி கூட இருக்கேன். ஆனா வெள்ளை,” என முகம் வாடியபடி கூறினாள் முத்து.

கோயிலும் வந்துவிட்டது, பலிகொடுக்க கோயில் சீட்டு வாங்கிக்கொண்டு, வெள்ளையை பலிபீடம் அருகே கொண்டு சென்று எல்லாரும் நின்றுகொண்டார்கள். வரிசையாய் கருப்பு, செவலை, வெள்ளை என பல ஆடுகள் கத்தியபடியே நின்றுகொண்டிருந்தது. வெள்ளைக்கும் ஏதோ புரிந்தபடி என்றைக்கும் இல்லாதவகையில் அதுவும் புதிதாய் சத்தமாய் கத்திக்கொண்டிருந்தது. வெட்டப்படும் ஆட்டிற்கு அடுத்து நின்ற ஆடு,தன் கடைசி கதறலை பரப்பிக்கொண்டிருந்தது.  

தளவாய்க்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. முத்துக்கு நடக்கப்போகும் எதுவும் தெரியாது, அவள் அமைதியாக நின்றாள். தளவாய் அப்படியா, வெள்ளையின் கடைசி நிமிடங்கள் அவனை பதட்டத்தில் தள்ளியது.  மூச்சுவிட திணறினான், மண்டைக்குள் பெரிய வெண்கல மணி அடிப்பது போல உணர்ந்தான். கை கால்கள் கனத்தது. ஒரு நொடியில் மயங்கி விழுந்தான்.

தளவாய் கண்விழித்து பார்த்தபொழுது பாஞ்சியும், முத்துவும் அருகே இருந்தார்கள். இருவரும் செய்தித்தாளை மடித்து இதமாக அவனுக்கு வீசிக்கொண்டு இருந்தனர். தளவாய் தலையை திருப்பி வெள்ளை நிற்கிறதா என பார்த்தான். எங்குமே இல்லை, தூரத்தில் இரண்டு பெரியவாளியை கையில் எடுத்துக்கொண்டு தங்கச்சி மாப்பிள்ளையும் எல்லாரும் வருவது தெரிந்தது, அவரின் வெள்ளை சிவந்த நிறக்கறையை நீரால் கழுவியது போல இருந்தது. “பய, சோலிய முடிச்சுட்டான்” என நினைத்துக்கொண்டே, பாஞ்சியை நோக்கி என்னவானது என்பது போல பார்வையை திருப்பினான் “நீங்க மயங்கி விழவும், எல்லா பிள்ளைகளையும் தூக்கிட்டு நா உங்ககூட வந்திட்டேன். வெயிலுல பிள்ளைகளும் கஷ்டப்பட்டு,  அண்ணன் தான் அங்கேயிருந்து எல்லாத்தயும் முடிச்சு.”

வந்தவர்கள் வெயிலில் நின்ற அசதியில் அமர, தங்கச்சி மாப்பிள்ளை “அத்தான், காலைல ஆகாரம் சாப்பிடல, கொடூர வெயிலு. அதான் தூக்கிட்டு. ஒன்னும் இல்ல, எல்லாம் சிறப்பா முடிஞ்சு. நீரு படுத்துகிடும். நா பாத்துக்கேன்.” என்றான். அவர் கூறுவது ஒருவித நளியுடன் இருப்பதை தளவாய் உணர்ந்தான். முத்து அங்கும் இங்கும் பார்த்து, சட்டென வந்த கண்ணீருடன் “அப்பா, அப்பா வெள்ளையை காணும். ” என அடம்பிடிக்க ஆரம்பித்தாள். யாரும் எதுவும் சொல்ல முன்வரவில்லை. தங்கச்சி மாப்பிள்ளை ஏதோ சொல்லவர,  தளவாய் கைகளை நீட்டி அமைதியாய் இருக்கும்படி சொன்னான். “சரி, எந்திரி, அழாத. அப்பா வாரேன். இவங்க எல்லாம் வேஸ்டு.  வெள்ளையை எங்கயாவது தொலைச்சுருப்பாங்க.  நாம போய் தேடுவோம்.” என முத்துவை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான். யாருமே எதுவும் பேசவில்லை. பாஞ்சியும் கூடவே நடந்தாள்.

அவர்கள் சென்றவழியிலே நடந்தார்கள். ஏற்கனவே நின்ற ஆட்டுமந்தை, நகர்ந்து தூரமாய் தெரிந்த பனங்காட்டில் நிற்பது தெரிந்தது.  தளவாய் சட்டென்று கத்தி “மகளே, வெள்ளை அன்னா நிக்கு பாரு. தங்கத்துக்கு தெரியா.” பாஞ்சி அதிர்ந்துவிட்டாள், பின் அவளும் “பாப்பா, வெள்ளை கூட்டத்துல நடுவுல நிக்கி பாரு.” தளவாயும் பாஞ்சியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரின் கைகளும் முத்துவின் தலையை வருடியபடி இருந்தது.

“அப்பா, வெள்ளை அதுக கூட்டத்தோடு போய்ட்டா”

“ஆமா, மகளே. தெரியுதுலா. நா போய் இழுத்துட்டு வரட்டா”

“அங்க வெள்ளைக்கு அம்மா, அப்பா, தம்பிலாம் இருக்குமா”

“ஒருவேள இருந்திருக்கும். அதான் கண்டுபிடிச்சி போயிட்டு போல”

முத்து அழுகையை அடக்கிக்கொண்டு “அடுத்தவாட்டி அப்பா, அம்மா, தம்பி அப்புறம் வெள்ளை எல்லாத்தையும் வாங்கிக் கொடுப்பியா?”
“உனக்கு வாங்கிக் கொடுக்காம, யாருக்குக் கொடுக்கப்போறேன். நீ என் ராணிலா.” என முத்துவை அள்ளி தோளில் போட்டுகொண்டு நடக்க, பாஞ்சியும் அவர்களோடு நடந்தாள். “அப்பா, உனக்காண்டி இறைச்சி வாங்கி கொடுத்திருக்கேன். நாம போய் சாப்பிடலாம்” என்றான் தளவாய். “ஐ, இறைச்சி. என் செல்ல அப்பா.” என தளவாயை முத்தமிட்டாள் முத்து.

***

One Reply to “வெள்ளை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.